லூப் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பகடிக்கதைகளுக்குரிய வரிக்குவரி கொண்டாட்டத்துடன் ஆரம்பித்து சட்டென்று வேறெங்கோ சென்று ஆவேசமான ஒரு குரலாக மாறி ஒரு நீண்ட பெருமூச்சாக முடிந்தது லூப் கதை.
ஞானம் – ஆரோக்கியம் இருவருக்கும் நடுவே நடக்கும் உரையாடல் அன்றைய தொழில்சூழலை காட்டியது. என் அப்பா மின்வாரிய ஊழியர். அவர் டேய் என்று கூறி தன் சக ஊழியர்களை அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்று அலுவலகச் சூழலே மாறிவிட்டது. இன்று பல அலுவலகங்களில் ரிட்டயர்மெண்ட் பார்ட்டி கூட கிடையாது. ஒரு நிலையில் ஞானத்தை ஆரோக்கியம் மாமா என்று அழைக்கிறார்
எங்கள் வீட்டில் இருந்த டெலிஃபோனுக்குள் எறும்பு கூடுகட்டி அது வேலைசெய்யாமல் போனது ஞாபகம் வருகிறது. அது அன்றெல்லாம் சாதாரண நிகழ்வு. ஆனால் இப்போது அது ஒரு அடையாளம் என்று தோன்றுகிறது
நான் ஊட்டி செல்லும்போது மின்சார கம்பிகளில் கொடிகள் பற்றிப்படர்ந்து ஏற முயன்றுகொண்டே இருப்பதை பார்ப்பேன். அதை தவறாமல் வெட்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அது காடு அந்த கம்பியை கைநீட்டி பிடிக்க முயல்வதுதான். நாம் வெட்டி வெட்டி விலக்கிக்கொண்டே இருக்கிறோம்
கார்த்திக் ராஜ்
ஜெ
போன் இணைப்பை பாம்பு தடை செய்கிறதே என நமக்கு கோபம்.
உண்மையில் நாம்தான் இயற்கையின் மாபெரும் பின்னல்களை இணைப்புகளை அறுக்கிறோம் .
தனது இடம் என்ற உரிமையில் பாம்பு மீண்டும் மீண்டும் அந்த இடத்தை தேடி வருகிறது. அப்படி வருவதுதான் நியாயம்
அவற்றை எல்லாம் அழித்துவிட்டதுடன் கதை முடிகிறது
அழிக்கப்பட்டவை மீண்டும் அவற்றின் இடத்தை என்றாவது தேடி வரும். தமது இடங்களில் மீண்டும் மனிதனென்ற வைரசின் பயமின்றி வாழத்தொடங்கும் அதுதான் இயல்பு. அதுதான் நடக்கப்போகிறது என்ற அறிவியல் யூகத்துடன் கதை மனதில் ஆரம்பிக்கிறது
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
சுற்றுகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
சுற்றுக்கள் சிறுகதையை முதலில் வாசித்தபோது பிடிகிடைக்கவில்லை. ஏனென்றால் எனக்கும் தொழில்நுட்பத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் பிறகு சர்க்யூட் என்று பலரும் எழுதியபிறகு புரிந்துகொண்டேன். மின்சாரம் ஓடி முடிக்கும் ஒரு வட்டம். அதேபோல இருவரிடையே ஒரு வட்டம் பூர்த்தியாகிறது. அதில் அந்த ஆபீஸ், வானம், போன்பேசும் முழுச்சமூகம் எல்லாம் இணைந்திருக்கிறது
ஆண் பெண்ணை ஜெயிப்பது இங்கே அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் திறமையானவன் என்றால் பெண் அவனை சட்டென்று அடையாளம் கண்டுகொள்கிறாள். ஆண் அந்த திறமையை அடைந்ததுமே தன்னம்பிக்கை கொண்டுவிடுகிறான்.
ஜெயச்சந்திரன்
வணக்கம் ஜெ
சுற்றுகள் சிறுகதையை வாசித்தேன். இனிய காதல் கதை. ஒரு தொலைபேசி இணைப்பில் பாயும் வெவ்வேறு அலைகளின் பிரமிப்பு எழுகிறது. ஏற்கனவே இருக்கும் அலைகளை மின்காந்த அலைகளாக்கித் தொலைபேசி கடத்துகிறது. அது போல மனிதனுள்ளும் இருக்கிற அலைகள் எவ்வாறு அன்பு என்றும் காதல் என்றும் விழைவு என்றும் கடத்தப்படுகின்றன என நன்கு புலப்பட்டது.
அரவின் குமார்