“தலைவன்கோட்டை சாமியப்பா!” என்று சுப்பையா கூவினான். அதன்பின் கையிலிருந்த வாழைக்குலையை அப்படியே தரையில் வைத்துவிட்டு எதிரே வந்த சைக்கிளை தாண்டி, ஊடாக ஓடிய சிறு ஓடையை தாவிக்கடந்து, மூச்சிரைக்க அவர் அருகே சென்று நின்றான். “நான் சுப்பையாவாக்கும். நீங்க தலைவன்கோட்டை சாமியப்பாதானே?”
அவர் நடந்தே வந்திருந்தார். நன்றாக களைத்திருந்தார். தலைமயிர் செம்பட்டை பிடித்து பறந்தது. ஒருவாரத்தாடி வெண்நுரைபோல பரவியிருந்தது. கருகிய கண்கள். காரைபடிந்த பற்கள். பழைய சட்டையை இரு பித்தான்கள் போடாமல் திறந்துவிட்டிருந்தார். சாயவேட்டியை ஏற்றிக்கட்டியிருந்தார். கையில் பிளாஸ்டிக் உரச்சாக்கை வெட்டித்தைத்த பை.
புன்னகையுடன் “நீங்க ஆரு?”என்றார் தலைவன்கோட்டை சாமியப்பா.
“நான் சுப்பையா… ஆடுதோண்டி சுப்பையான்னா இங்கிண எல்லாருக்கும் தெரியும்… நான் நாலஞ்சு கூத்திலே கண்டிட்டுண்டு…. நின்ன எடத்திலே அப்டியே சொக்கப்பனை மாதிரி எரிஞ்சு எளுந்து போடுவீக. மனுசன் சாமியாகிறதை கண்ணாலே பாக்குற அனுபவம்லா… அய்யோ..” என்றான். பரவசத்துடன் “சஞ்சிய குடுங்க…நம்ம ஊருக்கு வந்திருக்குதீக” என்றான்.
“இருக்கட்டும் தம்பி ஒண்ணும் கனம் இல்லை” என்றார் சாமியப்பா. “ஊரு கிட்டக்கயா?”
“இந்நா தெரியுதுல்லா? அதாக்கும் கோயிலு. கோயிலுக்கு புறத்தே ஊரு… வெள்ளாக்கமாரு தெரு ,அடுத்து கோனாக்கமாரு. அந்தாலே நாடாக்கமாரு தெரு… மொத்தம் எட்டுதெருவு. நாநூற்றி எளுபது வீடு. அம்பிடுதான் நம்ம ஏரியா”
“தம்பி பஞ்சாயத்திலே சோலி பாக்குதியளோ”
“ஆமா பஞ்சாயத்திலே வாச்மேன். தண்டோரா போடுதது நாமளாக்கும்.சொல்லிட்டானுகளா? நம்மள தெரியாத ஆளு கிடையாது… அய்யா பைய குடுங்கய்யா…. கையிலே கொண்டுவாறது ஒரு பாக்கியம்லா?”
அவனே அவர் பையை வாங்கிக்கொண்டான்.
“பஸ்ஸு அந்தாலதான் நிக்கும்னு சொன்னானுக” என்று அவர் சொன்னார்.
“ஆமாய்யா…ஊருவரை பஸ்ஸு வாறதில்லை. மனுவெல்லாம் குடுத்தாச்சு. அம்பது வயலை நிரத்தி மண்ணுபோடணும். அதுக்கு சம்மதிக்குதானுக இல்ல. வயலு எங்களுது இல்லை, சுசீந்திரம் கோயிலுக்க சொத்து. அங்கிண சிலபேரு வச்சிருக்கானுக… வாங்கய்யா” என்றான் சுப்பையா “அய்யா வாறது ஊருக்கே பெரும… அய்யா இப்பதான் முதல்முதலாட்டு வாறீக போல”
“ஆமா…வண்டிய அங்க நிப்பாட்டி நடந்துதான் போகணும்னு சொல்லிட்டான்”.
“சொல்லியிருந்தா சைக்கிளு அனுப்பியிருப்போம்யா… இந்தூர்ல எல்லாமே சைக்கிளிலேதான். மாப்பிள்ளை அளைப்புகூட சைக்கிளிலேயே வச்சுக்கிடுவோம்னா பாத்துக்கிடுங்க” என்றான் சுப்பையா “ஆனா நடுவூர்பாறைன்னா நாலு எடத்திலே ஒரு மரியாதையாக்கும். ஒரு வம்புதும்புக்கு போகமாட்டம். இங்க உள்ள நடுவூர்மலை இசக்கின்னா விளிச்சா விளி கேக்குத தெய்வமாக்கும்!”
“கொஞ்சம் தண்ணி வேணும்” என்றார் சாமியப்பா “நாகருகோயிலிலே ஒரு காலிச்சாயா குடிச்சேன்… அப்றம் ஒண்ணும் குடிக்கல்ல”.
“தண்ணி தாறேன்யா”
“தண்ணீண்ணா…” என்றார் “நான் காலம்பற டிபன் சாப்பிடல்ல”
“ஏன்யா? நாகருகோவில விட்டா இங்கிண பஸ்ஸு நிப்பாட்டுற சங்சனிலே மயிலாண்டி கடை உண்டுமே… நல்ல தோசை கிட்டும்”
“பைசா வேணும்லா?”
சுப்பையா திகைத்தான். பிறகு “அப்டியாய்யா?” என்றான். உடனே ஆவேசத்துடன் “அய்யா வாங்க, நம்ம வீட்டுக்கு வாங்கய்யா” என்றான்.
“தம்பி ஒரு வேகத்தோட இருக்கீங்க” என்றார் சாமியப்பா.
“நான் பாடுகதுண்டுங்கய்யா… கூத்திலே பாட்டெல்லாம் மனப்பாடம். இங்கிண இப்ப கூத்து நடக்குதது நம்ம கோயிலிலே மட்டும்தான். நான் அந்தாலே பாண்டிநாட்டுக்கு போயி ராதாபுரம் அந்தப்பக்கம் சாத்தாங்கொளம் வரைக்கும் போயி கூத்து பாக்குதது உண்டு. ஒருமாதிரிப்பட்ட எல்லா பெரியாளுங்க கூத்தும் பாத்திருக்கேன்…லேய் ராசமணி ஆரு தெரியுதா? ஏலே, தலைவன்கோட்டை சாமியப்பாலே… அர்ச்சுனரு வேசம்லே!”
“ஆமா… முடிநீளமா இருக்குறப்பமே நினைச்சேன்”
”நடையப் பாருலே… அர்ச்சுனருக்க நடையாக்கும். வியாக்ர பாவம்னு சொல்லுவா. புலி நடந்து வாறது மாதிரி…”
ராசமணி புன்னகைத்தான். இரு சிறுவர்கள் ஆர்வத்துடன் கண்களைச் சுருக்கி பார்த்தனர்.
‘இவனுகளுக்கு கூத்தெல்லாம் தெரியாது. ரிக்கார்டு டான்ஸ் ஆடுவானுக” என்றான் சுப்பையா. “ஆனா நல்ல பயக்களாக்கும்… வாங்கய்யா”
“தம்பி ஆடுதோண்டின்னு சொன்னீக, அதென்ன பேரு?”
”ஒரு ஆடு மண்ணுக்குள்ள புதைஞ்சுபோச்சுங்கய்யா. நான் தோண்டி எடுத்தேன்”
”அந்தாலே பேரைப்போட்டுட்டாங்களாக்கும்”
கோயில் முகப்பில் வாழை வைத்து கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆண்டுதோறும் கூத்து நடக்க மண்ணாலேயே அரங்கு உண்டு. அதன்மேல் மூங்கில் நாட்டி பந்தல் அமைத்திருந்தனர். தரையில் வெள்ளை துணியை விரித்து பந்தல் வேய்வதற்கான வேலைகளை தொடங்கியிருந்தார்கள்.
“துடியுள்ள எசக்கியாக்கும்!” என்றான் சுப்பையா “நடுவூர்மலை இசக்கின்னா அந்தால பாண்டி மறவனுங்களும் பயப்படுவானுக”
அவர் செருப்பை கழற்றிப்போட்டு கும்பிட்டார். அவருடைய செருப்பு மிகக்கனமாக லாரிடயரால் செய்யப்பட்டிருந்தது.
“வாங்கய்யா சாப்பிட்டுட்டு பேசலாம்” என்று சுப்பையா அழைத்தான்.
கோயிலை ஒட்டித்தான் அவனுடய வீடு. “நம்ம அப்பா கூத்துலே ஆடுகதுண்டு… வாத்தியார் பரமசிவம்னாக்கா ஃபேமஸ். குடிப்பளக்கம் இருந்ததனாலே செத்துட்டார்” என்றன் சுப்பையா “ஆயா, ஆயா,இங்க வந்து பாரு. ஆரு வந்திருக்கான்னு பாரு!”
ஆயா உள்ளிருந்து வந்து “ஏம்லே தொண்டைய கீறுதே?” என்றபின் “ஆரு? கூத்துகெட்டுத ஆளா?” என்றார்.
அவர் நன்றாக கைதூக்கி கண்மூடி கும்பிட்டு “கும்பிடுதேன் அம்மணி” என்றார்.
“நீங்கள்லாம் என்னாளு?”
“மறவனாக்கும் அம்மிணி”
“பின்ன இதென்ன ஆடுமேய்க்குத செருப்பு?”
“ஆடுதான் மேய்க்குதேன்… சீவிச்சு போவணும்லா?”
“இரியும்வே… தோசை ஊத்தி குடுக்கேன்..”
“வேண்டாம் அம்மிணி, காலையிலே தோசை எறங்காது. பளையசோறு இருந்தா இம்பிடு மோரு ஊத்தி குடுங்க…”
“பளைய சோறா… அய்யோ” என்றான் சுப்பையா.
“தம்பி, நான் நேத்து ராத்திரியும் சாப்பிடல பாத்துக்க.. தொண்டையும் வயிறும் வரண்டு கெடக்கு. தோசையெல்லாம் எறங்காது”
“மத்தியான்னம் கறிக்கொளம்புகூட வைக்க முடியாதே… கோயிலு திருளா சாட்டியிருக்குல்லா?”
“அதுக்கென்ன?”
“நாளைக்கு இருப்பீகள்ல?”
“பாப்பம்”
“பளைய சோறுண்ணா…” என்று அவன் மீண்டும் தயங்கினான்.
“எனக்கு அதான் பிடிக்கும்…அதும் இந்தாலே மலையாளக்கரைப் பக்கம் நீங்க நல்ல செவப்புச்சம்பா அரிசியை போட்டு சோறு பொங்குவீக. பளையது அமிர்தமாட்டுல்லா இருக்கும். மோரும் இங்க எருமைப்பாலிலே இல்ல, பசும்பாலிலே….”
“ஆமா” என்றான் சுப்பையா. “புளிங்கொட்டை அரிசியாக்கும்”
ஆயா குண்டான் நிறைய பழையது கொண்டுவந்து வைத்தாள். அருகே அவியல் ஒரு வாழையிலையில்.
“வாத்தி, மாங்கா ஊறுகா எடுக்கட்டுமா?”
“கேக்கணுமா… எடுங்க”
அவர் பெரிய கையாக அள்ளி வாயில் வைத்து மென்று விழுங்கி புன்னகைத்தார். அவனைப் பார்த்தபின் தோன்றிய முதல் புன்னகை. “மனுசன் சாப்புடுகதிலே நல்ல சாப்பாடுன்னா இதாக்கும். மொட்ட வெயிலிலே ஆடுமாடு மேய்க்குதவனுக்கும் பொட்டக்காட்டுலே வேலை செய்யுதவனுக்கும் தெரியும் இதுக்க அருமை”
”ஆமா, இவன் பளையத கையாலே தொடமாட்டான்… பன்னாடை” என்றாள் ஆயா “நெல்லிக்கா வச்சிருக்கேன் வாத்தி… சாப்பிட்டுட்டே இருங்க. ரெண்டு பப்படத்தை வறுக்கேன்”
“சுடுங்க சுடுங்க….” என்று சாமியப்பா அவசரமாக சொன்னார் “வறுத்துப்போடாதிய… சுட்ட பப்படமாக்கும் ருசி இதுக்கு”
”பூசைநாளா போச்சு, இல்லேண்ணா ஒரு நல்ல கருவாட்ட சுட்டிருக்கலாம்”
“அதை நினைக்கப்பிடாது அம்மிணி” என்றார் சாமியப்பா “உப்பும் மோரும் கணக்கா போட்டிருக்கிய…”
”அதுபின்ன கைப்பளக்கம்ல?” என்றாள் ஆயா “கிண்டுத கோளிக்கு காலிலே கண்ணிருக்கு”
“பிள்ளைக்கு கல்யாணம் ஆகல்லியோ?”
“தரம் பாத்துக்கிட்டு இருக்கோம்… இந்த காட்டுமூலைக்கும் பொண்ணு வரணுமே… அந்தாலே பாண்டிநாட்டிலே பொண்ணு உண்டுமா நம்ம சுத்துலே? நாங்க யாதவக்கோனாருமாராக்கும்”
“உண்டு, பாக்கணும்”
“கருப்பா இருந்தா ஒண்ணுமில்லை. அந்தப்பக்கம் பல்லு வெளியே இருக்கும்… அப்டி இருந்தா வேண்டாம்”
“அது பாத்துக்கிடலாம்”
ஆயா என்ன பேசுகிறாள் என்று சுப்பையாவுக்கு கோபம் வந்தது “நீ என்னத்துக்கு என்னென்னமோ பேசுதே? அவரு ஆருன்னு தெரியுமா உனக்கு?”
“ஆம தெரியும்….வந்துட்டான்” ஆயா மீண்டும் பழையது கொண்டு வந்தாள்
“ஏனம்மிணி, இம்பிடு பழையதா வீட்டிலே?”
“முதல் கை அள்ளுகத பாத்தமே தெரிஞ்சுபோட்டே… பக்கத்து வீட்டிலே கேட்டேன்… குடுத்தாக”
“அஹ்ஹஹ்ஹஹா!” என்று அவர் சிரித்தார். “நாம பளையத கண்டா அப்டியே பாய்ஞ்சுடுத வளக்கம். சிவப்புச் சம்பா அரிசிப் பளையதுக்கு மாங்காய் ஊறுகாயும் நெல்லிக்காயும் அவியலும் சுட்ட பப்படமும்… போரும்… மனுசப்பயலுக்கு இந்த பூமியிலே வேற என்னத்த சந்தோசத்த வச்சான் சாமி?”
“நமக்கு குடும்பம் எப்ப்டி?”
“இருந்தா… இப்ப கூட இல்ல”
அதற்குமேல் ஆயா கேட்கவில்லை. கத்தரிக்காயை அடுப்பில் போட்டிருப்பாள் போல. அதை சுட்டு எடுத்து சிறிய ஈயச்சம்புடத்தில் போட்டு மரக்குழவியால் கடைந்து பச்சைமிளகாயுடன் துவையல் அரைத்து கொண்டு வந்தாள்.
“அய்ய இது எதுக்கு இப்ப?”
“இருக்கட்டும்… நாக்கு சடைஞ்சிருக்கும்லா”
அவர் அதை தொட்டு வாயில் வைத்து “நாட்டுக் கத்திரிக்காய்லா… நெய்மணம்” என்றார்.
பழையதை குடித்து முடித்து அவர் குண்டானை கையில் எடுக்க ஆயா “அந்தாலே வையுங்க… வாத்தி எச்சி எடுக்கதா?” என்றாள்.
“இப்டி வந்தாத்தானம்மா வாத்தி… மிச்சநேரத்திலே அத்து அலைச்சலுல்லா”
“அர்ஜுனனே வனவாசம் போனான்ல?”
“ஆமா… வனவாசமாக்கும்… வருசத்திலே எட்டு அல்லது ஒம்பது ஆட்டம். மிச்சநேரம் முளுக்க வனவாசம்…”
கையை துடைத்தபின் “இந்தால செத்த தலை சாய்க்குதேன். அங்க கம்மிட்டிக்காரனுக கிட்ட போயி நான் வந்தாச்சுண்ணு சொல்லிட்டு வருவீரா?”
“இப்பம் சொல்லீட்டு வாறேன்” என்றான் சுப்பையா.
அவன் ஓடி கமிட்டியாபீஸ் போனான். அது கிராமத்தலைவர் குஞ்சன் நாடாரின் சிறிய கொட்டகை. அதில் நாலான் ராமனும் மாதேவனும் கிருஷ்ணனும் தூங்கிக்கொண்டிருந்தனர். குஞ்சன் நாடாரின் மகன் மாகாளியப்பன் தந்தி வாசித்துக்கொண்டிருந்தான்.
“கூத்துக்காரங்களிலே தலைவன்கோட்டை சாமியப்பா வந்தாச்சு… நம்ம வீட்டிலே ரெஸ்டு எடுக்காரு” என்றான் சுப்பையா.
“பாத்தேன்வே. நீரு பொத்திப்பொத்தி கொண்டு போறத”.
‘தந்தி வந்தாச்சா?” என்றன் சுப்பையா. சினிமா பக்கத்தை எடுத்து புரட்டி “பாயும்புலி!” என்றான்.
“ஆமா பாயுது… போடே, பரட்டைக்க படம் பாத்தாலே குண்டி எரியுது”
“அந்நா இருக்கது ஆரு?”
ஒருவர் அப்பால் திண்டின்மேல் வளைந்து குவிந்து அமர்ந்திருந்தார். ஒல்லியான உடல். ஒடுங்கிய கன்னம். குழிவிழுந்த கண்கள். தலைமயிரை பெரிய கொண்டையாக போட்டிருந்தார்.
“தந்தி கொண்டாந்தப்ப சைக்கிளிலே ஏறி வந்திருக்காரு… ஆருண்ணு தெரியல்ல… வே ஆருவே?”
“நம்ம பேரு மருதை குமரேசன். ஒயில் குமரேசன்னும் பேரு உண்டு”
சுப்பையா எழுந்துவிட்டான். “அய்யோ! ஒயில்குமரேசன்… அல்லி குமரேன்லா?”
“ஆமா, அல்லிதான் நம்ம முத வேசம்… இப்ப ஆட்டம் குறவாக்கும்”
“பேச்சப்பாத்தா மருத மாதிரி தெரியல்லியே”
“நமக்கு இங்கிண தோவாளையில்லா… மருதைன்னு வச்சுகிட்டாத்தான் அந்தப்பக்கமா ஆட்டத்துக்குக் கூப்பிடுவாங்க… நாம இப்ப கூடுதலும் ரிக்கார்டு டேன்ஸாக்கும்…
“தலைவன்கோட்டை சாமியப்பா வந்திருக்காரு, நம்ம வீட்டிலே இருக்காரு”
“அய்யோ… எங்க சாமியா? இங்கிணயா இருக்காரு? எப்பம் வந்தாரு?”
“காலம்பற… சாப்பிட்டு உறங்குதாரு”
“யம்மா ,பாத்தே எம்பிடுநாள் ஆச்சு… எப்பிடி இருக்காரு?”
“வாருங்க” என்று சுப்பையா அவரை அழைத்துச்சென்றான். அவர் ஒரு ரெக்ஸின் ஏர்பேக் வைத்திருந்தார். “சஞ்சிய குடுங்க”
“அய்யோ வேண்டாம்” என்றார்.
“இருக்கட்டும் குடுங்க” என்றான் “நான் ஒருதடவை மைலாடியிலே உங்க ஆட்டம் பாத்திருக்கேன். அது பாஞ்சாலி வேசம்”
“ஆமா நமக்கு நல்லதங்காளும் உண்டு”
திண்ணையில் சாமியப்பா தூங்கிக்கொண்டிருந்தார். குமரேசன் அவரை பார்த்ததும் நின்றார்.
“மெலிஞ்சு கோலம்கெட்டு போய்ட்டாரே”
“ஆடுமேய்க்குததா சொன்னாரு”
“ஆமா, இப்ப அர்ஜுனன் வேசத்துக்கு என்ன மதிப்பு? கூத்துநாடகத்துக்கு அம்பதுபேரு வந்தா அது பெரிய திருளாலா?” என்றார் குமரேசன் “செரி, ரெக்கார்டு ஆடுகதுக்கு மானமா ஆடுமேய்க்கலாம்”
ஆயா எட்டிப்பார்த்து “இவரு ஸ்திரீவேசமாலே?” என்றார்.
“மருதை குமரேசன்” என்றான் சுப்பையா “அல்லி வேசம்போடுதாரு”.
“உறங்குதாரு… எளுப்பவேண்டாம்” என்றார் குமரேசன்.
“இரியுங்க… தோசை விடட்டா?” என்றாள் ஆயா.
“வேண்டாம் அம்மிணி, நான் வாறப்ப கடையிலே தோசை தின்னேன்” என்றபடி குமரேசன் அமர்ந்துகொண்டார். சுப்பையா பையை அருகில் வைத்தான்.
“அப்ப ஒரு சாயை குடியும்”
“நான் தீண்டாச்சாதியாக்கும்”
“இருக்கட்டும்வே, நீரு அல்லியில்லா.. இரியும்”
அவர் இருந்து “வீட்டிலே சின்னக்குட்டி இல்லியோ?”
“எனக்கு கல்யாணம் ஆகல்ல”
“ஏன்?”
“நான் பியூனுல்லா?”
“அதுசெரி… பியூனுக்கும் ஒருத்தி வருவா… நல்ல ஊரு. இந்த தோவாளை அகஸ்தீஸரம் ஏரியாவிலே உள்ள ஊருகளைப்போல அளகான ஊருகள் பூமியிலே இல்லை… மலையடிவாரக் காத்து… தண்ணிக்கும் கொறவில்லை. பச்சை ஏறி நிக்குது… ஓடுபோட்ட நல்ல வீடு இருக்கு… வயலு உண்டா?”
“ஆமா, ஒரு ஏக்கர் வயலு… பிறவு நாலேக்கர் மண்ணும் உண்டு” என்றான் சுப்பையா “தெங்காக்கும்”.
“ராஜபோகம்லா…”
“ஆனா குட்டிக சிட்டிக்குத்தான் போகும்னு சொல்லுதாளுக”
“சினிமா சீரளிச்சுப்போட்டு குட்டிகளை… சினிமா பாத்த குட்டிக்கு பிறவு ஜீவிதத்திலே சந்தோசம் இல்லை. சந்தோசம் வானத்துக்கு அந்தாலேன்னு நினைச்சு நினைச்சு சாவா. பொட்டக்காட்டிலே கானல் சலத்தைப் பாத்து நிக்குத மாடு மாதிரி அவளுக்கு எப்பமும் ஏக்கமாக்கும்…செரி, காலக்கொறை, வேறென்ன சொல்ல?”
“ஆமா”
“அதுக சினிமாவிலே லவ்வுன்னு என்னமோ பாக்குதுக… லவ்வுன்னா அதுகளுக்கு என்ன தெரியும்? செரி, தேனீக்கு தேனும் வண்டுக்கு பீயும்னு அவன்லா எளுதி வச்சிருக்கான்”
ஆயா கொண்டுவந்த டீயை அவர் இருகைகளாலும் வாங்கி ஊதி ஊதிக்குடித்தார்.
அணஞ்சபெருமாள் ஓடிவந்து “மாதேவன்பிள்ளை விளிக்காரு” என்றான்.
சுப்பையா “நான் போயி என்னான்னு கேட்டுட்டு வாறேன்” என்றான்.
அவன் போனபோது பிரசிடெண்ட் மாதேவன்பிள்ளை உச்சகட்ட கோபத்தில் நின்றார். “லே என்ன எடுக்கே அங்கே? குருத்தோலை அலங்காரம் பாதி நடக்கல்ல… பந்தலு அந்நான்னு கெடக்கு. நான் செண்டைக்காரனுகள விளிச்சுட்டு வாரதுக்கு ஆளை அனுப்பணும்… நீ என்னலே செய்யுதே?”
“கூத்துக்காரங்க வந்தாக”
“கூத்து ராத்திரில்லா… கோயிலிலே கொடை இப்ப தொடங்கணும்.. எனக்கு ஒண்ணும் தெரியாது. பந்தலுவேலை இந்நா இப்பம் முடியணும்.. இல்லேன்னா நான் போறேன்”
“சங்கரனை ஒப்படைச்சிட்டாக்கும் போனேன்”
“சங்கரனை? அவன் எங்க எந்த நாத்தவெள்ளத்தை குடிச்சுப்போட்டு கெடக்கானோ…”
“நான் பாத்துக்கிடுதேன்”
“பாத்துகிடுகதுன்னா நீ பாத்துக்கிடணும்… இனி எவனாம் கிங்கரன்கிட்ட குடுத்துட்டு போனேன்னு சொன்னா செத்தி மலத்தீருவேன்”
சுப்பையா அவசரமாக சென்று அலங்காரப் பணிகளை தொடங்கினான். கோயிலில் இருந்து ஊர் முகப்பு வரை இரண்டு அடிக்கு ஒன்று என வாழைத்தண்டுகளை இடையளவு உயரத்தில் நடவேண்டும். அவற்றில் அந்தியில் மண்விளக்குகளில் புன்னைக்காய் எண்ணை விட்டு தீபம் ஏற்றப்படும்.மூங்கில் கழிகளை பத்தடிக்கு ஒன்று என்று நட்டு அவற்றை மணிப்பொச்சம் கயிற்றால் கட்டி இணைத்து வரிசையாக குருத்தோலை கட்டி தோரணம். குருத்தோலையின் நுனிகளில் செம்பரத்தி அரளி மலர்களை கட்டவேண்டும். ஆனால் அதை வெயில் சாய்ந்தபிறகுதான் செய்யமுடியும்.
மதியம் அவன் “இப்ப வந்திருந்தெம்லே” என்று சுனையன் நாராயணனிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடினான். அங்கே சாமியப்பா அப்போதும் தூங்கிக்கொண்டிருந்தார். காலடியில் குமரேசன் அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.
“சாப்பிடணும்லா?” என்றான்.
“ஆமா” என்றார் குமரேசன் பீடித்துண்டை அணைத்து ஏற்கனவே பீடித்துண்டுகள் போடப்பட்டிருந்த ஒரு காலித்தீப்பெட்டிக்குள் போட்டு மூடினார்.
“இருங்க” என்று சுப்பையா உள்ளே ஓடினான். ஆயா சமையற்கட்டில் இருந்தாள். “சோறு பொங்கியாச்சா?” என்றான்.
“சோறு மட்டும் பொங்கினாப்போருமா? இரு பப்படத்தை வறுத்திடுதேன்”
“சுடத்தானே சொன்னாரு?”
“லே அது பளையதுக்கு… இது சோறுக்கு”
பக்கத்துவீட்டு கோகிலவாணி அக்கா கையில் பொத்திய செம்புடன் வந்து ஆயாவிடம் “இம்பிடுபோல புளிசேரி இருக்கு அக்கா. வாத்திகளுக்கு குடு” என்றாள்.
“இங்க தேங்காக்கொளம்பு வச்சிருக்கேண்டீ” என்றாள் ஆயா.
“இது அன்னாசிப்பளப் புளிசேரியாக்கும்… இது வேற”
சுப்பையா வெளியே வந்து “சாப்பிடலாமே” என்றான்.
குமரேசன் மெல்ல சாமியப்பாவின் காலைத்தொட்டு “அர்ச்சுனரே, அர்ச்சுனரே” என்று அழைத்தார்
சாமியப்பா கண்ணைத்திறந்து பார்த்தார். திடுக்கிட்டவர் போல எழுந்து அமர்ந்து “ஆரு?” என்றார்
“நாந்தான் அல்லி… ” என்றார் குமரேசன். “அல்லியாக்கும்”
சாமியப்பா கண்களை கசக்கிக்கொண்டு “நீரா? நான் சொப்பனமுண்ணுல்லா நினைச்சேன்!” என்றார்
“சொப்பனம் மாதிரித்தான் இருக்கு” என்றார் குமரேசன் “பாத்து ஏளெட்டு வருசம் இருக்கும்லா?”
“எம்பத்தி ஒண்ணுலே களுகுமலையிலே பாத்தது”
“காலம்போற போக்கே!”
சுப்பையா “சாப்பிடலாமே…”என்றான்
“ஆமா… நல்ல மயக்கம். பசி கேறிப்போச்சு. நேரமென்ன ஆச்சு?”என்றார் சாமியப்பா
“மணி ரெண்டரை”
“வெயிலு தாந்துபோச்சுல்லா?” என்றார் குமரேசன்.
அவர்கள் கிணற்றடிக்குச் சென்று தொட்டியில் இருந்து நீர் அள்ளி முகம் கழுவினார்கள். சாமியப்பா நீரை அள்ளி தலையில் விட்டு கையால் நீவி பின்பக்கம் சரித்தார்.
அவர்கள் கூடத்திற்கு வந்தபோது சுப்பையா கூடத்தில் பந்திப்பாய் போட்டு இலைபோட்டிருந்தான்.
குமரேசன் “எலைபோட்டு சாப்பிடணுமானா இப்பிடி கூத்துக்கு வரணும்” என்றார்.
“உக்காருங்க”
“தம்பி இருக்கட்டுமே”
“ஏலே நீயும் இருலே” என்று ஆயா சொன்னாள்.
அவனும் ஓரமாக அமர்ந்துகொண்டான்.
“நல்லா திம்பான், ஆனா மீனில்லேண்ணா எறங்காது” என்றாள் ஆயா.
“உள்ளதைச் சொன்னா கவிச்சி தின்னுதவனுக்கு ருசீண்ணு உலகத்திலே ஆயிரம் இருக்கது தெரியாது. சைவத்திலே உள்ள நூறு வகை ருசியை கவிச்சியிலே எங்க கொண்டுவாறது?” என்றார் குமரேசன். “நாம எப்பமும் சைவத்துக்க ஆளாக்கும். ஆனா நல்ல சைவம் கிடைக்காது. உணக்க பரோட்டாவும் கறியும்தான் நமக்கு வாங்கிக்குடுப்பாக… ரெக்காடு டேன்ஸுன்னா அதுதான்… ஒண்ணும் சொல்லமுடியாது”
அவர்கள் அமர்ந்துகொண்டதும் ஆயா ஒரு துளி உப்பு கொண்டு வைத்தாள். அதன்பின்னர் கத்தரிக்காய் வதக்கலும் ,சேனைக்கிழங்கு வறவும், வாழைக்காய் பொரியலும், புடலங்காய் கூட்டும் பரிமாறினாள்.
அவியல் கொண்டுவைத்தபோது குமரேசன் “ஆகா, அவியல்! நம்ம அவியலை கண்ணாலே கண்ட காலம் போச்சே!” என்றார் “பொன்னுருக்கி வச்சமாதிரில்லா இருக்கு!”
“அவியலு அங்க பாண்டிநாட்டிலே வைக்கமாட்டாக” என்றாள் ஆயா. “அதுக்கு நல்ல சேனைக்கிளங்கும் மொந்தன் வாளைக்காயும் வேணும்லா?”
“அப்டி பலதும் வேணும்… வளுதிணங்காய்க்கி எங்க போவ?”
சோறு போட்டு ஆயா நெய் ஊற்றினாள். சூடு சோறில் நெய் உருகும் மணம் எழுந்தது. அதன்மேல் பருப்புக்கறியை விட்டாள். அவர்கள் குழைத்து உண்ணத் தொடங்கினர்.
சாமியப்பா பெரிய உருளைகளாகப் பிடித்து உண்டார். குமரேசன் சிறிய சிறிய பிடிகளாக எடுத்து வாயில் வைத்தார்.
“அவரு உண்ணுகதாக்கும் ஊணு… ஆனை உருளை எடுக்கதைப்போல சாப்பிடணும் ஆம்பிளைக” என்றாள் ஆயா.
“அவரு அர்ச்சுனரு….ஆனைக்க பசியும் தேன்சிட்டுக்க ருசியும் உள்ளவனாக்கும் அர்ச்சுனன்” என்றார் குமரேசன்.
“தேங்காக்கொளம்பு இருக்கு… தீயலு இருக்கு” என்று ஆயா சொன்னாள்.
“ரெண்டும் இருக்கா?” என்றார் குமரேசன் “யம்மா… ஒண்ணு இருந்தாலே ஒருநாளி திங்கலாமே”
“தேங்காக்குளம்புன்னா நம்ம ஊரிலே சொதில்லா?”என்றார் சாமியப்பா.
“இல்ல… அதுவேற. தேங்காக்கொளம்புன்னா இந்தாலே மலையாளத்திலே பச்சைத்தேங்காயை வத்தலுமொளகாயும் வச்சு அரைச்சு செய்யுத கொளம்பு… தேங்காயெண்ணை தாளிதம்… வெள்ளரிக்காயோ தடியன்காயோ போடுவாக… ஏ ஆயா, என்ன காயி?”
“தடியங்கா… நம்ம தோட்டத்து காயாக்கும்”
“போடு போடு…நீ நேரா சொற்கத்துக்காக்கும்… மெயின்ரோடு உனக்கு…”
தேங்காய்குழம்பு விட்டபோது சாமியப்பா “அருமையான மணம்” என்றார்.
குமரேசன் “தீயலுண்ணா தேங்காயோட கொத்தமல்லியெல்லாம் சேத்து கறுக்க வறுத்தரைச்சு செய்யுதது…”
“கத்தரிக்கா போட்டு செய்யுதது… ” என்றாள் ஆயா “எங்க ஆயா கத்தரிக்கா வத்தலுபோட்டு செய்யும்”
சாமியப்பா பெரிதாகப் பேசாமல் சாப்பிட்டார். குமரேசன் ஒவ்வொன்றையும் பாராட்டினார்.
“அவியலுக்கு தேங்காய் அமைஞ்சு வரணும்…” என்றார் “சிவனுக்கு பார்வதி மாதிரி”
“இந்த முக்கு தென்னையிலே தேங்கா அவியலுக்கு நல்லாருக்கும்.. போறப்ப நாலும் தொலிச்சு தாறேன்.கொண்டு போங்க”
“கொண்டுபோயி என்ன செய்ய? ஹெஹெஹெ!” என்றார் குமரேசன்.
“நிறைஞ்சுபோச்சு” என்றார் சாமியப்பா.
“என்ன நிறைய? அன்னாசிப்புளிசேரி இருக்கு”.
“நம்ம மோர்க்கொளம்பு மாதிரி…அன்னாசிப்பளம் போட்டு செய்யுதது”என்றார் குமரேசன் சாமியப்பாவிடம் “நாலு துளி விட்டாப் போரும்… மணமாட்டு இருக்கும்”.
சாப்பிட்டு முடித்ததும் “மோரு?”என்றாள் ஆயா.
“அதை ஒரு டம்ளரிலே குடுங்க ஆயா”.
“பயறுப்பாயாசம் இருக்கே”.
“ரெண்டையும் குடுங்க” என்றார் குமரேசன்.
பாயசத்தை குடித்துக்கொண்டிருந்தபோது சுப்பையா “நான் போறேன், தேடுவாக…” என்றான்.
குமரேசன் “இன்னொரு வாட்டி தூங்கவேண்டியதுதான்… இந்த எரையெடுப்புக்கும் இந்த வெயிலுக்கும் கண்ணு மயங்கிடும்லா?” என்றார்.
சுப்பையா மீண்டும் கோயில் முகப்புக்குச் சென்றான். தோரணவளைவின் அலங்காரங்களில் சளையோலை வைத்து கட்டவேண்டியிருந்தது. மாட்டுவண்டியில் ஆற்றுமணல் வந்தது. அதை வழியில் கொட்டச்சொல்லி நான்கு பயல்களைக்கொண்டு பரப்பச் சொன்னான்.
உலத்திக்குலைகளையும் குலைவாழைகளையும் கட்டிக் கொண்டிருந்தபோது சைக்கிள்களில் மைக்செட்டும் கோளாம்பி ரேடியோக்களும் வந்தன. தோரணங்களில் பூக்களைக் கட்டிக்கொண்டிருந்த அத்தனை பிள்ளைகளும் “ரேடியோ வந்தாச்சூ! ரேடியோ வந்தாச்சூ!” என்று கூச்சலிட்டபடி அவர்களை நோக்கி ஓடின. “ஏலே நில்லுலே… ஏலே” என்று சுப்பையா கூவினான். சின்னப் பெண்கள் கூட கைதட்டி கூச்சலிட்டபடி குதித்தன.
சுப்பையாவுக்கும் உற்சாகமாகத்தான் இருந்தது. “நாராயணா, திருளையாடல் இருக்காடே?”
“இருக்கு… திருவருட்செல்வர்,வீரபாண்டிய கட்டப்பொம்மன், தில்லானா மோகனாம்பாள் எல்லாம் இருக்கு”
“வாறேன்… வாறேன்” என்றான் சுப்பையா. “எடுத்துக்குடுக்கேன். வரிசையாட்டு எல்லாம் போடணும். அதுக்குன்னு ஒரு மொறை இருக்கு”
லைட்செட்காரர்கள் தொடந்து வந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பெட்டிகளில் பல்புகள் இருந்தன. வாழைத்தண்டு விளக்குகள் ஐம்பது. சீரியல்செட்ட்டுகள் பன்னிரண்டு.
“ஸ்டீரியலு ஒரு நாலஞ்சு கூடுதலு எடுத்திருக்கலாம்” என்றார் பண்டாரம் நாடார்.
“வாய மூடிட்டு போவுவே. நாலஞ்சு சீரியலு கொண்டாந்து உம்ம சூத்திலே கட்டுகதுக்கா?”
ஒருபையன் வந்து “கோளாம்பிய எங்கிண கட்டுகதுண்ணு கேக்காரு” என்றான்.
சுப்பையா சென்று கோளாம்பி ரேடியோக்களை கட்டவேண்டிய இடத்தை சுட்டிக்காட்டினான். இரண்டு தென்னைமரங்களில் இரண்டிரண்டாக.
“அந்தால மலையில்லாவே இருக்கு?” என்றார் நாராயணன்.
“அதெல்லாம் அனுபவ ஞானமாக்கும். மலையிலே போயி முட்டி அந்தாலே வடக்கா திரும்பி போவும். தோவாளை சங்சனிலே கேக்கும்…” என்றான் சுப்பையா.
பண்டாரம்நாடார் “நம்ம வீட்டுக்குமேலே ஒண்ணு வச்சு கெட்டலாமே” என்றார்.
“ஏன் நீரு வீட்டுக்குள்ளே கமந்து கெடந்து கேப்பீரோ? போவும்வே”
வாழைத்தண்டு விளக்குகளை கட்ட ஆரம்பித்தனர். ஒவ்வொரு மூங்கில் தூணிலும் ஒன்று. கரெண்டை உள்ளூர் லைனில் இருந்தே கொக்கி போட்டு எடுத்தனர்.
“கொக்கி போடுதோம்… பிறவு பிரச்சினை ஆயிரப்பிடாது”
“நானாக்கும் பஞ்சாயத்து பியூனு… இது நம்ம ஏரியால்லா?”
ரேடியோ வருவதுதான் கணக்கு, திருவிழா பரபரவென்று சூடுபிடித்துவிட்டது. கோயிலுக்கு முன் நூற்றெட்டு கதலி வாழைக்குலைகள் பொன்னிறமாக அடுக்கப்பட்டிருந்தன.
“பவுனு குமிச்சு வச்சமாதிரில்லாவே இருக்கு!” என்றார் ஷண்முக நாடார்
பதினெட்டு மரக்கால்களில் பொன்னிறமாக நெல் குவிக்கப்பட்டு பொன்னிறமான தென்னைப்பூங்குலைகள் நடப்பட்டன. மாந்தளிர்களை கொண்டுவந்து கட்டினார்கள். பொன்னிறமான மாம்பழங்கள். பொன்னிறமான வருக்கைப் பலாச்சுளைகள் ஏழு தாலங்களில்.
”நல்லதெல்லாம் பொன்னுல்லா!”என்றார் மாதவன் பிள்ளை.
எஸ்.டி.நமச்சிவாயம் ஆயில்மில்ஸ் அடையாளம் ஒட்டிய இரண்டு டின் பின்னைக்காய் எண்ணை கொண்டுவந்து வைக்கப்பட்டது. மண்விளக்குகளை வாழைத்தண்டுகள் தோறும் எடுத்து வைத்தனர் சிறுமிகள்.
“எண்ணைய சின்னப்பிள்ளைக கையிலே குடுக்கப்பிடாது” என்றா மாதேவன் பிள்ளை.அவர் சரிகை மேலாடை பறக்க எங்கோ அவசரமாக ஓடினார்.
எதிரே தேங்கயெண்ணை டின்னுடன் குமாரசாமி வந்தான். “ஏலே எண்ணைய கொண்டுவந்து வச்சிட்டு செண்டைக்காரனுக வந்தானுகளான்னு போயி பாருலே”
“அவனுக நாலுமணி பஸ்ஸிலேல்லா வருவானுக”
“சொன்னத செய்லே”
சுப்பையா வீட்டுக்கு போனபோது கிணற்றடியில் சிறு கண்ணாடியை செம்பரத்தி மரத்தில் மாட்டிக்கொண்டு சாமியப்பா சவரம் செய்துகொண்டிருந்தார். அவரே கத்தி கொண்டு வந்திருந்தார். அதை வைத்து தலையை சரித்து சவரம் செய்தார். வாய் கோணியிருந்தது.
குமரேசன் கிணற்றிலிருந்து நீர் இறைத்து சிமெண்ட் தொட்டியில் நிறைத்துக்கொண்டிருந்தார். அவர் மழுங்க சவரம் செய்திருந்தார்.
சுப்பையா “குளிக்கல்லியா?” என்றான்.
“நம்ம ஆட்டம் ஒம்பது மணிக்குல்லா?”என்றார் குமரேசன்.
“கொடை இப்ப தொடங்கும்லா?”
“கொடைக்கு நாம எதுக்கு?”
“சாமி கும்பிடணும்லா?”
“நாங்க கூத்து கட்டுதோம்லா? அதுபோரும் எங்களுக்கு”
சட்டென்று “வினாயகனே விநாயகனே வெவ்வினை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் ! விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாற் தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து” என்று சீர்காழியின் குரல் வெடித்துக் கிளம்பியது. அத்தனை மரங்களிலிருந்தும் பறவைகள் கலைந்து எழுந்து வானில் சிறகடித்தன. ஏராளமான பசுக்களும் எருமைகளும் எம்பேய் ம்றேய் ம்பாங்கோய் என்றெல்லாம் குரலெழுப்பின. ஒரே கணத்தில் ஊரே இன்னொன்றாக மாறியது. அத்தனை பொருட்களில் இருந்தும் இசை கிளம்பியது. ஒரு சேவல் சம்பந்தமே இல்லாமல் கொக்கரக்கோ கோ என்றது. நாலைந்து நாய்கள் ஊளையிட்டன
“சீர்காளி கொரலு வந்தா பிறவு திருளாதான்” என்றான் சுப்பையா.
“பாடுவான் , ஆனா சுருதி நிக்காது” என்றார் சாமியப்பா.
சுப்பையா “ஆமா, ஆனா அவருக்க கொரலு மங்களம்லா?” என்றார்.
“மருதை சோமு பாடணும், கேக்கணும்”என்றார் சாமியப்பா.
“ஆமால்லா… மருதமலை மாமணியே முருகையா!” என்றான் சுப்பையா.
“அத ஒண்ணைத்தான் கேட்டிருப்பீக… அவரு பாடினது ஏகப்பட்டது இருக்கு… பிறவு பாப்பம்” என்றார் சாமியப்பா.
சாமியப்பா எழுந்து துண்டைக்கட்டிக்கொண்டு வாளியால் தொட்டியிலிருந்து நீரை அள்ளிவிட்டு குளிக்க ஆரம்பித்தார்.
குமரேசன் ‘இப்டி மனசறிஞ்சு குளிக்கணுமானா ஆருவாமுளி தாண்டி இந்தால வரணும். பாண்டிநாட்டிலே பைசா கிட்டினாலும் தண்ணி கிட்டாது” என்றார்.
சாமியப்பா குளிப்பதை நிறுத்தி “ஆனா பாண்டிநாட்டு சங்கீதம் ஈரேளு லோகத்திலே இல்லாததாக்கும்… காருக்குறிச்சி கேட்டிருக்கேரா வே?”
“பிளேட்டு கேட்டதுதான்”
“நான் நேரிலே கேட்டிருக்கேன், ஊத்துமலையிலே. உருகி ஆறாப் பாய்வான் தாயோளி… அது சங்கீதம்.. கேட்டேராவே, பாண்டிநாட்டிலே மளை இல்லை. தண்ணி இல்லை, பச்சை இல்லை. கிளி குருவி எல்லாம் குறைவு. ஆனால் எல்லாத்தையும் நாங்க வானத்தை வச்சு நிரப்பிக்கிடுதோம்… அங்க உள்ள நீல ஆகாசம் இங்க உண்டாவே?”
“எங்க?” என்றார் குமரேசன்.
“பஞ்சபூதங்களிலே ஒவ்வொண்ணுக்கும் ஒரு கொணம் உண்டு. வானத்துக்க கொணம் சப்தமாக்கும். இங்க உள்ள வானத்திலே இடிச்சத்தம். அதனாலேதான் இங்க கொட்டும் முழவும் முரசும் கூடுதல். அங்க உள்ள வானம் தெளிஞ்ச நீலவானம். அதை நிதாந்தாகாசம்னு சொல்லுதான் பளைய ஆளு. அதிலே உள்ளதாக்கும் பாண்டி சங்கீதம். பண்டு சிலப்பதிகாரத்திலே கோவலன் பாடினது. திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாடினது. கோபாலகிருஷ்ண பாரதி பாடினது. சங்கரதாஸு சாமி பாடினது… அது அந்த வானத்திலே இருந்து வெயிலா ஒளியா பெய்ஞ்சுகிட்டே இருக்கு… மளையில்லான்னா என்னலே, மயிரே போச்சு. சங்கீதத்த வச்சு சீவிப்போம்லே பாண்டிநாட்டிலே”
“பின்னே!” என்றார் குமரேசன் சுப்பையாவைப் பெருமையாக பார்த்து “பாண்டிநாட்டு சங்கீதமாக்கும் சிவனாருக்கு பட்சம். காதிலே சங்கீதத்தையில்லா மகரபூசணமா போட்டிருக்காரு”
சுப்பையா “நான் இப்ப வாறேன்” என்று வீட்டுக்குள் ஓடினான். ஆயாவிடம் “அவருக்கு சாயை வேணுமானா கேட்டு குடு….நான் வாறேன்’ என்றான்.
“லே சாயை குடிலே”
“கொண்டா”
நின்றபடியே குடித்துவிட்டு அவன் ஓடி கோயில் முகப்புக்கு வந்தான். எல்லா விளக்குகளும் எரியத்தொடங்கியிருந்தன. கோயிலுக்குள் இசக்கி இருபக்கமும் பந்தம்போல எரிந்த விளக்குகளின் செந்தழல் நடுவே நின்றிருந்தாள்.
கணேசய்யர் இசக்கிக்குச் சந்தனக் காப்பு போட்டிருந்தார். கண்களுக்கு வெள்ளிமலர்கள். உதடுகளுக்கு செந்தூரம். தலையில் பொன்புகை ஊதப்பட்ட வெள்ளிக்கிரீடம். செம்பட்டு சார்த்தியிருந்தது. சூலாயுதத்தில் பொன்னிறமான எலுமிச்சை.
பக்கத்தில் ஏழூர்பண்ணையிலிருந்து ஒருவாரத்துக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை காலைமட்டும் கணேசய்யர் சைக்கிளில் வந்து இசக்கிக்கு பூசை வைப்பார். மற்றநாட்களில் வெளியே படியிலேயே எண்ணை ஊற்றி விளக்கு ஏற்றுவார்கள். மாதேவன் பிள்ளையின் மனைவி நீலாப்பிள்ளை அதை செய்வாள்.
கணேசய்யர் புதிய சரிகை வேட்டிகட்டி தங்கச் சங்கிலி போட்டிருந்தார். தளதளவென்று உடம்பு. கரிய குடுமி. “எங்கவே கூத்துக்காரங்க?”
“குளிக்காக”
“வரச்சொல்லும்வே… அம்மைக்க அனுக்ரகம் வேணும்லா அவனுகளுக்கு?”
மாதேவன் பிள்ளை ஓடிவந்து “லே நாறப்பயலே எங்கலே செண்டைக்காரனுக?” என்றார்.
அவன் முற்றத்துக்கு ஓடி வெளியே பார்த்தபோது செண்டைக்காரர்கள் வருவது தெரிந்தது. செணடைகள் சைக்கிளில் லோடு ஏற்றப்பட்டிருக்க அவர்கள் நடந்து வந்தனர். குமாரசாமியும் முருகனும் அருணாச்சலமும் சைக்கிள்களை உந்திவந்தனர்.
சுப்பையா திரும்ப ஓடி மாதேவன் பிள்ளையிடம் “வாராங்க” என்றான்.
“இப்பமாம் வந்தானுகளே… நீ போய் சர்க்கரைக் கடவத்தை எடுத்து கொண்டுபோயி மடப்பள்ளியிலே குடு”
சுப்பையா மாதேவன்பிள்ளையின் வீட்டுக்குச் சென்றான். பட்டுப்புடவை கட்டி கல்அட்டிகை அணிந்திருந்த நாகலட்சுமி அக்கா “ஏலே, இந்தா வெல்லத்தை கொண்டுபோயி குடு. நெய் டப்பா அந்நா இருக்கு. அதையும் கொண்டுபோயி குடு…” என்றாள்.
அவன் கடவத்தை தூக்கியதும் “மக்கா லே, எனக்க அருமைத் தம்பியில்லா நீ? அந்தாலே போயி ஒரு சாதிமல்லி சரத்தை எடுத்து சுருட்டி அக்காவுக்கு குடுத்தனுப்புலே” என்றாள்.
“இப்பம் மட்டும் நல்லா கொரலு எறங்குது?”
“நீ எனக்க தம்பியில்லா? உனக்கு நான் சீதேவி மாதிரி குட்டிய பாத்து கெட்டிவைப்பேன்”
“எனக்கு ஸ்ரீபிரியாதான் வேணும்”
“வெளங்கமாட்டே” என்று அவள் சிரித்தாள் “கண்ணாணை நீ வெளங்காமாட்டே!”
“ஏன் ,இந்நா இருக்குல்லா முல்லப்பூவு? இதுக்கென்ன?”
“இது குண்டுமல்லி… சாதிமல்லி வச்சாத்தான் மணம்… உனக்க மச்சானுக்கு சாதிமல்லிதான் பிடிக்கும். அவுக பாண்டிநாடுல்லா?”
“ஆமா, பாண்டிநாட்டிலேதான் உயர்ந்த சங்கீதம்… அதாக்கும் பாண்டிமல்லிக்கு இந்த மணம்” என்றான் சுப்பையா.
“ஏன்?” என்று அவள் மூக்கைச்சுளித்துக் கேட்டாள்.
“பாண்டிநாட்டிலே நிதாந்த மானம்லா” என்றான் சுப்பையா அவள் மேலே கேட்பதற்குள் வெல்லக்கடவத்துடன் மடப்பள்ளிக்குச் சென்றான்.
கணேசய்யர் உதவிக்கு அழைத்துவந்திருந்த சீதாராமையரும் சிவராமையரும் ஓலைக்கூரை போட்டு கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த மடைப்பள்ளியில் வியர்வை வழிய அடுப்பை எரித்துக்கொண்டிருந்தனர்.
புளியம்விறகு கறைமணத்துடன் எரிந்தது. மிகப்பெரிய உருளியில் பச்சரிசி கொதித்து குமிழிவெடித்துக்கொண்டிருந்தது. வயதான கிருஷ்ணய்யர் மிக மிக மெதுவாக கதளிவாழைப்பழங்களை உரித்து ஒரு கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.
சீதாராமையர் “ஓய் வெல்லத்தை தண்ணியிலே கரைச்சு மேலே தெளிச்சு எடுத்து பாயசத்திலே போடணும்.. இப்பல்லாம் வெல்லம்னாலே மண்ணாக்கும்” என்றார்.
ராமசாமி ஐயர் துருவி கூட்டியிருந்த தேங்காய்ப்பூ குவியலின் அருகில் இருந்து எழுந்து வந்தார். “அங்க வையிங்க” என்று சுட்டிக்காட்டினார்.
“நெய் வரல்லை” என்றார் சீதாராமையர்.
“இப்ப கொண்டாறேன்” என்றான் சுப்பையா.
குழந்தைசாமிப் பயலிடம் நாகலட்சுமி அக்காவுக்கு சாதிமல்லிச் சரத்தை கொடுத்தனுப்பினான். நெய் டின்னை கொண்டுவந்து வைத்தபோது செண்டை மேளம் கேட்டது.
அவன் கோயில்முற்றத்தை அடைந்தபோது ஊரிலுள்ள பெண்களெல்லாம் புதிய புடவைகளும் நகைகளும் அணிந்து, பவுடர்போட்டு, பூச்சரம் சூடி அங்கே நின்றிருந்தார்கள். சீரியல் சரங்கள் எல்லாம் சுடர்விடத்தொடங்கியிருந்தன. எங்குபார்த்தாலும் வண்ணங்கள். தெரிந்த பெண்கள் எல்லாருமே வேறுமாதிரி ஆகியிருந்தனர். சிலர் அழகாக, சிலர் அசிங்கமாக.
செண்டையின் ஓசையில் தீபச்சுடர்கள் அதிர்ந்து நடனமாடுவதுபோல தெரிந்தது. அவன் முற்றத்திற்குச் சென்றான். வழியின் இருபக்கங்களிலும் வாழைத்தண்டுகள் மேல் அகல்விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன. ஊரே கனவுக்குள் புகுந்துவிட்டது. கனவு வழியாகவே இனி அந்த ஊருக்குள் நடமாட முடியும். குப்பைகள் புழுதிகள் மறைந்துவிட்டன. மஞ்சள் ஒளியில் எல்லா வீடுகளும் அழகாக இருந்தன.
மாதேவன்பிள்ளை “லே, கூத்துக்காரங்களை கூடிட்ட்டு வாலே” என்றார் “அவனுக சாமி கும்பிடணும்லா?”
சுப்பையா தன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் யாருமில்லை. லைட் போடப்பட்டிருந்தது. ஆயா கோயிலுக்குச் சென்றிருந்தாள். சாமியப்பா திண்ணையில் அமர்ந்து சின்னக் கண்ணாடியில் பார்த்து முகத்துக்குச் சாயம்பூசிக்கொண்டிருந்தார். அப்பால் குமரேசன் தன் கண்களில் மையிட்டுக்கொண்டிருந்தார்.
“சாமிகும்பிட வரச்சொன்னாங்க” என்றான் சுப்பையா.
“வாறோம்… வேசம் கட்டிட்டு இருக்கோம்ல?” என்று சாமியப்பா சொன்னார். அவர் கொஞ்சம் எரிச்சலுடன் அதைச் சொன்னது போலிருந்தது.
சுப்பையா மீண்டும் கோயில்முன் வந்தான். அத்தனை விளக்குகளும் எரிய அப்பகுதியே செந்நிற ஒளியில் அதிர்ந்து கொண்டிருந்தது. உலோகப்பரப்புகள் எல்லாமே அனல்போல் தெரிந்தன.
மாதேவன்பிள்ளை “எங்கலே அவனுக?” என்றார்.
“மேக்கப்பு போடுதாக”
“சாயத்த பூசிட்டானுகளா? அப்ப இனி கும்பிட வரமாட்டானுக. கணேசய்யரே, நீரு தொடங்கும்”
“நைவேத்யம் ரெடியான்னு பாத்து வரச்சொல்லுங்க”
சுப்பையா மடைப்பள்ளிக் கொட்டகைக்குச் சென்றான். ஓர் உருளியில் அரவணைப் பாயசத்துக்காக நெய்யில் பச்சரிசியை வறுத்துக்கொண்டிருந்தார் வயதானவரான கிருஷ்ணய்யர். அருகே துண்டுபோடப்பட்ட கதளிவாழைப்பழங்கள்.
“ரெடியான்னு கேட்டாரு”
“ஆயாச்சு” என்றார் சீதாராமையர்.
ரேடியோ பாட்டு நிறுத்தப்பட்டது. செண்டையும் மணியோசைகளும் முழக்கமிட கணேசய்யர் இசக்கிக்கு தீபாராதனை காட்டினார். இசக்கியின் வெள்ளிக்கண் தீயைப்பார்த்து சுழல்வதுபோல, அவள் முகத்தில் புன்னகை அசைவதுபோல தோன்றியது
ஏழு தீபம் காட்டியபின் தூபம் காட்டி வெளியே கொண்டு வைத்தார் கணேசய்யர். எல்லாரும் சென்று தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள். அதன்பின்னர் படையல் தொடங்கியது. ஆயிரத்தெட்டு சோற்றுருளைகள் பனையோலைக் கடவங்களில் கொண்டுவந்து அடுக்கப்பட்டன. சிவராமையரும் ராமசாமி அய்யரும் அவற்றை கொண்டு வர சீதாராமையர் வாங்கி அடுக்கினார். சாதம் ஆவிபறந்தது. அவர்களின் உடல் வியர்த்து வழிந்தது.
சிவராமையரும் ராமசாமி அய்யரும் சேர்ந்து பாயச உருளியை காதுகளில் கயிறு போட்டு கட்டி, மூங்கில் நுழைத்து, தோளால் தூக்கி நகர்த்த சீதாராமையர் அதை பிடித்து மரத்தாலான சக்கர வண்டியில் வைத்தார். சீதாராமையர் இழுக்க மற்ற இருவரும் உருளியை பிடித்துக்கொண்டார்கள். உருளியில் பாயசம் கீழே அனல் இருப்பதுபோலவே குமிழிவெடித்து கொப்பளித்துக்கொண்டிருந்தது. உருளியை கொண்டுவந்து நிறுத்தி மீண்டும் கயிறுகளில் மூங்கிலை நுழைத்து தோள்கொடுத்து தூக்கி களமுற்றத்தில் வைத்தனர். இன்னொரு சிறிய உருளியில் மஞ்சள்சோறு. இன்னொரு சிறிய குட்டுவத்தில் அரவணைப்பாயசம்.
நைவேத்யம் நிறைந்ததும் கணேசய்யர் இசக்கியின் கோயிலை உள்ளிருந்து மூடினார். அனைவரும் கைகூப்பி காத்து நின்றனர். பின்னர் உள்ளிருந்து மணியோசையுடன் அவர் கதவை திறந்தார். உள்ளே இருபக்கமும் இரண்டு நெய்ப்பந்தங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. கணேசய்யர் வெளியே வந்து கெண்டியிலிருந்து நீர் தெளித்து அரளிப்பூ,தெச்சிப்பூக்களை நைவேத்யப் படையலை நோக்கி வீசினார். மணியோசையும் செண்டையோசையும் உச்சமடைந்தன
அதன்பின் அனைவரும் சென்று விபூதி குங்கும பிரசாதம் வாங்கிக்கொண்டார்கள். மாதேவன்பிள்ளை சுப்பையாவிடம் “ஏலே பந்திபோடணும்லா? போயி பாருலே” என்றார்
சுப்பையா பந்தலுக்கு ஓடினான். அங்கே ஏற்கனவே தென்னைக்கீற்றுகளை போட்டு இலைவிரிக்க ஆரம்பித்திருந்தனர்.
“மாதேவன் என்னலே சொன்னான்?”என்றார் குஞ்சுப்பாட்டா
“எலை போடலாம்னாரு”
“அப்ப மணிய அடிலே”
இசக்கிமுத்து மணியை அடித்தான். கோயில் முற்றத்தில் நின்றிருந்த பெண்கள் அனைவரும் பந்தலுக்குள் வந்து அமர்ந்தனர். சிறுவர்களும் உடன் வந்தனர்.
“லே, லே, சண்டைபோடாதியலே… ஏலே சத்தம் போடாதிக”
பந்தி நிறைந்ததும் ஆண்கள் பரிமாறினர் .படையலிடப்பட்ட பச்சரிசிச் சோறும் தொட்டுக்கொள்ள தேங்காய்த் துவையலும் விளம்பப்பட்டது.. உடன் வாழைப்பழங்களும் பலாச்சுளைகளும் மாம்பழத்துண்டுகளும். அதன்பின் அரவ்ணைப் பாயசம் ஒரு கரண்டி. அதன்பின் வெல்லப்பாயசம் முழு அகப்பை.
“ஏட்டி நாராயணி, நல்லா தின்னுடீ. மெலிஞ்சுபோய்ட்டேல்ல?”
“மெலிஞ்சாத்தானே மச்சானுக்கு இஷ்டம்”
“எனக்க சக்கரே, நீ பொன்னுல்லா? எடைக்கு எடை பொன்னு?”
சிரிப்புகள் கூச்சல்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரை கேலி செய்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்தனர்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்தபின் அடுத்த பந்தி. வயதான ஆண்கள் வரிசையாகச் சென்று அமர்ந்தனர். பெண்கள் முந்தானைகளை செருகியபடி பரிமாறினர். மீண்டும் சிரிப்பு கூச்சல்.
மாதேவன்பிள்ளை “ஏலே இந்தக் கூத்துக்காரனுக சாப்பிடல்லலே… போய் விளிலே”என்றார்
“அவங்க வேஷம் போட்டாச்சுல்லா?” என்றான் சுப்பையா “இனிமே இங்க வந்து சாப்பிடுவாங்களா?”
“இங்க நடக்குத திருவிளாவுக்கும் அவனுகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல மாதிரில்லா இருக்கு?” என்றார் மாதேவன்பிள்ளை. “இங்க ஆருக்கும் கூத்திலே விருப்பம் இல்லை. பிள்ளைக பாக்க மாட்டாங்க…பின்ன ஒரு கூத்து வேணும்லான்னு நான் விளிச்சேன். பேருக்கு ஒரு சடங்கு…”
“கூத்து நல்லதாக்கும்” என்றான் சுப்பையா.
“ஒண்ணாம்நாள் விளாலே படையலாக்கும் முக்கியம்… இது முடியுறப்ப ஒம்பதாயிரும்… பிறவு கூத்து நடக்கட்டும்னு நினைச்சேன். நாளைக்கு நெல்லைக்குரல் பயக்களுக்க சினிமாப்பாட்டு. ஆர்க்கெஸ்டிரா… அதுக்கு அந்தால தோவாளையிலே இருந்துகூட கேக்க வருவானுக”
மூன்றாம்பந்தியில் சாப்பிட்டுவிட்டு வந்த ஆயாவிடம் பாயச வாளியுடன் ஓடிக்கொண்டிருந்த சுப்பையா “ஆயா, அவங்க ரெண்டாளும் சாப்பிட்டாச்சா?” என்றாள்.
“கேட்டேன். வேண்டாம்னு சொல்லிட்டாக. நாலுமட்டம் கேட்டேன்… வேசம் கெட்டினா பிறவு தண்ணிகூட குடிக்கப்பிடாதாம்” என்றாள் ஆயா.
நான்காம் பந்தி முடிவது வரை சுப்பையா சாப்பிடவில்லை. ஐந்தாம் பந்தியில் அவன் அமர்ந்தபோது களைத்திருந்தான். மாதேவன்பிள்ளையும் அதில்தான் அமர்ந்தார். “ஏம்லே, எல்லா ஐட்டமும் இருக்குல்ல?” என்றார்.
“எல்லாம் இருக்கு. கணேசய்யர் கணக்குல்லா?” என்றார் சிதம்பர நாடார்.
பந்திகள் முடிந்து கொட்டகையை பெருக்கிக்கொண்டிருந்தபோதுதான் சுப்பையா மீண்டும் அவர்களை நினைவுகூர்ந்தான். கூத்து ஆரம்பிக்கவேண்டியதுதான். ஆனால் அவர்கள் இன்னமும் வரவில்லை
இலைகளையும் குப்பைகளையும் சேகரித்து கொண்டுசென்று கொட்டி கோயில் முற்றத்தை தூய்மை செய்தார்கள். சுப்பையாயும் முருகேசனும் ஆவுடையும் சேர்ந்து உருளியை நிறுத்தி உருட்டி கொண்டுசென்று கிணற்றடியில் போட்டனர். பின்னர் எல்லா பாத்திரங்களையும் அங்கே கொண்டுசென்று போட்டனர். அவற்றின்மேல் வைக்கோலையும் மண்ணையும் உமியையும் அள்ளி போட்டு நீர் இறைத்து ஊற்றி ஊறவைத்தனர்.
அவன் திரும்பி கோயில் முற்றத்திற்கு வந்தபோது மாதேவன்பிள்ளை “லே, அவனுகளை வரச்சொல்லு. அவனுக கும்பிட்டு கூத்த தொடங்கினா கோயில் நடையை மூடீட்டு சாமிக வீடுபோவாங்கள்லா?” என்றார்
சுப்பையா அவர்களை அழைக்க நினைத்து தன் வீடு நோக்கி செல்வதற்குள் எதிரே அவர்கள் இருவரும் வருவதைக் கண்டான். திகைத்து நின்று, பின் நினைவுமீண்டு கைகூப்பினான். சாமியப்பா அர்ஜுனன் வேஷம் போட்டிருந்தார். குமரேசன் அல்லியாக வந்தார்.
நிமிர்ந்த வேங்கை நடையுடன் வந்த சாமியப்பாவை கண்டு அனைவரும் திகைத்து கலைந்த ஓசை எழுப்பி பிளந்து வழிவிட்டனர். குமரேசன் பெண்போலவே இருந்தார். மிகமிக அழகான அசைவுகள். பார்வையே மாறியிருந்தது. போதை கொண்டவர் போல
அவர்கள் வந்து கோயில்முன் நின்றார்கள். கணேசய்யர் கோயிலுக்குள் சென்று தூப ஆரத்தி காட்டி கொண்டுவந்து காட்டினார். சாமியப்பா அதை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டார். குமரேசன் ஒரு நடன அசைவாகவே தூபத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
சாமியப்பா நடந்து மேடைநோக்கிச் சென்றபோது சுப்பையா அறியாமலே கையை கட்டிக்கொண்டு அவருக்குப் பின்னால் சென்றான். அவர் மேடையில் ஏறினார். மேடையில் ஆயிரம்வாட் பல்ப் போடப்பட்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் அவர் ஒரு நகைபோல தோன்றினார். அருகே இன்னொரு நகை போல குமரேசன். இரண்டு கம்மல்களை அருகருகே வைத்ததுபோல
அர்ஜுனன் உரத்தகுரலில் சபாவந்தனம் பாடி சுழன்று ஆடி வணங்கினான். அதன்பின் அல்லிசபாவந்தனம் பாடினாள். உண்மையில் அது கூத்தே அல்ல. ஆர்மோனியம் இல்லை, பின்பாட்டு இல்லை. மிருதங்கம்கூட இல்லை. அவர்கள் இரண்டுபேர் மட்டும்தான்.
சபாவந்தனம் முடிவதுவரை கூட்டமாக வளைந்து நின்றபடியே தெருக்கூத்து பார்த்தவர்கள் நடிகர்கள் இருவரும் அரங்கின் பின்பக்கம் சென்றபோது பேசியபடி கலைந்து செல்லத் தொடங்கினார்கள். சுப்பையா திரும்பித் திரும்பிப் பார்த்தான். கூட்டம் கலைந்து மேடைக்கு முன் வெற்றிடம் உருவாகியது
அதற்குள் மேடையில் அல்லி தோன்றினாள். அவளுடன் தோழிகள் இருந்தனர். தோழிகளுடன் பேசியபடி அவள் காற்றில் அசையும் கொடிபோல ஆடி ஆடி நடந்துவந்தாள்.
சுப்பையா அவள் தோற்றத்தின் கம்பீரத்தை திகைப்புடன் பார்த்தான். அத்தகைய தலையெடுப்பு எப்படி பெண்களுக்கு வரமுடியும்? அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததே இல்லை. ஆனால் அவளுடைய அசைவுகள் அனைத்தையும் பார்த்திருந்தான். வெவ்வேறு பெண்களில் வெவ்வேறு தருணங்களில் பார்த்தவற்றின் கலவை அவள்.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருந்த புதிய டி.ஆர்.ஓ மல்லிகா மேடம், சினிமாவில் தோன்றிய இந்திரா காந்தி, ஆபீஸில் புதிதாக வேலைக்கு வந்த ஆபீசர் டெய்ஸி பாய், சுசீந்திரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருவனந்தபுரம் அமைச்சர் கமலாதேவி, நாகராஜா கோயிலில் காரில் இறங்கிய துணிக்கடை ஓனர் சுந்தரவடிவேல் நாடாரின் மனைவி…
ஏராளமான பெண்கள். அரசிகள், சக்கரவர்த்தினிகள். ஆனால் அவள் அவர்கள் அனைவரையும் விட மேலே நின்றிருப்பவள். அவள் கால்கள் தரையில் படுகின்றனவா? முகில்கள் மேல் நடப்பவள் போலிருந்தாள். காற்றில் புகை ஒழுகிச்செல்வதுபோல் அசைந்தாள்
அதற்கு நிகரற்ற செல்வம் இருக்கவேண்டும். நிகரற்ற அழகு இருக்கவேண்டும். நிகரற்ற அறிவு இருக்கவேண்டும். இவை அனைத்தும் இருக்கிறது என்ற தன்னுணர்வும் இருக்கவேண்டும். தெய்வங்கள் அந்த நிமிர்வை ஒப்புக்கொண்டு விட்டுவைக்கவேண்டும்.
அவன் விம்மினான். நெஞ்சை பிடித்துக்கொண்டு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அல்லி அருகே நின்ற கோரைப்புற்களை பிடுங்கி அம்புகளென எடுத்து எறிந்து மரங்களிலிருந்த மலர்களை வீழ்த்தினாள். அம்பு திரும்பத்திரும்ப அவள் கைக்கே வந்தது. ஒரே கோரைப்புல்லை மீண்டும் மீண்டும் வீசி அதில் செண்பக மலர்களைக் கோத்து மாலையாக்கி தானே அணிந்துகொண்டாள்.
அல்லி குனிந்து நீரோடையில் தன் அழகை தானே பார்த்தாள். “இதற்கு நிகர் யாரடி?” என்று தோழியிடம் கேட்டாள். “ரதி” என்றாள் ஒருத்தி. அப்பால் ரதி வந்து நின்று “இல்லை நானில்லை” என்று சொன்னாள். “திருமகள்” என்றாள் இன்னொருத்தி. “அய்யோ நானா?” என்று திருமகள் நாணினாள். “பெருமாள் பெண்ணாக அவதாரமெடுத்த மோகினி” என்றாள் ஒருத்தி. மோகினி புன்னகைத்து “இல்லை” என மறுத்தாள்
அல்லி “நானே” என்றாள். “நிகரற்றவை எல்லாம் தெய்வம் என்பதனால் நானே தெய்வம்!” என்றாள். “தெய்வத்தை மானுடர் தொடமுடியாதென்பதனால் தனக்கு இப்புவியில் ஆணே இல்லை!” என்றாள். “ஆம்! ஆம்! ஆம்!” என வானம் இடியோசை எழுப்பியது. அவளருகே நின்ற மயில்கள் எல்லாம் தோகைவிரித்தன. அவற்றுடன் அவளும் ஆடினாள்.
பின்னர் அவள் தனிமை உணர்ச்சியை அடைந்தாள். தோழிகளிடம் செல்லுங்கள் என்றாள். அவர்களை மலர் எடுத்து எறிந்து சினந்து அகற்றினாள். அவர்கள் அனைவரும் சென்றபின் தனிமையில் அமர்ந்திருந்தாள். அவள்மேல் மரமல்லி மரத்திலிருந்து மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. ஒவ்வொரு மலருக்கும் அவள் உடல் சிலிர்த்தது. அவள் காமம் கொண்டாள். அவள் மேலாடையை காற்று அள்ளி வீசியது. ஒரு மலர் அவள் முலைகள் மேல் விழுந்தது. ஒருமலர் அவள் நாபியில் விழுந்தது
அவள் காமம் கொண்டு புல்வெளியில் படுத்தாள். குனிந்து தன் உருவத்தை நீரில் பார்த்தாள். அந்த உருவத்தைக் கண்டே காமம் கொண்டாள். நானே எனக்கு ஆண் என ஆகவேண்டும் என்றாள். நீரில் தெரிந்த அவளுடைய உருவமே ஆண் என்று மாறியதுபோல நீருக்குள் இருந்து அர்ஜுனன் எழுந்தான்
சுப்பையா “ஆ!’ என்று வியப்பொலி எழுப்பினான். அவனைச் சூழ்ந்து ஓரிருவர் மட்டுமே இருந்தனர். சில சின்னப்பையன்கள் அப்பால் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அர்ஜுனனை கண்டு அல்லி திகைத்து எழுந்தாள். “நீ யார்?” என்றாள். “நீயே நான்!” என்று அவன் சொன்னான். “நீ மாயாவி… போய்விடு” என்று அவள் சொன்னாள். “நீ அழைத்ததனால்தான் வந்தேன்” என்று அவன் சொன்னான்.
அவள் சீற்றம் கொண்டு அவனை போருக்கு அழைத்தாள். அவள் போருக்கு எழும்போது ஆணாக ஆகிவிடுவது வழக்கம். அவள் தோள்கள் உறுதியடைந்தன.நடையில் மிடுக்கு கூடியது. கண்களில் கூர்மை. அவள் அவனை அம்புகளால் தாக்க அவன் பெண்ணானான். நளினமான அசைவுகளுடன் ஒயிலாக அவளுடன் போரிட்டான்.
அவர்கள் பறந்தும் சுழன்றும் போரிட்டார்கள். இருவரும் போரிட்டு போரிட்டு களைப்படைந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் வெல்லமுடியாது என்று கண்டனர். “நீ என்னை கொல்லவேண்டும் என்று மெய்யாகவே விரும்பி ஒரே ஒரு அம்பை செலுத்தினால்கூட நான் செத்துவிடுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஒற்றை ஓர் அம்படி கிளியே, இற்றைக்கே கதைமுடியும் என் கனியே”
“இதோ” என்று அவள் அம்புவிட்டாள். அந்த அம்பு மலர்மாலையாக அவன் கழுத்தில் விழுந்தது. இன்னொரு அம்பும் மயில்தோகையாக வருடிச் சென்றது. இன்னொரு அம்பு சந்தனமாக அவன்மேல் படர்ந்தது. இன்னொரு அம்பு குளிர்மழைத்துளியாகச் சொட்டியது.இறுதியில் அவள் தன் அனல் அனைத்தையும் திரட்டி விடுத்த அம்பு அழகான பட்டுத்துணியாக அவன் மேல் விழுந்தது.
“இதோ என் அம்பு” என்று அவன் தன் அனல் அம்பை எடுத்து இடியோசையுடன் அவள்மேல் வீசினான். அது அவள் மடியில் ஒரு குழந்தைபோல வந்து கிடந்தது. “அய்யோ!”என்று அவள் நாணி எழுந்துகொண்டாள். அவன் சிரித்தான்.
அல்லி களைத்து அமர்ந்தபோது பெண்ணானாள். அப்போது அவன் ஆணானான். “நான் அஸ்தினபுரியின் அர்ஜுனன்” என்றான். “அவள் நான் அல்லிநாட்டு அரசி அல்லி” என்றாள்,
அவர்கள் இருவரும் ஒன்றானார்கள். நிலவு எழுந்தது. அவர்கள் நிலவொளியில் மலர்கள் நடுவே மகிழ்ந்திருந்தனர். ஆற்றில் இறங்கி இரு மீன்கள் போல நீராடினார்கள். அல்லியை அர்ஜுனன் மணந்தான். அதிகாலை அவள் கிளம்பினாள்.“நாளையும் இங்கே வா” என்று அவன் சொன்னான். “நான் இனிமேல் வரமாட்டேன்” என்று அவள் சொன்னாள். “நீ வரவேண்டாம், நானே வருவேன்” என்றான். அவள் சிரித்து “ஏழுகோட்டை ஏழு அகழி ஏழுநிலை தாண்டி நீ வருவாயோ ? நல்லகதை!” என்று அவள் சொனனள். “எங்கும் வருவேன்.,எதையும் கடப்பேன். மங்காத காதலென்னும் ஒளி என் நெஞ்சிலே எரியுதடி” என்றான் அர்ஜுனன்
அவள் “சரி வா பார்ப்போம்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அன்றிரவு அவன் அவள் அரண்மனைக்கே சென்றான்.“நீ எப்படி என் அரண்மனை வளாகத்திற்குள் வந்தாய்?”என்று அல்லி அர்ஜுனனிடம் கேட்டாள். “நான் எங்கும் ரகசியமாக உள்ளே புகும் மாயம் தெரிந்த கள்வன். களவர்களே கன்னியரைக் கவரமுடியும்” என்றான் அர்ஜுனன்.
“மாயக்காரா, உன்னை பெண்கள் விரும்புவதன் ரகசியம்தான் என்ன?”என்றாள் அல்லி. “நான் பெண்களுக்கேற்ப மாறுவேன். களிமண் போன்றவன். பெண் என்னை அவளுக்கேற்ப வனைந்துகொள்ள முடியும்” என்றான் அர்ஜுனன்.
அல்லி “ஆனால் தனக்கேற்ப வளையும் ஆண்களை பெண்களுக்கு உள்ளூர பிடிக்காதே” என்றாள். “ஆமாம் நான் உண்மையில் வளைவதில்லை, அது என் தோற்றமே என்றும் அந்தப் பெண்களுக்கு புரியவைப்பேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நகைக்கு தங்கமாவேன், வாளுக்கு இரும்பாவேன். எண்ணிய வண்ணமே எங்கும் இருந்திடுவேன். பெண்ணையும் வில்லையும் வளைக்கும் வீரனடி நான் !”
அவள் அவனை மலர்ச்செண்டால் அடித்தாள். அவன் அவளை மயில்தோகையால் அடித்தான். அவள் அவனை பாறைகளை தூக்கி தாக்கினாள். அவன் அவளை மரங்களை தூக்கி அடித்தான். அவை மயிலிறகும் மலர்த்தோகையும் ஆக மாறின.
பெருமூச்சுடன் சுப்பையா தன்னை உணர்ந்தபோது அவனைத்தவிர எவருமே கூத்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மைக்கில் ஒலித்த அவர்களின் குரல் ஊரை மூடியிருந்த இருண்ட வானில் அலைந்து தொலைவில் கரைந்து கொண்டிருந்தது. மணற்பரப்பில் நாலைந்துபேர் முண்டாசால் செவிகளையும் கண்களையும் மூடி தூங்கிக் கொண்டிருந்தனர்.
அல்லி கருவுற்றாள். அர்ஜுனன் அவனுடைய துடுக்கெல்லாம் போய் பயமும் பதற்றமும் கொண்ட கணவனாக ஆனான். அல்லி அடம்பிடிக்கும் குழந்தையாக ஆனாள். மேற்குமலைமேல் மேற்குச் சிகரத்தின் மேற்குவிளிம்பில் நின்றிருக்கும் மாமரத்தின் மேற்கு கிளைமேல் ஒருகிளையில் ஒன்றுமட்டுமே நின்றுள்ள பசுமாங்காய் வேண்டும் என்றாள். அதை அவன் கொண்டுவந்தபோது ஒருவாய் கடித்துவிட்டு புளிக்கிறது என்று சொல்லி வீசினாள்.
இந்திரன் உலகிலுள்ள அமுதம் வேண்டும் என்றாள். அவள் பறந்துசென்று கொண்டுவந்து கொடுத்தபோது துவர்க்கிறது என்று சொல்லி ஓங்கரித்தபின் அடுப்புச்சாம்பலை அள்ளி தின்றாள். பாரிஜாதம் வேண்டாம் கல்யாண சௌகந்திகம் வேண்டும் என்றாள். அர்ஜுனன் பீமனிடம் வழிகேட்டு தெரிந்துகொண்டு சென்று கல்யாண சௌகந்திகம் கொண்டுவந்தான். அதை முகர்ந்து பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி பழம்புளி எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
அவளுக்கு குழந்தை பிறந்தது. அவள் அதை அர்ஜுனன் தொடக்கூடாது என்றாள். அர்ஜுனன் குழந்தையை ஒரு முறை தொடுவதற்கு தரும்படிச் சொல்லி கெஞ்சினான். போ போ என்று அல்லி அவனை துரத்தினாள். அர்ஜுனன் அவள் காலைப்பிடித்தான். “என் பிள்ளை என் செல்லம் அவன் உள்ளங்காலை ஒருமுறை முத்தமிட்டுக்கொள்கிறேனே” என்றான் “முத்தமிட்டால் மூச்சுபடும். என்பிள்ளை அழுக்குபடுவான்.. விலகிப்போ” என்றாள்.
அவன் அவளிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சினான். “பூவை முகர்வதுபோல் முகர்ந்தால் வாடிடுவான். தென்றலை முகர்வதுபோல் முகர்ந்தால் நான் தருவேன்” என்றாள். “ஆணையடி, நான் இடும் முத்தத்தை அவன் ஆத்மா மட்டுமே அறியும்” என்றான். “அப்படியென்றால் சரி”என்றாள் அல்லி. அர்ஜுனன் அந்தப் பட்டுக்காலை முத்தமிட்டு அழுதான். “தெய்வங்கள் தோற்குமடி,தேவலோகம் மறுக்குமடி. தண்டையிட்ட சிறுகால் தலைமேல் இருக்குமென்றால் மேன்மையெல்லாம் சேருமடி, மெய்யெல்லாம் கூடுமடி”
அருமந்த மகனுக்கு ஆயிரம் பெயர் யோசித்தனர். ஆயிரம் பேரிலும் ஆயிரம் குறையே கண்டனர். சிவனென்றால் கண்டம் கருப்பு. பெருமாளென்றால் நெஞ்சம் கருப்பு. பிரம்மனுக்கொ ஒருதலை குறை. முருகனுக்கு ஆண்டி நிலை. கணபதிக்கோ ஆனைத்தலை. “அய்யய்யோ என் மகனுக்கு அழகான பெயர் வேணும். ஆரும் தொடாத பெயர் அருமந்த பிள்ளை பெயர்” என்றாள் அல்லி
அதன்பின் இந்திரனின் புரோகிதர் வசிட்டரை நேரில் வரவழைத்தனர். அவர் அவன் பூர்வஜென்மபலன் கணித்து அவனுக்குப் புலந்திரன் என்று பெயரிட்டார். புலந்திரனை அர்ஜுனன் தலையிலும் தோளிலும் வைத்து வளர்த்தான். மாவீரன் அந்த மைந்தனுக்கு யானையும் குதிரையும் ஆனான்.
புலந்திரனுக்கு அர்ஜுனன் வில்வித்தை கற்பித்தான். தைலப்புல் தீப்பிடிப்பதுபோல புலந்திரன் வில்வித்தை கற்றுக்கொண்டான்.தண்டைக்கால் களையும் முன்னே தன்கையில் வில்லெடுத்தான். தளர்நடை மாறும் முன்னே தந்தையை வென்று நின்றான். பேச்செழா பிள்ளை பெருவீரன் ஆகி நின்றான். கண்திறக்கா வயசினிலே கைரெண்டில் வில்பிடித்தான்.
அர்ஜுனனை புலந்திரன் ஏழுமுறை போரில் வென்றான். வென்ற மகன் காலடியில் தலைவைத்து அர்ஜுனன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.
அப்போது அஸ்தினபுரியில் வனவாசம் தொடங்கிய காலம் முதல் அர்ஜுனனை தொடர்ந்து வரும் வாய்மூடாப் பசுங்கிளி அவனிடம் வந்து சொன்னது. “பாண்டவரில் இளையவனே, நீ வனவாசத்தை மறந்துவிட்டாய். இனி பன்னிரண்டு ஆண்டுகள் நீ காட்டில் அலையவேண்டும். நகரங்களுக்குள் நுழையக்கூடாது. இல்லாவிட்டால் சாபம் வந்துசேரும்”
அர்ஜுனன் திகைத்தான் . “வனவாசம் உனக்கு குருசாபம். நீ அதை மீறினால் உன் குடியே பழிசுமக்கும். உன் மைந்தர் அழிவார்கள்” என்றது கிளி. “எண்ணிப்பார் உனக்கு, இப்புவியில் பிற மைந்தரில்லை. எஞ்சியவன் இவன் வாழ இன்றே கிளம்பிடுக” என்று பாடியது “நான் கிளம்பிவிடுகிறேன். என் பிள்ளைகளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது” என்றான் அர்ஜுனன்.
அர்ஜுனன் அல்லியடம் அன்றே வனவாசம் கிளம்பவேண்டும் என்றான். அல்லி திடுக்கிட்டாள். “ஆயிரம் ஆண்டுகள் இப்படியே வாழ்வோம் என்றீர்களே” என்றாள். “ஒருநாளும் பிரியேன் என்று சொன்ன வரிக்கு என்ன பொருள்?”’என்றாள். மிடுக்கும் தருக்கும் அழிந்து பேதைப் பெண் என்று ஆனாள். அழுது புலம்பினாள். மன்றாடி கண்ணீர்விட்டாள். தொழுது காலில் விழுந்தாள். ஓய்ந்து ஒடுங்கிப்படுத்தாள்.
அர்ஜுனனும் அழுதான். “வேறுவழியில்லை அன்பே” என்றான். “பெண்ணரசி என் சொல்கேளு. பெரியவிதி துரத்துதடி . பேயுருவாய் அலைவேனே. பெருஞ்சுரம்தான் கடப்பேனே. நாயெனவே திரிவேனே. நாநிலமும் காண்பேனே. என்னை மறந்துவிடு. என் மகனை வளர்த்துவிடு. தன்னை அறிந்த பின்னே தனயனவன் கேட்பானே. உன்னை அவன் கேட்டால் என்னை பெயர் சொல்லு”
அல்லி “வனவாசம் போகாதீங்க என் மனவாசம் போதுமுங்க. காடோடி கண்டதென்ன என் நாடெல்லாம் உங்களுக்கே. கண்ணீரில் விட்டுவிட்டு நீங்க கானகம்தான் செல்வதென்ன? பெண்ணென்று வந்துவிட்டால் பெருந்துக்கம் விதிதானோ?” என்று அழுதாள்.
“பெண்ணில் சிறந்தவளே, என் பேருக்கு உரியவளே, மண்ணில் உன்னைப்போல் மங்கலம்தான் உண்டோடி? எண்ணி எடுத்தாலும் எத்தனைதான் பாத்தாலும் பண்ணி வச்சபலன் பாதையிலே தொடருமடி. விதையாகி முளைச்சதெல்லாம் மரமாகி முத்துமடி. சதையாகி வந்ததெல்லாம் சாவாகி போகுமடி. கதையாகி போனாலே கண்ணீரும் இனிக்குமடி. புதைஞ்சாத்தான் முளைக்குமுன்னு பூலோகம் சொல்லுதடி” என்றான் அர்ஜுனன்.
அவர்கள் தழுவிக்கொண்டார்கள். பிரிந்து மீண்டும் தழுவிக்கொண்டார்கள். பிரியப்பிரிய மீண்டும் மீண்டும் தழுவிக்கொண்டார்கள். தழுவும்தோறும் பிரிவது கடினமாகியது. தழுவாமலிருக்கவும் முடியவில்லை. தொட்டிலில் தூங்கிய பிள்ளையை முத்தமிட்டான். பிள்ளையின் ஆடையை முத்தமிட்டான். பிள்ளையின் நிழலை முத்தமிட்டான்.
“இனிச்சா கசக்கவேணும் எழுந்தா விழவேணும். தனிச்சுத்தான் போகவேணும் தனக்குத்தான் துணையேடி. மனிசப்பிறவிக்கு மாறாத விதியேதான்! பெண்ணே பெருந்தேவி பேசா முறையல்லோ. மண்ணிலே ஒருநாளும் மாறாத வழியல்லோ” என்று அர்ஜுனன் புலம்பினான்.
அர்ஜுனன் விடைபெற்று கிளம்பினான். ஆனால் அவன் நிழல் அல்லியின் அருகில் அசையாமல் நின்றது. ஏழுமுறை எழுந்தாலும் நிழல் நகராமல் அவனால் அங்கிருந்து செல்லமுடியவில்லை. அவன் வாளை எடுத்து அந்த நிழலை வெட்டித் துண்டாக்கினான். துண்டான நிழலில் இருந்து ரத்தம் வழிந்தது. அது கழுத்தறுந்த ஆடுபோல் துள்ளித் துடித்தது.
“தொப்புள் கொடியாக தொடர்பறுத்து போறேனே. எப்போ வருவேனோ எனக்கின்னும் தெரியலையே. எங்கு போனாலும் என்னரசி உனை மறவேன். பேய்வழியே போனாலும் பெண்ணரசி உன்னை நினைப்பேன். மங்காத பொன்னே உன்னை மனசாலே நினைச்சிருப்பேன். மறுஜென்மம் ஒன்றிருந்தால் மங்கையுனை கைப்பிடிப்பேன்” அர்ஜுனன் பாடியபடியே சென்றான். செல்லும் வழியெல்லாம் தவறி தடுக்கி விழுந்தான். அல்லி அவன் போன வழி நோக்கி ஏங்கி அழுதாள் அவன் சென்று மறைந்தபிறகு நிலத்தில் விழுந்து கதறினாள்.
அல்லி அந்த மைந்தனை தலைக்குமேல் தூக்கி வைத்து கதறினாள். நெஞ்சோடு அணைத்து விம்மினாள். சினம்கொண்டு தூக்கி அப்பால் வைத்தாள். பிறகு வெறிகொண்டு எடுத்து மீண்டும் முத்தமிட்டாள். அந்தப்பிள்ளையை அணைத்துக்கொண்டு அவள் தன் வேலை ஒரு கையால் எடுத்துக்கொண்டாள். ஒருகையில் வேலும் மறுகையில் பிள்ளையுமாக அவள் அரியணையில் அமர்ந்தாள்.
அவளை தேவர்கள் வாழ்த்தினார்கள். மூன்று தெய்வங்களும் அருள் சொரிந்தார்கள். அவளுடைய குடிகள் அவளை புகழ்ந்து பாடி மலர்மாரி பொழிந்தனர். அவள் அவர்களை அம்மை தன் மக்களை காப்பதுபோல காத்தாள்.
சுப்பையா அழுதுகொண்டே உடலைச் சுருட்டி பந்தல்முன் அமர்ந்திருந்தான். அங்கே அவனைத் தவிர எவருமில்லை. மேடையில்கூட மனிதர்கள் என எவருமில்லை. அவனன்றி எவரும் அந்தப் பெருந்துயரத்தை அறியவில்லை. அவன் கண்ணீர் விட்டுக்கொண்டு சுருண்டு பந்தலிலேயே படுத்துவிட்டான். அவ்வப்போது அவன் உடல் அழுகையில் விம்மிக்கொண்டிருந்தது.
சுப்பையா விழித்துக்கொண்டபோது நல்ல வெளிச்சம். அவன் எழுந்து அமர்ந்து திகைத்து சுற்றிலும் பார்த்தான். ஓலைக்கீற்றுப் பாய்களில் ஓரிருவர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வெயில் வரவில்லை, ஆனால் நல்ல மண்வெளிச்சமும் வான்வெளிச்சமும் இருந்தது. அவன் மேடையை பதற்றத்துடன் பார்த்தான். அங்கே எவருமில்லை.
சுப்பையா எழுந்து கோயில்முகப்புக்கு வந்தான். கணேசய்யர் நடைதிறந்து பூசை செய்துகொண்டிருந்தார். சீதாராமையர் கிணற்றிலிருந்து பித்தளைக்குடத்தில் தண்ணீர்கொண்டுவந்து வைத்தார்.
“சாமி, கூத்துக்காரங்க எங்க?” என்று அவன் கேட்டான்.
“ஒராளு இந்தா இப்ப அந்தாலே போனாரு… மீசை வச்சவரு” என்றார் சீதாராமையர்.
“எங்க?”
அவன் மூச்சிரைக்க ஓடினான். அகல்விளக்குகள் அணைந்த வாழைத்தண்டுகள் எண்ணை வழிய நின்றிருந்தன. அணைந்த குழல்விளக்குகள் காகிதச்சுருள் போலிருந்தன. சாமியப்பா வரவேற்பு வளைவருகே பையுடன் நின்றிருந்தார்.
அவன் ஓடி அருகே சென்றான். அவர் அவனை திரும்பி பார்த்தார். “தூங்கிட்டிருந்திய…சரீன்னு கிளம்பியாச்சு” என்றார்
அவர் முகத்தில் கழுவியதில் மிஞ்சிய சாயம் படர்ந்திருந்தது. வாய் சிவப்பாக இருந்தது.
“அய்யா ஒருநாள் தங்கிட்டு போலாமே”
“தம்பி அதுக்கொரு முறையுண்டு…ஆட்டம் முடிஞ்சா சூரியனுக்கு முன்னாலே கெளம்பீரணும்னு வளக்கம் உண்டு… சைக்கிள் வாறதுக்கு நின்னுட்டிருக்கேன்”
“அய்யா” என்று உடைந்த குரலில் அவன் அழைத்தான்.
“பைசால்லாம் நிறைவா குடுத்திட்டாங்க தம்பி… இனி ஒருமாசம் கும்பி ஆறும்… அம்மைகிட்ட கேட்டதா சொல்லுங்க. நல்ல சாப்பாடும் நெறைஞ்ச வார்த்தையும். நல்லா இருக்கணும். லெச்சுமி பெருகணும்…”
அவரா அர்ஜுனன்? வில்லுடன் எழுந்த மாவீரன்?
“அய்யா அவரு, மருதை குமரேசன்?”
“அவன் காலம்பற இருட்டிலேயே கெளம்பிட்டான்… மருதை பஸ்ஸு வெடிகாலையிலே இருக்குண்ணு சொன்னான்… நமக்கு நாகர்கோயிலு போயி அந்தால சங்கரன்கோயிலு…”
சைக்கிளில் ஆறுமுகப்பெருமாள் வந்தான். “ஏறிக்கிடுங்க” என்றான்.
“வாறேன் தம்பி” என்றபடி அவர் ஏறிக்கொண்டார். “வாறேன், மறுக்கா பாப்பம்” அவர் சாமியப்பாவாகத்தான் இருந்தார். நேற்றிரவின் அர்ஜுனன் அவரே அல்ல. அந்த வண்ணங்கள் கரைந்து முகத்தில் பரவியிருந்தன.
“அய்யா” என்றான் சுப்பையா அவனுக்கு நெஞ்சடைத்தது. வனவாசம் போகாதீங்க, என் மனவாசம் போதுமுங்க . அவன் தன்னை அடக்க முயன்று விசும்பலாக மீறி “அய்யா!” என்றான்.
சைக்கிள் திரும்பியது. அவர் புன்னகைத்தார். அர்ஜுனனின் புன்னகை. அவன் திடுக்கிட்டு முன்னால் ஓர் அடி வைத்தான். சைக்கிள் விலகிச்செல்ல அவர் பறந்து பறந்து அகன்று சென்றார்.
***
[ நண்பர் கமல்ஹாசனுக்கு]