மதுரம் [சிறுகதை]

Ashish Maity Buffalo

அச்சு ஆசானை நான்தான் கூட்டிவரச்சென்றேன். அவர் தன் வீட்டின் மண்திண்ணையில் காலைநீட்டி அமர்ந்து பீடிபிடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் யாருமில்லை. அந்நேரத்தில் அவருடைய பேரனும் குடும்பமும் தோட்டத்தில் இருக்கும். ஆசான் அவரைச் சூழ்ந்து காறித்துப்பியிருந்தார்.நடுவே பீடித்துண்டுகள் கிடந்தன.

“என்னவாக்கும் பிள்ளே சங்கதி?” என்று அவர் கேட்டார்.

“லச்சுமிக்கு சொகமில்லை” என்றேன்

“ஆருக்கு?”

‘லச்சுமிக்கு”

“என்ன செய்யுது?”

“சவிட்டு முட்டு எல்லாம் உண்டு. இந்நா இப்பம் அப்புவண்ணனை முட்டி போட்டிருக்கு… ”

“ஓ” என்றார் ஆசான் ‘அப்ப சொகமில்லாத்தது அப்புவுக்கில்லாடே?”

“ஆமா” என்றேன். இப்போது நானே குழம்பிவிட்டேன். “ரெண்டுபேருக்குமே சொகமில்லை” என்று பொதுவாகச் சொன்னேன்

“அப்பு என்ன செய்யுதான்?”

“கிடக்குதாரு… “

“எந்திரிக்க முடியுமா?”

“இல்ல. அளுவுதாரு”

“லச்சுமி?”

“நின்னிட்டிருக்கு”

“எரையெடுக்குதாளா?”

நான் லட்சுமியை நினைவுகூர்ந்தேன். அவள் அதை மட்டும்தான் செய்துகொண்டிருந்தாள்

“ஆமா, எப்பவும் தீனிதான்”

“சாணிபோடுதா?”

“எப்பவும் அதுவும் செய்யுது?”

“அப்ப அதுக்கு என்ன தீனம்?”

நான் குழம்பி “ஒண்ணுமில்லை” என்றேன்

“அப்ப தீனம் உள்ளவன விட்டுப்போட்டு சும்மா நிக்குதவளுக்கு மருந்துகுடுக்க என்னைய விளிக்கவனுக்கு தீனம் உண்டுல்லா?”

“ஆமா”

“செரி…” என்று அவர் எழுந்தார். “எனக்க சொடலமாடா, ரெட்சிச்சுகொள்ளுடே எரப்பாளி!” என்று முனகினார்.

சுடலைமாடன் மிக அருகே எங்கோ நின்றுகொண்டிருக்கும் உணர்வை நான் அடைந்தேன். அனேகமாக அவனும் ஒரு திருடனாகவே இருக்கவேண்டும் என்றும் தோன்றியது

வெற்றிலைப்பொதியை எடுத்து வேட்டியில் சுழற்றி செருகியபடி,“நான் எப்பவும் சொல்லுகதாக்கும். உனக்க அப்பன் கரடிநாயருக்கு என்னமோ ஒரு ரோகம் உண்டுண்ணு… என்னவாக்கும் எசக்கேடுண்ணு எனக்கு தெரியல்ல… ஆனா உண்டு பாத்துக்க” என்றார் அச்சு ஆசான்

“அங்க தங்கையா நாடாரும் டீக்கனாரும் உண்டு”

“அவனுக ரெண்டுபேருக்கும் அதே எசக்கேடு உண்டு… ஒண்ணுலே தட்டினா மூணாக்கும்” என்றார் ஆசான் .எரவாணத்தில் செருகிவைத்திருந்த தோலுறை போட்ட குத்துக்கத்தியை எடுத்துக்கொண்டார். கொடியிலிருந்து துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு “போலாம் பிள்ளே” என்றார்

“அது கட்டாரிதானே?” என்றேன்

“ஆமா, கையிலே வேணும்லா?”

“எதுக்கு?”

“நமக்கு சத்துருக்கள் உண்டுமே”

“சத்துருக்கள்னா?”

“பிள்ளே அந்தக்காலத்திலே நாம தொட்டுவிட்ட குட்டிகள் பலதுண்டு இங்கிண. அவளுகளுக்க கெட்டினவன்மாரிலே பலபேரு நம்மள நொட்டுகதுக்குன்னு எறங்கி நடந்தானுக”

“அவனுக ஆரு?” என்று ஆவலாகக் கேட்டேன்.

“அதாச்சுல்லே அறுவது எளுவது வருசம்? அவளுகளிலேயே நாலஞ்சு எண்ணம் மட்டும்தான் சீவிச்சு கெடக்கு, சுருக்குப்பைகளையும் ஆட்டிக்கிட்டு. அவளுகளுக்க கெட்டினவன்மார் இப்ப இல்ல”

“எங்க போனானுக?”

“செத்து போனானுக”

“ஓ” என்றேன்.

“ஆனா செத்தாலும் பகை இருக்கும்லா? பேயாட்டு வருவானுகள்லா?”

“ஆமா”

“பேய் கட்டாரியக்கண்டா பயந்திரும்”

“பேயை கட்டாரிய வச்சு குத்தமுடியுமா?” என்றேன்

“அதெப்பிடி? அது செத்த பேயில்லா? வெறும் கியாஸூ”

“அப்ப எதுக்கு பயப்படுது?”

“பிள்ளே, கட்டாரி இருந்தா நாம பயப்பட மாட்டோம்லா?”

“ஆமா”

“பயப்படாதவன கண்டா அதுகளுக்கு பயமாக்கும்”

“ஏன்?”

“பயப்படாதவனை அதுகளாலே பயப்படுத்த முடியாது. பயப்படுத்த முடியாதவனை அதுக பயப்படும். அதாக்கும் அதுகளுக்கு சிவனாரு குடுத்த வரம்”

சிவன் ஏன் இத்தனை சிக்கலான வரங்களைக் கொடுக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

“நம்ம பளைய குட்டி ஒருத்தி சொன்னா, அவளுக்க கெட்டினவன் செத்து பத்தொம்பது வருசம் களிஞ்சு பேயாட்டு வந்து ராத்திரி எளுப்பியிருக்கான். ஏட்டி, எனக்க ஆத்மா சாந்தி அடையல்ல, நீ நேரான பொம்புளையா இல்லியா சொல்லு. எனக்க சங்கு வேவுதுன்னு கேட்டிருக்கான். ஒம்மாணை வேய், அவன் கூட இருக்கும் நேரமெல்லாம் நான் உம்மத்தான் நினைச்சேன்னு சொல்லியிருக்கா. உள்ளதாடீன்னு பய சந்தோசத்தோட கேட்டிருக்கான். ஆமா, சத்தியமான்னு இவ சொல்லியிருக்கா. அவன் ஆனந்த பாஸ்பம் விட்டு திரும்பி போனான், ஆத்மா சாந்தி அடைஞ்சு போட்டு”

“உள்ளதா?”

“பின்ன, அவ எப்பமும் அய்யோ அந்த களிச்சலிலே போறவன் பாத்துப் போடுவானேன்னு சொல்லிட்டேதானே எனக்க ஒப்பரம் கெடப்பா” என்றார் ஆசான் “ஆனா அவ சொன்னா, அவனுக்க ஒப்பரம் இருக்குறப்ப நம்மைத்தான் நினைச்சுகிடுவாளாம்…  கணக்கு செரியாப்போச்சுல்லா? ” என்றார் ஆசான்

எப்படி நினைப்பாள் என்று எனக்கு ஓரளவு புரிந்தது

“சினேகம் உள்ளவளாக்கும். பாவம், இப்ப பல்லொண்ணும் இல்ல. கடேசியாப் பாத்தப்ப பப்புளு பப்புளுன்னு என்னமோ சொன்னா…என்னட்டீன்னு கேட்டேன். எனக்கு புரியல்ல. அவளுக்க பேரனுக்க மகனுக்கு நாலு வயசு. அவன் வந்து கேட்டுப்போட்டு பாட்டி பருப்புவடை கேக்குதுன்னு சொன்னான். செரி போட்டுன்னு ரெண்டு பருப்புவடை வாங்கி குடுத்தேன்” ஆசான் சொன்னார்

“அதை எப்பிடி அவ திம்பா?”

“அந்த பய திம்பான்னு நினைக்கேன்”

நாங்கள் மரத்தடிப் பாலம் கடந்து ஒற்றையடிப்பாதை வழியாக சிவன்கோயில் முற்றத்தை அடைந்து சுற்றிக்கொண்டு எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம். கருப்பன் வாலைக்குழைத்தபடி வந்து ஆசானைச் சுற்றி நடனமாடியது. மூக்கால் தொட்டுவிட்டு பாய்ந்து விலகி வாலை விரைக்கச்செய்தபடி பக்கவாட்டில் அவர் அருகே வந்து துள்ளி விலகியது

“டான்ஸுல்லா ஆடுது” என்றேன்

“பிள்ளே ஒண்ணும் அறியணும். நல்ல கள்ளனுக்கு நாயைத் தெரியும். நல்ல நாய்க்கு நல்ல கள்ளனையும் தெரியும்” என்றார் ஆசான் “கள்ளனுக்கும் நாயிக்கும் எடையிலே ஒரு ஒத்துபோக்கு உண்டு… போலீஸுக்கும் கள்ளனுக்கும் நடுவிலே உண்டுல்லா, அது மாதிரி… இல்லேன்னா எப்டி நாடு ஓடும்? சொல்லணும். ஒரு எசைப்போக்கு வேணும்லா?”

அப்பா வந்து “ஆசானே வரணும்… ” என்றார். “இந்த ஒரு எளவெடுத்த சரக்க கொண்டுவந்துட்டு நான் படுத பாடு இருக்கே… சனியன் நாலுமாசமாட்டு என்னைய கொல்லாமே கொல்லுது”

“வேங்கிட்டு வந்ததுதானே? கெட்டிட்டு வந்தது இல்லைல்லா?”என்றார் ஆசான். “எங்க அப்பு?”

“கெடக்கான்”

“அவனை விளியும்”

நான் உள்ளே ஓடி “அப்புவண்ணா, அப்புவண்ணா, ஆசான் உன்னைய விளிக்காரு”

“ஆய்யோ எனக்கு பிளிச்சில் வேண்டாமே”

“பிளிச்சிலுக்கில்ல… சும்மா விளிக்காரு”

கண்ணீருடன் அப்பு அண்ணா தள்ளாடியபடி மெல்ல வந்தார். ஆசான் தரையில் குந்தி அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து அப்பா தங்கையா நாடார் டீக்கனார் ஆகியோர் நின்றனர்.

அப்பு அண்ணா “எனக்க ஆசானே, என்னால முடியல்லியே, நான் செத்திருவேனே…அய்யய்யோ!” என்று கதறினார்

ஆசான் முகம் மலர்ந்து “பயலுக்கு ஒரு சீக்கும் இல்ல… சிக்குன்னு இருக்கான். என்னமா எட்டுகட்டையிலே கொரலெடுத்து அளுவுதான்” என்றார். “செரி போடே. போயி ஒருவாய் சுக்குவெள்ளம் குடி. சுருதி நிக்கட்டு…”

“ஆசானே! எனக்க ஆசானே!”

“லே ,உனக்கு ஒண்ணுமில்லை, சும்மா கெட”

அப்பு அண்ணன் திகைத்து என்னை பார்த்து குழம்பி பின்பு மிகமெல்ல “எனக்க ஆசானே, என்னால முடியல்லியே, நான் செத்திருவேன்” என்றார்

“செரி, அப்பம் கொஞ்சமா சுக்குவெள்ளம் குடி போ” என்றார் ஆசான்

அப்பு அண்ணா மீண்டும் என்னைப்பார்த்தபடி “எருமை என்னைய முட்டிப்போட்டுது” என்றார்

“எங்க?”

“இங்க நெஞ்சிலே”

“உனக்க நெஞ்சு நல்ல உருக்கு நெஞ்சுல்லா?”

அப்பு அண்ணா முகம் மலர்ந்தார்  “ஆமா… பங்கசமும் அப்டித்தான் சொன்னா” என்றான்

ஆசான் கண்கள் விரிய, முகம் சுருக்கங்களால் இழுபட “ஹஹஹஹ” என்று சிரித்து “சொன்னாளா? உனக்க கிட்ட சொன்னாளா?”என்றார்

“ஆமா” என்று அப்பு அண்ணா நாணினார்

“என்னண்ணு சொன்னா?”

“நல்ல உருக்கு நெஞ்சுண்ணு சொன்னா”

“நல்ல காரியமாக்கும்டே…போ போ சோலி செய்…உளைச்சு கொண்டுபோயி அவளுக்கு குடு… உனக்க ரெத்தம் முளைக்குத வயலாக்குமே அவ” என்றார் ஆசான்.

அப்பு அண்ணா என்னை பார்த்து பெருமிதத்துடன் சிரித்துவிட்டு சென்றார்

ஆசான் அப்பாவிடம் “நல்ல பயலாக்கும். அவனுக்க குட்டி பங்கசம் குணவதியான குட்டி… நல்ல சுணையுள்ள பிள்ளைய பெத்துப்போடுவா” என்றார்

“அதுக்கு நீரு ஏம்வே சிரிக்கேரு?”

“ஓரோண்ணும் நினைச்சு சிரிச்சேன்… நம்ம கள்ளன் தங்கன் இங்கிணவரை வந்துபோட்டானே”

டீக்கனார் அப்பு அண்ணாவை பார்த்துவிட்டு “இங்கயா?” என்றார்

“பின்ன எதுக்கு அவ உருக்கு நெஞ்சுண்ணு சொல்லுதா?”

“அய்யோ, இதாக்குமா அதுக்க சூச்சுமம்?” என்றார் டீக்கனார்

அப்பா “அது கெடக்கட்டும். இப்பம் வந்த சோலியப்பாரும்” என்றார்

“செரி நீரு ஆரம்பத்திலே இருந்து காரியத்தைச் சொல்லும்”

“ஒண்ணுமில்லவே, நாலுமாசம் முன்னாலே நம்ம பார்பர் கண்ணனுக்க கடையிலே கொச்சு மூத்தானைப் பாத்தேன். இப்டி ஒரு எருமை சகாயவெலைக்கு கிட்டுது, வேணுமான்னு கேட்டான். எம்பிடுவே வெலைன்னு கேட்டேன். வந்துபாரும் எருமையை, நீரே வெலையைச் சொல்லும்னு சொன்னான். செரீண்ணு அவனையும் கூட்டிட்டு கொல்வேல் கொச்சன் பெருவட்டருக்க வீட்டுக்குப் போனேன். அங்க இந்த எருமையைப் பாத்தேன்”

“எருமைக்கு லெச்சுமீண்ணு பேரு…அப்பமே எனக்கு ஒரு டவுட்டு வந்துபோட்டு” என்றார் தங்கையா பெருவட்டர்

“நீரு வாய மூடும்வே. இப்ப சொல்லுதீர? நீரு சொல்லும்வே கரடி” என்றார் ஆசான்

“எருமை அருமையாட்டு இருந்தது. நல்ல சிந்தி எருமை. பாலீஷு போட்ட போலீசு பூட்சு மாதிரி மினுப்பம். எலும்பு தெரியாத ஊட்டம். நாலு குளம்பும் நல்ல உருக்குபோலே. குளம்புகளுக்கு நடுவிலே எடைவெளி இல்லை. பல்லைப் பிடிச்சுபாத்தேன். தேய்மானமே இல்லை. வாய மோந்துபாத்தேன் நல்ல அரைச்ச எலைமணம். புளிப்பே இல்லை.”

“பொறமே அதுக்க அறைய நான் மோந்து பாத்தேன், நல்ல மணமாக்கும்” என்றார் டீக்கனார்

“நீரு செய்வேரு… போன சென்மத்திலே நீரு எருமைக்கிடாயாக்கும்…”என்றார் ஆசான்

அப்பா “வாங்கினப்பம் அஞ்சுமாசம்… ஆனா வயறு கண்டா எட்டுண்ணு தோணும். அப்டி ஒரு செளிப்பு… வெலை எப்டியும் முந்நூறு ரூவா இருக்கும்னு நினைச்சேன். வெலையக் கேட்டா நீங்க குடுக்கத குடுங்கன்னு சொன்னாரு பெருவட்டர்”

“அப்டி சொன்னாலே சந்தேகப்படணுமே” என்றார் ஆசான்.

அப்பா தயங்கி “அவரு சொன்னாரு, கேக்கது நல்ல ஒரிஜினல் நாயருண்ணாக்க வெலை பேசுறதில்லேண்ணு…”என்றார்

“அந்தால இருநூறு ரூவாய குடுத்து ஓட்டிட்டு வந்திட்டீரு”

“ஆமா”

ஆசான் என்னிடம் “பிள்ளே நான் சொன்னேன்லா… என்னமோ ஒரு எசக்கேடு உண்டு” என்றார்

“நீரு எருமைய பாரும்வே” என்றார் பெருவட்டர்

“பாப்போம்” என்று ஆசான் எழுந்தார். “எனக்க பொன்னு சொடலமாடா காத்து நில்லுடே தாயோளி!” என்று பிரார்த்தனை புரிந்துவிட்டு “எங்கிணயாக்கும் சாதனம்?”என்றார்

“தொளுத்திலே நிக்குது” என்றார் அப்பா. “கொண்டு வாற வளியிலேயே டீக்கனாரை ஒரு முட்டு முட்டிப்போட்டு. அவரு அந்தால சாணியில விளுந்தாரு”

பெருவட்டர் “மனுசச்சாணி” என்றார்

“லே நீ சும்மாரு…” என்றார் டீக்கனார்

“பயந்திருக்கும், தொளுத்து கண்டா செரியாயிடும்னு நினைச்சேன். அதுக்கு பிறவு இங்க வந்தா என்னென்னமோ ராவடி… இதுவரை பத்தாளை முட்டியாச்சு…எதுக்கு முட்டுதாள்னு எங்களுக்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது” என்று அப்பா சொன்னார்

“பொம்புளைகளை புரிஞ்சுகிடுதது க‌ஷ்டமாக்கும்”என்றார் டீக்கனார்.

“அதுக்கு வல்ல மனவருத்தமும் உண்டுமோ…” என்றார் பெருவட்டர் “அம்மைவீட்டுக்கு போகணுமானா செல சமயம் இப்டி போட்டு சவட்டுவாளுக”

“இரும்வே, பாக்குதேன்”

ஆசான் எழுந்து தொழுவத்துக்குச் சென்றதும் கருப்பன் “வாருங்க, காட்டுதேன். நம்ம எடமாக்கும்” என்று வாலை நீட்டி ஆட்டியபடி முன்னால் சென்றது

ஆசான் எருமையை அணுகி கூர்ந்து பார்த்தார். நெல்மூட்டையை தோளில் கொண்டுபோன அப்பு அண்ணா  “வே ஆசானே, பாத்துவே. முட்டிச்சுண்ணா ரெண்டா முறிஞ்சிருவேரு” என்றபடி சென்றார்

“பய நல்ல ஊக்கமுள்ளவனாக்குமே” என்று ஆசான் சிரித்தார்

எருமை ஆசானை பார்த்து கண்ணை உருட்டி உஸ்ஸ்ஸ் என்றது. தலைதாழ்த்தி கொம்புகளை சரித்தது

“செரிடி மக்கா…செரிடி” என்று ஆசான் அதன் தலையை மெல்ல தொட்டார். கொம்புநடுவிலுள்ள குழியை மெல்ல வருடினார். அது உஸ்ஸ்ஸ் என்றது. வாலைத்தூக்கி சற்றே கழிந்து சிறுநீர் விட்டது. சாணியும் சிறுநீரும் கலந்தால் எருமைக்கே உரிய மணம் வந்துவிடும்

ஆசான் அதன் முகத்தை கூர்ந்து பார்த்தார்.“நல்ல குடும்பத்திலே பொறந்தவளாக்கும்.அடக்கமும் ஒதுக்கமும் உண்டு…எசக்கேடாட்டு ஒண்ணும் காணுகதுக்கில்லை” என்றார் . எருமையிடம் “என்னவாக்கும் உனக்க பிரச்சினை? பொம்புளைன்னா எதமாட்டு இருக்கணும் கேட்டியா? இந்த சினுமா பொம்புளைகளை மாதிரி ஆட்டிக்கிட்டு இருந்தா டீசண்டு இல்ல பாத்துக்க” என்றார்.

அவர் எருமையின் மடியையும் காலிடுக்குகளையும் தொட்டுப்பார்த்தார். அவர் அப்படி என்னதான் தொட்டு பார்க்கிறார் என்று அறிய கருப்பன் ஆவலுடன் மூக்கை நீட்ட எருமை “உஸ்ஸ்” என்றது

ஆசான் அதன் அறையை கையால் அழுத்தி “பதம்வந்து கெடக்கு… பசை வருது… இண்ணைக்கு இல்லேண்ணா நாளைக்கு குட்டி போட்டிரும்” என்றார்

“ஆமா, மணம் வருதுல்லா?”என்றார் அப்பா

“குட்டிபோடுத நேரத்திலே சாதரணமாட்டு எருமைகளுக்கு ஒரு எளக்கம் இருக்கும். ஆனால் இப்டி எடம் மறந்து முட்டமாட்டாளே”என்று ஆசான் மறுபக்கம் போனார்

அவர் எருமையை நெருங்க எருமை மறுபக்கமாக தலையை அசைத்தபின் திரும்பி அவரை முட்டவந்தது. கருப்பன் பாய்ந்து ஓடி அப்பால் நின்று குரைத்தது. ஆசான் அதை எதிர்பார்த்திருந்தமையால் விலகிக்கொண்டார்

“அப்பம் சங்கதி இதாக்கும்…”என்றார். “ஹெஹெஹெ” என்று சிரித்து “கரடியே, இதுக்கு சீக்கொண்ணும் இல்லை. வலதுபக்கம் கண்ணு தெரியாது” என்றார்

“அய்யோ”

“ஆமா, கண்ணு தெரியாததனால பதறிட்டிருக்கா… இப்பம் செனையும் எறங்கி இருக்கதனாலே பயம் கூடிப்போச்சு” அவர் அதன் கண்கள கூர்ந்து நோக்கி “ஆனா பாத்தா தெரியாது”

“எப்டி கண்ணு போச்சு?”என்றார் அப்பா

“எப்டியோ கண்ணு போச்சு. மாட்டுக்கு பல நோய் வரும்…  ஆனால் கண்ணிலே பூவும் சிவப்பும் இல்லை. புண்ணுவந்து கண்ணு போகல்லை. உள்ள இருக்கப்பட்ட வெளிச்சம் அணைஞ்சிருக்கு” என்றார் ஆசான்

“அதாக்குமா முட்ட வாறது?”

“ஆமா, அவளுக்க எடதுபக்கம் போனா ஒரு பிரச்சினையும் இல்லை. செல்லக்கொடமாக்கும். வலதுப்பக்கமாட்டு போனா அவளுக்கு ஒண்ணும் தெரியல்ல, பதறிடுதா”

“அப்ப இனி இவளை எடதுபக்கமாட்டுதான் எல்லாம் பாக்கணுமோ?”

“அம்பிடுதான்…”

“வே கரடி, பெருவட்டன்கிட்ட பாதிக்காசை திருப்பி கேளும்வே… பாதி மாடுல்லா வந்திருக்கு. வலதுபக்கம் மாடு கிட்டல்லியே”

அப்பா “சும்மா இரியும்வே…” என்றபின் “அப்ப அம்பிடுதான்” என்றார்

“உமக்கு என்ன வேணும்?” என்றார் ஆசான்

“இல்ல, நான் நல்ல ஏதோ சீக்கு இருக்கும்னு நினைச்சேன்”

“சீக்கு இல்லாததனாலே ஏமாற்றமாப்போச்சு, இல்ல?”

“அப்டி இல்ல”

“சீக்க தீத்துக்குடுத்ததுக்கு உண்டான காசை குடுத்துப்போடும். நெறைவா இருக்கும் உமக்கு” என்றார் ஆசான்

அவர்கள் முற்றத்துக்கு வந்தபோது கருப்பன் அங்கேயே மேலும் தங்கி எருமையையும் சுற்றுப்புறத்தையும் துப்புரவமாக முகர்ந்தபின் ’சரிதான்’ என முனகிவிட்டு வாலை செங்குத்தாக வைத்தபடி திரும்பி பின்னால் வந்தது.

“அப்ப நான் வாறேன் கரடியே” என்றார் ஆசான்

“வெள்ளம் குடிச்சிட்டு போங்க ஆசானே” என்று தங்கம்மை சொன்னாள்

“நல்ல தெறமா குடுட்டீ” என்றபடி ஆசான் மீண்டும் முற்றத்திலேயே குந்தி அமர்ந்தார். அவருடைய உடல் மெலிந்து வயிறு ஒட்டியிருந்தது

“ஆசானுக்கு இப்பம் வயசென்ன?”

“அறுவது”

“அறுவதா, வே எனக்கே அம்பது. எனக்க அப்பன் சின்னப்பையனா இருக்கிறப்ப நீரு போலீஸிலே சிக்கியிருக்கேரு”

“செரி, எளுவது”

“அதெப்டி வே?”

“செரி, எம்பது…. எம்பத்தஞ்சு கடைசி… இனி கூட்டமுடியாது, சொல்லிப்போட்டேன்”

தங்கம்மை ஒரு பெரிய செம்பு நிறைய கொதிக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள் ஆசான் அதை வாங்கி அண்ணாந்து கடகடவென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தார். அவர் வாய்க்குள் இருந்து நீராவி எழுந்தது

“வண்டி மிசின்லே பொக வாற மாதிரில்லா இருக்கு!”என்று டீக்கனார் வியந்தார்

ஆசான் எழுந்து “சொடலமாடா, எனக்க அப்போ… கழிச்சிலிலே போறவனே, ஒப்பம் நில்லுடே!” என்றபின் நின்று இடையில் கையை வைத்து “பிள்ளை வரணும். நாம போவம்” என்றார்

நாங்கள் சென்றபோது அப்பா என்னிடம் ஒரு ஐந்துரூபாயை தந்தார். நான் அதை போகும் வழியில் ஆசானிடம் கொடுத்தேன். அவர் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டு மடியில் கட்டிக்கொண்டார்

“பிள்ளே நாம போறப்பம் அம்புரோஸ் வீடுவளியாட்டு போவம்”

“அது சுத்துல்லா?”

“சுத்துகதுக்காக்குமே போறது”

நான் “செரி” என்றேன்

“பிள்ளை, நாளைக்குள்ள எருமை குட்டி போட்டிரும். குட்டியை எப்பமும் எருமைக்க வலதுபக்கம் நிறுத்தணும் கேட்டுதா”

“ஏன்? அதுக்கு வலது கண்ணு தெரியாதே?”

“ஆமா”

“அப்ப அதுக்கு குட்டிய பாக்கமுடியாதுல்லா?”

“பாக்காம இருக்குமா? குட்டியப்பாக்க அம்மைக்கு கண்ணு எதுக்கு? ஆனா வலதுபக்கம் நிக்கட்டும்…மோந்து பாக்கட்டும்”

“செரி” என்றேன்

“அம்புரோஸுக்க அம்மை நல்ல அளகுள்ள குட்டியாக்கும்”

“அம்புரோஸுக்க அம்மையா?” என்றேன் அம்புரோஸுக்கே அறுபது வயதுக்குமேல் இருக்கும்

“ஆமா, லிஸீன்னு பேரு. சின்னச் செல்லக்குட்டி… அருமையாட்டு இருப்பா. இந்த சிந்தி எருமைய கண்டப்பமே அவளை நினைச்சேன்”

அம்புரோஸ் வீட்டில் இருந்தார். ஆசான் கீழே ஊடுவழியில் நின்றபடி “அம்புரோசே, ஏலே, எரிப்பன் இருக்காலே?” என்றார்

“வாரும்… சக்கறம் இருக்குல்லா?”

“அஞ்சுரூவா இருக்குடே… ஒரு குப்பி ரெண்டு ரூவால்லா?”

“வாரும் வந்து இரியும்” என்று அம்புரோஸ் மலர்ந்தார்

ஆசான் என்னை பிடித்துக்கொண்டு மரப்படிகளில் ஏறி அம்புரோஸ் வீட்டை அடைந்தார். அது தாழ்ந்த கூரை கொண்ட வீடு. விசாலமான மண்திண்ணை. ஆசான் அதில் அமர்ந்ததும் அம்புரோஸ் “பைசாவை கொண்டாரும்” என்றார்

“அஞ்சுரூவாய்க்கு ரெண்டு குப்பிடே”

“ஆமா… ஒண்ண குடியும்.. ஒண்ணை கொண்டுபோவும்”

“நீ கொண்டுவாடே”

அம்புரோஸ் நீலநிறமான நீண்ட குப்பி ஒன்றை எடுத்துவந்தான். ஆசான் அதை வாங்கி முகர்ந்து பார்த்தபின் கார்க்கை திறந்தபடி  “தொட்டுநக்க என்னமாம் கொண்டுவாடே” என்றார்.

அம்புரோஸ் “பளைய கருவாட்டுக்கறி இருக்கு” என்றார்

“கொண்டுவா ,கொண்டுவாடே மக்கா” என்றார் ஆசான். உள்ளே எட்டிப்பார்த்து “லே உனக்க அம்மை எங்கலே? ஏட்டி லிஸீ… லிஸீ” என்று அழைத்தார்

“அம்மை விளைக்கு போனா” என்றபோது அம்புரோஸிடம் எரிச்சல் தெரிந்தது

“லிஸி அருமையானா குட்டியாக்கும்” என்றார் ஆசான்“ரெண்டுகிளாஸு எடு”

“ரெண்டு எதுக்கு?”

“ஆத்தி குடிக்கதுக்கு… கொண்டுவாடே”

பின்பக்கம் தோட்டத்திலிருந்து ஒரு தேங்காயுடன் கூன்விழுந்த கிழவி ஆடி ஆடி வந்தாள்.  வடித்து நீட்டிய காதுகள் வளையங்களாக ஆட அவற்றின் நிழல் தோள்மேல் அசைந்தது. கண்மேல் கைவைத்து  “ஆரு?” என்றாள்

“ஏட்டி லிஸி…நானாக்கும்டீ… கள்ளன் அச்சு… ஹெஹெஹெ !கள்ளன் அச்சு! ஹெஹேஹெ!”

அவள் முகத்தில் சுருக்கங்கள் விரிய சிரித்து “அப்பமே ஒரு கொறளி கேட்டுது… எப்டி இருக்கேரு?”

“இந்நா இருக்கேன்லா மலைமாடசாமி மாதிரி… வா. வந்து கேறி இரி… ஒரு வாயி குடி”

“அய்யே அது எதுக்கு இப்பம்?”

“ஏட்டி வாடின்னா…”

கிழவி “எனக்க ஏசுவே…” என்று முட்டில் கையை ஊன்றி மெல்ல ஏறி திண்ணையில் ஆசானுக்கு முன்னால் அமர்ந்தாள்.

“எடுடீ…நல்லா வலிச்சுகேற்று…. நீ ஜெகஜில்லியாக்குமே”

அம்புரோஸ் சீற்றத்துடன் “அம்மை என்ன செய்யுதே? உள்ள போ” என்றார்

“நீ போலே… இனி இப்ப எங்க குடிக்கப்போறேன்… நீ அந்த கருவாட்ட சுட்டு கொண்டுவா”

“பிள்ளைக உள்ள வீடாக்கும்” என்றார் அம்புரோஸ் “வேண்டாம் கேட்டியா?”

“எல்லாம் எனக்க ரெத்தம்தானே? நீ போலே” என்றாள் கிழவி

ஆசான் “மக்களே அம்புரோஸ், பரமண்டலத்திலே இருக்கப்பட்டவங்களுக்கு மட்டும் தெரிஞ்ச காரியமாக்கும். நீ சிலசமயம் எனக்க மகனாட்டு வருவே…” என்றார்

“நீ உள்ள போறியா இல்லியா?” என்று அம்புரோஸ் கூவினார்.

“செரி ,கிளவி இண்ணைக்கு ராத்திரி செத்துபோச்சுண்ணு வையி… ஆசை அடங்காம பேயாட்டுல்லாடே போவா?”என்றார் ஆசான்

“ஆமா…” என்றாள் கிழவி

அம்புரோஸ் பல்லைக் கடித்து “நான் சாவுதேன், சாவுதேன் போருமா?” என்று உள்ளே சென்றார்

ஆசான் “நல்ல பயலாக்கும்” என்றபின் “எடுத்து மோந்துடீ” என்றார்

கிழவி “லே அம்புரோஸு… மக்களே ,கருவாட்ட சுட்டுக் கொண்டுவாடே” என்றபின் கண்ணாடி டம்ளரை எடுத்தாள்

நான் “ஆசானே நான் என்ன செய்ய?”என்றேன்

“நீரு போவும்வே பிள்ளே.. எருமைய பாத்துக்கிடும்” என்றார் ஆசான். அவர் கிழவியின் தொடையில் கைவைக்க அவள் அந்தக் கையை தட்டிவிட்டாள்

நான் இடைவழியில் இறங்கியபோது இருவரும் சிரிக்கும் ஓசை கேட்டது.

எனக்கு வழியெங்கும் அர்த்தமில்லாத ஒரு குழப்பம் இருந்தது. எருமையின் வலதுபக்கம் எதற்காக கன்றை நிறுத்தவேண்டும்? ஆனால் ஆசான் சொன்னால் சொன்னதுதான், மாடுகளை பொறுத்தவரை அவர் சொல்வதே ஊரில் கடைசி வார்த்தை

நான் வந்தபோது அப்பாவும் டீக்கனாரும் தங்கையா பெருவட்டரும் யானைகளின் ஜாதகங்களை பரப்பி வைத்து தீவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். கருப்பன் வைக்கோல்போர் பக்கமாக எதையோ பிடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி அமர்ந்திருந்தது. தங்கம்மை வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். அம்மா சின்னக்குட்டியை துணியில்லாமல் நிறுத்திவைத்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள். அவள் என்னை கண்டதும் திரும்பிக்கொண்டு  “போ! போ!”என்று கூச்சலிட்டாள்

நான் தொழுவத்திற்கு வந்து எருமையை பார்த்தேன். அது என்னைப்பார்த்து  “ம்றம்!” என்றது. அதன் வயிற்றில் கன்று புடைத்திருந்தது. சென்ற பலநாட்களாகவே  ராத்திரி படுக்கையில் போர்வைக்குள் கிடந்து சின்னக்குட்டி விளையாடுவதைப்போல அதன் வயிற்றுக்கு உள்ளே புடைப்புகளும் அசைவுகளும் தெரிந்தன.  நான் எருமையின் இடப்பக்கம் சென்றேன். அது  “றம்ம்ம்ம்” என்று சொல்லி தலையை ஆட்டியது. கொம்பு அழிகளில் முட்டியது. அதன் தாடையையையும் கொம்புகளின் நடுவே உள்ள முழையையும் தடவிக்கொடுத்தேன்

ஓர் எண்ணம் எழுந்தது. மறுபக்கம் சென்றேன். அதன் உடல் பதறியது. ஆங்காங்கே சதை விதிர்த்தது. தலைசரித்து முட்டவந்தது. ஆசான் சொன்னது சரிதான். மீண்டும் இடப்பக்கமே வந்தேன். அதன் வயிற்றில் ஒரு புடைப்பை கண்டேன். சட்டென்று அது எனக்கு புரிந்தது, குளம்பு. உள்ளிருந்து ஒரு சின்ன குளம்பு அதன் வயிற்றை மிதித்து அழுத்த அதன் தடம் அப்படியே தெரிந்தது

நான் முன்பக்கம் ஓடி “அப்பா குளம்பு தெரியுது” என்றேன்

அப்பா எழுந்துகொண்டு “தெரியுதா? எங்க?”என்றார்

“வயித்துமேலே… புடைப்பா”

“லே, இவன் ஒருத்தன்… ” என்றபடி அப்பா மீண்டும் அமர்ந்துகொண்டு “தைக்காடு சிவசங்கரனுக்க ஜாதகமாக்கும் இது. பண்டு மகாராஜா கையிலே பட்டு வாங்கினவன் இவனுக்க அப்பன் கொச்சு மாணிக்கம்”என்றார் “தலையெடுப்புள்ள ஆனையின்னா அவனாக்கும்!”

நான் மீண்டும் தொழுவுக்கு வந்தேன். எருமை தலையை நன்றாகத் தாழ்த்தியிருந்தது. அதன் கண்கள் மையெழுதியவை போல ஈரமாக இருந்தன. அதன் தலையை நான் வருடினேன். அதன் உடல் மயிரில்லாமல், தேய்த்த கருங்கல்போல பளபளவென்றிருக்கும். ஆனால் அது புல்லரித்திருப்பதுபோலத் தோன்றியது

அதன் தொடைத்தசையும் விலாத்தசையும் விதிர்ப்பதைக் கண்டேன். “உஸ்ஸ்ஸ்ஸ்!” என்று மூச்செறிந்தது. அதன் கழுத்தை தடவிக்கொண்டிருந்தேன். ஏதோ மணம் எழுந்தது. வெம்மையான மணம். உப்புமணம். அது மேலும் தலையை தாழ்த்தி கொம்புகளால் அழியை முட்டியது. பெரிய முன்னங்கால் குளம்புகளால் கல்பாவிய தரையை தட்டியது

நான் எழுந்து பார்த்தபோது அந்த குளம்பு மறைந்திருந்தது. ஆனால் ஒரு புடைப்பு அங்குமிங்குமாக அலைபாய்ந்தது. கருப்பன் எழுந்து வந்து என்னருகே நின்று “பவ்?”என்றது.

“ஒண்ணுமில்ல, போ” என்றேன்

கருப்பன் நிலைகொள்ளாமல் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு முனகியது.

எருமை குளம்புகளால் தரையை தட்டிக்கொண்டே இருந்தது. சட்டென்று அதன் பின்பக்கம் வழியாக ஒரு சருவம் நீரை சரித்ததுபோல ஒலிகேட்டது. கொழகொழவென்ற நிறமற்ற திரவம் தரையில் கொட்டியது. நான் எழுந்து  “அப்பா” என்றேன்

எருமை வாலைச்சுழற்றி அறைந்துகொண்டே இருந்தது. குளம்புகளை மாற்றி மாற்றி உதைத்தது. நான் முன்பக்கம் சென்று “அப்பா! எருமைக்குட்டி வரப்போவுது” என்றேன்.

“போடா” என்றார் அப்பா

நான் திரும்பி வந்தபோது எருமைக்கன்று ஒரு பெரிய பலூனுக்குள் இருப்பதுபோல எருமையின் பின்பக்கம் வழியாக பிதுங்கி வெளியே வருவதைக் கண்டேன். மீண்டும் ஓடிப்போய் “அப்பா, எருமைக்கண்ணுக்க தலை தெரியுது”

“டே, தொளுத்திலே என்ன செய்யுதே? வீட்டுக்குள்ள போ”என்றார் அப்பா கோபத்துடன்

கருப்பன் பாய்ந்துவந்து “ஞய் ஞய்!” என்று குரைத்து தரையை பிராண்டியது.

“நாயி வந்து விளிக்குதே… குட்டி வருதோ?” என்றபடி டீக்கனார் எழுந்து ஓடிவந்தார்.

“ஆமா, அது விவரமில்லாம வந்து சொல்லாதே’ என்றார் அப்பா

டீக்கனார் முன்னால் வர அப்பாவும் தங்கையா நாடாரும் உடன் வந்தனர்.

குட்டியின் தலை பெரும்பாலும் வெளியே வந்துவிட்டிருந்தது. நாய் துள்ளித்துள்ளி குரைத்தது. தங்கையா நாடார் ஓடிப்போய் வைக்கோலையும் சாக்கையும் கொண்டுவந்து எருமையின் பின்பக்கம் போட்டார். டீக்கனார் வீட்டுக்குள் சென்று “விசாலமே, வெந்நீ போடு.. எருமை ஈணுது” என்றார்

அப்பா கையை உதறியபடி, “நான் என்ன செய்வேன்… எனக்க பகவதியே. நான் என்ன செய்வேன்… எனக்கு வல்லாதே வருதே” என்றார்

“வே, அவரை பிடிச்சு ஒக்கார வையும்வே”

டீக்கனார் அப்பாவை பிடித்து படியில் அமரச்செய்தார். “நீரு சும்மா இரியும்வே… ஒண்ணுமில்லை… இப்பம் சரியாயிரும்”

“அய்யோ குட்டி.. குட்டி வருதே” என்று அப்பா பதறினார்.

“சும்மா இரும் வே… எருமையில்லா ஈனுது, பாத்தா இவரு குட்டிபோட்டிருவாருண்ணுல்லா தோணுது”

எருமையின் பின்பக்கம் குட்டியின் இரண்டு கால்களும் நீட்டி வந்தன. குளம்புகள் கருப்பாக இல்லை, மண்நிறத்தில் இருந்தன. டீக்கனார் அதன் காலைப்பிடித்தார்

“மெல்ல இளும்வே.. இளுத்து எடுத்திரப்பிடாது. அதுவாட்டு உந்தணும், கூட நம்ம இளுப்பு கொஞ்சம் இருக்கணும், அம்பிடுதான்”

எருமை வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது. ரத்தம்போல ஏதோ கொட்டிவழிந்தது

அப்பா  “அய்யோ !அய்யோ!” என்று அனத்தியபடி இருந்து பிறகு அப்படியே பக்கவாட்டில் படுத்துவிட்டார்

“பிள்ளே அம்மைகிட்ட சொல்லி அப்பாவுக்கு இம்புடு சூடுவெள்ளம் கொண்டுவந்து குடுக்கணும்”

நான் உள்ளே போய் “சூடுவெள்ளம்… சூடுவெள்ளம்”என்றேன்

“ஈனியாச்சா? அதுக்குள்ளயா?”

“அப்பாவுக்கு சூடுவெள்ளம்”

“இவராக்குமா குட்டி போட்டது?”என்றபடி அம்மா கஞ்சித்தண்ணியில் உப்பு போட்டு ஆற்றி என்னிடம் தந்து  “கொண்டுபோயி குடு… ” என்றார்

நான் கொண்டுவந்து தந்த தண்ணீரைக் குடிப்பதற்காக அப்பா எழுந்து அமர்ந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. உதட்டை பிதுக்கி விசும்பியபடி அதை ஊதி ஊதி குடித்தார்.

“வலியும்வே… வருது” என்றார் பெருவட்டர்

டீக்கனார் இழுத்தார். சட்டென்று குடம் உடைந்து விழுவதுபோல நீர் கொட்டியது. மூட்டைபோல கன்றுக்குட்டி கீழே விழுந்தது.

“ஆணாக்கும்” என்றார் பெருவட்டர்

“எப்டி கண்டீரு? பொதிக்குள்ள இல்லா இருக்கு?”

“அது தெரியும்வே”

எருமை மெல்ல துள்ளியபடி வாலை சுழற்றி திரும்ப முயன்றது. “இருடி, இருடி, எனக்க செல்லக்குட்டி” என்றார் பெருவட்டர் “இரு… பிள்ள உனக்குத்தான்… உனக்கு மட்டும்தான்…”

குட்டியை மெல்ல எடுத்து நிறுத்தினார் பெருவட்டர். அதன் மூக்கை அழுத்திப் பிழிந்து சளிபோல எடுத்தார். அது இருமல் போல ஓசை எழுப்பியது. குளிரில் நடுங்கியபடி கால்களை கோணலாக பரப்பி வைத்து நின்றது. வாயை மெல்வதுபோல அசைத்து, திரும்பி பெருவட்டரை  ‘ஆருவே நீரு?’ என்ற பாவனையில் பார்த்தது

கருப்பன் உள்ளே புகுந்து கன்றுக்குட்டியின் கால்களை முகர்ந்தபின் ஊளையிட்டு பின்னடைந்து வாலைச்சுழற்றி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நடனமிட்டு மீண்டும் முகர்ந்தது.

அப்பா மெல்ல எழுந்து வந்து  “என்னவே, ஏம்வே நடுங்குது?”என்றார்

“குளிருதுல்லா?”

“போத்திவிடவா வே?” என்றார் அப்பா “சாக்கு எடுத்திட்டு வாறேன்”

“போவும்வே… வே டீக்கனாரு, இந்த வாதையை ஏம்வே என்னையப் பாத்து ஏவி விடுதீரு… பிடிச்சு அந்தாலே கெட்டும்வே” என்று பெருவட்டர் கூவினார்.

டீக்கனார் “பிள்ளை இந்தால வாரும்… அவரு பாத்துக்கிடட்டு”

“எருமைக்குட்டி வே! எருமைக்குட்டி என்னமா இருக்கு வே!” என்று அப்பா கைவிரித்தார். முகம் பரவசத்தால் விரிந்திருக்க “தெய்வம் வந்து பொறந்தது மாதிரி இருக்கு வே! எருமைக்குட்டி வே!” என்றார் மீண்டும் உதட்டை நீட்டி அழத்தொடங்கினார்  “அருமைக்குட்டி வே! செல்லம் வே!”

நான் டீக்கனாரிடம் “எருமைக்கு குட்டிபிறந்தா அதை வலதுபக்கம் போடணும்னு ஆசான் சொன்னாரு” என்றேன்

“ஆசானா? அதுக்கு வலதுபக்கம் கண்ணுதெரியாதுல்லா?”

“ஆமா, அதாக்கும் சொன்னாரு”

“அவரு சொன்னா காரியமுண்டு…” என்றார் டீக்கனார்

அப்பா கால்தளர்ந்து தரையில் குந்தி அமர்ந்து “அருமையான குட்டி வே…செல்லமாட்டு இருக்குவே… நான் ஒண்ணு தொட்டுக்கிடுதேன் வே” என்று சொன்னார். அவர் முகத்தில் கண்ணீர் வழிந்தது. ஆனால் சிரிப்பவர் போலிருந்தார்

“இரும்வே… அது முலைகுடிக்கட்டு” என்றார் பெருவட்டர். எருமைக்குட்டியை தள்ளி எருமையின் வலதுபக்கம் கொண்டு சென்று நிறுத்தினார். அது முட்டாள்தனமாக தொழுவின் பலகை தூண் எருமையின் கால் என எல்ல இடத்திலும் வாயை வைத்து எருமையின் முலையை கண்டுகொண்டது. அதன் காம்பை கவ்வி வாயில் எடுத்ததும் சவைத்தது. பின்னர் முட்டியது.

எருமை “ம்ம்ற்றம்ம்ம்!” என்று உறுமியது. மறுபக்கமாக திரும்பி அலைபாய்ந்தது. குட்டியின் வாயிலிருந்து எருமையின் காம்பு நழுவ அது தள்ளாடி நடந்து முன்னால் சென்று மீண்டும் கவ்வியது. எருமை உறுமி மூச்சு சீறி பின்னர் கன்றின் பின்பக்கத்தை மூக்கால் கண்டுகொண்டது. உடனே அதன் உடல் முழுக்க பரவிருந்த பதற்றம் அடங்க அது அமைதியாயிற்று. அதன் உடல் ஆங்காங்கே சிலிர்க்க ஆரம்பித்தது. வாழைப்பூமடல் போல நாக்கு வெளியே வந்து கன்றின் பின்பக்கத்தை நக்கத்தொடங்கியது

சற்றுநேரத்தில் கன்று முலையை முட்டிமுட்டிச் சப்பிக் குடிக்க அதன் வாயோரம் நுரை எழுந்தது. அதன் வால் சுழன்றுகொண்டிருந்தது. எருமை தன் கன்றை உடல்முழுக்க நக்கியது. எருமைக்கன்றின் உடலெங்கும் மென்மையான  மண்நிறமான முடி இருந்தது. அதன் மேல் எருமையின் நாக்கு பட்ட தடம் தெரிந்தது.

“புல்லுமேலே மளைத்தண்ணி போன தடம் மாதிரி இருக்கு” என்றார் பெருவட்டர்

எருமையும் கன்றும் ஒன்றையொன்று சுவைத்தபடி ஒற்றை உடல்போல ஆகி நின்றன. கன்று பால்குடிக்கும் ஓசையும் எருமை நக்கும் ஓசையும் மிகமிக மெல்ல கேட்டன. ஒரு ரகசியம்போல. டீக்கனாரும் பெருவட்டரும் அதை மலர்ந்த முகத்துடன் பார்த்து நின்றனர்

மிகமெல்ல “வே நான் தொட்டு பாக்கட்டா?”என்றார் அப்பா . “எனக்க செல்லத்தை ஒருதடவை தொட்டு பாத்துக்கிடுதேன் வே”

“சும்மா இரியும்வே… குட்டி வலதுபக்கமாட்டு நிக்குதது… அங்க எருமைக்கு கண்ணு தெரியாது. குட்டிய மட்டும் மணம் வச்சு தெரிஞ்சு நக்கிட்டிருக்கு… பக்கத்தில போனா முட்டிப்போடும்”

அப்பா  “பக்கத்திலே போகாம தொடுதேன் வே” என்றார்

“சொன்னாக் கேளும்”

“வே எனக்க செல்லம் வே… எனக்க குட்டி வே”

”செரி போயி தள்ளி நின்னு தொடும்” என்றார் பெருவட்டர்

அப்பா மெல்ல அருகே சென்றார். எருமை நக்குவதை நிறுத்தி தலைதூக்கியது. பின்னர் உஸ்ஸ் என்றது. அப்பா கைநீட்ட் கன்றுக்குட்டியை தொட்டார். எருமை நாக்கை நீட்டி அப்பாவின் கையை நக்கியது. அப்பா அருகே சென்றார். அது அவர் கைமேல் தன்னுடைய பெரிய தலையை ஓய்வாக வைத்தது. அந்த எடையில் அப்பா தள்ளாடினார்

“என்ன குட்டீ… என்ன குட்டீ?”என்று அப்பா எருமையின் தலையை வருடினார். அதன் சிறகு போன்ற காதுகள் அசைந்தன

“சாந்தமாகிப்போட்டே” என்றார் பெருவட்டர் “வலப்பக்கம் கண்ணு தெரியுதோ இப்ப?”

“அதாக்கும் ஆசான் சொன்னது…. வலதுபக்கமாக்கும் குட்டி வந்திருக்கு…. வே பெருவட்டரே, இனி அதுக்கு வலதுபக்கம் முளுக்க மதுரம்லா!” என்றார் டீக்கனார்

அம்மா “வெந்நீ வச்சிருக்கு” என்றாள்

டீக்கனார் “நான் எடுத்துட்டு வாறேன்… ”என்றார்.

டீக்கனார் கொண்டுவந்த கொதிக்கும் வெந்நீரில் சாக்கைப்போட்டு முக்கி எடுத்து ஆவி பறக்க எருமையின் முதுகின்மேல் போட்டார் பெருவட்டர். எருமை சற்றே துள்ளி பின் முதுகு தழைய ஓய்வாக நின்றது

“பொறுக்கச் சூடு… எதமாட்டு இருக்கும்டீ” என்றார் பெருவட்டர்

எருமை அப்பாவின் கைகளில் தலையை வைத்து காதுகளை சரித்தது. அதன் பெரிய இமைகள் மெல்ல சரிந்து மூடின.

============================================================================

முந்தைய கட்டுரைபாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாளிரவு