வாசலில் தயங்கியபடி நின்றிருந்த ஒடுங்கிய, குள்ளமான, கரிய மனிதனை இசக்கியம்மைதான் முதலில் பார்த்தாள். யாரோ யாசகம் கேட்க வந்தவன் என்று நினைத்தாள். கூன்விழுந்த முதுகை நிமிர்ந்தி கண்கள்மேல் கையை வைத்து கூர்ந்து நோக்கி. “ஆரு? என்னவேணும்?” என்றாள்
அவன் “நான் ஆசாரியாக்கும்” என்றான். “மாணிக்கம் ஆசாரீண்ணு சொல்லுங்க”
ஆசாரியை எதற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று இசக்கியம்மைக்குப் புரியவில்லை. அதுவும் ஒரே ஒரு ஆசாரி. அவனால் ஒரு பலகையை தூக்கமுடியும் என்றுகூட தோன்றவில்லை. “எந்த வீடுண்ணு சொன்னாவ?” என்றாள்
“செல்லங்குளங்கரை வீடுதான்லா இது? வக்கீலு சாருக்க வீடு?”
“ஆமா, இதான்… ” அவனை படியேற்றி அமரச்செய்யலாமா வேண்டாமா என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. மூத்தாசாரிக்கான களை ஏதும் தெரியவில்லை. குடுமி வேண்டாம், கொஞ்சம் வளப்பமாகக்கூட இல்லை. கையில் பணிப்பெட்டி இல்லை. பதிலுக்கு ஒரு பழைய சாக்குப்பை வைத்திருந்தான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றாள். உள்ளே கூடத்தில் சேகரன் ஜன்னலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு சவரம் செய்துகொண்டிருந்தான். அருகே ரேடியோ மலையாளத்தில் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே சமையலறையில் தேவகியும் மீனாட்சியம்மையும் பேசிக் கொண்டிருந்த குரல் கேட்டது.
இசக்கியம்மை “டேய் சேகரா, நீ ஆசாரியை வரச்சொன்னியாடே?” என்றாள்.
“இல்லியே, ஆசாரியா? அம்மைகிட்ட கேளு” என்று அவன் வாயை கோணலாக்கி முகத்தை திருப்பி கண்ணாடியில் காட்டியபடி சொன்னான்.
“மாணிக்கம்னு சொல்லுதான்… உனக்க பேரையாக்கும் சொன்னான்”.
“என் பேரையா?” என்றபடி சேகரன் பாதி நுரை உள்ள முகத்துடன் வெளியே சென்று “ஆருவே?”என்றான்.
“ஆசாரியாக்கும். மாணிக்கம் ஆசாரி. ராஜப்பன் மூத்தாசாரி சொன்னாரு”.
“படம் வரையுதவரா?”
“ஆமா சித்திரக்காரனாக்கும்”
“நீரா? நீரா படம் வரயப்போறீரு?”
“ஆமா” என்றான் “நமக்கு தெரிஞ்ச கலையாக்கும்”
சேகரன் உள்ளே வந்து “தெக்கேதிலே பகவதியை புதுசா வரையணும்னு அம்மை சொன்னாளே. ஆளு வந்திருக்குன்னு போயி சொல்லு”
“படம் வரையவா?”என்று இசக்கியம்மை கேட்டாள்.
“போயி சொல்லுடி பரட்ட கெளவி” என்று சேகரன் சொன்னான். அருகே வந்து இசக்கியம்மையின் கொண்டையைப் பிடித்து உலுக்கி “சேவக்கோளிக்க தூவல பிடுங்கி எடுத்திருவேன்” என்றான்.
“பரட்ட கெளவி உனக்க அப்பன்…” என்றாள் இசக்கியம்மை “உனக்க அப்பன் எனக்க தூவலை தொட்டதில்லை பாத்துக்க”
அவள் உள்ளே சென்று “எடீ மீனாட்சியே, ஆசாரி வந்திருக்கான்… படம் வரையுத ஆசாரி” என்றாள். குரலை தாழ்த்தி “பாத்தா ஆசாரீன்னு சொல்லமுடியாது… ஆசாரிமாருக்கு ஒரு இது உண்டுல்லா?” என்றாள் “இவனைக் கண்டா கோளி களவாண்டுட்டு போறவன் மாதிரி இருக்கான்”.
“அவன் படம் வரைஞ்சா போரும்லா?” என்றபடி மீனாட்சி வெளியே சென்றாள்.
தேவகி இசக்கியம்மையிடம் புன்னகைத்து “அம்மச்சிக்குச் சாய வேணுமா?” என்றாள்.
“அவன் என்னடி வரையப்போறான்?”
“தெக்கதிலே பகவதியை வரையப்போறான்”
“தெக்கதிலே பகவதி உண்டுல்ல? அவளை எதுக்கு வரையணும்?”
“பாக்க தெளியணும்ல?
‘நல்லாருக்கே, இருக்கப்பட்டவாளை மறுக்கா வரையணுமா? அப்ப இனி உனக்கமேலேயும் உன்னைய வரைஞ்சு எடுக்கணுமாடீ?”
“அது வரைஞ்சு பத்து எளுவது வருசமாச்சே. படம் சாயம்போயி மங்கியாச்சு. கண்ணு ரெண்டும் தெளிஞ்சிருக்கும் வரை போவட்டும்னு விட்டாச்சு. இப்பம் கண்ணு தெளியாம பூசைக்கு வரமாட்டேன்னு போத்தி சொல்லுதாரு”.
“இவனா பகவதிய வரையுதான்?”
“ஆமா”
“இவன் பகவதியை கண்டிட்டுண்டா?”
தேவகி புன்னகைத்து சம்புடத்துடன் கொல்லைப்பக்கம் சென்றாள். இசக்கியம்மை கூன்விழுந்த உடம்பை ஆட்டி ஆட்டி நடந்து முற்றத்திற்கு வந்தாள். முலைகள் ஆடாமலிருக்க மேலாடையை இறுகச் சுற்றி செருகிக் கொண்டாள்.
ஆசாரி திண்ணையில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் முன் சேகரன் நின்று பேசிக்கொண்டிருந்தான்.
“எத்தனை நாள் எடுக்கும்?”
“அது படத்தை பொறுத்தது”
“படம் கொஞ்சம் பெரிசாக்கும்”
“பெரிசோ சின்னதோ இல்ல பிரச்சினை… தேவி எளுந்து வரணும்லா? கையிலே அருளு வந்தா ஒரே நாளிலே வரைஞ்சு போடலாம்… இல்லேன்னா ஒரு மாசம் ஆனாலும் ஆவும்… சில சமயம் படம் வரையாம முக்காவாசி அப்டியே கெடந்தது உண்டு. தொடங்காம போன படங்களும் உண்டு. அது நம்ம கையிலே இல்லை”
“ஆனா பணம் வரைஞ்சு முடிச்சாத்தான் குடுக்க முடியும்” என்றான் சேகரன்.
“நீரு குடுக்க வேண்டாம்வே… நீரு குடுத்தா எனக்கு நிறையணும்” என்று எரிச்சலுடன் சொன்னான் மாணிக்கம்.
அவனிடமிருந்த அந்த திமிர் இசக்கியம்மைக்கு ஆச்சரியமாக இருந்தது.
சேகரன் சற்றே குன்றி “அப்டி இல்லை, சொல்லுறப்ப எல்லாம் சொல்லணும்லா?” என்றான்.
”நான் இதெல்லாம் பேசிக்கிடுதது இல்லை. பின்ன ராஜப்பனாசாரி சொன்னதனாலே வந்தேன்” என்றான் மாணிக்கம்.
“செரி… எல்லாம் தெளிவா பேசிக்கிடுங்க… பாத்து வரையுங்க”
தேவகி வந்து “டீ குடிக்குதியளா?” என்றாள்.
“ஆமா, பாலு விடாண்டாம். சீனியும் வேண்டாம்” என்றான் மாணிக்கம்.
“அதுக்குபேரு டீயா?”என்று தேவகி சிரித்துவிட்டாள்.
சட்டென்று அவனும் சிரித்தான். சிரித்தபோது அழகான சிறுவன்போல ஆனான். “ஆமா அம்மிணி, அதாக்கும் டீ. சீனிபோட்டா சீட்டி. பாலுவிட்டா பாட்டீ”
தேவகி சிரித்து “ஆசாரி ஆளு நல்ல நாக்காக்கும்… இப்ப வாறேன்” என்று உள்ளே சென்றாள்.
மீனாட்சி “ஆசாரி இங்க வடக்கேபுறத்து அறையிலே தங்கிக்கிடுங்க… கக்கூஸும் மற்றும் பின்னாலே விளையிலே இருக்கு. குளிக்க அந்தப்பக்கம் ஆறு உண்டு… எப்பமும் தண்ணி போகக்கூடிய ஆறாக்கும்” என்றாள்.
“வள்ளியாத்தைப் பற்றி சொல்லணுமா?” என்றான் மாணிக்கம்.
இசக்கியம்மை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் திருப்பி புன்னகைக்காமல் கூர்ந்து பார்த்தாள்.
“இது எனக்க சித்தியாக்கும்… இங்கதான் இருக்கா” என்றாள் மீனாட்சி
“சித்தியா?”
“ஆமா, எனக்க அம்மைக்கு அம்மைக்கு சொந்தத்திலே மகளாட்டு வரும்… எனக்க அம்மைக்க தங்கச்சி… தொட்டுத் தொட்டு சொந்தம். அம்பது வருசமா நம்மகூடத்தான் நிக்குதா” என்றாள் மீனாட்சி
“இவளுக்க அம்மைக்க கல்யாணத்துக்கு நான் முதல்ல இங்க வந்தேன்” என்று இசக்கியம்மை சொன்னாள். “நீ படம் வரையுதவனாலே?”
“ஆமா”
“நீ பகவதியை கண்டிட்டுண்டா?”
“இல்ல”
“பின்ன எப்டிலே வரைவே?”
“பகவதி நம்மள கண்டிட்டுண்டுல்லா?”
மீனாட்சி சிரிக்க இசக்கியம்மை அவளை சீற்றத்துடன் பார்த்தாள். பிறகு “கேக்கதுக்கு பதில் இல்லை” என்று முணுமுணுத்தாள்
டீ குடித்தபிறகு ஆசாரி தன் பையுடன் எழுந்து அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறிய அறைக்குச் சென்றான்.
சேகரன் “ஆளு கொஞ்சம் பேச்சு கூடுதலுண்ணாக்கும் தோணுது. பத்து நாளு வேலைய அம்பது நாளாக்கி இருந்து தின்னுட்டு பைசாவும் கூட்டிக்கேக்கப்பிடாது” என்றான்.
தேவகி “அப்டி கேக்குத ஆள் இல்லை.” என்றாள்.
“நீ அவனை கொறே கண்டியோ?”
“ஒரு நோக்கு கண்டா போரும். ஆளு ஆருண்ணு புரியும்…”
“ஆமா நீ கண்டே” என்று அவன் உள்ளே சென்றான்.
இசக்கியம்மை அமைதியில்லாமல் தேவகியின் பின்னால் சென்றாள் “ஏட்டி தேவகியே, அவன் எப்டிடீ பகவதியை வரைவான்?
“சாயம் வைச்சு வரைவான்”.
“அவனுக்கு பகவதியை கண்டுபரிச்சயம் உண்டாடீ?”
“நாம எப்டி கோலம் போடுதோம்? அதேமாதிரி வரைவான்”
“ஆனா அது பகவதியில்லா?”
“பகவதி அவனுக்க கையிலே எந்திரிச்சு வருவா” என்றாள் மீனாட்சி
“அவன் கையிலயோ?”
“இங்கபாரு கிளவி சும்மா கெடப்பியா? உயிர வாங்காம? நூறுகூட்டம் சோலிகெடக்கு” என்று மீனாட்சி சொன்னாள். “ஒரு சாயை வெள்ளம் போட்டு அதுக்க கையிலே குடுடீ தேவகி… கெடந்து அனத்துதே”
இசக்கியம்மை கோபித்துக் கொண்டு பின்கொல்லைக்குச் சென்று அம்மியின் அருகே அமர்ந்து கொண்டாள். ஆனால் அங்கே இருக்கமுடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து வீட்டைச் சுற்றிக்கொண்டு சென்று தெற்கு தெற்குபுரையை அடைந்தாள். அதன் சற்றே திறந்த வாசலின் விரிசல் வழியாக உள்ளே லைட் போடப்பட்டிருப்பது சிவந்த தூண்போல தெரிந்தது.
அது செவ்வக வடிவமான அறை. அதன் மறு எல்லைச் சுவரில் பகவதியின் ஓவியம் இருந்தது. இசக்கியம்மை அதை முதன்முதலாகப் பார்த்தபோது சின்னப்பெண். அந்த வீட்டுக்கு கல்யாணத்திற்கு வந்திருந்தாள். மீனாட்சியின் அம்மாவின் கடைசித்தங்கை விசாலாட்சியின் கல்யாணம். கல்யாணப் பெண் சாமி கும்பிட அங்கே வந்தபோது அவளும் கூடவே வந்தாள்.
அவள் அப்போது உற்சாகமாக துள்ளிக் கொண்டிருந்தாள். சரிகை வைத்த பாவாடை அவளுக்கு கிடைத்திருந்தது. அதற்கு முன் அவள் பாவாடை அணிந்ததே இல்லை. அவள் அடிக்கடி விசையுடன் சுற்றி குடைபோல தன்னை விரித்துக் கொண்டிருந்தாள்.“குட்டி பூவா மலர்ந்து போட்டே” என்று பெரியமாமா அச்சுதன் பிள்ளை சொன்னார். அவள் வெட்கி அம்மாவின் சேலையைப் பிடித்து ஒளிந்துகொண்டாள்.
அச்சுதன்பிள்ளை “நல்ல அளகுள்ள குட்டியாக்கும்” என்றார்
அவள் அம்மாவின் சேலையிலிருந்து எட்டிப் பார்த்து “சீப்பித்துணியிலே பாவிடை!” என்றாள்.
கல்யாணப் பெண்ணுடன் மாமியும் சந்திரி அக்காவும் இருந்தனர். அப்போது அந்த அறைக்குள் கேசவன் போற்றி இருந்தார். அவர்தான் பூசை செய்வது. தரையில் விரித்த பாயில் பரப்பப் பட்டிருந்த பூசைப்பொருட்களை அவர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர் நிமிர்ந்து பார்த்தார்
இன்னொரு பார்வையும் எழுந்தது. அவள் அப்போதுதான் ஓவியத்தைப் பார்த்தாள். “அய்யோ!” என்று அலறியபடி வெளியே ஓடிவிட்டாள்.
“ஏம்டீ? என்னட்டீ?” என்று மாமா அவள் கையைப்பிடித்தார்
“உள்ளே ஒராளு… ஒராளு செவரிலே”
“ஆளா? ஏட்டி வெளங்காவாயி, அது பகவதிடீ!”
அவள் அதன்பின் உள்ளே எட்டிப் பார்க்கவே இல்லை. அவர்கள் வணங்கி வந்தபோது உடன் சேர்ந்துகொண்டாள். ஆனால் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களை மூடினால் அந்த முகமும் நிலைகுத்திய பார்வையும் சிவந்த உதடுகளும் அருகே என தெரிந்தன. அவள் உடல் சிலிர்த்தது.
அதன்பின் பல ஆண்டுகளுக்குப்பின் அவள் தன் கணவனுடன் அங்கே வந்தாள். “பகவதிக்க ஆசீர்வாதத்தை வேங்கிட்டு போடீ” என்று சித்தி சொன்னாள்.
அவள் கணவன் மிக மெலிந்தவன். இருமிக்கொண்டே இருந்தான். கன்னம் ஒடுங்கியிருந்தது. கண்கள் இரு குழிக்குள் சற்றே பிதுங்கியவைபோல் இருந்தன. அவன் “செரி மாமி” என்றான்.
அன்று உள்ளே சென்று நின்று கும்பிட்டபோதும் அதே சிலிர்ப்பை இசக்கியம்மை அடைந்தாள். சுவரில் அவள் அன்று கண்ட அதே வடிவில் பகவதி ஒட்டி நின்றிருந்தாள். அதே பார்வை, சிரிப்பு.
“ஏன் பயப்படுதே?”என்று அவன் கேட்டான்.
அவள் தலையசைத்தாள். மிக விரைவாகவே வெளியே வந்துவிட்டாள்.
அந்த வீட்டுக்கே வரநேர்ந்தது பிறகுதான். அவள் பகவதியறைக்கு பக்கமே வருவதில்லை. பலமுறை அங்கே பூசை நடந்திருக்கிறது போற்றி வருவார். வாழைக்குலைகளும் பலாப்பழங்களும் மாம்பழங்களும் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கலும் மஞ்சள் பொங்கலும் திரளியும் உண்டு. தாமரை மாலை பகவதிக்கு விசேஷம். ஆனால் அறைக்குள் கர்ப்பூரம் காட்டப்படுவதில்லை. மணியோசை கேட்கும்போது தீபாராதனை காட்டப்படுகிறது என்று புரிந்துகொண்டு அவள் பக்கத்து அறையில் நின்று கும்பிட்டுக்கொள்வாள்.
தேவகிதான் இப்போது தினமும் பகவதிக்கு விளக்கு வைக்கிறது. ஒருமுறை அவள் இசக்கியம்மையை கூப்பிட்டாள். “அய்யோ!”என்று நடுங்கி அவள் பின்னடைந்தாள்.
இசக்கியம்மை மிகமெல்ல நடந்து கதவை அடைந்து உள்ளே பார்த்தாள். உள்ளே ஆசாரி சட்டையை கழற்றிவிட்டு நீலநிறமான சாயவேட்டியுடன் நின்று பகவதியை பார்த்துக் கொண்டிருந்தான். பகவதி எங்கே? அவள் சற்று ஒசிந்து சுவரைப்பார்த்தாள். அங்கே பகவதி இல்லை.
அவள் வியப்புடன் நன்றாகப் பார்த்தாள். சுவரில் வெறும் வண்ணங்கள்தான் தெரிந்தன. மண்ணில் விழுந்து மட்கி படிந்த பழந்துணிபோல. பகவதி மறைந்துவிட்டிருந்தாள்.
மாணிக்கம் திரும்பிப் பார்த்தான் முகம் மலர்ந்து “ஏ கெளவி… என்ன பார்வை? வா” என்றான்.
இசக்கியம்மை கடுமையாக “எங்கலே பகவதி?”என்றாள்.
அவன் சுவரைப் பார்த்துவிட்டு, “பகவதியா? அவ இந்த சுவரு வளியா அந்தப் பக்கம் போய்ட்டா” என்றான்.
“அந்தப்பக்கமா?”என்றாள் இசக்கியம்மை.
“அந்தப்பக்கம் தோப்பு இருக்கு. அதுக்கு அந்தப்பக்கம் ஆறு. அதுக்கு அந்தப்பக்கம் காடு” என்றான் மாணிக்கம் “அவ தோப்பிலே ஆத்திலே காட்டிலே இருக்கா… நான் இங்க அவள கொண்டுவருவேன்”
“எப்பிடி?”
“இப்ப நாம கிணறு தோண்டுதோம்லா? மண்ணுக்கு அடியிலே இருந்து தண்ணி அதிலே ஊறி வருதுல்லா?”
“ஆமா”.
“அதுமாதிரித்தான்”.
“ஓ” என்றாள் இசக்கியம்மை.
“நீ பாத்துக்கிடே இரிடீ… எப்டி வருதுன்னு பாரு”.
“பகவதிய எனக்கு பயமாக்கும்”.
“என்ன பயம்? நான் இருக்கேன்லா?”.
அவள் அவனிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தாள். அவனுடைய ஊர், வீடு, குடும்பம் எல்லாம் கேட்டு அறிந்தாள். அவனுக்கு காஞ்சான்விளை. மனைவி செத்துவிட்டாள். மகள் அவன் அம்மாவுடன் வளர்கிறாள்.
“எனக்க மொவளும் செத்துப்போயிட்டா” என்று இசக்கியம்மை சொன்னாள்.
“அடாடா எப்பம்?”
“அப்பமாக்கும் எலேசன் வந்தது. முத எலேசன்”.என்று அவள் சொன்னாள். “தொப்பிபோட்ட வெளுத்த சாயவு நேசமணி நாடாருகூட வந்தான்லா?”
‘நேருவா?”
”ஆமா, அவன்தான்”
“அப்ப சம்பவம் நடந்து ஒரு அம்பது வருசம் இருக்குமே…” என்றான்.
“ஆமா… இருக்கும். எனக்க புருசன் அதுக்கு முந்தின வருசம் செத்துட்டான். அவனுக்கு சீக்கு. எனக்க அப்பன் காலராவிலே செத்தாரு, அம்மை அடுத்த வருசம் செத்தா. என்னைய கெட்டிக்குடுக்க ஆருமில்லை. ஸ்ரீதனம் குடுக்க பைசா இல்லாததனாலே சீக்குக்காரனுக்கு கெட்டிவச்சாக. அவன் மூணுவருசத்திலே செத்தான். எனக்க மவளுக்கு அப்பம் ரெண்டு வயசு… தங்கச்செம்பு மாதிரி இருக்கும் குட்டி. நீலாம்பாள்னு பேரு வச்சேன்… ”
“என்ன தீனம்?”
“நடப்பு காச்சலு… ஒரேநாள் காச்சலு. மறுநாள் அப்டியே போச்சு… எல்லாம் எனக்க விதி” என்றாள் இசக்கியம்மை. “நான் மனசறிஞ்சு எனக்க மக நீலாம்பாளை பாத்ததில்லை. நல்லா பிடிச்சு ஒரு முத்தம் குடுத்ததில்லை. கொண்டாடினா செத்திரும்னு பயந்தேன். கொண்டாடாமலேயே செத்துப்போச்சு”.
“பிறவுதான் இங்க வந்தியோ?”
“ஆமா பிள்ளை போனப்ப கிறுக்கி மாதிரி இருந்தேன். நம்ம சித்தி இங்க இருந்தா… செரிடீ எங்கூட வாடீன்னு இங்க விளிச்சுட்டு வந்தா… அது ஆச்சு அம்பது வருசம். இந்நா கெடக்கேன் சாவமாட்டாம”.
மாணிக்கம் வரைவதற்குண்டான பொருட்கள் வாங்கி அங்கே வைக்கப்பட்டிருந்தன. ஏகப்பட்ட சிமிழ்கள். சீமையெண்ணைபோல நாற்றமடிக்கும் ஒரு வகை எண்ணை. ஒரு சட்டியில் சுண்ணாம்புப் பொடியை போட்டான். அதில் நெய் போல எதையோ போட்டு நன்றாக குழைத்தான். அது வெண்ணை போல ஆயிற்று.
அதை அள்ளி அள்ளி அவன் அந்தச் சுவரில் பூசினான். இசக்கியம்மை அங்கே சுவர் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்தபடி அவன் சுவரில் வெள்ளை பசையை பூசுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அதை பூசிக் கொண்டே இருந்தான். எவ்வளவு பூசினாலும் திருப்தி வராதவனாக தெரிந்தான்.
நடுவே அவன் ஒரு பீடி பற்றவைத்தான்.
“அய்யோ பீடியா? இது பகவதிக்க எடமாக்கும்”.
“பகவதிக்கு எனக்க பீடி பிடிக்கும்” என்றான் “அவளே சொன்னா”.
“உள்ளதா?”என்றாள் இசக்கியம்மை.
அந்தச் சுவர் உலர்ந்து முட்டையோடு போல ஆயிற்று. மூன்றாம் நாள் இசக்கியம்மை அந்த அறைக்கு வந்தபோது அறையே வெளிச்சமாக இருந்தது. சுவரில் இருந்து நிலவொளி வருவதுபோல.
“சுவரிலே வெளிச்சம் இருக்கோ?” என்றாள், கூர்ந்து பார்த்தபடி.
“வெள்ளைன்னா வெளிச்சம்” என்றான். “நம்ம பிரஷு வச்சு எங்க வேணுமானாலும் வெளிச்சத்தை கொண்டு வந்திருவேன், பாக்குதியா?”
“உள்ளதா?” என்று அவள் வியந்தாள்.
“பின்ன? நடூ ராத்திரியிலே வா. இருட்டு மேலே பிரஷ்ஷு வச்சு பெயிண்டை அடிக்கேன்… அப்டியே மத்தியான்ன வெயிலாட்டு ஆயிடும்”.
“உள்ளதாலே மக்கா?” என்றாள் இசக்கியம்மை.
“பின்ன? முன்னாடி ஒரு தடவை ஒரு ஆனையை அப்டியே வெளுக்கவச்சு வெளிச்சமாட்டு ஆக்கிப்போட்டேன்”
“பிறவு?”
”அது அப்டியே மேகமா மாறி வானத்திலே ஏறிப்போச்சு”
”அதெப்டி?”
”என்ன இது அறிவில்லாம கேக்கே? மேகம் எப்டி தரையிலே நிக்கும்?”
”செரிதான்” என்றாள் இசக்கியம்மை
அவள் அவனுக்கு அடுக்களையில் இருந்து பலகாரங்கள் கொண்டுவந்து தந்தாள். அவனும் அதை வாங்கி தின்றான். தேவகி “எளையம்மோ, நீ ஆசாரிகிட்ட மரியாதை கெட்டு ஒண்ணும் சொல்லீரப்பிடாது. அருள் உள்ளவனாக்கும்” என்றாள்.
“நான் என்னத்த சொல்லுதேன்? இந்நா கெடக்கேன், சாவமாட்டாம” என்றாள் இசக்கியம்மை.
நாலைந்து நாள் ஆகியும் அவன் வேலை தொடங்கவில்லை. பெரும்பாலான நேரம் தெற்குபுரைக்கு அப்பாலிருந்த சிறிய ஒட்டுதிண்ணையில் குந்தி அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தான். ஒருநாளுக்கு நாலைந்து கட்டு பீடி. அவன் இருக்குமிடத்தைச் சுற்றி பீடித்துண்டுகள் குவிந்து கிடந்தன.
அவற்றை கூட்டிப்பெருக்கும்போது தேவகி “என்னண்ணு இதை வலிச்சு கேற்றுதானோ… பீடி வலிச்சு வலிச்சுதான் நெஞ்சு கூடுகெட்டி கெடக்கு” என்றாள்.
அப்பால் இருந்த மாணிக்கம் “பீடியிலயாக்கும் நம்ம ஜீவன்” என்றான்
“பீடி தீயாக்கும்டே”.
“நமக்கு உள்ளாலயும் நல்ல தீயுண்டு அம்மிணியே” என்றான் மாணிக்கம்.
“அது உன்னை எரிக்கும்டே” என்றாள் தேவகி.
“நமக்கு சிதை தனியாட்டு வேண்டாம்… நம்ம உடம்பே ஒரு சிதையாக்கும். நம்ம ஆத்மாவே தீ. அதிலே நின்னு எரிஞ்சு எரிஞ்சு சாம்பலாகணும்னு விதி” என்றான்.
“பேச்சு மட்டும் பேசு… வந்து ஒரு வாரமாகுதுல்லா? சாயம் தொட்டு ஒரு புள்ளி வைக்கல்ல”.
“அது வரணும்ல?” என்றான் “வரேல்லன்னா வரவளைக்க முடியாது. வந்தா நிறுத்தமுடியாது”
“வந்ததுமே சுவரை வெள்ளையடிக்குததைப் பாத்தப்ப சோலி மறுநாளே தொடங்கீரும்னு தோணிச்சு”என்றள் தேவகி.
“தொடங்கணும்னுதான் வெள்ளை அடிக்குதது… சுவரை பாத்தாத்தான் அய்யோ வரையணுமேன்னு தோணும்”.
“எப்டியாக்கும் உனக்கு வரைய வாறது? முதல்ல எதை வரைவே?”
“அப்டி ஒண்ணும் இல்லை. முதல் சொட்டுச் சாயத்தை நேராட்டு கண்ணுக்கு வச்சு வரையுதது கூட உண்டு”
“பகவதி கண்ணு முன்னால வருவாளோ?”
“இல்லை அம்மிணி… கண்ணு முன்னால் வாறது சிலசமயம் வெறும் சாயங்களாக்கும். எல்லாம் சேந்து பகவதியா ஆகிறது எப்பவோ ஏதோ ஒரு இடத்திலே. அதைச் சொல்லீர முடியாது… அதுவாட்டு நடக்கணும்”.
“நடக்கும் நடக்கும். நீ கொஞ்சம் குளிச்சு விருத்தியா சுத்தமா இருந்தா பகவதி வருவா… பீடியும் பிடிச்சு இருந்தா மூதேவிதான் வந்து ஏறுவா”.
“அது எப்டியும் அப்டியாக்குமே… பகவதி வரைஞ்சு முடிச்சா இங்க இருப்பா. படியெறங்கும்ப நம்மகூட வாறது மூதேவியாக்கும். அவளாக்கும் நமக்கு எப்பவும் உள்ள துணை. அவளை விட்டிரமுடியாதுல்லா?”
“என்னமோ போ” என்று தேவகி சென்றுவிட்டாள்.
அவன் பெரும்பாலான நேரம் எங்காவது வெறித்துப்பார்த்துவிட்டு அமந்திருந்தான். மிகக்குறைவாகவே சாப்பிட்டான். பெரும்பாலும் சோற்றை கையால் கிண்டி வைத்திருந்தான்.
இசக்கியம்மை அவனிடம் “நீ எப்ப வரைவே?”என்றாள் ரகசியமாக.
அவன் ரகசியமாக “நாளைக்கு” என்றான்.
நாலைந்து நாள் இசக்கியம்மை அப்படி அவனிடம் கேட்டாள், அவன் எப்போதுமே நாளைக்கு என்றுதான் சொன்னான். ஒவ்வொருநாளும் அவன் சாயங்களை குழைத்தான். சிறிய குங்குமச்செப்புகளில் இருந்து சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் என எடுத்தான். அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்து குழைத்தான்.
“இது என்னது குங்குமமா?”
“குங்குமமும் ஆக்கலாம்”.
“இது என்னது. கீரைச்சட்டினி மாதிரி இருக்கு?”
“வாயிலே வச்சுப்போடாதே… இது பச்சைநெறமாக்கும்”.
“வெசமா?”என்று அவள் ரகசியமாக கேட்டாள்.
“ஆமா” என்று அவன் ரகசியமாகச் சொன்னான்.
“என்னத்துக்கு போட்டு கலக்குதே? அவியலுக்கு கூட்டு கலக்குத மாதிரி”.
அவ“நாம செய்யுதது ஒரு அவியலாக்குமே”.
“பகவதியா?”
“ஆமா பகவதி ஒரு அவியலு… பகவதிக்க படம் ஒரு அவியலு”
திடீரென்று ஒருநாள் அவன் வரைய ஆரம்பித்தான். அப்போது அவள் அந்த அறையில் இருந்தாள். அவனும் அவளும் சேர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தனர். அவன் வெற்றிலையை துப்பிவிட்டு எழுந்து சென்று பிரஷை எடுத்து நீலச்சாயத்தில் முக்கி சுவரில் உதறினான்.
“ஏலே ,கெடுத்துப் போட்டியே சுவர” என்றாள் இசக்கியம்மை.
அவன் அதை இழுத்து வளைத்து என்னவோ செய்ய தொடங்கினான். அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் என்ன செய்கிறான் என்று புரியவில்லை.
“என்னலே செய்யுதே ஆசாரி?”
“சும்மா பார்த்திட்டிரு… சலம்பாதே”.
அவள் கொஞ்ச நேரம் கழித்து சலித்துப்போய் திரும்பி வந்தாள். அவன் கதவை மூடிவிட்டிருந்தான்.
“லே ஆசாரி… லே மாணிக்கம்” என்று அவள் தட்டினாள். அவன் திறக்கவில்லை.
“கிளவி அங்க என்ன செய்யுதே? இப்பம்தான் அவன் வரைய ஆரம்பிச்சிருக்கான்… நீ உயிர வாங்காதே” என்றாள் தேவகி.
வரைகிறானா? எப்படி வரைகிறான்? அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை. அவள் அங்குமிங்கும் அலைமோதினாள். ஆனால் ஆசாரி கதவை திறக்கவில்லை. சாயங்காலம் அவன் வெளியே வந்தபோதும் கதவை பூட்டி சாவியை இடுப்பில் செருகிக்கொண்டிருந்தான்.
“ஏலே, எப்டிலே வரையுதே?”
“பகவதி நம்ம கையிலே வந்தாச்சுல்லா?”
அவள் ரகசியமாக “சுவரிலே இருந்து எளும்பி வாறாளோ?”என்றாள்.
“ஆமா” என்று அவன் ரகசியமாகச் சொன்னான்.
“நீ கொஞ்சம் தள்ளி நில்லுலே மக்கா… உக்கிரமான தேவியாக்கும்”.
அவன் அவளுக்கு ஓவியத்தை காட்டவே இல்லை. அவர்கள் யாருமே பார்க்கவில்லை. பகலில் மட்டுமில்லாமல் இரவிலும் விளக்கை போட்டுக்கொண்டு வரைந்தான். சாப்பாடு டீ எல்லாம் கொண்டுவந்து வெளியே வைத்துவிடவேண்டும். அவன் எவரிடமும் பேசுவதில்லை. பீடி பிடிப்பதையும் விட்டுவிட்டான். அவன் கண்களில் ஒரு வெறிப்பு வந்துவிட்டது.
போற்றி வந்து பார்த்துவிட்டு “அருளு வந்துபோட்டு… இனி ஆளைப் பிளந்து வெளியே வந்தபிறவுதான் விடும்” என்றார்.
பன்னிரண்டுநாள் ஆகியது வரைந்து முடிக்க. ஒவ்வொருநாளும் இசக்கியம்மை சென்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரகசியமாக “பகவதி வந்தாச்சா?”என்று கேட்டான்.
அவன் ரகசியமாக “வந்துட்டே இருக்கா” என்றான்.
அவள் மேலும் ரகசியமாக “நல்ல துடியோ?”என்றாள்
அவன் மிகமிக ரகசியமாக “தீயில்லா” என்றான்
அவள் பெருமூட்சுவிட்டாள்
பன்னிரண்டாம்நாள் காலையில் சேகரன் வீட்டில் இருந்தான். தேவகி படியில் அமர்ந்து முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள். மீனாட்சி அப்பால் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாள். மாணிக்கம் படீரென்று கதவைத் திறந்து வெளியே வந்தான். உரத்தகுரலில் “வாருங்க, வந்து பாருங்க… பகவதி வந்து நின்னுட்டிருக்கா” என்றான்.
அவன் குரலும் பாவனையும் எல்லாரையும் கொஞ்சம் நடுங்கச் செய்தன. யாரும் எழவில்லை. தேவகி கொஞ்சம் “போய் பாருங்க” என்றாள்.
மாணிக்கம் உரக்க சிரித்து “வந்து பாருங்க… நின்னுட்டிருக்கா. திரயம்பகை, சிவை, திரிசூலி, திரிதேவி, மாகாளி, பராசக்தி” என்றான்.
சேகரன் “பிறவு பாக்குதேனே” என்றான்.
தேவகி எழுந்து “நான் பாக்குதேன்” என்றாள்.
“வாங்க! வாங்க! வாங்க!” என அவன் சிரித்தபடி அவளை அழைத்துச் சென்றான். தயங்கியபடி எழுந்து சேகரன் அவள் பின்னால் நடந்தான். மீனாட்சியும் கையை துடைத்தபடி சென்றாள். இசக்கியம்மை அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது.
உள்ளே சென்ற தேவகி “எனக்க பகவதியே! தேவீ மகாமாயே!” என்று கூவினாள். மீனாட்சி “அம்மே நாராயணீ!” என்றாள். தேவகி அழுவதுபோல ஓசை கேட்டது. இசக்கியம்மை அந்த வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
நெடுநேரம் கழித்து மீனாட்சி முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அவளைத் தொடர்ந்து தேவகி வந்தாள். அவளும் அழுது கொண்டிருந்தாள். சேகரனும் மாணிக்கமும் பேசியபடியே வந்தனர்.
சேகரன் “தெய்வீகமாட்டு இருக்குவே… எந்திரிச்சு கண்ணு முன்னாடி வந்து நின்னதுமாதிரி இருக்கு” என்றான்.
“எந்திரிச்சு வாறதுதான். நாம வெறும் கருவி” என்றான்.
“அதெப்பிடி, கலை உம்ம கையிலே இல்லியா?”
“சாயம் இருக்குதது பிரஷ்ஷிலே… அப்ப இந்த படத்தை வரைஞ்சதும் பிரஷ்னு சொல்லீருவமா?”
“அதெப்டி, அது இருக்கப்பட்டது உம்மை கையிலேல்லா?”
“அதேமாதிரி நான் இருக்கப்பட்டது வேற ஒரு சக்திக்க கையிலயாக்கும்”
“அப்ப அந்த சக்திக்கு காசு குடுத்தா போரும், இல்லியா?”என்று சிரித்தான்.
“போரும்… ஆனால் அதுக்கு கை நிறையுத அளவுக்கு குடுக்கணும். உம்மாலே முடியுமா வே?”
“அய்யோ” என்றான் சேகரன்.
அவர்கள் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். மாணிக்கம் இசக்கியம்மையைப் பார்த்தான்.
“ஏய் கிளவி, பாக்கணும்னு சொன்னேல்ல? வந்து பாரு” என்றான்.
இசக்கியம்மை வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“உன்னைய முதல்ல விளிக்கல்லேன்னு கோவமா?” என்று அவன் அருகே வந்து அவள் கொண்டையை பிடித்தான். “எந்திரிடி சேவல்கோளி… வா வந்து பாரு”.
அவள் அவன் கையை தட்டிவிட்டாள். எழுந்து கூன் விழுந்த உடலை உந்தி கைகளை வீசி உள்ளே போனாள்.
“என்னவாக்கும் அவளுக்கு?”
“அது எப்பமும் அப்டியாக்கும். அவளுக்க மனசுபோற போக்க நம்மால பாக்கமுடியாது. ஒரு அஞ்சுவயசு குட்டிக்க மனசு” என்றான் சேகரன். பிறகு முகம் மாறி ஆசாரியிடம் “செரி, நான் சொல்லிடுதேன். இதுக்கு ஒரு விலை சொல்ல நான் ஆளில்ல. நான் என்ன குடுக்கணும்னு அறிஞ்சு நீரு சொல்லும், உம்ம காலிலே வைச்சு கும்பிடுதேன்…”
“நீரு என்ன நினைச்சு குடுத்தாலும் செரி…”
“அப்டிச் சொன்னா”
“செரி, ராஜப்பனாசாரிகிட்ட கேட்டுக்கிடும்”
“அது நல்லதாக்கும்” என்றான் சேகரன். “நான் போயி போத்திய விளிச்சுட்டு வாறேன்…” என்று இறங்கி ஓடினான்.
மாணிக்கம் திண்ணையில் அமர்ந்து ஒரு பீடியை பற்ற வைப்பதை இசக்கியம்மை உள்ளிருந்து பார்த்தாள். அவளால் நிற்கமுடியவில்லை. ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டாள். தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. எங்காவது போய் சுருண்டு படுத்துவிடவேண்டும் போலிருந்தது.
அவன் மீண்டும் அவளுக்குத் தெரிந்த மாணிக்கம் ஆசாரியாக மாறிவிட்டிருந்தான். முதுகைப் பார்த்தபோதே அது தெரிந்தது. முன்பு அவன் முதுகே அவன் வேறொருவன் என்று காட்டியது. அதெப்படி ஒருவன் இன்னொருவனாக ஆகிவிட முடியும்? ஒருவேளை அவன் வேறு ஆளா?
அவள் கொல்லைப்பக்கம் சென்றாள். “சித்தி, சாயை குடிக்குதியளா?” என்றாள் மீனாட்சி.
“ஓ மக்களே, இம்பிடு வெள்ளம் எடு”
“என்னமா வரைஞ்சு போட்டான். கண்ணுல நிக்குது அந்த சிரிப்பு… யப்பா… சிலுக்குதே” என்றாள் தேவகி.
ஒருவாய் டீ குடித்தபோது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு சுருட்டு வெற்றிலையையும் வாயில் போட்டபோது உடல் மெல்ல அடங்கியது. மெல்லுந்தோறும் அவள் பழைய நிலையை அடைந்தாள். எழுந்து கொல்லைப்பக்கமாக சுற்றிக்கொண்டு தெற்குபுரையை அடைந்தாள். அதன் கதவருகே கொஞ்சநேரம் நின்றாள். உள்ளே எவரோ இருப்பதை உணர்ந்தாள். மெல்ல “ஆரு?” என்றாள்
உள்ளே பதில் இல்லை.
“உள்ள ஆராக்கும்?” என்றாள்.
அதற்கும் பதில் இல்லை. ஆனால் உள்ளே இருப்பவர் அமைதியாக அவள் குரலை செவிகூர்வதை அவளால் உணரமுடிந்தது.
“ஆராக்கும்னு கேக்குதேன்ல?”
சற்றுநேரம் கழித்து அவள் கதவை மிகமெல்ல திறந்து உள்ளே சென்றாள். உள்ளே குறைவான வெளிச்சம்தான் இருந்தது. அவள் எதிரே பகவதி நின்றிருந்தாள்.
“பகவதியே!” என்றாள் இசக்கியம்மை
பகவதி புன்னகைத்தாள்.
“நான் சின்னவயசிலே கண்டிட்டுண்டு” என்றாள் இசக்கியம்மை.
பகவதியின் விழிகள் அசைந்தன. முகம் கனிவுகொண்டது. “நல்லா இருக்கியாட்டீ?” என்று கேட்டாள்
“இருக்கேன்” என்றாள் இசக்கியம்மை. ‘“ஓர்மையுண்டா பளைய இசக்கியம்மையை?”
“பின்ன ஓர்மையில்லாம இருக்குமா? நான் கண்டதாக்குமே” என்றாள் பகவதி.
இசக்கியம்மை முகம் மலர்ந்து “அப்ப நான் பூவாட்டுல்லா இருப்பேன்… நெறைஞ்சு சிரிப்பேனே” என்றாள்.
“ஆமா, அதொரு காலமெடீ இசக்கியம்மையே” என்றாள் பகவதி.
அவளுக்கு துக்கம் வந்து நெஞ்சு அடைப்பது போலிருந்தது. பெருமூச்சுவிட்டபடி பகவதியின் அருகே சென்றாள். “என்னமா இருக்கே? இந்நா இப்பம் பிறந்து வந்தமாதிரி”.
“இப்பம்தான் வந்தேன்” என்று பகவதி சொன்னாள்.
“நான் மட்டும் இப்டி கோலம்கெட்டு போனேனே” என்றாள் இசக்கியம்மை.
“நீ மனுச சென்மமாக்குமே”.
“ஆமா” என்று இசக்கியம்மை மீண்டும் பெருமூச்சுவிட்டாள். “எனக்க ஜீவிதம் மட்டும் ஏன்டீ இப்பிடி ஆயிட்டுது பகவதியே?”
“அது விதியாக்கும். நான் என்ன செய்ய?” என்றாள் பகவதி
“ஆமா நீயும் பெண்ணாக்குமே… நாம சொல்லி ஆரு கேக்க?” என்றாள் இசக்கியம்மை.
வெளியே குரல்கேட்டது. போற்றி உரக்க “வரைஞ்சாச்சுன்னு சேகரன் சொன்னான். இந்நான்னு எந்திரிச்சு நிக்குதா பகவதீண்ணு சொன்னான்… ஆசாரியே நீரு கெஜகில்லியாக்கும். அது அப்ப கண்டப்பமே எனக்கு தோணிச்சு கேட்டேரா?”
“என்னத்த வரைஞ்சு? எல்லாம் வெறும் கணக்கு. சாயங்களுக்க கணக்காக்கும் போத்தியே..” என்றான் மாணிக்கம்
“வேய், வந்து காட்டும் வே” என்று போற்றி அழைத்தார்.
“போயி பாரும்… இனி நீருல்லாவே பூசை செய்ய போறீரு?”
“வரைஞ்சவரு நீருல்லா? உம்ம படமில்லாவே”
“அந்த மயிருக்கும் எனக்கும் இனி ஒரு உறவுமில்லை”
“வந்தாச்சு… மூத்தவ வந்து நாக்கிலே கேறிட்டா… இனி போயி மூக்குமுட்ட குடிச்சு நாலாளுகிட்ட அடிகளை வாங்கி ரோட்டிலே விளுந்து கிடந்தாத்தான் அடங்குவான்”.
“நீரு போவும்வே சூத்துபெருத்த பிராமணா… ”.
சேகரன் “வே” என்று ஏதோ சொல்ல போற்றி அவனை பிடித்து தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்.
“அவனுக்க விதியாக்கும் அது. எளையவ எறங்கினா மூத்தவளுக்காக்கும் அந்த எடம்… விடும்” என்றவர் ஓவியத்தை பார்த்தார்.
“பொன்னு பகவதியே!” என்று கைகூப்பினார். தலைக்குமேல் கையை தூக்கி கும்பிட்டு “அம்மே மகாமாயே தேவீ!” என்றார். குரல் உடைந்து “தேவீ! காத்தருளணுமே அம்மே!” என்றார்
இசக்கியம்மை வெளியே சென்று மாணிக்கம் ஆசாரியை நோக்கி தள்ளாடியபடியே நடந்தாள். முன்னோக்கி விழுந்துகொண்டிருப்பவள் போலிருந்தாள்.
“என்ன கிளவி?”என்றான் மாணிக்கம் முற்றத்தில் காறித்துப்பியபின் பீடியை ஆழ இழுத்து “போ போ” என்றான்.
“மக்கா” என்றாள் இசக்கியம்மை
“ஆருடி உனக்க மக்கா? பரட்டக்கெளவி, போறியா அடி வாங்குதியா?”என்றான் மாணிக்கம்
இசக்கியம்மை யாசிப்பது போல கைவிரித்து கண்ணீருடன் “மக்கா எனக்க ராசா, அப்பிடியே எனக்க செல்லக்குட்டிய எனக்கு வரைஞ்சு குடுலே….எனக்க குட்டி நீலாம்பாளை எனக்க கையிலே குடுலே… நீ நல்லாருப்பேலே எனக்க பெருமாளே” என்றாள்.
சேகரன் உள்ளிருந்து வெளியே வந்து “ஏய் கெளவி உள்ள போ…. தேவகி இவள உள்ள விளி… ” என்றான்.
இசக்கியம்மை “எனக்க மக்கா… எனக்க நீலாம்பாள குடுத்திருலே” என்று கைநீட்டி கதறினாள்.
போற்றி “அம்மச்சீ… அவரு எங்க பாத்தாரு உனக்க மகள? அவரு எப்டி வரைவாரு? சொன்னா புரிஞ்சுக்கணும்…உள்ள போ” என்றார்.
மாணிக்கம் எழுந்து அவிழ்ந்த வேட்டியை ஏற்றிக்கட்டி “நான் கொண்டுவந்து நிப்பாட்டுதேன் கிளவி உனக்க நீலாம்பாளை… உனக்க கையிலே குடுக்கேன். எமன் வந்தாலும் செரி, எளவு, அந்த தாயோளி பிரம்மன் வந்தாலும் செரி… நான் வரவளைச்சு குடுக்கேன் உனக்க மகளை” என்றான்.
“மாணிக்கம், வே” என்றார் போற்றி
“போவும்வே அந்தாலே…” என்றான் மாணிக்கம். இசக்கியம்மையிடம் “நான் குடுக்கேண்டீ உனக்க மகளை… என் செல்லமே… எனக்க செல்ல மகளே! எனக்க முத்தே” என்றான்.இரு கைகளையும் விரித்து இசக்கியம்மையை அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
***