ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
சூழ்ச்சிகள் நிறைந்த சூழலில் ஆள்வோருக்கு அவ்வப்போது ஓர் அலையென தனிமை வந்து தாக்குகிறது போலும். கைவிடப்பட்டிருக்கிறோமோ என்னும் ஐயம் எழுகிறது. அதற்கு மறுமொழி என நாங்கள் இணைந்து பின்குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.
இது வெண்முரசில் வந்த வரி. மிகமுன்னால் எங்கோ வந்தது. சும்மா குறித்து வைத்திருந்தேன். ஆனால் மோடியின் கைத்தட்டல் விளக்கேற்றல் சம்பவங்களில் இந்து ஞாபகம் வந்தது. வெண்முரசு தரும் அனுபவம் என்பது இதுதான். அரசியலில் மக்களின் மனநிலையில் தனிப்பட்ட உறவுகளில் என்றும் மாறாமலிருக்கும் சிலவிஷயங்கள அதில் காணமுடிகிறது
அவ்வாறு வாசித்த ஒரு கதை என்று ஆயிரம் ஊற்றுக்களைச் சொல்வேன். என்ன ஒரு கதை. அந்த அரசியல்சூழலின் அபத்தம் மெய்யான தகவல்கள் வழியாகவே சொல்லப்படுகிறது. வழியே போன ஒருவரை இழுத்து வந்து பலிகொடுக்கிறர்கள். அதுதான் உலக அரசியலில் பெரும்பாலும் நடக்கிறது என்று தோன்றுகிறது. அரசியல்பலிகள் அந்த குழந்தைகள். ஆனால் அவர்கள் இறந்தபின் அன்னையை மன்னித்துவிட்டார்கள்
ரா.கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆயிரம் ஊற்றுக்கள் கதையை முதலில் வாசிக்க கொஞ்சம் கடினமாக இருந்தது. அந்த மொழியும் அந்த அரசியல்சூழலின் புதுமையும் காரணமாகச் சொல்லலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகவே வாசித்தேன். அந்த வேறுபட்ட தன்மையால்தான் அந்தக்கதை மனசுக்குள் மிக ஆழமாகச் சென்று பதிந்தது. அந்த பெருந்துன்பத்தை நானும் அணுக்கமாக அறிந்தேன்
அந்த ‘களிப்பான்குளம்’ இன்றைக்கும் திருவனந்தபுரம் அருகிலே இருக்கிறது என்றும் அந்தக்குழந்தைகளுக்கு சடங்குகள் செய்கின்றனர் என்றும் கேள்விப்பட்டேன். சரித்திரம் முழுக்க அப்படி எவ்வளவு துயரங்கள். எத்தனை கண்ணீர், எத்தனை ரத்தம்
செந்தமிழ் முருகேசன்
ஆடகம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆடகம் கதையை கொஞ்சம் பிந்தித்தான் வாசித்தேன். நஞ்சு- அமுது என்ற முரண்பாடுதான் கதை என்பதை புரிந்துகொள்ள கடிதங்களையும் வாசிக்க வேண்டியிருந்தது. அமுது செறிவானால் நஞ்சு. நஞ்சு இளகினால் பொன். ஒரு கட்டத்தில் அந்த நாகம் கனிவதுதான் கதையின் கணம். அது ஒரு பரிசை அளிக்கிறது அந்த இளைஞனுக்கு இல்லையா?
பொன்னாலான தொடுகை என்று அந்த நஞ்சைச் சொல்லலாம். அந்தப்படத்தில் நாக நஞ்சு பொன் போலவே சுடர்விடுகிறது
செல்வி ராஜேஷ்
ஆடகம் கதை நிகழும் மழை மிகு ஊர் , காடு , நாகம் ஆகியவை இயற்கையின் மடியில் மனிதன் என்ற மனச்சித்திரத்தை உருவாக்கியது
ஐரோப்பிய அமெரிக்க தேசங்கள் ஆரோக்கியம் வாழ்க்கைத்தரம் கல்வி என செழிப்பாக இருக்கின்றன. ஆப்ரிக்க தேசங்கள் வறுமையில் வாடுகின்றன.. இப்படி சில தேசங்களுக்கு அனுகூலமாக உலகம் எப்படி மாறியது என ஆராயும் நூல் guns germs and steel. சமமாக படைகக்கப்பட்ட மனிதர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியது கிருமிகள்தான். அவற்றின் பாதிப்புகளால்தான் உலக சரித்திரமே படைக்கப்பட்டுள்ளது என்பது நூலின் துணிபு
இவ்வளவு விஷம்போதும் என அந்த நாகம் முடிவெடுத்த கணத்தின் ஒரு துளி நேரத்தில்தான் உலக சரித்திரமும் இயற்கை சக்திகளால் முடிவு செய்யப்பட்டது போலும்
http://www.pichaikaaran.com/2020/04/blog-post_7.html?m=1
அன்புடன்
பிச்சைக்காரன்