பெயர்நூறான்,சுற்றுக்கள்- கடிதங்கள்

பெயர்நூறான் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

பெயர்நூறான் ஒரு அழகான கதை. நேரடியான அனுபவமே இத்தகைய கதைக்கான நுண்மையான observationஐ உருவாக்கமுடியும் என நினைக்கிறேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதுதான். குழந்தை பிறக்கும்போது பயங்கரமான பதற்றம். எனக்கு கத்தார் போக டிக்கெட் போட்டிருந்தேன். அது குழந்தை பிறப்பது தள்ளி தள்ளிபோகும் என்பதனால் கன்ஃபர்ம் ஆகிவிட்டது. அப்போது சட்டென்று வலி. குழந்தை பிறந்துவிட்டது.

 

நான் அப்போது விமான டிக்கெட்டை பத்துநாள் தள்ளிப்போட முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஒருவழியாக டிக்கெட் மாற்றிவைக்கப்பட்டது. அம்மா உடம்புசரியில்லாமல் திண்டுக்கல்லில் இருந்தார்கள். அவர்களை கொண்டுவரவேண்டும். தங்கச்சியுடன் வருவதாகச் சொன்னார்கள்.

 

எல்லா பரபரப்பும் முடிந்து இரண்டாம்நாள்தான் திடீரென்று அய்யோ நமக்கு பிள்ளை பிறந்திருக்கிறது, நம அப்பா ஆகிவிட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அப்படி ஒரு பரவசம். கொண்டாட்டம். கண்ணீர்விட்டு அழுதேன். ஆனால் அதற்கு 48 மணிநேரம் ஆகிவிட்டது. அது வரை இருந்த பரபரப்பும் ஒருவகையான கொண்டாட்டம்தான் என்று அதற்கு பின்புதான் தெரிந்தது. அந்த நாட்களின் மனநிலையை மிகக்கூர்மையாகச் சொன்ன அழகான கதை.

 

எனக்கு பொதுவாக ஆழமான கதைகள் மேல் அவநம்பிக்கை உண்டு. ஆழம் என்று சொல்வது என்ன? சிந்தனைகள் தானே? அழகுதான் இலக்கியம் என நினைக்கிறேன். ஆழம் கொஞ்சம் வாசித்தாலே உருவாகிவிடும். அழகு அப்படி அல்ல. அதற்கு ஒரு மனநிலை வேண்டும்.

 

 

கார்த்திக்ராஜ்

 

ஜெ,

 

பெயர்நூறான் மனதிற்கு இதமான  மகிழ்ச்சியான கதை. பெரும்பாலும்  பெற்றோர்க்கு   குழந்தைகள்  தான் வாழ்விற்கு அர்த்தம் சேர்கின்றன. சில மனிதர்களின் வாழ்க்கை குழந்தைக்கு முன்   குழந்தைக்கு பின் என்றே பிரிக்கவேண்டும் என் நண்பர்கள் சிலர்  குழந்தைலான் டார்ட்சர் மச்சி நச்சரிக்கும் என்று சொன்னவர்கள் இன்று  குழந்தைகள் இல்லா வாழ்க்கை போர் மச்சி என்கிறார்கள்.

 

பனிமனிதனை மீள்வாசிப்பு செய்து நேற்றுதான் முடித்தேன். என் மனைவியிடம் நமக்கு  பெண் குழந்தை பிறந்தால் மைத்திரி என்று பெயர் வைப்போம் என்றேன். அப்டினா என்ன அர்த்தம் என்றாள் . அதற்கு ஒன்நெஸ் எல்லாவற்றுடனும் கலந்துவிட்டவள் என்று சொன்னேன். ஓகே நல்லாருக்கு என்றால் . பய்யன் பிறந்தால் “போதிசத்வ பத்ம பாணி ” என்று வைப்போம் என்றேன்  :). “அய்ய”  இதென்ன பெரு “பத்து” “பத்துனு ” கூப்பிட்டு பார்த்து நல்லா இல்லை என்றால்.  அது ஞானியர்க்கு கொடுக்கிற பெயர் என்றேன். அவங்க ஞானியாகவேன்டாம் உன்ன மாறி உம்முனு இருக்க வேண்டாம் என்னமாரி  சிரிச்சிகிட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு  இருக்கணும் என்றாள் .

 

குழந்தை உண்டாகும் முன்னரே  ஆணவக்காரனோ ஆணவக்காரியோ என்று மனம் கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறது.

 

 

விஷ்ணுகுமார்

 

 

சுற்றுகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்கள் BSNL அனுபவங்களையும் அருண்மொழி அவர்களின் India Post அனுபவங்களையும் கொண்டு ஒரு கதை உருவாகிடுச்சோ? முதிர்ந்த காதலுக்கு லௌகீகமான சில தகுதிகள் இருக்கனும்; அதில் ஒன்று minimum competency. அதை இந்த கதை இலகுவாக சொல்லுச்சு.

 

நன்றி,

நவீன்

 

அன்புள்ள ஜெ,

 

சுற்றுகள் கதை நாம் எழுதுவதற்கான களங்கள் எவ்வளவு கிடக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் கதை. நான் வார்ப்பு வடிவங்கள் செய்யும் இடத்தில் வேலைபார்த்திருக்கிறேன். யோசிக்கும்போது இப்படி எவ்வளவு அனுபவங்கள் எத்தனை எத்தனை விஷயங்களுக்கு மாடல்கள் செய்துகொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் ஏன் கதையாக எழுதக்கூடாது? எழுதலாம். ஆனால் இந்தக்கதையில் உள்ளது போல ஒரு திறப்பு அதில் வரவேண்டும். அதாவது சர்க்யூட் என்பதை ஆண்பெண் சர்க்யூட், மனிதன் இயந்திரம் சர்க்யூட், மனிதன் இயந்திரம் வானம் என்ற சர்க்யூட் என்று விரிவாக்கிக்கொள்ளக்கூடிய மனநிலை வரவேண்டும்

 

ஆனால் இந்தவகையான கதைகள் ஒருவகை தொடக்கங்கள் என நினைக்கிறேன். இப்படியெல்லாம் எழுதலாம் என்று நினைத்தாலே இவையெல்லாம் கண்ணுக்குப்பட ஆரம்பித்துவிடும். அவை நமக்கு புதிய கதையுலகங்களை உருவாக்கித்தரும்

 

செந்தில்வேல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–27
அடுத்த கட்டுரைஅனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்