குக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

அறவிதிகளின் மையத்தைவிட்டு நாம் நமது ஆரங்களைத் தளர்த்திக்கொள்கையில், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வுச்சுழல்வும் நிலைகுலைந்து தடமிழப்பதை, கடந்தகால மற்றும் நிகழ்கால சமூகச்சூழல்களின் வழியாக நாம் நன்குணர்ந்திருக்கிறோம். வாழ்வில் ஒவ்வொரு முடிவை எடுக்கும்பொழுதும், நெஞ்சுக்குள் ஒரு குரல் அம்முடிவுகுறித்தான ஆயிரம் அகக்கேள்விகளை எழுப்புகிறது. அகக்கேக்விகள் அறக்கேள்விகளாக வீரியமடைகையில் நம்முள்ளில் தணிவடையாத சுயப்பதட்டம் ஒட்டிக்கொள்கிறது.

 

நோயச்சம் எல்லா தேசங்களையும் ஊரடங்க வைத்திருக்கும் இந்த நிகழ்கால துயர்சூழலில், இருதயந்திறந்து நாம் உரையாடிகிற அரூபத்திறவினை இணையவெளி உருவாக்கிக் கொடுக்கிறது. ஒட்டுமொத்த மானுடச் சமூகத்தின் தனிவாழ்வு மீதும் இந்தத் தனித்திருப்புக்காலம் தாக்கத்தை ஏற்படுத்தும். நம்மின் அன்றாடைய உணர்வுநிலைகளின் ஏற்றயிறக்கங்கள்பற்றி அடுக்கடுக்கான நிலையழிதலுக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஏற்கனவே நாம் துவங்கியிருந்த அல்லது வெகுவிரைவில் நாம் துவங்கவிருந்த நம் அகச்செயல்களின் நிகழ்கணநிலை என்னவாகயிருக்கிறது?

 

ஒரு தேசம் செய்திருக்கவேண்டிய அல்லது இனி செய்யவேண்டிய சமூகச்சரி எதுவென நாம் அலசியாராய்ந்து விவாதிக்கும் இச்சமயத்தில், நம் ஒவ்வொருவரும்  கையிலெடுத்தே ஆகவேண்டிய சுயப்பொறுப்பு குறித்து அகஆழத்தில் நாம் சில முடிவுகளை எடுத்தாகவேண்டியுள்ளது. நமக்குள் உரையாடி விவாதிக்கும் ஒரு சமவெளியுரையாடலைத் தவிர்த்து, செயல்சார்ந்த ஒரு தீவிரத்துக்குள் நுழைவுகொள்ள ஒரு உண்மைசார்ந்த உரையாடல் இப்பொழுது அவசியமாகிறது.

குக்கூ உரையாடல்கள் – நாம் நமது கனவுச்செயலை எங்கிருந்து தொடங்குவது? எதன்வழி தொடர்வது? கைபிடித்து அழைத்துச் செல்லும் கரங்களை எங்கிருந்து பெறுவது? இவையனைத்தும் குறித்த அகத்தெளிவை நாம் அடைவதற்கு, செயல்சாட்சி மனிதர்களாக திகழ்கிற வாழ்வாசான்களோடு உன்னதமான ஒரு உரையாடல் நிகழ்த்துவது அவசியமாகிறது. அவ்வகையில் முதற்கட்டமாக, மானுட அறிவியலாளர் அர்விந்த் குப்தா, காப்புரிமக்காவலர் அனில்குப்தா, கங்கைத்துறவி சிவானந்த குரு, எழுத்தாளர் ஜெயமோகன், குப்பைபொம்மைக் கலைஞர் சுபீத், எக்கனாமிக்ஸ் ஆஃப் ஹாப்பினஸ் தலைவர் ஹெலனா நோர்பெர்க்… ஆகியோர்கள் இணைய நேரலையில் தனித்தனி நாட்களில் ஒருமணிநேரம் பொதுவுரையாடலில் பேசவிருக்கிறார்கள். ஏப்ரல் 6லிருந்து இது துவக்கமடைகிறது.

 

இணையத்திரை வழியாக இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் அறைக்குள்ளிருந்து கணித்துக்கொண்டிருக்கும் நமக்கு, சுயம்சார்ந்து எடுத்தாகவேண்டிய ஒரு முடிவையோ அல்லது அதிலிருக்கும் பிழையையோ நிச்சயம் இது சுட்டிக்காட்டும். செயலில் தொய்வுதொற்றாத ஒரு அகயெழுச்சி நிலையில் நம் அனைவர் மனதினையும் நல்வழிப்படுத்தும் திறனுரையாடல் இது. கனிவுறக் காத்திருக்கும் நண்பர்கள் இவ்வுரையாடலில் இணைந்துகொள்ளுங்கள்.

 

இணைய விரும்பும் தோழமைகள் பின்வரும் இணையப்படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்புவும். எண்ணிக்கை குறைக்கப்பட்ட குழுவுரையாடல் என்பதால், கல்லூரி மாணவர்கள் மற்றும் புதியவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்துவது நலம்.

 

https://forms.gle/FyPBbNpm5VHxtHtT6

 

அன்புடன்,

 

குக்கூ குழந்தைகள் வெளி

முந்தைய கட்டுரைகுக்கூ- உரையாடல் அறிவிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25