வேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்

 

வேட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

வேட்டு கதையை வாசித்தேன். இன்றைக்கு உலகம் முழுக்க இலக்கிய எழுத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். திரில்லர், டிடெக்டிவ் எழுத்துக்களின் பாணியில் எழுதப்படும் இலக்கியப்படைப்புக்கள். அவை உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமானது முன்புபோல மெட்டிக்குலஸ் டீடெயில்கள் உள்ள ரியலிஸ்டிக் கதைகளை இன்றைக்கு கூர்ந்து வாசிக்க எவருக்கும் பொறுமை இல்லை என்பது. அந்தவகை எழுத்து ஒருவகை பேட்டர்னுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது.  இன்னொன்று இந்தவகையான கதைகளுக்கு மனித மனதுக்குள் ஆராய்ந்து போகவோ அல்லது பண்பாட்டின் ஒரு மர்மத்தை ஆராயவோ நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பது. அப்படி ஆராயும் படைப்புக்களுக்கு ஒரு பெரிய மதிப்பு உருவானது

 

அமெரிக்க எழுத்திலே 1980 வாக்கில் எடித் வார்ட்டன் ஒருமாதிரி மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு மேலே வந்தார். அதன்பிறகுதான் இந்தவகையான எழுத்தின் இலக்கியமதிப்பு பற்றிய ஒரு எண்ணம் உருவானது. ஸ்டீஃபன் கிங்குக்கு விருது அளிக்கப்பட்டதும் ஹரால்ட் ப்ளூம் அதை கடுமையாகச் சாடினார். அதை ஒட்டி ஒரு விவாதம் உருவானது. அதன்பிறகுதான் இந்தவகையான எழுத்தின் உண்மையான இலக்கிய மதிப்பு என்ன என்ற பேச்சு எழுந்துவந்தது. இன்றைக்கு அதைப்பற்றிய ஒரு தெளிவு உருவாகி இருக்கிறது. எல்லா டிடெக்டிவ் – திரில்லர் நாவல்களும் இலக்கியம் அல்ல. அவை ஒருவகை விளையாட்டுக்கள். ஆனால் வாழ்க்கையின் மனுஷ மனசின் ஆழங்களுக்குச் சென்றுவிட்டால் அது இலக்கியம். ஷெர்லக் ஹோம்ஸ் இலக்கியம். அகதா கிறிஸ்டி இலக்கியம் கிடையாது

 

எல்லாமே புனைவுகள்தான். ரியாலிட்டி என்று ஒரு இலக்கியம் உருவாக்குவதும் சரி ஒரு துப்பறியும் கதை உருவாக்கும் புதிர்களால் ஆன பரப்பும் சரி புனைவுகள்தான். எதற்கும் அந்தஸ்து என்று ஏதுமில்லை. வாசிக்கவைப்பதும் சென்றடைவதும்தான் முக்கியம். அப்படிப்பார்த்தால் தமிழில் இந்தவகைக்குள் சொல்லும்படி எதும் எழுதப்படவில்லை. இலக்கியத்திற்குள் குற்றம் – விசாரணை என்பதே பெரும்பாலும் இல்லை. இந்தக்கதைகளில் விளையாட்டுத்தனமான கதைசொல்லும் முறைக்கு அடியிலுள்ள இன்வெஸ்டிகேஷன் மிக முக்கியமான கதை உத்தி. அந்த இன்வெஸ்டிகேஷன்கூட முழுக்கமுழுக்க மனித மனதில் உள்ள இயல்புகளின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதன் வழியாக வாழ்க்கையின் சித்திரம்தான் உண்டுபண்ணப்பட்டு ஓர் ஆழம் தொட்டுக்காட்டப்படுகிறது. வாழ்த்துக்கள் ஜெ

 

சந்திரசேகர்

வணக்கம் ஜெ…

 

வேட்டு சிறுகதையை வாசித்தேன்.

 

பசியால் துயருற்றுச் சாக வேண்டும் அல்லது சர்க்கசில் உடல் வளைத்துப் பயிற்சி செய்து இறுதியில் காமமே மிஞ்சும் சதைப் பிண்டமாக எஞ்ச வேண்டும். இந்தத் தெரிவில் தந்திரம் கையாண்டு இக்கட்டான சூழலிருந்து வெளிவரும் இரு பெண்களைப் பற்றிய கதை. அதிலிருந்து விடுபடவேண்டுமென்றாலும் காமமே தேவைபடுகிறது. வேலாயுதனன் முதலாளியிடம் வித்தை கற்றுக் கொள்ளவும்  பார்வதி பாஸ்கரனிடமுமென காமமே வாழ்வை முன்னகர்த்துகிறது.

 

அரவின் குமார்

மலேசியா

 

 

வேரில் திகழ்வது [சிறுகதை]

ஜெ

 

மன அழுத்தம் மிக்க பேரழிவை எதிர் நோக்கும் இந்த வேளையில், மனதை இலகுவாக்கும், சுவாரசியம் மிகுந்த, கொண்டாட பட வேண்டிய, அருமையான சிறு கதைகள். வாழ்த்துக்கள்

ஜேசு மார்ட்டின்

 

அன்புள்ள ஜெ

 

வேரில் திகழ்வது அழகான கதை. ஒரு மென்மையான அப்பா மகள் கதையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் சம்பந்தமில்லாத ஓர் இடத்தில் தொடங்கி துப்பறியும் கதையாக நீண்டு நீண்டு வந்து முடிகிறது. அந்த விளையாட்டு அந்த அப்பா மகள் கதையை கூர்மையாக ஆக்குகிறது. பிரம்மாண்டமான ஒரு கட்டமைப்புக்குள் அதைப் பொருத்துகிறது. மங்களூரின் அரசியல் – பொருளாதாரச் சூழல், இயற்கை அமைப்பு அதில் அந்தக்கதை வந்துசேரும் விதம். ரொஸாரியோவின் மொத்த வாழ்க்கை எல்லாமே கதையில் அற்புதமாக அமைந்துள்ளன. குரு சிஷ்ய உறவில் குருவை சிஷ்யன் வென்று ஈக்லிப்ரியம் உருவானதுமே உருவாகிவிட்ட நெருக்கம் அழகாக உள்ளது

 

சித்தன் ரமேஷ்

 

அன்புள்ள ஜெ

 

வேர்களில் திகழ்வது என்பது அன்புதான். அதுதான் மலர் கிளை எல்லாமே. ஆனால் வெளியே தெரியாது. மண்ணிலே பரவி ரகசியமாக நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கும். அதை பார்க்கவே முடியாது அந்த அன்பின் கதை அது

 

அந்தக்கதையிலுள்ள முரண்பாடு ஆச்சரியமானது. எல்லாருமே கொஞ்சம் கொஞ்சம் தீமைகள் கொண்டவர்கள். ஔசேப்பச்சன், ரொசாரியோ எல்லாருமே. முழுத்தீமை கொண்டவர்களும் இருக்கிறார்கள். ராகேல் மட்டும் நன்மையே உருவானவளாக தீமையே இல்லாத தேவதையாக இருக்கிறாள்

 

மாரிச்செல்வம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25
அடுத்த கட்டுரைஇடம்,பெயர்நூறான் –கடிதங்கள்