சுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

 

 

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

பொலிவதும் கலைவதும் கதை மனதை ஆழமான ஓர் உணர்வை நோக்கிச் செலுத்தியது. காதல் என்ற உணர்வைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது பல்ப் ஃபிக்‌ஷனுக்குரிய மெட்டீரியலாக ஆகிவிட்டது. ஆகவே இலக்கியத்தில் அதைப்பற்றி எழுதுவது இல்லாமலாகிவிட்டது. ஆனால் இலக்கியத்தில் என்றென்றும் காதல் பேசப்படும். காமத்தைவிடவும்கூட பேசப்படும்.

 

ஏனென்றால் சாவு போல காதலும் ஒரு தீர்க்கமுடியாத மானுடப்பிரச்சினையை பேசுகிறது. ஒரு ஆணும்பெண்ணும் எப்படி கண்டடைகிறார்கள் எப்படி பிரிகிறார்கள் என்ற மர்மம் எப்போதுமே வாழ்க்கையில் உள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது காமம் ரொம்பவே சாதாரணமானது. எழுதினால் அதில் திரும்பத்திரும்ப சிலவிஷயங்கள்தான். காதல் அப்படி அல்ல. அது வேறு எவ்வளவோ விஷயங்களுக்கான குறியீடு. ஆழ்வார்கள் கூட காதல்பற்றி எழுதியிருக்கிறார்கள்

 

பொலிவதும் கலைவதும் என்ற வரியே அது காதலைப்பற்றிய கதை அல்ல என்று சொல்லிவிடுகிறது. அது வாழ்க்கையென்ற கனவைப்பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக வரைந்து எடுத்த ஓவியம். அப்படியே கலைந்து வண்ணங்களாக மாறி மறைகிறது. தவிர்க்கவே முடியாதது. எல்லா வர்ணங்களும் இருட்டில் சென்று மறைந்துவிடுகின்றன. அங்கே அமர்ந்திருக்கிறாள் தேவி. வண்ணங்களெல்லாம் அவள்தான். பொலிவதும் மறைவதும் அவளேதான்.

 

எஸ்,ஆர்

 

 

ஜெ

 

பொலிவதும் கலைவதும் ஆரம்பம் முதலே ஒரு மையத்தை நோக்கி செல்கிறது .பின் பூரணம் ஆகி கலைகின்றது .களமெழுத்துபாட்டு பற்றிய சித்திரம் நானே நேரில் பார்ப்பது போல உள்ளது .நிறக்கலவைகள் முதற்கொண்டு அழிவது வரை ,தோரணம் முதற்கொண்டு திருநடை சாத்துவது வரை மிக நுட்பமாக காட்சிப் படுத்தி உள்ளீர்கள்.
நீ இந்தத் தருணத்தை எப்படிக் கடக்கிறாய்?-ரொம்பநேரம் திரும்ப திரும்ப வாசித்தேன் .
அதை நெற்றியில் இட்டுக்கொண்டாள். நான் வெறுமே தொட்டுக்கொண்டேன்-இதிலுள்ள வேறுபாடு வெறுமே என்கிற சொல் நிறைய குறிப்புகளை உணர்த்தியது .
சென்று மறைந்தபின்னரும் நெடுநேரம் செவிகள் கூர்கொண்டிருந்தன.-இதே போன்ற ஒரு அனுபவத்திற்காகத்தான் களப்பாட்டு முடிந்து பின்னும் அவன் அங்கேயே தங்கி விடுகிறானோ ?

விவரிக்காத இடங்களில் ,விடுபடல்களில்  இருந்து ஒரு பேருரு எழுகின்றது.
இந்த சவாலான கால கட்டத்தில் இந்த தொடரில் உள்ள அனைத்து கதைகளும் படித்து விடுகிறேன் .மனம் ஒரு சமநிலையில் உள்ளது.

குமார் சண்முகம்

 

சுற்றுகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

நான் நீங்கள் எழுதும் இந்த தொழில்நுட்பம் சார்ந்த உலகில் பணியாற்றியவன். நான் ஆச்சரியமாக நினைக்கும் ஒருவிஷயம் உண்டு. ஒரு தொழில்நுட்பம் அவுட் ஆஃப் டேட் ஆனதுமே அது குறியீடாக ஆகிவிடுகிறது. அதை கவிதையாக எழுதமுடிகிறது. நான் ஜின்னிங் மிசின்களைப்பற்றி இப்படி உணர்வது உண்டு

 

அந்தக்கதையில் சர்க்யூட் என்ற விஷயம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொடுகிறார்கள். அது அவர்கள் மட்டும் தொடுவது அல்ல. அவர்களை இணைப்பது டெலிபோன் எக்ஸேஜ் என்னும் அமைப்பு அது வானத்தையும் மண்ணிலுள்ள கோடிக்கணக்கானவர்களையும் இணைக்கிறது. ஒரு காதல் என்பது ஆணும்பெண்ணும் சந்திப்பது. உலகமே அவர்கள் வழியாக சந்தித்துக்கொள்வது. ஒரு சர்க்யூட் பூர்த்தியாகிறது. அவர்கள் வழியாக அது வட்டம் முழுமை ஆகிறது

 

ஜின்னிங் மிஷின்கள் இந்த உலகத்தை நெய்கின்றன என்று நான் ஒரு கவிதை முன்பு எழுதியிருக்கிறேன்

 

செந்தில் கணேஷ்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

கொஞ்சம்கூட கற்பனாவாதமே இல்லாமல் எழுதப்பட்ட காதல்கதை சுற்று. ஆச்சரியம்தான். அதற்கு முன்னால் வந்த கதை அப்படியே கற்பனாவாதத்தில் முக்கியது. நஸ்டால்ஜியா. உணர்ச்சிகள். கலை. சங்கீதம். கனவு எல்லாமே உண்டு. இதில் ஒன்றுமே இல்லை. டெக்னிகாலிட்டி மட்டும்தான். ஆனால் கொஞ்சம் சிம்பாலிக்காக வாசித்தால் கதை மிக அழகாக ஆகிவிடுகிறது. இதுவும் ஒருவகை அழகியல்தான் என நினைக்கிறேன்

 

அவனுடைய காதலுணர்வு பரவசம் புல்லரிப்பு எல்லாமே டெக்னிக்கலாகவே இருக்கிறது. கரெண்ட் ஷாக் வழியாகவே அதெல்லாம் சொல்லப்படுகிறது. அவன் அவளுடன் இணைகையில் உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் மின்சாரம் அவர்கள் வழியாக பாய்ந்து ஒரு சர்க்யூட் முடிவடைகிறது. யோசித்துப்பார்த்தேன். அப்போது அவர்களின் உடல்வழியாக ஆயிரக்கணக்கானவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் இல்லையா?

 

மாதவன்

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாப்பாவின் பீயாத்து