பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் கதையை ஆழ்ந்த மனநிலையுடன் வாசித்தேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையை அது காட்டியது. இன்றைக்கு முப்பது வயதானவர்களில் ஒருசாராருக்கு அந்த அனுபவம் இருக்கும். மீண்டும் சந்திப்பது மிகமிக துன்பமான ஒன்று. ஆனால் அதை தவிர்க்கமுடிவதும் இல்லை. ஏனென்றால் அதை நாடியே செல்கிறோம். துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்வது போன்ற அனுபவம் அது. ஆனால் அது ஒரு இன்பமாக நினைவில் மாறிவிடுகிறது. அந்த இன்பத்துக்காக அந்த தருணத்தின் துன்பத்தை தாங்கிக்கொள்கிறோம்
பெரும்பாலும் இந்தச் சந்தர்ப்பங்களில் பயங்கரமாக ஈகோ அடிபடுவது இரண்டு விஷயங்களால் என்பது என் அனுபவம். ஒன்று, நம்மை விட அவளுக்கு வேறு சில விஷயங்கள் முக்கியமனாவை என்று தெரியவரும். அதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது நம்மை எரிய வைக்கும். இன்னொன்று அவள் ஆளே இன்னொருவளாக மாறியிருப்பாள். பொலிவு கூடியிருக்கும். இன்னமும் பிராக்டிக்கலாக ஆகியிருப்பாள். அதை நம்மால் தாங்கமுடியாது. அவளே நம்முடைய கனவுகளை அழிப்பதுபோல தோன்றும்.
கொடுமையான அனுபவம். கூடவே இனிமையான அனுபவம். அந்த இனிமையும் கொடூரமும் அந்தக்கதையிலே உள்ளது. பகவதி என்றால் கொடுமையும் அருளும் கலந்த தெய்வம். படிக்கப்படிக்க கவிதைபோலவே வளரும் கதை இது. நன்றி ஜெ
அருண்
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் தலைப்பே ஒரு கவிதை. பொலிந்து பிறகு கலைந்தே தீர்வது. கலைந்தாகவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சுந்தர் மனதில் ஒரு பெண் உருவம் உருவாகிறது. தெய்வத்தின் உருவம் அது. அவளுடைய உருவம். அதை அந்த தெய்வமே சன்னதம் வந்து அழித்துவிடுகிறது. அந்த வண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து ஓவியம் உருவாகிறது. கலைந்து மீண்டும் வண்ணங்களாகவே எஞ்சிவிடுகின்றன. வண்ணங்களில் இருந்து ஓவியம் வரும். கலைந்த வண்ணங்களிலிருந்து ஓவியம் திரும்ப வராது. நினைவுகள் மட்டும்தான் மிஞ்சும்
கே.
வேரில் திகழ்வது [சிறுகதை]
ன்புள்ள ஜெ
வேரில் திகழ்வது கதையை வெவ்வேறு கட்டங்களில் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன். என் சொந்தத்தில் ஒருவருக்கு மகள் இதேபோல இருக்கிறாள். ஒருமுறை அவர் சொன்னார். அவருடைய பிற இரண்டு மகள்களிடமும் இல்லாத அன்பை இவளிடம் பெறுவதாக. ஆச்சர்யமாக இருந்தது. கம்பாஷன் என்பது ஓர் அறிவார்ந்த விஷயம் இல்லை. அது பரிணாமத்தில் உருவாகி வந்த ஒரு பயாலஜிக்கல் ஃபாக்கல்டி என்ற என்ணம் எனக்கும் உண்டு. மிருகங்களிடமும் அது உள்ளது. அது வெறுமே சர்வைவலுக்காக இல்லை. அதுதான் பூமியை இணைத்திருக்கிறது
அந்தக்கதையின் அடிப்படையான முடிச்சை, அல்லது விஷனைச் சொல்லும் வரி ஒரு கேலிபோல கதைக்குள் குமாரன் மாஸ்டரால் சொல்லப்படுகிறது. இந்தக்கதைகள் அனைத்திலுமே இந்த வகையான அமைப்புதான் இருக்கிறது. கதைகளின் அமைப்பில் எங்கோதான் நாம் தொடவேண்டிய மையம் உள்ளது. இந்தக்கதைகள் இப்படி தொடர்ச்சியாக வெளியாவதும் தொடர்ச்சியாக வாசிப்பனுபவங்கள் வருவதும் ஒரு பெரிய இலக்கியப் பயிற்சியாக உள்ளன
எஸ்.ப்ரியா
அன்புள்ள ஜெ
வேரில்திகழ்வது கதையின் அடிப்படை ஒருவர் சொல்லும் கதை. ஆனால் உண்மையில் அது ஒரு துப்பறியும் கதை. ஒரு சிறந்த துப்பறியும் கதையின் பல அம்சங்கள் கதைக்குள் வந்துகொண்டே இருக்கின்றன. பெரிய நிபுணர்கள் எவரிடமோ நீங்கள் பேசியதுபோல. அதவது போலீஸின் எண்ணிக்கை பலம் எப்படி பயன்படுகிறது என்பது. போலீஸ் எப்படியெல்லாம் வலைவீசித்தேடும் என்பது. ஒரு குற்றத்தை எப்படியெல்லாம் அவர்க்ள் வரையறைசெய்துகொள்கிறார்கள் என்பது
கதைநடக்கும் களம் அழகாக மனதில் வருகிறது. மங்களூரின் கடலோரம் சென்று தங்கவேண்டும் என்ற ஆசை மனதில் எழுகிறது
செல்வன் குமார்