பகுதி நான்கு : அலைமீள்கை – 6
தந்தையே, விருந்து முடிந்து வெளிவந்த கணம் அனைத்தும் ஒரு இளிவரல் நாடகமென எனக்குத் தோன்றியது. நான் அந்நிகழ்வை ஒரு ஏமாற்றுவித்தை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கணிகரை நான் முன்னரே செவிச்செய்தியென அறிந்திருந்தேன். அஸ்தினபுரியில் சகுனியின் அணுக்கராக இருந்தவர். அங்கு அனைவராலும் வெறுக்கப்பட்டவர். தீங்கே உருவானவர் என்று அவரை சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன். ஆயினும் அத்தனை தொலைவு கடந்து அவர் வந்தது வெறுமனே அடைக்கலம் தேடித்தான் என்று அப்போது நம்பினேன்.
இன்று அறிகிறேன், அவர் இத்திள் செடிகளைப்போல ஒட்டி உயிர்வாழ்பவர். பூசல்களில் மட்டுமே அத்தகையோரை மனிதர்கள் விரும்புகிறார்கள். அமைதிக் காலங்களில் அத்தகையோரின் இடம் குறுகிக் குறுகி சிறிதாகிறது. ஆகவே நோயுற்ற உடலை தேடிச்செல்லும் ஊனுண்ணிப் பறவைகள்போல் அவர்கள் உளமுறிவுகளும் பூசல்களும் நிறைந்த நாட்டை நண்ணுகிறார்கள். ஆயினும் அவரால் என்ன செய்துவிட முடியுமென்று அப்போது தோன்றியது. அவர் தன் திறனால் ஏற்கெனவே அங்கு உருவாகியிருக்கும் உட்பூசல்களிலும் சிடுக்குகளிலும் ஒருவருக்கொருவர் மிகைகூறி, புறம்கூறி, உணர்வுகளை எழுப்பிவிட்டு, சற்றே சீண்ட முடியும். ஒருவேளை மேலும் சற்று பூசல்களை நிகழ்த்திக் காட்ட முடியும். ஆனால் அரசாடலில் அதற்கு பெரிய இடமில்லை என நினைத்தேன்.
அஸ்தினபுரியில் அவர் வென்றதென்பது அது அரசாடல் என்பதைக் காட்டிலும் ஒரு சிறு குடிக்குள் நிகழ்ந்த பூசல் என்பதனால்தான். அங்கே அனைத்து எதிரெதிர் முகங்களும் தெளிவாகி நின்றிருந்தன. துவாரகையில் எழுந்து நின்ற பூசல் குருக்ஷேத்ரப் பெரும்போருக்குப் பின் பாரதவர்ஷம் முழுக்க முளைத்து முனைகொண்ட உண்மையான கோன்மைப் பூசலின் துளிவடிவு என்றனர் அரசறிந்தோர். ஷத்ரியரும், அசுரரும், அவர்களுக்கு நடுவே புத்தரசுகள் நிறுவிக்கொண்ட பிற குடியினருமாக மூன்று அணிகள் ஒவ்வொரு நிலத்திலும் இருந்தன. திருவிடத்திலும், தெற்கிலும், புதிதாக உருவாகி வந்த கிழக்கு நிலங்களிலும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த பூசல் அதுவே. ஆகவே கணிகருக்கு இங்கு ஆற்றுவதற்கு எதுவுமில்லை என்று எண்ணிக்கொண்டேன்.
அதைவிட ஒன்று இருந்தது என நான் உணர்ந்தது மிகப் பல நாட்கள் கடந்தே. கணிகர் என் ஆணவத்தையே முதலில் சீண்டினார். தன்னை அவ்வண்ணம் அவர் முன்வைத்தமையாலேயே நான் அவரை குறைத்து மதிப்பிட்டேன். என் ஆணவத்தை மிகையாக்கிக்கொண்டேன். நான் நஞ்சு, முடிந்தால் என்னை கையாள்க என்று அவர் அறைகூவினார். அந்த அறைகூவலை இயல்பாகவே நான் ஏற்றுக்கொண்டேன். அவருடைய நஞ்சை என் படைக்கலமாகக் கொள்ளலாம் என்று அவரே சொன்னார். அப்போதே அவரை என் படைக்கலம் என எண்ணத் தலைப்பட்டேன். மிகமிக சொல்சூழ்ந்து அவர் எனக்கு அந்தத் தூண்டிலை போட்டார் என நான் உணர்ந்தது காலம்கடந்த பின்னர். தந்தையே, அவர் நம்மை கொட்டிவிட்டு நாம் துடித்து கதறி ஓடிச்சென்று ஓய்வுகொள்ளும் இடத்திற்கு முன்னரே சென்று நின்றிருக்கிறார்.
என் அறைக்குச் சென்று, களைத்து மஞ்சத்தில் விழுந்து அவ்வண்ணமே துயின்று, புலரியில் எப்போதோ விழித்துக்கொண்டபோது அறைக்குள் கரிய நிழலென கணிகரே இருப்பதுபோல் உணர்ந்தேன். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து அவ்வுணர்வை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். அத்தனை ஆழமாக அவர் எனக்குள் ஊடுருவியிருக்கிறார். நான் அவரை எண்ணிக்கொண்டிருந்திருக்கிறேன். துயிலில் கனவில் கூட அவர் என்னுடன் இருந்திருக்கிறார். மெய்யாகவே! அன்று பகல் முழுக்க நான் அவரையே நினைத்துக்கொண்டிருந்தேன். அன்று மாலை உணர்ந்தேன், ஒருகணம் கூட அவரை எண்ணாமல் நான் இருக்கவில்லை என்று. அந்த ஆட்கொள்ளலை எண்ணி எரிச்சலுற்றேன், சீற்றம்கொண்டேன், பின்னர் அஞ்சினேன். அஞ்சும் எதையும் அகற்ற முனைகிறோம், இல்லையென்று எண்ண விழைகிறோம்.
அவரிலிருந்து அகன்று செல்லும்பொருட்டு அரண்மனையிலிருந்து கிளம்பி இரு தோழர்களுடன் கடலாடச் சென்றேன். உட்கடலில் அலைகளில் எழுந்தமைந்துகொண்டிருந்தபோது கூட அவர் நினைவு என்னுடன் எழுந்தலைந்துகொண்டிருந்தது. தந்தையே, நான் எளிதாக, இயல்பாக இருப்பது கடல் அலைகளின்மேல் நீந்திக்கொண்டிருக்கையிலேயே. அங்கும் அவர் உடனிருந்தார். அவரை என்னால் தவிர்க்க இயலாது என்று அறிந்தேன். எனில் அவரிடமிருந்து முற்றாக விலகிச் செல்வது ஒன்றே வழி. அவர் என்னிலிருந்து எதிர்பார்த்த எதையும் நான் செய்யாமலிருக்கலாம். என்னிலிருந்து அவருக்கு எந்தக் கருவியையும் அளிக்காமலிருக்கலாம். நான் செய்யக்கூடுவது அது ஒன்றே.
அதை எண்ணிச்சூழ்ந்தேன். மூத்தவரின் ஆணையை கேட்டுப்பெற்று எல்லைப்புறக் காவல்நிலை ஒன்றை நோக்கி மறுநாளே கிளம்பினேன். துவாரகையிலிருந்து ஏழு நாட்கள் பயணம் செய்து சிந்துவின் கரையில் அமைந்திருந்த அக்காவல்கோட்டையை சென்று சேர்ந்தேன். முன்பு அது செங்கல்லால் கட்டப்பட்ட எட்டடுக்குக் காவல்மாடம் மட்டுமாக இருந்தது. பின்னர் அதை ஒட்டி இல்லங்கள் அமைந்தன. காவலர் தங்குமிடங்களும், ஒரு சிறு சந்தையும் படகுத்துறையும் உருவாயின. அங்கே சிறுவணிகர்கள் வந்து செல்லத்தொடங்கினர். சூழ்ந்திருக்கும் பாலைநிலத்து மக்கள் அங்கே வணிகம் செய்ய வந்தனர். அவர்களில் சிலர் அங்கே குடியேறினர். அது ஒரு சிறு ஊராக மாறியது. மணற்காற்று சூழ்ந்து வீசும் தனிச்சிற்றூர். உலகுடன் தொடர்பில்லாது நுனிக்கிளையில் காய்த்துத் தொங்கும் காய்போல துவாரகையில் இணைந்திருந்தது.
ஊர்த்தலைவன் மூர்த்தன் என்னை வரவேற்று அங்குள்ள சிறுமாளிகையில் தங்க வைத்தான். அங்கு நான் பன்னிரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு செல்லும்போது உள்ளம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் அக்கொந்தளிப்பு அடங்கியபோது ‘என்ன மூட எண்ணம் இது!’ என்று எனக்கு நானே வியந்துகொண்டேன். உண்மையில் அப்படி என்ன நிகழ்ந்தது? உடலொடிந்த முதியவர், அந்தணர், என்னிடம் சில சொற்களை சொல்லியிருக்கிறார். அதை அப்படியே நம்பி சொற்பொருளென எடுத்துக்கொண்டு நான் உளம் குழம்பி இருக்கிறேன். அதை என் அச்சத்தால் பேருருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அவரை அஞ்சி வந்திருக்கிறேன் எனில் அவர் நோக்கத்தை அவர் வென்றுவிட்டார் என்றே பொருள்.
அவர் என்னை அவ்வண்ணம் உளம் குழம்ப வைப்பதையே அந்த உரையாடலின்போது தன்நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம். அவர் அந்த அவைக்கு வந்தபோது அவரை எவரும் எதிர்கொள்ளவில்லை. அவரை மறந்துவிட்டிருந்தனர். அரசவரவேற்பென ஒரு சொல்கூட கூறப்படவில்லை. தெளிந்த போதத்துடன் அவருடன் சொல்லாடும் நிலையில் அங்கு இருந்தது நான் மட்டுமே. எனவே அவர் என்னிடம் பேசினார். என்னிடம் ஒரு ஆழ்ந்த பதிவை உருவாக்க நினைத்தார், அதை உருவாக்கியிருக்கிறார். சிறுமைசெய்யப்பட்டதாக உணர்பவர்கள் தங்களைத் தாங்களே பெருக்கிக் கொள்வார்கள். தங்களுக்குள்ளேயே அறைகூவல் விடுப்பார்கள், பெருமிதம் கொள்வார்கள், வஞ்சினம் பூணுவார்கள். அரிதாக எதிரில் ஒருவன் சிக்கிவிட்டால் அவனிடமே அதை சொல்வார்கள்.
அது இயல்பே. பெருவிருந்துகளில் தங்களை பொருட்படுத்தும்படியானவர்களாக உணராதவர்கள் இவ்வண்ணம் சிலவற்றை செய்வதை நான் கண்டிருக்கிறேன். அங்குள்ள எவரேனும் ஒருவரை பற்றிக்கொண்டு அவரிடம் மிக எடைமிக்க சிலவற்றை சொல்வார்கள். ஆழ்ந்த மந்தணங்களையோ வஞ்சகங்களையோ சூழ்ச்சிகளையோ பற்றி விவரிப்பார்கள். சில தருணங்களில் நோயுற்றவர்கள்போல் நடிப்பதுண்டு. கீழே விழுந்து வலிப்பு வந்து எழுந்து துடித்த ஒருவரை நான் கண்டிருக்கிறேன். உணவுத்தட்டுகளை கீழே போடுவது, மங்கலமின்மையைக் காட்டும் சொற்களை கூறுவது, தன்னைத்தானே இளிவரலாக்கிக் கொள்வது எல்லாம் வழக்கம்தான்.
விருந்துகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் நிறுத்துகின்றன. தங்கள் இடம் எது என்று ஒவ்வொருவரும் விருந்தில் நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு விருந்தில் எவராலும் கவனிக்கப்படாதிருப்பது என்பது சாவுக்கு நிகரானது. அவ்வண்ணம் சிலர் விருந்துகள் முடிந்து உளம் அழிந்து பிணங்கள்போல் துயில்வதை பார்த்திருக்கிறேன். சிலர் அங்கிருந்து எழுந்துசெல்கையில் பெருவஞ்சமும் நஞ்சும் நிறைந்தவர்களாக ஆவதைக்கூட கண்டிருக்கிறேன். அன்று அவரில் எழுந்த ஒரு துளி நஞ்சை எனக்கு காட்டினார். அதன் பொருட்டு நான் துயர் கொள்ளலாகாது.
நான் என்னை மெல்ல மெல்ல அடங்கச் செய்தேன். என்ன செய்வதென்பதை எண்ணி அடுக்கத் தொடங்கினேன். என்னை நோக்கி நானே சிரித்தேன். எவரோ ஓர் அந்தணன் எங்கோ சொன்ன ஒற்றை வரிக்காக அனல்பட்ட பூனையென அஞ்சி பதறி வந்து ஒளிந்து உலகை நோக்கிக்கொண்டிருக்கும் சிற்றுயிர். என் ஆற்றல் கூர்மை எல்லாம் அவ்வளவுதானா? மெய்யாகவே என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொண்டிருந்திருக்கிறேன்?
இத்தனை நாள் அரசகுடிப் பிறப்பின் அடுக்கில் உடன்பிறந்தார் நிரையில் மிகக் கீழென அடுக்கப்பட்டவன். மேலுள்ள எடையனைத்தாலும் எடையென அழுத்தி வைக்கப்பட்டவன். எழ வாய்ப்பே அற்றவன். ஆனால் எவரை விடவும் திறமைகள் கொண்டவன். கடலாடுபவன், சுழற்பாதையில் விசைப்புரவி ஓட்டுபவன், இவர்கள் அனைவரும் எண்ணிக்கூட இருக்காத நூல்களை எழுத்தெண்ணிப் பயின்றவன், சொல்சூழத் தெரிந்தவன். ஆனால் எந்த அவையிலும் என் சொல் எழுந்ததில்லை. எனினும் அங்கு எவர் பேசும் சொற்களைவிடவும் கூரிய சொற்கள் என்னுள் ஒலித்துக்கொண்டுதான் இருந்திருக்கின்றன.
என்றோ ஒருநாள் எழுவேன் என்னும் கனவே அதுவரை என்னை கொண்டுசென்று நிறுத்தியது. எட்டாவது மைந்தராகிய என் தந்தை எழவில்லையா எனும் சொல்லே எனக்கு ஊக்கமளித்தது. ஒருநாள் ஒருநாள் என்று ஒவ்வொரு தருணத்திலும் வஞ்சினம் உரைத்து அதை கடந்து வந்திருக்கிறேன். இங்கிருக்கிறேன், அறிக உலகே என்று நெஞ்சு வெடிக்க இவ்வுலகை நோக்கி கூவிக்கொண்டிருந்தவன். உண்மையில் துவாரகையை முழுதாளும் தகைமை கொண்டவன் நான் ஒருவனே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒருநாள் என் சொல்லை, என் ஆற்றலை இந்நகர் அறியும். இக்குடிகள் திரண்டு வந்து தன் தலைவனென என்னை ஏற்றுக்கொள்வார்கள். என்னை இவர்களே அரியணையில் அமரவைப்பார்கள். என் குலமும் எனக்கு அடிபணியும். என் கோல் இங்கு நிற்கும்.
உண்மையில் அங்கும் என் கனவுகள் நின்றுவிடவில்லை. நான் அஸ்தினபுரியை வெல்வேன். பாரதவர்ஷத்தை வெல்வேன். மும்முடி சூடி இப்பெருநிலம் மீது விண்ணவனுக்கு நிகராக அமர்ந்திருப்பேன். இக்குடிவழிகளின் குருதியில் அழிவின்மை கொள்வேன். சூதர்கள் சொல்லில் விண்ணவன் என எழுவேன். எழும் தலைமுறைகளில் ஆலயங்களில் தெய்வமென அமர்ந்திருப்பேன். எத்தனை ஆணவம்! நுரைத்து நுரைத்து புளித்தெழும் ஆணவம்போல் இனிய மது மனிதனுக்கு பிறிதொன்றில்லை. அத்தகைய நான் இதோ அஞ்சி அமர்ந்திருக்கிறேன்.
எவரென்றே அறியாத முதியவர் அரை நாழிகைப்பொழுது பேசியபோது நான் அஞ்சியது எதை? நான் அஞ்சியது ஒன்றைத்தான். அத்தனை பெருந்திரளில் ஒருவராலும் தனித்தறியப்படாதவனாகிய என்னிடம் மிகச் சரியாக சொல்லெடுத்த கூர்மையில் அவர் எளியவரல்ல என்று கண்டுகொண்டேன். என் உடன்பிறந்தார் அனைவரும் என்மேல் அடுக்கப்பட்ட போர்வைகள்போல. அடியில் ஒளிந்திருந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தேன். இளிவரலுடன், வஞ்சத்துடன், விழைவுகளுடன். ஆனால் எந்தத் தடையும் பொருட்டின்றி நேராக வந்து என்னைத் தொட்டு எழுப்பி என் விழிநோக்கி அவர் பேசத்தொடங்கினார். தன் மேலிருந்த மறைப்பு விலக்கப்பட்டு பகல் வெளிச்சத்தில் வந்து நின்ற சிற்றெலிபோல் நான் ஆனேன்.
என்னை அவர் கண்டடைந்தது என்னை அச்சுறுத்தியது. அவர் என்னிடம் பேசிய ஒவ்வொரு சொல்லும் என்னை மீறியே வளர்ந்தது. அங்கு அந்த ஒவ்வாமையுடன் என்னால் வெறுமனே அமர்ந்திருக்க இயலவில்லை. புரவியில் சென்று சிந்துவின் கரையினூடாக நீள்பயணங்கள் செய்தேன். பாலையில் நெடுந்தொலைவு சென்று நீரின்றி தவித்து இறப்புக்கு முந்தையகணம் என இடர்கொண்டு மீண்டு வந்தேன். என் உடலிலுள்ள ஆற்றல் அனைத்தையும் அள்ளி அள்ளி வெளியே இறைத்தேன். என் இறுதி எல்லைகளை கண்டபின்பே திரும்பினேன். அவ்வாறு என்னை நானே தேற்றிக்கொண்டேன். உடல் ஆற்றலை அள்ளி வீசுந்தோறும் உள்ளத்தின் ஆற்றல் மேலும் ஊறுகிறது என்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன்.
பின்னர் அக்கோட்டைமேல் அமர்ந்து தொலைவு வரை செந்நிற அலைகளாக எழுந்து சென்று வானைத் தொட்ட பாலை நில விரிவை பார்த்துக்கொண்டிருந்தபோது எண்ணிக்கொண்டேன், என் அல்லல்களில் இருந்து தப்ப ஒரே வழிதான் உள்ளது. ஆம் எனும் ஒரே சொல். ஆம், நான் இவ்வண்ணம் இங்கிருக்கிறேன். நான் வஞ்சமும் விழைவும் கொண்டவன். நான் காத்திருக்கும் ஒரு கரவுப்படைக்கலம். அதை இந்த நாள் வரை எவரும் அறியாமல் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எவரேனும் ஒருவர் அறிந்தாகவேண்டும். அதை நானே அறிவிப்பதைவிட மிகச் சரியாக இன்னொருவர் அறிந்துகொண்டது நன்று. அவ்வண்ணம் ஒருவர் சொல்லாமலே அறிந்துகொள்வாரெனில் அதன் பொருள் நான் முற்றாக திரண்டுவிட்டேன் என்பதுதான்.
படைக்கலம் முற்றாக கூர்கொண்டுவிட்டது. அது உண்மையில் எனக்கு நம்பிக்கையை அல்லவா அளிக்கவேண்டும்? நான் யாரென்று எனக்கு அது காட்டவேண்டுமல்லவா? இனி முற்றாக மறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. குறைந்தது கணிகரிடமாவது நான் யாரென்பதை காட்டலாம். அது அளித்த விடுதலையை எண்ணிப்பார்த்தபோது உள்ளம் ஆறுதல் கொண்டது. எரியும் வெயிலில் ஒன்றுக்கு மேல் ஒன்றென அணிந்த ஆடைகளனைத்தையும் களைந்து இளங்காற்றில் நின்றதுபோல. அந்தத் தருணத்திலிருந்து மிக எளிதாக முடிவெடுத்தேன். ஒன்றுக்கு மேல் ஒன்றென தொட்டுத் தொட்டுச் சென்று ‘ஆம், இதுவொன்றே வழி’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டேன்.
கணிகரிடமே திரும்பிச்செல்வதுதான் செய்யவேண்டியது. ஆம் கணிகரே, நீங்கள் எண்ணியது சரிதான். என் நோக்கம் அதுதான். எனக்கு உதவுங்கள். நீங்கள் யாரென்று நானும் கண்டுகொண்டுவிட்டேன். உங்களுக்கு என்னை அளிக்கிறேன். எனக்கு உங்களை அளியுங்கள். நான் உங்கள் படைக்கலம் என்று கண்டதனால்தான் என்னை அணுகி வந்திருக்கிறீர்கள். இத்தருணம் இருவருக்கும் உகந்ததே.
மூன்று மாதம் கழித்து அங்கிருந்து கிளம்பி துவாரகைக்கு வந்தேன். துவாரகையில் அதற்குள் கணிகர் முதன்மை பெற்றவராக மாறிவிட்டிருந்தார். எவ்வண்ணம் அவர் அப்படி ஆனார் என்பதை என்னால் எண்ணி எடுக்க இயன்றது. ஒரு இந்திர மாயக்காரனின் விழிதொடு வளையத்திற்கு வெளியே இருந்து அவனுடைய ஆடலை பார்ப்பதுபோல. அவருடைய அசைவுகள் அனைத்தும் பொருளற்றவையாக இருந்தன. அவற்றுக்கு ஏன் ஒவ்வொருவரும் அவ்வண்ணம் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது திகைப்பூட்டுவதாக இருந்தது. சிலபோது வேடிக்கையாக. சிலபோது அச்சமூட்டுவதாக. அடிக்கடி மானுடர் உண்மையில் அறிவுடையவர்கள்தானா என ஐயமெழுப்புவதாக.
அமைச்சரும் அவையினரும் அரசரும் அரசகுடியினரும் மீள மீள அமர்ந்து சொல்லெடுக்கிறார்கள். பேசிப்பேசி பாதை படிந்து அறியாதொழுகத் தொடங்கும்போது தங்களை அறியாமல் ஒன்றுக்கு ஒற்றைச்சொல்லையே கையாள்கிறார்கள். ஒன்றை சுட்ட ஒற்றைச்சொல்லை அனைவரும் கையாளத் தொடங்குகையிலேயே ஒன்று நிகழ்கிறது, அனைவரும் ஒன்றையே எண்ணத்தொடங்குகிறார்கள். உள்ளங்களுக்கு அவ்வியல்பு உண்டு. நீர்த்துளிகளைப்போல அவை ஒன்றோடொன்று இணைந்து ஒற்றை நீர்ப்படலமென ஆக விழைகின்றன. ஒரு சிறு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து எப்படி பூசலிட்டாலும், எதை சொன்னாலும் மெல்ல மெல்ல அவர்களின் உள்ளங்கள் ஒன்றாகிவிடுகின்றன. அவர்கள் பூசலிடும் தரப்புகளாக நீடித்தாலும்கூட ஒவ்வொன்றையும் ஒன்று போலவே எண்ணுவார்கள். ஆகவேதான் எதிரிகளின் எண்ணங்கள்கூட ஒன்று போலிருக்கின்றன. சொற்கள் ஒன்று போலிருக்கின்றன. அவர்கள் கண்டடையும் வழிமுறைகளும் ஒன்றே.
அஸ்தினபுரியில் நடந்ததும் அதுவே. காலத்தின் நீண்ட இடைவெளிக்குப்பின் நின்று நோக்குகையில் அஸ்தினபுரியில் கௌரவரும் பாண்டவரும் ஒன்றையே சொல்லி, ஒன்றையே எண்ணி, ஒன்றையே செய்து, ஒற்றைத் திரளென்றே திகழ்ந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. தன் வாலை தான் விழுங்கும் பாம்பென அவர்கள் குருக்ஷேத்ரத்தில் போரிட்டிருக்கிறார்கள். துவாரகையில் நிகழ்வதும் அதுவே. துவாரகையின் மூன்று எதிரித் தரப்புகளில் எவருக்கும் மாற்று என எண்ண ஓட்டம் இல்லை என நான் முன்னரே கண்டிருந்தேன். அவர்கள் ஒன்றின் மூன்று முகங்கள். ஆகவேதான் ஒரு தரப்பிலிருந்து இன்னொன்றுக்குச் செல்பவர் பெரிய மாறுதல் எதையும் காண்பதில்லை.
அவைக்கூடல்களில் ஒன்றை நானே எனக்குள் உணர்ந்திருக்கிறேன். பிரத்யும்னனோ சாம்பனோ என்ன முடிவெடுப்பார் என்பதை என்னால் முன்னால் சொல்ல முடிந்தது. பிறர் எண்ணி எண்ணித் தவிக்கும் இடங்களுக்கு நான் எளிதாகச் சென்று மீண்டுவந்தேன். பிறர் அறியாதனவற்றை அறிந்தேன். அது ஏன் என்று அப்போது தெரிந்தது. ஏனெனில் எந்த அவையிலும் நான் பேசியதில்லை. ஒவ்வொரு உரையாடலிலும் பிற அனைவரும் சொல்லும் எந்தச் சொல்லையும் நான் எடுப்பதில்லை. நான் வேறு சொற்களால் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டேன். வேறு வகையில் சொல்லாட்சிகளை அமைத்தேன். ஆகவே என் எண்ணங்கள் வேறாக இருந்தன. ஆயினும், நான் அக்குருதிக்குள் இருந்தவன். அந்தச் சூழலில் வளர்ந்தவன். எத்தனை விலகினாலும் கிளை மரத்திலிருந்து இணைப்பை வெட்டிக்கொள்ள இயலாது.
ஆனால் கணிகர் அவ்வாறல்ல. அவருடைய உடல் அமைப்பினாலேயே அவர் எந்த அவையிலும் அமர முடியவில்லை. அவைகளில் அவரை மிக விலக்கி கீழே அமரச்செய்கிறார்கள். அதுவும் ஒரு கூரிய உண்மை. அவரது உடல் ஒன்றுடன் ஒன்று சற்றே மடிந்த இரு தகடுகள்போல. மானுடர் எந்த அவையிலும் நின்றோ அமர்ந்தோ பேசுகையில் அனைவருக்கும் பொதுவான உயரத்தை விழிகளால் வகுத்துக்கொள்கிறார்கள். அந்த உயரத்திற்குள் மட்டும்தான் நோக்குகள் இருக்கின்றன. அவ்வெல்லைக்குள் வருபவர்களைப்பற்றி மட்டும்தான் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடனே உரையாடுகிறார்கள். எந்த அவையிலும் ஒருவர் அமர்ந்துகொண்டு பேசினால் திடுக்கிட்டு அவரை நோக்கி நோக்குகள் கீழிறங்குகின்றன. ஒரு சிறு குழந்தை அவைக்கு வந்தால் அவையின் நோக்கை வலிந்து கீழிறக்க வேண்டியிருக்கிறது.
அவைகளில் நிலத்திலிட்ட புலித்தோலில் படிந்ததுபோல் கிடக்கும் கணிகர் அங்கிருக்கிறார் என அனைவருக்கும் தெரிந்தாலும் மிகச்சிறு பொழுதிலேயே அங்கிலாதவராக ஆகிவிடுவார். அவர் குரலெழுப்புவது வரை அவரை எவரும் பார்ப்பதில்லை. அவர் பேசும்போது அனைத்து நோக்குகளும் தழைந்து கீழிறங்கி அவர் மேல் படிகின்றன. அவர் பேசி முடித்த சில கணங்களிலேயே அவை இயல்புநிலைக்கு திரும்பிவிடுகின்றன. விழிகள் மூங்கில்களைப்போல, வளைத்துக்கட்டி நிறுத்தினாலும் கைவிட்ட கணமே அவை இயல்புநிலை மீள்கின்றன. அதை அவர் எப்போதும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். எந்த அவையிலும் அந்த அவையின் ஒரு பகுதியாக இருந்து அனைத்தையும் அறிகையிலேயே அந்த அவையின் சொற்களங்களுக்குள் செல்லாமல் அகன்றிருக்கிறார். அகன்றிருக்கும் ஒருவரால் அனைவரையும் துணுக்குற வைக்கும் பார்வைகளை கூற முடியும். ஒவ்வொருவரும் சென்று முட்டிக்கொண்டிருக்கும் வாயிலுக்கு அப்பால் மூடப்படாத வழியொன்றிருப்பதை சுட்டிக்காட்ட முடியும்.
மிகச்சில நாட்களிலேயே கணிகர் என் மூத்தவரின் அவையில் ஒவ்வொரு முறையும் தவறாது புதிய வழியைக் காட்டும் பேரறிஞராகவும், மதிசூழ் திறனாளராகவும் அடையாளம் காணப்பட்டிருந்தார். நான் மூத்தவரின் அவைக்குச் சென்றபோது முதலில் அவரைத்தான் பார்த்தேன். அவர் விழிகளை சந்தித்தபோது அவர் முன்னர் என்னை அறிந்திருப்பதைப்போலவே தெரியவில்லை. மெய்யாகவே அன்றிரவு நான் கொண்ட உளமயக்குதானா என்ற ஐயத்தையே அப்போது அடைந்தேன்.
அந்த அவையில் ஒன்றை நான் உணர்ந்தேன், அவையை கணிகர் தன் முழு ஆட்சியில் வைத்திருக்கிறார். நான் வெளியே இருந்தபோது துவாரகையில் போர் தொடங்கிவிடும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தேன். இதோ இதோ என்று என் புலன்கள் துடித்து நின்றன சிலநாட்கள். நான் கிளம்பிய அன்று இரவு மறுநாளே போர் அறைகூவப்படும் என்று மூத்தவர் ஃபானு சொல்லியிருந்தார். நாள் செல்லச்செல்ல அந்தப் பதற்றம் குறைந்தாலும் போர் நிகழக்கூடும் என்றே எண்ணினேன். உண்மையில் நான் இல்லாமல் அப்போர் முடிந்து அனைத்தும் எவ்வகையிலேனும் ஒருங்கமைந்துவிட்டால் நன்று என்று கருதினேன். என் சுமைகள் குறையும், நான் அஞ்சும் பாதைகளில் செல்லவேண்டியிருக்காது. ஆகவே ஒவ்வொருநாளும் மெல்லிய எதிர்பார்ப்பு எனக்கிருந்தது.
அவையைக் கண்டதும் புரிந்துகொண்டேன், போர் நிகழவில்லை என்றால் அதற்கு கணிகரே முதல் ஏது. போர் நிகழுமென்றால் அதை அவரே நடத்துவார். அவர் காத்திருக்கிறார். மேலும் திரள்வதற்காக, மேலும் கூர்கொள்வதற்காக. அவையை தொலைவிலிருந்து ஒருகணம் பார்த்தபோது எழுந்த கொந்தளிப்பு உடனே அடங்கி மெல்லிய இளிவரலும் கசப்பும் எஞ்சியது. நான் முகமன் உரைத்து மூத்தவரை வணங்கி அவைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன்.