வேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்

 

வேரில் திகழ்வது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வேரில்திகழ்வது கதையை ஒரு சினிமாவுக்காக நாம் யோசித்திருக்கிறோம். ஆறாண்டுகளுக்கு முன்பு. நாம் தொடர்பே இல்லை. நான் முயற்சிசெய்துகொண்டுதான் இருக்கிறேன்

 

இப்போது அதை சிறுகதையாக வாசிக்கையில் இன்னொரு டைமன்ஷன் வருகிறது. அதிலுள்ள கம்பாஷன் என்ற அம்சம். பரிணாமத்தில் கம்பாஷனுக்கு எந்த இடமும் இல்லை என்று குமாரன் மாஸ்டர் சொல்கிறார் [கல்பற்றா நாராயணன்தானே?] ஆனால் அது எப்படியோ உருவாகிவந்துவிட்டது. அதுதான் கதையின் ஆதாரம். அது விலங்குகள் மனிதர்கள் அனைவரையும் ஏதோ ஒருவகையில் இணைக்கிறது. அதுதான் கடவுள் என்ற எண்ணத்திற்கே ஒரே ஆதாரமாக இருக்கிறது

 

அந்த கம்பாஷன் வருவதற்கு தடையாக இருப்பது என்ன? சிந்தனை, மொழி இதெல்லாம்தான். அதெல்லாம் இல்லாதவள் ராகேல். ஆகவே அவளால் இயல்பான கம்பாசனுடன் உலகத்தையே அணைத்துக்கொள்ள முடிகிறது. அந்த பையனால் யானையை இன்னொரு உயிராக நினைக்கமுடிகிறது. அந்த சூச்சுமமான இடம்தான் இந்தக்கதை.

 

ராகேல் தன் அப்பாவை மன்னித்ததுகூட கம்பாசனால்தான். அப்பா என்பதனால் அல்ல. அப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன். அருமையான கதை

 

சுரேஷ் மாணிக்கம்

 

 

ஜெ,

வேரில் திகழ்வது ஒரு மிஸ்டரிகள் சிறுகதை அல்லது ஸ்பிரிட்டூயல் மிஸ்டரி என்று தான் சொல்லவேண்டும். எனக்கு மலையாள சினிமா மா.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ்  நடிப்பில் வெளிவந்த ஜோசேப்  மற்றும் தமிழில் ராம் இயக்கத்தில் மமூட்டி நடிப்பில் வெளிவந்த பேரன்பு இரண்டையும் பின்னி கற்பனை செய்துகொன்டேன்.

நீங்கள் சொன்னதோ இல்லை எங்கோ படித்ததோ குழந்தைகள் தங்களை நான் என்றும் மற்றவர்கள் என்றும் பிரித்து அறியும் அறிவு வளராத வரை அது எல்லோருடனும் எல்லாவற்றுடனும் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதன் அருகில் இருக்கும் எதை அடித்தாலும் அதுவும் அழுவுமாம் ஒரே கான்ஷியஸ்னஸ்.

ஒருவகையில் மன வளர்ச்சி குன்றியவர் அல்லது நாம் நினைத்துக்கொள்ளும் குழந்தைகளும் அவ்வாரே உள்ளதோ. அறிவு அன்புக்கு பெரும் தடை. “அனைவரையும் நேசி அன்போடு இரு” எவளோ சாதாரணமான வெறும் வார்த்தையாக மட்டுமே உள்ளது. மீண்டும் ஓஷோ தான் நினைவுக்கு “ஹவ் கேன் யு லவ்  சம்ஒன் யூ ஆர் லவ்”. இதை அறிவதர்கே என் முயற்சியெல்லாம்.

நாம் அனைவரும் ஒரு மாபெரும் பெரிய மரம். வெறும் மேலோட்டமான அறிவுடையோர் ஒவ்வொரு கிளையும் இலையும் தனிதனி என்று அறியாமையில் இருக்கிறோம். பரிசுத்தமான குழந்தைகளும் தெளிந்த அறிவுடைய ஞானியரும் மட்டுமே அறிவது அந்த மாபெரும் இலைகளும் கிளைகளுமுடைய மரத்திற்கு வேர் ஒன்றுதான் என்று.

விஷ்ணுகுமார்

 

துளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். இரண்டுவகையானவர்களால் நல்ல கதைகளை எழுதமுடியாது. ஒன்று, இலக்கியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆர்வத்துடன் கற்பவர்கள். இரண்டு, இலக்கியவடிவங்கள்மேல் ஆர்வம்கொண்டு சோதனைக்காக எழுதுபவர்கள். இரண்டு தரப்பினருக்கும் எது இல்லாமலாகிவிடுகிறது என்றால் கதையைச் சொல்வதற்கான இன்னொசென்ஸ்தான் . புத்திக்கூர்மையால் அல்ல, இன்னொசென்ஸால்தான் நல்ல கதைகள் எழுதப்படுகின்றன. புத்தியெல்லாம் வாசகர்களிடம் இருந்தால்போதும். ஆகவேதான் நான் முறுக்குசுற்றும் கதைகளை கவனமாகவே வாசிப்பேன். முறுக்குசுற்றும் மொழி இருக்கக்கூடாது என்பதில்லை. அந்த எழுத்தாளனின் இன்னொசென்ஸிலிருந்து அது வரவேண்டும்

 

நான் வெண்முரசு வாசிக்கவில்லை. என் வாசிப்பில் உங்கள் பலகதைகளில் அந்த இன்னொசென்ஸ் உண்டு. மாடன்மோட்சம் ஓர் உதாரணம். இன்னொரு உதாரணம் ஊமைச்செந்நாய். அந்தக்கதையெல்லாம் ஒரு உற்சாகமான இன்னொசென்ஸ் உள்ள எழுத்தாளர் எழுதியது. இப்போது துளி, மொழி மாதிரியான கதைகள். எல்லாமே அற்புதமான இன்னொசென்ஸாலே எழுதப்பட்ட கதைகள். இவ்வளவு அரசியல் இலக்கியக் கொள்கைகள் எல்லாம் எழுதி நீங்கள் நாக்கு தடித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதெல்லாம் சும்மா பாவலா, இதுதான் நீங்கள் என்று தெரிந்தது

 

கொள்கை கோட்பாடு இலக்கியச்சோதனை எல்லாம் அக்காடமிக்குகளான எங்கள் தலையெழுத்து. உங்களுக்கென்ன. புனைவு என்பது ஒரு கனவுமாதிரி, ஒரு களியாட்டம் மாதிரி. உங்களிடமிருக்கும் ஃப்ளோ சாதாரணமான விஷயம் இல்லை. அதை தலைமுறைக்கே ஒருவர் இருவரால்தான் எழுதமுடியும்… வாழ்த்துக்களுடன்

 

 

ரா.கிருஷ்ணகுமார்

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

 

துளி கதையை விரும்பிப் படித்தேன். நான் வாசிக்கும்போது கதையின் ஓட்டம்தான் எனக்கு முக்கியம். ஒரு மேடையில் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசவேண்டும் என்றால் மேடையில் தன்னைமறந்து நின்றால்தான் முடியும். யோசித்துப்பேசினால் நகைச்சுவை அமையாது. அதேபோலத்தான் இந்த ஈஸியான கதைகளும். அவற்றிலுள்ள நியூயன்ஸ் எல்லாம் தானாகவே அமையவேண்டும். துளி கதையில் உள்ள யானையின் நடத்தையெல்லாம் ஏற்கனவே விரிவாக ரிக்கார்ட் ஆகியிருக்கிறது. யானை –நரி சிம்பியாட்டிக் பிஹேவியர் நிறையவே கிடைக்கிறது. நாய் நரியின் அம்சம்தானே? ஆனால் அதிலிருந்து ஒரு நுட்பமான வாழ்க்கைத்தருணத்தை இயல்பாகச் சென்று தொட்டிருக்கிறீர்கள்.

 

இந்தமாதிரி கதைகள் எல்லாம் திட்டமிட்டு யோசிது எழுதமுடியாது. அந்த மனநிலை வந்தால் எளிதாக எழுதலாம். நின்றுவிட்டால் அவ்வளவுதான். அந்த மனநிலை மாறிவிட்டால் போயிவிடு. மை நேம் இஸ் அராம் கதைகளை எழுதிய சரோயன் திடீரென்று நிறுத்திவிட்டார். காரணம் இதுதான் அந்த ஈஸி மனநிலை போய்விட்டது. ஆகவே வரும்வரை எழுதுங்கள்

 

ராஜாராம்::

 

முந்தைய கட்டுரைகோட்டை ,விலங்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுற்றுகள் [சிறுகதை]