ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆயிரம் ஊற்றுக்கள் கதையின் கதைநாயகி உண்மையான வரலாற்றுக்கதாபாத்திரம் என அறிந்தேன். அந்தக்கதையை படிக்கையில் எனக்கு இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார். அவருடையது ஒரு சக்கரவர்த்தியின் வாழ்க்கை. ஆனால் மிகமிக துயரமானதும்கூட. அவர் தன் மகன் சஞ்சய் காந்தியின் இழப்பை எப்படி பார்த்திருபார் என்றும் எவ்வளவு இன்செக்யூர் ஆக உணர்ந்திருப்பார் என்றும் எண்ணமுடிகிறது.
பொதுவாக வரலாற்றில் இருக்கும் மனிதர்கள் மிகப்பெரிய எடையை தாங்குபவர்கள். அவர்களால் சராசரி மனிதர்களாக வாழ முடிவதில்லை. அவர்கள் இழப்பது அதிகம். ஒரு சாதாரண பெண்ணாக இருந்திருக்கலாம் என்று உமையம்மை நினைக்கிறார். அவருக்கு தன் மகன்கள் மேல் பயம் இருந்திருக்கலாம். ஆகவே அவர்களை அவர் அணுகவே விட்டிருக்கமாட்டார். அவர்களை இழப்பதற்கான மனநிலையை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிக்கொண்டிருப்பார்
அந்தக்கதையின் சரித்திரப்பின்னணி நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தது. கதை என்னவோ ஒரு அம்மா பிள்ளைகளை இழப்பதுதான். ஆனால் அது ஒரு பெரிய சரித்திரப்பின்னணியில் வரும்போதுதான் அதற்கு உண்மையான மதிப்பு உருவாகிறது. அந்தப்பின்னணியில் உமையம்மையே இழுத்துவரப்பட்டவர்தான். அவர் மகன்களும் அப்படித்தான். ஆனால் அவரை இழுத்துவந்த திவானுக்கும் வேறுவழியில்லை அனைவரும் ஒருவரோடொருவர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவலைபோல. அதன்பெயர்தான் வரலாறு. வரலாற்றில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் கதை இது
ராஜசேகர்
ஜெ,
ஆயிரம் ஊற்றுகள் படித்தேன்.
மலையாள நாட்டின் பழையகாலத்தின் சிற்றரசர்கள் ஆதிக்கம்,பழக்க வழக்கஙகள் தெரிய வந்தது. அதிகாரத்தைப் பிடிக்க அதிலேயே நீடிக்க எந்தச்செயலும் செய்யத் துணிவார்கள் போலிருக்கிறது.புதர்களுக்குள் நிற்கும் கண் நல்ல உவமை. அது நம்மைப் பார்க்கும்.ஆனால் நம் கண்ணுக்கு அதன் பார்வை தெரியாது.குரூரமும்,அனுக்ரகமும் நம்முடே கல்பனை என்று ஆண்டாள் கூறுவதில் ஆயிரம் பொருள்கள் பொதிந்துள்ளன.
மகன்கள் எதிர்பாராமல் மரணித்த போது அத்தாய் அழவில்லை. உயர் பதவியில் இருப்பவர்கள் துக்கத்தைக் கூட வெளிக்காட்ட முடியாதுதான். அனைவருக்குமே வியப்பு. பிள்ளைகள் இறந்த இடத்தை ப் பார்க்க எதிர்ப்பையும் மீறி அவள் செல்கிறாள். அங்கு நீர்நிலை வறண்டு கிடக்கிறது
முதலில் அவள் மனமும் அப்படித்தான் கிடந்தது.ஆனால் “உதய மார்த்தாண்டனை எங்கிலும் ஒரு முத்தம் இட்டிருக்கலாம் “என்று அத்தாயின் மனத்தில் தாய்மை ஊற்று பீறிட்டெழும்போது அங்கும் ஆயிரம் ஊற்றுகள்பெருகி அத்தாயின் பாதத்தையே வந்து தொடுவது பொருத்தமான நிறைவு.
வளவ துரையன்
தங்கத்தின் மணம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
தங்கத்தின் மணம் விசித்திரமான ஒரு ஃபேபிள் போல இருந்தது. அதிலுள்ள எல்லாமே ஏற்கனவே தெரிந்தவைபோலவும் முற்றிலும் புதிய அர்த்தங்கள் கொண்டுவிட்டதுபோலவும் இருந்தது. முக்கியமாக என்னை உலுக்கியது அந்தப் பாம்பின் தவம். தலைபோலவே வாலும் ஆகிறது. சுருண்டு தவம் செய்கிறது. தன் உடலில் உள்ள விஷத்தை முழுக்க நாகமணியாக்கி துப்பி விடுகிறது. தன் வாலை தானே விழுங்கி பந்துபோல ஆகி முக்தி அடையும்நேரம் ஒரு துளி மலம் வந்து படிகிறது. அதன் பின் நேராகச் சென்று மலமே சாப்பிடவேண்டியிருக்கிறது
நம் புராணங்களில் தவம்செய்பவர்களின் வீழ்ச்சி வந்துகொண்டே இருக்கும். கடைசிநேரத்துச் சரிவு அது. அத்தனை பெரிய தவம் எப்படி கலைகிறது என்றால் அந்தத் தவத்தின் கடுமையால்தான். அங்கே தொடங்கும் கதை நாகமணி மலத்தில் சென்று புதைந்துவிடுவதில் முடிகிறது. எவ்வளவு சரடுகளை இணைத்து அந்தக்கதை புனையப்பட்டுள்ளது என்ற வியப்பு ஏற்படுகிறது
வெண்முரசில் இதேபோல ஏராளமான கதைகள் உள்ளன. ஆனாலும் இந்தக்கதை ஒரு யதார்த்தமானச் சூழலில் நடக்கையில் வேறுமாதிரி அதிரச்செய்கிறது
சாரங்கன்
அன்புள்ள ஜெ
தங்கத்தின் மணம் கதை வாசித்தேன். ஒரு விசித்திரமான கனவு அனுபவம். நான் பல மேஜிக்கல் ரியலிசக் கதைகளை வாசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான கதைகள் பல உள்ளன. ஆனால் அவை வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்போதே அவை ஆழமாக நம்முள் வளர்வதுமில்லை என்று நான் கண்டிருக்கிறேன்.
உதாரணமாக மாபெரும்சிறகுகளுடன் வரும் கிழவன், நீரில் இருந்து கிடைத்து வளர்ந்துகொண்டே இருக்கும் அழகன் போன்ற மர்க்யூசின் கதைகள். அவை ஏன் வளர்வதில்லை என்று பார்த்தேன். ஏனென்றால் அவை நம் கனவிலே வருவதில்லை.
தங்கத்தின் மணம் வாசித்தபோதே அது நம் கனவில் வரும் என நினைத்தேன். கனவில் ஒரு பொன்னிற நாகத்தை பார்த்தேன். என் மேஜைமேல் பேனா போல கிடந்தது. கையில் எடுத்ததும் நெளிந்தது. அவ்வளவுதான். ஆனால் அது எவ்வளவு ஆழமாகச் சென்றிருக்கிறது என்று தெரிந்தது.
லத்தீனமேரிக்க மாஜிக்கல் ரியலிச கதைகள் எல்லாம் அவர்களின் நாட்டுப்புறமரபில் இருந்து வந்தவை. அவர்களுக்கு மிகப்பெரிய செய்லர்ஸ்டோரீஸ் மரபு உண்டு. அவர்களுக்கு அவை இதேமாதிரி கனவிலே பெரிதாக மாறலாம்.
நாம் நம் மரபிலுள்ள கதைகளையே இப்படி புதிதாக ஆக்கமுடியும். நான் இப்படிச் சொல்கிறேனே. மெட்டஃபர் இமேஜ் எல்லாமே அடியில் ஆர்க்கிடைப்பாக இருந்தால் மட்டும்தான் கனவுக்குள் வளரமுடியும்
ஸ்ரீனிவாஸ்