ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
ஆயிரம் ஊற்றுக்கள் கதையை வாசித்தபிறகு விக்கியில் போய் உமையம்மை ராணியின் கதையை வாசித்து தெரிந்துகொண்டேன். மனம் பாரமாகவே ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் பெரும்பாலும் நடந்தது. இதை ஒரு தொன்மம் என்று சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால் இக்காலத்தைய திருவிதாங்கூர் வரலாறு பெரும்பாலும் எழுதப்படவில்லை. ஆனால் இந்த களிப்பான்குளம் இன்றும் உள்ளது. ஓர் ஊராக இருக்கிறது.
மகாகவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் இந்த சம்பவத்தையும் உமையம்மை ராணியின் ஆளுமையையும் வைத்து உமாகேரளம் என்ற மகாகாவியத்தை எழுதியிருக்கிறார். அதில் திருவிதாங்க்கூரின் சிற்பியாகவே உமையம்மையைச் சுட்டிக்காட்டுகிறார். பிரிட்டிஷ்காரர்களுக்கு அஞ்சுதெங்கு என்ற ஊரில் இடம்கொடுத்து ஒப்பந்தம்போட்டுக்கொண்டு போர்ச்சுக்கல்காரர்களையும் டச்சுக்காரர்களையும் தோற்கடித்தவர் உமையம்மை ராணி
அவருடைய வாழ்க்கையின் ஒரு தருணம், அந்த கவித்துவமான முடிவு மனதை கலங்கடிப்பதாக இருந்தது
சுரேஷ்குமார்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
ஆயிரம் ஊற்றுக்கள் அழகான கதை. இதுவரை வந்த கதைகளில் நெஞ்சை கனக்கவைக்கும் கதை இதுதான். உண்மையில் அந்த ஆறுகுழந்தைகளும் தெரிந்தே பலிகொடுக்கப்படுகிறார்கள். குழந்தையின் அப்பா சொல்கிறார். ஜாதகமும் அதைச் சொல்கிறது. ஆனாலும் ஷத்ரிய தர்மம் என்று சொல்லி அவர்களை சாகவிடுகிறார்கள்.
அதைச்செய்தது ஒருவகையில் உமையம்மை ராணிதான். ஆகவேதான் அக்குழந்தைகள் அவள் கனவில் வந்து வரண்ட குளத்தில் விளையாடுகின்றன. குழந்தைகளின் சாபம் நாட்டின்மீதும் ராணிமீதும் உண்டு என்று நம்பூதிரி சொல்கிறார். திவானும் நம்புகிறார். ஊரும் அப்படியே நினைக்கிறது
ஆனால் கடைசிப்பிள்ளையையாவது ஒரு முத்தம் கொடுத்திருக்கலாம் என்று ராணி சொல்லும்போது பிள்ளைகள் அம்மாவை மன்னித்துவிடுகிறார்கள். குளம் நிறைந்து பெருகி வழிய தொடங்கிவிடுகிறது
ராஜசேகர்
தங்கத்தின் மணம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
இப்போது வந்துகொண்டிருக்கும் கதைகளில் உள்ள வகைகள் ஆச்சரியமூட்டுகின்றன. இந்தக்கதைகள் அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சம், அல்லது மேலோங்கியிருக்கும் அம்சம் என்னவென்றால் கதைகளுக்கு கதைரீதியான திருப்பத்தை முடிவாக வைக்காமல் ஒரு கவித்துவமான உட்குறிப்பை முடிவாக வைத்திருக்கிறீர்கள். கதை என்றவகையில் ஒரு நிகழ்ச்சி மட்டுமாக இருக்கும் கதைகளை கவித்துவமாக எடுத்துக்கொண்டால் முக்கியமான இடங்கள் தொடப்படுகின்றன. ஒரு துளி போதும் என்று துளி கதையில் சொல்லப்படுவதும் சரி, தெய்வங்களின் மொழியை கேட்டேனென்று மொழி கதையில் சொல்லப்படுவதும் , நீ கடவுளுக்கு நெருக்கமானவன் என்று ஏதேன் கதையில் சொல்லப்படுவதும் உதாரணங்கள். அந்த புள்ளியை கண்டடைவதுதான் கதையாக இருக்கிறது.
அந்தவகையில் தங்கத்தின் நிறம் கதையின் உச்சம் என்று எனக்கு தோன்றுவது அந்த நாகத்தை மலக்குழியில் போட்டுவிடுவது. அது அப்படியே மூடிவிடுகிறது. மண்ணுக்குள் போய்விடுகிறது. மலத்தை பொன்னாக்கும் நஞ்சு அது. அது அங்கே அந்த மலத்தை கொஞ்சம் கொஞ்சமாக பொன்னாக்குகிறது. காமம் என்னும் மலத்தை பொன்னாக்குகிறது அது. அதுதான் உச்சம் என்று நினைக்கிறேன்
மகாதேவன்
அன்புள்ள ஜெ
தங்கத்தின் நிறம் ஒரு கனவுபோன்ற கதை. அந்த பையன் காணும் பொன்னாலான காட்சிகள், அவன் கண்ணீர்விடுதல், போற்றி அவனிடம் சிவனின் கழுத்திலுள்ள பாம்பைப்பற்றிச் சொல்லுதல் எல்லாமே படிமங்களாகவே இருக்கின்றன. மலத்தில் பொத்திவைக்கவேண்டிய அரியமணியே காமம். அல்லது மலத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு தீ போன்றது. மலம் என்பது இங்கே ஒரு கட்டுப்படுத்தும் சக்தியாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். அதை ஒரு கோழி பொன்னாக ஆக்கிவிடுகிறது. அப்பா உட்பட அனைவரும் அறியும் நாற்றம் என்பது அந்த மணியின் அல்லது நஞ்சின் நாற்றம் அல்ல. அதைக் கட்டுப்படுத்தும் விசையின் நாற்றம்தான்
ஜெயராமன்