வீடுறைவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் தனிமைநாட்கள் பதிவில் கூறியுள்ள தன்நெறிகள் , இந்த நாட்களில் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டல் .. இரண்டு நாட்களாக இந்த வைரைஸ் பற்றிய செய்தி புழங்கும் தளங்களில் இருந்து முற்றாக விலகி இருந்தேன் ..உண்மையிலேயே மனம் , முந்தைய தினங்களை விட லேசாகத்தான் ஆகிவிட்டது…முக்கியமாக whatsapp தளத்தில் அனேக குழுக்கள் காலையில்இருந்து மாலை வரை இதை பற்றியே பதிவிட்டு கொண்டு இருப்பது பெரும் சலிப்பைதான் உருவாக்குகிறது ..
“வாசிக்கலாம், எழுதலாம், சினிமா பார்க்கலாம். ஆனால் அவை உற்சாகமானவையாக இருக்கவேண்டும்.”,
“ஆனால் முழுநேரமும் குடும்பம் ஒன்றாக இருக்கக்கூடாது”,
“திறந்தவெளியில் கொஞ்சமேனும் இருக்கமுடிந்தால் நல்வாய்ப்பு. குறிப்பாக மொட்டைமாடி” ..
அனைத்தும் முக்கியமான வழிகள்.. 3 நாள் வீட்டிருப்பில்நினைத்து பார்த்தால் இவை சூழநிலையில் மேலும் அழுத்தம் வராமல் நாட்க்களை கடத்த முக்கியமான நெறிகள்..
அன்புடன்
வெண்ணி
வணக்கம் ,
திங்கள்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தேன் ,இதற்கு முன்பு எப்போதும் இதுபோல் வெளியில் செல்லாமல் இருந்ததே இல்லை ஊரிலிருக்கும் போது.உங்களை போலவே நானும் இந்நாட்களை கொஞ்சம் வகுத்து கொண்டேன்
.
அதிகாலை ஐந்தரைக்கு முன் துயில் கலைதல்.காலை தொழுகைக்குப் பின் இளைய மகன் சல்மானுடன் குடியிருப்பின் மொட்டை மாடியில் யோகா பயிற்சிகள் .நீராடி காலை உணவுக்குப்பின் (மிக எளிய உணவுகள்),மகன்களுடன் வீட்டை சுத்தம் செய்தல் ,மனைவிக்கு சமையலில் உதவுதல் ,பாத்திரம் கழுவுதல் .குடும்பமாக கேரம் விளையாடுதல் .ஐவேளை தொழுகையும் குடும்பமாக வீட்டிலேயே தொழுகிறோம் .இரவு பத்து மணிக்கு துயில் . உங்கள் தளத்தில் வரும் கதைகளையும் வாசிக்கிறேன் .
ஷாகுல் ஹமீது
அன்புள்ள நண்பர்களுக்கு,
இந்தத் தனிமையை கதைகளில் செலவிடவேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். நான் வேறெதைச் செய்யமுடியும் என்று பதிலுக்குக் கேட்டேன். இப்போதல்ல, என் பத்துவயதிலிருந்தே இதைத்தான் செய்துவருகிறேன். இதுதான் என் வழி, என் வாழ்வு. என் மலர்வு இதற்கு வேர் மட்டுமே மெய்வாழ்வு
உண்மையில் தன்னை இலக்கியவாதி என நினைப்பவன் பிரச்சினை என வரும்போது உடனே அரசியல்வாதி ஆகிவிடுவதோ மதநம்பிக்கையை கொள்வதோதான் அபத்தமாகத் தோன்றுகிறது. அவனால் இயல்பாகச் சிறப்பாகச் செய்யக்கூடுவதாக இது மட்டும்தானே இருக்கவேண்டும்?
இது மிக அந்தரங்கமான செயல்பாடு. ஓர் இடத்தில் இருந்தபடி நான் உலகம் முழுக்க பரவமுடிகிறது. இந்தக்காலத்தில் இருந்தபடி சென்றகாலத்தில் உலவமுடிகிறது. மறைந்தவர்கள் எல்லாரும் வந்து சூழ்ந்திருக்கிறார்கள். இதுதானே இலக்கியவாதியின் வாழ்க்கையாக இருக்கமுடியும்? உலகம் முழுக்க இதற்கு எத்தனையோ முன்னோடிகள் இருக்கிறார்கள்
ஒருகதை, ஹெர்மன் ஹெஸி அவருடைய சுயசரிதையின் இறுதியில் இக்கதையை கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறார். ஓர் அரசன் ஓவியன் ஒருவன் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்கிறான். உன் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்கிறான். எனக்கு வண்ணங்கள் இருந்தால்போதும், நான் மகிழ்ச்சியானவனே என்று அவன் சொல்கிறான்
சரி அதையும்பார்ப்போம் என அவனை ஓர் உயரமான கோபுரத்தின்மேலிருக்கும் சிறையில் அடைக்கிறான் அரசன். சுற்றிலும் வெறும் சுவர்கள். உணவு உள்ளே செல்ல சிறிய ஓட்டை மட்டுமே. வண்ணங்கள் அளிக்கப்படுகின்றன. சரி மகிழ்ச்சியாக இரு பார்ப்போம் என்று கதவைமூடிவிடுகிறான்
பலநாட்களுக்குப்பின் ஓவியன் எப்படி இருக்கிறான் என்று பார்க்கிறான். உள்ளே அவன் மகிழ்ச்சியாகப் பாடுவது கேட்கிறது. துளை வழியாகப் பார்க்கிறான். உள்ளே ஒளி நிறைந்திருக்கிறது. சுவர்கள் திறந்திருக்கின்றன. அவன் கதவை உடைத்து உள்ளே போகிறான். நான்குபக்கமும் திறந்தவெளி, ஒளிமிக்க வானம்
“இது நானே வரைந்த எனது வானம்” என்று ஓவியன் சொல்கிறான். அரசன் சிரிக்கிறான். “முட்டாளே, அது வானம்போன்ற மாயை, வானம் அல்ல” என்கிறான். “நான் வரைந்தது எனக்கு வானமேதான்” என்று சொல்லி அவன் அதில் எழுந்து பாய்ந்து மறைந்துவிடுகிறான்
இது எந்தக்கலைக்கும் பொருந்துவதே. அங்கே ஒரு நல்ல ஓவிய ரசிகன் இருந்தால் அவனும் அந்த வானில் ஓவியனுடன் பறந்து எழமுடியும். எழுத்தாளன் தன்னை அடிப்படையில் கதைசொல்லியாக மட்டுமே கற்பனைசெய்துகொள்ளவேண்டும், பிற அனைத்துமே கதை என்னும் மாபெரும் நிகழ்வின் ஒரு பகுதியே என்பது என்றும் என் நம்பிக்கை.
இந்த மாடியைச் சுற்றி இரண்டுநிமிட நடையில் பேரழகுமிக்க இடங்கள் உள்ளன. சோழர்கால ஏரி. முகப்பிலுள்ள தாமரைக்குளம். ஆனால் அவை அனைத்துமே இன்று நெடுந்தொலைவு. இன்று இல்லாத திருவரம்பு போல. என்றோ சென்று வந்த ஆஸ்திரேலியா போல. அல்லது அவையெல்லாமே மிக அணுக்கமாக ஒரே தொலைவில் உள்ளன
ஜெ
தங்கத்தின் மணம் [சிறுகதை]
வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
ஏதேன் [சிறுகதை]
மொழி [சிறுகதை]
ஆடகம் [சிறுகதை]
கோட்டை [சிறுகதை]
துளி [சிறுகதை]
விலங்கு [சிறுகதை]
வேட்டு [சிறுகதை]
அங்கி [சிறுகதை]
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
பூனை [சிறுகதை]
வருக்கை [சிறுகதை]
“ஆனையில்லா!” [சிறுகதை]
யா தேவி! [சிறுகதை]
சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
சக்தி ரூபேண! [சிறுகதை]
எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
===========================================
தனிமையின் புனைவுக் களியாட்டு
புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…