வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

ஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உள\நிலைகள்.

நான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச் சென்றவன். ஜப்பான் முதல் கனடாவரை என்று பார்த்தால் உலக உருண்டையைச் சுற்றிவந்துவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால் என் அப்பா வெறும் ஐந்து கிமீ வட்டத்திற்குள் வாழ்ந்தவர். அவருடைய நண்பர்கள் அனைவருமே அவருடன் ஒன்றாம் வகுப்பு முதல்படித்தவர்கள். இறப்புவரை நாளும் சந்தித்தவர்கள். அப்பா இறந்த ஓரிரு வருடங்களில் அனைவருமே இறந்துவிட்டார்கள். மனிதர்கள் வாழ அதிகமான இடம் தேவையில்லையா என்ன?

சவேரியார் குன்று

இப்போது ஒரு வீட்டுக்குள் வாழ்வதென்பதும் பெரிதாக எந்த வேறுபாட்டையும் உருவாக்கவில்லை என்பதே உண்மை. நித்யா குருகுலத்தின் துறவிகளுக்கான பயிற்சிகளில் ஒன்று, மிகச்சிறிய ஒரு குடிலுக்குள் ஓரிரு ஆண்டுகள் தன்னந்தனிமையில் வாழ்தல். எழிமலை போன்ற பல இடங்களில் அதற்கான குருகுலங்கள் மலையுச்சியில் இருந்தன. ஊட்டிகுருகுலத்திலேயே அப்படி தன்னந்தனிமையில் வாழ்ந்த சிலரை எனக்குத்தெரியும்.

அவர்களுக்கு ஒரு நூல் குருவால் கற்பிக்கப்படும். ஒருநாளில் ஒருமணிநேரம். அதன்பின் எவரிடமும் பேசக்கூடாது. எதையும் வாசிக்கக்கூடாது. வானொலியோ பாட்டோ கேட்கக்கூடாது. காலையில் கற்றதை உள்ளத்தில் ஓட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும். வெவ்வேறு குருநிலைகளில் பல ஆண்டுகள் ஒரே குடிலுக்குள் வாழ்பவர்களைக் கண்டிருக்கிறேன்.

வேளிமலை

ஆனால் இந்த அமைதலுக்கு முன்பு ஓர் அலைதல் தேவை. அதை நித்யாவின் சுயசரிதையில் காணலாம். அவர் நடராஜகுருவிடம் இளைஞர்களுக்காக ஒரு பத்திரிகை நடத்தும் எண்ணத்துடன் சென்று திட்டங்களைச் சொல்கிறார். “நான் உன்னை அமைதியான ஓர் இடத்தில் அமரவைக்கலாமென நினைத்தேன். உன் குருதி போர்புரிந்து மண்ணைவென்ற வீரர்களுக்குரியது. அதில் நுரை அதிகம். நீ கிளம்பி இந்தியா முழுக்கச் சென்றுவா. உன் ரத்தம் அடங்கட்டும்” என்றார் நடராஜகுரு.

அந்தப்பயண அனுபவங்களை நித்யா ‘இறங்கிப்போக்கு’ என்றபேரில் எழுதியிருக்கிறார். அந்த பயணம் துறவுக்கு முந்தைய நிலைகளில் ஒன்று. நித்யா குருநிலையிலிருந்து அப்படி பலர் கிளம்பிச் சென்றதுண்டு.கட்டற்று இந்தியா முழுக்க அலைவார்கள். மூன்றுநாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தங்கக் கூடாது. மூன்றுநாட்களுக்குமே எவருடனும் அணுக்கமும் கொள்ளக்கூடாது. கிடைத்ததை உண்ணவேண்டும். முடிந்த இடத்தில் துயிலவேண்டும். சிலநாட்களுக்குள் அந்தச் சுதந்திரம் பழகிவிடும். சிலர் அதிலேயே திளைத்து பல ஆண்டுகளைச் செலவிடுவார்கள். திரும்பிவருபவர்க்ள் மட்டுமே ஓர் இடத்தில் அமையமுடியும். அலைதலும் அமைதலும் ஒன்றின் இருபக்கங்கள்

இன்று இச்சிறு எல்லைக்குள் இருக்கையில் இதுவும் இயல்வதே என்று தோன்றுகிறது. நான் துறவுபூண, தவம் மேற்கொள்ள முடியாது. சுருங்குதல் என் வழி அல்ல. ஆனால் சிறிய இடத்திலேயே என்னால் விரிய முடிகிறது. ஒவ்வொருநாளும் விடியும் முன்னரே எழுகிறேன். மாடியில் ஒரு நடை. எழுகதிர் நோக்குதல். மொட்டைமாடியிலிருந்தே இத்தனை தொலைவுக்கு இந்நிலத்தைப் பார்க்கமுடியும் என்பது வியப்பூட்டுவதுதான். இப்பக்கம் வேளிமலை. அப்பக்கம் சவேரியார் குன்று.

நேர்முகப்பில் பொற்கொன்றை பூத்திருக்கிறது. கொய்யாவும் வேம்பும் தழுவி நிற்கின்றன. தென்னைமரங்களுக்கு அப்பால் சூரியன் எழுகிறது. ஒளி மஞ்சள் மலர்கள்மேல் சுடர்கொள்கிறது. காலை இத்தனை மகத்தானதாகவே என்றும் இருந்திருக்கிறது. ஒரு துளியும் குறையவில்லை.

அதன்பின் டீ. அதன்பின் என் இனிய கணினிமேடைமுன் அமர்ந்து எழுத்து. நாளுக்கு ஒரு கதை. சிலசமயம் இரண்டு. எழுத எழுத கதைகள் கிளம்பி வருகின்றன. உண்மையில் கையருகே எழுதவேண்டிய கருக்கள் குவிந்துகிடக்கின்றன. கைவலியும் நேரமும்தான் தடைகள். எந்த முயற்சியும் இல்லாமல் ஒருமை கைகூடுகிறது. சொல்லப்போனால் ஒருமைநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன்.

ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய என் நிலத்தில் உலவுகிறேன். ஆயிரக்கணக்கான முகங்கள். மண்மறைந்தவர்கள் பெரும்பாலும். அவர்கள் என் தலைக்குள் இந்த நினைவுக் குமிழிக்குள் வாழ்கிறார்கள். அந்த நிலமே இன்றில்லை. அது கனவாக என்னுள் இருக்கிறது. எத்தனை கதைகளை தொட்டுத்தொட்டு விட்டிருக்கிறேன் என தெரிகிறது. அவை எவையும் விலகிச்செல்லவில்லை. காத்திருந்திருக்கின்றன.

எத்தனை திட்டமிட்டு நாளையும் உள்ளத்தையும் செல்வத்தையும் உடலையும் வீணடிக்காமல் வாழ்ந்தவன் நான். ஆனாலும் எத்தனை சிதறியிருக்கிறேன் என இப்போது தெரிகிறது. பயணங்களில், அன்றாடங்களில், தொழிலில். அதை தவிர்க்கவே முடியாது. இந்தச் சின்னஞ்சிறு சிறையே இத்தனை குவிதலை அளிக்கிறதென்றால் ஊட்டி குருநிலையின் தவச்சிறை அவர்களுக்கு எத்தனை வாசல்களைத் திறந்திருக்கும்!

ஒருநாள் கிளம்பிச் செல்லவேண்டும். இமையமலையடுக்குகள் தெரியும் ஓர் இடத்தில் ஒரு சிறுகுடிலில் தங்கவேண்டும். எங்கும் செல்லாமல். குறைந்தது ஓர் ஆண்டு அங்கேயே இருக்கவேண்டும். எஞ்சுவதென்ன என்று பார்க்கவேண்டும். தேவையில்லாதவை உதிர அறியாதவை முளைத்தெழும் என நினைக்கிறேன்.

மதியம் வரை எழுத்து. நடுநடுவே குழந்தைகளுடன் பேச்சு. பின்னர் தூக்கம். மீண்டும் எழுத்து. பின்னர் மாலையில் ஒருமணிநேர நடை. கதிரணைவை நோக்கி நின்று நாள்நிறைவு செய்தல். பின்னர் மொட்டைமாடியில் குடும்பத்துடன் சிலமணிநேரம். மீண்டும் சற்று எழுதுதல் கொஞ்சம் வாசிப்பு. தூக்கம் வந்து அழுத்தும் வரை. படுத்ததுமே கரைந்தழிந்து மறுநாள் புதிதென எழுதல்.

கவலைகள் இல்லை. பதற்றங்கள் இல்லை. அலைக்கழிப்புகள் இல்லை. அவற்றை அப்பால் நிறுத்திவிட்டிருக்கிறேன். இந்த நாட்களை ஒளியால் நிறைத்திருக்கிறேன்.

***

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஏதேன் [சிறுகதை]

மொழி [சிறுகதை]

ஆடகம் [சிறுகதை]

கோட்டை [சிறுகதை]

துளி [சிறுகதை]

விலங்கு [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சக்தி ரூபேண! [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

===========================================

தனிமையின் புனைவுக் களியாட்டு

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

முந்தைய கட்டுரைவேட்டு, துளி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதங்கத்தின் மணம் [சிறுகதை]