பகுதி நான்கு : அலைமீள்கை – 2
அந்தச் சந்திப்பு அதற்குள் ஒற்றர்கள் வழியாக துவாரகையின் பிற மைந்தர்கள் அனைவருக்கும் சென்றுவிட்டிருக்கும் என அறிந்திருந்தேன். அரண்மனை ஒரு கலம் என அதிர்ந்துகொண்டிருக்கும். அங்கே நிகழும் ஒவ்வொன்றையும் செவிகளும் விழிகளும் நோக்கிக்கொண்டிருக்கும். ஆனால் அது எங்களுக்கு எச்சரிக்கையை அளிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் இளைய மைந்தர்கள். எங்களுக்கு வரலாற்றில் ஆற்றுவதற்கொரு பணியில்லை, வரலாற்றெழுத்தில் இடமும் இல்லை. எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரே இன்பம் என்பது வரலாற்றிற்கு மிக அருகே அமர்ந்திருக்கும் வாய்ப்பு மட்டுமே. அதை கொண்டாடிக் கொண்டிருந்தோம்.
என்னைச் சூழ்ந்திருந்த யாதவ மைந்தர்கள் கிசுகிசுவென்று பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் அனைவருமே லக்ஷ்மணையின் மைந்தர்களை நன்கறிந்திருந்தனர். ஆனாலும் அப்போது புதிதாக சந்திப்பவர்கள்போல பேசிக்கொண்டனர். “அதோ அவன் பெயர் ஓஜஸ். அவன் நஞ்சே உருவானவன். பிரகோஷனை கழுதை என்றால் அவனை அதன் குதச்சதையில் கொட்டி ஓடவைக்கும் வண்டு என்று சொல்லலாம்” என்றான் ஃபானுமான். “பிரகோஷன் அறிவற்றவன். எப்போதுமே மூத்தவர்கள் அவர்கள் மூத்தவர்கள் என்பதனாலேயே அறிவில்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்” என்று அதிஃபானு சொன்னான். “ஏன்?” என்று நான் கேட்டேன். “இளமையில் விளையாடி கற்றுக்கொள்ளவேண்டிய எதையும் அவர்கள் கற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கட்டுமீறுவதே இல்லை, ஏனென்றால் பிறரை கட்டுப்படுத்தும் பொறுப்பை அவர்கள் இளமையிலேயே அடைந்துவிடுகிறார்கள்.”
பிரகோஷனும் அவருடைய தம்பியரும் எங்களை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களை மதிக்கிறோமா என்பதுதான் அவர்களின் பார்வையின் பொருள் என அறிந்திருந்தோம். ஆனால் மதிப்பு என்பது என்ன? எளிய மக்கள் உண்மையான மதிப்பை அறிவதே இல்லை. அவர்கள் அஞ்சுவதையே மதிக்கிறார்கள். நாங்கள் அஞ்சுவது பிரத்யும்னனை மட்டுமே. அவரை மட்டுமே உண்மையில் மதிக்கவும் செய்தோம். அவர்களின் விழிகள் எங்கள் விழிகளை சந்திக்கும்போதெல்லாம் சிரித்தும் தலைவணங்கியும் முறைமைசெய்தாலும் எங்கள் உடல்கள் உள்ளங்களை காட்டிக்கொண்டிருந்தன.
உணவறைக்குள் சென்று அமர்ந்தபோது அதுவரை இருந்த ஒழுங்கு கலைந்து இன்னொரு ஒழுங்கு உருவாகியது. உடனே பேச்சுமுறையும் உடல்மொழியும் மாறுபடலாயின. தந்தையே, அன்னை சத்யபாமையின் மைந்தர்களான யாதவர்கள் தங்களுக்கு பிற மைந்தர் எவரிடமும் இயல்பான கூட்டு அமைவதில்லை என்பதை கண்டுகொண்டிருந்தனர். யாதவர்களிடம் இருந்த ஓர் இயல்பு அதற்கு தடையாக இருந்தது. அவர்கள் மொத்த துவாரகையும் தங்கள் உடைமை என நினைப்பதிலிருந்து விலகவே இயலவில்லை. யாதவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் தங்களிடமிருந்து அந்நகரை பறித்துக்கொள்ளும்பொருட்டு முயல்பவர்களாக, அயல்குருதி கொண்டவர்களாக அவர்களுக்கு தோன்றினர். அத்துடன் அதை சொல்லாமல், வெளிப்படுத்தாமல் இருக்கும் நாவடக்கமும் அவர்களுக்கு அமையவில்லை.
ஆகவே லக்ஷ்மணையின் மைந்தரின் ஆதரவை தங்கள் தரப்பு பெருகுவது என்று அவர்கள் மெய்யாகவே எண்ணவில்லை. தங்களை அயலவர் ஒருவர் ஆதரிக்கிறார் என்றே அவர்கள் உண்மையில் எடுத்துக்கொண்டார்கள். அவர்களின் ஆதரவால் மகிழ்வடைந்தபோதுகூட மெய்யாகவே அவர்களை அகற்றி நிறுத்தவேண்டும் என்றும் அவர்களை எப்போதும் கண்காணிக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டனர். யாதவர்களுக்கு ஷத்ரியர்களிடம் தாழ்வுணர்ச்சி இருந்தது. அது இயல்பு. மலைமக்களாகிய மத்ரர்களிடம் தாழ்வுணர்ச்சி இருந்ததைக்கூட புரிந்துகொள்ளலாம், அவர்களும் சற்று நிலைதாழ்ந்த ஷத்ரியர்களே. ஆனால் அவர்கள் நிஷாதர்களையும் அசுரர்களையும்கூட தாழ்வுணர்ச்சியுடனேயே பார்த்தனர்.
ஏனென்றால் அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் களவீரம் இருந்தது என அவர்கள் நம்பினர். அவர்கள் சொல்லிக்கொள்ள பேரரசர்கள் இருந்தனர் என்று கருதினர். அது யாதவர்களின் பேச்சுக்களில் வந்தபடியே இருக்கும். யாதவர்கள் கொண்டாடிய தலைவர்களான கார்த்தவீரியரும் கம்சரும் அசுரக்குருதி கொண்டவர்கள். தந்தையே, தங்களையும் லவணர்களின் குருதிகொண்டவர், லவணாசுரரின் மரபில் வந்தவர் என்று சொல்லிக்கொள்ளவே யாதவர்கள் முயன்றனர். என்றோ ஒருநாள் ஷத்ரியர்களைப்போல ஆகிவிடுவோம் என்றும் அதுவரை அசுரர்களாக ஆக முயல்வோம் என்றும் நம்பியவர்கள் அவர்கள். ஆகவே மத்ரர்களின் வரவை அவர்கள் கொண்டாடவில்லை. மகிழ்ந்தனர், எப்படி அந்த மகிழ்வை வெளிப்படுத்துவது என்று அறியாமலும் இருந்தனர்.
அத்துடன் விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்கும் நடுவே நடந்த பூசலில் அந்தகர்களின் குடித்தலைவராக உள்ளூர தன்னை உணர்ந்து கொண்டிருந்த மூத்தவர் ஃபானுவுக்கு அவர்களின் ஆதரவு அந்தகர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவென்று தோன்றியது. அதை அவர் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அவருடைய அணுக்கரான சுஃபானு அதை பேச்சுவாக்கில் குறிப்பிட்டார். ஆனால் இளையவரான ஸ்வரஃபானு தன்னை விருஷ்ணிகுலத்தார் என்று உணர்ந்துகொண்டிருப்பவர். அந்த அவையில் அவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். அங்கே அப்படி பத்து மைந்தர் இருந்தால் பத்து உள்ளோட்டங்கள் இருந்தன. ஆயினும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அங்கு அந்த விருந்து நிகழ்ந்தது.
விருந்துக்கூடத்தில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பொருளுடனும் பொருளின்றியும் சொல்லாடிக்கொண்டபடி தழுவினர். புன்சொற்கள் கூவி நகைத்தனர், களியாடினர். உண்டும் குடித்தும் கூச்சலிட்டும் கொண்டாடினர். எள்ளலும் களிவசையும் வரையின்றி நடந்தன. உளஅழுத்தம் கொண்டவர்கள் மிகையாக சிரிப்பார்கள், மிகையாக கொண்டாடுவார்கள். சிலர் அழுவது போன்ற விழிகளுடன் வெறிகொண்டு நகைப்பதைக் கண்டு நான் வியந்துகொண்டிருந்தேன். அரசியலே பேசப்படவில்லை. ஏனென்றால் நேரடியாக அங்கே செல்ல அனைவரும் அஞ்சிக்கொண்டிருந்தார்கள். அரசியல் என்றால் பங்கிடுதல்தானே, பங்கிடுதல் என்றால் பூசல்.
ஆனால் பேசாமலிருக்கவும் இயலாது. குடி மேலெழ மேலெழ எச்சரிக்கைகள் அகன்றன. இயல்பாகவே “இந்தக் கூட்டை தந்தை ஏற்பாரா?” என்று ஃபானுமான் கேட்டான். உங்கள் பெயர் முதல் முறையாக அங்கே சொல்லப்பட்டது. ஆனால் அனைவர் நெஞ்சிலும் அதுவே திகழ்ந்துகொண்டிருந்தது. “ஏற்காவிட்டால் என்ன?” என்று எவரோ மறுமொழி கூறினர். ஃபானு ”தந்தை பெரியவர், எந்த வினாக்களுக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் எந்தை பிறந்து அருளியிருப்பது யாதவ குலத்தில். யாதவக் குருதியில் ஒரு துளி அவர். எந்நிலையிலும் அலை கடலைவிட பெரிதாவதில்லை. அவர் யாதவ நெறிகளுக்கு கட்டுப்பட்டாகவேண்டும்” என்றார்.
சந்திரஃபானு “ஆனால் இங்கே அவரை தெய்வம் என்று கொள்கிறார்கள்” என்றார். அதற்கு சுஃபானு மறுமொழி சொன்னார். “ஆம், ஆனால் அவர் வெறும் தெய்வம் என்றாக வேண்டும் எனில் அவர் யாதவராக பிறந்திருக்கக் கூடாது. யாதவராகப் பிறந்தமையாலேயே அவர் யாதவ தெய்வம் என்றே கருதப்படுவார். யாதவர்களின் தெய்வங்கள் யாதவர்கள் பலிக்கும் கொடைக்கும் நுண்சொல்லுக்கும் கட்டுப்பட்டவை.” லக்ஷ்மணையின் மைந்தர் காத்ரவான் “ஆம், அது நல்ல மறுமொழி” என்று சொன்னார். “மெய்யாகவே அது நல்ல மறுமொழி. அவர் யாதவர்களில் பிறந்தார். ஆனால் அது அவர் தெரிவு அல்ல. அவர் மத்ரநாட்டு அரசியை மணந்தார். அது அவருடைய தெரிவு. ஆகவே அது தெய்வத்தின் ஆணை. அனைத்து யாதவர்களுக்கும் மேல் நின்றிருக்கும் மாறாத ஆணை அது!”
“எந்த ஆணையும் எங்கள்மேல் இல்லை. நாங்கள் தொல்குடியினர். இந்நிலத்திலுள்ள புல் போன்றவர்கள். புல்லின்றி உயிரில்லை” என்றார் ஃபானு. அது யாதவர் வழக்கமாகப் பேசும் பெரும்பேச்சு. தங்கள் அவைகளில் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். அந்த அவையில் செய்யக்கூடாதது அது. யாதவர்கள் தங்கள் அவைகளில் எப்படி பேசுவார்களோ அப்படி அனைத்துக் குடிகளின் கூட்டங்களிலும் பேசுவார்கள். அதனூடாக அனைவரையும் அயன்மைப்படுத்திக்கொள்வார்கள். அந்த நுட்பத்தை கற்ற யாதவர் தாங்கள் ஒருவரே. சூரசேனரும் பலராமரும்கூட அதை கற்றுக்கொள்ளவில்லை.
“ஆலமரங்கள் சரியும். புல் நீடூழி வாழும்” என்று ஃபானு சொன்னார். “ஒன்று அறிக, புல்லை எந்தப் புயலும் அழிக்கமுடியாது! காட்டெரி அழிக்கமுடியாது. புல் அன்னை. அனைத்து உயிருக்கும் அமுதூட்டுவது. மண்ணின் கருவில் நீடுவாழும் கலை அறிந்தது. ஆழ வேரூன்றும் அருகும் புல்லே. மிதந்தலையும் நீர்ப்புல்லும் உண்டு. புல்லை வணங்குகின்றன வேதங்கள்” என்று அவர் தொடர்ந்தார். அதை அவர் ஏன் பேசுகிறார் என்றே எவருக்கும் புரியவில்லை. அவரை சுஃபானு தடுத்து “நாம் இங்கே புல்லை உண்ணும் விலங்குகளை உண்ண வந்திருக்கிறோம்” என்றார். அனைவரும் நகைத்து அத்தருணத்தை கடத்தி கொண்டுசென்றார்கள்.
அவ்வாறு தொடங்கியது அந்தச் சொல்லாடல். ஃபானு பேசிக்கொண்டே சென்றார். தந்தையே, அது சுஃபானு அவரில் ஓதிச்செலுத்திய சொற்கள். நீங்கள் எதற்கெல்லாம் கட்டுப்பட்டவர் என்று மூத்தவர் சொல்லத்தொடங்கினார். பின்னர் எவரெல்லாம் உங்களை கட்டுப்படுத்துவர் என்று சொன்னார். பின்னர் எப்படியெல்லாம் உங்களை கட்டுப்டுத்துவது என்று பேசத்தொடங்கினார். இறுதியில் உங்களை அனைத்துச் சரடுகளாலும் கட்டி அசைவிலாது நிறுத்தினார். உங்கள் மேல் தங்கள் வெற்றியை அவ்வண்ணம் நிறுவிய பின்னர் உங்களை மெல்ல களியாடத் தொடங்கினார். “அவர் கட்டற்றவர், ஆனால் காற்று எங்கும் நிலைகொள்வதில்லை, எதையும் கட்டுவதில்லை. நிலைகொள்வது மலை, நகர்களென கோட்டைகளென ஆவதும் மலையே. மலை கட்டுகளுக்கு உட்பட்டது. கட்டுவதே கட்டடம் என்று அறிக!”
லக்ஷ்மணையின் மைந்தர் ஊர்த்துவாகன் கேட்டார் “அறியாது கேட்கிறேன். இளைய யாதவர் மாவீரர் என்று கொண்டாடுகிறார்கள். எந்தக் களங்களில் அவர் பெருவெற்றி கொண்டிருக்கிறார்? அஸ்தினபுரியின் துணை கொண்டு மதுராவை வென்றார். பீமனைக் கொண்டு மகதத்தை அழித்தார். அபிமன்யுவை துணைகொண்டு பாணாசுரரை வென்றார். அஸ்தினபுரியைச் சுட்டி அச்சுறுத்தி அருகமைந்த நாடுகளை அடக்கினார். தன் படைகொண்டு சென்று அவர் வென்ற களங்கள் என்ன?” எவரோ நகைத்தனர். பலன் “அவர் வென்றதெல்லாம் சொற்களங்களிலேயே” என்று சொன்னான். “அவர் புரியாத சொற்களின் தலைவர்” என்று ஃபானு சொன்னார். சிரிப்புகள் உணவுக்கூடமெங்கும் நிறைந்தன.
பிரகோஷன் சிரித்தபடி “அவ்வெற்றி உண்மையில் நன்று. அவர் உரைக்கும் சொற்களில் ஒன்றுகூட புரியாதவர்களை பிறர் வெல்வது எளிதல்ல. எனென்றால் அறியாச் சொல் வேதம் என்று நம்புபவர் எளியோர்” என்றார். அனைவரும் வெடித்து நகைத்தனர். அவர்களில் பலர் ஏன் நகைக்கிறார்கள் என்றே அறிந்திருக்கவில்லை. “அவர் வெற்றிகொள் பெருவீரர்! சூதர்களின் பாடல்கள் அவ்வாறு உரைக்கின்றன” என்று அபராஜித் சொன்னான். “அவர் எட்டு பெண்களை வென்றார்” என்று எங்கோ ஒரு குரல். அது அதிஃபானுவின் குரலெனத் தோன்றியது. மீண்டும் சிரிப்பு.
“ஆம், சூதர்களின் பாடல்களில் வென்று அவர் காலத்தை கடந்து செல்வார். அதற்குப் பின் இங்கே மெய்யாகவே அவர் எவரையும் வென்றது இல்லை என்று ஒருவர் சொன்னால் பித்தனென்றே ஆவார்” என்றார் சுஃபானு. “வெல்லவேண்டியது சூதர்களையே என்று அறிந்தவர்” என்றார் மத்ரரான மகாசக்தன். “இந்தச் சூதர்களின் நாவை முதலில் அடக்கவேண்டும்” என்றார் மத்ரரான சகன். “பூசணிக்கொடியின் வேரை வெட்டுவதே எளிது. அது படர்ந்து செல்லும் திசைகள் அனைத்தையும் சென்று நோக்கி வெட்ட எவரால் இயலும்?” என்றார் சுஃபானு. “ஆம், வேரை வெட்டவேண்டும். வேரில் வெந்நீர் விடவேண்டும்” என்று ஒரு குரல்.
நகைப்புகள், இளிவரல்கள், ஒவ்வொருவராக மேலும் மேலும் கள் போதை கொண்டனர், ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை முற்றழித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து பிறிதொருவரை வெளியே எடுத்தனர். பிறதொருவர் அறியாது கரந்தவை, ஒவ்வொரு கணத்திலிருந்தும் ஊறிச் சொட்டி எஞ்சிய நஞ்சின் திரள். அவர்கள் அனைவரையும் இணைத்தது உங்கள் மீதான காழ்ப்பும் விலக்கமும். அதை அவர்கள் வெளிப்படுத்தியதிலுள்ள சிறுமையும். தீமையையும் சிறுமையையும் பங்கிட்டுக்கொள்பவர்களிடையே உருவாகும் ஒற்றுமை வியப்பூட்டுவது.
ஃபானு “என் புகழ் என்பது ஒருநாளேனும் களத்தில் எந்தையை வெல்லும்போதுதான் நிறைவுறும்” என்றார். “கொல்லும்போது என்று சொல்லுங்கள், மூத்தவரே. கொல்வதும் உகந்ததே” என்று பிரஃபானு சொன்னார். “ஏனெனில் தந்தையாயினும் பிதாமகரே ஆயினும் மண்ணின் பொருட்டு கொல்லலும் ஆகும் என்ற நெறியை வகுத்து உலகுக்கு அளித்தவர் அவர்.” ஊட்டறை பேரொலி எழுப்பியது. ஓரிருவர் கையில் கோப்பையுடன் எழுந்துவிட்டனர். “எனில் சொல்க. எந்நெறியின் பொருட்டு அவரை கொல்லலாம்?” என்றார் ஃபானு. “தந்தையையும் கொல்லலாம் என்னும் நெறியின் பொருட்டு. அவர் தந்தையின் இடத்தில் இருந்த கம்சரை கொன்றார் என்பதன் பொருட்டு” என்று சுஃபானு சொன்னார்.
பிரகோஷன் “அறமென ஒன்றைச் சொல்லி அதன் பொருட்டு களம் நின்றால் நாம் இயற்றுவது அனைத்திற்கும் பொறுப்பை அறமே ஏற்றுக்கொள்ளும் என்று அவர் சொன்னார். அறம் என்ற சொல்லை ஆணித்தரமாக சொன்னால் அது நம்மை சூதர்சொற்களில் கொண்டு அமரச்செய்யும். நாம் அறத்தோடு நின்றோம் என்று சூதர் நிறுவினால் அந்த அறமே எழுந்து வந்தாலும் அதை மறுக்கமுடியாது” என்றார். சுஃபானு “ஆம் மூத்தவரே, ஒருமுறையேனும் தந்தையை வெல்ல வேண்டும்” என்றார். “எனில் எண்பது முறை தந்தையை கொல்ல வேண்டியிருக்கும்” என்று பிரகோஷன் சொன்னார்.
“எண்பது முறை கொல்லப்பட்ட பின்னர் அவரில் எஞ்சுவது ஒன்றுண்டு. அதை அவரே கொல்ல வேண்டும்” என்றான் ஃபானுமான். அந்தச் சொல் அனைவரையும் எவ்வகையிலோ கவர்ந்தது. “ஆம், எண்பது முறை கொல்லப்படுதல்! நன்று! எண்பது முறை கொல்லப்படுதல்!” என்று கள்மயக்கில் அதிஃபானு கூவினான். “எண்பது முறை!” என்று பலர் கூவினார்கள். “அதெப்படி எண்பது முறை? எண்பது உறுப்புகளா?” என்றான் ஸ்ரீஃபானு. “எண்பது பெயர்கள் அவருக்கு… எண்பது முகங்கள்” என்றான் பிரபலன். மதுக்கோப்பைகளை உயர்த்தியபடியும் கைகளை தூக்கியபடியும் “எண்பது முறை கொல்லுவோம்!” என்று கூவினர். கூச்சலிட்டு கைகளை வீசினர். ஆர்ப்பரித்தனர். எங்கும் வெறிகொண்ட முகங்கள். சிரிக்கும் பற்கள்.
எந்தையே, அன்று எண்பது முறை என்னும் சொல்லை நானும் பலநூறு முறை என் நாவால் சொன்னேன். எண்பது பேரும் ஒருவராதல், ஒவ்வொருவரும் எண்பது முறை உங்களை வெல்லுதல். எண்பது எத்தனை அழகிய எண்! எண்பது வஞ்சங்கள், எண்பது தயக்கங்கள், எண்பது விந்தையான தனிமைகள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் எண்பது வடிவில் எழுந்தருளியிருக்கிறீர்கள் என்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எண்பது தோற்றங்களா அன்றி எண்பது பிறழ்வுகளா? எண்பது மீறல்கள் போலும். எண்பது விடுபடல்களோ ஒருவேளை? தந்தையே, மைந்தர் என தந்தையில் எழுவதுதான் என்ன? மீள நிகழ்த்துவதில்லை இயற்கை. எனில் எஞ்சுவதோ விஞ்சுவதோ உண்மையில் என்ன?
அம்மதுக்களியாட்டு முடிந்து நான் கிளம்பும்போது என் தலை வீங்கி பெருத்திருந்தது. சேற்றில் சிக்கிக்கொண்ட யானைபோல் தம் எடையில் தாமே தடுமாறிக்கொண்டிருந்தன என் கால்கள். என்னை ஏவலர்கள் கைத்தாங்கலாக பற்றி என் அறைக்கு கொண்டுசென்றனர். “போர் அறிவிக்கப்பட்டுவிட்டது!” என்று எனக்குப் பின்னால் ஒருவன் சொன்னான். “இனி எவரும் எதையும் அஞ்சி தயங்கவேண்டியதில்லை. எதன் பொருட்டும் ஐயம் கொள்ளவும் வேண்டியதில்லை. ஒவ்வொன்றும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொன்றுக்கும் பொழுது குறிக்கப்பட்டுவிட்டது. நாம் வென்றாகவேண்டியது அவரைத்தான்.”
“ஆம், எங்கு இருந்தாலும் தேடி அவரை இங்கு வரச்சொல்வோம். இங்கு வந்து அவர் அறிவிக்கட்டும் எது முதன்மையானதென்று. எது அழிவற்றதென்று!” எவர் குரல் என அறியேன். குரல் மட்டும் கேட்டால் அது எண்பதில் எவராகவும் இருக்கலாம். எங்களை எங்கள் அறைகளில் ஒவ்வொருவராக கொண்டுசென்று படுக்க வைத்தனர் ஏவலர். என் அறை மஞ்சத்தில் படுத்தபோது நீர்ப்பரப்பின் மீது நீர்த்தாவி பூச்சியைப்போல் நான் பறந்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன். என் கைகால்கள் எடை மிகுந்து விழுந்தன. என் நா குழைந்த சொற்களாக இருந்தது. எதை எதையோ எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் ஓர் உலுக்கலில் உணர்ந்தேன், என் அருகே தாங்கள் அமர்ந்திருந்தீர்கள். என் அருகே, தலைக்கு அருகே!
நான் படுத்தபடி “எந்தையே!” என்றேன். நீங்கள் ஒளி மிக்க சிறிய வாளொன்றை என்னிடம் அளித்தீர்கள். “எதன் பொருட்டு, தந்தையே?” என்றேன். “நீ விழைந்தது” என்று சொன்னீர்கள். “இல்லை” என்று நான் சொன்னேன். “நீ விழைந்தாயெனில்…” என்று நீங்கள் கூறினீர்கள். “இல்லை இல்லை” என்றேன். “நீ விழைந்தது” என்று மீண்டும் கூறினீர்கள். “இல்லை தந்தையே, நான் விழையவில்லை. மெய்யாகவே விழையவில்லை” என்று நான் கூறினேன். நீங்கள் அந்தக் குறுவாளை நீட்டியபடி புன்னகைத்துக்கொண்டே இருந்தீர்கள். எண்ணியிராக் கணம் ஒன்றில் நான் எழுந்து அக்குறுவாளை வாங்கி தங்கள் நெஞ்சில் பாய்ச்சினேன்.
குறுவாள் பாய்ந்து நீங்கள் நீர்ப்பாவை என கலைந்து மறைந்தீர்கள். நான் எழுந்து நின்றுகொண்டிருந்தேன். என் காலடியில் ஓர் உடல் கிடந்தது. தந்தையே, குனிந்து நான் அதை பார்த்தேன். என் உடல் விதிர்ப்படைந்தது, தள்ளாடி நடந்து அறைக்கதவைத் திறந்து வெளியே பாய்ந்தேன். உடனே அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்னும் விசை மட்டுமே என்னுள் எஞ்சியிருந்தது. கதவைத் திறந்து வெளியே பாய்ந்தபோது வெற்றிடத்தில் சுழன்ற விசைகொண்ட காற்றை உணர்ந்தேன். என் புரவியை அடைந்து அதை அவிழ்த்து ஏறி அதை குதிமுள்ளால் ஊக்கி விசையூட்டி காற்றில் பாய்ந்தேன். ஒழிந்த நகரினூடாக வெறிகொண்டு விரைந்தேன்.
எத்தனை தொலைவு, எத்தனை பொழுது என்று அறிந்திருக்கவில்லை. சென்று நின்றபின்னரும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. துவாரகையின் மேற்கே விரிந்திருந்த வறுநிலங்களின் ஒரு பகுதி என்று பின்னர் கணித்துக்கொண்டேன். அங்கு நான் உணர்ந்தது ஒரு தனிமை. ஆனால் முற்றிலும் விடுபட்டிருந்தேன். பேருருக் கொண்டிருந்தேன். நான் என்னை வெல்ல முடியாதவனாக, துயரற்றவனாக உணர்ந்தேன். அப்போதும் தனிமை கொண்டிருந்தேன். ஆனால் அத்தனிமை பெருங்கொண்டாட்டத்தை பேருவகையை அப்போது அளித்தது. தந்தையே, அப்போது நான் தாங்களாக இருந்தேன்.
விடியும்வரை அங்கே நின்றிருந்தேன். பாலையில் வானம் மிக விரைவாகவே ஒளிகொண்டுவிடுகிறது. மிளிரொளி. எதுவும் சுடர்விடுவதில்லை, எல்லாம் தங்கள் உள்ளொளியை உமிழ்கின்றனவோ என்று தோன்றும். என் கண்கள் துலங்கிவிட்டிருப்பதை அறிந்து, காலம் உணர்ந்து திரும்பிச் செல்லும்பொருட்டு புரவியை நோக்கினேன். நான் நின்றிருந்த இடம் ஒரு மணல்மேடு. துவாரகையை ஒட்டிய மணற்பரப்பின் மிக உயரமான இடம் அதுவே. அங்கிருந்து ஒற்றை நோக்கில் துவாரகையை கண்டேன். இரு குன்றுகளில் ஒன்றின்மேல் அந்த மாபெரும் நுழைவாயிலுக்கு அப்பால் நீலக்கடல் மேல் வானம் படிந்திருந்தது. துறைமுகத்தில் ஒரு பீதர்நாட்டுக் கப்பல் அலைகளில் ஆடி நின்றது. சுழன்று சுழன்றேறும் துவராகையின் தெருக்கள். கீழே வைக்கப்பட்ட ஒரு மாபெரும் படையாழி போன்ற அதன் வடிவம்.
சிறிய செப்புபோலிருந்தது. தெய்வங்கள் விட்டுச்சென்ற களிப்பாவை போலிருந்தது. குனிந்து எடுத்து கையில் வைத்துக்கொள்ளலாம்போல. நான் அங்கு நின்று அதை பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநேரம்.