வானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

வானில் அலைகின்றன குரல்கள் ஒரு திகைப்பை உருவாக்கியது. நான் ராணுவத்தில் சிக்னலிங்கில் இருந்தவன். எத்தனையோ அனுபவங்கள். ஆனால் அவற்றிலிருந்தெல்லாம் ஒரு கதை எழமுடியும் என்று தோன்றவில்லை. உண்மையில் நாம் வாழும் நூற்றுக்கணக்கான வாழ்க்கைத்தளங்களில் இருந்தெல்லாம் ஏன் கதைகளே வரவில்லை என்று ஆச்சரியமாகவே இருக்கிறது. நவீனத்தொழில்நுட்பம் சார்ந்து ஏன் கதைகள் எழுதப்படவில்லை

 

ஏனென்றால் நவீனத்தொழில்நுட்பமோ அல்லது வாழ்க்கைக்களங்களோ அப்படியே பதிவுசெய்து வைத்தால் அதெல்லாம் இலக்கியமே அல்ல. அதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமே இல்லை. அதெல்லாம் அனுபவப்பதிவுகள். ஆனால் அவை ஒரு தளத்தை அடையவேண்டும். இந்தக்கதையில் வானில் நிறைந்திருக்கும் மின்னலைக்கதிர்கள் என்ற விஷயம் மிக ஸ்பிரிச்சுவலான ஒன்றாக மாறியிருக்கிறது.

 

இது தொழில்நுட்பத்தைச் சொல்லவில்லை. அதை வைத்து மிக கவித்துவமான ஆன்மிகமான வேறொன்றைச் சொல்கிறது. காலாகாலமாகவே மனிதமனம் வானத்தை நோக்கி ஏங்கிக்கொண்டிருக்கிறது. மறைந்தவர்கள் எல்லாம் அங்கே இருப்பார்களா என்று கனவுகாண்கிறது. அந்த மாறாத ஏக்கத்தை நோக்கி செல்ல இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படித்தான் இது கதையாக ஆகிறது

 

சரவணன் எம்

 

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

 

நலம்தானே..?

 

 

தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் வீட்டிலிருந்தே ஐரோப்பாவின் அலைபேசி பிணையங்களை நிர்வகித்துக்கொண்டிருக்கிறேன். எங்களின் நிறுவனம் பத்திற்கும்  மேற்பட்ட சிறுசிறு மெய்நிகர் (MVNO)அலைபேசி நிறுவனங்களுக்கு பிணைய நிர்வகிப்பு  செய்துவருகிறது. “வானில் அலைகின்றன குரல்கள் ” மனதை நெடுநேரம் நடுக்குறச்செய்து கொண்டே இருந்தது…!

 

மெல்லிய பதட்டத்தின் சுவடுகளோடு தான் படிக்கநேர்ந்தது. 2001-ல்  தடித்த தந்தி வடங்களை மட்டுமே பார்த்திருந்த எங்களுக்கு ஆப்டிகல் பைபர் (ஒளியிழை வடமென சொல்லலாம் தானே) புதுமையான தொழில்நுட்பமாக இருந்தது கர்நாடகாவின் வடக்கு மற்றும் கடலோர பகுதிகளான மங்களூர், உடுப்பி , பட்கல், கார்வார் வழியாக கோவா மாநிலம் மற்றும் புனே வரையிலான பைபர் பாதை நிறுவுதல் தொடர்பான திட்டமிடல்களும், நிர்வாகத்தையும், பெருத்த பெருமிதங்களோடு செய்துகொண்டிருப்பேன்..அப்போதுநான் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் மிகமிக இளைஞனாக துறுதுறுவென பைபர் இணைப்பு ஸ்விட்சுகளுடன் உரையாடுதல், சிலசமயம் பெங்களூரு சுவிட்ச் ரூமில் குரல்களுக்கிடையில் உலவுவதென இருந்துகொண்டிருந்த காலம். நாங்கள் அனைவருமே “தோட்டான்களாகவே” இருந்த காலகட்டம் அது…

 

திடுக்கிடலோடு நினைத்துக்கொண்டோம் …பல்வேறு கூக்குரல்கள்,மன்றாடுதல்கள், உறுமல்கள்,கனிவுகள்,மிரட்டல்கள் நுண்ணலைகளோடு கலந்து கிடக்கும் வெளியது….க்ராஸ்பாரை நாங்கள் எக்ஸ் கேட் என்போம் …தொழில்நுட்பம் எப்படி வளர்ந்துவிட்டது…!!

 

எங்கள் அனைவருக்கும் பதவியிடமாறுதலும் பதவி உயர்வும் வந்து விலகி வந்துவிட்டாலும் இன்றும் நுண்ணலை ஒலியின் வெளி  ஈர்த்துக்கொண்டே இருப்பது…!!

 

“தோட்டானை” புரிந்துகொள்ள முயலும்போது ஸ்விட்சிலிருந்து விலகிவிட விரும்பாமல் தொடரும் நண்பனைப்புரிந்துகொள்ள முடிகிறது…!!

 

 

இந்த கொரோனா தனிமையில், ஒரு தொலைத்தொடர்பு  பொறியாளனின், பிணையத்தின் கட்டுமானத்தை எழுப்புவதில் உள்ள பங்கினை நினைத்துக்கொள்கிறேன்…!!

 

அன்புடன்,

 

இ . பிரதீப் ராஜ்குமார்

 

 

Life of a Telecom Engineer (Transmission)

+++++++++++++++++++++++++++++++++++

 

உங்கள் தேவையென்ன, நோக்கமென்ன …

எண்ணங்களோ, விருப்பங்களோ

கோபங்களோ போராட்டங்களோ …

வெளிப்படவேண்டிய இடங்களில், களங்களில்,

கொண்டுசென்று சேர்க்கும் நாளங்கள் நாங்கள்..!!

 

வெயிலோ மழையோ

ஆழ்கடல் நீரோ … பெரும்பாலை நிலமோ

உங்கள் உணர்வுகளுக்குத் தடையில்லை…

எங்கெங்கிலும் எங்கள் கேபிள்கள்…

அவை வெறும் சிலிக்கான் தந்திவடங்கள் மட்டுமல்ல

உங்களின் நேரங்கள், செயல்கள், ஆக்கங்கள்

அவற்றுள் பயணிக்குமென அறிவோம்…!!

 

முதல்முதல்

ஒளியிழை வடத்தின்  (Optic Fiber)

இணைப்பின் பொழுது,கையில்  ஆழப்பதிந்திட்ட

தழும்பு இன்றும் அழியாத சிரிப்பாய்..!!

உணவில்லா நேரங்களில் ..வெறும் தேநீரோடும்

உதவியில்லா தூரங்களில் ..கால்நடையாகவும்

இந்த தேசத்தை கட்டியெழுப்பிய

தருணங்கள் எங்களுள் என்றும் வாழ்பவை..!!

 

மாநிலத்தில் முதலாக நுண்ணலை, (MW)

செல்பேசியில் திகழத்தொடங்கிய

கணங்கள் இன்றும் கண்முன் நிற்பவை.

எளிதில் நீங்கள் அலட்சியப்படுத்திவிடக்கூடிய

பிணைய இணைப்பினை (NW Coverage) கட்டியெழுப்ப

எங்களின் உழைப்பு அசாத்தியமானது..!

மண்முட்டி மேலெழும் சிறுவிதையின்

துயரையோ அதன் பயணத்தையோ

வானளாவும் பறவைகள் அறிவதில்லை..!!

 

நீங்கள் உங்கள் ஆழ் கனவுக்குள் இலயித்திருக்கும்போது

எங்கள் கணினித்திரைகள் உயிர்த்திருக்கும்…

உங்களின் மென்படுக்கை தாலாட்டும்போது

தரவுமையங்களில் (Datacenter) செயல்திறனை (PM)

மதிப்பிட்டுக்கொண்டிருப்போம்..!!

 

உங்கள் குழந்தைகளை

இணையவழி ஆரத்தழுவுகிறீர்கள் தொலைவில் இருக்கையில்..

எங்களின் கரங்கள் வழியாக …!!

உங்கள் தாய்முகம் நோக்கி நெகிழ்கிறீர்கள் ..

எங்களின் கண்கள் வழியாக …!!

இதோ இருக்கிறோம் இங்கே …

எங்கெங்கு உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறீர்களோ

அங்கெல்லாம் இருக்கிறோம்

உங்களோடு நாங்கள் ….!!!

 

 

— Telecom Engineer

     Transmission 

Accidental angel of 2 small hills

கோட்டை [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

கோட்டை கதையை வாசித்தேன். அழகான ஒரு சின்ன ஃபேபிள் போல இருந்தது. எதற்கு எதிராக எந்தக்கோட்டைக்கு எதிராக? அந்தக்கதையில் எங்கேயும் மண் சொல்லப்படவில்லை. ஆனால் எனக்கு மண் என்னும் அன்னைக்கு எதிராக என்று தோன்றிக்கொண்டே இருந்தது. மண்ணை கசக்கி உறிஞ்சி குடித்து அதற்காகச் சண்டைபோட்டாலும் நமக்கு போதவில்லை இல்லையா?

 

ஆ.குமாரசாமி

 

 

அன்புள்ள ஜெ

 

கோட்டைச் சிறுகதையை வாசித்தேன். பாலியல் சித்திரிப்புடன் மெல்லிய பகடியும் சேர்ந்த கதை.முதியவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களில் சிலருக்கு காமம் சார்ந்த உரையாடல் என்பது ஒருவகை நய்யாண்டியாகப் பகடியாக மிக யதார்த்தமாக ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். அதில் விரசம் என்பதோ கிளர்ச்சியோ எல்லாம் குன்றி பகடியே மிஞ்சியிருக்கும். அப்படியானவராகத்தான் அணஞ்சி தெரிகிறார்.

 

கீழ் மூக்கு என்பது போன்ற தொடர் படிமமாகவும் மெல்லிய நகைப்பையும் கொண்டு வருகிறது. அன்னையில் ஏற்படும் கசப்பு காமத்திலே தீர்கிறது. பதின்ம வயதில் மெல்ல வந்து மகரந்த மழையாய்த் தீண்டிச் செல்லும் பாலியல் இச்சையும் இக்கதையில் உள்ளது. வேரைப் பிழுதெடுக்கும் யானை நுண்ணிய பூவையும் இனங்கண்டு கொள்ளும் தருணமே கோட்டை பிடிக்கும் தருணம்.

 

அர்வின்குமார்

முந்தைய கட்டுரைகோட்டை, வேட்டு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாற்புறமும் திறத்தல்