ஆடகம் [சிறுகதை]
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கண்ட பித்தளை சிற்பம் இது..கண்டவுடன் மிகுந்த மனஎழுச்சி..உடனே வாங்கிவிட்டேன்..கடந்த வருடத்தின் மன உளைச்சலில் இருந்து மனதை திசை திருப்ப வீட்டை அழகு படுத்தும் பணியில் இறங்கினேன்.. ரதியை நோக்கி மனதை திருப்பும் முயற்சி தான்..ஆயினும் முன்பு போல காண்பவை எல்லாவற்றுக்கும் கண்கள் விரிவதில்லை..இதை கண்டவுடன் உங்கள் அரதி கட்டுரை நினைவுக்கு வந்தது..சிலருக்கு ஆஞ்செயநேயர் ,பிள்ளையார் போல எனக்கு இது என்று தோன்றியது.
பாம்பு எனக்கு உயிர் ஆற்றலின் சின்னம்…வேறு எதுவாகவும் காண முடிவதில்லை…இது ஒரு பீடம் அல்லது ப்ரபாவளி..சிறிய சிற்பம் ஏதேனும் வைக்கலாம்..என் கணவர் இது இப்படியேவா வைக்க போற என்று கேட்டார்(அவர் ஒரு இந்திய மனமே இல்லை..அவர் மனதில் இந்த கேள்வி எழ நியாயமே இல்லை…10 வருட காதல் வாழ்வின் மாற்றங்கள் என்று நினைக்கிறேன்).அந்த விரிந்த குடை தரும் உணர்வை எந்த தெய்வத்தை நிறுத்தினாலும் ஒரு மாற்று குறையும் என்று தோன்றியது.
ஆடகம் கதையில் கதைநாயகன் எதிர்பார்த்த அதே தான் நானும் எதிர்பார்த்து வாங்கினேன் என்று நினைக்கிறேன்…கதை அதை மறுஉறுதி செய்தது…வாசித்ததில் மகிழ்ச்சி.
நன்றி,
பாரதி செந்தூர்
அன்புள்ள ஜெ
ஆடகம் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். நாகவழிபாடு இந்தியாவில் நெடுங்காலமாகவே உள்ளது. நாகப்பாம்பு விஷத்தைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. நாகம் ஆற்றலின் அடையாளம். நாகம் பயத்தைப்போக்கும்.
ஜான் சுந்தர் “ப்ரே டு ஹிம்” என்று சொல்லும் இடம் சிலிர்க்கவைத்தது. இங்கே நாகத்தை ஒரு விலங்காக நான் பார்க்கவில்லை. இயற்கையாகவே பார்க்கிறேன். இயற்கையின் நஞ்சு அமுதாகவும் செய்கிறது. அமுதே நஞ்சாகவும் ஆகிறது.
கொரோனோவிடம் சம்பந்தப்படுத்திக்கொண்டேன்
எஸ்.டி.குமார்
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நான் எழுதும் முதல் கடிதம்.
இப்படி தனிமையில் இருக்கையில் மனதை ஆட்கொண்டு ஒருநாலைந்து மணிநேர்ம் கூடவே இருக்கும் கதைகளால்தான் இந்த வாழ்க்கையை வாழமுடிகிறது. தனிமையில் இருக்கும்போது சினிமா பார்க்கலாம் என்றெல்லாம் நினைத்தேன்/ ஆனால் எந்தப்படத்தையும் இருபது நிமிடங்களுக்குமேல் பார்க்கமுடியவில்லை. கற்பனையில் நம்மை வெளியே கொண்டுபோகும் ஏதாவது தேவைப்படுகிறது
பர்மாபின் அந்த தீவை கற்பனையில் கண்டேன். அங்கே அந்த பர்மியப்பெண். அந்த மண்ணைப்போலவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும் அவளுடைய ரகசியம். அற்புதமான கதை அது. ஒரு மண் நமக்கு அப்படி ஒரு அவெர்ஷனாகத்தான் அறிமுகமாகிறது. மெல்லமெல்லத்தான் நமக்குள் புகுந்து நெருக்கமானதாக ஆகிறது
ராம் சந்தானம்
அன்புள்ள ஜெ
தவளையும் இளவரசனும் கதையை வாசித்தபோதை விட போகப்போக ஒரு வகையில் அது வளர்கிறது. குறிப்பாக இப்படி குவாரண்டைனில் இருக்கும்போது
இதேபோலத்தான் குடும்பம் கலாச்சாரம் நாடு என்று மூடிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டோமா? இருபது வயதிலே கிளம்பி எதைவேண்டுமென்றாலும் செய்யலாம் என்று வாழ்ந்திருக்கவேண்டுமா? கூட்டை திறந்துவிட்டாலும் போகாத எலிபோல வாழ்ந்து விட்டோமா
எதையும் பயம். ஏதாவது நடந்துவிட்டால் என்று பயம். ஆகவே தெரிந்ததையே செய்து, தெரிந்தவகயிலேயே வாழ்ந்து இப்ப 62 வயது ஆகிவிட்டது. இப்ப கொரோனாவிலே செத்துப்போனால் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. பயந்துசெத்தோம். கடைசியிலே பயத்தாலே செத்தோம்
இந்தக்கதையில் உள்ள அந்த சீண்டல் அறைகூவல் அற்புதமான ஒன்று. புதிய உலகத்துக்கான செய்தி அது. அதை வயசானவனாக என்னால் உணரமுடிகிறது
ஸ்ரீதர்