ரவி ஆஸ்பத்திரியைச் சென்றடைந்தபோது ஆனந்தியின் அம்மா எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். எதிரிலும் பெரிய கட்டிடம் இருந்தமையால் அங்கே வெளிச்சம் குறைவாக இருந்தது.
அவன் மூச்சுவாங்க படிகளில் ஏறிவந்து நின்றபோது அவர் எழுந்து “பாப்பாவை உள்ள கொண்டுபோயிருக்கு” என்றார்.
“எப்டி இருக்கா?”
“வலி தொடங்கியிருச்சு… டெஸ்ட்டெல்லாம் பண்ணணும்னு கொண்டு போயிருக்கு.”
அவன் எந்த டாக்டரைப் பார்க்கவேண்டும் என அலைக்கழிந்தான். மூன்று டாக்டர்களின் போர்டுகளைப் பார்த்தான். எல்லாமே பெண்கள். பின்னர்தான் ஆனந்தியின் அம்மாவிடமே கேட்கலாம் என்று தோன்றியது.
“எந்த டாக்டர் வந்தாங்க? எந்த ரூமிலே இருக்கிற டாக்டர்?”
“டாக்டர் மணிமேகலை… இங்க உள்ள பிரசவ டாக்டர் அவங்கதான்.”
அதன்பிறகுதான் மணிமேகலைதான் ஆனந்திக்கு எல்லா சோதனையையும் செய்தவர் என்பதே அவன் நினைவுக்கு வந்தது. அவன் மணிமேகலையின் அறை வாசலில் சென்று நின்றான்.
நர்ஸ் “என்ன?” என்றாள்.அவன் செய்தியைச் சொன்னதும் “பேரு?” என்றாள்.
“ஆனந்தி. கே.ஆனந்தி.”
“நில்லுங்க. கூப்பிடறேன்.”
அவன் கால்மாற்றி நின்றான். உள்ளே அப்போதும் ஓடிக்கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து ஓடி ஆட்டோ நிலையத்தை அடைந்தான். ஆட்டோ ஓடும்போதே உள்ளிருந்து மேலும் ஓடியது அவன் மனம். ”இன்னும் கொஞ்சம் வேகமா” என்றான்.
“இவ்ளவுதான் இந்த ஆட்டோ போகும் சார்.”
“ஆஸ்பத்திரி போகணும்…”
“என்னாச்சு? எமர்ஜென்ஸியா?”
“ஆமா, வைஃபுக்கு பிரசவம்…”
“வலிதானே வந்திருக்கு? ”
“ஆமா.”
“அதுக்குப்போயா இந்த துள்ளு துள்ளுறே? கூட யாரு இருக்காங்க?”
”அவ அம்மா. கொஞ்ச முன்னாடி வலி வந்திருக்கு. அவங்க அம்மா ஆட்டோ பிடிச்சு கொண்டுபோயி ஆஸ்பத்திரியிலே சேத்துட்டாங்க. எனக்கு ஃபோன்பண்ணினாங்க…”
”அவ்ளவுதானே ஆஸ்பத்திரிக்கு போயாச்சுல்ல? அப்றமென்ன? சும்மாரு…. முத பிரசவமா? ”
”ஆமா.”
”அதான்… முதல்லத்தான் இந்த பயம்லாம்… நம்ம வைஃபுக்கு நாலு… சும்மா கவலைப்படாதே…”
நர்ஸ் உள்ளே கூப்பிட்டாள்.
டாக்டர் மணிமேகலை உட்காரும்படிச் சொன்னாள். ஆனந்தி எங்கே இருக்கிறாள்? டாக்டர் அவளை விட்டு இங்கே ஏன் இருக்கிறாள்?
“டாக்டர் நான் ஆனந்தியோட ஹஸ்பெண்ட். ரவிச்சந்திரன். டி.ரவிச்சந்திரன்”
அவள் ஃபைலை புரட்டியபின் “இங்கதானே வந்திட்டிருக்காங்க..? டெஸ்ட் பண்ணச் சொல்லியிருக்கோம். லேபர் வார்டுக்கு போயாச்சு… எல்லாமே நார்மல்தான். சீக்கிரமே ஆயிடும்.”
”டாக்டர் நீங்க இங்க இருக்கீங்க?”
”தேவைன்னா கூப்பிடுவாங்க. ஒண்ணும் பதற்றமில்லை. கூலா இருங்க” என புன்னகைத்தாள்.
”நான் அவளைப் பாக்கலாமா?”
”லேபர் வார்டுக்கு போய் கேளுங்க… பெரிய வலி இல்லேன்னா உள்ள விடுவாங்க. ஆனா நீங்க கூலா இருக்கணும். சத்தம் கித்தம்போட்டு பிரச்சினை பண்ணிடக்கூடாது.”
“இல்லை… இல்லை டாக்டர்.”
அவன் வெளியே வந்ததும் ஒரு நர்ஸ் அவனை கூட்டிச்சென்றாள். லேபர் வார்டிலிருந்து ஒரு நர்ஸ் வெளியே சென்றாள். கூட்டிசென்றவள் உள்ளே போய்விட்டு வந்து “போலாம்” என்றாள்.
அவன் உள்ளே நுழைந்தான். உள்ளே நீலநிறமான உறைபோட்ட மெத்தையுடன் எட்டு கட்டில்கள் இருந்தன. எட்டிலும் ஆளிருந்தது. நான்கு பேர் அருகே குழந்தைகள் இருந்தன.
அவன் நீலநிற ஆடை அணிந்திருந்த ஆனந்தியை சற்று கழித்துத்தான் அடையாளம் கண்டான். அருகே சென்று அவள் கையைப் பிடித்தான். அவள் கண்களை மூடியிருந்தாள். கண்ணீர் வழிந்து காதை அடைந்திருந்தது. பளபளப்பான கோடாகத் தெரிந்தது.
“வலிக்குதா?”
“எங்க இருந்தீங்க?”என்று பல்லைக் கடித்து சீற்றதுடன் கேட்டாள்.
“இப்பதான் ஃபோன் வந்தது. உடனே வந்திட்டேன். வலிக்குதா?”
“ஆமா” என்று தாடையை இறுக்கினாள்.
“ஒண்ணும் பயமில்லை, எல்லாம் நார்மல்னு சொன்னாங்க.”
“ம்.”
“தைரியமா இரு.”
“வலிக்குது.”
அவன் அவள் கையை அழுத்தினான்.
“நான் வச்சிருந்த பொம்மையெல்லாம் இருக்குல்ல?”
“இருக்கு…எங்க போய்டப்போகுது?’
“ஸ்வெட்டர்லாம் வச்சிருந்தேன்.”
“எல்லாம் அங்கதான் இருக்கும்.”
“ஆம்புளைப்புள்ளை இல்ல?”
“ஆமா, ஒண்ணும்பயப்படாதே.”
“எப்டி இருக்கும்? செவப்பா? இல்ல என்னையப்போல மாநிறமா?”
“எல்லாத்தையும்தான் கற்பனை செஞ்சாச்சே” என்றேன். “எட்டு மாசமா நீ பேசுற பேச்சவைச்சு பாத்தா உனக்கு ஒரு நூறு நூத்தம்பது புள்ளை பொறக்கணும். எல்லா டிசைன்லயும்”
அவள் புன்னகைத்தாள். “ஆமா, இந்த எட்டுமாசமும் வேற ஒரு நெனைப்பும் இல்லை. இப்டி ஒண்ணை மட்டுமே நினைச்சுட்டு வாழ்ந்ததே இல்லை”
“லவ் பண்றப்ப?”
“ஆமா, எங்களுக்கு வேற வேலை இல்லியாக்கும்” என்று சொல்லி முகம் சுளித்தாள்.
“வலிக்குதா?”
“ஆமா, ஒரு சுளுக்கு மாதிரி இருக்கு.”
“அப்டித்தான் இருக்கும். புக்ல படிச்சேன்.”
“இவ்ளவு வலிக்குமா?”
“ஆமா, வலிக்கும்ல?”
“எவ்ளவு இமேஜின் பண்ணிட்டேன். யப்பா. கொழந்தை கொழந்தைன்னு படங்களா பாத்து… திகட்டவே இல்லை… உலகம் முழுக்க கொழந்தையா நிறைஞ்சிருக்கிறது போல… உலகத்திலே கொழந்தை தவிர வேற ஒண்ணுமே இல்லைங்கிறது மாதிரி.”
“நானும்தான்… ஆனா நீ பித்துப்பிடிச்சில்ல இருந்தே.”
“சாமிகூட குழந்தையாத்தான் வரணும்னு தோணும்.”
“குருவாயூர்ல சாமி குழந்தைதான்.. குழந்தையோட போவம்.”
“ஆமா. நான்கூட வேண்டிக்கிட்டேன்” அவள் அவன் கையைப்பிடித்து “ஏங்க எனக்கு அவ்ளவு வெறியா இருக்கு. குழந்தை எப்ப வரும்னு இருக்கு. அப்டியே நெஞ்சோட அணைச்சுக்கிடணும். முத்தம் முத்தமா குடுக்கணும்”
“நான் ஏகப்பட்டது குடுத்தாச்சே” என அவள் வயிற்றை முத்தமிட்டான்.
“அய்யோ பாக்கிறாங்க.”
“பாக்கட்டும்.”
“நானே என் வயித்த சிலசமயம் அணைச்சுக்குவேன்… என் செல்லமே உள்ள இருக்கியான்னு கேப்பேன்.”
அவன் ”உள்ள நீந்திக்கிட்டிருக்கு” என்றான்.
“இப்ப வந்திரும்ல?”
“அது முடிவுபண்ணிட்டுதுன்னுதானே அர்த்தம்? அதான் வலி.”
“ஆமா… அழகா இருக்கும்ல? இத்தினிக்கூண்டா, சின்னஞ்சிறுசா? உதடெல்லாம் மென்மையா பூவாட்டம் இருக்கும். கண்ணிமையெல்லாம்கூட பூதான்.”
“ஒரு மொட்டு மாதிரித்தான் இருக்கும்.”
“அய்யோ!” என்று அவள் கண்ணீர் விட்டாள். புல்லரித்து கழுத்தில் மயிர்ப்புள்ளிகள் தெரிந்தன “எனக்கு நெனைச்சுப்பாக்கவே முடியல்லை… அப்டி இருக்கு.”
“இன்னும் கொஞ்சநேரம்தான்.”
நர்ஸ் வந்து “டாக்டர் கூப்பிடறாங்க” என்றாள்.
“வரேன்…” என்று எழுந்து அவளிடம் கண்களால் விடைபெற்றுக்கொண்டான்.
மணிமேகலை வெளியே ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டு நின்றாள். அவன் அருகே சென்றான்.
“மிஸ்டர்…”
“ரவி” என்றான் “டி.ரவிச்சந்திரன்”
“எஸ், மிஸ்டர் ரவி, ஒரு சின்ன செடெக்ஷன் குடுக்கலாமா? மைல்ட்தான்… அதனாலே எந்த பாதிப்பும் இல்லை.”
“குடுக்கலாம்” என்றான். “ஏதாவது சிக்கலா?”
“எந்தச்சிக்கலும் இல்லை. கொஞ்சம் வலி குறைக்கும்… ரொம்ப குறைக்காது. கொஞ்சம். வலி இருக்கும்னே சொல்லலாம். ஒரு பெக் பிராந்தி அடிச்சதுமாதிரி இருக்கும். ஆனா பதற்றத்தைக் குறைக்கும். ஈஸியா முடிஞ்சிரும்.”
“ஓக்கே டாக்டர்.”
சரி என்று டாக்டர் தலையசைத்தார்.
அவன் திரும்பும்போது “பக்கத்திலேயே உக்காந்திருங்க… பேச்சுக்குடுங்க. ஜாலியா வச்சிருங்க. நாங்க சொல்றவரைக்கும் இருங்க” என்றாள்.
“சரி டாக்டர்.”
அவன் ஆனந்தி அருகே சென்றான்.
“என்ன சொன்னார்?”
“ஒரு ஊசி குடுப்பார். உன்னோட பதற்றம் குறைஞ்சிரும். வலி கொஞ்சம் குறையும்.”
“குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதே.”
“சேச்சே.”
அவன் அவள் கையை மீண்டும் பிடித்துக்கொண்டான். நர்ஸ் வந்து அவள் புஜத்தில் ஊசி போட்டாள். அந்த இடத்தை தடவியபடி “கொஞ்சம் தலைசுத்துற மாதிரி இருக்கும் என்ன?” என்றாள்.
அவள் சென்றதும் ஆனந்தி “நான் குழந்தைகளைப் பத்தியே நினைச்சிட்டிருந்தேன். நம்முளுது எப்டி இருக்கும்னு யோசிக்கவே முடியலை. எல்லா குழந்தைங்க மூஞ்சிகளும் ஞாபகம் வருது. குட்டிக்குட்டியா” என்றாள்.
“ஒண்ணா ரெண்டா!” என்றான் அவன். “நீ காந்தாரி மாதிரி… ஒரே பிரசவத்திலே நூறு பெத்துக்கணும்.”
”நூத்தொண்ணுல்ல” என்றாள்.
“அப்பகூட உனக்குப் பத்தலை” என்றான்.
“விழுந்திட்டே இருக்கிற மாதிரி இருக்கு.”
“அது இந்த ஊசியாலே.”
“படபடப்பா இருக்கு.”
“ஒண்ணுமில்லை… மயக்க ஊசியில்ல?”
“பார்வையெல்லாம் அலையலையா தெரியுது… ஒருமாதிரி கையெல்லால் சோந்துபோயிட்டுது. என்னால அசையவே முடியலை.”
”பேசாம படு… உடம்ப ஈஸியாக்கிரு.”
“ஏங்க ,அது எந்தக்குழந்தை? ”
“எது? ”
“மேலே பறக்குதே? ஃபேன் பக்கத்திலே? ”
“மேலேயா? ”
“அய்யோ நெறைய குழந்தைங்க… ஃபேனைச் சுத்தி குழந்தைங்க பறந்திட்டிருக்கு… ஜன்னல்வரை குழந்தைங்கதான்.”
“சரி பாத்திட்டே இரு.”
“அய்யோ! எல்லாமே செல்லம் செல்லமா இருக்கே… சிவப்பா பூமாதிரி எவ்ளவு கொழந்தைங்க!”
அவனுக்கு பொறாமையாக இருந்தது. சும்மா அவனும் மேலே பார்த்தான்.
“புகை மாதிரி மெதக்குதுங்க” என்று அவள் முகம் மலரச் சொன்னாள் “எல்லாம் நான் ஏற்கனவே பாத்த குட்டிங்க…எல்லாத்துக்கும் என்னைய தெரிஞ்சிருக்கு. தோ, ஒண்ணு என்னையப்பாத்து சிரிக்குது. வாயிலே ஒரே பல்லு அதுக்கு.”
நர்ஸ் வந்து அவனிடம் போகலாம் என்று கைகாட்டினாள்.
அவன் எழுந்து வெளியே சென்று நின்றான். அவன் மாமியார் அருகே வந்து “என்ன சொன்னாங்க?” என்றார்.
“இப்ப ஆயிடுமாம்.”
அவர் “முருகா” என்று கைகூப்பினார்.
அவன் எதிரே இருந்த கட்டிடத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அதன்மேல் மழைநீரின் தடம் மெல்லிய துணிபோல அலையலையாக வழிந்து கறையாக தெரிந்தது.
வாட்சைப்பார்த்தான். நிலைகொள்ளாமல் வராந்தாவின் எல்லை வரை சென்றான். திரும்பி வந்தான். குனிந்து கட்டிடங்களின் இடைவெளிகள் வழியாக வானைப் பார்த்தான்.
மூச்சுத்திணறுவதுபோல் இருந்தது. மாமியார் உதடுகளை மட்டும் அசைத்து முணுமுணுவென ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
கதவு திறந்து நர்ஸ் வந்தாள் “ரவிச்சந்திரன் யாரு?”
“நான்தான்” என்று அருகே சென்றான்.
“சுகப்பிரசவம்… பையன்.”
அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மனம் செயலற்றிருந்தது. “பேஷண்ட் எப்டி இருக்கா?”
“அதான் சுகப்பிரசவம்னு சொன்னேன்ல?” என்றாள் நர்ஸ்.
மாமியார் “முருகா! முருகா!” என்றார்.
அவன் மார்பில் கைகளை கட்டியபடி நின்றான். மகிழ்ச்சி ஏன் ஏற்படவில்லை. ஏன் படபடப்பு நீடிக்கிறது? மகிழ்ச்சி அப்படி எதிர்பார்த்தபடி வருவதில்லையா என்ன?
அவன் பெருமூச்சுக்களாக விட்டுக்கொண்டிருந்தான். கைகளை விரித்து தூக்கி சோம்பல் முறித்தான். டாக்டர் மணிமேகலை ஒரு நர்ஸிடம் பேசியபடி சென்றார்.
நர்ஸ் வாசலை திறந்து “ரவிச்சந்திரன்” என்றாள்.
“நான்தான்.”
“பாக்கணும்னா பாக்கலாம்.”
மாமியார் முண்டியடித்து உள்ளே சென்றாள். நர்ஸ் பின்னால் வந்து “தொடக்கூடாது. பக்கத்திலே மூக்கை கொண்டுபோகக்கூடாது” என்றாள்.
ஆனந்தி தூங்கிக்கொண்டிருந்தாள். முகம் கன்றிப்போனதுபோல் இருந்தது. வயிறு பெரிதாகவே இருந்தது. நீலநிறப்போர்வையால் போர்த்தியிருந்தார்கள்.
அருகே தொட்டிலில் குழந்தை கிடந்தது. மாமியார் அருகே சென்று குனிந்து அதைப்பார்த்தார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அதை தொடாமல் காற்றில் கையை உழிந்து தலையில் வைத்து நெட்டிமுறித்தாள். அதன் தொடாமல் கையை வீசி வீசி வாயில் வைத்து முத்தமிட்டாள்.
அவன் சற்று அப்பால் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்தான். செக்கச்செவேலென்று இருந்தது. உடம்பெங்கும் தோல் உரிந்தது போல .ஏதோ விதைபோல தோன்றியது. இமைகள் ஏன் இத்தனை பெரியவையாக இருக்கின்றன? மண்டை சற்று பெரியதோ? கைகாலெல்லாம் மிகச்சிறியவை.மூக்கே இல்லை. வாய் என ஒரு சிறிய சிவந்த கோடு. கைகளும் கால்களும் மிகமிகச் சிறியவை.
நர்ஸ் “வீட்டுக்குப்போய் மாத்துத்துணி எல்லாம் எடுத்திட்டு வாங்க. சாப்பாடு கொண்டுவரலாம். கஞ்சி, இட்லி…” என்றாள்.
மாமியார் “சரி” என்றார் அவனிடம் “நான் போய் எடுத்திட்டு வாரேன்… இங்க இருங்க” என்றபின் வெளியே சென்றார்.
அவன் நர்ஸிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்து “ஷேர் பண்ணிக்கிடுங்க சிஸ்டர்” என்றான்.
அவள் முகம் மலர்ந்தது “தேங்க்ஸ்” என்றாள்.
அவன் ஆனந்தியின் அருகே அமர்ந்தான். அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அருகே ஓர் அசைவு. குழந்தைதான். அதற்கு தூக்கிவாரிப்போட்டது.
“சிஸ்டர் திடுக்கிடுது”
“அப்டித்தான் செய்யும்.. பீஸ்ஃஃபுல்லா உள்ள இருந்ததுல்ல?”
அவன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் சிணுங்குவதுபோல சுளித்தது. சீனக்குழந்தை போல இருக்கிறதோ? ஜாக்கிச்சான்! அது கையை சுருட்டி அசைத்து மீண்டும் மூக்கைச் சுளித்தது.
“எக்ஸ்யூஸ்மி ஜாக்கிச்சான் சார், ஒரு சின்ன பிரச்சினை. உங்களுக்கு மூக்க வைக்க மறந்துட்டாங்க”
“அதுக்கு அந்த ஒரிஜினலுக்கே மூக்கு இல்லை, போடா”
அவன் புன்னகைத்தான். அப்புன்னகை ஓர் அடைப்பை எடுத்துவிட்டது. அவன் உடலே மகிழ்ச்சியால் நடுங்க தொடங்கியது. எழுந்து கைவீசி கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கவேண்டும் என்று தோன்றியது.
குழந்தை மீண்டும் திடுக்கிட்டது.
“என்ன நினைக்கிறீங்க? இங்க பெரிசா எதையாச்சும் எதிர்பாத்தீங்களோ?” என்று அதனிடம் கேட்டான்.
“சுமாரான எடம்தான்… ஏகப்பட்ட கூட்டம். ஆனா உள்ள மாதிரி போர் அடிக்காது. உள்ள ஒரு டிவிகூட இல்லை.”
அவனே அதற்கு சிரித்துக்கொண்டான். “சாருக்கு என்னபேரு?” என்று கேட்டான். பேரா? சரிதான். ஆனந்தி ஏறத்தாழ இருநூறு பெயர்கள் வைத்திருந்தாள். ”எல்லாத்தையும் போடணுமானா ஒரு ஆர்மிதான் வேணும்.”
அவனுக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பற்களை கடித்துக்கொண்டான். கண்ணீர் வந்தது. இதுதானா மகிழ்ச்சி என்பது? இப்படித்தான் இருக்குமா? அசட்டுத்தனமாக, அபத்தமாக, பித்துக்குளித்தனமாக.
ஆனால் மிக அந்தரங்கமானதாக, மிகமிக எளிமையானதாக.
அவன் நன்றி சொல்ல விரும்பினான். கடவுளுக்கா? அவன் நம்பியதில்லை. நம்பவேண்டுமா? நன்றி சொல்வதற்காகவேனும் ஒரு கடவுள் தேவையா?
எவ்வளவு சிறியது. எவ்வளவு புதியது. ஆனால் அது ஒரு முழு மனிதன். சிணுங்குகிறான். திடுக்கிடுகிறான். அந்த மண்டைக்குள் என்ன இருக்கும்? கனவுகள் இருக்கும் என்கிறார்கள். சிவப்புநிறமான கனவுகள். கனவுகள்தான் முதலில் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னர்தான் உலகமே அளிக்கப்படுகிறது.
அந்தக்கனவில் என்ன இருக்கும்? இங்கிருக்கிறேன் என்னும் உணர்வு இருக்கும். நான் என்னும் எண்ணம் இருக்கும். அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆணவம், “டேய் ஆணவக்காரா!”
குட்டி உதடுகள் பிடிவாதத்துடன் அழுந்தியிருந்தன. குட்டிக்கைகள் பிடிவாதமாக சுருண்டிருந்தன. குட்டிக்கால்கள் நடக்க விரும்புபவை போல நெளிந்தன.
ஆனந்தி முனகினாள்.
அவன் அவள் கையை பிடித்தான் ”இங்க இருக்கேன்.”
அவள் கண்களை திறந்தாள். புன்னகைத்து “எப்ப வந்தீங்க?”என்றாள்.
அவள் நல்ல நினைவுக்கு மீளவில்லை என உணர்ந்தான். “இப்பதான்” என்றான்.
அவள் சட்டென்று எல்லாவற்றையும் புரிந்துகொண்டு “எங்க?”என்றாள்.
“இதோ இருக்கு.”
அவள் திரும்பி குழந்தையைப் பார்த்தாள். எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சின்னதா இருக்கு இல்ல? ”
“ஆமா” என்றான் அவனுக்கு அவள் அப்படிச் சொன்னது ஏமாற்றமாக இருந்தது.
“எனக்கு அப்பவே காட்டினாங்க… முதல்ல பாத்ததும் அப்டியே ஏமாற்றமா இருந்தது. அழுதிட்டேன்.”
“ஏன்? ”
“என்னமோ.”
“ஏன் ஏமாற்றம்? ”
“இனிமே இந்தக்குழந்தைதான் இல்ல?”
அவனுக்கு அவள் சொல்வது புரியவில்லை.
“என்ன சொல்றே?”
“இல்லை…” என தயங்கினாள். “நெறைய கற்பனை செஞ்சாச்சு… எல்லாம் முடிஞ்சிட்டுது… இனிமே இதான் குழந்தை.”
அவனுக்கு அவள் சொல்வது புரிந்தது. அவள் கையை அழுத்தினான். “இதோபார். நம்ம கற்பனைக்கு அளவே இல்லை. அது நுரை மாதிரி… அப்டியே வளந்திரும். உண்மைன்னு ஒண்ணு இருக்குல்ல? கற்பனையை விட உண்மைதானே பெரிசு?”
“ஆமா.”
அவன் அவளிடம் ”நீ நூறு குழந்தைகளை கற்பனை செஞ்சே, ஒண்ணே ஒண்ணுதான் கிடைச்சிருக்கு இல்ல?” என்றான்.
அவள் சிரித்து “ஆமா” என்றாள். ‘நான் எப்பவுமே அப்டித்தான். தீபாவளிக்கு சட்டை எடுக்கிறதப்பத்தி மாசக்கணக்கா நினைச்சுக்கிடுவேன். எந்தச் சட்டை எடுத்தாலும் ஏமாற்றமா இருக்கும்”
“அப்றம்?”
“அப்றம் போட்டா சந்தோஷமாயிடும்.. அதுக்குமேலே அதை தொட விடமாட்டேன்.”
அவன் திரும்பி அதைப்பார்த்தான். “ஒண்ணே ஒண்ணுதான் டெலிவரி ஆகியிருக்கு. நாம ஏன் இதை மல்டிப்பிள் பண்ணிக்கக்கூடாது?”
“எப்டி?”
“இப்ப நீ நூறுபேரு நினைச்சிருக்கே இல்ல?”
“ஆமா.”
“அதையெல்லாம் இதுக்குப் போடுவோம்.”
“ஒட்டுமொத்தமாகவா?”
“இல்ல ஒண்ணொண்ணா… ஒருநாளைக்கு ஒரு பேரு..”
“அய்யோ.”
“ஒருநாளைக்கு ஒரு சட்டை. ஒருநாளைக்கு ஒரு குல்லா.. அப்ப நெறைய குழந்தைகள் ஆயிடும்”
அவள் சிரித்துக்கொண்டு அதை பார்த்தாள். “துக்ளியூண்டு இருக்கு இல்ல?”
அவன் குரலை மாற்றி “மகளே, நீ என் விஸ்வரூபத்தைக் காண்பாய்” என்றான்.
அவள் அவனை அடித்து “அய்யே” என்றாள். “யாராச்சும் கேட்டா…”
“கேட்டா என்ன? சந்தோஷமா இருக்கிறவங்க கொஞ்சம் ஸ்குரூ லூசாத்தான் இருப்பாங்க.”
குழந்தை முகம் சுளித்தது. அதிர்ந்தது.
“அய்யோ தூக்கிவாரிப்போடுது அதுக்கு” என்றாள். “பசிக்குதோ என்னமோ”
***