[ 1 ]
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என அது எழுந்து நின்றது. அதைசூழ்ந்து கடல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. நீராவி எழுந்து அதன்மேல் வெள்ளிமுடி போல நின்றிருந்தது.
பின்னர் குளிர்ந்த லாவாவே அந்த பிளவை மூடியது. அந்தக் கண் மூடிக்கொண்டு துயிலில் ஆழ்ந்தது. அந்த கொப்பளித்த லாவாவின்மேல் நீராவி மழையெனப் பொழிந்து கொண்டே இருந்தது. குளிர்ந்து குளிர்ந்து அது கரியமண்ணாகியது. அதை நாடி பறவைகள் வந்தன. அவை விதைகளையும் சிற்றுயிர்களையும் அங்கே பரப்பின. காடு எழுந்தது. பூச்சிகளும் பறவைகளும் சிறுவிலங்குகளும் செறிந்தன. பின்னர் மனிதன் அங்கே வந்தான். அதை ஓர் ஊராக ஆக்கினான்.
பசிபிக் தீவில் ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே பிற கண்டங்கள் அனைத்திலிருந்தும் விலகி சிதறுண்டு உருண்டு அப்பால் சென்றுவிட்டவை போல கிடக்கும் பலதீவுகள் இவ்வாறு உருவானவை. அவற்றில் ஒன்று டான்னா என்னும் தீவு. வனுவாட்டு குடியரசின் டஃபேயா பிராந்தியத்தின் பல தீவுகளில் அதுவும் ஒன்று. நாற்பது கிலோமீட்டர் நீளமும் பதினைந்து கிலோமீட்ட அகலமும் கொண்ட ஏறத்தாழ வாழைப்பழ வடிவமான தீவு இது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து டானாவின் வைட் கிராஸ் ஏர்போர்ட்டுக்கு மிகச்சிறிய விமானம் கிளம்பிச்சென்றது. அதில் ஏறுவதற்காக நான் வரிசையில் நிற்கும்போதுதான் ஈவா பேக்கரைச் சந்தித்தேன். என்னை நோக்கி புன்னகைத்து “எல்லோ” என்றாள்.
நான் புன்னகைத்து “ஹல்லோ” என்றேன்.
“வனுவாட்டு, அழகான பெயர்” என்றாள். உடைந்த ஆங்கிலம் அவள் ஐரோப்பியப்பெண் என்று காட்டியது.
“ஆமாம்” என்றேன்.
மிகக்குறைவான செந்நிற முடியை பையன்களைப்போல வெட்டியிருந்தாள். செக்கச்சிவந்த காது. ஐரோப்பியர்களுக்குரிய கூரிய சிறிய முகம். சற்றே ஏந்திய மூக்கு. சிவப்புநிறக் கோடு போன்ற வாய். சிறிய உடல்.
அவள் பேசவிரும்புகிறாள் என்று தெரிந்தது. நான் பேச்சை தவிர்க்க விரும்பினேன். நான் பொதுவாகவே அன்னியரிடம் பேசுவதில்லை. அதிலும் இந்தப் பயணம் ஒருவகையில் பூடகமானது.
ஆனால் அவள் என்னை அறிமுகம் செய்துகொள்ள விரும்பினாள். எமிக்ரேஷனைக் கடந்ததும் என்னிடம் “மன்னிக்கவும், உங்கள் பெயர் பால் தானே?” என்றாள்.
என் பாஸ்போர்ட்டை பார்த்திருப்பானோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. “ஆம்”என்றேன்.
“என் பெயர் ஈவா பேக்கர், டச்சுக்காரி. நான் கயா என்ற பெயரில் ஒரு சிறுகுழுவில் இருக்கிறேன். ஒரு சுற்றுலாத் திட்டத்துடன் சென்று கொண்டிருக்கிறேன்”.
எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் எதிர்வினையாற்ற வேண்டுமா என்ற சந்தேகம் எஞ்சியிருந்தது.
“நீங்கள் அந்த குழுவில் இருக்கும் பால் அல்லவா?”
நான் “ஆம்” என்றேன்.
அவள் கைநீட்டி “சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் ஒரே இடத்துக்குச் செல்கிறோம். டான்னா தீவுக்கு” என்றாள்.
நான் புன்னகைத்து “ஆம்’ என்றேன்.
நாங்கள் விமானத்திற்காகக் காத்திருந்தபோது நான் “நாம் தனித் தனியாக வரவேண்டும் என்பது விதிகளில் ஒன்று” என்றேன்.
“ஆமாம், தெரியும். ஆனால் எனக்கு பதற்றமாக இருந்தது. இந்த தீவை உலக வரைபடத்தில் பார்த்தேன். மொத்த மானுட இனத்திலிருந்தும் விலகி எங்கோ கிடப்பது போலிருந்தது”
“உண்மையில் அப்படித்தான்”
“ஆம், அதை நானும் அறிவேன்”. அவள் மெல்லிய நடுக்கம் கொண்டிருந்தாள். “நீங்கள் இந்த கல்ட்டில் எத்தனை காலமாக இருக்கிறீர்கள்?”
நான் “நான்கு ஆண்டுகளாக” என்றேன்.
அவள் “நான் இரண்டு ஆண்டுகளாகத்தான்” என்றாள்.
நான் பொதுவாக “ஓ” என்றேன். மேலே பேச ஆர்வமில்லை என்று காட்டும் ஓ.
“இதேபோன்ற சடங்குகளில் கலந்துகொண்டிருக்கிறீர்களா?” என் ஆர்வமின்மையை அவள் அதைக் கவனித்ததாக தெரியவில்லை. அவளுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். பதினெட்டு வயதுப் பெண்களுக்குரிய தயங்கும், பதறும், நாணிச்சிவக்கும் கண்கள் மயங்கிச் சுழலும் பாவனைகளுடன் இருந்தாள்.
“இல்லை”
“நானும் இல்லை” என்றாள். அதைச் சொன்னபோது மேலும் பதறினாள். “நான் புகைப்பவள். இப்போது ஒரு சிகரெட்டுக்கு ஆசைப்படுகிறேன். ஆனால் இங்கே புகைக்கும் இடம் இல்லை”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“நான் கணிப்பொறி நிரல் எழுதுபவள்… எனக்கு குடும்பம் ஏதும் இல்லை” என்றாள்.
“நான் ஊடகத்துறையில் இருக்கிறேன். எனக்கும் இப்போது குடும்பம் ஏதும் இல்லை”
ஒருகணம் கழித்தே அந்த சொல்லில் இருந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு அவள் “ஓ” என்றாள்.
எங்களை அறியாமலேயே ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள தொடங்கியிருந்தோம். அவளை நான் மீண்டும் பார்த்தேன். அலட்சியமான உடை. ஜீன்ஸ், காட்டன் மேல்சட்டை. ஆனால் கையிலும் கால்களிலும் நகங்களில் சாயமிட்டிருந்தாள்.
“மன்னிக்கவும் பால், இந்த கல்ட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” அந்த சிறு இடைவெளி அந்த கேள்வியை அவள் தயாரித்துக்கொண்ட பொழுது என்று தெரிந்தது.
நான் “இதை கல்ட் என்றெல்லாம் சொல்வதில் அர்த்தமே இல்லை” என்றேன். “இது ஒரு பாவனை மட்டும்தான். சுவாரசியமான ஒரு கூட்டு நடிப்பு… ஒரு சிறு பிக்னிக் நாடகம். அல்லது ஒருவகை ரியாலிட்டி ஷோ”
“அப்படியா சொல்கிறீர்கள்?” என்றாள் உண்மையான ஏமாற்றத்துடன்.
அவளிடமிருந்த மாணவித்தன்மை என்னை தூண்டியிருக்கலாம். நான் புன்னகைத்து மேலே பேசினேன். “இதோபார் ஈவா, நாம் வாழும் இந்த நூற்றாண்டு மிகவிரைவாக மர்மங்களை இழந்துவிட்டது. இதோ இந்த டான்னா தீவைப்பற்றி இருபதாண்டுகளுக்கு முன்பு என்றால் இயல்பாகத் தெரிந்துகொள்ள எந்த வழியும் இல்லை.இப்போது நாம் நம் கையில் செல்பேசியில் எந்நேரமும் உலக வரைபடத்தை வைத்திருக்கிறோம். முப்பதாண்டுகளுக்கு முன்பு என்றால் இந்த வரைபடத்தை இரண்டாயிரம் மூவாயிரம் பக்கம் கொண்ட மாபெரும் புத்தகமாக வைத்திருக்க வேண்டியிருக்கும். ஒருவராக சுமக்கவே முடியாது” என்றேன்.
“ஆம்” என்றாள். அந்தச் சிறு கருத்துக்கே கிளர்ச்சியுற்றவளாகத் தோன்றினாள் . “இளமையில் நான் அட்லஸைத்தான் விரும்பிப் பார்ப்பேன். பித்துப் பிடித்தவள் போல. சிறுசிறு தீவுகளையும் தொலைதூர நிலங்களையும் பார்த்து கனவு காண்பேன்”.
“சென்ற நூற்றாண்டில் மனிதனுக்கு எல்லாமே மர்மமாக இருந்தன. ஆகவே எல்லாவற்றிலும் ஒரு பயங்கரமும் வசீகரமும் இருந்தது. வானம் கடல் பூமி இயற்கை உயிரினங்கள் எல்லாமே பயமூட்டுவதாக ஈர்த்து சுழற்றி அடிப்பவையாக இருந்தன. அன்று எத்தனையோபேர் மர்மங்களைத் தேடி உலகமெங்கும் அலைந்திருக்கிறார்கள். கிளைடர்களில் பறந்திருக்கிறார்கள். எவரெஸ்டில் ஏறியிருக்கிறார்கள்.கடல்களைக் கடந்து இதோ இந்த தீவுவரை வந்திருக்கிறார்கள்” என்றேன்
அவள் “ஆம்” என்றாள். அவள் உள்ளம் விம்முவது தெரிந்தது.
“அன்றைய மனிதன் வீட்டில் இருக்கமுடியாதவன். வெல்லப்படவேண்டிய உலகம் வெளியே விரிந்து கிடக்கிறது என்று எண்ணி பதற்றம்கொண்டிருந்தவன்… அன்றைய பல சாகசக்காரகளின் வயதுகள் ஆச்சரியப்படுத்துபவை. எங்களூரில் ஒரு டச்சுக்காரன் ஒரு கப்பலுக்குக் காப்டனாக வந்து சிறைப்பட்டான். எங்கள் ஊரையே கட்டி எழுப்பியவன் அவன்… பெனடிக்ட் டி லென்னாய் என்று பெயர். பதினெட்டு வயதில் அவன் வீட்டைவிட்டு கிளம்பி ஏழாயிரம் கிலோமீட்டர் கடலில் பயணம் செய்து எங்கள் நிலத்திற்கு வந்தான்…”.
“ஆம் அது ஒரு பொற்காலம்” என்றாள். முகம் மலர்ந்து “இளமையிலிருந்தே எனக்கு பிடித்த புத்தகங்கள் பதினெட்டாம் நூற்றாண்டு கடற்சாகசநூல்கள்தான். சார்ல்ஸ் கிங்ஸ்லியின் வெஸ்ட்வேர்ட் ஹோவை நான் சின்னவயதில் மனப்பாடமே செய்திருக்கிறேன்…”
“நினைத்துப்பார், எவ்வளவு கற்பனைகள். ஜூல்ஸ்வெர்னின் அறிவியல் கதைகள், வால்டர் ஸ்காட்டின் வரலாற்று நாவல்கள், பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா போன்ற திகில்நாவல்கள் ,ஹெர்மன் மெல்வில்லின் மோபிடிக் போன்ற சாகசநாவல்கள்…” என்றேன் “பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திடீரென்று மனிதனின் கற்பனை வெடித்துப் பூதாகரமாக வளர்ந்திருக்கிறது. இன்றுவரை நாம் பேசிக்கொண்டிருக்கும் எல்லாவகையான இலக்கியப் புனைவுகளும் படிமங்களும் அதீதக் கற்பனைகளும் அப்போது உருவானவைதான். காவியத்தன்மை கொண்டவை என்றால்கூட ஐந்தாயிரம் நாவல்களை சாதாரணமாகச் சொல்லமுடியும்”
“ஆமாம்’ என்றாள். அவள் நான் பேசப்பேச இயல்பாகிக்கொண்டே வந்தாள்.
“அந்தக் காலகட்டத்தில்தான் கல்டுகள் நிறைய உருவாயின. மனிதவரலாற்றில் எப்போதுமே கல்டுகள் உருவாகிக்கொண்டேதான் இருந்திருக்கின்றன. ஒரு சிறுகூட்டம் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை தீவிரமாக நம்புகிறது. அதுதான் கல்ட். அவற்றில் சில வளர்ந்து மதங்களாக ஆகின்றன. மத்திய ஆசியாவில் ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்டுகள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் மதங்களாக ஆகி நிலைகொள்பவை கிறிஸ்தவமும் இஸ்லாமும் மட்டும்தான். பல கல்டுகள் அப்படியே மறைந்தன. பாரசீகத்தின் மாணிக்கேயன் மதம் போன்றவை கொஞ்சம் வளர்ந்து ஒரு தலைமுறைக்குள் இல்லாமல் ஆயின. இஸ்லாமுக்குள் அஹமதியாக்கள் போலவும் கிறிஸ்தவத்திற்குள் நாஸ்டிக் குழுக்கள் போலவும் ஏராளமான துணைக் கல்டுகள் உருவாயின”
அவள் ஆர்வமாக கேட்கிறாள் என்று தெரிந்தது. நானும் பேசவிழைந்தேன். மும்பையிலிருந்து கிளம்பியபின் நான் பேசவே இல்லை.
“ஆனால் இந்தக் கல்டுகள் எல்லாமே மிகத்தீவிரமான நம்பிக்கையிலிருந்து இயல்பாக உருவானவை. மாறாக, பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் திட்டமிட்டு கல்டுகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். வேண்டுமென்றே நம்பிக்கைகளையும் தொன்மங்களையும் புனைந்தார்கள். அவற்றை பேசிப்பேசிப் பரப்பினார்கள். மிகச்சிறந்த உதாரணம் தியோஸஃபிக்கல் சொசைட்டி. அவர்கள் அட்லாண்டிஸ் கண்டம் லெமூரியாக் கண்டம் போன்ற மாபெரும் தொன்மங்களை உருவாக்கினார்கள். அந்த காலகட்டத்தில் எத்தனை தொன்மங்கள் அப்படி! பெர்முடா முக்கோணம், திபெத்திலுள்ள ஷம்பாலா என்னும் மர்மநகரம் போன்று எப்படியும் ஓர் ஆயிரம் புதிய தொன்மங்கள் வந்தன”.
“ஆம்” என்று அவள் சொன்னாள். “அட்லாண்டிஸ் உண்மையிலேயே இருக்கிறது என்று நம்பும் ஒரு குழு இருக்கிறது. ஒரு கல்ட் அது. நான் அதில் இருக்கிறேன்… கடலில் மூழ்கிய நகரங்கள் ஆயிரம் இருக்கின்றன என்கிறார்கள். கிரஹாம் ஹான்காக் கூட அதில் இருக்கிறார்”
“நீ பறக்கும் தட்டுகளைப் பார்த்த அனுபவங்களைப் பதிவுசெய்யும் குழுவிலும் இருக்கிறாய் அல்லவா?”
“ஆமாம்! எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நீங்களும் அதில் இருக்கிறீர்களா?”
“இல்லை”என்று புன்னகைத்தேன்
“எரிக் வேன் டேனிகன் தொடங்கிய குழு அது. ரகசியக்குழு” என்றாள். “உளவுத்துறையிலும் ராணுவத்திலும் மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அதில் இருக்கிறார்கள்”
“அப்படி நூற்றுக்கணக்கான குழுக்களும் சிறிய ரகசியக் கல்ட்டுகளும் இருக்கின்றன” என்று நான சொன்னேன். “சென்ற நூற்றாண்டில் இந்தக் கல்டுகளை உருவாக்கியவர்களும் சரி ,அவற்றை ஏற்றுக்கொண்டவர்களும் சரி, முழுமையாக நம்பவில்லை. அவற்றிலிருந்த வினோதம் அவர்களைக் கவர்ந்தது. அவர்களின் பொழுதை அது சுவாரசியமாக்கியது. வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உண்டு என்று நம்பச்செய்தது…அவ்வளவுதான். ஆகவே அவை எதுவுமே நீடிக்கவில்லை”
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் கல்டுகளும் தொன்மங்களும் ஏன் உருவாயின தெரியுமா? ” என்று தொடர்ந்தேன் “அப்போதுதான் காலனியாதிக்கத்தால் உலகம் ஒன்றாக ஆகியது. அச்சு ஊடகத்தால் செய்திகள் உலகம் முழுக்க பரவின.அதுவரை இருந்த பல மர்மங்கள் இல்லாமலாயின. உலகம் திடீரென்று திரைவிலகி நிர்வாணமாக நின்றது. நிர்வாணமான உலகம் என்பது கலைகளுக்கோ கொண்டாட்டத்திற்கோ இடமற்றது. மனிதனுக்கு கற்பனையைத் தூண்ட ஏதாவது வேண்டும். ஆகவே புதிய தொன்மங்கள் உருவாயின. அவை இலக்கியங்களாக எழுந்தன. புதியவகை ஆன்மீகமாக வளர்ந்தன. கார்லோஸ் கஸ்டநாடாவின் டான் ஜுவான் ஓர் உதாரணம். புதிய ஆன்மிகத்தலைவர்கள் உருவானார்கள், ஓஷோ போல…”
“எனக்கு குர்ஜீஃப் பிடிக்கும்… அவரை வாசித்துக்கொண்டே இருப்பேன்”
“இன்றைக்கு உலகமயமாக்கலுக்குப் பிறகு உலகம் இன்னும் வெளிறிவிட்டது. உலகம் என்பது ஒரு கூகிள் டேட்டாபேஸ் மட்டும்தான். எந்த மர்மமும் இல்லை. அடர்காடுகளுக்குள் கடல் ஆழங்களுக்குள் காமிரா செல்கிறது. எந்த ரகசியமும் இல்லை. திடீரென்று உலகம் ஒரு போர்ன் நடிகைபோல ஆகிவிட்டது”
அவள் சிரித்தாள் “நீங்கள் எழுத்தாளர் போல பேசுகிறீர்கள்”
“நான் எழுத்தாளன்தான்..”
“மெய்யாகவா?” என்றாள். வியக்கும்போது வாயில் கைவைத்துக்கொள்ளும் பாவனை அழகாக இருந்தது. “மெய்யாகத்தான் சொல்கிறீர்களா?”
“ஆம், என் மொழியில் எழுதுகிறேன். ஓரிரு நூல்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன”
“எந்த மொழி?”
“மலையாளம்… ஓர் இந்தியமொழி”
அவள் “அப்படியா?” என்றாள்
“என் மொழியில் எனக்கு நிறைய வாசகர்கள் உண்டு. இருபது சிறுகதைத்தொகுதிகள் வந்துள்ளன… ஏராளமான பயணநூல்கள்”
“எந்தபேரில் எழுதுகிறீர்கள்?”
“பால் அப்பச்சன் என்றபேரில்”
“அப்பச்சன் என்றல்?”
“தந்தை”
“ஹா!” என்றாள் “நீங்கள் தந்தையா?”
நான் சிரித்து “இருக்கலாம், நான் அறிந்தவரை இல்லை” என்றேன்
அவள் தலையை பின்னால் சரித்து வாய்விட்டுச் சிரித்தாள். தலையை அசைத்து கூந்தலை தள்ளிக்கொண்டாள்.
“இன்றைக்கு நமக்கு கொஞ்சம் மர்மங்கள் தேவைப்படுகின்றன. அவை இல்லாவிட்டால் வாழ்க்கை வெளிறிக்கிடக்கிறது. ஆனால் எல்லா மர்மங்களையும் உடனடியாக விளக்கிவிடுகிறார்கள். ஆகவே முன்புபோல குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் நம்மால் கல்ட்களை உருவாக்க முடிவதில்லை.சிலர் இருக்கிறார்கள். ஆனால் படிப்பவர்கள், சிந்திப்பவர்களால் அது முடிவதில்லை…” என்றேன்.
“உண்மைதான்… என் பிரச்சினையே அதுதான்” என்று அவள் சொன்னாள் “நான் எந்த கல்ட்டில் சேர்ந்தாலும் சிலநாட்களிலேயே சலித்துவிடுகிறது. ஏன் சலிக்கிறது என்றால் எனக்கு உண்மையான நம்பிக்கை வரவில்லை என்பதனால்…. அதிலுள்ளவர்கள் மூர்க்கமாக நம்பிக்கையை வலியுறுத்தும் தோறும் நான் மேலும் கசப்படைகிறேன்”
“அதுதான் என் நிலைமையும், பத்தாண்டுகளுக்கு முன்பு” என்றேன்.“அப்போதுதான் இந்தக் குழுவில் சேர்ந்தேன். இது கல்ட் அல்ல. கல்ட் மாதிரி”
“அப்படியென்றால்..’’
எங்களை விமானம் ஏற அழைத்தார்கள். விமானத்தில் பாதிகூட ஆளில்லை.நான் அமர்ந்து சன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தேன். பிரிஸ்பேன் கடலோர நகரம், சிலநிமிடங்களிலேயே கடல் வந்துவிட்டது. நீலவிரிவு சிறிய அலைகளுடன் கிடந்தது. பசிபிக்கின் இப்பகுதியில் அவ்வப்போது சிறிய தீவுகள் தென்படும். மரகதப் பதக்கம்போன்றவை
அவள் எழுந்து என் அருகே வந்து அமர்ந்தாள். “இந்த கல்ட் பற்றி என்னவோ சொல்லவந்தீர்கள்” என்றாள்
“நாம் போகும் தீவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு தெரியுமா? ஏன் உலகமெங்குமிருந்து அங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று?”
“நான் நிறையப் படித்தேன்…”
“சொல், நீ படித்தது என்ன?”
“இது வனுவாட்டு குடியரசின் டஃபேயா பிராந்தியத்தின் பல தீவுகளில் ஒன்று. இவர்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் வனுவாட்டிலிருந்து தனிநாடாகப்பிரியவேண்டும் என்று ஒரு போராட்டத்தைக்கூட நடத்தியிருக்கிறார்கள்”
“சரி”
“மெலெனிசியன் இன மக்கள் இங்கே வாழ்கிறார்கள்” என்று அவள் சொன்னாள். “இத்தீவின் தெற்கே டுக்கோஸ்மேரா என்னும் மலைச்சிகரம் உள்ளது, அது மூவாயிரத்து ஐநூறு அடி உயரமானது”
அவளிடம் ஒரு பள்ளிச்சிறுமி பாவனை கூடியது. கண்களைச் சுழற்றி “இங்கே மௌண்ட் யாசுர் என்னும் எரிமலை இருக்கிறது. இந்த தீவை உருவாக்கியது ஒரு மாபெரும் நிலவெடிப்பு. அதன் எஞ்சிய சிறு துளைதான் மௌண்ட் யாசுர். இப்போதும் லாவா உமிழ்ந்து புகைவிட்டுக்கொண்டுதான் இருக்கிறது… ஆறாதபுண் என்று அதைச் சொல்கிறார்கள்”
“சரி”
“அந்த லாவா உருகிவழிந்து உருவான சல்ஃபர் பே என்னும் சமவெளி இங்கே உள்ளது. ஆனால் அது வளமானது. ஏனென்றால் இங்கே சிவி என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் அது நிறைந்து வழியும்..”
“ஏறத்தாழ எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய்” என்றேன் “ஒரு முக்கியமான மனிதரை விட்டுவிட்டாய்”
“ஜேம்ஸ் குக்! பிரிட்டிஷ் கடலோடி…அவர் ஆயிரத்தி எழுநூற்றி எழுபத்திநாலில் எச்.எம்.எஸ்.ரெசலூஷன் என்ற கப்பலில் இங்கே வந்தார். அதனால் இங்கிருக்கும் துறைமுகத்திற்கு போர்ட் ரெசலூஷன்ஸ் என்று பெயர்”
“சரி”
“பிறகென்ன? இங்கே பேசுவது க்வமேரா மொழி”
“சரி”
“என்னிடம் விளையாடுகிறீர்கள்” என்று சிணுங்கினாள்
“ஜான் ஃப்ரம்” என்றேன்
“ஸ்ஸ்ஸ்” என்று கையை உதறிக்கொண்டாள். முகம் சிவந்துவிட்டது.
“என்ன?” என்றேன்
“எப்படி மறந்தேன்? நான் அவரைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டே இருந்தேன்”
“பின்னே?”
“நான் நீங்கள் தகவல்கள் கேட்டபோது நான் படித்த தகவல்களை நினைத்துக்கொண்டேன். ஜான்ஃப்ரம் இங்கே உள்ளவர் என்று என் மனதில் பதியவே இல்லை”
“இதுதான் அவருடைய இடம். இந்த தீவுக்கு உலகில் உள்ள தனி இடமே அதனால்தான்” என்று நான் சொன்னேன்.
அவள் வியப்புடன் மெய்மறந்தவள் போல அதை எண்ணிக் கொண்டிருந்தாள். பக்கவாட்டில் அவளுடைய மேலேந்திய மூக்கைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
“நீ என்ன நினைக்கிறாய்? ஜான் ஃப்ரம் என்பவர் உண்மையில் இருக்கிறாரா?” என்றேன்
“இல்லையா?”
“நீ என்ன நினைக்கிறாய் என்று சொல்”
“நான் வாசித்த நூல்களில் அவர் இருக்கிறார் என்றுதான் சொல்லப்படுகிறது”
“எந்த வடிவில் இருக்கிறார்?”
“ஏன்?”
“ஜான் ஃபரம் பற்றி நூறு ஆண்டுகளாக பேச்சிருக்கிறது. ஆயிரத்து தொளாயிரத்து பத்து முதல். அவர் மனிதர் என்றால் நூறுவயது கடந்திருக்கும்”
“ ஆம்” என்றாள்
“அவர் ஆவி வடிவில் இருக்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்”
“அப்படியும் இருக்கலாமே”
நான் வாய்விட்டுச் சிரித்தேன்
“ஏன் சிரிக்கிறீர்கள்?”
“ஆவியா?”
“எனக்கு நம்பிக்கை உண்டு… நான் பார்த்திருக்கிறேன்”
“சரி”
“உண்மையாகவே”
“சரி என்றேனே”
அவள் முகத்தை கூப்பி வைத்துக்கொண்டாள்.
“சரி” என்று சிரித்தேன்.
அவளும் சிரித்துவிட்டாள்.
“ஜான் ஃப்ரம் என்பது ஒரு கற்பனைப் பெயர்…” என்று நான் சொன்னேன். “டானா தீவின் பழங்குடிகள் நடுவே உருவான ஒரு பொதுவான கற்பனை அது. இங்குள்ள எரிமலையின் மேல் ஒரு தெய்வம் இருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள். அதன்பெயர் கேரபெரமுன். அந்த தெய்வத்தைப் பற்றி ஒன்று சொல்லவா?”
“என்ன?”
“சேரமான்பெருமான் என்ற பெயரின் சாயல் அதற்கு இருக்கிறது” என்றேன். “எங்களூரில் உள்ள ஒர் அரசமரபின் பெயர் அது”
“உண்மையாகவா?”
“உண்மை… கேரம் என்றால் தேங்காய். அதிலிருந்துதான் எங்கள் மண்ணுக்கு கேரளம் என்று பெயர் வந்தது. சேரர் என்று எங்கள் அரசர்கள் அழைக்கப்படுவதும் அதனால்தான்”
“கடவுளே!” என்றாள்
“டானா தீவின் முதன்மையான வேளாண்மையும் தேங்காய்தான்..”.
அவள் பரபரப்புடன் “உங்கள் நிலத்திற்கும் இந்த தீவிற்கும் தொடர்பு உண்டா என்ன?” என்றாள்
“இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மொழியின் சொற்கள் செவிவழியாகவே பரவிச்செல்பவை. பறவைகள் வழியாக விதைகள் செல்வதுபோல. எங்கள் மண்ணுக்கு இந்தோனேசியாவுடன் தொடர்புண்டு. இந்தோனேசியாவுக்கு வியட்நாமுடன் தொடர்புண்டு. வியட்நாம் மக்கள் இந்த தீவில் குடியேறியிருக்கிறார்கள்”
அவள் “ஓ’ என்றாள்
“ஆயிரத்தி எண்ணூறுகள் முதல் இங்கே வெள்ளையர் ஆதிக்கம் செலுத்தினார்கள். அந்த கேரபெரமுன் தெய்வம் அப்போது வெவ்வேறு ஆட்களின் உள்ளத்தில் தோன்றி வெள்ளையர்களின் மதம், அவர்களின் பணம், அவர்களின் நிர்வாகம், அவர்கள் அளிக்கும்பொருள் எல்லாவற்றையும் துறக்கும்படிச் சொன்னது. மீண்டும் மக்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறைகளுக்கே செல்லவேண்டும் என்றது. அப்போது மக்கள் கேட்டார்கள், அந்தப் பொருட்களும் பணமும் தங்களுக்கு வேறு எப்படி கிடைக்கும் என்று. அதற்கு அந்த தெய்வம் ஒரு வெள்ளையர் வடிவில் அதுவே ஒருநாள் தோன்றி அந்தப்பொருட்களை அவர்களுக்கு அளிக்கும் என்றது. அந்த வெள்ளையருக்கு அவர்கள் இட்ட பெயர்தான் ஜான் ஃபரம். ஜான் என்றால் வெள்ளையன்.ஃப்ரம் என்றால் வருபவன், எங்கிருந்தோ வந்துகொண்டிருப்பவன்”
“அப்படியா?” என்றாள். அவள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகத் தோன்றியது..
“இதை நீ வாசித்ததே இல்லையா?”
“இல்லையே”
“கார்கோ கல்ட் என்றுகூட கேள்விப்பட்டதில்லையா? மார்வின் ஹாரீஸ் எழுதியிருக்கிறார். ஜாரேட் டைமண்ட் எழுதியிருக்கிறார். டேவிட் அட்டன்பரோ கூட டாகுமெண்டரி எடுத்திருக்கிறார்.
“இல்லை”
நான் சிரித்து “தேவையானதை மட்டும் வாசிக்க கற்றிருக்கிறாய்” என்றேன்.
“நம்பிக்கையை அழிப்பவற்றை ஏன் படிக்கவேண்டும்?”
“சரிதான்” என்றேன். “ஆனால் நான் உன் நம்பிக்கையை அழிக்க நினைக்கிறேன். ஏனென்றால் நீ என் அருகே அமர்ந்திருக்கிறாய்”
“சரி அழியுங்கள்” என்றாள்.
“இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப்படைகள் டானா தீவில் தங்கள் படைப்பிரிவுகளை நிறுத்தின. விமான எதிர்ப்பு பீரங்கிகள் இங்கே அமைக்கப்பட்டன. அமெரிக்க கொடி அருகே பறக்கவிடப்படும். வானிலிருந்து உணவையும் பொருட்களையும் போடுவார்கள். அதுதான் கார்கோ. இந்த மக்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் அதேபோல தென்னைமரத்தடியை பீரங்கிபோல வைத்து அமெரிக்கக் கொடியை பறக்கவிட்டார்கள். மேலிந்து கார்கோ விழுந்தது.
அவள் புன்னகைத்தாள். அவளுக்கு நான் சொல்லப்போவது புரிந்தது. அவளால் முழுமையாக கல்ட்களை நம்பமுடியாது. அவள் பிரச்சினையே அதுதான்.
“போர் முடிந்தபிறகும் அதேபோல தென்னைமரத்தடி பீரங்கிகளையும் அமெரிக்கக் கொடியையும் வைத்து காத்திருந்தார்கள். வெள்ளையர்கள் வானிலிருந்து கார்கோ போடுவார்கள் என்று நினைத்தார்கள். அது பழைய ஜான் ஃபரம் கல்டுடன் இணைந்தது. அதை கார்கோ கல்ட் என்கிறார்கள்”
“அப்படியா?”
“சமீபகாலம் வரை அந்த கல்ட் நீடித்தது. அந்தத் தலைமுறையினர் மறைந்துவிட்டார்கள். இன்று அந்த கல்ட் ஒரு குறியீடாக ஒரு சடங்காக ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. சிவப்பு சிலுவை நடப்பட்டு யு.எஸ்.ஆர்மி என்று எழுதிய கொடி பறக்கவிடப்படுகிறது”
“அதைத்தான் நாம் பார்க்கப்போகிறோமா?”
”இல்லை. ஆனால் நம்முடையது ஒரு வகை கார்கோ கல்ட்” என்றேன்.
“அப்படியென்றால்?”
”நமக்கு இன்று வானிலிருந்து ஏன் கார்கோ விழுகிறது என்று தெரியும். ஆனாலும் அந்தச் சடங்குகளைச் செய்கிறோம். ஒரு வேடிக்கைக்காக.”
“வேடிக்கை என்றால்”
“அது சரியான வார்த்தை அல்ல” என்றேன். “இப்படிச் சொல்கிறேன். ஓர் ஆணும்பெண்ணும் உடலுறவுகொள்ளும்போது ஓர் அசைவு உருவாகிறது இல்லையா? அதை அவர்கள் ஆடைகளுடன், உடலுறவே இல்லாமல், செய்வார்கள் என்றால் அது உடலுறவு அல்ல என்று தெரிந்திருந்தாலும் அவர்கள் மெல்லமெல்ல அந்த மனநிலைக்குச் செல்வார்கள். அந்த பதற்றத்தையும் மகிழ்ச்சியையும் அடைவார்கள்”
“‘ஆம்” என்றாள்.
“அதைப்போல நாம் இங்குள்ள பழைமையான சடங்குகள் சிலவற்றைச் செய்யப்போகிறோம். அவை வெறும் சடங்குகள் என நமக்குத்தெரியும். முன்பு அவற்றைச் செய்தவர்களைப் போல நாம் அதை நம்பி செய்யவில்லை. ஆனால் அதைச் செய்யும்போது அந்த பதற்றம் பயம் மகிழ்ச்சி கொண்டாட்டம் எல்லாவற்றையும் அடைகிறோம். அத்துடன்…”
அவள் என்னை வியப்புடன் பார்த்தாள்.
“கேரள மந்திரவாதச் சடங்குகளைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒன்று சொல்கிறார்கள். அவற்றை வெறும் வேடிக்கைக்காக நடித்து செய்தால்கூட சிலதருணங்களில் அவை விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன என்று”
”விளைவுகள் என்றால்…”
“உதாரணமாக ஒரு சடங்கைச் செய்த ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் எட்டுமாதங்கள் தன்னை ஒரு ஆட்டுக்கிடாய் என நினைத்துக்கொண்டு அவ்வண்ணமே இருந்தார்”
”ஓ”
“நாம் செய்வது கார்கோ கல்ட்போலத்தான். வேடிக்கைக்காக பழைய சடங்குகளைச் செய்கிறோம். உண்மையான அனுபவத்தை அடைகிறோம். இதைச் சொல்லி திரட்டிய கூட்டம்தான் டானாவிற்கு வரப்போகிறது”
“எத்தனைபேர்?”
“தெரியவில்லை” என்றேன். “அங்கேதான் நாம் சந்திக்கப்போகிறோம். நாம் இருவரும் சந்தித்துக்கொண்டது வெறும் தற்செயல்தான்”
“அப்படியா?”என்றாள்
“ஏன்?’”
“வாழ்க்கையில் எதுவும் தற்செயல் இல்லை என்று நான் நம்புகிறேன்”
“அப்படி நீ எதையெல்லாம் நம்புகிறாய்? நிறைய இருக்கும்போல் இருக்கிறதே?”
அவள் புன்னகை செய்தாள்.
“உன்பெற்றோர் இருக்கிறார்களா?”
“நான் ஒற்றைப்பெற்றோருக்குப் பிறந்தவள். அம்மாவுடன் தொடர்பு பன்னிரண்டு வயதிலேயே இல்லாமலாகிவிட்டது”
“மணமாகவில்லை?”
“இல்லை. மணம் செய்து கொள்ளுதல் என் திட்டத்திலேயே இல்லை”
“ஈவா, உன்னை ஒன்று கேட்கவா?”
‘சொல்லுங்கள்’’
“உனக்கு என்னதான் வேண்டும்?”
“அப்படிக் கேட்டால் எப்படிச் சொல்லமுடியும்?”
“உண்மையில் சொல்லமுடியும்… யோசித்தால் மிகச்சரியாகவே சொல்லமுடியும்” என்றேன்.
“நான் இப்படிச் சொல்லவா?” என்றாள். “அதாவது நான் இங்கே ஒரு தர்க்கத்தை அல்லது நோக்கத்தை காணவிரும்புகிறேன். இங்கே நிகழும் அனைத்திலும். என் வாழ்க்கைக்கும் பிரபஞ்சத்துக்கும். நான் கற்ற அறிவியல் எல்லாமே தற்செயல் என்று கற்பித்தது. தற்செயல்களால் ஆன வாழ்க்கையில் என்னால் நிலைகொள்ள முடியவில்லை… எனக்கு அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நம்பியிருக்கவோ கனவு காணவோகூட ஏதுமில்லை. அதில் நான் செய்யக்கூடுவது வெறுமே ஒழுகிச் செல்வதுதான். அது என் ஒட்டுமொத்த வாழ்க்கையையே பொருளற்றதாக்கிவிடுகிறது. என் ஒவ்வொரு நாளையும் சலிப்பும் சோர்வும் கொண்டதாக ஆக்கிவிடுகிறது”.
“ஆம்” என்றேன்.
“ஆகவே நான் அறிவியலில் இருந்து நேர் எதிர்த்திசைக்குச் செல்கிறேன். நம்ப விரும்புகிறேன். நம்ப முயல்கிறேன். அறிவியல் அளிக்கும் புறவயமான தர்க்கத்தை துறந்துவிட முயல்கிறேன். எல்லாவற்றுக்கும் உள்ளர்த்தம் உண்டு என்றும் அகவயமான ஒழுங்கு உண்டு என்றும் நினைக்கிறேன். இங்கே எல்லாமே ஒரு மாபெரும் திட்டத்தின்படி நடக்கின்றன. அந்த திட்டத்தை கொஞ்சமாக நாம் அறிந்து கொள்ளவும் முடியும். மிச்சத்தை கற்பனையும் செய்து கொள்ளலாம்”. அவள் தொடர்ந்தாள்.
“அதன் பின் நாம் உணர்வது எவ்வளவுபெரிய வாழ்க்கை! எல்லாமே மர்மமானவையாக ஆகிவிடுகின்றன.எல்லாமே அர்த்தம்கொண்டவை. எல்லாமே நாம் திறந்து திறந்து ஆராயவேண்டியவை. நமக்குரிய எதையோ ஒளித்து வைத்திருப்பவை. நான் வாழ விரும்புவது அப்படிப்பட்ட உலகத்தில்” என்றாள் “என் பாட்டி அப்படிப்பட்ட உலகில் வாழ்ந்தாள். ஒத்திசைவும் அர்த்தமும் கொண்ட உலகில். அங்கே அவள் செய்வதற்கும் எதிர்பார்ப்பதற்கும் நம்புவதற்கும் எவ்வளவோ இருந்தன. ஆகவே அவளுக்கு என் அம்மாவுக்கு இருந்த எந்த பதற்றமும் இல்லை. அவள் போதைப் பொருட்களை நாடவில்லை”
“உன் அம்மா போதைப் பொருட்களை பயன்படுத்துவாளா?”
”நிறைய… அனேகமாக அவள் இறந்திருக்கக்கூடும் ஆனால் அவள் தவறு அல்ல அது. அவள் இருந்த உலகில் எதற்குமே அர்த்தமில்லை. எதற்கும் எந்த நோக்கமும் இல்லை. தற்செயல்களால் ஆன கிறுக்குத்தனமான உலகம்”.
”காஃப்காவின் உலகம்!” என்றேன்.
”ஆமாம். காஃப்காவின், காம்யூவின், சார்த்ரின் உலகம். விர்ஜீனியா வுல்ஃபின், ஜாய்ஸின் உலகம். ஃபாக்னரின், பெக்கெட்டின் உலகம். எத்தனை பெயர்கள். சரமாகொ, கோபோ ஆப், ஜோஷ் வண்டேலூ… அவர்கள் அத்தனை பேரும் மனநோயாளிகள். சார்த்ர் மோசடிக்காரரும்கூட. ஆச்சரியம்தான், உலகம் முழுக்க ஒரு தலைமுறையையே வாழத்தெரியாத அந்த நோயாளிகள் வடிவமைத்திருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய எல்லாவற்றையும் உடைத்து வெறுமையில் நிறுத்திருக்கிறார்கள். போதைப் பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை சுவாரசியப் படுத்தவேண்டும் என்றால், மயங்கிக் கிடந்து காலத்தை கடக்கவேண்டும் என்றால் அதைப்போல ஆபாசமான ஒரு நிலை மனிதனுக்கு உண்டா? இந்த அற்பர்கள் உலகுக்கு உருவாக்கி அளித்தது அதைத்தானே?”
“நீ உச்சநிலைபாடு எடுக்கிறாய்” என்றேன்.
“நான் பாதிக்கப்பட்டவள்… இவர்கள் உருவாக்கிய அர்த்தமின்மையில் திளைத்து அழிந்துபோன ஒரு எளிமையான பெண்ணின் மகள் நான்” என்றாள் “ஆகவேதான் நான் ஒரு அலக்ஸாண்டர் டூமா நூறு காஃப்காக்களுக்குச் சமம் என்கிறேன்” அவளுடைய கொந்தளிப்பு அடங்கியது.
“இன்று உலகம் அந்தக் குப்பைகளை கடந்துவிட்டது. நல்ல சம்பளம் வாங்கி வசதியாக கல்லூரிகளில் வேலைபார்க்கும் பேராசிரியர்கள் மட்டும்தான் அவற்றைப் படிக்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு இருத்தலியல் சிக்கல்கள் இல்லை. பணமும் காமமும் மிகச்சிறந்த இருத்தலை அளிக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இன்று பல்லாயிரம்பேர்ஏ மாயங்களை எழுதுகிறார்கள். சாகசங்களை எழுதுகிறார்கள். இன்றைய டிஜிட்டல் உலகம் கனவுகளை உருவாக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. வானத்திலிருந்து கற்பனைகளை எடுக்கிறார்கள். தொல்காலத்திலிருந்தும் புராணங்களிலிருந்தும் கற்பனைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். சாகசங்கள், மீறல்கள், பறத்தல்கள். அங்கே காஃப்காவின் மூக்குச்சளிக்கு இடமே இல்லை. பாவம், அவனுக்கு காசம். அவன் உலகின்மேல் மூக்கைச் சிந்திவிட்டுப் போனான்”
”நீ ஐசக் பாஷவிஸ் சிங்கரின் காஃப்காவின் தோழர் கதை படித்திருக்கிறாயா?” என்றேன்.
“இல்லை”
“அதில் காஃப்காவை நேரில் தெரிந்த ஒருவரின் கதையைச் சொல்கிறார். அவருக்கு எந்த இருத்தலியல் பிரச்சினையும் இல்லை. பேரிடர்களையும் அழிவுகளையும் கனிவின் வழியாகவும் சகித்தல் வழியாகவும் போராடுவதன் வழியாகவும் தாண்டி வந்த ஒருவரின் கதை அது”
“சிங்கரை நான் படித்ததில்லை. எனக்கு யூத எழுத்து என்றாலே பிடிக்காது. அவை மனித இனம் மீதும் வாழ்வின்மீதும் அவநம்பிக்கையைப் பரப்புகின்றன”
“சிங்கர் ஒரு டால்ஸ்டாய்”
“அப்படியா?” என்றாள். “படிக்கிறேன்”
“உண்மையில் உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை… இத்தனை வார்த்தைகளை”
“மனிதனுக்கு இத்தனை புராணங்களையும் படிமங்களையும் உருவாக்கி அளித்த முன்னோடிகள் எத்தனை அறிந்தவர்கள், எவ்வளவு தெளிந்தவர்கள்! அனைத்தையும் விட அவர்கள் எத்தனை கனிவுகொண்டவர்கள்”
நான் பெருமூச்சுவிட்டேன்.
அவள் சட்டென்று சிரித்தாள். நான் திரும்பிப்பார்த்தேன்.
“ஒட்டுமொத்தமாக இலக்கியம் கலை மதம் எல்லாமே கார்கோ கல்ட்தானே?”
நான் சிரித்து “வேண்டுமென்றால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம்” என்றேன்.
வைட்கிராஸ் விமானநிலையத்தில் இறங்கி எமிக்ரேஷனுக்கு நின்றவர்களில் எவரெல்லாம் எங்கள் கல்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லமுடியவில்லை. பலர் முன்னரே வந்திருக்கலாம். ஆனாலும் மிகக்குறைவானவர்களே எமிக்ரேஷனில் இருந்தனர். அது இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் அல்ல, ஆனால் ஆஸ்திரேலியாவிலிருந்து நேரடியாக விமானங்கள் வந்திறங்கின. அவற்றுக்காக மட்டும் ஒரே ஒரு எமிக்ரேஷன் கவுண்டர் இருந்தது.
ஈவா எனக்குப் பின்னால்தான் வந்து நின்றாள். அவள் தூங்கி எழுந்தவள் போலிருந்தாள். வரிசையில் நின்றபோது அவள் என்னிடம் “ஸாரி, நான் நிறையப் பேசிவிட்டேன்”என்றாள்.
“நானும்தானே பேசினேன்”
”ஆமாம், ஆனால் நாம் அப்படி பேசக்கூடாது”
“ஏன்?”
”நாம் பேசாமலிருக்கத்தானே இங்கே வருகிறோம்?”
“அப்படியா?” என்றேன்.
“என்னைப்பொறுத்தவரை அப்படித்தான். நாம் பொதுவான வாழக்கைச் சூழல்களில் பொதுவாகவே வெளிப்பாடு கொள்ள முடிகிறது. இந்தமாதிரி சூழல்களை நாம் தெரிவுசெய்வதே முற்றிலும் புதிய சூழலில் முற்றிலும் புதிதாக வெளிப்பாடு கொள்வதற்காகத்தான். இங்கும் வந்து நாம் பொதுவான சூழல்களில் உருவாக்கிக்கொண்ட எண்ணங்களை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை”
“இங்கே நீ என்னவாக இருக்க விரும்புகிறாய்”
“முற்றிலும் புதியவளாக… நானே அறியாமல் என்னில் இருந்து எழும் ஓர் ஆழமான வெளிப்பாட்டுக்காக… நான் திபெத் சென்றிருக்கிறேன். அங்கே மடாலயங்களில் தியானம் செய்திருக்கிறேன். பிரேஸிலில் காளான் புகைத்திருக்கிறேன். டான் யுவான் புகைத்த அதே புகையை… ஆப்ரிக்காவில் மாஸாய் பழங்குடிகளுடன் தங்கியிருக்கிறேன். திரும்பத்திரும்ப அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்”
நான் “நல்லது” என்றேன்.
“சரி, நீங்கள் எதை தேடுகிறீர்கள்?”
“நானா?”
“ஆமாம்”
“நான்…” என்றேன் பின்னர் சிரித்து “நான் என்னை எவராவது கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்”
“எதற்கு?”
“என் பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும். என் கவலைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளவேண்டும். என்னை கைக்குழந்தைபோல இடையில் வைத்திருக்கவேண்டும்”
“ஆ” என்றாள். உடனே சிரித்தாள்.
“ஆனால் அது ஒரு பாவனை என்று எனக்கு தெரியும். ஒன்றை நடித்தால் ஒருசில கணங்களாவது அதுவே உண்மையென்றாகும் என்று நினைக்கிறேன்… இலக்கியத்தின் அடிப்படை விதியே அதுதான். ஆகவேதான் இவற்றிலெல்லாம் ஈடுபட்டிருக்கிறேன். இந்த கல்டுகள் எல்லாமே ஒருவகை நிகழும் நாவல்கள். இங்கே நாம் நாவலை படிப்பதில்லை. அவற்றில் கதாபாத்திரமாக ஆகிறோம்”
”ஆம்” என்றபின் “நான் இவற்றை காலப்பயணங்கள் என நினைக்கிறேன். ஆற்றில் வெள்ளம் திடீரென்று வந்தால் எறும்புகளும் சிதல்களும் ஒரு பந்துபோல ஒன்றையொன்று கவ்விக்கொண்டு திரண்டுவிடும். வெள்ளத்தில் மிதந்துபோகும். ஏதாவது கழியிலோ கல்லிலோ முட்டிக்கொண்டால் அவற்றில் பற்றி ஏறி தப்பிக்கொள்ளும்.. அதைப்போல மனிதர்கள் காலவெள்ளத்தில் இப்படி கவ்விக்கொண்டு செல்கிறார்கள். சிலர் முன்னால் செல்கிறார்கள். சிலர் பின்னால் செல்கிறார்கள். எதுவானாலும் இங்கிருந்து வெளியே செல்லவேண்டும். அவ்வளவுதான்”
நாங்கள் வெளியே வந்தோம்.
“பார்ப்போம்” என்றேன்.
“பார்ப்போம்” என்று அவள் விடைபெற்றாள். நான் டாக்ஸி முன்பதிவுக்காகச் சென்றேன்.
[ 2 ]
அந்தச் சடங்கை நான் அவ்வாறு கற்பனை செய்துகொண்டிருக்கவே இல்லை. நான் ஓட்டலுக்குச் சென்று அறை எடுத்தேன். அங்கிருந்து எனக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
மாலையில் இரண்டு உள்ளூர் பழங்குடிப் பெண்கள் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்களிடம் எனக்கான குறிச்சொல் அளிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் என்னை அந்தக்காட்டின் ஒரு சிறிய குடிலுக்குள் கொண்டு சென்றார்கள். அங்கே என்னை முழுமையாகவே ஆடையைக் கழற்றும்படிச் சொன்னார்கள். நான் நிர்வாணமாக நின்றேன். என் உடல் மேல் அவர்கள் தங்கள் கைகளால் வண்ணம் பூசினார்கள். இயற்கையான மெழுகுடன் பச்சிலைகளையும் இயற்கையான வேதிப்பொருட்களையும் கலந்துசெய்யப்பட்ட வண்ணங்கள் அவை. ஊதா, நீலம், சிவப்பு, மஞ்சள் என கண்ணைப் பறிக்கும் ஒளிகொண்டவை. வரிவரியாக அவ்வண்ணம் பூசப்பட்டபோது நான் ஒரு விலங்குபோல ஆகிவிட்டதாகத் தோன்றியது.
என் முகத்தின்மேல் அவர்கள் தோலால் ஆன ஒரு முகமூடியை மாட்டினார்கள். அது மிகமென்மையானது. ஆட்டுத்தோலால் செய்யப்பட்டது. விந்தையான இளிப்பு கொண்டது என அதை அவர்கள் எடுக்கையில் ஒருகணம் பார்த்தபோது தோன்றியது. மெழுகு போன்ற பசையை முகத்தில் பூசி அதை ஒட்டினார்கள். என் தலைமயிரில் மெழுகை தேய்த்து அதை கையால் வாரி விழுதுகளாக ஆக்கி தோளிலிட்டனர். தலையில் வெள்ளெலும்புகளை கோத்துக் கட்டிய கிரீடம்போன்ற ஒன்றை அணிவித்தனர்.
மொத்தமாகவே அந்த வேடத்திற்குள் நான் மறைந்துபோனேன். என் உடலில் ஒரு துளிகூட வெளியே தெரியவில்லை. “எப்படி இருக்கிறேன்?” என்று கேட்டேன். “உங்களிடம் கண்ணாடி இருக்குமா?”
“இல்லை, நீங்கள் கண்ணாடியில் உங்களைப் பார்த்துக்கொள்ளக்கூடாது”
“அப்படியா?”
“இந்தச் சடங்கு அப்படித்தான்”
எனக்கு இடையில் தோலால் ஆன ஆடை ஒன்றை அணிவித்தனர். அதைச் சுற்றிக்கட்டி இறுக்கினர். என் காலில் ஒரு செருப்பை மாட்டினார்கள். அது குதிரைக்குளம்பின் பெரிய வடிவம் போலிருந்தது. மரத்தாலான அடி கொண்டது. நடந்தபோது ஒன்று சற்று கோணல் அல்லது உயரக்குறைவானது என்று தெரிந்தது
“இது எனக்கு பொருந்தவில்லை”
“அப்படித்தான்… உங்கள் நடை மாறவேண்டும்”
“ஓ” என்றேன்.
“இதை குடியுங்கள்” என்று ஒரு திரவத்தை அளித்தாள்.
“இது என்ன?”
“இதை எல்லாரும் குடித்தாகவேண்டும்”
அது ஏதோ நாட்டுச் சாராயம் போல மணத்தது. அதை நாவில் விட்டதுமே நான் கூச்சலிட்டேன். அது அமிலம்போல் எரிந்தது. நாக்கை பொசுக்குவது போலிருந்தது. தொண்டை இறுகி மூச்சு துடித்தது.
“விழுங்குங்கள்.. விழுங்குங்கள்”
நான் விழுங்கிவிட்டேன். வயிற்றில் அது தீயுருளைபோல சென்று விழுந்தது. தீக்குமிழிகளாக வெடித்தது.
“இது என்ன?”என்றேன். என் குரல் மாறிவிட்டிருந்தது. எனக்கே என் குரல் திகைப்பை அளித்தது.
”இது உள்ளூர்ச் சாராயம்தான்… ஆனால் உங்கள் குரலை மாற்றிவிடும்… நாளையே பழைய குரல் மீண்டு வந்துவிடும்” என்றாள் அந்தப்பெண் “அரிசியில் இருந்து எடுக்கப்படுவது இது… உடலுக்கு எந்த தீங்கும் செய்யாது”
நான் மிகமெல்லிய ஒரு மிதப்புணர்வை அடைந்தேன். “வாருங்கள்” என்று என்னை கூட்டிச்சென்றார்கள். செல்லும் வழி இருபக்கமும் செழிப்பான மரங்களுடன் ஒற்றையடிப்பாதைபோல் இருந்தது.
நான் முற்றாகவே இன்னொருவனாக மாறிவிட்டிருந்தேன். என் தோற்றத்தை எங்கேனும் பார்த்தால் ஒருவேளை அப்படி மாறாமலிருந்திருப்பேன், என்னை தனியாக அதிலிருந்து பிரித்துக் கொண்டிருப்பேன். என்னை நான் என எண்ணிக் கொள்கையில் என் பழைய உருவம் நினைவில் எழவில்லை.
ஒரு பெரிய வளாகத்தின் வாசலுக்கு அருகே என்னைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். “இனி நாங்கள் வரக்கூடாது. நீங்கள் செல்லலாம்”
JOHN THERE’ என்று எழுதப்பட்டிருந்த வாசலைக் கடந்து உள்ளே சென்றேன். ஒளிரும் நீலப்பச்சை சுட்டிகள் செல்லவேண்டிய வழியைக் காட்டின. அவை எங்கள் குழுவுக்குரிய ரகசிய அடையாளங்கள்.
அது சுற்றிவளைக்கப்பட்ட ஒரு காடு. மழைக்காடுகளுக்குரிய மரங்கள் இலைகள் செறிந்து ஒற்றைப்பரப்பாகி கூரையிட்டிருந்தன. அடிமரங்கள் செதில்கள் எழுந்து கிளைகள் புடைத்து விரிய நின்றிருந்தன. காற்று இலைகளில் ஓடிச்செல்லும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.
உதிரி உதிரியாகச் செல்லும் மனிதர்களை நான் கண்டேன் அத்தனைபேரும் என்னைப்போலவே இறுக்கமான கீழாடையும் புரிகளாக தொங்கிய தலைமயிரின்மேல் எலும்புக்கிரீடமும் அணிந்திருந்தனர். பெண்கள் மார்பில் ஒரு துணிச்சுற்று. உடலெங்கும் வண்ணக்கோடுகள். நானே கண்ணாடிகளில் பெருகி பல வடிவங்களாக ஆகிவிட்டதுபோல பிரமை எழுந்தது.
அந்தப்பிரமை மிக உதவியாக இருந்தது. அதுவரை நான் மிகவும் பதற்றம் கொண்டிருந்தேன். நான் என நான் எண்ணியிருந்த தன்னிலை அந்த வேடம் பூண்டதுமே இல்லாமலாகிவிட்டது. இன்னொரு நானை என்னால் உருவாக்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆகவேதான் பதறினேன். அந்தத்திரளில் கலந்தபோது திரளே நான் என்றாயிற்று. நான் என்றபோது அந்தத் திரள்வடிவே அகத்திலெழுந்தது. முதலில் அது திகைப்பை அளித்தது, சிலநிமிடங்களிலேயே பழகி இயல்பாக ஆகியது.
காட்டின் மையமாக இருந்த ஒரு சிறு மைதானத்தில் ஏற்கனவே பலர் கூடியிருந்தனர். நான் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். அவர்கள் எவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் எங்களுக்குரிய சைகைகளும் உடல்மொழியும் உண்டு. ஆகவே ஓசையே இல்லாமல் அங்கே உரையாடல் நடந்துகொண்டிருந்தது
நீளமான நிலைமுழவுகளும் ஆளுயரமான விட்டம்கொண்ட முரசுகளும் வந்தன. கொம்புகளுடன் சிலர் வந்தனர். ஒவ்வொருவரும் ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டதுபோல தங்களுக்கான இடங்களில் நின்றுகொண்டார்கள். திரள் சேர்ந்துகொண்டே இருந்தது.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முழவுகள் ஒலிக்கத் தொடங்கின. முரசுகளும் கொம்புகளும் இணைந்துகொண்டன. எந்த ஒழுங்குமற்ற ஓசைப்பெருக்கு என்ற எண்ணமே முதலில் ஏற்பட்டது. ஆனால் அதற்குள் ஓர் உள்ளொழுங்கு இருந்தது. அதை வாசிப்பவர்கள் மெல்ல மெல்ல அதை திரட்டி உருவாக்கிக் கொண்டார்கள். தாளம் எவருக்கும் பிடி கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அனைத்து உடல்களும் தாளத்திற்கேற்ப நடனமிட்டுக் கொண்டிருந்தன.
நடனம் அனைவரையும் ஓரசைவாக ஆக்கியது. ஒற்றை உடலென்று மாற்றியது. திடீரென்று நான் அந்த காட்சியை அப்பால் நின்று கண்டேன். மிக அப்பாலிருந்து. ஒளிந்து நின்று நோக்கிக் கொண்டிருந்தேன். நெடுங்காலம் முன்பு. பின்னர் என் அகம் மின்னியது. நான் அந்தக்காட்சியை ஓர் ஓவியத்தில் கண்டிருக்கிறேன்.
பிரிட்டிஷ் ஆஸ்திரேலிய ஓவியரும் பயணியுமான சார்லஸ்.இ.கோர்டான் ஃப்ரேஸர் வரைந்த தைலவண்ண ஓவியம் அது. 1885ல் நியூசிலாந்துக்கு வந்த ஃப்ரேசர் அங்கிருந்து 1887ல் அன்று ஹெப்ரைட்ஸ் என்று அழைக்கப்பட்ட டானா தீவுக்கு வந்தார். மார்ச் மாதம் இருபத்தெட்டாம் தேதி. அவரை அங்கிருந்த பழங்குடியினர் இன்னொரு பழங்குடியினர் நடத்திய மனிதக்கறி உண்ணும் விருந்துக் கொண்டாட்டத்தைப் பார்க்க கூட்டிச் சென்றார்கள். அவர் ஒரு புதருக்குள் ஒளிந்து நின்று அந்த சடங்கைப் பார்த்தார்.
அரைநிர்வாணமாக இருந்த பழங்குடிக்கூட்டம் ஒன்று அடர்ந்த காட்டுக்குள் உணவாக உண்ணப்படவேண்டிய இரு மனிதர்களை மூங்கிலில் கைகால்களைக் கட்டி தொங்கவிட்டு தூக்கிக் கொண்டுவந்தது. அதில் ஒருவர் பெண். அவர்கள் திமிறி துடித்து, கதறி அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களை அவர்கள் நடுவே போட்டு சுற்றிவந்து முரசுகளின் தாளத்திற்கு ஆடினார்கள். ஆட்டம் வெறிகொண்டு விசைகூடியபோது கழிகளால் அவர்களை அடித்தே கொன்றனர். அந்த தசையை கிழித்து தீயில் சுட்டு அவர்கள் உண்டார்கள். அதை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1891ல் ஃப்ரேசர் படமாக வரைந்தார். மிகப்புகழ்பெற்ற ஓவியம் அது.
அந்த ஓவியத்தை தான் வரைந்த தருணத்தைப் பற்றி ஃப்ரேஸர் 1895ல் லிவர்பூல் ஓவியக் காட்சியின்போது எழுதிய கட்டுரையில் விவரித்திருந்தார். அந்த ஓவியமும் குறிப்பும் எங்கள் குழுவில் மூன்றுமாதங்களுக்கு முன்னரே அளிக்கப்பட்டிருந்தன. அந்தச்சடங்கு நடந்தது மௌண்ட் யாசுர் எரிமலைக்கு அடியிலிருந்த காட்டில்.
நான் சுற்றிலும் பார்த்தேன். இரவு கருமை கொண்டிருந்தது. மரங்களுக்குமேலே சிவப்பு ஒளியாக ஏதோ தெரிந்தது. அது அருகில் ஏதோ பந்தம் என என் மனம் கற்பனை செய்துகொண்டிருந்தது. அது நெடுந்தொலைவில் இருந்த மௌண்ட் யாசுர் எரிமலையின் உச்சியில் எழுந்துகொண்டிருந்த நெருப்பு.
எரிமலையின் அடிநிலத்துக் காடு அது என்று தெரிந்ததும் நான் புரிந்துகொண்டேன், ஃப்ரேசர் நேரில் கண்டு வரைந்த அந்தச்சடங்கு நடந்த அதே இடத்தில் அதேபோன்று அச்சு அசலாக அப்போது கூடியிருந்தோம். அப்பாலிருந்து ஒருவர் எங்களைப் பார்த்தால் ஃப்ரேஸரின் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே நினைப்பார். மீண்டும் ஒரு சிறு அதிர்வை நான் அடைந்தேன். அது 2012 மார்ச் இருபத்தேழு. ஃப்ரேசர் கண்ட காட்சி நடந்து நூற்றியிருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.
என் அகம் கிளர்ந்து எழுந்தது. அந்த தாளம் அதை மிகையாக்கியது. என் கால்கள் என்னையறியாமலேயே ஆடிக்கொண்டிருந்தன. என்னுள் ஒர் எதிர்பார்ப்பும் பயமும் இருந்தாலும் என்னை மீறி என் உடல் வெறிகொண்டது. அந்த வெறி உள்ளத்திற்கு வந்துகொண்டிருந்தது. கொம்புகள் யானைகள் போல பிளிறலோசை எழுப்பின. கூச்சல்கள் செவிகளை நிறைத்தன. தாளம் விரைவுகொண்டது. நான்குபேர் இரண்டு மனிதர்களை தூக்கிவந்தனர். அவர்களும் எங்களைப்போலவே இருந்தார்கள். நாங்களேதான். நான்தான்.
அவர்களில் ஒருவர் பெண் ஒருவர் ஆண். இருவரும் துள்ளி திமிறி கூச்சலிட்டனர். கதறி அழுதனர். வலிப்புகொண்டவர்கள் போல அதிர்ந்தனர். அவர்களை கூட்டத்தின் மையத்திற்குக் கொண்டுவந்து போட்டார்கள். அவர்களைச் சூழ்ந்து நின்று அனைவரும் ஆடத்தொடங்கினர். ஃப்ரேசர் சொன்ன அதே ஆட்டம், அந்த இரைகளை ஆபாசமான சைகைகளால் அவமதித்து, வசைபாடி, அவர்கள்மேல் காறி உமிழ்ந்து, மண்ணை அள்ளி வீசியபடி கூச்சலிட்டுக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அவ்வாறு அவர்களை சிறுமைசெய்தால்தான் அவர்களை விலங்குகளாக ஆக்கி உணவாகக் காணும் மனநிலையை அடையமுடியும்.அவர்களிடமிருக்கும் தீய ஆவிகளை ஓட்டும்பொருட்டு அவர்களின் தலைமுடியில் ஒரு பகுதியை வெட்டி ஊதிப்பறக்கவிட்டனர்.
மிக அப்பால் நிலக்கரி பரப்பப்பட்ட தீக்குழிகளில் கனல் எழுந்தது. கூச்சலிட்டு சிரித்தபடி அனைவரும் சேர்ந்து சென்று அவர்களின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கினார்கள். அனைவருக்கும் என்ன செய்வதென்று தெரிந்திருந்தது. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளியபடி கூவிச்சிரித்தபடி அவர்களை புரட்டிப்புரட்டி ஆடைகளைந்தனர். கட்டுகளுக்குள் தசைத்திரள்கள் துள்ள அந்த இரைகள் கூச்சலிட்டு களைத்து தொண்டை ஓய்ந்து கண்ணீருடன் நடுங்கிக்கொண்டிருந்தன.
திடீரென்று எல்லா பந்தங்களும் அணைந்தன. கண்களே இல்லையென்றாகும் இருட்டுக்குமேல் மிக அருகே தலைமேல் என எரிமலையின் தழல். வெடியோசை போல முரசுகள் ஒலித்தன. கொம்புகள் அனைத்தும் ஒற்றைப்பேரொலி என எழுந்து ஆர்ப்பரித்தன. அத்தனைபேரும் கூச்சலிட்டபடி இரைகள் மேல் பாய்ந்தனர். அவர்களை கழிகளால் அடித்தனர். சிலநிமிடங்களுக்குள்ளாகவே பச்சைக்குருதியின் மணம் எழத்தொடங்கியது.
நான் அவர்களுடன் சென்று இரைமேல் பாயவில்லை. என்னுள் எஞ்சிய தன்னுணர்வு என்னை நடுங்கி செயலற்று நிற்கச்செய்தது. ஆனால் பசுங்குருதியின் மணம் என் எல்லா தன்னுருவகத்தையும் அழித்தது. நானும் பாய்ந்து உடல்களினூடாகச் சென்று நிலத்தில் கிடந்த அந்த உடல்களில் இருந்து பசுந்தசையை வெறும் கையாலேயே பிய்த்து கிழித்து எடுத்துக்கொண்டேன். என் கையில் பிசுபிசுப்பான குருதியுடன் இன்னும் நீங்காத உயிருடன் அந்தத் தசை அதிர்ந்தது. அப்பால் எரிந்துகொண்டிருந்த கனல்குழிகளை நோக்கி சிலர் ஓடினர். சிலர் பச்சைத்தசையையே வாயிலிட்டு மென்றனர்.
நான் என் கையிலிருந்த தசைக்கீற்றை அங்கிருந்த ஒரு கழியில் வைத்து தீயில் காட்டிப் பொசுக்கினேன். அதை வாயில் கவ்வியபடி நடனமிட்டேன். அதை மென்று விழுங்கினேன். இருட்டுக்குள் துப்பினேன். வெறிகொண்டு சிரித்தபடியும் கைகளை வீசியபடியும் குதித்து குதித்து ஆடினென். என்னைச் சூழ்ந்து என்னைப்போலவே அனைவரும் தாண்டவமாடினர்.
நான் என் நாவில் உணர்ந்த சுவை ஒரு பெண்ணின் ஊன். அவள்தான். ஆம் அவளேதான். என் உடலுக்குள் ஏதோ பேய்த்தெய்வம் குடியேறியது. தீபட்டதுபோல நான் எம்பி எம்பிக்குதித்தேன். தொண்டை புடைக்க இருண்ட வானை நோக்கி, அங்கே நின்றிருந்த எரிமலையின் அனல்செண்டை நோக்கி கூச்சலிட்டேன்.
மீண்டும் விளக்குகள் எரிந்தன. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கூச்சலிட்டு நகைத்தனர். கைகளால் மாறி மாறி அறைந்துகொண்டார்கள். என்னருகே ஒரு பெண் என்னைப்போலவே வெறிகொண்டு ஆடினாள். அவள் கழுத்திலும் எலும்பு மாலைகள் அணிந்திருந்தாள். வாயிலிருந்து பச்சைரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கண்கள் சிவந்த பெர்ரி பழங்கள் போலிருந்தன. அவளை சூழ்ந்து கைகள் பறந்தன. எட்டு கைகள். நூறு கைகள். அவள் கால்கள் மண்ணில் பதியவில்லை. அவள் கூந்தல்புரிகள் பாம்புகள் என சீறி படமெடுத்து சுழன்றன
கொம்புகள் சுதிமாற்றி முழங்க தாளம் கதி மாறியது. சீரான துள்ளல். அனைவரும் கூவியபடி பெண்களை நோக்கிப் பாய்ந்தார்கள். நான் ஒருகணம் தயங்கினேன். ஒருகணம்தான். அதற்குள் அவள் கைகளை விரித்து என்னை நோக்கி பாய்ந்துவந்தாள். என்னை சிறுபொம்மை போல எடுத்துக்கொண்டாள். அவள் கைகளை நான் அறிந்திருந்தேன். அவள்தானா? அப்படியென்றால் நான் சற்றுமுன் தின்றது எவரை?
அவள் என்னை இருட்டுக்குள் கொண்டுசென்றாள். அங்கே நாங்கள் இரு எரியும் ஒயர்துண்டுகள் போல நெளிந்தபடி பொசுங்கியபடி உருகியபடி பின்னி ஒன்றானோம். ஒருவரை ஒருவர் அழித்தோம். ஒருவரை ஒருவர் நிறைத்தோம். பற்களால் கடித்தும் நகங்களால் கீறியும் அறைந்தும் உதைத்தும் முத்தமிட்டும் அழுதும் சிரித்தும் வெறிகொண்டாடினோம். புழுதியில் சாம்பலில் புழுக்களெனப் புரண்டோம். விலகி வெறுமைகொண்டு மீண்டும் பாய்ந்தோம். எழுந்து ஓடி துரத்திப் பிடித்து அறைந்து வீழ்த்தி மீண்டும் இணைந்தோம். இருட்டில் பிறிதெவருமே இல்லாததுபோல, எங்களைச் சூழ்ந்திருந்த காடே உலகு என்பதுபோல. எங்கள்மேல் வானில் எரிமலையின் மலர் எழுந்து நின்றிருந்தது.
[ 3 ]
பிரிஸ்பேனில் விமானநிலையத்தில் ஒரு வைன் வாங்கிக்கொண்டு உயரமான நாற்காலியில் அமர்ந்தேன். எதையும் நான் கவனிக்கவில்லை. என் உடலின் முழு ஆற்றலும் ஒழுகி மறைந்துவிட தசைத்தூண் போல எடைகொண்டிருந்தேன். என்னை நானே ஒவ்வொரு அடிக்கும் உந்தி முன் செலுத்திக்கொண்டேன். என் உடலெங்கும் சிறு காயங்கள். தசைகள் அனைத்திலும் மெல்லிய சிதைவின் வலி.
என்னை கடந்துசென்ற உடலசைவை உடனே விழிகள் அறிந்தன. என் பார்வையை அவளும் அறிந்தாள். திரும்பி நோக்கி திடுக்கிட்டு, உடனே பார்வையை விலக்கிக் கொண்டு கடந்துபோக எண்ணி காலடிகள் வைத்து, பின்னர் அது சரியல்ல என்று எண்ணி தன்னை திருப்பிக்கொண்டு என்னை நோக்கி வந்தாள். “ஹாய்” என்றாள்.
நானும் “ஹாய்’ என்றேன்அவள் முகம் அதைத்தது போலிருந்தது. உதடுகள் சிதைந்து புண்ணாகி தடித்திருந்தன. கன்னங்களில் கழுத்தில் காதுமடல்களில் உலர்ந்த ரத்தப் புண்கள். ஒரு போர்க்களத்தில் இருந்தோ விபத்திலிருந்தோ தப்பி வந்தவள் போல. அவள் என்னருகே அமர்ந்தாள். “உங்கள் விமானம் தாமதமா?”என்றாள்.
“ஆமாம்’ என்றேன்.
“என் விமானமும் தாமதம்தான்”.
“ஆனால் நீண்ட நேரப்பயணம் இருக்கிறது. விமானத்திலேயே ஓய்வெடுத்துக்கொள்ளலாம்”
“ஆமாம்” என்றாள். “சடலம்போல் உணர்கிறேன்”
“நானும்”
“இந்த உடலில் இருந்து நான் உயிர்கொண்டு எழவேண்டும்”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“பயங்கரமான குரூரமான கனவுபோல” என்றாள். “எல்லாம் மெய்யாகவே நடந்ததா என்று கூட சந்தேகமாக இருக்கிறது. இந்த உடற்புண்கள் இல்லை என்றால் நம்பியிருக்கமாட்டேன்”
நான் “நாம் தேடிவந்தது ஒரு கனவைத்தானே?” என்றேன்.
அவள் “ஒன்றுதான் உறுத்துகிறது” என்றாள். “அந்த மனிதச்சதை… அது..”
“அது ஏதோ விலங்கு… பெரும்பாலும் மனிதவடிவில் செய்யப்பட்ட வேறேதோ இறைச்சி… அல்லது சிம்பன்ஸி,..” என்றேன். “விளக்கு அணைந்ததும் அங்கிருந்தவர்கள் மண்ணுக்குள் சென்று அவை மேலே வந்திருக்கலாம்”
“எப்படித்தெரியும்?”
“இல்லையேல் ஏன் விளக்கை அணைக்கவேண்டும்?” என்றேன்.
“ஆம்”என்றாள் அவள் ஆறுதல்கொள்வது தெரிந்தது.
”ஆனால் இது என் ஊகம்தான்” என்றேன்.
அதுவாகவே இருக்கட்டும்” என்றாள். வெளிறலாக புன்னகைத்தாள்.
“அதோடு இது கார்கோ கல்ட் போல. மெய்யாகவே செய்வது அல்ல, பாவனை செய்வதுதான்”
“ஆம்”என்று புன்னகைத்தாள். “நான் இன்னொன்றும் கேட்கவேண்டும்”
நான் வெறுமே பார்த்தேன்.
“அது நீயா?”
“எது?”
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“உனக்கு அப்படித் தோன்றியதா என்ன?”
“அப்படித் தோன்றியது. அல்ல என்றும் தோன்றியது”
“எனக்கும் அப்படித்தான்… ஆனால் நாம் அதை உறுதிசெய்துகொள்ளவே முடியாது”
“ஆம்”
“அப்படியென்றால் அதைப்பற்றி பேசவேண்டுமா என்ன? நான் ஆம் என்றால் உன் மனம் இல்லை என்பதற்கான காரணங்களை தேட ஆரம்பிக்கும்”.
“ஆம்”
நான் எழுந்துகொண்டேன். “என் விமான அறிவிப்பு வந்திருக்கும் என நினைக்கிறேன்”
“பார்ப்போம்” என்றாள்.
“பார்க்கவேண்டுமா என்ன?” என்றேன்.
சிலகணங்களுக்குப்பின் அவள் “வேண்டாம்” என்றாள்.
***