ஆடகம், கோட்டை -கடிதங்கள்

Accidental angel of 2 small hills

 

கோட்டை [சிறுகதை]

அன்புமிகு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

 

இப்போதுதான் ‘கோட்டை” சிறு கதையைப் படித்தேன்; முழுவதும் இழையோடிய மறைமுகமான நகைச்சுவையும், உட்குறிப்புகளும் மிக ரசிக்கும்படி இருந்தன.  மூன்று வஷயங்கள் உடனே ஞாபகத்தில் வந்தன:

 

முதலாவதாக, 2020-ல் வெளி வந்த மிகச்சிறந்த மலையாளப் படங்களில் ஒன்றான  “கெட்டியோளானு என்ட மாலாக” என்ற  படத்தில் உங்கள் கதைக்கரு போலவே , ஓர் எளிய மலைவாழ் விவசாயி (ஆசிப் அலியின் மிக அருமையான் நடிப்பில்) தன் புதுமனவியிடம் , நண்பர்களின் உசுப்பேதலில் மிகையாய் ஆக்கிரமித்து படும் பாடே முக்கிய கதாதந்து.   சுவாரசியமான திரைக்கதை, நடிகர் தேர்வு, படமாக்கம் இந்தப் படத்தின் சிறப்புகள். ஏதோ குறிப்பிட்ட காரணத்திற்காகத் தான் முகப்பில் இருந்த படம்  சேர்க்கப்பட்டிருக்கிறது என்று படிப்பதற்கு முன்பே ஊஹம் செய்ய முடிந்தது.

 

கூடவே, பரதனின் “தேவராகம்” படத்தில் வரும் பாடல் ஒன்றில் நாயகனும் நாயகியும் லயிப்பில் கூடும் காட்சிக்கு ,   ஒரு உருவகமாக , இதே போன்று இரண்டு மலைக்குன்றுகளும், அதனிடையே கடந்து போகும் திரண்ட வெண்மேகங்களும் பார்த்தது நினைவில் வந்தது.

 

இந்தக் கதையில் வரும் பாத்திரங்களின் எளிமையும் குசும்பும் போல்  ஐரிஷ் எழுத்தாளர்  patrick taylor ( http://patricktaylorauthor.com/ )அவரின் சிறுகதை, மற்றும் நாவல்களில் நிறையக் காண முடியும்.

 

வாழ்த்துக்களோடு கூடிய நன்றியுடன்

 

ந. சந்திரக்குமார்

ஆடகம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

கோட்டை சிறுகதையை வாசித்துக்கொண்டிருக்கையில் நான் நினைத்துக்கொண்டது இரண்டு எழுத்தாளர்களை. ஐசக் பாஷவிஸ் ஸிங்கர், வில்லியம் சரோயான். சிங்கரின் கதைகளில்தான் மிகச்சின்ன ஒரு சமூகத்திற்குள் உள்ள விசித்திரமான கதாபாத்திரங்கள் இருக்கும். நம்பவே முடியாத தொழில்களைச் செய்பவர்கள். அணஞ்சி போன்ற ஒரு கதாபாத்திரத்தை நவீன உலகில் கண்டுகொள்வது கஷ்டம். அவள் ஒரு ஸ்பெஷலிஸ்ட். எல்லா கல்யானங்களிலும் முதலிரவுக்குப்பிறகு அவள் தேவைப்படுகிறாள்.

 

அதேபோல சரோயனின் கதைகளில் எப்போதுமே சின்னப்பையனின் உலகம் அழகாக வெளிப்படும். சின்னப்பையனுக்கு எது தெரியுமோ அதுதான் கதையில் இருக்கும். ஆனால் மற்றவர்கள் பார்க்காத பலவற்றையும் அவனால் பார்க்கமுடியும். சின்னப்பையனின் உலகம் கண்டடைதல்கள் நடந்துகொண்டே இருப்பது.

 

எனக்குப்பிடித்த இரண்டு எழுத்தாளர்களை அருகருகே கண்டேன். மகிழ்ச்சி

 

கோகுலக்கண்ணன் எம்

 

இன்றைய ஆடகம்… நீங்கள் எழுதிய மிக நேரடியான கதைகளில் ஒன்று என்பேன். ஆனால் கடைசி பாராவில் உங்கள் மாயத்தொடுகை உண்டு.

 

வீட்டில் மனைவி மகனுக்கு அபிராமி அந்தாதி சொல்லித்தருகிறாள். அதில் “அருந்திய நஞ்சை அமுதாக்கிய அம்பிகை ” என அன்னையை சொல்லும் இடம் வருகையில் தகரக் கூரையில் தேங்காய் விழுந்தது போல் இருந்தது. நேற்று மாலையிலிருந்து அவ்வரியே இருவர் குரலிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இப்போது ஆடகம் வாசிக்கக் கிட்டியது. நன்றி என மட்டும்தான் சொல்ல முடியும்.

 

நான் துளி அமுதம் பெய்யப்பட்டு நஞ்சு திரிந்து நன்னீர் என மாறிய தருணங்களையே எண்ணிக்கொண்டேன். கோட்டை, துளி யில் வரும் ஆண்களை என் வாழ்வில் நடித்து வந்த பல தருணங்களை எண்ணி வருந்தியதுண்டு.  உடலால் நெருங்காது மனதால் பெண்களை நோயுற செய்த காலம்.  துளி அமுது பெய்த பெண்களில் ஒருத்தியான தோழி  சொல்வாள்… விடு,அதுலயும் ஒரு நல்லது. வேறெந்த ஆம்பளையையும் இனி அவ்ளோ சீக்கிரம் கிட்ட சேர்க்க மாட்டா. நல்லதுதான்….

 

நஞ்சு அமுதாக நஞ்சில் சொட்டியிருக்க வேண்டும் துளி அமுது.  துளி அமுது சேர்ந்த நாகம் என்பதாலேயே அது ராஜநாகம் என நினைத்துக் கொள்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது.

 

ஆர்

 

அன்புள்ள ஜெ

 

ஆடகம் ஓர் அருமையான கதை. ஆடகப்பசும்பொன் என்று நாகத்தைச் சொல்வதுண்டு. அதை ஆடகம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் ஆடுவதனால்தான். ஆடகம் என்றே நாகத்துக்கு பரிபாஷைப்பெயர் உண்டு சித்தர் மரபில்

 

சித்த வைத்தியத்திலும் நாகநஞ்சு மிக முக்கியமான மருந்துதான். பித்தனின் கழுத்தில் இருப்பது அல்லவா?

 

கணேசன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18
அடுத்த கட்டுரையா தேவி! , விலங்கு – கடிதங்கள்