கொம்பொலி கேட்டதும் ஆண்டாள் வேலைக்காரி காளிக்கு கைகாட்டிவிட்டு அரண்மனையின் பூமுக வாசலுக்குச் சென்றாள். கரிய உடலும் பெரிய மீசையும்கொண்ட கொம்பூதி சரிகைத்தலைப்பாகை அணிந்து இடையில் செந்நிறக் கச்சை கட்டி குட்டியானையின் தும்பிக்கைபோன்ற கொம்பை தூக்கி ஊதியபடியே அரண்மனை வளாகத்திற்குள் வந்தான். அவனைத்தொடர்ந்து ஈட்டிகள் ஏந்திய எட்டு வீரர்கள் குச்சம் வைத்த தலைப்பாகைகளும் முகப்பு முடிச்சுகொண்ட கச்சைகளுமாக சீராக வந்தனர்.
திவான் ஆலெட்டி ரங்கய்யா வருகை என்று தெரிந்து அரண்மனைக் காவலர்கள் தலைவணங்கி நின்றனர். ஈட்டி ஏந்திய காவலர்களால் சூழப்பட்ட செம்பட்டால் ஆன மஞ்சலை இரண்டு போகிகள் சுமந்து வந்தனர். அது வளைந்த மூங்கிலில் நீர்த்துளிபோல தொங்கி ஊசலாடியது. அதன் திரைகள் தாழ்ந்திருந்தன. ஆனால் அதன் இடைவெளிகள் வழியாக திவான் வெளியே பார்த்துக்கொண்டேதான் வருவார். கடந்துசெல்லும்போது அவருடைய ஒருகண் அந்த இடைவெளியில் தெரிந்துமறையும். புதர்களுக்குள் நிற்கும் புலியின் கண்போல என்பார்கள்.
மஞ்சல் வந்து அரண்மனை முற்றத்தில் நின்றது. கொம்பூதி கலாசம் ஊதியபின் கொம்பைச் சுழற்றி இடையில் செருகி முறைப்படி வணங்கி அப்பால் சென்றான். ஈட்டி ஏந்திய வீரர்கள் இரு பிரிவாக பிரிந்து ஈட்டியை தாழ்த்தி வணங்கினர். அரண்மனைக்காவலர்கள் திரும்ப வணங்கினர். ஆண்டாள் கைகளைக் கூப்பியபடி சென்று நின்றாள். மஞ்சலில் இருந்து ஆலெட்டி ரங்கய்யா இறங்கி மேலாடையைச் சரியாக இழுத்துப்போட்டுவிட்டு சிறிய கண்களால் அவளை கூர்ந்து பார்த்தார்.
அவருடை இயல்பு அது. தெரிந்தவர்களைக்கூட முன்பு பார்க்காதவர்போல சற்றுநேரம் பார்ப்பார். அவருக்கு தங்களை நினைவில்லை என்று பிறர் எண்ணுவார்கள். அவர் எதையும் கவனிப்பதில்லை, எதையும் நினைவில்நிறுத்திக்கொள்வதில்லை என்ற மனப்பதிவு ஏற்படும். உண்மையில் அது அவருடைய ஒரு பதுங்குவேடம். சாப்பாட்டுப்பிரியரான, சோம்பலான, கோழையான பிராமணன் என்று அவர் தன்னை முன்வைத்துக்கொண்டார். அவ்வாறல்ல என்று அறியாதவர்களே வேணாட்டில் கிடையாது. ஆனால் அவர்முன் இருக்கையில் அவருடைய பருத்த தோற்றமும், கொழுத்த முகமும், களைப்பும் சலிப்பும் கொண்ட மங்கலான கண்களும் சேர்ந்து அந்த உருவகத்தை பிறரிடம் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சொற்றொடருக்கும் அதை விலக்கி விலக்கி அவரிடம் உரையாடவேண்டியிருக்கும்
ஆண்டாள் ஆலெட்டி ரங்கய்யாவை உள்ளே அழைத்துச்சென்றாள். உள்கூடத்தில் அவருக்காக சாய்மானம் கொண்ட டச்சு நாற்காலி போடப்பட்டிருந்தது. அவசரமாக அதன்மேல் ஒரு வெண்பட்டை விரித்திருந்தாள் காளி. ஆண்டாள் பணிந்து கைகாட்ட ஆலெட்டி ரங்கய்யா அமர்ந்தார். அமைதியின்மையுடன் சுற்றுமுற்றும் பார்த்தார். “எங்கே?” என்று கைகாட்டினார்.
“அடியேன். மகாராணி திருமனசு அறையில் அணிகொண்டு புறப்பாட்டுக்கு ஒருங்கிக்கொண்டிருக்குந்நு” என்று ஆண்டாள் சொன்னாள்.
“நான் ராணிதிருமனசைப் பாக்கவந்நது அங்ஙோட்டு புறப்பெட வேண்டா எந்நு திருவுள்ளம் உணர்த்துவதுக்குத்தான்” என்று ஆலெட்டி ரங்கய்யா சொன்னார். “அதை முன்பே கேசவனிடம் சொல்லி அனுப்பியிருந்நேன்”
“அறியுந்நேன் பிரபு. அவன் ராணி திருமனசோடு அதை சொல்லினான்” என்றாள் ஆண்டாள் “எந்ந்நால் ராணி திருமனசுகொண்டு போகுந்நதில் உறப்பாய் இரிக்குந்நு. நம்மள் ஒந்நும் செய்ய வழியில்லை”
“அதுகொண்டு அல்லே நானே வந்நேன். சத்யத்தில் நான் ராணிதிருமனசிடம் பேசுந்நதை காட்டிலும் நின்னோடு கூடுதல் ரம்யமாயி பேசமுடியும். நீ ராணி திருமனசிடம் என்னைக்காட்டிலும் நல்லவண்ணம் எல்லாம் எடுத்து சொல்ல முடியும்” என்றார் ஆலெட்டி ரங்கய்யா.“இந்நுள்ள நிலையில் இந்த யாத்திரை அவசியம் இல்லாத காரியம் மாத்ரமல்ல, மகா ஆபத்துமாகும்”
அவர் பேசுவதற்காக அவள் காத்திருந்தாள்.
“இப்போ நாடு இரிக்குந்ந நிலை அறியாமல்லோ?” என்றார் ஆலெட்டி ரங்கய்யா .
அவள் “அடியன், அறியுந்நேன் உடையதே” என்றாள்.
“நந்நாயிட்டு அறியணும்… ஸ்திரீகள் ராஜ்யபாலனம் அறியுந்நது கஷ்டமாக்கும். எந்நாலும் அறியணும், அதிலும் நீ தமிழத்தி.. நினக்கு இவிடே உள்ள காரியங்கள் அறியான் வழியில்ல”
அவர் திரும்பிப்பார்த்தார். காளி ஒரு பெரிய வட்டிலில் வெள்ளைத்துணி போட்டு மூடி கொண்டுவந்து அவர் அருகே சிறிய மேடையில் வைத்தாள். அதற்குள் உளுந்துவடை இருப்பது மணத்தில் இருந்து தெரிந்தது. ஒரு வெண்கலக் கும்பாவில் நீர் கொண்டுவந்து வைத்தாள். அவள் அதில் கைவிட்டு கழுவினார். பின்னர் வட்டிலை மூடிய துணிக்குள் கைவிட்டு வடையை பிய்த்து வெளியே தெரியாதபடி பொத்தி எடுத்து வாயிலிட்டார். “ராஜ்ய ஸ்திதி மோசம். மோசம் எந்நு சொன்னால் வளரே வளரே மோசம். இதுபோலே ஒரு ஸ்திதி முன்பு வந்நதில்லை…” என்றார்.
அவள் “ஆமாம் உடையதே” என்றாள்
“எந்து ஆமாம்…? நினக்கு எந்து அறியாம்? நம்முடைய பொன்னு மகாராணி உமையம்மை திருமனசு யாருடே அனந்தர அவகாசி? அதாகப்பட்டது வாரிசு? தெரியுமா? சொல்லு” என்றார் ஆலெட்டி ரங்கய்யா .
ஆண்டாள் தெரியாது என்று தலையசைத்தாள். உண்மையில் அவளுக்குத் தெரியும், ஆனால் உறுதியாகத் தெரியாது. அவளுக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர். அவள் யாதவ குலத்தவள். அங்கே ஆசாரங்கள் உறவுமுறைகள் நம்பிக்கைகள் எல்லாமே வேறு. இங்கே வேணாட்டில் பெண்வழி அரசுரிமை என்று வந்தபிறகுதான் தெரிந்துகொண்டாள். அந்த வலைப்பின்னல் அவள் எத்தனை தெரிந்துகொண்டாலும் சிக்கலாகவே இருந்தது. ஆகவே தெரியாது என்றே எப்போதும் சொன்னாள்.
உண்மையில் அவளுக்கு எதுவும் தெரியாது என்பதுதான் அங்கு வந்ததற்கான தகுதி. ஆகவேதான் அவளை அரண்மனையில் அரசிக்கு அருகில் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அரண்மனையிலிருந்த எல்லா வேலையாட்களும் பாண்டிநாட்டிலிருந்து வந்தவர்கள். உள்ளூர் அரசியலை அறியாதவர்கள். காளிக்கு தலைவன்கோட்டை. திவான் அவரே நேரில் ஆட்களை அனுப்பி வரவழைத்து பேசி மதிப்பிட்டு அவர்களை அமர்த்தினார்.
நாலாண்டுக்கு முன் அவள் வேலைக்கு வந்தபோது வேணாட்டின் அரசசபை தலக்குளத்து வலியகொட்டாரத்தில் இருந்தது. மரத்தாலான சிற்பச் செதுக்குகள் நிறைந்த அரண்மனை அது. ஊரைச் சுற்றிலும் மூன்று ஆள் உயரமுள்ள மண்கோட்டை. அரண்மனையைச்சுற்றி இன்னொரு மண்கோட்டை. இரண்டு ஆள் உயரமானது. அங்கே அவள் முதலில் திவானின் அரண்மனையில் இருந்தாள். பின்னர் உமையம்மை ராணி கூப்பிட்டால் ஏனென்று கேட்கும் எட்டு வேலைப்பெண்டுகளில் ஒருத்தியாக அமர்த்தப்பட்டாள்.
அங்கே இருந்தவரை ராணி அவளிடம் அதிகம் பேசவில்லை. ஒவ்வொருநாளும் அரசிக்கு ஓலைகள் வந்துகொண்டிருந்தன. ஒற்றர்கள் வந்து செய்தி சொனனர்கள். திவானிடமும் பேஷ்கார் வேலுநாயரிடமும் வலியபடைத்தலைவன் கிருஷ்ணக் குறுப்பிடமும் பேசிக்கொண்டே இருந்தாள். அரசியல்சூழல் என்ன என்று ஆண்டாளுக்கு புரியவில்லை. ஆனால் அது நாளுக்குநாள் ஊர்மேல் படந்த தீ என பரவிக்கொண்டிருப்பதை மட்டும் புரிந்துகொண்டாள். அரசியின் முகம் எப்போதும் பதற்றமும் சினமும் அச்சமும் கொண்டிருந்தது
அரண்மனையை ஒட்டிய அறப்புரை மாளிகையில் உமையம்மை மகாராணியின் ஆறு மகன்களும் இருந்தார்கள். இளவரசர்களுக்கு காவலாக ஒரு படையும் வேலைக்காரர்களும் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருநாளும் காலையில் ஓத்துபடிப்புக்குச் சென்றபின் அவளைக் காண வந்தார்கள். அப்போது அவள் காலைச்சந்திப்புகள் முடிந்து உத்யானத்தை ஒட்டிய செம்பகமுறியில் சற்று சாய்வான நாற்காலியில் அமர்ந்திருப்பாள். மூத்தவன் ராமவர்மா கொஞ்சம் தைரியமானவன். மற்றவர்கள் அவளை அணுகவே அஞ்சுவார்கள்.
அவர்கள் அவளைப் பார்ப்பதை விரும்பினார்களா என்பதே சந்தேகம்தான். அது ஓர் அரசச் சடங்காக மாறியிருந்தது. அரசியும் அச்சடங்கை செய்தாகவேண்டுமே என்று செய்தாள். அதை ஒவ்வொரு நாளும் அவளுக்கு நினைவூட்டவேண்டியிருந்தது. அவள் “ஆம்” என்று நினைவுகூர்ந்து வந்து அமர்வாள். அதற்கு முந்தைய கணம் வரை ஆணைகளை சொல்லிக்கொண்டிருப்பாள். அவள் சொல்வதை கேட்டு எழுதும் கேட்டெழுத்தன் அருகே ஓலையும் எழுத்தாணியுமாக நின்றிருப்பான். அவள் உள்ளம் அச்சடங்கு முடிந்தபின் சொல்லப்போவதையே எண்ணிக்கொண்டிருப்பது கண்களில் தெரியும்
மூத்தவராகிய ராமவர்மா வந்து அவளை முறைப்படி வணங்கி “அம்மைதிருமனசுக்கு ஸ்ரீயும் ஜெயமும் சாந்தியும் லபிக்குமாறாகட்டே” என்று முகமன் உரைப்பான். அவர்கள் வரிசையாக அவள் முன் நிற்பார்கள். அவள் ஒவ்வொருவரிடமாக கேள்விகள் கேட்பாள். பெரும்பாலும் எளிமையான அன்றாடக்கேள்விகள். படிப்பு எப்படி இருக்கிறது? மாரார் அன்றைக்கு என்ன சொல்லித்தந்தார். படிப்புபோலவே ஆயுதப் பயிற்றும் முக்கியம். ஆகவே படைக்குறுப்பு சொல்வதை தயங்காமல் செய்யவேண்டும். நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. ஆகவே கவனமாக இருக்கவேண்டும்.
அவர்கள் அவற்றுக்கு ஒற்றைச் சொற்களில் பதில் சொல்வார்கள். அவள் காலைத் தொட்டு வணங்குவார்கள். அவள் எவரையும் தொடுவதில்லை. தலைமேல் கைநீட்டி “விஜயீ ஃபவ” என வாழ்த்துவாள். அரைநாழிகையில் அந்த சந்திப்பு முடிந்துவிடும். அவர்கள் ஆறுதலடைந்தவர்களாக திரும்பிச் செல்வார்கள். திருநடை கடந்து ராணியின் செவிவட்டத்தை விட்டு அகன்றதுமே இளையவனாகிய கேரளவர்மா ஏதாவது சொல்ல மற்றவர்கள் மெதுவாகச் சிரிப்பார்கள். ஆண்டாள் அவர்களைப் பார்த்து புன்னகைப்பாள்.
‘பாண்டிச்சி, என்னடீ… பாண்டிச்சீ!” என்று உதயவர்மா அவள் தலையில் கட்டப்பட்டிருந்த கொண்டையை பிடித்து உலுக்குவான். “பாண்டிச்சீ நீ சுந்தரியாக்கும் கேட்டியா. நீ கிளவியாய் போயி. இல்லெங்கில் நின்னே நாம் பட்டுக்கச்சை தந்து பள்ளிக்கேட்டு கெட்டும்…”
அவள் சிரித்துக்கொண்டு “அடியேன்” என்பாள்.
அவர்களுக்கு எப்படியோ அவள்மேல் ஒரு நெருக்கம் உருவாகியது. ஒவ்வொருமுறை வரும்போதும் அவளை சீண்டி விளையாடிவிட்டுத்தான் செல்வார்கள். அது மெல்லமெல்ல உமையம்மைராணியிலும் எதிரொலித்தது. ராணி அவளை நோக்கி புன்னகைக்கலானாள். தனிப்பட்ட முறையிலான சில சலிப்புகளையும் கோபங்களையும் வெளிப்படுத்தினாள்.
ஒருமுறை “எந்தெடி ஆண்டாளே. ராணியாய் பிறக்குந்நதுக்கு காட்டாளத்தியாய் பிறக்குந்நது மேல்” என்றாள்.
“காட்டில் புலியுண்டு திருமனசே’ என்று ஆண்டாள் சொன்னாள் “மான்குட்டிகளை பிடிச்சு கீறி தின்னுந்ந புலி” என்றாள் ஆண்டாள். அப்போது அவள் அரசியின் கால்களுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள். பகல் முழுக்க அரியணையில் அமர்ந்து அவற்றில் நீர் கோத்திருந்தது. நீலநரம்புகள் புடைத்திருந்தன.
உமையம்மை ராணி ஆண்டாளை சற்றுநேரம் பார்த்தபின் “தெய்வத்தைப்போலே குரூரமாய மற்றொராளில்ல ஆண்டாளே” என்றாள்.
அவள் “குரூரமும் அனுக்ரகமும் நம்முடே கல்பனை அல்லையோ திருமனசே” என்றாள்
அதன் பின்புதான் அவள் ராணியுடன் நெருக்கமானாள். ராணி அவளிடம் அவ்வப்போது சில அந்தரங்கமான துயரங்களைச் சொல்வதுண்டு. அவள் எப்போதுமே கவலையும் பதற்றமும் கொண்டவளாக இருந்தாள். தீயவை சில வாசலுக்கு அப்பால் நின்றுள்ளன என்ற எண்ணம் அவலை எப்போதும் துரத்தியது.
திடீரென்று களக்காட்டிலிருந்து பாண்டிமறவர் கூட்டம் தலக்குளம் மீது படைகொண்டுவந்தது. வில்லுக்குறியில் இடைநிலை மாடம்பி கண்ணன்குறுப்பும் எழுபது வீரர்களும் அவர்களை மலைச்சரிவில் எதிர்பாராமல் தாக்கி ஒன்பது நாழிகைப்பொழுது தடுத்து நிறுத்தினர். எழுபதுபேரும் செத்துவிழுந்தபின் பாண்டிப்படை தலக்குளம் அரண்மனைக்கு வருவதற்குள் அரண்மனையை ஒழித்துக்கொண்டு ராணியும் மகன்களும் குதிரைவண்டிகளில் குமாரபுரம், மங்கலம் ,பொன்மனை வழியாக நெடுமங்காட்டை அடைந்தனர்.
பாண்டிமறவர் படைகள் தலக்குளம் அரண்மனையைச் சூறையாடினர். அங்கே அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அங்கிருந்த படைவீரர்கள் நாற்பதுபேரை கொன்றார்கள். ஊருக்குள் இறங்கி கொள்ளையடித்தபின் எட்டுநாட்கள் கழித்து திரும்பிச் சென்றனர். வேணாட்டின் அரசுரிமையைக் கைப்பற்ற முயன்றுகொண்டிருந்த எட்டுவீட்டில் பிள்ளைமாரில் முதன்மையானவரான கழைக்கூட்டத்துப் பிள்ளையின் மகன் ராமனாபிள்ளை தலைமையில் ஆயிரம்பேர் கொண்ட படை வந்து தலக்குளத்தை காப்பாற்றுவதாக நடித்து கைப்பற்றிக்கொண்டது.
மறவப்படையின் வருகை ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும் எட்டுவீட்டுப்பிள்ளைமாரும், எட்டரை யோகக்காரர்களும் சேர்ந்து சதிசெய்து அவர்களை அழைத்துவந்தனர் என்றும் ஆண்டாள் நெடுமங்காட்டிற்கு வந்தபின் அறிந்துகொண்டாள். ஆற்றிங்கலில் முகிலர்களின் படை முகாமிட்டிருந்தது. சிறையீன்கீழ் காயலில் அவர்களின் படகுத்துறை இருந்தது. அங்கிருந்து நாலே நாழிகையில் திருவனந்தபுரத்திற்கு வந்துவிடமுடியும். ஆகவே அனந்தன்காட்டு பெருமாளுக்கு பூசைசெய்வதற்குரிய நெல்லையும் நெய்யையும் மட்டும் ஏற்பாடு செய்து நம்பி நம்பூதிரியையும் ஏழு சீடர்களையும் அறைமாளிகையில் தங்கவைத்துவிட்டு திருவனந்தபுரத்தையும் ஒழித்து நெடுமங்காட்டுக்கு வந்துவிட்டார்கள்.
நெடுமங்காடு மலை சூழ்ந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பெரிய படை வந்துசேர்வதென்றால் நான்குநாட்களாகும். படை வருவதை மலைமேலிருந்து பார்க்கமுடியும். அங்கிருந்து வேங்கைவிளை, ஆரியநாடு, மலையின்கீழ் என்று மலைப்பகுதிகளுக்கு பின்வாங்கி விலகிச்சென்றால் எவராலும் தொடர்ந்து வரமுடியாது. காட்டுக்குள் நுழைந்து அகஸ்தியர்கூடம் வரைக்கும் கூட சென்று ஒளிந்து கொள்ளலாம்.
நெடுமங்காட்டில் கரைமாடம்பி குஞ்சன்பிள்ளையின் பழைய வீடுதான் இருந்தது. அதில்தான் உமையம்மை ராணியும் மகன்களும் தங்கினார்கள். திவான் மங்காட்டு நம்பூதிரிமனையில் தெற்குவைப்பு தேவிகோயிலை ஒட்டிய ஓர் அறையில் தங்கினார். நான்கே மாதங்களில் அங்கே ஓர் அரண்மனை எழுப்பப்பட்டது. மண்ணாலும் மரத்தாலுமான இரண்டு அடுக்கு மாளிகை. அதைச்சுற்றி மண்ணாலான கோட்டை. கஜானாவும் உள்ளேதான். திவானுக்கு அருகே ஒரு வீடு கட்டப்பட்டது. ஒருகாலத்தில் கிழக்கே சேரன்மாதேவி, திருக்கணங்குடி முதல் மேற்கே ஆற்றிங்கல், சிறையின்கீழ் வரை பரவியிருந்த வேணாடு நெடுமங்காட்டையும் சுற்றியிருந்த மலைக்கிராமங்களையும் மட்டுமே கொண்டதாக மாறியது.
கஜானாவே உமையம்மையை அரசியாக நிறுத்திய சக்தி. கொடுங்கல்லூரில் இருந்து சேரமான் பெருமாளின் அவைச்செல்வத்துடன் கிளம்பி தெற்கே வந்த பெருமாள்வம்சத்தின் கடைசி மன்னரான குலசேகரப்பெருமாளின் கருவூலம் அது. அந்தக் கஜானாதான் வேணாட்டை ஓர் அரசாக முந்ந்நூறாண்டுக்காலம் நிலைகொள்ளச் செய்தது. தலக்குளத்திலிருந்து கஜானா கிளம்பியபோதுதான் ஆண்டாள் அதைப் பார்த்தாள். எட்டு இரட்டைக்காளை வண்டிகளில் ஏற்றப்பட்ட எண்பத்துநாலு பெரிய மரப்பெட்டிகள்.
அவற்றில் சேரன் செங்குட்டுவன் சூடிய மணிமுடியும் செங்கோலும் இருப்பதாகச் சொன்னார்கள். அறுபது வயதான குலசேகரப்பெருமாள் தெற்கே வந்து குடியேறியபோது திருமணம் செய்துகொண்ட சிறுமியாகிய திருப்பாப்பூர் ஸ்வரூபத்தில் குஞ்ஞி லக்ஷ்மிபாய் தம்புராட்டிக்கு அவர் பரிசாக அளித்தவை. அவர்கள் அரசகுடியாக ஆகி வேணாட்டின் உரிமையை பெற்றது அவ்வாறுதான்
திவான் “எடீ ஆண்டாளே, ஒரு க்ஷேத்ரத்தில் தெய்வம் சக்தியோடே இருக்கணும். தெய்வத்தின் ஒரு கையில் ஆயுதம். மற்றே கையில் அனுக்ரகம்” என்றபடி வடையை மென்றார். “க்ஷேத்ரமெந்நால் எந்து? க்ஷேத்ரத்தில் முழுவதும் பேய் பிசாசு பூதாதிகள். யக்ஷி கந்தர்வ கின்னர கிம்புருஷர். தெய்வசக்தியாக்கும் அவற்றை எல்லாம் கட்டி வச்சிருக்க்குந்நது. தெய்வசக்திக்கு குறை வந்நால் உடனே எல்லா கெட்ட சக்திகளும் படைகொண்டு பொங்கும், கேட்டியா? அதாக்கும் இங்க இப்ப திருவிதாங்கூரிலே நடக்குந்நது”
“ஆமாம் உடையதே” என்றாள் ஆண்டாள்
“நீ தெளிவாய் மனசில் ஆக்கணும். இங்கே நடக்கிறதை நீ அறிஞ்ஞால் ராணிக்கு எடுத்துச் சொல்லமுடியும்…எப்பவும் அது அப்டியாக்கும். ராணிகளுக்கு சில கிழவிகள் சொன்னால்தான் உள்ளில் போகும்” என்றார் திவான். மென்றபடி “இங்கே உள்ள ராஜ்ய வியவகாரம் கொஞ்சம் சிக்கலாக்கும் ஆண்டாளே” என்றார்.
அவருக்கே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது என ஆண்டாள் எண்ணிக்கொண்டாள். எல்லாவற்றையும் தொகுத்துச் சொல்லச்சொல்ல எல்லாமே சுருங்கி சிறிதாகிறது. கைப்பிடியில் நிற்பதாகிறது. தீர்வுகள் அகப்படுகின்றன. மேலும் அவர் சொல்லும் வரலாற்றில் அவருடைய இடமும் பங்களிப்பும் மிக அதிகம். அவர் அதை அவளிடம் சொல்ல விரும்பினார். அவள் மகாராணியின் செவிகளை கொண்டிருக்கிறார் என்று நினைத்தார்.
வேணாட்டின் அரசர் உத்தரம் திருநாள் ஆதித்யவர்மா இறந்துபோய் மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. ‘பாவம் தம்புரான்’ என்று அழைக்கப்பட்டவர் அவர். வேணாடு நீண்டகாலம் சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் பாண்டியர்களால் வெல்லப்பட்டது. அதன்பின் மதுரை சுல்தான் படைகளால் சூறையாடப்பட்டது. கடைசியாக மதுரை நாயக்கர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக நீடித்தது. அரசுக்கு படை என ஏதும் இல்லை. ஆதரவளிக்கும் மாடம்பிமார் என்னும் சிற்றூர்த்தலைவர்களின் படைகளைத்தான் தேவைக்கேற்ப திரட்டிக்கொள்ளவேண்டும். அது ஓர் அரசே அல்ல, பல்வேறு சிறிய படைத்தலைவர்களின் ஒரு கூட்டம் என்று ஆண்டாள் வந்ததுமே புரிந்துகொண்டாள்.
சோழர்காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட வரிவசூல் அதிகாரிகளான எட்டுவீட்டுப்பிள்ளைமார் என்னும் எட்டு குடும்பங்களும், ஆலயநிர்வாகத்தையும் நிலவுரிமையையும் கையில் வைத்திருந்த எட்டரை யோகக்கார் எனப்படும் நம்பூதிரிகளும் அரசருக்கும் மேலாக அதிகாரத்தை வைத்திருந்தனர். எல்லா ஆட்சிகளிலும் அவர்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கான படைகள் இருந்தன. ஆகவே அரசரால் அவர்களை அடக்க முடியவில்லை. அவர்களாலும் அரசரை வெல்லமுடியவில்லை. பாம்பு தவளையைக் கவ்வி விழுங்கமுடியாமல் தவிக்க, தப்பமுடியாமல் தவளையும் தவித்துக்கொண்டிருந்தது.
‘பாவம் தம்புரான்’ ஆதித்யவர்மாவின் ஆட்சிக்காலத்தில் ராமனாமடத்தில் பிள்ளை, மார்தாண்டமடத்தில் பிள்ளை, குளத்தூர் பிள்ளை கழக்கூட்டத்துப்பிள்ளை செம்பழஞ்சிப்பிள்ளை பள்ளிச்சல் பிள்ளை குடமண் பிள்ளை வெங்ஙானூர் பிள்ளை ஆகிய எண்மரும் கழக்கூட்டத்தில் கூடி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்கள். அவர்கள் இணையான அரசாகவே செயல்பட்டார்கள்.அவர்களை எதிர்க்க முடியாமல் அரசர் துறவிபோல ஆகி தலக்குளம் அரண்மனைக்கு அருகே சிவன்கோயில் நந்தவனத்தில் ஒரு குடிலில் போய் தங்கி பூஜையும் தியானமும் மட்டும் செய்துகொண்டிருந்தார்.
ஒருநாள் அவருக்கு கோயில் பிரசாதம் என்று அளிக்கப்பட்டிருத சர்க்கரைப் பாயசத்தில் விஷம் கலந்திருந்தது. அவர் நோயுற்று மறைந்தார். உடனே எட்டுவீட்டுப்பிள்ளைமார் ஆட்சியை கைப்பற்ற முயன்றனர். திருவனந்தபுரம் அவர்களின் கைக்குச் சென்றது. ஆதித்யவர்மாவின் திவானாக இருந்த ஆலெட்டி ரங்கய்யா சரியான தருணத்தில் தலையிட்டு அரசரின் மருமகள் உமையம்மை மகாராணியை அரசியாக்கினார். பதினெட்டு மாடம்பிகளின் ஆதரவையும் தேடிக்கொண்டு தலக்குளத்தை தக்கவைக்குத்துக்கொண்டார்.
எட்டுவீட்டுப்பிள்ளைமார் தங்களை திரட்டிக்கொண்டு மேலும் ஒரு பெரிய தாக்குதலுக்கு ஆயத்தமானபோது கொல்லம் வழியாக முகலாயப்படை சேரநாட்டுக்குள் புகுந்தது. முகலாயப்படை தலைவன் ரஷீத்கான் ஆற்றிங்கல் வரை வந்து முகாமிட்டான். அவனைப்பயந்து எட்டுவீட்டுப்பிள்ளைமார் பின்வாங்கி கழக்கூட்டத்தில் மையம் கொண்டனர். மூன்று தரப்பும் ஒன்றை ஒன்று உற்றுநோக்கியபடி காத்திருந்தன
ஆதித்யவர்மாவின் ஏழு உடன்பிறந்த பெண்களும் வெவ்வேறு வகையில் இறந்தனர். அவர்களின் பதினெட்டு மைந்தர்களும் ஒவ்வொருவராக நோயுற்று இறந்தனர். ஆதித்யவர்மாவுக்கு மருமகன்கள் என எவரும் எஞ்சவில்லை. அரசுக்கு வாரிசு இல்லாத நிலை. இறந்தவர்கள் அனைவருமே எட்டுவீட்டுப்பிள்ளைகளின் சதியால் கொல்லப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்திருந்ததுதான்.
ஆதித்யவர்மா நஞ்சு உண்டு உடல் நீலமாகி நோயுற்று படுக்கையில் இருந்தபோது ஆலெட்டி ரங்கய்யா வைத்தியரிடம் எட்டுநாழிகைப்பொழுது அவரை உயிரோடு வைத்திருக்க முடியுமா என்று கேட்டார். வைத்தியர் தேனை மட்டுமே உணவாகக் கொடுத்து ஆதித்யவர்மாவை அரைஉயிருடன் வைத்திருந்தார்.
அப்போது ஆற்றிங்கல் அரண்மனையிலிருந்து மூத்த அரசி கௌரி சரஸ்வதிபாய் தன் மகள் உமையம்மையுடன் குமாரகோயிலில் குளித்து தொழுது வழிபட வந்து தங்கியிருந்தார். உமையம்மை பெருங்ஙோட்டு மனையில் விஷ்ணுநம்பூதிரியை மணந்து ஆறு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள். கடைசி மகன் உதய மார்த்தாண்டவர்மாவுக்கு ஒருவயது ஆகியிருந்தது. அதன்பொருட்டே அவர்கள் குமாரகோயிலுக்கு வந்திருந்தனர்.
ஆலெட்டி ரங்கய்யா கௌரி சரஸ்வதிபாயிடம் பேசி உமையம்மையை தலக்குளத்திற்கு கூட்டிச் சென்றார். மரணப்படுக்கையில் இருந்த அரசர் ஆதித்யவர்மாவை கொண்டுவந்து அரியணையில் அமரச்செய்து நம்பூதிரிகளை வரவழைத்து இரவோடு இரவாக சுவீகாரச் சடங்குகளைச் செய்து அவளை அரசரின் மருமகளாகவும் வாரிசாகவும் ஆக்கினார். ஆற்றிங்கல் அரசகுடும்பத்தில் இருந்தோ வடக்கே கோலத்துநாட்டு அரசகுடும்பத்தில் இருந்தோதான் வேணாட்டு அரசகுடிக்கு தத்து எடுக்கவேண்டும் என்பது தொல்மரபு.
அன்றே ஆதித்யவர்மா உயிரிழந்தாலும் அவர் உடல் தேனில் இட்டு எட்டுநாட்கள் பாதுகாக்கப்பட்டது. ஆலெட்டி ரங்கய்யா மாடம்பிகளுக்கு தூதனுப்பி, கஜானாவின் பணத்தை வாரி வாரி அளித்து அவர்களின் ஆதரவைப் பெற்று படை ஒன்றை திரட்டி கல்குளம் அரண்மனையை பாதுகாப்பாக ஆக்கிக்கொண்டபின் அரசரின் மரணத்தை முறைப்படி அறிவித்தார். ஈமச்சடங்குகள் நடப்பதற்கு முன்னரே உமையம்மை ராணி வேணாட்டின் அரசியாக முடிசூட்டிக்கொண்டாள். அஸ்வதித் திருநாள் உமையம்மை ராணி என்று பெயர் பெற்றாள்.
பெரிய செம்பில் சுக்கும் மிளகும் குங்குமப்பூவும் இட்டு வற்றகாய்ச்சி வெல்லச்சாறு சேர்க்கப்பட்ட பால் வந்தது. திவான் அதை வாங்கி முழுக்க குடித்து முடித்தார். “காராம் பசுவாக்குமோ?” என்றார்.
ஆண்டாள் “ஆமாம் உடையதே” என்றார்
“நீ போய்ச்சொல்லு… இப்போ உள்ள நிலைமை இதாக்கும். முகிலன் எந்ந புலி அந்தப்பக்கம். இந்தப்பக்கம் எட்டுவீட்டில் பிள்ளமார் எந்ந செந்நாய்க்கூட்டம். நடுவில் பசு போலே நாம்…ஒரு சிறு தொடக்கம் போதும், பிறகு இங்கே ரத்தக்களியாக்கும்….வேண்டாம். மகாராணி திருமனசின் துக்கம் எந்தெந்நு எனக்கு தெரியும்… ஆனால் இப்போ நாம் ஒந்நும் செய்யக்கூடாது”
ஆண்டாள் “நான் போய் சொல்லுறேன் உடையதே” என்றாள்
அவள் உள்ளே சென்றபோது காளி உமையம்மை ராணியை உடையணிவித்துக் கொண்டிருந்தாள். ராணி இப்போதெல்லாம் வெள்ளையாடைதான். அணிகளும் இல்லை. அரசி என்பதனால் மங்கலத்திற்காக ஒரே ஒரு சரிகைமேலாடை. காதுகளில் தக்கை. கழுத்தில் ஒருகாசுமாலை, ஆலிலைத்தாலி. அவ்வளவுதான்
அவள் நிற்பதைக் கண்ட உமையம்மை ராணி நிமிர்ந்து பார்த்தாள்
“போகவேண்டாம் எந்நாக்கும் திவான் உடையது சொல்லுந்நு” என்றாள் ஆண்டாள்
“போகணும் நோக்கணும்” என்று அவள் கூரிய குரலில் சொன்னாள்.
“இப்ப உள்ள நிலைமை…”
“எனக்கு நந்நாயி அறியாம்…”
அதற்குமேல் என்ன சொல்ல என்று ஆண்டாளுக்கு தெரியவில்லை. உமையம்மை ராணி எழுந்துகொண்டாள். காளி அவள் மேலாடையை சீர்செய்தாள்
“பல்லக்கு ஒருங்ஙியோ?”
“ஒருக்கம்தான் திருமனசே”
அரசி நடக்க ஆண்டாள் கைகூப்பியபடி பின்னால் சென்றாள். கூடத்தில் அரசி நுழைந்தபோது திவான் எழுந்து நின்று வணங்கினார்
“ஆண்டாள் சொல்லினாள், எந்நால் எனக்கு போயே ஆகணும். போகாமல் இருக்க முடியாது ..”
“இப்போ ராஜ்யஸ்திதி…”
“ராஜ்யஸ்திதி ஞான் பார்த்துக்கொள்வேன்” என்றாள் உமையம்மை “எனக்கு தெரியும்”
திவான் தலைதாழ்த்தினார்
“ஞான் ஸ்வப்னத்தில் கண்டேன்… என்னுடே மக்களை” என்று அவள் இறுக்கமான குரலில் சொன்னாள்.
திவான் “ஈஸ்வர ஹிதம் திருமனசே” என்றாள்
“சரி, ஆண்டாளே போவோம்’ என்று அரசி திரும்பினாள்
“திருமனசே, அந்த இடம் கழக்கூட்டத்தின்னு அருகிலாக்கும்” என்றார் திவான், பின்னால் வந்தபடி
”ஆகட்டே…” என்றாள் உமையம்மை ராணி. திவானின் கண்களை நேருக்குநேர் நோக்கி “தாங்கள் திவான் மாத்ரம் அல்ல…. பூஜ்யபிராமணன். பிராமணனாய் கண்டு சொல்லுக. ஞான் போகணுமா வேண்டாமா?”
திவான் “போகணும்… ஸ்வப்னம் ஒரு தெய்வ உத்தரவு… அதை மனுஷர் மீறக்கூடாது”
அரசி “நமஸ்காரம் திருமேனி” என வணங்கினாள்
அவள் முன்னால் நடக்க திவான் பின்னால் சென்றபடி ”திருமனசே, அடியேன் சொல்லவந்நது அது மாத்ரமில்லை” என்றார்
“எந்து?”என்றாள் உமையம்மை ராணி
“அவ்விடம் செந்நு நிந்நால் ராணி திருமனஸின் ஆத்மா பற்றி எரியும்… அந்த வேகத்தில் கடுத்த உத்தரவுகள் வரும்…”
அவள் அவரை கூர்ந்து நோக்கினாள்
“நாம் இப்போ ஒரு யுத்தத்தினு உள்ள நிலையில் அல்ல. நமக்கு நல்லபட்டாளம் இல்ல. யுத்தம் எந்நால் சர்வநாசம்…”
உமையம்மை ராணி வெறுமே நோக்கிக்கொண்டிருந்தாள்
”தாங்கள் அம்மையாக்கும்… ஆறு புத்ரன்மாருக்கு மட்டும் அல்ல. இங்கே உள்ள எல்லா பிரஜைகளுக்கும் அம்மையாக்கும்”
உமையம்மை ராணி தலையை தனக்குத்தானே என அசைத்துவிட்டு வெளியே சென்றாள்
கொம்புகள் ஆர்த்தன. படைவீரர்கள் தலைவணங்கினர். பல்லக்கு முற்றத்தில் அமர்ந்திருந்தது. உமையம்மை ராணி அதில் ஏறி அமர்ந்தாள். ஆண்டாள் ஏறி அவள் காலுக்கு கீழே சிறிய பீடத்தில் உடல்மடித்து அமர்ந்தாள்
குதிரைவீரன் ஆணையிட எட்டு போகிகள் பல்லக்கை தூக்கிக்கொண்டார்கள். பல்லக்கு நீரில் படகுபோல செல்லத் தொடங்கியது. திவான் வந்து அரண்மனை முகப்பில் பார்த்து நிற்பதை ஆண்டாள் கண்டாள்
அரண்மனையின் கோட்டையைக் கடந்ததும் உமையம்மை ராணி பெருமூச்சுவிட்டாள்.அந்த ஓசை ஆண்டாளை மெல்லிய நடுக்கம் கொள்ளவைத்தது. அவள் உடலை மேலும் குறுக்கிக்கொண்டாள்
சென்ற ஆண்டு கோடைகாலத்தில்தான் அது நடந்தது. ஆறு இளவரசர்களும் நெடுமங்காட்டு அரண்மனையில் இருந்து முக்காவூர் மகாவிஷ்ணு கோயிலுக்கு கிளம்பினார்கள். அவர்களின் களரிப்பயற்று ஆசான் கேசவக்குறுப்பு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் அவர்களை எவரும் அறியாமல் திருவனந்தபுரம் அருகே உள்ள புத்தன்கொட்டாரத்திற்கு கொண்டுசென்றார்.
பழைமையான அனந்தன்கோயிலில் அரசகுடும்பத்தினர் வழிபட வரும்போது தங்குவதற்காக கட்டப்பட்ட சிறிய, மரத்தாலான அரண்மனை அது. அங்கே அரசகுடும்பத்தினர் குளிப்பதற்காக ஒரு குளம் இருந்தது. அனந்தன்குளம் என்று புகழ்பெற்ற பழைய குளம். அரண்மனை அதனருகே கட்டப்பட்டபின் அது அரசகுளமாக வேலிகட்டி பாதுகாக்கப்பட்டது.
மிகஆழமான குளம் அது. ஆயிரம் ஊற்றுக்கள் கொண்டது என்று அதைச் சொன்னார்கள். இயற்கையாகவே மண் பிளந்து உருவான மாபெரும் பள்ளத்தை முன்பு ஆட்சி செய்த வேணாட்டு மன்னர் வீரகேரளவர்மா குளமாக ஆக்கினார். அனந்தன்குளம் என்றும் பெயரிட்டார்.அனந்தன்குளத்தில் நீர்வற்றியதை எவருமே கண்டதில்லை. கடும்கோடையிலும் அது ஊறி நிறைந்து மறுகால் வழிந்துகொண்டிருக்கும். அதன் நான்கு மடைகளும் யாளிவாய் கொண்டவை.நடுவே ஒரு சிறிய பலிமேடையும் இருந்தது.
அந்த ஆண்டு கடுமையான வரட்சி. திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதிகளில் எல்லா குளங்களும் வற்றிவிட்டிருந்தன. அம்மைநோயும் பரவிக்கொண்டிருந்தமையால் சிறிய குளங்களில் குளிப்பதை மக்கள் தவிர்த்தனர். இளவரசர்கள் நீந்த விரும்பியதனால் கேசவக்குறுப்பு அவர்களை அங்கே கொண்டுசென்றார் என்று சொல்லப்பட்டது. அவர்கள் ஏழுபேரும் குளத்தில் நீந்தி விளையாடினர்.
காவலுக்கு நின்றவீரர்கள் நெடுநேரம் அவர்களின் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர் ஓசையே கேட்காமல் ஆனபோது ஒருவீரன் உள்ளே சென்று பார்த்தான். குளத்தில் எவரும் இருக்கவில்லை. கரையில் ஆடைகள் இருந்தன. அவன் கூச்சலிட படைநாயர்கள் ஓடிவந்தனர். பலர் நீரில் பாய்ந்து தேடினர். ஆனால் அனந்தன்குளம் மிக மிக ஆழமானது. அடித்தட்டுவரைச் செல்ல எவராலும் இயலவில்லை.
இளவரசர்கள் திரும்பியிருப்பார்களோ என அரண்மனைக்குச் சென்று பார்த்தார்கள். இல்லை என்றதும் நெடுமங்காட்டுக்குச் செய்தி அனுப்பினார்கள். ராணியை அரண்மனையில் காவலுடன் அமரச்செய்துவிட்டு திவான் வந்து பார்த்தார். இரவெல்லாம் படையினர் தேடிக்கொண்டே இருந்தார்கள். காலையில் சங்குமுகம் கடற்கரையிலிருந்து நீச்சல்வீரர்கள் வந்து தேடிப்பார்த்தார்கள். கடைசியில் மாலையில் ஏழு சடலங்களும் கண்டடையப்பட்டன.
ஆண்டாள் அப்போது உமையம்மை ராணியுடன் நெடுமங்காட்டில் இருந்தாள். செய்திவந்தபோது அறையில் அவள் அரசிக்கு கூந்தல் சீவிக்கொண்டிருந்தாள். அரசியிடம் திவான் அச்செய்தியைச் சொன்னார். மிகமிக மெல்ல. முதலில் இளவரசர்கள் குளிக்கப்போன செய்தியைச் சொன்னார். அப்போதே அரசி எதிர்பார்த்துவிட்டாள். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. தேடிக்கொண்டிருப்பதாக திவான் சொன்னார். ஒருவேளை வேறெங்காவது போயிருக்கலாம். அவள் வியர்த்து குளிர்ந்து அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள். அவ்வாறு மெல்லமெல்ல செய்தியைச் சொல்வதே திவானின் திட்டமும்கூட.
முழுமையாகச் செய்தி சொல்லப்பட்டதும் உமையம்மை ராணியின் கைகள் வலிப்புகொண்டன. உடல் ஒருபக்கமாக சரிந்தது. ஆண்டாள் எழுந்து பிடித்துக்கொண்டாள். மெல்லத்தூக்கிக் கொண்டுசென்று படுக்கவைத்தாள். அவள் உடலில் பலமுறை சிறு வலிப்புகள் வந்தன. வாயிலிருந்து நுரை வழிந்தது.
வைத்தியர்கள் அபின் கொடுத்தனர். அவள் அபின் மயக்கத்தில் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தாள். பின்பு தூங்கத் தொடங்கினாள். ஆண்டாள் வெளியே வந்தபோது திவான் நிலைகொள்ளாமல் நின்றிருந்தார்
ஆண்டாள் ”ராஜகுமாரன்மாருடைய அச்சன் தம்புரானுக்கு அறிவிப்பு கொடுக்கணும் இல்லியா உடையதே?”என்றாள்”
“ஆமாம்” என்றார் திவான் “எந்நால் இவ்விடம் குழந்தைகள் மேல் அச்சனுக்கு எந்த அதிகாரமும் இல்லடீ ஆண்டாளே”
”எந்நாலும்…” என்றாள் ஆண்டாள்
உமையம்மை ராணி அரசியானதுமே பெருங்ஙோட்டு நம்பூதிரிவிலகிப் போய்விட்டார். உமையம்மை ராணி அரசியாக ஆவதை அவர் கடுமையாக எதிர்த்தார். “நாலு திக்கும் நஞ்சுள்ள நாகப்பாம்புகளாக்கும் இங்கெல்லாம்… என்னுடே பிள்ளைகளை ஞான் விட்டுத்தரமாட்டேன்” என்றார்.
ஆனால் அவருக்கு ஆணையிடும் குரல் இல்லை. அவர் வெறும் ஜோதிட அறிஞர். அவரால் கண்ணீருடன் மன்றாடவே முடிந்தது.
“உமையம்மை, ஞான் சொல்லுந்நதை மனசிலே வாங்குக… இவ்விடம் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு காவலும் இல்லை… வலதுகை பாம்பாய் மாறி படமெடுத்து கொத்தவரும் காலமாக்கும் இது”
உமையம்மை தலைகுனிந்து பேசாமல் அமந்திருந்தாள். அவள் அம்மா கௌரி சரஸ்வதிபாய் ஓங்கிய குரலில் “தம்புரான் ஒருகாரியம் மனசில் ஆக்கணும். நாங்கள் ஷத்ரிய ஜாதி. நாடாளும் ஷத்ரியர்களுக்கு மரணபயம்போல மகாபாபம் வேறே இல்லை…”என்றார்
நம்பூதிரி குரல் தழைய “ஞான் பிரஸ்னம் வைச்சேன்… ஜீவ அபாயம் எந்நாக்கும் பிரஸ்னம் சொல்லியது… உமையே, நம்முடைய மக்களுக்கு ஜீவ அபாயம் உண்டு… கடுத்த ஜீவ அபாயம்… வேண்டாம்… இது பலிபீடம். இதில் நம்முடைய மகன்களை கொண்டுபோயி தலைவைச்சு கொடுக்க வேண்டாம் உமையம்மை…” என்றார். பின்னர் அழத்தொடங்கினார்
ஆண்டாள் வெளியே நின்று அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் அரண்மனை வேலைக்கு வந்த காலம்.திவானின் உளவாளியாக இருந்தாள்.
“தம்புரான் இனி ஒந்நும் சொல்லவேண்டாம்… இது ஷத்ரிய தர்மம். ஞங்களுடே குலதர்மம். மரணமும் ஜயமும் ஈஸ்வரஹிதம்” என்றாள் கௌரி சரஸ்வதி பாய்
“உமையே நீ சொல்லு… ஒரு வாக்கு நீ சொல்லு” என்றார் நம்பூதிரி
“மரணமும் ஷத்ரியருடைய கடமைதான்” என்றாள் உமையம்மை ராணி
நம்பூதிரி சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு எழுந்து வெளியே சென்றார். விழப்போகிறவர் போல ஓடினார்
பிள்ளைகளின் சாவுச்செய்தியை அறிவித்தபோது நம்பூதிரி ஒன்றும் சொல்லவில்லை. அவர் வருகிறாரா என்றபோது “இல்லை, ஷத்ரியர் தீப்பெட்டால் அதில் பிராமணன் பங்கெடுக்குக பாடில்ல” என்றார்.
ஆனால் தூதன் கிளம்பியபோது அவர் வெறிகொண்டவர் போல பின்னால் ஓடிவந்தார். “என்னுடைய மக்களை கொந்நவள் அவள்… ஆ ராக்ஷஸி… அவளுடைய காலை ஞான் பிடிச்சேன். அவள் கேட்டில்லை. அவள் என்னுடைய மக்களை கொந்நாள்.. ரத்தம் குடிச்சாள்… அவள் நாசமாகும். அவளுடைய நாடு நாசமாகும். அவளை என் மக்கள் சாபமிடுவார். ஆநாட்டின்மேல் என்னுடைய மக்களுடைய சாபம் இடிபோலே விழும்” என்று கூவினார்.
உமையம்மையின் தங்கையின் மகன் கிருஷ்ணவர்மா ஆற்றிங்கல்லில் இருந்து வந்து நெடுமங்காட்டில் தங்கியிருந்தான். அவன் தன் உடன்பிறந்தாருக்கு அனலிட்டான். சடங்குகள் அனைத்திலும் உமையம்மை ராணி இயல்பாக பங்குகொண்டாள். செய்திவந்த மறுநாளே அவள் முழுமையாக மீண்டிருந்தாள். முகம் இறுகி உதடுகளைச் சுற்றி ஆழமான கோடுகள் விழுந்திருந்தது என்பதை விட்டால் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே ஒற்றைச் சொல் ஆணைகள். தனிமையில் உறைந்து அமர்ந்திருத்தல். அவ்வாறு அவள் மீள்வாள் என ஆண்டாள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அது ஆச்சரியமும் அளிக்கவில்லை.
“தம்புராட்டி இரும்பில் உருக்கி வார்த்த ஸ்திரீயாக்கும்” என்றாள் காளி. அரண்மனை முழுக்க அதுதான் பேச்சாக இருந்தது. உமையம்மை ராணி மகன்களுக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடவில்லை. சிலநாட்கள் ஊரே அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. அரண்மனைப்பெண்கள் கூட அரசி இல்லாதபோது அதைப்பற்றித்தான் பேசினார்கள். ஆனால் அரசி அதை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தாள். அவளுக்கு நாளும் அரசியல்கடமைகள் இருந்தன
ஆனால் மக்களுக்கு நம்பூதிரி சொன்னதெல்லாம் ஒரு சொல் விடாமல் வந்து சேர்ந்திருந்தன. ஆறு மைந்தர்களின் சாபம் நாட்டின்மேல் வந்து கவியப்போகிறது. எப்படி, பஞ்சமாகவா, கொள்ளைநோயாகவா? அல்லது முகிலனின் படையெடுப்பாகவா? அது பஞ்சமும் கொள்ளைநோயும் சேர்ந்து வந்ததுபோல.
“ரத்தம் கேட்டு ஆறுபேரும் காத்திருப்புண்டு… அவர் நம்மை விடுகயில்லா” என்று திவான் பிரஸ்னம் வைத்து பார்த்தபொது சோதிடர் அச்சுதக் கணியார் சொன்னார். அதுவும் மறுநாளே ஊரெங்கும் பரவியது. திவான் அதன்பின் தன்னம்பிக்கை அழிந்து அச்சமும் பதற்றமும் கொண்டவராக ஆனார்.
மைந்தர் மறைந்து ஓராண்டு நிறைந்து அடுத்த கோடை வந்தது. நேற்று காலை தூங்கிவிழித்து வந்தபோது உமையம்மை ராணி ஆண்டாளிடம் ‘ஆண்டாளே, நான் இந்நு ஒரு ஸ்வப்னம் கண்டேனடீ” என்றாள்
உமையம்மை அந்தக்குளத்தை கனவில் கண்டாள். அனந்தன்குளம் அப்போது களிப்பான் குளம் என்று பெயர் பெற்றுவிட்டிருந்தது. அதன்பின் புத்தன்கொட்டாரத்தில் யாரும் தங்கவில்லை. அந்தக்குளம் முற்றாகவே கைவிடப்பட்டிருந்தது. அவள் கனவில் அந்தக்குளம் வரண்டு நீரிழந்து ஒர் உலந்த சேற்றுப்படுகையாக வந்தது. அதில் அவளுடைய ஆறு மகன்களும் விளையாடிக்கொண்டிருந்தனர்
“எல்லாருடைய முகங்ஙளையும் கண்டேனடீ…” என்று உமையம்மை ராணி சொன்னாள். “உதயமார்த்தாண்டன், விஜயமார்த்தாண்டன், வீரமார்த்தாண்டன் மூநு பேரும் என்னை கண்டு சிரிச்சாரெடீ”.
ராமவர்மா, பாலராமவர்மா, ரவிவர்மா எல்லாரும் அங்கே இருந்தனர். அவர்கள் கூவிச்சிரித்து ஆர்ப்பரித்து விளையாடுவதை அவள் கரையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். மூத்தவனாகிய ராமவர்மாவுக்கு பதிமூன்றுவயது. அவனுக்கு பூமயிர் மீசை முளைக்கத்தொடங்கியிருந்தது. கழுத்தில் குரல்வளை எழுந்துவிட்டிருந்தது
“அந்தக் குளத்தில் நீருண்டோ எந்நு நோக்கி வருக!” என்று உமையம்மை ராணி ஆணையிட்டாள்.
அதைச் சொன்னபோது திவான் “அனந்தன்குளம் வற்றவா? அது நூறு ஆண்டில் இதுவரை வற்றிய சரித்திரம் இல்லை” என்றார்
ஆனால் படைவீரன் செய்தி கொண்டுவந்தபோது திவான் திகைத்தார். அனந்தன்குளம் வற்றி சேறுவெடித்து கிடக்கிறது என்று அவன் சொன்னான்
“அதிலே ஆயிரம் ஊற்று உண்டல்லோ” என்றார் திவான்
“எல்லா ஊற்றும் நிந்நுபோயி உடையதே” என்றான் படைவீரன்
உமையம்மை ராணி உடனே கிளம்பி அங்கே செல்லவேண்டும் என்று சொன்னாள். ”உடனே பல்லக்கு பூட்டுக…நாளை காலத்து ஞான் போகணும்..”
“எந்தாக்கும் இது? திருவனந்தபுரம் போகவா?” என்று திவான் கொதித்தார். ‘கழக்கூட்டத்தானும் முகிலனும் நாண் ஏற்றி நில்க்குந்ந ஸ்தலம்… “
”போயே தீரணும் எந்நாக்கும் திருமனசு சொல்லுந்நது” என்றாள் ஆண்டாள்
“போயி அங்கே என்ன செய்ய? தீப்பெட்ட ராஜகுமாரன்மார் திரும்பி வருவாங்களா?” என்று திவான் சொன்னார்
ஆனால் அரசி கிளம்புவதில் உறுதியாக இருந்தார். வரவர அவர் இறுகிப்போய் மனிதத்தன்மைக்கு அப்பால் சென்றுவிட்டிருந்தார்
ஆண்டாள் வெயில் வெறித்துக்கிடந்த சாலையோர வயல்வெளிகளை பார்த்தபடி ஆடிக்கொண்டே பல்லக்கில் அமர்ந்திருந்தாள்.
உச்சிப்பொழுது கடந்து வெயில் சரியத்தொடங்கியதும் அவர்கள் புத்தன்கொட்டாரத்திற்குச் சென்றுசேர்ந்தார்கள். அவர்களின் வருகைக்காக அதை தூய்மைசெய்து ஒருக்கியிருந்தனர். வாசலில் பெரிய கோலமிடப்பட்டிருந்தது
காவலர்கள் வணங்கி வரவேற்றனர். உமையம்மை ராணி பல்லக்கில் இருந்து இறங்கியதும் அரண்மனைக்குக் கூட செல்லாமல் குளத்திற்குச் சென்றாள். ஆண்டாள்க்கே அங்கே செல்லும் வழி நினைவில் இருக்கவில்லை. அவள் கூடவே ஓடினாள்
குளத்தின் கரையை அடைந்ததும் ஆண்டாள் திகைத்தாள். அது அத்தனை ஆழம் என்று என்ணியிருக்கவே இல்லை. ஒரு மலைவிளிம்பில் நிற்பதுபோலிருந்தது. கீழே கன்னங்கரிய சேறு. அது வெயிலில் உலர்ந்து வெடித்து பாளங்களாக எழுந்து நின்றது. அதில் என்னென்னவோ பதிந்துகிடந்தன. கற்சிலைகள், தூண்கள், பலவகையான கலங்கள்
உமையம்மை ராணி அந்த குளத்தின் கற்படிக்கட்டில் சென்று அமர்ந்தாள். மார்பில் கையைக் கட்டிக்கொண்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த வெறுமைநிறைந்த பரப்பில் எதைப் பார்க்கிறாள்? அங்கேயா அவள் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் சிரிப்பு கேட்கிறதா? ஆனால் ஆண்டாள் அங்கே செவிகளை வெடிக்கச்செய்யும் அமைதியைத்தான் கேட்டாள்.
வெயில் மங்கலாகி பின் சிவந்துகொண்டிருந்தது. அத்தனைபெரிய சேற்றுப்பரப்பில் எந்தப்பறவையும் இரைபொறுக்கவில்லை. வானில் காகங்கள் சென்றுகொண்டிருந்தன. பின்னர் கொக்குகளும் நாரைகளும் சென்றன. எதிர்க்கரையின் கல்மண்டபம் நிழலுரு எனத் தெரிந்தது. தரை இருட்டிக்கொண்டே வந்தது.
கண்களுக்குள் இருட்டு நிறைவதுபோலிருந்தது. அரண்மனையின் மாடங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அந்தியை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது. தொலைவில் அனந்தன்கோயிலில் அந்திபூசைக்கான மணியோசை எழுந்தது
மேலும் இருட்டியபோது குளம் மறைந்தது. கூர்ந்துநோக்கியபோது இருட்டே குளமாக மாறி முன்னால் விரிந்திருப்பதாகத் தோன்றியது. ஆண்டாள் அரசியை அழைத்துச்செல்லவேண்டும் என்று எண்ணினாள். இன்னும் சற்றுநேரத்தில் இரவு செறிந்துவிடும்
உமையம்மை ராணி திரும்பிப்பார்த்து “ஆண்டாளே” என்றாள்
“திருமனசே” என்றாள் ஆண்டாள்
“உதயமார்த்தாண்டனை எங்கிலும் ஒரு முத்தம் இட்டிருக்கலாம், இல்லையாடி?” என்றாள் உமையம்மை. “அவனை மார்போடு தழுவி ஒரு நல்ல முத்தம்… ஒந்நெங்கிலும்…”
ஆண்டாளின் அகம் விம்மி வலித்தது. அவள் கையால் நெஞ்சை அழுத்திக்கொண்டாள்.
ஏதோ ஓசை கேட்டது. எங்கிருந்தோ நீர் கொட்டுவதுபோல. மடை ஏதாவது திறந்துகொண்டதா என்ன? அவள் அரசியை அழைத்துக்கொண்டு சென்றுவிடலாம் என்று எண்ணி குனிந்து ‘திருமனசே” என்றாள். ஆனால் அந்தச் சொல்லை அவள் நா கூறவில்லை
அவள் களிப்பான்குளத்தில் நீர் ஊறிநிறைவதைக் கண்டாள். பல்லாயிரம் ஊற்றுக்கள் ஒரேசமயம் திறந்துகொண்டன. நீர்ப்பரப்பு ஏறி ஏறி வந்தது. கரிய ஒளியுடன் அலைகொண்டது. படிக்கட்டை அடைந்து மேலேறி வந்து உமையம்மை ராணியின் கால்களைத் தொட்டது. அப்பால் யாளிவாய்கள் வழியாக மறுகால் எழுந்து பெருகி அருவியென பொழிந்து ஓடத்தொடங்கியது.
========================================================