வேட்டு, விலங்கு- கடிதங்கள்

விலங்கு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விலங்கு என்றகதை ஒரு திரில்லர் அமைப்பில் உள்ளது. இந்தக்கதைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்ட இயல்பைக் காட்டுகின்றன. புனைவு என்பது ஆத்மாவைப் பிழிவது என்ற பழைய நம்பிக்கைகள் இன்றில்லை. அது ஒரு ஆட்டம்தான். அந்த ஆட்டத்தில் நேரடியாக ஒருபோதும் ஆசிரியனின் மனமோ வாழ்க்கையோ வரமுடியாது. ஆனால் அதைவைத்து அவன் ஆடிக்கொண்டிருக்கிறான். இந்த ஆட்டம் எப்போது முக்கியமாக ஆகிறது என்றால் காரம் ஸ்டிரக்கர் பல இடங்களில் முட்டி கடைசியில் காயை குழியில் தள்ளும்போது. அந்த முடிவு அல்லது சப்டெக்ஸ்ட் இருந்தால் அது இலக்கியம்

விலங்கு முக்கியமான கதை. ஏனென்றால் அதன் தத்துவார்த்தமான உள்ளடக்கம்தான். விலங்குக்கும் மனிதனுக்குமான உறவென்ன என்று அது கேட்கிறது. விலங்குதான் மனிதனும். ஆனால் ஒரு படி மேல். தன் எல்லைகளைக் கடந்த விலங்கு அவன். ஆகவேதான் தெய்வங்கள் அவனுடன் விளையாடுகின்றன. தெய்வம் அவன் வடிவில் வந்துவிடுகிறது

இந்தக்கதையின் பலவரிகளை தனியாக எடுத்துப் படித்து மொத்தமகப் பொருத்திக்கொள்ளவேண்டும். மனிதனில் இருக்கும் விலங்கு என்ன, விலங்கில் இருக்கும் தெய்வம் என்ன, விலங்கு தெய்வம் மனிதன் ஆகியவை எப்படி எல்லைகடந்து ஒன்றாகின்றன என்ற என்னென்னவோ என்ணங்களை உருவாக்கியது இந்தக்கதை

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ வணக்கம்…

இந்த ஊரடங்கு நாட்களை உங்கள் இனிய கதைகளால் நிறைக்கிறீர்கள், உங்கள் முன் இளமைக்காலம் தொடங்கி ஒரு எழுத்தாளராய் பரிணமித்து வந்த காலம் வரையிலான உங்கள் வாழ்வின் அரிய தருணங்களை கதைகளாக காட்சிப் படுத்துகிறீர்கள்.

என்னுடைய வாசிப்பில் விலங்கு கதை உண்மை என நாம் நம்பும் கற்பனையும், புனைவென்னும் நிதர்சனமும், மற்றும் உடலைக் கொண்டு மனதையும், மனதைக் கொண்டு உடலின் எல்லைகளை கடத்தல் என்ற இரு தளங்களில் விரிந்து கொண்டேயிருக்கிறது.

உங்கள் சிறுகதைகளின் ஆகச்சிறந்த பலங்களில் ஒன்று ஓரிரு வார்த்தைகள் மட்டுமே வந்து செல்லும் கதாப்பாத்திரங்கள் படிப்பவர்கள் மனதினில் ஆழமாக நிற்கும்படி அவர்களின் சித்திரத்தை நீங்கள் வரைவது உதாரணமாக காவலர் சவரி,கூமன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி வந்ததன், எச்சம் நம்மில் இன்றும் உண்டு,  சில ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளில் பாம்பின் விஷம் ,யானைப்பால் கடற்குதிரை, என மிருகங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஹோமியோபதியில் நோயாளியை தாவர,தாது விலங்கில் எத்தன்மை மிகுந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து வகைப்படுத்தி பின்பே சிகிச்சை செய்வார்கள்.

நெல்சன் ஞானத்துரை, குகையின் அடிவாரம் வரை சென்ற பின்பு கூமன் கீழே இறங்கிய பின்பு முதல் முறையாக அச்சமடைகிறான்,இவ்வளவு நேரமும் ஏன் தனக்கு பய உணர்வே எழவில்லை என்று எண்ணும் போதே தான்  பயத்தை கற்பனை செய்யவில்லை என்று அறிகிறான்,அச்சமும் தைரியமும் இன்பமும் துன்பமும் எல்லாமே நம் கற்பனை தான் எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளும் சுதந்திரம் உரிமை மனிதனுக்கு உண்டு.

கதை நிகழும் குகை ஆழ்மனதின் குறியீடாக இருக்கிறது.

முட்டன் பூசாரி, வரலாற்றை கடந்தவர், ஆதார்  அட்டை விவரங்களுக்குள் அடக்க முடியாத பெரு வனத்தின் ஒரு கண்ணி, பாறை அளவு பழையவர், நியூராலஜியில் சைக்காலஜியின் இடம் என்னவென்று தெரிந்து வைத்திருக்கும் அளவு நவீனர், உலகளாவிய தொன்மங்களில் தேர்ந்தவர், கூருணர்வு மிக்கவர்.

நெல்சனுக்கும் பூசாரிக்கும் இடையேயான உரையாடல்களில் உலகின் அனைத்து முதன்மை தத்துவங்களும் வந்து செல்கிறது, பிரம்மம் முதல் அனாத்மா வரை.

இங்கே தனியாக வசிக்கிறீர்களா என்று நெல்சன் கேட்கிறார்

“தனியாட்டுன்னா தனிதான்”என்கிறார், “குகைக்குள்ளே எப்பவுமே ராத்திரிதான்” என்கிறார்,லாப நஷ்டங்களை கடந்து எதையும் யாருக்கும் எதன் பொருட்டும் நிரூபிக்க வேண்டிய தேவைகள் நீங்கி ரிஷி போல வாழ்கிறார்.

தன் பதில்களில் இன்னொரு தன்மையையும் வெளிப்படுத்துகிறார்

“இப்பம் பயமில்லை”(முதலில் பயம் இருந்தது)”மாறுதல் வந்தா அது தெரியுத மாதிரி இருக்கனுமா என்ன”என.

தர்க்க அறிவின் மூலம் முட்டிமோதி சலிப்புற்று உடல்,மனம், எல்லாம் சோர்ந்து தளர்ந்து,உறங்கிய பின் நெல்சனின் ஆழ் உள்ளம் கனவில் உண்மைகளுக்கு நெருங்கி வருகிறது.

சிறு வேஷக்குறையை எஞ்ச விட்ட தாட்டான் ஆட்டுக்கிடா, அல்லது செங்கிடாயாக மாறத் தொடங்கி விட்ட ஒடியன்,என்ற இரு சாத்தியங்களோடும்  கதை விரிகிறது கடைசி வரிகளுக்கு பின்பு.

மு.கதிர் முருகன்

கோவை

***

வேட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வேட்டு கூர்மையான ஒரு கதை. அதில் அந்த இரு பெண்களும் இறுதியில் இரண்டு ஆண்களை ஏமாற்றி கொன்று அத்தனை சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஒரு டம்மி ஆணை வேலைக்கு வைத்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். அந்த பாதையில் அத்தனை ஜாலங்கள், அத்தனை மயக்குவேலைகள்

ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது இளமையில் என்ற கேள்வி எழுந்தால்தான் அதன் இன்னொரு பக்கம் தெரியவரும். மிருகங்களைப்போல விலைகொடுத்து வாங்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல்பண்டமாக ஆக்கப்பட்டு முப்பத்தைந்து வயதில் குப்பைக்கூடையில் வீசப்படுபவர்கள். அவர்கள் அவ்வாறு அவர்களை அழிக்கும் அந்தக்கைகளை பிடித்து மேலேறிச் செல்கிறார்கள். அவர்களை அழித்து தாங்கள் வாழ்கிறார்கள்

கடைசியில் வெற்றி அந்தப் பெண்களுக்குத்த்தான். அவர்கள் அடைந்த அத்தனை குரூரமான அனுபவங்கள் அவர்களே செய்த கொலைகளுக்கு பிறகு அவர்கள் அத்தனை கிரேஸ்ஃபுல் ஆக இருப்பது அதனால்தான். அவர்கள் அதை பேலன்ஸ் செய்துவிட்டார்கள். பார்வதி மனம்கசந்துபோகவில்லை. சைகோப்பாத் ஆகவில்லை. சுவையான சமையல் செய்பவளாகத்தானே இருக்கிறாள்

செல்வக்குமார் டி

வேட்டு‘   சிறுகதை  மிக  நேர்த்தியாய், வாசிக்க  சுவாரசியமாய்  இருந்தது.

அன்புள்ள  ஜெயமோ’கன்  ஐயா,

நலம்.  நலம் பொலிக  !!

எப்படியோ  தங்கள்  சொந்த இணைய தளத்தோடு இணைப்பு ஏற்படுத்திக்கொண்டதால், தங்கள் இணையதளப்பக்கங்கள்  எனக்கு நேரடியாய் வந்து சேருகின்றன. தங்கள்  இணையதளப்பக்கம் மார்ச்-24  ந்தேதிய  பதிவில், வெளியான  வேட்டு  சிறுகதை மிக நேர்த்தியாய், வாசிக்க சுவாரசியமாய் இருந்தது.  சிறுகதைக்கான  சகலவிதமான  கல்யாண  குணங்களுடன் அது காணப்பட்டது.

ஒரு சிறுகதையின் துவக்க வாக்கியம்  கூராக,  சுரீரென்று இருக்க வேண்டுமென்ற தங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போவதில்லை. ஒரு இயல்பான துவக்கமாக ஏன் ஒரு சிறுகதை துவங்கக்கூடாது ? அந்தக்கதையின் போக்கில், அதன் வருணிப்பு, அதைச்செலுத்தும் விதத்தால் அது  சீர்மையும், வேகமும் அடையலாமே ?!! ஒரு சிறுகதையின் துவக்கம், அதைக்கொண்டு செலுத்துவது, எல்லாம் அதன் சிருஷ்டி கர்த்தாவின்  சொந்த விருப்பம்  மற்றும்  அவன் அதில்  காட்டும்  எழுத்து  வித்தை அல்லவா ??!!

சிறுகதையின்  எடுப்பு,  தொடுப்பு, முடிப்பு  ஆகியவை  மிகச்சரியாக வந்திருக்கிறது. அதனால் அதன்  படிப்பும் சுவாரசியமாய்  இருக்கிறது.  சர்க்கஸ் வித்தைக்காரிகளான பார்வதி, ஜானம்மா, ஆகியோரின் பாத்திரப்படைப்பு  வெகு நேர்த்தி.  சர்க்கஸ் கலைஞர்களின்  வாழ்க்கை மிகவும் சோகமான பக்கங்களை உடையது.  சி. அரவிந்தன்  இயக்கிய  ‘சர்க்கஸ்’  ( Circus ) என்ற  மலையாளப்படத்தை  ஒரு முறை பார்த்தேன்.  நல்ல  திரைப்படம்.  ஒரு கிராமத்தில்  கூடாரமிடும்  அது  சர்க்கஸ்  கம்பெனியின்  நடபடிகளை ஆவணப்படுத்தியிருந்தது.   ஒரு  கலாபூர்வமான  படம்.

நானும்  சிறிய  வயதில் , சர்க்கஸ்  காட்சிகளுக்குப்போயிருக்கிறேன்.  ட்ரபீஸ் ஆடும் பெண்கள்  இறுக்கமான வெண்ணிற ஆடைகள்  அணிந்திருப்பதைக்கண்டு  அவர்கள்  மேல்  மோகித்திருக்கிறேன். ஆனால், 1980-களுக்குப்பிறகு, வன விலங்குகள் தொடர்பான  சட்டம்  கடுமையானதன்  விளைவாக  சர்க்கஸ் காட்சிகளின் சுவாரசியம்  குறைந்தது.  புலி, சிங்கம், சிறுத்தை, யானை, வரிக்குதிரை ஆகியவைகளைக்காட்டி, மக்களைக்கவர்ந்து வந்த சர்க்கஸ்  ரிங்  மாஸ்டர் என்பவரின் தொழில்  பறிக்கப்பட்டது. அத்துடன், சர்க்கஸ்  காட்சிகளுக்கு இருந்து வந்த  கவர்ச்சி  காணாமலே போனது.

‘வேட்டு’ சிறுகதையில், கதையின் முடிச்சுகள்  ஒன்றுக்குள் ஒன்றாக போடப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு ஒன்று. ஜானம்மாவின் அக்கா பார்வதியை மிரட்டி திருமணம் செய்கிறான், பாஸ்கரன்.  அந்த பாஸ்கரன்  ட்ரபீஸ்  ஆடும்  போது, அவனை ஜானம்மா,  கை நழுவ விட்டு, அவன் மரணமடைகிறான். சிறுகதையின்  அகச்சிக்கல், அல்லது  முடிச்சு, ஒன்றுக்குள் ஒன்றாக விழுந்துள்ளது.  நல்ல கதை உத்தி !!

மற்றொரு சுவாரசியமான விஷயம். மலையாள வார்த்தைகள் கலந்த  நடை. அதில், மலையாளிகள்  கதாபாத்திரங்களாக  வருகின்றனர். கதைச்சூழலும் மலையாள தேசமே. ஆனால், சிறுகதையின் மொழி  தமிழ்.  இப்படி, தமிழ், மலையாளத்துக்கு, கலாச்சாரப்பாலம் அமைப்பது  மிகவும் அற்புதமான விஷயம்.

‘வேட்டு’ படிக்க சொகமா  இருந்தது !!

அப்புறம், வேறு என்ன விடயங்கள் ? பார்வதிபுரத்தில் அனைவரும் நலமா ?

தங்கள்  பிள்ளைகளுக்கு  என் ஆசீர்வாதங்கள்…!!

அன்புடன்,

ஸ்ரீவில்லிபுத்தூர்  எஸ்.  ரமேஷ்.

முந்தைய கட்டுரைதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்