துளி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஸ்வீடிஷ் எழுத்தாளர் Axel Munthe யின் The Story of San Michele ஒரு முக்கியமான நாவல். அதைப்பற்றி ஒரு கதை உண்டு. Axel Muntheயின் மனைவி ஒரு நோயாளியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். நோயாளி வாசிப்பதற்கான நூல்கள் சிலவற்றைக் கொடுக்கவேண்டும் என நினைக்கிறார். ஆனால் புத்தகம் வாங்கச் சென்றால் எல்லா புத்தகங்களுமே வாழ்க்கைமேல் அவநம்பிக்கையையும் கசப்பையும் உருவாக்குபவை. மனம்சோர்ந்துபோன அவர் கணவரிடம் ஒரு நல்ல புத்தகம் சொல்லுங்கள், நோயில் விழுந்து சாகக்கிடக்கும் ஒருவர் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமை கொண்ட புத்தகம் என்கிறார். அவர் சான் மிஷேலின் கதையை எழுதுவதற்கான தூண்டுதல் அதுதான்
இன்றைய சூழலில் எங்கும் கசப்பும் அவநம்பிக்கையும் ஓங்கி இருக்கின்றன. இன்று கள்ளம்கபடமற்ற கொண்டாட்டமான கதைகள் இலக்கியத்தின் தேவை. மனிதனுக்கு எல்லா கள்ளங்களும் இன்று தெரியும். இன்றைக்கு அவனிடம் போய் நீ கள்ளம்நிறைந்தவன் என்று சொல்லவேண்டியதில்லை. இன்றைக்கு Somerset Maugham எழுதிய “Rain” போன்ற கதைகள் எந்த அதிர்ச்சியையும் அளிப்பதில்லை. அதான் தெரியுமே என்றுதான் தோன்றுகிறது.. இன்றைக்கு தேவை ஒருவகையான இனிமையான கள்ளம்கபடமற்ற கதைகள்
இந்த கொரோனா காலகட்டத்தில் நீங்கள் எழுதிய எல்லா கதைகளுமே அப்படித்தான் உள்ளன. ஆனால் முழுக்கமுழுக்க இன்னொசெண்ட் ஆன கதை என்பது துளி தான் மறுபடியும் சான் மிஷேலின் கதை ஞாபகம் வந்தது. அதில் மிருகங்களுக்கும் அப்படி ஒரு இடம் உண்டு.
பொதுவாக மனிதர்கள் அறுபதை ஒட்டிய காலங்களில்தான் இந்த இளமையான கள்ளமற்ற உலகுக்கு திரும்பிச் செல்வார்கள். அது ஒரு உளவியல் விஷயம். நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள். நானும்தான்
மீண்டும் இங்கே வருவீர்கள். அப்பொது நேரில் நிறையப்பேசவேண்டும்
ஆர் ரமணன்
ஜெ
கொண்டு வந்திருந்த நான்கு புத்தகங்களையும் (அயோத்தி தாசர், தம்மம் தந்தவன் , ஆட்டத்தின் 4 விதிகள்,வெக்கை ) வாசித்து முடித்த நிலையில் தங்கள் வலைதளத்தில் வரும் தினசரி கதைகளே இந்த தனிமை விலக்க காலத்தில் துணை. அன்புடன்
சேது வேலுமணி,
ஜக்தால்பூர்
அன்புள்ள ஜெ
துளி படித்தேன். என்ன ஒரு துள்ளலான கதை. இத்தனை பேசி எழுதி விவாதித்தபின் எந்த ஹேங்கோவரும் இல்லாமல் சின்னப்பையனாக மாறி எழுதுவது ஒரு கொடைதான். பலவரிகளை வெடித்துச் சிரித்தபடி வாசித்தேன். குழந்தைகளையும் விலங்குகளையும் ரசிப்பதும் எழுதுவதும் எல்லாராலும் முடியாது. மிகச்சில கலைஞர்களின் படைப்புக்களிலேயே அவை உள்ளன. தமிழில் மிகமிகக்குறைவாகவே விலங்குகளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்
விலங்குகளைப் பற்றிய எழுத்து என்பது விலங்குகளைப்பற்றிய சித்தரிப்பு அல்ல. இயற்கையைப்பர்றிய ஒரு தரிசனம் அது. இயற்கைதான் விலங்குகளாக நம்மைச்சூழ்ந்து வந்திருக்கிறது. விலங்குகளை எழுதத்தெரியாதவர்களுக்கு ஆன்மிகமே கிடையாது என்றுகூட சொல்வேன்
பஷீரின் உலகம் போன்ற கதை துளி
ஜெய்சன் சாமுவேல்
அங்கி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
அங்கி ஆழமான கதை. பேய்க்கதைதான். ஆனால் அந்த ஃபாதரின் சித்திரம் உலுக்கக்கூடியது ஐம்பதாண்டுகளாக கிழிந்த அங்கி காத்திருக்கிறது- ஒரு பாவமன்னிப்புக்காக. எங்கேயோ அந்த சாமுவேல் ஒரு பாவமன்னிப்புச் சடங்கைச் செய்கிறார். ஆனால் அது போதாது என அவர் உள்ளம் சொன்னதனால்தான் இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது அந்த பாவம்
ராம்.
அங்கி சிறுகதை படித்தேன். உங்கள் பழைய கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பெயர் நினைவுக்கு வரவில்லை. பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் ஒருவன் ஒரு பாழடைந்த பங்களாவை விலைக்கு வாங்கப்போவான். டீக்கடையில் அங்கு பேய் இருக்கிறது என்பர். அவன் உள்ளே சென்று பார்த்த போது ஒரு பெண்ணைப் பார்ப்பான். பின்னால் அதைத்தான் அவர்கள் பேய் என்று சொல்வார்கள். இதைப்போன்று அது செல்லும் அங்கி ஃபாதர்களின் ஒரு குறியீடு. அடையாளம்.
கிட்டத்தட்ட சாமுவேல் கதை மாதிரியே பாழடைந்த சர்ச்சிலும் நடந்துள்ளது. ஆனால் பாம்பேவாசியின் அப்பா போலில்லாமல் இந்த ஃபாதர் தான் செய்யாத குற்றத்திற்காக அவமானப்பட்டவர். அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் தவறு செய்த சாமுவேல் பாம்பே போய் நலமாக வாழ்கிறார். ஒருவேளை தவறு செய்த சாமுவேல்தான் பாழ் சர்ச்சில் ஆவியாக இருக்கிறாரா என்று கூட எண்ணலாம். ஆனால் கிழிந்த அங்கி இவரை வேறுபடுத்துகிறது. சாமுவேலிடம் இரக்கப்பட்டு கிழிந்த அங்கியுடன் இருக்கும் அவர் அவனைப் பாவ மன்னிப்பு கேட்கச்சொல்கிறார். அதன் மூலம் சாமுவேலின் ஆவி நிம்மதி அடையலாம்.அதனால்தான் அவர் பிள்ளை பாவ மன்னிப்பு கேட்கிறான். அவன் என்ன கேட்டிருப்பான் என ஊகிக்க முடிகிறது.
அருவியை பாம்புச்சட்டை என்றும் பிளாஸ்டிக் உரச்சாக்கு என்று கூறுவது புதியது. அடைமழையில் நிற்க இடமின்றி வளவனுரிலிருந்து கிருஷ்ணாபுரம் 15 கி.மீ பைக் செலுத்தி வந்த்து ஞாபகம் வந்தது. கதையில் நம்பகத்தன்மை அதிகம். இதுவே மாயா யதார்த்தவாதக் கதைகளுக்கு முக்கியமாகும்.
வளவ துரையன்