துளி முதலிய கதைகள் -கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ

 

இந்தக்கதைகள் இந்த மனநிலையில் ஓர் அழகான மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் அதைவிட ஒரு பெரிய மாற்றம் உண்டு. அதாவது இங்கே நவீன இலக்கியத்திலே கதை என்றாலே வாழ்வின் அபத்ததைச் சொல்வது, தாளமுடியாத துக்கத்தைச் சொல்வது, குரூரங்களைச் சொல்வது என்று ஆகிவிட்டிருக்கிறது.

 

வாழ்க்கை என்பது அதெல்லாம் மட்டும் அல்ல.அதற்கு அப்பாலும் வாழ்க்கை உள்ளது. இனிமையான நல்ல காதல்கதைகளை வாசித்து எவ்வளவு நாளாகிவிட்டது. இன்றைக்கு உலக இலக்கியத்தில் முன்பு இருந்த சில எல்லைகள் இல்லை. இன்றைக்கு எல்லாவகை கதைகளும் இலக்கிய அந்தஸ்துடன் பார்க்கப்படுகின்றன. துப்பறியும்கதைகள் திகில்கதைகள் பேய்க்கதைகள் எல்லாமே. அவை மனித மனதை வெளிப்படுத்துகின்றனவா, வாழ்க்கையை புதியபார்வையில் ஆராய வைக்கின்றனவா என்பதுதான் முக்கியமானது.

 

இங்கே இன்னமும் சில இலக்கிய நம்பிக்கைகள் உள்ளன. யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவுசெய்வதுதான் இலக்கியம் என்பது ஒரு நம்பிக்கை. வாழ்க்கையின் எதிர்மறை அம்சங்களைச் சொல்லி அதிரச்செய்தால்தான் இலக்கியம் என்பது இன்னொரு நம்பிக்கை. அதெல்லாம் காலாவதியான நம்பிக்கைகள் என்பதுதான் இலக்கியம் அறிந்தவர்களுக்கு தெரிந்தது. அதெல்லாம் நவீனத்துவம் உருவாக்கிய நம்பிக்கைகள். முற்போக்கு இலக்கியம் உருவாக்கிய நிலைபாடுகள் அவையெல்லாம்

 

முன்பு ரொமாண்டிக்கான, இலட்சியவாதம்கொண்ட விஷயங்கள் பற்றி மட்டுமே எழுதிகொண்டிருந்தார்கள். அன்றைக்கு அந்த இலக்கியத்தால் எழுதப்படாத இருண்டபகுதிகளையும் கசப்புகளையும் எழுதினார்கள். புதுமைப்பித்தனின் பொன்னகரம் எல்லாம் அப்படிப்பட்ட கதைகள்தான். இன்றைக்கு அந்தக் காலகட்டம் இல்லை. இன்றைக்கு ஜேர்னலிசம் கொண்டுவந்து காட்டும் எதிர்மறை அம்சங்களும் இருண்ட வாழ்க்கைகளும் இலக்கியத்தில் இல்லை. இன்றைய போர்ன் உலகின் உச்சகட்டங்கள எந்த எழுத்தாளனும் எழுதிவிடமுடியாது. ழாக் பத்தாய், கேத்தி ஆக்கர் எல்லாம் அதன்முன் ஒன்றுமே இல்லை.

 

இன்றைக்கு இலக்கியத்தின் சவால் என்பது இன்றைய செய்தி ஊடகமும் அரசியலும் உருவாக்கும் கசப்பை கடந்துசெல்வதும் நம்பிக்கையை நோக்கிச் செல்வதும்தான். அதைக்காட்டிலும் முக்கியமானது என்னவென்றால் நினைவை நிலைநிறுத்துவது. இது ஒரு போஸ்ட்மாடர்ன் உலகம். இன்றைக்கு தொல்பொருட்கள் என்ற வார்த்தைக்கே பொருள் இல்லை. அனலாக் கம்ப்யூட்டரும் நோக்கியா செல்லுமே தொல்பொருட்கள் ஆகிவிட்டன. நேற்று இல்லாத தலைமுறை. நினைவுகள் இல்லாத தலைமுறை. நினைவுகளை நீட்டிக்கவைப்பதுதான் இன்றைய இலக்கியம்.

 

அது எளிமையானது அல்ல. நினைவை இந்தக்காலகட்டம் மறுத்துக்கொண்டே இருக்கும். எனக்கு நினைவே வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி நினைவை நிலைநிறுத்தவேண்டும். நினைவுப்பெருக்கம் இன்றைக்கு உண்டு. நினைவுக்கு அர்த்தமில்லாமல் ஆவது இன்றைக்கு உண்டு. இரண்டும் சம்பந்தப்பட்டவை. ஆகவே இலக்கியம் என்பதே இன்றைக்கு நினைவை நிலைநிறுத்துவதுதான்.

 

அதேபோல உறவுகள் இல்லாத தலைமுறை நாம். அப்பார்மெண்ட் தலைமுறை. இன்றைக்கு உறவுகளை சொல்வதும் ஒரு பெரிய இலக்கியச் சவால்தான். சொல்லலாம், ஆனால் இன்றைய வாசகன் புரிந்துகொள்ளமாட்டன. ப்ச என்று கடந்து செல்வான். அவனை உட்காரவைத்து கதைசொல்லி சிரிக்கவைத்து அழவைத்து சொல்லவேண்டும். அதுவும் இலக்கியத்தின் பெரிய சவால்தான்.

 

அறிவார்ந்த சிக்கலை அடைவதை விட அறிவே இல்லாத கொண்டாட்டமான கலையை உருவாக்குவதன் தேவை உருவாகி வந்துகொண்டிருக்கிறது. ஆகவேதான் இந்த வரிசைக் கதைகளில் எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது துளி கதைதான். அது பஷீர் எழுதுவதுபோன்ற கதை. அல்லது இன்றைய பாப்புலர் காமிக் வகைகளைச் சேர்ந்த கதை. யதார்த்தம் போன்ற பாவனை கொண்ட ஃபிக்‌ஷன். ஒருவகை மேஜிக்கல் ரியலிசம்.

 

இன்றைக்குள்ள வாசகர்கள் பலருக்கு அதன் முழுமையான அர்த்தம் பிடிகிடைக்காது. அதிலுள்ள நினைவுகளை மீட்டு கட்டமைக்கும் தன்மையும் கொண்டாட்டமும் எளிமையும் இன்றைய ஃபிக்‌ஷனின் முக்கியமான இயல்புகள்.

 

அ.கல்யாண்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

உங்களின் “கொரோனோவும் இலக்கியமும்” பதிவு ஒரு பெரிய உற்சாகத்தை அளித்தது. அதை  “LinkedIn” எனப்படும் Social Media மேடையில் பகிர்ந்தேன்(கீழே பார்க்கவும்).

 

உங்கள் எழுத்துக்களுடன் கிட்டத்தட்ட பதினைந்து வருட உறவு. பெங்களூரில் வாசகர் சந்திப்பில் நேரில் பார்த்து, பிறகு அமெரிக்காவில் நண்பர் திருமலைராஜன் வீட்டில் என் பிள்ளைகளுடன் மீண்டும் உங்களை சந்தித்தேன். இத்தனை வருடங்கள் உங்கள் எழுத்துடன் பயணித்ததில்  எனக்கு ஒரு மூத்த அண்ணனாகவே நீங்கள் இருப்பது போல் ஒரு உணர்வு.

 

“ஒரு நல்ல அவியல் வைக்கத் தெரியாதவனால் எப்படி அத்வைதத்தை புரிந்து கொள்ள முடியும்” என்ற உங்கள் குருவின் குரு சொன்ன வரி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை தந்தது. என் மகள்களுடன் அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் பெயர் சொல்லாத நாளே வீட்டில் இல்லை.வேலை விஷயமாக சென்னை வந்து இப்போது கொரோனா பாதிப்பால் அமெரிக்கா செல்ல முடியாமல் சென்னையில் உள்ளேன். உங்கள் கதைகளும் எழுத்துமே எப்போதும் போல் உற்சாகம் தருகின்றன. உங்களை தெரிந்து கொண்டதும் படிப்பதும் எனது நல்லூழ்.

வாசு

விலங்கு [சிறுகதை]

துளி [சிறுகதை]

வேட்டு [சிறுகதை]

அங்கி [சிறுகதை]

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

பூனை [சிறுகதை]

வருக்கை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை]

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13
அடுத்த கட்டுரைவேட்டு, விலங்கு- கடிதங்கள்