சுற்றுகள் [சிறுகதை]

ஒருகணம் கிருஷ்ண நாயக் உடல் அதிர்ந்தான். பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, உள்ளங்கால் கூசிச்சுருங்க, சிறிய வலிப்பு ஒன்று ஏற்பட்டது. இதயம் தாளமுடியாத குளிருடன் நின்று பின் வேகமாகத் துடித்தது.

நாகவேணி “என்ன?” என்றாள். அவளுடைய கழுத்துத்தசைகள் இழுபட்டிருந்தன.

மெல்ல தளர்ந்து மூச்சுவாங்க “நான்..” என்று அவன் விக்கினான்.

“ம்ம்” என்று அவள் சொல்லி முகம் சுளித்தாள். ஸ்க்ரூ டிரைவரை எடுத்துக்கொண்டு திரும்பி நடந்தாள்.

கிருஷ்ண நாயக் அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் எழுந்தபோது கால்கள் வலுவற்றவை போலிருந்தன. அவன் கண்களை மூடி ஒரு கணம் நின்றான். கண்களுக்குள் சிவப்பாக குமிழிகள் ஓடின.

மெல்ல நடந்து அவன் பராமரிப்பு அறைக்கு வந்தான். நாகவேணி தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள். நெற்றியில் வியர்வை பனித்திருந்தது. கன்னத்தில் ஒரு நரம்பு துடித்தது.

கிருஷ்ண நாயக் “ஸாரி மேடம்” என்றான்.

அவள் அவனை ஏறிட்டு பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

“நான்…” என அவன் தயங்கினான். “தெரியாமல்தான்…”

“சரி” என்று அவள் கூரிய மொழியில் சொன்னாள். அது போய்யா என்று சொல்வதுபோல் ஒலித்தது. அவன் பெருமூச்சுடன் நின்றான்.

பின்னர் மெல்ல நடந்து வெளியே வந்தான். எங்காவது ஓடிவிடவேண்டும் போலிருந்தது. காண்டீனுக்கு சென்றான். அந்நேரத்தில் அங்கே எவரும் இருக்க வாய்ப்பில்லை.

எதிரில் அட்டெண்டர் சந்திரி வந்தாள். அவன் “சந்திரி” என்றான்.

“என்ன சார்?” என்று அவள் நின்றாள்.

“மேடமுக்கு தலைவலி… டீ வேண்டும் என்று சொன்னார்கள்.”

“எங்கே இருக்கிறார்கள்?”

“மெயிண்டெனன்ஸ் ரூமில்.”

சந்திரி செல்வதைப் பார்த்தபின் அவன் காண்டீனுக்குள் நுழைந்தான். அங்கே ராஜப்ப நாயக் இருப்பதைப் பார்த்ததும் பின்வாங்கலாமென எண்ணி அறியாமல் பதுங்கினான்.

அசைவைக் கண்டு காண்டீன் உரிமையாளரும் டீமாஸ்டருமான ஷாஃபி திரும்பிப் பார்த்தான். அவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த ராஜப்ப நாயக்கனும் திரும்பிப் பார்த்தான்.

“கிருஷ்ணா என்னடா? வாடா” என்றான் ராஜப்ப நாயக் “வாடா வாடா, என் கள்ளக்கிருஷ்ணா கோகுலபாலா…. டேய் ஷாஃபி, நம்ம காதல்மன்னன் கிருஷ்ணனுக்கு ஒரு கடுப்பமான சாயா போடு.”

கிருஷ்ண நாயக் அவனருகே அமர்ந்தான்.

“என்னடா?”

“ஒன்றுமில்லை.”

“பயந்திருக்கிறாய்?” அவன் குரலை தாழ்த்தி “கையை கிய்யை வைத்தாயா? செவிட்டிலே அடித்துவிட்டாளா?” என்றான்.

“இல்லை இல்லை… டேய்.”

“சரி, வேறு என்ன?”

“இல்லைடா”

“இங்கேபார், உன்னைப் பார்த்தாலே தெரிகிறது…. உன் விரலெல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கிறது” அவன் கிருஷ்ண நாயக்கின் கைகளை பிடித்து, “இதோ பார் கையெல்லாம் குளிர்கிறது.”

“டேய்” என்றபோது கிருஷ்ண நாயக்கின் குரல் உடைந்தது. அவன் மெல்ல விம்மினான்.

“என்னடா? டேய் கிருஷ்ண நாயக், என்ன? சொல்லு.”

“என்னை நீ கேலி செய்கிறாய்… நான் எங்காவதுபோய் செத்திருவேன்.”

“என்ன விஷயம், சொல்லு” அவன் ரகசியமாக “நாகவேணியா?”

“ஆமாம்.”

“உன்னை ஏதாவது சொன்னாளா?”

“என் தப்புதான்.”

“என்னடா தப்பு? சொல்லு.”

“கரெண்ட்” என்று கிருஷ்ண நாயக் சொன்னான். “கரெண்ட் பாய்ந்துவிட்டது.”

“உன்மேலேயா? எங்கேருந்து?”

“என் மேலேதான்…” என்றான் கிருஷ்ண நாயக் “அவள் மேலேயும் பாய்ந்தது. அவள் மேலே பாய்ந்து என் மேலே வந்து…” அவன் விம்மி “என் தப்புடா” என்றான்.

“என்ன நடந்தது? சொல்லு.”

நாகவேணி செண்டிரல் பேட்டரி பவரை சோதனை செய்து கொண்டிருந்தாள். அதற்காக ரப்பர் நாற்காலிமேல் நின்றிருந்தாள். கையில் ஸ்க்ரூடிரைவருடன் அவள் கூர்ந்து நோக்கி வேலைசெய்து கொண்டிருக்க அருகே அவன் நின்றிருந்தான். அவள் சொல்லும் ஸ்விட்ச்களை ஆன் செய்து ஆஃப் செய்வது அவன் வேலை.

“டூ பார் ஏ பார் ஒன்” என்றாள் நாகவேணி.

அவன் அதை ஆன் செய்தான். ஒரு லைட் எரிந்தது. சிவப்பு லைட் எரிந்தால் அவன் “ரெட்’ என்று சொல்லவேண்டும். பச்சை என்றால் “க்ரீன்” என்று.

“த்ரீ பார் ஸி பார் ஃபோர்ட்டீன்.”

“ரெட்.”

அவள் குரல் மட்டும் தலைக்கு மேல் கேட்டுக்கொண்டிருந்தது.

அவன் நிமிர்ந்தபோது அவள் இடையை பார்த்தான். அவளுக்கு உறுதியான சிறிய இடை. தொப்பையே இல்லை.

“ஃபோர்ட்டீன் பார் டி த்ரீ.”

அவன் கையை நீட்டியபோது புறங்கை அவள் இடையில் பட்டுவிட்டது. அவள் பேட்டரியை தொட்டுக் கொண்டிருந்தாள். மின்சாரம் அவள் வழியாக அவனைக் கடந்து சென்றது. ஒரு முழு மின்சுற்று. இருவரும் மின்னதிர்ச்சி பெற்று அதிர்ந்தனர்.

“டிஸி கரெண்ட்தானே? என்ன பெரிதாகச் சொல்கிறாய்? அங்கே வேலைசெய்தால் சின்னச்சின்ன ஷாக் அடிக்கத்தான் செய்யும்” என்றான் ராஜப்ப நாயக். “ஒரு சர்க்யூட் உருவாகியிருக்கிறது, நல்ல விஷயம்தானே.”

“போடா” என்றான் கிருஷ்ண நாயக்

“அவள் உன்னை வசைபாடினாள்… அடிக்கவந்தாள்.”

“அது ஒன்றுமில்லை… “

“பின்னே?’’

“நான் வேண்டுமென்றே தொடவில்லை.”

“அவ்வளவுதானே?”

“மேடம் என்னைத் தவறாக நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.”

“மேடம் என்று சொல்வதை முதலில் நிறுத்து…. உன் உடம்பில் தெருநாய் பம்முவதுபோல ஒரு குன்றுதல் அதனால்தான் வருகிறது. ஆண்பிள்ளை போல இரு.”

“அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை.”

“இதோபார், பெண் என்ன நினைக்கிறாள் என்று பார்க்காமல் தன்பாட்டில் இருக்கும் ஆணைத்தான் பெண்ணுக்குப் பிடிக்கும்.”

கிருஷ்ண நாயக் பெருமூச்சுவிட்டான். அவனிருக்கும் நிலையை ராஜப்ப நாயக்கிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியாது.

“நான் ஒன்று சொல்லவா, நீ வேண்டுமென்றே தொடவில்லை. ஆனால் உன் மனம் விரும்பியது. கை அங்கே சென்றது.”

“போடா” என்று கிருஷ்ண நாயக் எழுந்து நடந்தான்.

அவன் திரும்பி வந்தான். நாகவேணி டீ குடித்துக் கொண்டிருந்தாள். அவன் சென்று ஓரமாக நின்றான். அவள் எழுந்து மீண்டும் ரப்பர் மேடையில் ஏறிக் கொண்டாள். அவள் அழைக்கிறாளா என அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் “ம்” என்றாள். அவன் ஓடி அருகே சென்றான்.

“சிக்ஸ் பார் ஓ எய்ட்டீன்.”

அவன் ஸ்விட்சை ஆன் செய்தான். “க்ரீன்.”

அவள் ஸ்க்ரூ டிரைவரை எடுத்து ஏதோ செய்ய தொடங்கினாள். கீழிருந்து பார்த்தால் ஒரு சிறுவன் அங்கே நின்றிருப்பதாகத் தோன்றும். நாகவேணியின் உடலசைவுகளை பொதுவாகப் பார்த்தாலும் சிறுவன் என்றுதான் நினைக்க முடியும். அவள் மார்பகங்கள் தட்டையானவை. பின்பக்கமும் சிறியது. அவை இரண்டும்தான் அவளைப் பெண் எனக் காட்டுபவை.

ஆனால் அவள் கண்கள் பெண்ணழகு நிறைந்தவை. கன்றுக்குட்டியின் கண்கள்போல பெரியவை. அவள் மையெல்லாம் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் மைபோட்டது போலவே இருக்கும்.

காலையில் வந்ததும் அவளிடம் “குட்மார்னிங்!” என்பான். அப்போது அவளை நேரில் பார்ப்பதில்லை.

அவளுக்கு அவன்மேல் ஏதோ எரிச்சல். அல்லது அவனை அவள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. “குட் மார்னிங்” என்பாள். அதன் பின் நாள் முழுக்க இருவரும்தான் பராமரிப்பு அறையில் இருப்பார்கள். அவள் அவனிடம் கண்ணை நோக்கி ஒரு வார்த்தைகூடச் சொல்வதில்லை. சுருக்கமான ஆணைகள், விசாரிப்புகள் மட்டும். அவனும் ஒரே வார்த்தைப் பதில்களைத்தான் சொல்வான்.

அவள் வேலைசெய்து கொண்டிருக்கும்போது அவளை அறியாமல் பக்கவாட்டில் அவளைப் பார்ப்பான். முதலில் அவளுடைய சிறுவனைப் போன்ற அசைவுகள் அவனுக்கு பிடிக்காமல் இருந்தன. அந்த ஒவ்வாமையை மறக்க அவன் அவள் கண்களை பார்ப்பான். பக்கவாட்டில், அவள் வேறெதையோ பார்க்கையில். அந்தக் கண்கள் அவனை படபடப்பு கொள்ளச் செய்யும். நெஞ்சுக்குள் இனிமை பரவும்.

அதன்பின் அவள் அசைவுகளும் பிடிக்கத் தொடங்கின. அவளுடைய கவனமே இல்லாத புடவைச்சுற்று, கலைந்த கூந்தல், அதை அவள் கிரீஸ் படாமல் முழங்கையால் தள்ளி ஒதுக்கிக் கொள்ளும் அசைவு. அந்த அசைவு மான் பின்காலால் காதைச் சொறிவதுபோல என நினைத்துக் கொண்டான்.

அவர்களைச் சுற்றிலும் ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சின் பதினெட்டு பேனல்கள் சீர்ட் ட்ரீச் ரீப் க்ரீப் என சீரான தாளத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் அவ்வப்போது நினைத்துக் கொண்டு “ஆர்ர்ர்ர்ர்?” என்று கேட்டுக்கொண்டு ‘ர்ர்ர்ர்ர்ப்” என்று அதுவே பதிலும் சொல்லிக் கொள்ளும். அறைமுழுக்க வெவ்வேறு சிறு கருவிகள். மீட்டர்கள். உதிர்ந்த ஒயர் துணுக்குகள்.

பராமரிப்பு அறையை மட்டும் ஸ்வீப்பர்கள் கூட்டிப் பெருக்கக் கூடாது. எதையாவது தவறுதலாக தட்டிவிடுவார்கள். ஆகவே காலையில் வந்ததுமே நாகவேணிதான் கூட்டுவாள். முதல்நாள் அவன் வந்தபோது அவள் கூட்டுவதைக் கண்டு “வேண்டாம் மேடம்… கொடுங்கள்” என்று கைநீட்டினான். “வேண்டாம்” என்று அவள் கூர்மையாக மறுத்தாள். இரண்டு நாட்களுக்குப் பின்பு அவளே சொன்னாள், டெக்னீஷியன்தான் கூட்டவேண்டும். தான் இன்னும் கூட்டுவதற்குக்கூட தகுதி பெறவில்லை என அவன் நினைத்துக் கொண்டான்.

அவன் டெக்னீஷியனாக பதவி உயர்வு பெற்று திருவனந்தபுரத்தில் ஓராண்டு பயிற்சி முடிந்து அங்கே வந்து சேர்ந்தபோது பதற்றமாகவே இருந்தான். பயிற்சியை அவன் முழுவெறியுடன் உழைத்துத்தான் முடித்தான். அவனுடன் பயின்றவர்கள் எல்லாம் டெலிஃபோனில் லைன்மேனாக பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள். தேர்வு எழுதி ஜெயித்தனர். அவன் போஸ்டாபீஸில் சிக்னல் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தான். அதற்கும் டெலிஃபோனுக்கும் சம்பந்தமே இல்லை. முழுக்க முழுக்க ஆபீஸ் பியூன் வேலை. ஆனால் டிப்பார்ட்மெண்ட் ஒன்று. லைன்மேனுக்கு இணையான பதவி அது.

டெலிஃபோன் டெக்னீஷியனாக பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வை சிக்னல் அஸிஸ்டெண்ட்களும் எழுதலாம் என்று ஆணைவந்த முதல் ஆண்டே அவன் எழுதினான். வெறிகொண்டு படித்து அப்படியே கக்கி எழுதி ஜெயித்தான். பயிற்சியில் அவன் தடுமாறினான். பாடங்களை இரவுபகலாக அமர்ந்து படித்தான். எல்லா சார்ட்டுகளையும் அற்புதமாக வரைந்தான்.

ஆனால் அவனுக்கு சர்க்யூட்டுகளைப் பற்றி, ஸ்விட்சுகளைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அங்கே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப்பட்டது புரியவில்லை. அவர்களும் பெரும்பாலும் லைன்மேன்கள் அமர்ந்திருந்த வகுப்பை கணக்கிலெடுத்தே நடத்தினார்கள். ஆகவே பெரும்பாலான அடிப்படைகளை விளக்காமல் மேலே கற்பித்தார்கள். வகுப்புகளில் அவன் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தான்.

பிராக்டிக்கல்களில் அவன் கோட்டயத்தைச் சேர்ந்த தாமஸ் சூழிக்காடனின் அருகே நின்று அவனை நகலெடுத்து தப்பித்தான். தாமஸ் அவனை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தாலும் உதவினான். “யானை வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்துவிட்டாய், சரி போ” என்று சூப்பர்வைசர் மணிமுத்தன் பிள்ளை சொன்னார்.

ஒரு டெலிபோன் எக்ஸேசேஞ்சில் டெக்னீஷியன் ஆக வேலைக்குச் சேர்வதை நினைத்த போதே நாக்கு வறண்டது. வியர்வை வந்தது. அவனுடைய ஊர்க்காரனாகிய ராஜப்ப நாயக் அங்கே இருந்தான். அவனைத்தான் வந்து பார்த்தான்.

“நாளை இங்கே சேரப் போகிறாயா? அடடா!” என்று அவன் மகிழ்ந்தான். “டெக்னீஷியன் ஆகிவிட்டாய். எட்டுபத்து ஆண்டுகளில் செக்கண்டரி சுவிச்சிங் அசிஸ்டெண்ட். மறுபடியும் எட்டு ஆண்டுகளில் ஜேஇ. டேய் நீ எஞ்சீனியர் ஆகப்போகிறாய்… நம் சாதியில் எஞ்சீனியர்களே இல்லை… வணக்கம் எஞ்சீனியர் சார்.”

“வேண்டாம்டா வேடிக்கை செய்யாதே… எனக்கு பயமாக இருக்கிறது.”

“என்ன பயம்? தைரியமாக போ. இது சர்க்கார் வேலை. உன்னை யாரும் ஒன்றும் செய்யப் போவதில்லை. அதிகாரிகளுக்கு நீ பயப்படவே வேண்டாம். நீ கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டியவர் சீனியர்தான். அவரை மட்டும் தாஜா செய்துவிட்டால் நீ ராஜா” என்றான் ராஜப்ப நாயக்.

அவன் வெறுமே முனகினான்.

“உண்மையில் அது சுலபம். அவருக்கு என்னவேண்டும் என்று கேள். குடிப்பழக்கம் உள்ளவர் என்றால் விஷயம் மிகமிக எளிது. சாப்பாட்டுப்பிரியர் என்றாலும் சரிதான். வேறு என்ன என்று பார்த்துக் கொண்டே இரு. மறுத்தே பேசாதே. அவ்வப்போது அவரை நேரடியாகவே புகழ்ந்துபேசு. கூச்சமே படாதே. புகழ்ச்சியை விரும்பாத யாருமே இல்லை.”

ஆனால் அவன் ஜேஇ ஆபீஸில் ஜாய்னிங் ரிப்போட் கொடுத்துவிட்டு பராமரிப்பு அறைக்குள் நுழைந்தபோது அங்கே நாகவேணிதான் இருந்தாள். அவன் அவளை பையன் என்றுதான் நினைத்தான். அவள் புடவைக்குமேல் ஏப்ரன் கட்டியிருந்தாள் அதை அவிழ்த்த போதுதான் பெண் என தெரிந்தது.

“இங்கே சீனியர்..” என்றான்.

“நான்தான்… நீங்கள்?”

அவன் திகைத்து நாக்கால் உதட்டை வருடிக்கொண்டு “நான் கிருஷ்ண நாயக்… இங்கே ஜூனியராக…” என்றான்.

“ஜூனியரா? பிரமோஷன் கேடரா?”

“ஆமாம் மேடம்.”

“என்னவாக இருந்தீர்கள்?”

“போஸ்டாபீஸில் சிக்னல் அசிஸ்டெண்ட்.”

“இந்த வேலையெல்லாம் தெரியுமா?”

“இல்லை மேடம்”.

“தெரியாதா? ஏன்? டிரெயினிங்கில் கற்றுக் கொள்ளவில்லையா?”

“எனக்கு பிராக்டிக்கலில் ஒன்றும் புரியவில்லை”.

“இதற்குமுன் ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சில் நுழைந்தது உண்டா?”

“இல்லை மேடம்.”

“சரிதான்” அவள் முகம் சுளித்து திரும்பிக்கொண்டாள். அதன்பின் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை.

மூன்று நாட்கள் எந்த வேலையும் சொல்லவில்லை. எதையும் செய்யவும் பயந்து அவன் நின்றுகொண்டே இருந்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பதினொன்றாம் வகுப்பு முடித்து போட்டித்தேர்வு எழுதி வென்று பதினெட்டு வயதில் நேராக டெக்னீஷியன் ஆனவள். ஆறாண்டு சர்வீஸ். அவன் பத்தாம் வகுப்பு படிக்கையில் போஸ்ட்மேன் ஆக இருந்த அப்பா இறந்தார். அவனுக்கு கருணையடிப்படை வேலை கிடைத்தது. வேலைக்குச் சேரும்போது அவனுக்கும் பதினெட்டு வயதுதான். போஸ்டாபீஸ் வேலையில் பத்து ஆண்டுகள் இருந்தான். ஓராண்டு பயிற்சி. அவள் அவனைவிட ஐந்து வயது குறைவு. ஆனால் அவளைப் பார்த்தால் பதினெட்டு பத்தொன்பது வயதுதான் தோன்றும்.

அவள் அவன் அங்கே நிற்பதையே மறந்தவள் போலிருந்தாள். அந்த இயந்திரங்களின் ஒருபகுதியாக மாறிவிட்டவள் போல அவள் வேலை செய்தாள். அங்குமிங்கும் சிட்டுக்குருவி போல பறந்துகொண்டே இருந்தாள். அவன் அவளிடம் பேசுவதே காலையில் குட்மார்னிங் சொல்லும் போதும் மாலையில் குட்பை சொல்லும் போதும் மட்டும்தான்.

ராஜப்ப நாயக் அவனிடம் “அவளைப்பற்றி விசாரித்தேன் மாப்பிள்ளை. அவள் நமக்குச் சமானமான சாதிதான். நாம் விடக்கூடாது. அவளை நீ ஜெயிக்கவேண்டும்…” என்றான்.

கிருஷ்ண நாயக் “அவள் என்னிடம் பேசுவதே இல்லை” என்றான்.

“அப்படித்தான் இருப்பாள். நாம் ஜெயிக்கவேண்டும். ஜெயிப்பது என்றால் அவளை நீ காதலிக்க வேண்டும். அவளைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும்.”

கிருஷ்ண நாயக் “அய்யோ” என்றான்.

“என்ன ஐயோ… டேய் அவள் உன்னைவிட இளையவள். நீயும் அவளும் ஒரே கேடர். பிறகென்ன?” என்றான் “நமக்கு இப்படி எல்லா வெற்றியும் வேண்டும் மாப்பிள்ளை.”

கிருஷ்ண நாயக் மூச்சுத்திணறினான்.

“அவள் சீனியர் என்று பார்க்கிறாயா? அதெல்லாம் ஆபீஸில். வீட்டில் அவள் உனக்கு சமைத்துப் போட்டு பிள்ளை பெறுவாள். பயப்படாதே.”

கிருஷ்ண நாயக் பெருமூச்சுவிட்டு “இப்படியெல்லாம் பேசாதே… அவள் காதுக்குச் சென்றுவிட்டால் நான் செத்துப்போவேன்” என்றான்.

ஒருவாரம் கழித்துத்தான் நாகவேணி அவனிடம் ஒரு ஸ்க்ரூ டிரைவரை எடுத்து தரும்படிச் சொன்னாள். அவன் எடுத்து இருகைகளாலும் பவ்யமாக நீட்டினான். திரும்பிப் பார்க்காமல் வாங்கிக்கொண்டாள். ஆனால் அது ஒரு தொடக்கம். அவன் அங்கே வேலை செய்யத் தொடங்கினான். அவளுடைய உதவியாளனாக, ஒரு குரங்கு செய்யும் வேலைகள்தான். ஆனால் அவனுக்கு நிறைவாக இருந்தது. அதன்பிறகுதான் அவன் அவளை கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான். அவள் கண்களை இரவில் தனிமையில் நினைத்துக் கொண்டிந்தான்.

அவள் சாப்பிடப் போனபோது கிருஷ்ண நாயக் அந்த மின்னதிர்ச்சியை நினைத்துக் கொண்டான். உடலெல்லாம் விறுவிறுவென்றது. கைவிரல் நுனிகளில் ரத்தம் வந்து முட்டியது. புல்லரித்து கண்களில் நீர் கோத்தது. அந்த பேனலில் உள்ள எல்லா கம்பிகளிலும் அந்த மின்சாரம் உண்டு என அவன் அறிந்திருந்தான்.

மெல்ல கையை நீட்டி அதைத் தொட்டான். மின்சாரம் அவன் உடலை அதிரச்செய்தபடி செல்ல துடித்து கையை எடுத்துக்கொண்டான். அந்த மின்சாரம் அவனை பூமியுடன் இணைத்தது. அந்த டெலிஃபோன் எக்சேஞ்சுடன் இணைத்தது.

மீண்டும் வந்து அமர்ந்து கொண்டபோது உடம்பெல்லாம் ஒருவகையான தித்திப்பு நிறைந்திருப்பதாக தோன்றியது. இரும்பை கடித்துப் பார்த்தால் தோன்றுவது போன்ற இனிப்பு. கைநகங்களில் அந்த மின்சாரத்தின் முனை மிச்சமிருப்பதுபோல. ஜன்னல் கம்பிகளில் மெல்லத் தொட்டான். மிக மென்மையான ஓர் அதிர்வு.

அன்று நெடுநேரம் கிருஷ்ண நாயக் தூங்கவில்லை. விடுதியின் அறையில் இருட்டில் மச்சுப்பலகையை பார்த்தபடி படுத்திருந்தான். அவன் உடலுக்குள் மென்மையான மின்னதிர்வு பரவியிருந்தது. கண்களை மூடிக்கொண்டால் அந்த அலைகளைப் பார்க்க முடிந்தது. உடலெங்கும் இசை நிறைந்திருப்பதுபோல. வானிலிருந்து அவன் உடலே சிக்னல்களைப் பெறுகிறது. அவன் ரேடியோவை தொட்டால் அது பாடும்

அவன் மறுநாள் வந்தபோது புதியவனாக இருந்தான். நாகவேணி வழக்கம் போல அவனிடம் ஒற்றைச்சொற்களில் முகம் பார்க்காமல் பேசினாள். அவன் அவள் ஆணையிட்ட எல்லாவற்றையும் செய்தான். அவள் மதியம் சாப்பிடச் சென்றபோது எவருமில்லை என உறுதி செய்தபின் அந்த மின்கம்பியை தொட்டு உடலதிர்ந்தான்.

அவன் உடல் எந்நேரமும் அதிர்ந்து கொண்டே இருந்தது. காதில் அதன் ரீங்காரத்தை அவன் கேட்டான். சாலையில் நடக்கும்போது மண்டைக்குள் கூச்சத்தை அளித்த அந்த அதிர்வால் அவன் புன்னகைத்துக் கொண்டான். தனிமையில் அமர்ந்திருக்கையில் சட்டென்று ஒரு புல்லரிப்பை அடைந்தான். உடலில் ஒரு பூச்சி ஊர்வதுபோல அவ்வப்போது சிலிர்த்தது.

ராஜப்ப நாயக் அவனிடம் “டேய் தூண்டிலில் மீன் கவ்விவிட்டதா?” என்றான்.

“போடா”

“என்னவோ நடந்திருக்கிறது… நீ முன்னைமாதிரி இல்லை. உன்கண்கள் யக்ஷகானத்தின் கந்தர்வனின் கண்கள்.”

அவன் புன்னகைத்தான்.

“உண்மையில் நீ அழகாக ஆகிவிட்டாய் தெரியுமா? பளபளப்பாக இருக்கிறாய்.”

கிருஷ்ண நாயக் அந்த பேனலையே பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு கீழே பெரிய பேட்டரியிலிருந்து நேர்மின்சாரம் வருகிறது. அந்த பேனல்கள் அனைத்திலும் அது நிறைந்திருக்கிறது. ஆனால் எங்கும் பாயாமலிருக்கையில் உண்மையில் அது அங்கே இல்லை. பேட்டரியில்கூட இல்லை. அது உருவாகவே இல்லை. எங்கோ எவரோ ஃபோனை எடுக்கிறான். ரிஸீவரின் எடை எழுந்ததும் போனுக்குள் இரு முனைகள் தொட்டுக் கொள்கின்றன. மின்சாரம் பாய்ந்து ஒருமுனையிலிருந்து இன்னொன்றை அடைகிறது. பேனலில் ஒரு லூப் ரீக் என்கிறது.

அவன் தன் அறையில் தனிமையில் தன் பயிற்சி நோட்டுகளை எடுத்து படித்தான். புரிவது போலவும் இருந்தது, புரியப்புரிய குழப்பம் மிகுந்தது. ஒவ்வொரு முறையும் மூளை சலித்து மூடிவைத்தான். ஆனால் பேனல்களை பார்க்கையில் புரிவதுபோலவும் இருந்தது.

அவன் அறை நண்பர்கள் எந்நேரமும் அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். பஞ்சாபில் பொற்கோயிலை ராணுவம் சூழ்ந்து கொண்டது. பிந்திரன்வாலே சுட்டுக்கொல்லப்பட்டார். அவனுக்கு அந்தச் செய்தியே நான்குநாட்கள் கழித்துத்தான் தெரிந்தது. “பிந்திரன்வாலேயை யார் கொன்றது?” என்றான். அறைநண்பன் ரவீந்திரன் நாயர் “உன் அப்பன்… நீயெல்லாம் ஒரு மனிதனா?” என்றான்.

ஒவ்வொருநாளும் அவன் அந்த மின்சாரத்தைத் தொட்டான். பின்பு அதில் ஆர்வமிழந்தான். வெவ்வேறு சுவிட்ச்களையும் ஒயர்களையும் தொட்டுப் பார்த்தான். தொடத்தொட அந்த ஆசை கூடிக்கூடி வந்தது. அந்த அடுக்குகளுக்குள் மின்சாரம் ஓடிக்கொண்டே இருப்பது மூச்சொலி போல் இருந்தது. அது அவனுடன் மிக ரகசியமாக பேசுவது போலத் தோன்றியது.

நாகவேணி அவள் குடும்பத்துடன் சுப்ரமணியா கோயிலுக்குச் சென்றபோது டெலிஃபோன் எக்ஸேஞ்ச் முழுக்க அவன் பொறுப்பில் வந்தது. அவள் செல்லும்போது அவனிடம் அவன் என்னென்ன செய்யவேண்டும் என்று விளக்கினாள். முடிந்தவரை எளிமையாக. சிவப்பு விளக்கு எரிந்தால் பேனல்களை பார்த்துக் கொண்டே செல்லவேண்டும். எங்கே லூப் மூடி விழுந்து கிடக்கிறதோ அந்த சப்-பேனலின் சுவிட்சை ஆஃப்செய்தபின் அந்த லூப்பை மட்டும் உருவி எடுக்கவேண்டும். உருவி எடுத்ததை அப்படியே ஒரு பெட்டியில் போட்டு வைத்துவிட வேண்டும். மீண்டும் சுவிட்சை ஆன் செய்யவேண்டும்.

“அந்த எண் மட்டும் வேலை செய்யாது. ஒருநாள்தானே, நான் திரும்பி வந்து பார்த்துக் கொள்கிறேன். மறக்கவேண்டாம், சுவிட்சை ஆஃப் செய்யாமல் லூப்பை உருவக்கூடாது” என்றாள்.

அவன் தலையாட்டினான். உண்மையில் அவள் சொல்லச் சொல்ல எல்லாமே குழப்பமாகி பதற்றம் அடைந்துவிட்டான்.

“அதற்குமேல் அலாரம் அடித்தால் நேரடியாக ஜேஈயிடம் போய்ச் சொல்லுங்கள்.. அவர் பார்த்துக் கொள்வார். நான் சொல்லியிருக்கிறேன்” என்றாள் நாகவேணி.

அவன் அதற்கும் தலையசைத்தான். அவள் அவநம்பிக்கையுடன் பார்த்தபின் அனைத்தையும் இன்னொரு முறை படிப்படியாகச் சொன்னாள்.

இரவில் அவன் பதற்றத்துடனேயே இருந்தான். பழைய நோட்டுக்களை புரட்டி பேனல்கள் சப்-பேனல்கள் லூப்புகள் என்று படித்தான் நள்ளிரவுக்குப்பின் தூங்கினான்.

மறுநாள் அவன் பராமரிப்பு அறைக்கு வந்தபோது மேலும் பதற்றம் அடைந்திருந்தான். கை வியர்த்திருந்தது. கூட்டிப் பெருக்கினான். மினிட் புக்கில் எண்ட்ரி போட்டான். மனம் எடையாக இருந்தது.

பின்னர் எழுந்துசென்று பேனல்களை பார்த்தான். அவை பேசிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே சென்றான். அவன் ஒயர்களை தொட்டு நெடுநாட்களாகி விட்டிருந்தது. அந்த முதல் மின்னதிர்ச்சியின் இனிமையையே மறந்துவிட்டவன் போலிருந்தான். அந்த நாட்களில் அவன் மண்ணிலேயே காலூன்றவில்லை என்று அப்போது தோன்றியது.

அந்த வயரைத் தொட எண்ணினான். அசட்டுத்தனம் என்று தோன்றியது. கைநீட்டி அதைத் தொடப்போனான். ட்ரீக் என்றது பேனல். அவன் மண்டைக்குள் ஒரு நரம்பு மண்புழு போல புரண்டது. ஒருகணம், அவன் அந்த சர்க்யூட்டின் மொத்த உருவையும் பார்த்துவிட்டான்.

ஓடிப்போய் டிராயரைத் திறந்து ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சின் ப்ளூர்பிரிண்ட் மானுவல்களை எடுத்தான். பலநூறு பக்கங்கள் கொண்டது. பெரிய ஆல்பங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது ஏதாவது பெரிய சிக்கல் என்றால் தான் ஜே.ஈ, ஏ.ஈ போன்றவர்கள் அதை எடுத்து விரித்துப் போட்டு படிப்பார்கள்.

அவன் அந்த சர்க்யூட்டின் ப்ளுபிரிண்டைக் கண்டுபிடித்தான். 1965 மாடல் டெலிபோன் எக்ஸேஞ்ச் அது. அதன் மானுவலை பார்த்து முன்பு யாரோ எஞ்சீனியர் வரைந்த ப்ளூபிரிண்ட். மனம் படபடக்க அவன் கண்டது உண்மைதானா என்று பார்த்தான். அணுவணுவாக அப்படித்தான். அவன் அந்த சர்க்யூட்டை கண்முன் என பார்த்து விட்டிருந்தான்.

அந்தப் பேனலில் இருந்து கிளம்பிய மின்னதிர்வு பலநூறு ரிலேக்கள் வழியாக ஓடி, அந்த பழைய கரிய ஃபோனுக்குள் நுழைந்து இரு முனைகள் தொட்டுக்கொண்ட இணைப்பினூடாக பாய்ந்து, திரும்பி வந்து மீண்டும் பல நூறு ரிலேக்கள் வழியாகச் சென்று செகண்டரி சுவிட்சிங் செண்டர் வழியாக பாய்ந்து மேலும் அழுத்தமான மின்னலையாக மாறி கம்பிகளில் பீரிட்டுச் சென்று, மங்களூரின் பெரிய டெலிபோன் எக்ஸேஞ்சை அடைந்து, அங்குள்ள ரிலேக்கள் பேனல்கள் வழியாக ஊருடுவி இணைத்தும் விலக்கியும் ஓடி, அங்கே ஒரு டெலிபோனுக்குள் சென்று கார்பன் தூள்களில் காந்த அலைகளை எழுப்பி மென்தகடை அதிரச்செய்து ஒலியாகி, மறுமுனையினூடாக மீண்டும் மொத்தப் பயணத்தையும் மேற்கொண்டு, தொடங்கிய இடத்தை அடைந்து அங்கிருந்த முனையை தொட்டு ஒரு சுற்று முடித்தது. ஒருகணத்தில்.

அவன் வியந்து கைகால்கள் தளர்ந்து அமர்ந்திருந்தான். எழவே முடியவில்லை. நெடுநேரமாகியது. எழுந்தபோது கால்கள் தள்ளாடின. டீ குடித்துவிட்டு மீண்டும் வந்தான். பேனல்களை பார்த்தபடி நின்றான். ஒவ்வொரு ரிலேயும் அடிப்படையில் மிக மிக எளிதானது. நம்பவே முடியாதபடி எளிதானது. மின்சாரம் ஓடும் கம்பி காந்தமாகிறது. அது அருகிருப்பதை ஈர்த்து தன்மேல் ஒட்டிக்கொண்டு தொடர்பை உருவாக்கிக் கொள்கிறது. அல்லது எதிரோட்டம் பெற்றுவிலக்கி தன்னை துண்டித்துக் கொள்கிறது. அவ்வளவேதான்.

நூற்றுக்கணக்கான ரிலேக்களினாலான சர்க்யூட் என்பதும் எளிதானது. ஆனால் திரும்பத் திரும்ப பலமுறை நிகழ்ந்து நிகழ்ந்து அது பெருகிப்பெருகி சிக்கலான வலையாக ஆகிறது. அப்படி பலநூறு சர்க்யூட்டுகள். அந்த டெலிஃபோன் எக்ஸேஞ்சில் மட்டும் ஆயிரத்தி எண்ணூறு. ஒவ்வொரு டெலிஃபோன் எக்ஸேஞ்சிலும் அப்படி பலஆயிரங்கள். இந்தியாவெங்கும் உலகமெங்கும் பல லட்சம். பற்பல லட்சம்.

மிக எளிமையான ஒன்று தன்னைத்தானே நகலெடுத்துப் பெருகி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு பின்னி எண்ணிப் பார்க்கவே மலைப்பு தட்டும் பெரும்படலமாக மாறி உலகை மூடியிருக்கிறது. உலகின் நரம்புமண்டலம். மாபெரும் சிலந்திவலை. அதில் சிக்கியிருக்கின்றன நாடுகள், நகரங்கள், சிற்றூர்கள், பலகோடி மானுடர்.

அவன் அன்று முழுக்க நிலைகொள்ளாமலேயே இருந்தான். திரும்பத் திரும்ப அந்த பேனல்களை பார்த்துக் கொண்டிருந்தான். இரவு நெடுநேரம் கழித்து வீட்டுக்குச் சென்றான். தூங்க மேலும் நேரமாகியது. மறுநாள் காலையிலேயே வந்துவிட்டான்.

அன்று நாகவேணி வரமாட்டாள் என்று ஜேஈ சொன்னாள். சுப்ரமணியாவில் நீராடியதனால் அவளுக்கு காய்ச்சல். ஒருவாரம் லீவு. “சப்ஸ்டிட்யூட் சொல்லியிருக்கிறேன், கண்ணூரிலே இருந்து ராமன் வருவார்” என்றார் ஜேஈ.

“சப்ஸ்டிட்யூட் வேண்டாம் சார், நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று கிருஷ்ண நாயக் சொன்னான்.

“நீங்களா?”

“ஆமாம் சார், எனக்கு தெரியும்.”

“இதோ பாருங்கள்…”

“சார், ஏதாவது பிரச்சினை என்றால் பாருங்கள். சப்ஸ்டிட்யூட் கூப்பிடுங்கள்.”

ஜே.ஈ சந்தேகத்துடன் “சரி” என்றார்.

அவன் அன்று எட்டு பழுதுகளை சரிபார்த்தான். லூப்களை அகற்றி அந்த சர்க்யூட்டில் என்ன பழுது என்று கண்டுபிடித்து லைன்மேனுக்குச் சொன்னான். அவர்கள் சீர் செய்ததும் சோதனை செய்து சரிபார்த்து மீண்டும் லூப்களை பொருத்தி இணைப்பு அளித்தான்.

சாயங்காலம் மினிட் புக்கை பார்த்த ஜே.ஈ “குட்!” என்றார். அவரால் நம்பமுடியவில்லை. புன்னகையுடன் “ஸோ யூ லேர்ன்ட்” என்றார்.

“ஆமாம் சார்” என்று அவன் புன்னகைத்தான்.

“முதலில் கஷ்டமாக இருக்கும். அதன்பின் ஈஸியா ஆயிடும். ஆனா சட்டென்று மிகமிகக் கஷ்டமான ஒன்று வந்துவிடும்.”

“பார்ப்போம் சார்.”

மூன்றாம் நாளே அந்த சவால் வந்தது. உள்ளூர் மீன்எண்ணைத் தொழிற்சாலையின் எண்ணில் பழுது. லைன் துல்லியமாக இருந்தது. உள்ளேதான் பிழை. ஏ.ஈ ராமச்சந்திரனே நேரில் வந்தார். “டி.ஈ நேரில் கூப்பிட்டுச் சொன்னார்… உடனே பார்க்கவேண்டும். ஹெவி கஸ்டமர்” என்றார்.

“பார்ப்போம் சார்” என்றான்.

“என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. எல்லா டெஸ்டும் ஓக்கே. ஆனால் அவ்வப்போது ஃபோன் கிடைக்கவில்லை என்கிறார். சிலசமயம் பயங்கர இரைச்சலாம்… நான் பேசியபோது பக்காவாக இருந்தது. நாகமணி நாலைந்து முறை பார்த்துவிட்டு பக்கா என்றாள். ஆனால் அவர்கள் புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதோ டி.இ வரை போய் சொல்லிவிட்டார்கள்… நாகமணி சொல்கிறாள், அவர்களிடம் தான் ஏதோ பிரச்சினை என்று. நேற்று ஃபோனை மாற்றினேன். மொத்த ஒயரிங்கையும் மாற்றினேன். இன்றைக்கு மறுபடியும் கம்ப்ளெயிண்ட்” என்றார் ராமச்சந்திரன்.

ஒருமுறை சர்க்யூட்டின் எல்லா முனைகளையும் சோதனை செய்தபோது ஜே.ஈ குழம்பினார். ராமச்சந்திரன் “என்னவென்றே தெரியவில்லை. பார்ப்போம். அந்த மானுவலை எடுங்கள்” என்றார்.

அவர் மானுவலை நோக்கிக் கொண்டிருந்தபோது அவன் பானல் வழியாக நடந்தான். சர்க்யூட்டுகளை கண்ணால் பார்த்தே முழுமையாக உருவாக்கிக் கொண்டான். அவன் மனம் ஒரு பிழையைச் சென்று தொட்டது.

“சார், பிராப்ளத்தை கண்டுபிடித்துவிட்டேன்.”

“என்ன?”

“அந்த லைனில் ஏதோ டச்சிங் இருக்கிறது. ஏஸி மின்சாரம் வருகிறது. கொஞ்சம்… அப்போது மட்டும் இங்கே இந்த லூப் உருவாகிவிடுகிறது. ஏனென்றால் இந்த மெட்டல்ஹூக் மாக்னெட்ஃபீல்டை உருவாக்கிக் கொள்கிறது. அந்த ஏஸி மின்சாரம் விலகியதும் இது உடனே சரியாகியும் விடுகிறது.”

“அப்படியா?”

“இதை மாற்றிவிடுகிறேன். இன்சுலேஷனும் கொடுத்துவிடுகிறேன்… சரியாகிவிடும்.”

அவர் அவனை விடப்புடன் பார்த்தார். பின்பு “நாகமணி கில்லாடி… பக்கா டிரெயினிங்” என்றார்.

“ஆமாம் சார்” என்று புன்னகைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து நாகமணி வந்தாள். மெலிந்திருந்தாள். காய்ச்சல் சரியாகிவிட்டதா என்று கேட்கலாமா என நினைத்தான். கேட்கவில்லை.

அவள் வழக்கம்போல புன்னகைத்தாள். வருகைப் பதிவுகள் செய்தாள். அவன் வேலை செய்யாத எண்களின் பட்டியலை எடுத்துக் கொண்டிருந்தபோது அவள் திடீரென்று “நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றார்” என்றாள்.

அவன் திடுக்கிட்டு “யார்?” என்றான்.

“ஜே.ஈ.”

“அப்படியா?” என்றான்.

“என் டிரெயினிங் என்றார்.”

“அது உண்மைதான்.”

அவள் புன்னகைத்தாள். அவன் கண்களை அவள் பார்வை சந்தித்தபோது அவன் விலகிக் கொண்டான்.

“உங்களுக்கு தெரியும் என்று எனக்குத் தெரியாது.”

“எனக்கே தெரியாது.”

அவள் சிரித்தபோது முகமே அழகாக ஆகியது. முழுக்க முழுக்க பெண்.

பேனல் டெஸ்டிங் சென்றபோது அவன் “நீங்கள் நில்லுங்கள், நானே பார்க்கிறேன்” என்றான்.

அவள் கீழே நின்றாள். அவன் ரப்பர் மேடைமேல் ஏறிக்கொண்டான்.

“இந்த மேடைமேல் நின்றபோது நான் தொட்டு ஒரு ஷாக் அடித்ததே ஞாபகம் இருக்கிறதா?”

“ஆமாம் ஒருமாசம் இருக்கும்.”

“அதற்குப் பிறகுதான் எனக்கு சர்க்யூட் என்றால் என்னவென்றே புரிந்தது.”

“ம்?” என்றாள்.

ஏன் அப்படி புன்னகைக்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

“எய்ட்டினைன் பார் சி பார் சிக்ஸ்.”

“ரெட்.”

“ட்வெண்டி பார் கே பார் எய்ட்.”

அவள் அவன் கையை தொட்டாள். அவன் அதிர்ந்தான். அவளும் அதிர்ந்தாள்.

அவன் பற்கள் கூச கண்கள் நீர்வர உலுக்கியபின் நிலைமீண்டான். அவள் “ஸாரி” என்றாள்.

“ஓக்கே” என்றான்.

“செவெண்டி டூ பார் சி எய்ட்டி.”

“நான் வேண்டுமென்றேதான் தொட்டேன்.”

அவன் வியப்புடன் திரும்பி பார்த்தான்.

“சும்மாதான்” என்று அவள் புன்னகைத்தாள்.

***

முந்தைய கட்டுரைவேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–23