வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை]

வணக்கம் ஜெ

 

மற்றுமொரு யானை கதை. உலக இலக்கியத்தில் யானைகளை அல்லது ஏதோ ஒரு விலங்கினைப் பற்றி அதிகம் எழுதியது நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.

 

கொச்சுகேசவன் வரும் முன்னே அதன் வாடையை வைத்து கோபாலகிருஷ்ணன் இருப்புக்கொள்ளாமலாகிறது. யானை சண்டையில் தொடங்கி மனிதர்கள் மதச்சண்டை. கருப்பன் சொட்டிய அருளால் இரண்டும் முடிகிறது. ஒரு ஸ்நாப்ஷாட் சிறுகதை.

 

யானைகளில் பழக்கங்கள் சிறப்பாக வெளிகொண்டுவரபட்டுள்ளன. முன்பு அடிப்பட்ட காலை தூக்கி நிற்பது, வாய்க்குள் கற்களை போட்டுகொள்வதென. இந்த அலாதியான விவரிப்பு உன்னிப்பான கவனிப்பினால் மட்டுமே சாத்தியப்படுவது. யானை மீதும் சரி தவளைக்கண்ணனின் விரிந்த உள்நிஜார் மீதும் சரி.

 

வழக்கம் போல பேச்சுவழக்கும் நகைச்சுவையும். அப்பு நாயை காவலுக்கு நிறுத்தியதில் துவங்கி பல இடங்களில் நுணுக்கமான நகைச்சுவை. அதை தூக்கிகாட்டுவது வட்டார வழக்கா இல்லை வட்டார வழக்கில்லாமல் இந்த துணுக்குகள் சாத்தியமில்லையா என முடிவு எட்டவில்லை, ஒரு வர்ச்சுவல் பட்டிமன்றம் வைக்கலாம். சண்டையின் நடுவே பொன்னம்மை வந்து இஞ்சேருங்க அஞ்சு ரூபா குடுங்க எனக் கேட்பது அதன் உச்சம். தங்கையாவும் சண்டையை விட்டு விலகி பணம் தருவது உச்சத்தின் உச்சம் ஹிலேரியஸ்லி காமிக்கல்.

 

யானைக்குதான் ஞாபகம் அதிகமென்றால் மனிதர்களும் மூன்றாம் வகுப்பில் திருடிய ஸ்லேட்டையும்  பணத்தையும் ஞாபகப்படுத்தி சண்டைக்கு காரணம் காட்டுகிறார்கள்.

 

தொடர்ந்து உங்கள் கதைகளை வாசிப்பதாலோ என்னவோ கருப்பன் கோபாலகிருஷ்ணன் கொச்சுகேசவன் என மாறி மாறி ஓடும்போதே என்ன நடக்கபோகிறது என யூகிக்கமுடிந்துவிட்டது. ஆனால் யானை சண்டை மட்டுமே நிற்கும் என எதிர்ப்பார்த்தேன். மனித சண்டையையும் முடித்துவைத்துவிட்டீர்கள். (லிஜோ பெல்லிஸேரியின் ஜல்லிக்கட்டு படம் போல் முடிந்து விடும் என நினைத்தேன். தப்பித்து ஓடிய ஒரு போத்தை கொல்ல சென்று மனிதர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு கொல்லுவதைப் பற்றியப்படம்).

 

வாசித்து முடித்தவுடன் நிறைவை அளித்த சிறுகதை. நன்றி.

 

ஸ்ரீராம்

 

 

 

அன்புள்ள ஜெ

துளி ஒரு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கியது. சென்ற ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை ஒரு கிராமத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது கோயில் திருவிழாக்கள்தான். மக்கள் அனைவருமே கொண்டாடுவார்கள். அனைவருக்குமே செய்வதற்கு ஏதும் இருக்கும். கூலிக்கு ஆளே கிடையாது கோயிலிலேயே சாப்பாடு. ஆகவே ஊரில் சமையலும் கிடையாது. வம்புகள் கொண்டாட்டங்கள். அதேபோல கலைநிகழ்ச்சிகள்

டிவி வந்ததுமே எல்லாமே போய்விட்டது. இன்றைக்கு எல்லா திருவிழாக்களும் சோகைபிடித்துக் காட்சியளிக்கின்றன. இன்றைக்கு திருவிழாவில் இளைஞர்கள் இல்லை. சிறுவர்க்ளை விடுவதே இல்லை. ஆகவே கம்யூனிட்டி செலிபரேஷன் என்பதே இல்லாமலாகிவிட்டது. அந்த சித்திரத்தை இந்தக்கதையில் வாசித்தபோது என் இளமைப்பருவத்துக்கே சென்றுவிட்டதைப்போல உணர்ந்தேன்

 

மு.ராமசுப்ரமணியம்

வேட்டு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வேட்டு அபாரமான சிறுகதை. சமீப காலமாகச் சிறுகதைகள் என்பவை கொஞ்சம்கூட வாசிப்பனுபவமே தராதவையாக ஆகிவிட்டன. ஒருபக்கம் விகடன் மாதிரியான கதைகள் மேலோட்டமான ஏதாவது ஐடியாவை வைத்து எழுதப்படுபவை. இன்னொரு பக்கம் சீரியஸ் லிட்டரேச்சர் என்றபேரில் உலகில் என்ன இலக்கியம் எப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்பதைப்பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல் செயற்கையாக வலிந்து முக்கிமுக்கி எழுதபப்டும் எழுத்துக்கள்.

 

எழுத்தில் முதலில் கைவசப்படவேண்டியது ஃப்ளோதான். அது இவர்களிடம் இல்லை. ஒன்று வரண்ட கதைசொல்லல். அல்லது திருகல் மொழி. இந்நிலையில்தான் இந்தக்கதைகள் நேரடியான அழகான கதையோட்ட்மும் வெவ்வேறுவகையான வாழ்க்கைச்சூழல்களுக்குள் செல்லும் கூர்மையும் குறியீட்டுத்தன்மையும் கவித்துவமும் கொண்ட ஆழமும் கொண்டகதைகளாக உள்ளன. வேட்டு அவற்றில் ஓர் உச்சக் கதை. அதன் மடிப்புகள் பல உள்ளன.

 

வேலாயுதன் தன் மனைவியைக் கொன்றவன் என்று பார்வதிக்கு தெரியாதா? தெரியும். தெரிந்தேதான் அவனுடன் இருக்கிறாள். ஏனென்றால் வேறுவழியில்லை. அவன் சொல்வதை நம்புகிறாள். ஆனால் அவனை கடந்துசெல்லும் வழியையும் தேடிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுடன் சரியாக இணைந்து பத்தினியாகவும் இருக்கிறாள்

ரமேஷ்குமார் சுப்ரமணியம்

 

அன்புள்ள ஜெ

 

வேட்டு கதையில் வேலாயுதனுக்கும் பார்வதிக்கும் வரும் லயம் ஒர் அழகான இடம். அவர்கள் செர்ந்து செய்வது ஒரு மோசடி. ஆனால் அது இருவருக்குமே தேவைப்படுகிறது. ஆகவே அவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து போகிறார்கள். போயாகவேண்டும். அதன் விளைவாக அவர்கள் நடுவே ஒரு இசைவு உருவாகிறது. அவர்கள் லட்சிய தம்பதிகளாக ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் அப்படி லட்சியத்தம்பதிகளாக இருந்தால்தான் அந்த ஏமாற்றை செய்யமுடியும்

நான் இதை பலமுறை கண்டிருக்கிறேன். ஊரில் பலவகையான மோசடிகளைச் செய்பவர்கள், குற்றங்களைச் செய்பவர்கள்தான் மிகச்சரியான ஜோடிகள். அவர்களுக்குள் சண்டையே வருவதில்லை. அப்படி ஒரு ஒற்றுமை இருக்கும். ஆனால் சரியான தருணத்தில் அந்த ஒற்றுமை இல்லாமலும் ஆகும். காலைவாரிவிட்டு சென்றுவிடுவதும் உண்டு. பார்வதியும் அதைத்தான் செய்கிறாள்.

 

இந்த இசைவுக்கு என்னதான் அர்த்தம்? இலட்சிய தம்பதி என்றால் சேர்ந்தே இருந்தாகவேண்டிய கட்டாயம் கொண்டவர்கள் என்றுதான் அர்த்தமா? சேர்ந்து எதையாவது ரகசியமாகச் செய்யும் பார்ட்னர்களா? அந்தக்கதையை இப்படி யோசித்தால் மிகமிக விரிகிறது

 

எம்.பாரதிதாசன்

முந்தைய கட்டுரையா தேவி! , விலங்கு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவீடுறைவு