“ஆனையில்லா!” [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ..நீண்ட நாள்களுக்கு பின் கடிதம்
எழுதுகிறேன் .. பல பதிவுகளை படித்தவுடன் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தாலும், கடிதம் எழுதும் நேரத்தில் மேலும் சில புத்தக பக்கங்கள் அல்லது கட்டுரைகள் படிக்கலாமே என்று வாசிப்பு பக்கம் தான் மனம் எப்போதும் செல்லுகிறது ..
புனைவு கொண்ட்டாட்டம் சிறுகதைகளை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். ..work from home போட்டதால் அலுவலகம் சென்று வேலை பார்ப்பதை காட்டிலும் அதிக நேரம் வேலை பார்ப்பது போல் இருக்கிறது.. (இந்த நேரத்தில் IT துறையில் இல்லாதவர்களை எண்ணி பொறாமை படாமல் இருக்க முடியவில்லை .. work from home செய்ய முடியாதவர்கள் காலையில் இருந்து இரவு வரை வாசிப்பிலேயே களிக்கலாம்என்று நினைக்கும் போது…. :-)
ஆனையில்லா சிறுகதை வாசிக்கும் போது நீண்ட நாட்க்களுக்கு பின் மனம் விட்டுசிரித்துகொண்டே வாசித்தேன் .. காட்சிகளை மனதில் உரையாடல்களுடன் உருவாக்கி பார்க்கும் போது களத்தின் நகைச்சுவை அபத்தம் மேலும் பலமாக விரிந்து சிரிக்க வைக்கிறது .. இப்படியான ஒரு பிரச்சினை வரும் போது யாருக்கு தான்சரியான solution இருக்கும் ?.. சிரிக்க சிரிக்க நகர்ந்து செல்கிற கதை
கடைசியில் கடுவா யானையை வெளியே கூட்டி வந்தவுடன் அவரின் “மந்திரத்தை”அறிந்த பின் சட்டென்று தோன்றியது நம் எண்ணங்களின் எல்லையில்லா வீரியம் பற்றி !. தற்செயலாக சில நாட்களுக்கு முன்தான் நான் இப்போது படித்து கொண்டிருக்கும் autobiography of a yogi புத்தகத்தில் யோகானந்தரின் குரு யுக்தேஸ்வர் , தனது குரு எப்படி யுக்தேஸ்வரின் உடலை பலமாக ஆக்கினார் என்று விவரித்த பகுதியை படித்திருந்தேன் “நாளை உன் உடல் நன்றாகி விடும் “என்று அவரது குரு கூறியவுடன் மறுநாள் அவர் நன்றாக ஆனதாகவும், மறுநாள்”பிரச்சினை வரும் என்று கூறியவுடன் மனம் சோர்ந்ததாகவும் கூறியதை படித்தநினைவு வந்தது.
மிருகங்களோ, மனிதர்களோ எண்ணங்களின் ஆளுமைக்கு கட்டுபட்டு தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் அனைவரும் என்று நினைக்கிறேன் ( இந்த கொண்டாட்டத்தில் படிமக்கதைகள் சேர்த்தியா தெரியவில்லை ஆனால் என் வாசிப்பில் ஆனையில்லாசிறுகதை ஒரு சிறந்த நகைசுவை வாசிப்பை அளித்து முடிந்த பிறகு அதன்படிமத்தை மீண்டும் மீண்டும் நினைக்க வைத்தது…
நன்றியும் அன்பும்
வெண்ணி
அன்புள்ள ஜெ
ஆனையில்லா கதையை வாசித்தபோது ஓர் எண்ணம் வந்தது. மந்திரம் என்பது என்ன? நாம் என்னவோ அதை நம்மிடமே சொல்லி உறுதிசெய்வதுதான். கோபாலகிருஷ்ணன் ஒரு குழந்தை. ஆனால் உடம்பு பூதாகரம். அதனிடம் வந்து நீ ஒரு குழந்தையேதான் என்று சொல்கிறார் பூசாரி. அதை நம்பவைத்துவிடுகிறார்
எல்லா மந்திரங்களும் இத்தனை எளிமையானவைதானே? அகம்பிரம்மாஸ்மியும் இப்படி சொல்லி சொல்லி நாமே நம்மை நம்பவைப்பதுதானே? உண்மை எளிமையானது. நாம் அதை சிக்கலாக்கி வைக்கிறோம். மீண்டும் எளிமையாக்குவதே மந்திரம். மூப்பில் மிகச்சரியாகத்தான் செய்கிறார்
ஆர். பார்த்தசாரதி
அங்கி [சிறுகதை]
அன்புள்ள எழுத்தாளருக்கு
மனம் திரும்பி மன்னிப்பு கேட்கும் பாவிகள் அனைவரையும் மீட்க ஏசு எப்போதும் இம்மண்ணில் இருப்பார். அந்த கறை படிந்த அங்கி ஏசுவின் இறுதி நாளில் சிலுவையில் அறைந்தப்பொழுது ரத்தம் கசிந்த கறையின் உருவகம். அந்த பாதிரியாரும் ஏசுவின் ஒரு தோற்றமாய் அம்மண்ணில் அலைகிறார். ஏசுவிற்கு மறுபிறவி இல்லை எனினும் பாதிரியார் பரிசுத்த ஆவியின் ஒரு வடிவமாகவே இருக்கிறார்.
செபாஸ்டியன் கண்ணீரே இந்தக் கதையின் திறப்பு. வெறும் முள் சிறுகதை எனக்கு ஒவ்வாமையை அளித்தது இன்னும் பலமுறை வாசித்தும் என்னால் அந்த தரிசனத்தை அடைய இயலவில்லை.
ஆனால் அங்கி ஏசுவின் எல்லையில்லா கருணையை யுகம்தோறும் காட்டும் மிகச் சிறந்த கதையாக இருக்கும்.
அன்புடன்
தண்டபாணி
அன்புள்ள ஜெ
தனிமரம் தோப்பாகாது. தனிமரம் இடியை வாங்கிக்கொள்ளும். சில தனிமரங்களை அதற்காகவே கடவுள் படைக்கிறார். ஃபாதர் உலகின் வெம்மை அனைத்தையும் வாங்கி எரிந்தவர். ஆகவேதான் மனந்திரும்புங்கள் என்று சொல்லும் உரிமை அவருக்கு கிடைக்கிறது
அந்த அங்கி அவர் தூக்கில் தொங்கியபோது அணிந்திருந்தது. அந்த அங்கிதான் அங்கே கிடக்கிறது. அவன் பாவமன்னிப்பு கேட்டது அந்த அங்கியிடம்தான்.
டி.விஜயகுமார்