வேட்டு [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
வேட்டு கதை மீண்டும் ஒரு வேட்டுதான். தொடர்ச்சியாக ஒரு தீவிரநிலையிலேயே இருக்கிறீர்கள். அதை உணரமுடிகிறது. நோயில் இருந்த நிலையிலும் சிறையில் இருந்த நிலையிலும் பலமுக்கியமான எழுத்தாளர்கள் இப்படி ஒரு உச்சகட்ட மனநிலையில் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எங்களுக்கும் இன்று இது தேவையாக உள்ளது
வேட்டு ஒரு துப்பறியும் கதைக்குண்டான பலவகையான திருப்பங்களுடன் இருந்தது. ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு புதிய கதையை தொடங்குவதுபோல. ஆனால் அடிப்படையில் கதை ஆண்பெண் உறவில் உள்ள நடிப்புகளைப் பற்றியது. முதல்வரியிலேயே யோசேப்பச்சன் அதைச் சொல்லிவிடுகிறார். சொன்னபின்னால்தான் கதையையே ஆரம்பிக்கிறார். அதற்கு உதாரணமாகவே கதை சொல்லப்படுகிறது
ஆணின் ஆண்மை என்பது ஒரு வெத்துவேட்டா? இந்தக்கதைக்கே வெத்துவேட்டு என்று பெயர்வைத்துவிடலாமா? பெண்கள் அவ்வளவு எளிதாக ஆண்களை ஜெயித்துக்கொண்டு செல்கிறார்கள்
செந்தில்குமார்
அன்புள்ள ஜெ,
வேட்டு மீண்டும் ஒரு அருமையான புனைவாடல். வாழ்க்கை புனைவுக்கலை இரண்டும் பின்னிப்பிணைந்த படைப்பு. ஆணும்பெண்ணும் ஆடும் ஆடல்தான் இதில் இருக்கிறது. அவன் அவளை வெல்கிறான். அது ஒரு நடிப்பு. அவள் அதை ஏற்றுக்கொள்கிறாள். அது இன்னொரு நடிப்பு
பார்வதிக்கு வேலாயுதனின் வேட்டு என்பது ஒரு பாவனை என்று தெரியும். அது தெரிந்தபின்புதான் அவள் அவனுடன் பதிவிரதையாக இருக்கிறாள். அவர்க்ளுக்குள் அந்த ஒத்திசைவு உருவாகி வந்தபின்புதான் அத்தனை நெருக்கம் உருவாகிறது. ஒரு லட்சியமனைவி
ஆனால் அதற்குள் உள்ள நடிப்பை ஒருவன் புரிந்துகொண்டு உள்ளே நுழைகிறான். அவன் இன்னும்கொஞ்சம் நல்ல நடிகன். ஆனால் அந்த நடிப்பும் அவளுக்குத்தெரியும். அவனையும் அவள் நம்பவைக்கிறாள். கட்டக்கடைசியில் ஜெயிப்பவள் அவள்தான்.
கடைசியில் ஒரு டம்மி துப்பாக்கிக்காரன். அதுதான் கதையின் ஹைலைட்டே.
அருண்
தவளையும் இளவரசனும் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நீங்கள் ஓர் உச்சநிலையில் இருக்கிறீர்கள். உங்கள் வாசகர்களும் அதே நிலையில் இருப்பதை உணரமுடிகிறது. நீங்கள் எழுதும்நுட்பங்களை எளிமையாக அவர்கள் தொட்டு எடுக்கிறார்கள். உங்கள் ஆலோசனைப்படி முகநூல் சர்ச்சைகளில் இருந்து விலகியிருப்பவர்கள்தான் இந்தக்கதைகளை வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன்
தவளையும் இளவரசனும் கதையை நானும் சின்னவயசிலே வாசித்திருக்கிறேன். இந்தக்கதையில் அது இன்னொரு அர்த்ததை அடைகிறது. இவன் அவளை ஏன் தவளை என்கிறான்? அவளுடைய வேகம், நீரிலேயே கிடக்கும் தன்மை என்று பலதைச் சொல்லலாமா? அவள் இவனை மரக்கட்டை என்கிறாள். இந்தியாவின் கலாச்சாரம் பர்மாவின் கலாச்சாரம் இரண்டையுமே இப்படி உருவகம் செய்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது
அந்த இரண்டு வெவ்வேறு கலாச்சார முனைகளும் தொட்டுக்கொள்ளும் இடம் அழகானது. இலக்கியத்தில் நல்ல காதல்கதைகளில் எல்லாம் உள்ள அம்சம் இந்த வேறுபட்ட கலாச்சாரங்கள் தொட்டுக்கொள்ளுவதுதான். திரும்பத்திரும்ப அதைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் இனிமையாக இருக்கிறது
பிரகாஷ் எம்
அன்புள்ள ஜெ
தவளையும் இளவரசனும் கதையில் அந்த பர்மியப்பெண்ணை அருவருப்பூட்டுபவளாக காட்டியதுமே எனக்கு என்ன இது என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்குப் பொதுவாக இன்னொரு கலாச்சாரம் மீது ஒரு அவெர்ஷனை உருவாக்கும் எழுத்துக்கள் பின்தங்கியவை என்ற எண்ணம் உண்டு. தமிழ் எழுத்தில் அந்த அம்சம் நிறையவே உண்டு. கிராமத்தில் இருப்பாவர்களே நகரத்தை மட்டம்தட்டி எழுதுவார்கள்.
ஆனால் கொஞ்சம் வாசித்ததுமே கதை தலைகீழாக திரும்பிவிட்டது. அவள் பேரழகியாக ஆகிவிட்டாள். நம் தரப்பு அவள் பார்வையில் அருவருப்பூட்டுவதாக ஆகிவிட்டது. நம் பெண்கள் ,நமது உணவு, நம்முடைய பழக்கவழக்கங்கள் எல்லாமே. மோட்டாவாக மொத்தையாக தோன்ற ஆரம்பித்துவிட்டது. இந்த மென்மையான மாற்றம் அல்லது வளர்ச்சிதான் இந்தக்கதையை அழகான கதையாக ஆக்கிவிட்டது
அந்தமாற்றம் கதைசொல்லும் கதாநாயகனின் பார்வையில் உருவாகும் மாற்றம். அதை நம்மிடமும் நிகழ்த்த கதையால் முடிந்திருக்கிறது
எஸ். முரளி