பறம்பிக்குளம் காட்டுக்குள் அமைந்த காட்டுக்குடிலுக்கு முன்னால் மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். தாழ்வான மூங்கில் டீபாயில் ஜனிவாக்கர் பிளாக் லேபில், கொத்தி வறுத்த கோழிக்கறி, நிலக்கடலை,முந்திரிப்பருப்பு.
நான் நிலக்கடலையை அள்ளித்தின்றபோது ஔசேப்பச்சன் “டேய் அந்த கப்பலண்டியை எடுத்து அப்பால் வை, குடிப்பவனுடன் குடிக்காதவன் வந்துசேர்ந்தால் இதுதான் வினையே. தொடுதீனிகளையெல்லாம் காலிசெய்துவிடுவார்கள்” என்றார்.
மெய்யாகவே ஸ்ரீதரன் அவற்றை எடுத்து அப்பால் வைத்தான். அவர்களின் பதற்றத்தைக் காண எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ பதுங்குகுழிகளில் போர்ச்சூழலில் ஒளிந்திருப்பதுபோல சாராயமும் தீனியும் போதிய அளவில் இருக்கிறதா என்று அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நிலைகொள்ளாமலேயே இருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக திரவத்தில் மூழ்கி நெகிழ்ந்த பிறகுதான் பேச்சு. அதுவும் கொஞ்சநேரம்தான். அதன்பிறகு “நான் என்னசொன்னேன்?” என்றோ “நான் என்ன சொன்னேன் என்றால்..” என்றோ திரும்பத் திரும்ப விளக்க தொடங்கிவிடுவார்கள்.
“பஷீர் எங்கே?” என்றார் ஔசேப்பச்சன்.
“வருகிறான். யாரோ விஐபி விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். இவன் அவர்களுக்குச் சோறு பரிமாறி ஊட்டிவிட்டு படுக்கையும் தட்டிப்போட்டுவிட்டு வரவேண்டும் அல்லவா? காட்டிலாகா உயரதிகாரி என்றால் சும்மாவா?” என்றான் ஸ்ரீதரன்.
“கூடவே படுக்கவேண்டுமா?”என்று குமாரன் மாஸ்டர் கேட்டார்.
“அவன் சந்தோஷமாகச் செய்வான்… அந்தக்கூட்டத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்” என்றான் ஸ்ரீதரன்
“சேச்சே, அவன் ஐந்து வேளை தொழுகை செய்கிறவன்… அவனைப்போய்” என்றான் குமாரன் மாஸ்டர்.
“அதுதான் ஐந்துவேளை குளிக்கிறார்களே, சேற்றில் இறங்குவதற்கென்ன?”
“சும்மா இரு, வாயைவைத்துக்கொண்டு. பஷீர் சிலசமயம் மிகவும் கடுமையாக இருப்பான்”
பஷீர் வந்தான். சலிப்புடன் அமர்ந்தபடி “அமைச்சரின் தம்பியும் குடும்பமும்” என்றான். “நல்ல மனிதர்கள்தான். ஆனால் காடு என்றால் என்னவென்றே தெரியாது.. காட்டில் தங்கியதே இல்லை. காட்டில் தங்கலாம் என்று அந்த சின்னப்பெண் சொன்னதனால் வந்திருக்கிறார்கள். வந்ததுமே ஏஸி இல்லையா என்கிறார். இங்கே ஹீட்டர்தான் வேண்டும் என்றேன். அடுத்து செல்ஃபோனில் சிக்னல் இல்லை என்று ஒரு பாட்டு. அதன்பின் டிவியில் எல்லா சானலும் வரவில்லை என்ற அடுத்த பாட்டு. ஏதோ மாத்திரைவேண்டும் என்றார். இங்கே மருந்துக்கடையே இல்லை, வாங்கிவரவேண்டும் என்றால் நாளைக்காலை ஆகும் என்றேன். சோர்ந்துவிட்டார்”
“நீயும் சோர்ந்திருக்கிறாய், உட்கார், ஒன்று ஊற்றிக்கொள்” என்றார் ஔசேப்பச்சன்
பஷீர் “வைன் மட்டும்தான் சாப்பிடுவான். அதை அவன் ஊற்றி எடுத்துக்கொண்டான். “அவர்களுடன் ஒரு பையன் வந்திருக்கிறான். பதினெட்டுவயதாம். மூளைவளர்ச்சி இல்லை. முகமும் கீழேவிழுந்து சப்பியதுபோல இருக்கிறது. அவனை ஏன் கஷ்டப்பட்டு திருவனந்தபுரத்திலிருந்து கூட்டிவந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. புதிய இடங்கள் அவனுக்கும் பழக்கமில்லை. காட்டைப்பார்த்ததும் அவன் மிரண்டுவிட்டான். ஒரே கூச்சல், திமிறல்” என்றான்
“மங்கலாய்டு குழந்தைகள் சட்டென்று மிரண்டுவிடும்” என்றான் ஔசேப்பச்சன்
“இவன் குழந்தை அல்ல. மனம் இரண்டுவயது குழந்தைக்குரியது. ஆனால் உடல் பதினெட்டுவயது இளைஞன். சொல்லப்போனால் அவனைப்பார்த்தால் இருபத்தைந்து வயதுபோல தோன்றும், அவ்வளவு பெரிய உடல். அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வெறிகொண்டு கத்தி கூப்பாடு போட்டான். நான்கு காவலர்கள் சேர்ந்து பிடிக்கவேண்டியிருந்தது. அவன் அம்மா ஏதோ மாத்திரையை விழுங்கச் செய்ததும் படுத்துவிட்டான். இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறான்”
“பாவம் அவர்களுக்கு அவனால் ஒரு டிப்ரஷன் இருக்கலாம். அதனால் வந்திருப்பார்கள்” என்றான் ஸ்ரீதரன்
“அதற்காக அவனையும் கூட்டிக்கொண்டா வருவது?. அவனை வீட்டில் விட்டுவிட்டு வரலாமே? இந்தக்காட்டில் அவன் என்ன பார்க்கப்போகிறான்? வெறும்பயம்தான் இருக்கும்” என்று பஷீர் சொன்னான்.
“அப்படி அல்ல, அவர்களைப் பற்றி நமக்குத் தெரியாது” என்றார் ஔசேப்பச்சன். “இந்தமாதிரி குழந்தைகள் வேறு உலகைச் சேர்ந்தவர்கள். டிவியில் ஒரு பிரைம்கலர் குறைந்துவிட்டால் எல்லாமே மாறிவிடுகிறது இல்லையா? அதுபோல நாம் வாழும் உலகமே அவர்களுக்கு முற்றிலும் வேறு அர்த்தமும் தொடர்பும் கொண்டு தெரியும்… நாமறியாத பலவற்றை அவர்கள் பார்க்கவும் கூடும்”
“நாம் எதையும் ரொமாண்டிசைஸ் செய்யவேண்டியதில்லை” என்றான் பஷீர். ‘கண்தெரியாதவர்கள் காதுகேளாதவர்கள் மனநோயாளிகள் மூளைவளர்ச்சி அற்றவர்கள் ஆகியோரை எல்லாம் பேசிப்பேசி மிகையாக்கிக்கொள்வது இன்றைய ஒரு மனநிலை. அதன் விளைவாக அவர்களுக்கு நாம் தீங்குதான் செய்கிறோம்”
”மகனே பஷீர், நீ சின்னப்பையன். என்னுடைய தாடிமயிரின் வயதுதான் உனக்கு”
“சரி, சரீ” என்றேன்
“நாம் எதைப் பார்க்கிறோம்? எது நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ அதை. நாம் பார்க்கும் கோணம் அரைடிகிரி மாறிவிட்டால் நாம் பார்ப்பதே முற்றாக மாறிவிடுகிறது. அங்கே என்ன இருக்கிறதென்றே நமக்கு தெரியாது. அது வேறு உலகம்… இதோ இந்த பிளாக்லேபிலை ஊற்றிக்கொண்டு நாம் காண்பது வேறு. கொக்கோகோலாவை குடிக்கும் இந்த பாண்டித்தமிழனாக மாறிவிட்ட கேடுகெட்ட மலையாளி பார்ப்பது வேறு” என்றான் ஔசேப்பச்சன்.
“சரி” என்று நான் சொன்னேன்
“நான் பொய் சொல்லவில்லை. மங்களூரில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது ஒரு நிகழ்ச்சி… அதுதான் என் கண்ணை திறந்தது”
“போலீஸ் வேலையில் ஔசேப்பச்சனின் கண்கள் வாரத்திற்கு ஒருமுறை திறக்கும்” என்றான் ஸ்ரீதரன்
“ஆயிரம் கண்ணுடையான்!” என்றார் குமாரன் மாஸ்டர்
“அந்த ஆயிரம் கண்ணும் அதற்கும் முன் ஆயிரம் சாமானாக இருந்தது!”
“வாயைமூடுடா கபோதி… ஹிந்துக்களின் தெய்வத்தை எப்படிடா சத்யகிறிஸ்தியானியும் அதுவும் மார்த்தோமாக்காரனுமாகிய ஔசேப்பச்சனைப் பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தினாய்… டேய் மன்னிப்புக்கேள்… மன்னிப்புகேள்!” குமாரன் மாஸ்டர் கண்ணடித்தார்.
“ஆமாம் மன்னிப்பு! மன்னிப்பு கேட்டாகவேண்டும்” என்றான் ஔசேப்பச்சன்.
”சரிடா ,மன்னிப்பு கேட்டுத்தொலை.. இல்லையென்றால் இந்த இரவெல்லாம் இதுவே சலம்பலாக இருக்கும்”
”மன்னிப்பு”
”அது மரியாதை” என்று ஔசேப்பச்சன் மகிழ்ந்தான் “மார்த்தோமா கிறித்தவர்கள் யார்? உண்மையில் தோமாஸ்லீகா சிலுவையுடன் மட்டாஞ்சேரி கடற்கரைக்கு…”
“கொடுங்கல்லூர் என்று முன்பு சொன்னாய்”
“அது முன்பு… இது இப்போது… தோமாஸ்லீகா சிலுவையுடன் மட்டாஞ்சேரி கடற்கரைக்கு வந்து எட்டு நாயர்குடும்பங்களையும் எட்டு நம்பூதிரி குடும்பங்களையும் வேதம் மாற்றியபோது…”
“உன் தாத்தா குஞ்ஞு பௌலோஸ் அவர் கொடுத்த அரைக்குப்பி ஒயினுக்காக மதம்மாறினார். தெரியும்… இப்போது சொல்லவந்ததைச் சொல்”
“என்ன?”
”என்னமோ சொல்லவந்தானேடா இவன்?”
”ஆம், கண்திறப்பது…”
”யாருடைய கண்?”
”உன்னுடய கண்… சொல்லுடா மொண்ணை விசுவாசி”
”ஆ, நினைவுக்கு வந்துவிட்டது. மங்களூர்! ரொசாரியோ. அஃபோன்ஸோ ரொசாரியோ”
”அல்ஃபோன்ஸோ?”
”இல்லை. அப்படித்தான் முதலில் சொல்வார்கள். அவர் திருத்துவார். அஃபோன்ஸோ”
”யாரது?”
”என் முதல் சீஃப். அவருக்குக் கீழேதான் நான் சர்வீஸில் போய்ச்சேர்ந்தேன். பயிற்சி முடித்து கடிவாளமில்லாத குட்டிக்குதிரைபோல”
“ஸ்டட்!” என்றார் குமாரன் மாஸ்டர்
“இண்டீட்!” என்று மகிழ்ந்ந்த ஔசேப்பச்சன் “ஐபிஎஸ் என்றால் ஒருவகை ஜேம்ஸ்பாண்ட் என்று நினைத்திருந்த காலம். துப்பாக்கியை சுட்டுவிரலில் போட்டு சுழற்றிவிட்டு சடாரென்று திரும்பி சுட்டுவிட்டு புன்னகையுடன் நடந்துபோகிறேன்”
”ஔசேப்பச்சன்! மை நேம் இஸ் ஔசேப்பச்சன்!” என்றான் ஸ்ரீதரன் “படுகேவலமாக ஒலிக்கிறது”
”அது எனக்கும் தெரியும்… நீ வாயைமூடு”
”அவர் உன் கண்ணை எப்படி திறந்தார்? எனி சர்ஜரி?” என்றார் குமாரன் மாஸ்டர்
”அஃபோன்ஸோ ரொசாரியோ பார்க்க சரத்பாபு மாதிரி இருப்பார். வெள்ளைவெளேர் நிறம். கருப்பு முடி. சற்றே பூனைக்கண்கள். சிவந்த உதடுகள். அழகன் என்றால் அப்படி ஒரு அழகன். மிகமென்மையாகப் பேசுவார். நிதானமாகவே இருப்பார். எல்லாரிடமும் அன்பானவர்” என்று ஔசேப்பச்சன் சொல்லத்தொடங்கினார்
மங்களூரில் கிரைம்பிராஞ்ச் அவருடைய ஆட்சியில் இருந்தது. அவருக்கு அன்றாட நிர்வாகத்தில் பெரிய ஆர்வமில்லை. துப்பறிவதில் மகா கில்லாடி. அவரை ஷெர்லாக் என்றுதான் சொல்வார்கள். உண்மையிலேயே அப்படித்தான் சொல்வார்கள். அவருடைய உண்மையான பெயரைச் சொல்ல நாக்கை நாலுமுறை வளைக்கவேண்டும் என்பதனாலாகக்கூட இருக்கலாம்
ஆனால் வன்முறையே இல்லாதவர். அவருடைய துப்பறிதல் என்பது முறையான தகவல்சேகரிப்பையும் மூளையையும் உள்ளுணர்வையும் நம்பிச் செயல்படுவது.நிதானமானது. கொஞ்சம் நாள் எடுத்துக்கொள்வார், ஆனால் விடவே மாட்டார்.கிரைம் செய்தால் என்றைக்காவது ரொசாரியோ பின்னாலேயே வந்துசேர்ந்துவிடுவார் என்று கிரிமினல்களுக்குத் தெரியும். அவர் அன்றைக்கே ஒரு லெஜென்ட்
உனக்கே தெரியும், மங்களூர் முதல் கோழிக்கோடு வரையிலான கடற்கரையில் அன்று ஏராளமான கள்ளக்கடத்தல் மையங்கள் இருந்தன. கள்ளக்கடத்தலை பரம்பரைத் தொழிலாகச் செய்பவர்கள் அங்கே உள்ள முஸ்லீம்குடும்பங்கள் பலர். அவர்கள் ஐநூறாண்டுகளாக கடலோடிகள். தேச எல்லைகள் உருவாவதற்கு முன்னரே அரேபியாவுடனும் ஆப்ரிக்காவுடனும் கடல்தொடர்புகள் கொண்டவர்கள். அரேபியர்கள் அரபிக்கடற்கரைக்கு வரத்தொடங்கியபின் மதம் மாறி உருவான சமூகம் அது. பொதுவாக மாப்பிள்ளைகள் என்பார்கள். மாப்பிள்ளை என்றால் புதிதாக வந்தவன் என்று பொருள். தேசம் உருவானபின் அவர்களின் தொழில் சட்டவிரோதமாக ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் அதை மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களின் பணமும் செல்வாக்கும் அந்தக் கடல்வணிகம் சார்ந்தது
”இந்துக்களும் உண்டு அல்லவா??”
ஆமாம், மாப்பிள்ளைக்குச் சமானமாகவே அவர்களும் கள்ளக்கடத்தலில் தலைமையில் இருந்தனர். அவர்கள் பொதுவாக பந்த் சாதியினர். பழைய துளுநாட்டின் ஆல்வா அரசவம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். துளுநாட்டின் களரிப்பயற்றுக் கலை புகழ்பெற்றது. பந்த்கள் அதைத்தான் செய்துவந்தார்கள். அவர்களின் தலைமையிடம் புத்தூர். ஆனால் கோவா முதல் காசர்கோடுவரை அவர்கள் பரவியிருந்தனர்.
”கிருஷ்ணப்ப ரை பந்த் தானே?” என்றார் குமாரன் மாஸ்டர்
“ஆமாம். மெட்டால கிருஷ்ணப்ப ரை… ரை என்பது அவர்களின் குடும்பப்பெயர். அவர் இன்றைக்கு ஒரு கிரிமினல் ராஜா. அரசியல்வாதிகள் அவரை வீட்டுக்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். அவர் ஹாஜி மஸ்தானுடன் நெருக்கமாக இருந்தவர். அதற்குமுன் சீமேனி அப்துல் ரஹ்மானுடன் இருந்தவர். அதன்பிறகுதான் பந்துக்களும் மாப்பிள்ளைகளும் முட்டிக்கொள்ள தொடங்கினார்கள். இன்றைக்கு கிருஷ்ணப்ப ரை பாரதிய ஜனதாக்கட்சியின் பிரமுகர் ஆனபின் மாப்பிள்ளைகளின் கொடி இறங்கிவிட்டது. அதற்கு முன் எண்பதுகளில் தொண்ணூறுகளிலும் எத்தனை மோதல்கள். எத்தனை கொலைகள்” ஔசேப்பச்சன் தொடர்ந்தார்.
அப்போதுதான் அங்கே ரொசாரியோ குற்றப்புலனாய்வுத்துறை ஸ்பெஷல் டி.ஐ.ஜி ஆக இருந்தார். கள்ளக்கடத்தல்காரர்களின் தொழில்விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. அது என்ஃபோர்ஸ்மெண்டும் கோஸ்டல்கார்ட்ஸும் சேர்ந்து கையாளும் உலகம். கொலை என்றால்கூட செத்தவன் கள்ளக்கடத்தல் உலகைச் சேர்ந்தவன் என்றால் அப்படியே கைமாறிவிடுவோம். பொதுமக்களில் எவரேனும் செத்திருந்தால் மட்டும்தான் எங்கள் வேலை அது
ஆனால் ஓர் இடத்தில் ஆயுதங்கள் புழங்கினால் பொதுவான குற்றங்களை தவிர்க்கவே முடியாது. அங்கே மாதம் ஒரு கொலை நடக்கும். குடும்பக்கொலைகள், தொழில்போட்டிக்கொலைகள், வெறும் வாய்ச்சண்டைகள் கூட கொலையாக ஆகும். பலகொலைகளில் துப்பாக்கிதான் ஆயுதம். துப்பாக்கியால் கொல்லப்பட்டால் புலனாய்வு மிகவும் கடினம் தெரியுமா?
”ஏன்?”
ஆயுதத்தை அப்படியெ இடுப்பில் வைத்து கொண்டுபோய்விடலாம். அரிவாள் கத்தி போல அதில் ரத்தம் இருக்காது. குற்றவாளியின் உடலில் ரத்தம் இருக்காது. குற்றவாளிக்கும் கொல்லப்பட்டவருக்கும் நடுவே சண்டையே நடந்திருக்காது. குற்றவாளியின் உடலின் தோலோ மயிரோ ஆடையின் நூலோ செத்தவரின் கையில் இருக்காது. மிகத்தொலைவில் நின்று சுடலாம். ஆகவே பலசமயம் செத்தவரேகூட குற்றவாளியை பார்த்திருக்க மாட்டார்கள். அங்கே ஒரு சிறு தடையம்கூட இருக்காது. நம்பர் பிளேட் மாற்றப்பட்ட பைக்கிலோ காரிலோ வந்து தொலைவிலிருந்தே சுட்டுவிட்டு போய்விடுவது மங்களூர் ஸ்டைல்.
பிடிக்க ஒரே க்ளூ அந்த குண்டுதான். ஆனால் கள்ளக்கடத்தல் உலகில் எல்லாவகை துப்பாக்கிகளும் புழங்கும். அமெரிக்காவில் புதிதாக வெளிவந்த துப்பாக்கி எட்டே மாதத்தில் மங்களூரில் ஒரு கொலையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரெஸாரியோ துப்பாக்கி நிபுணர். அந்த குண்டைக்கொண்டே நெடுந்தொலைவு சென்றுவிடுவார். அந்தக் குண்டு பாய்ந்த விதத்தையும் உடல்கிடக்கும் விதத்தையும் வைத்தே பெரும்பாலும் சரியாக எந்தத் திசையிலிருந்து குண்டு வந்தது என்று சொல்லிவிடுவார்.
உண்மையில் அது ஒரு உள்ளுணர்வுக்கலை. ஆனால் எனக்கு துப்பறிவது என்றால் என்ன என்று ரொசாரியோ சொல்லித்தந்தார். அது ஏதோ தனிப்பட்டமுறையில் ஒருவர் செய்யும் கணிதசூத்திர விளையாட்டு என்று கதைகளிலும் சினிமாக்களிலும் இருந்து புரிந்துகொண்டிருந்த எனக்கு அது போலீஸ்துறையின் ஒட்டுமொத்தமான ஒரு மாபெரும் செயல்பாடு என்று கற்பித்தார். எந்த அளவுக்கு போலீஸ் என்ற அமைப்பில் நான் பொருந்திப் போகிறேனோ அந்த அளவுக்கு நான் வெற்றிபெறமுடியும். எத்தனை புத்திசாலியாக இருந்தாலும், மேதையாக இருந்தாலும், தனித்து செயல்பட்டால் ஒன்றும் சாதிக்கமுடியாது.
போலீஸ்துறை என்பது ஒரு மாபெரும் வலை. பல்லாயிரம், பல லட்சம் ஊழியர்கள் கொண்டது. எண்ணிக்கைதான் போலீஸின் முதன்மயான ஆற்றல் என்று ரொசாரியோ சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்கள்.அவர்களை சீராக ஒருங்கிணைத்து அந்த வலையை பிசிறில்லாமல் விரித்து விரித்து சூழ்ந்துகொள்வதுதான் முக்கியம். அதை மிகப்பொறுமையாகச் செய்யவேண்டும். ரொசாரியோ அதை ஒரு பெரிய புள்ளிக்கோலம் போடுவதுபோல அமைப்பார்.
அதன்பின் தகவல்களை ஒத்திசைத்துப் பார்ப்பது. அதில் போலீஸ் நூறாண்டுகளாகப் பயிற்சி செய்து வைத்திருக்கும் மெதடாலஜி உள்ளது. அது மிகமிகப் பழையது, ஆனால் மிகமிக வெற்றிகரமானது, ஆகவேதான் அது அத்தனைகாலம் நீடித்திருக்கிறது, அதில் அதுவரை செயல்பட்ட பல்லாயிரம் நிபுணர்களின் மூளைகளின் பங்களிப்பு இருக்கிறது. நம் தன்முனைப்பாலும் மிகையான பாய்ச்சல்களாலும் அந்த முறையின் ஒருமையை அழித்துவிடக்கூடாது. ரொசாரியோ அந்த மெதடாலஜிப்படித்தான் செயல்படுவார். அதில் கூடுமானவரை அதிகம்பேரைச் சேர்த்துக்கொள்வார்.
இவை அனைத்தையும் அடித்தளமாகக்கொண்டுதான் அவருடைய தனித்திறமை செயல்பட்டது. செஸ் மேதைகளுக்குரிய தர்க்கஅறிவு, இலக்கியவாதிகளுக்குரிய கற்பனைத்திறன், ரிஷிகளுக்குரிய உள்ளுணர்வு ஆகியவை கொண்டவர் அவர். சொன்னேனே, அவர் ஒரு ஜீனியஸ். பலவழக்குகளில் அவருடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.அவரை என் குருவாகவே எண்ணினேன், இன்றைக்கும் அவரை அப்படித்தான் மனதில் வைத்திருக்கிறேன்
ஏதோ ஓசைகள் கேட்டன. பஷீர் எழுந்து “யூ கேரி ஆன்” என்று சொல்லிவிட்டு எஞ்சிய ஒயினை நாவில் ஊற்றிவிட்டு சென்றான்.
குமாரன் மாஸ்டர் “நீ சொல்…” என்று ஔசேப்பச்சனை ஊக்கினார். அவன் கோப்பையில் கொஞ்சம் விஸ்கி விட்டு அவரே நீரூற்றினார்.
“இவை அனைத்துக்கும் அப்பால் ரொசாரியோ பல முக்கியமான வழக்குகளில் மிகப்பெரிய தாவல்களைச் செய்து வெற்றிபெற ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. அதைத்தான் சொல்லவந்தேன்” என்றான் ஔசேப்பச்சன் . நிதானமாக பிளாக்லேபில் விஸ்கியை உறிஞ்சிவிட்டு மீண்டும் சொன்னான்
ரொசாரியோவிற்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் ராகேல். அப்போது அவளுக்கு பதினாறு வயது.மூளைவளர்ச்சி இல்லாத குழந்தை.தலை சப்பிப்போய் கண்கள் பிதுங்கி உதடுகள் தொங்கி எச்சில் வழிந்\துகொண்டே இருக்கும்.அவளுடைய சொந்த வேலைகளைக்கூட வேறு எவராவதுதான் செய்யவேண்டும். ரொசாரியோவின் மனைவி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மணவிலக்கு பெற்று போய்விட்டாள். அவளால் அந்தக்குழந்தையை வளர்க்கும் மனஅழுத்தத்தை தாங்க முடியவில்லை. அதன்பின் ரொசாரியோதான் அவளை வளர்த்தார். மங்களூரில் கேப்வியூ அப்பார்ட்மென்ட்டில் அவருடன் அக்குழந்தையும் இருந்தாள். பார்த்துக்கொள்வதற்கு ஒரு கோவாக்கார ஆயாவும் உடனிருந்தாள்.
ரொசாரியோவின் துப்பறியும் பணியில் ராகேலின் பங்களிப்பும் இருந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதெல்லாம் பின்னர் நாங்கள் மிகநெருக்கமாகி அவளுக்கு இரண்டாவது பாதுகாவலனாகவே நான் ஆன பிறகு ,அவர் ஓய்வுபெற்று கோவாவில் குடியேறிய பிறகு அவரே விரிவாகச் சொல்லி நான் தெரிந்துகொண்டவை. ஒரு இதமான மார்ட்டினி அவரை நன்றாகவே பேசவைக்கும்.
1986 ல் மங்களூரில் ஒரு கொலை நடந்தது. நேத்ராவதி ஆற்றில் ஒரு சடலம் ஒதுங்கியது. இருபத்தெட்டு வயதான இளைஞன். சடலம் அழுகியிருந்தது. இருந்தாலும் புகைப்படத்திலிருந்து முகத்தை வரையச் செய்து மிகவிரிவான தேடலை நடத்தினார் ரொசாரியோ. அவன் நீலேஸ்வரத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்ற இளைஞன். வேலைதேடி மங்களூர் வந்தான். வந்த அன்றே கொல்லப்பட்டிருந்தான்.
முதலில் ரயிலில் இருந்து நேரடியாக ஆற்றில் விழுந்திருக்கலாம் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் பின்மண்டையில் இருந்த காயம் கூரிய கருவியால் ஏற்பட்டது என தெரிந்தபின் கொலைதான் என உறுதியாகியது. அவனுக்கு மங்களூரில் எவரையுமே தெரியாது என்றனர் அவனுடைய பெற்றோர். அவன் மங்களூர் செல்வதே அவர்களுக்கு தெரியாது. அவனுடைய நண்பர்களுக்கும் ஒன்றும் தெரியாது.
அவன் ஏன் வந்தான்? யாரைச் சந்தித்தான். எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆகவே அவனை எவர் கொன்றிருக்கக்கூடும் என்றவகையில் ரொசாரியோ ஆராயத்தொடங்கினார். நேத்ராவதியின் கரையிலிருந்த கடற்கரை பிலாந்தறையில் முகமது இப்ராஹீம் ஹாஜியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இன்னொரு பகுதி கொண்டால நாரணப்ப ஷெட்டியின் ஆட்சியில் இருந்தது. நேத்ராவதி ஆற்றின் கரையில் படகுத்துறைகளை அமைத்திருந்தவர்கள் வெலந்தரா சந்திரா ஷெட்டி, பெண்டால ராமப்ப ரை, குஞ்ஞிமுகமது சலீம், அப்துல் நாஸர் என்று நால்வர். இதைத்தவிர மங்களூர் ரயில்நிலையம் பேருந்துநிலையம் நேத்ராவதி ஆற்றுப்பாலம் பகுதிகளில் உலவும் நூறு கிரிமினல்கள், நூற்றியிருபது படகோட்டிகளை பட்டியலிட்டார்.
அவர்கள் ஒவ்வொருவரையாக ஆராய்ந்து வெளியே தள்ளியபின் எஞ்சியவர்கள் மொத்தம் பதினெட்டுபேர். ஆனால் எவரையும் சந்தேகப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்களை இந்தக்கொலையுடன் சம்பந்தப்படுத்தும் எந்த வழியையும் ஊகிக்கக்கூட முடியவில்லை. அவர்களை அவர்கள் அறியாமல் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்டு அவர் காத்திருந்தார்.
இதற்கெல்லாம் அப்பால் அந்தப் பையனுக்கு ஏதேனும் பெண் தொடர்புகள் இருந்திருக்கலாம். ஏதாவது சட்டவிரோத பணிக்காக அவன் வந்திருக்கலாம். எளிய சபலங்களுக்காக எங்காவது சென்று எதிலாவது தலையிட்டிருக்கலாம். வெறும் சில்லறை தகராறாகவேகூட இருக்கலாம். ஆனால் அது ஒரு தேர்ந்த கிரிமினலால் செய்யப்பட்ட கொலை என ரொசாரியோவின் உள்ளுணர்வு சொன்னது
ரொசாரியோவுக்கு ஒரு வழக்கம் உண்டு. தன் அப்பார்ட்மெண்டில் அவர் ஒரு மேஜை வைத்திருந்தார். அதில் நீலநிறவிரிப்பு இருக்கும். அதன்மேல் ஒரு சிவப்பு வட்டம். அதில் கொல்லப்பட்டவரின் படத்தை வைப்பார். இன்னொரு மஞ்சள்வட்டம் காலியாக இருக்கும். சந்தேகப்படுபவர்களின் படங்களை மேஜைமேல் பரப்பி வைப்பார். புகைப்படம் இல்லாவிட்டால் டம்மியாக வரைந்துகொள்வார். ஒவ்வொரு படமாக எடுத்து அந்த மஞ்சள்வட்டத்தில் வைப்பார். அதைப்பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பார். பின்னர் அதை மாற்றி இன்னொன்றை வைப்பார். இப்படி விளையாடிக்கொண்டே இருந்தபோதுதான் அவருக்கு நிறைய புதிய திறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன
மனதில் ஓடும் எதையும் அப்படியே உள்ளேயே போட்டுச் சுழற்றிக்கொண்டிருக்கக்கூடாது என்று ரொசாரியோ சொல்வார். மனம் ஒருங்கிணைவுடன் செயல்படும் தன்மை அற்றது. அது ஒரு மேய்ச்சல்மாடு. அதை ஒழுங்காக ஓடச்செய்ய வேண்டும் என்றால் வெளியே அதை கையாள்வதற்கு ஓர் அமைப்பு இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு வடிவத்தை உருவாக்கி அதை கையாலும் கண்ணாலும் இயக்கவேண்டும். மனம் அதையொட்டி செயல்படத் தொடங்கும். அந்த வடிவுக்கு அது கட்டுப்பட்டிருக்கும். அப்போதுதான் கூர்மையாக ஒருங்கிணைந்து செயல்படும்
அவர் அவ்வாறு படங்களை மாற்றி மாற்றிவைத்துக்கொண்டிருப்பதை ராகேல் பார்த்தாள். அவள் அப்போது அருகே நின்றுகொண்டு சுவரில் கையை ஊன்றி உடலை முன்னும் பின்னும் ஆட்டி ஓர் ஓசையையும் எழுப்பிக்கொண்டிருந்தாள். அதுதான் அவளுடைய வழக்கமான ஆட்டம். அவர் செய்துகொண்டிருப்பதை நோக்கிய அவள் அவர் அருகே வந்து ஒரு படத்தை எடுத்து மஞ்சள் கட்டத்தில் வைத்தாள். அது சந்திரா ஷெட்டியுடையது. “இல்லை அம்மா. அப்பால் போ” என்று ரொசாரியோ சொன்னார். அவள் பிடிவாதமாக மீண்டும் எடுத்து வைத்தாள். ‘சரி” என்று அதை ரொசாரியோ ஏற்றுக்கொண்டார்.
ஆனால் அதன்பின் ராகேல் செய்தது விசித்திரமாக இருந்தது. அவள் சுகுவின் படத்தை தொட்டு விரலில் முத்தமிட்டாள். சாப்பாடு துணி பொம்மை உட்பட தனக்கு பிடித்த எல்லாவற்றையும் அப்படி தொட்டு முத்தமிடுவது அவள் வழக்கம். ரொசாரியோவை அவள் நாளுக்கு நூறுமுறையாவது அப்படி முத்தமிடுவாள். பின்னர் சந்திரா ஷெட்டியின் படத்தை சுட்டுவிரலால் குத்தினாள்.
ரொசாரியோவுக்கு ஏதோ குறுகுறுத்தது. அன்று அவர் தூங்கவில்லை. எதையோ எண்ணிக்கொண்டே படுத்திருந்தார். மறுநாள் மீண்டும் ராகேல் அதையே செய்தாள். அதே உணர்வுகளுடன். அப்போது அவருக்கு ஒர் எண்ணம் ஏற்பட்டது. அவளுக்கு எவ்வகையிலாவது தெரிகிறதா? மூளை என்பது தேசியநெடுஞ்சாலை. பெரியது, ஆனால் பழகியது. வேறு ஊடுவழிகள் அவர்களைப் போன்றவர்களுக்கு உண்டா?
அவர் மறுநாள் அலுவலகம் சென்றதும் அத்தனை போலீஸ் உளவாளிகளையும் அழைத்து சந்திரா ஷெட்டியை மட்டும் விரிவாக உளவறியச் சொன்னார். அவனுக்கும் நீலேஸ்வரத்துக்கும் ஏதேனும் உறவிருக்கிறதா? சுகுமாரன் வந்து சந்திரா ஷெட்டியைப் பார்த்தானா? பதினேழுநாட்கள் சந்திரா ஷெட்டியை இருநூறுபேர் உளவறிந்தனர். அவருடைய எல்லா ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டன. எல்லா அடியாட்களும் பின்தொடரப்பட்டன. நான் சொன்னேனே, போலீஸின் மாபெரும் எண்ணிக்கைதான் அதன் பலம்
முதல் துப்பு கிடைத்தது. சந்திரா ஷெட்டி அப்போது மங்களூர் தொலைபேசிநிலைய ஊழியரின் மனைவி கேசினியுடன் கள்ளஉறவிலிருந்தான். அவன் இரவுப்பணிக்குப் போனபின் மிகமிக ரகசியமாக அவளை சந்தித்தான். சந்திராஷெட்டியின் பண்ணைவீட்டு வாட்ச்மேன் அவன் எங்கோ இரவில் பைக்கில் செல்வதைச் உளவாளியிடம் சொன்னான். அதைத்தொடர்ந்து சென்று அந்த ரகசியத்தைக் கண்டுபிடித்தது போலீஸ். அவளுக்கு அவன் அளித்த பணத்தில் அவள் தளிப்பறம்பாவில் நிலங்கள் வாங்கினாள். தளிப்பறம்பாவில் அந்நிலங்களை வாங்கிக்கொடுத்த மாதவன் நம்பியாரின் மனைவி லீலா நீலேஸ்வரத்தைச் சேர்ந்தவர். அவருடைய நீலெஸ்வரம் வீட்டின் பக்கத்துவீடுதான் சுகுமாரனின் வீடு.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லீலாவுடன் நீலேஸ்வரம் வந்தபோது கேசினிக்கு சுகுமாரனுடன் ஓரு சுருக்கமான காமஉறவு நிகழ்ந்தது. சுகுமாரனைவிட அவள் இரண்டு ஆண்டுகள் மூத்தவள். அவளுக்கு அப்படி பல உறவுகள். அவள் மறந்துவிட்டாள், அவன் மறக்கவில்லை. சுகுமாரன் மங்களூர் வந்தது கேசினியைச் சந்திக்கத்தான். அவளை அவன் மிரட்டினான். அவள் சொன்னதனால் சந்திரா ஷெட்டியின் பணத்தை வாங்கிக்கொண்ட தொழில்முறை கொலைகாரனான கோப்ரா கருணன் சுகுமாரனை வெட்டிக்கொன்றான். பதினைந்து நாட்களில் ஆதாரங்கள் கண்டடையப்பட்டன, வழக்கம்போல நீதிமன்றத்துக்குத் தேவையான பிற ஆதாரங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டன. சந்திரா ஷெட்டியையும் கேசினியையும் கோப்ரா கருணனையும் கைதுசெய்ய முடிந்தது. அது அன்று மிகப்பெரிய செய்தியாக இருந்தது.ஆனால் சந்திரா ஷெட்டி வழக்கம்போல சாட்சியங்களை வளைத்து நீதிமன்றங்களைக் கவர்ந்து, எட்டாண்டுகள் நீதிமன்றத்தில் இழுத்தடித்து எல்லாரும் அதை மறந்தபின் வழக்கில் இருந்து வெளியே வந்தான். அது வேறுகதை.
அது முழுக்க முழுக்க ராகேலின் நுண்ணுணர்வால் கண்டுபிடிக்கப்பட்ட குற்றம். அது ஒரு தற்செயலா என்ற ஐயம் ரொசாரியோவுக்கு இருந்தது. ஆகவே அடுத்த வழக்கை அவர் வேண்டுமென்றே ராகேல் பார்க்க மேஜைமேல் பரப்பி வைத்தார். அதைப்பார்த்து அருகே வந்த ராகேல் ஒரு படத்தை எடுத்து மஞ்சள்கட்டத்தில் வைத்தாள். அவன்தான் குற்றவாளி. அதன்பின் எல்லா வழக்குகளிலும் அவர் ராகேலின் ஏழாம் அறிவை நாடினார். மிகச்சில வழக்குகள் தவிர பெரும்பாலானவற்றில் ராகேல் மிகச்சரியாக குற்றவாளியை தொட்டாள்
சற்றுநேரம் அமைதி நிலவியது. பஷீர் திரும்பி வந்தான். “யானை இறங்கியிருக்கிறது…” என்றான். ”அதனால் எல்லாரையும் எச்சரித்துவிட்டு வந்தேன்”
“யானை உள்ளே வருமா?” என்றேன்
“வராது… இங்கே கனமான கம்பிவேலி போட்டிருக்கிறோம்…ஆனால் சுற்றுலாப்பயணிகள் விசித்திரமானவர்கள். கேட்டை திறந்து வெளியேபோய் யானையை பார்க்கமுயல்வார்கள். ஃப்ளாஷ் போட்டு போட்டோ எடுப்பார்கள்”
பஷீர் அமர்ந்துகொண்டு “போனமுறை ஒருவன் காட்டுயானைக் கூட்டத்திற்கு நடுவே போய்விட்டான். ஒருவழியாக காப்பாற்றினோம். கேட்டால் ஜுராஸிக் பார்க் படத்தில் டைனோசர்களுக்கு நடுவே ஹிரோயின் அப்படிச் செல்கிறாளே என்றான்”.
”மூளைவளர்ச்சி அடைந்தவர்கள் என்று நாம் நம்மைச் சொல்லிக்கொள்ளத்தான் வேண்டுமா?”என்றார் குமாரன் மாஸ்டர்
ஔசேப்பச்சனிடம் “அந்த திறன் மூளைவளர்ச்சி இல்லாதவர்களுக்கு உண்டா?”என்றான் ஸ்ரீதரன்
“அப்படி எந்தத்திறனும் அவர்களிடம் இருக்கிறது என்று சொல்லிவிட முடிவதில்லை. அது அவர்களிடம் இயல்பாக மிகச்சில தருணங்களில் நிகழ்கிறது. நிகழாமலும் போகலாம். அதை எவ்வகையிலும் வகுத்துக்கொள்ளமுடியாது. சிலர் இசையை அடையாளம் காண்கிறார்கள். எனக்குத்தெரிந்த ஒருகுழந்தை ஐம்பது ராகங்கள் வரை மிகச்சரியாகச் சொல்வாள். பொதுவாக அவர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கை உணர்வு கொஞ்சம் உண்டு என்று சொல்லாலாம்’ என்றான் ஔசேப்பச்சன்
“மூன்றாவது கண்ணின் இயல்பு என்னவென்றால் அது எவருக்கும் எங்குவேண்டுமென்றாலும் திறக்கும்” என்றார் குமாரன் மாஸ்டர்
“அவளால் எப்படி கண்டுபிடிக்கமுடிந்தது?” என்று நான் கேட்டேன்
“அவள் அதைக் கண்டுபிடிப்பது ஆழமான அன்பினால்தான். அதை வெறுமே அன்பு என்று சொல்லமுடியுமா? அதைச்சொல்ல ஆங்கிலத்தில் நல்ல சொல் உள்ளது, கம்பாஷன். நாம் இன்னொருவராக மாறி அவர்மேல் கவிந்துவிடுவது அது. அவராக ஆகி அவரைப் புரிந்துகொள்வது. அவருடைய உணர்வுகளை நாமும் அசைவது. அதுதான் ராகேலின் ஆற்றல். அவள் அனைவர் மேலும், அனைத்தின்மேலும் பேரன்பு மிக்கவள். வன்முறையே இல்லாத பெண். அவள் கண்ணெதிரே நாம் ஒரு சோபாவைக்கூட தட்டமுடியாது. தூசி தட்டுவதைக் கண்டாலொ சப்பாத்திக்கு மாவுபிசைவதைக் கண்டாலோ அழுது மயங்கி விழுந்து விடுவாள். வலிப்புகூட வந்துவிடும். ”என்றான் ஔசேப்பச்சன்
“அற்புதம்தான்” என்றேன்
“இந்தப்பூமியின் மிகப்பெரிய அற்புதம் அன்புதான்… ஐ மீன் கம்பாஷன். இங்கே உள்ள பரிணாமவளர்ச்சியில் அப்படி ஓர் உணர்வு உருவாவதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்றார் குமாரன் மாஸ்டர். “அதனால்தான் தெய்வம் உண்டு என்னும் நம்பிக்கை நிலவுகிறது”
“நான் சொல்லவந்த கதையே இனிமேல்தான்” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “எனக்கும் ரொசாரியோவுக்கும் ஒரு மோதல் வந்தது. எப்படியும் குருவும் சீடனும் மோதிக்கொள்ளும் ஓர் இடம் வரும். குரு சீடனையும் சீடன் குருவையும் அடையாளம்காணும் இடம் அது. அப்படி ஒன்று வந்தது”
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்று ஒன்று கோடையில், சரியாகச் சொல்லப்போனால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு ஏழுநாட்கள் கழித்து மங்களூரில் ஒரு பண்ணைவீட்டில் ஒரு கொலை நடந்தது. கொல்லப்பட்டவன் ஐம்பது வயதான ஒரு மும்பைக்காரன். பெயர் ஜான் ஸ்டூவர்ட் பிண்டோ. ஆங்கிலோ இந்தியன். அவன் மும்பையில் இன்–டெகார்ஸ் என்ற பேரில் ஒரு இண்டீரியர் டெகரேஷன் நிறுவனத்தை பன்னிரண்டு ஆண்டுகளாகத் நடத்திவந்தான். ஓய்வுக்காக மங்களூர் வந்தான். அங்கே மும்பையைச் சேர்ந்த அருண் கஃபூர் என்ற ஏற்றுமதியாளருக்குச் சொந்தமான பண்ணைவீட்டில் தங்கினான்.
அந்த வீடு பழைய முஸ்லீம் தரவாடு. வெட்டுக்கல் சுவர்கள் கொண்ட ஓட்டுக்கட்டிடம். நேத்ராவதியின் கரையில் எட்டு ஏக்கர் தென்னந்தோப்புக்குள் இருந்தது. மிகத்தனியான வீடு. அதற்கென்றே ஒரு சிறிய படகுத்துறை இருந்தது. மேலிருந்து மண்சாலை வழியாகவும் அங்கே செல்லலாம். காவலுக்கும் வேலைக்கும் அங்கே ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். செல்லன் நாயர் எழுபது வயதானவர்.
அங்கே ஜான் பலநாட்களாகவே தின்று குடித்து பெண்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். எல்லாருமே துறைமுகப்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட விபச்சாரிகள். வாட்ச்மேன் செல்லன் நாயரின் தனித்திறன் அதுதான்.அவர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்தான். பகல் முழுக்க தூக்கம் இரவெல்லாம் ஆட்டம். அவனைத்தேடி வேறு எவரும் வரவில்லை. அவ்வப்போது ஓரிரு ஃபோன்கள் வருவதுடன் சரி. கஃபூர் அங்கே வருவதே இல்லை.
ஒருநாள் காலையில் வாட்ச்மேன் செல்லன் நாயர் வந்து பார்த்தபோது ஜான் கொல்லப்பட்டிருந்தான். பெரெட்டா எம்.எம்-9 துப்பாக்கியால் சுட்டிருந்தார்கள். குண்டு இதயத்தை துளைத்திருந்தது. அவன் உடல் திண்ணையில் மல்லாந்து கிடந்தது. செல்லன் நாயர் அலறி அடித்து தகவல் சொல்ல போலீஸ் சென்றது. முதற்கட்ட குற்றப்பதிவும் விசாரணையும் நடந்தபின்னர்தான் நாங்கள் நுழைந்தோம்.
ரொசாரியோ அவருக்கே உரியமுறையில் துல்லியமாக விசாரித்தார். ஜான் தனியாள். மனைவியை விவாகரத்து செய்து பதினெட்டு ஆண்டுகளாகின்றன. அதன்பின் பிளேபாய் வாழ்க்கைதான். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அலுவலகம் வீடுகளை அவன் டிசைன் செய்து கொடுத்தான். பணம் நிறைய இருந்தது. மும்பை வொர்லியில் பெரிய அப்பார்ட்மெண்டில் வசதியாக வாழ்ந்தான்.
பிளேபாய்கள் கொல்லப்பட்டால் விசாரிப்பது மிகமிகக் கடினம். அவர்களை யார் வேண்டுமென்றாலும் கொல்லலாம். பெண்களின் கணவர்கள், பொறாமைகொண்ட ஆண்கள், மிரட்டப்படும் பெண்கள்.பெண்தரகர்கள், பெண்களை வைத்து வாழும் கிரிமினல்கள். ஏன், எளிய விபச்சாரிகளேகூட கைநீட்டலாம். ஆகவே வலையை மிகவிரிவாக விரிக்கவேண்டும்.
ஆனால் அதை ரொசாரியோ மறுத்தார். மும்பைக்குச் சென்று அவருடைய வாழ்க்கையை முழுமையாக ஆராய்வது வீண்வேலை என்றார். ஜானுக்கு மும்பை மட்டுமல்ல துபாய், சிங்கப்பூர் என மேலும் விரிந்த வட்டம் உண்டு. குற்றம் நடந்தது மங்களூரில். ஆகவே மங்களூரை மட்டும் மையமாகக்கொண்டு ஒரு துளிகூட விடாமல் ஆராய்வோம் என்றார். எனக்கும் அது சரி என்றுபட்டது
நான்கு மாதம் விசாரணை நடந்தது. ஒரு சிறு துப்புகூட இல்லை. கொலைசெய்தவன் படகில் கடல்வழியாக அங்கே வந்திருக்கிறான். அந்தப்படகும் கரையில் நிறுத்தப்பட்டிருந்த எளிமையான துடுப்புப் படகு. திரும்ப அதேபோல கொண்டுசென்று நிறுத்தியிருந்தால் கண்டுபிடிக்கவே முடியாது. பொதுவாக நேத்ராவதி ஆற்றின்மேல் இரவில் படகுகள் இருக்காது. அதிலும் அன்று கொஞ்சம் மழைவேறு
அந்தப்பகுதியில் எவரும் எதையும் பார்க்கவில்லை. அவன் அங்கே எவரிடமும் நேரடித் தொடர்பில் இல்லை. வாட்ச்மேன் செல்லன் நாயர் இரவு ஒன்பது மணிக்கே சென்றுவிட்டார். அன்று அன்று காலை முதலே ஜானுக்கு கொஞ்சம் காய்ச்சலும் தலைவலியும் இருந்தமையால் பெண்கள் எவரும் இரவில் வரவில்லை. அவன் தனிமையில்தான் இருந்தான். இரண்டு லார்ஜ் போட்டு படுத்தபின் அவனேதான் வாட்ச்மேனை போகும்படிச் சொன்னான்.
அவனுடைய உடலில் இருந்த குண்டுதான் அது பெரட்டா எம்எம்- 9 என்று காட்டியது. அது ஜானுடைய துப்பாக்கியாகவே இருக்க வாய்ப்பு. அதை அவன் ரகசியமாக வைத்திருந்திருக்கலாம். அவனைப்போன்ற ஒருவர் துப்பாக்கி இல்லாமல் வர வாய்ப்பில்லை. ஆனால் அது கிடைக்கவில்லை. கொலைநடந்த இடத்தில் எந்த தடையமும் இல்லை. அவனுடன் போனில் பேசியவர்கள் அனைவரிடம் விசாரித்தோம். எல்லாமே தொழில்முறை அழைப்புக்கள்தான். சில வழக்குகளில் சுவரில் சென்று முட்டி நிற்போமே, அதுதான் நிகழ்ந்தது.
பொறுமை இழக்கவேண்டாம் என்றார் ரொசாரியோ. காத்திருப்பதும் படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டே இருப்பதும்தான் அவசியம். அவர் ஒரு பட்டியல் போட்டு, வரைபடம் அமைத்து ஒவ்வொருநாளும் அதில் செய்திகளைச் சேர்த்துக்கொண்டே இருந்தார். நான் சலிப்புற்றேன். வழக்கமான தகவல்சேர்ப்புகள் வெறும் குமாஸ்தா பணிகளாகத் தெரிந்தன. ஆகவே கொஞ்ச்நாள் அவ்வழக்கிலிருந்து விலகியிருந்தேன். பின் மீண்டும் அதற்குள் வந்து சம்பந்தமில்லாத செய்திகளைச் சேகரித்தேன்
அப்போது ஒரு சின்ன தகவல்கிடைத்தது. ஜான் கோவாவில் ஓராண்டுக்காலம் இருந்திருக்கிறான். அங்குதான் அவன் தொழிலையே தொடங்கியிருக்கிறான். அவனுடைய புரஃபைல் எதிலும் அச்செய்தியை அவன் சொல்லியிருக்கவில்லை.அவனுடைய மனைவி எலிசபெத்தின் வாக்குமூலத்தில் அவள் அவனை கடைசியாகப் கேள்விப்பட்டபோது அவன் கோவாவில் இருந்தான் என்று யாரோ சொன்னதாகச் சொல்லியிருந்தாள்.
அந்த வாக்குமூலம் முதலில் அவள் மும்பை போலீஸிடம் அளித்தது. நாங்கள் நேரில் சென்று விரிவாக விசாரித்தபோது அவள் அதைச் சொல்லவில்லை. அதற்குள் அவள் வக்கீல்களை பார்த்து எதை எந்த அளவுக்குச் சொல்லவேண்டும் என்று தெரிந்துகொண்டிருந்தாள். நான் அந்த மும்பை வாக்குமூலத்தின் நகலை வரவழைத்தேன். அது மிகச்சம்பிரதாயமான வாக்குமூலம், ஒரு கான்ஸ்டபிளால் எடுக்கப்பட்டது. எந்த புதிய செய்தியும் இல்லை, ஆனால் இந்த செய்தி அதிலிருந்தது
அந்தச் செய்தியை நான் ரொசாரியோயிடம் சொன்னேன். அவர் “அதெல்லாம் தேவையில்லை. நாம் இங்கேயே நெருங்கிக்கொண்டிருக்கிறோம்”என்றார்.
”இல்லை, கோவா…”என்று நான் தொடங்க அவர் இடைமறித்தார். “அது பழைய கதை. துப்பறிதலில் இது ஒரு நிலை. நாம் உண்மையை நெருங்கும்போது சிலசமயம் நம் மனமே நம்மை சம்பந்தமில்லாத திசைக்கு திருப்பிவிடும்” என்றார்
அது உண்மைதான். ஆனால் என்னை தொந்தரவு செய்தது ஒருகணம், ஒருகணத்தில் ஆயிரத்தில் ஒரு துளியில், அவர் விழிகளில் தோன்றி மறைந்த ஒன்று. அது என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அன்றும் மறுநாளும் என் மனம் உழற்றிக்கொண்டே இருந்தது. மூன்றாம்நாள் ஒரு கனவுகண்டேன். அதில் ரொசாரியோவும் ஜானும் கோவாவில் ஒரு பாரில் அமர்ந்திருக்க நான் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்
விழித்துக்கொண்டபோது எனக்கு எல்லாம் தெளிவாகியது, ரொசாரியோவுக்கு ஜான் கோவாவில் இருந்த செய்தி முன்னரே தெரியும். அப்படியென்றால் ஏன் அவர் அதை ஆராயவில்லை? ஏன் தவிர்க்கிறார்?
அப்படியெல்லாம் யோசிக்கக்கூடாதுதான். ஆனால் அப்படியெல்லாம் யோசிப்பதுதான் போலீஸ்காரன் மூளை. நான் ரொசாரியோவுக்கு தெரியாமல் கோவா போலீஸில் என் பேட்ச்மேட் ஸ்ரீகண்டன் நாயரை தொடர்பு கொண்டேன். அவன் எனக்காக விசாரித்து செய்திகளை அனுப்பினான். ஜான் கோவாவில் தான் இண்டீரியர் டெகரேஷனை ஆரம்பித்தான். பல வேலைகளை எடுத்துச் செய்தான். அங்கே தொழில் மேலேறி வந்தபோது அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.
ஏன்? கோவா சிறிய அளவில் செய்யத்தக்க இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலுக்கு மிக உகந்த இடம். உள்ளூர்ப் போட்டி மட்டும்தான், ஆனால் வாய்ப்புகள் நிறைய. காரணம் அன்று கோவா சுற்றுலாத்துறையில் பாய்ச்சலை நடத்திக்கொண்டிருந்தது. எல்லாருமே பணம் பார்த்த காலம். ஏன் ஜான் மட்டும் கோவாவை விட்டு கிளம்பிச் சென்றான்?
அதை அறிய நான் ஒருமுறை நேரடியாகவே கோவா சென்றேன். மூன்றுநாட்கள் விசாரித்தேன். அப்போது ரொசாரியோ ஒரு கான்ஃபரன்ஸுக்காக டெல்லி சென்றிருந்தார். ஆகவே அவருக்கு எதுவும் தெரியாது. போலீஸ் உதவியுடன் ஜான்யின் பழைய நண்பர்கள், அவனுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் அனைவரையும் சந்தித்தேன். அங்கே எனக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைத்தது.
ஜானின் அலுவலகத்தில் உதவியாளனாகவும் புகைப்படக்காரனாகவும் வேலைபார்த்த மைக்கேல் டி-சூசா என்பவன் அங்கே இண்டீரியர் டெகரேஷன் தொழில் செய்துகொண்டிருந்தான். அவனிடம் பேசினேன். ஜான் அங்கே தொழில்செய்தபோது செய்த அனைத்தையும் அவனிடம் கேட்டு அறிந்தேன். சிறியவை, பெரியவை, நினைவில் நின்ற அனைத்தும். அவனைப் பேசவிட்டு அனைத்தையும் பதிவுசெய்தேன். மதுக்கூடங்களில் அவன் இன்னும் நிறையவே பேசினான். அவனுடைய சொந்த வெற்றிகளை பற்றிப் பேசவிட்டால் அவனுக்கு நாக்குமேல் கட்டுப்பாடே இருக்கவில்லை.
அவனுடைய தங்குதடையற்ற பேச்சில் கோவாவின் இண்டீரியர் டெகரேஷன் தொழிலும், அதன் அடித்தளமான ஓட்டல் –சுற்றுலாத் தொழிலும், அதற்கும் ஆதாரமாக திகழ்ந்த உயர்மட்ட விபச்சாரத் தொழிலும் விரிந்தபடியே வந்தன. பல பெரியமனிதர்கள் வந்து சென்றனர். பல சிறு குற்றங்கள். தகவல்பெருக்கில் எனக்குத் தேவையானவற்றுக்காக விழிப்புடன் இருக்க நான் பயின்றிருந்தேன்
அவன் பேச்சின் நடுவே ஒன்று தட்டுபட்டது. ரொசாரியோவுக்கும் ஜானுக்குமான உறவு. அப்போது ரொசாரியோ அங்கே ஒரு கத்தோலிக்கக் கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் சிறிய தொகுப்பூதியத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் அங்கே ஒரு வீட்டை வாங்கினார். அதை பழைய பழைய கோவா- போர்ச்சுக்கல் பாணியில் அலங்கரிக்க விரும்பினார். அந்த வேலையைச் செய்தவன் ஜான்
அப்போது ரொசாரியோவுக்கு மணமாகி ஒருவயதான குழந்தையும் இருந்தது. அதுதான் ராகேல். குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடு தெரியவந்து அவர்கள் மனமுடைந்து இருந்த காலம் அது. ரொசாரியோ ஒரு பழைய வீட்டை வாங்கிக்கொண்டு கோவாவின் கடலோரத்தில் மக்கள்தொடர்பு இல்லாமல் வாழ திட்டமிட்டிருந்தார். அதை மறு அமைப்பு செய்யத்தான் அவர் ஜானை தொடர்புகொண்டார்.
ரொசாரியோவின் மனைவி நடாலைன் பெரேரா மும்பையில் கல்லூரி முடித்தபின் கோவாவின் விடுதிகளுக்கு விளம்பர மாடலாக பணியாற்றியிருந்தாள். ஒரு நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பெண்ணாக வேலைபார்த்தாள். திருமணத்திற்குப்பின் வேலையை விட்டுவிட்டாள்.
அந்த வீட்டு வடிவமைப்பு வேலை நடந்தபோது நடாலைனை ஜான் வீழ்த்திவிட்டான். அவன் பெண்களை கவரும் கலை அறிந்தவன். அவர்களுடன் இனிமையாகப் பேசுவான். அவர்களை பேசவிட்டு அவர்களே தங்களைப் பற்றிய அனைத்தையும் அவனிடம் சொல்லவைப்பான். பெண்கள் தங்களைப்பற்றி இருநிலைகளில் பேசிக்கொண்டே இருக்க விரும்புவார்கள். தற்பெருமை, தன்னிரக்கம். இரண்டுமே அவர்களிடம் மாறிமாறி வரும். பெரிய பிளேபாய்கள் இரண்டையும் மாறிமாறி ஊக்குவித்தும் உருவாக்கியும் வளர்ப்பார்கள். அவற்றைக்கொண்டே அவர்களை மடக்குவார்கள்.
நடாலைன் ஏற்கனவே அந்த வாழ்க்கையில் சோர்வும் சலிப்பும் கொண்டிருந்தாள். மகளை அவள் வெறுத்தாள். தப்பி ஓட விரும்பினாள். மாடலிங் துறையில் மும்பையில் சாதிக்கவேண்டும், ஆடம்பரமாக வாழவேண்டும் என்று கனவுகண்டாள். அவளுக்கும் ஜானுக்கும் உறவு உருவாகியது. ஜான் அவளை மும்பைக்கு கொண்டுசென்றான். அவளை மும்பை மாடலிங் உலகிற்கு அறிமுகம் செய்தான்.
அவள் அங்கிருந்தபடி ரொசாரியோவிடம் மணமுறிவு கேட்டாள். ரொசாரியோ திகைத்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவருக்கு அன்று எந்த பின்னணியும் இல்லை. பணமும் இல்லை. அவளுக்கு அவர் மணமுறிவு அளித்தார். அதன் பின்புதான் சிவில்சர்வீஸ் தேர்வுஎழுதினார். வென்று அதிகாரியானார்.மகளுடன் முதலில் ஹாஸனிலும் பின்பு மங்களூரிலும் வேலைபார்த்தார். கடைசியாக மங்களூர் வந்தார்.
ரொசாரியோவின் மணமுறிவு ஆவணங்களில் எங்குமே ஜானின் பெயர் இல்லை. ஏனென்றால் நடாலைன் ஜானுடன் சிலகாலம் சேர்ந்து ஒரே அப்பாட்மெண்டில் இருந்தாளே ஒழிய வேறெந்த உறவும் இல்லை. நடாலைன் எங்கிருக்கிறாள் என்று விசாரித்தேன். அவள் துபாயில் இருப்பதையும் இந்தியா வருவதே அரிது என்பதையும் அறிந்துகொண்டேன். நினைத்ததைப்போல அவளுக்கு மாடலிங் உலகம் அமையவில்லை. அவள் ஒரு பணக்காரருடன் துபாய்க்குச் சென்றுவிட்டாள்.
நான் அதன்பின் ரொசாரியோ அந்த கொலை நடந்த இரவு எங்கே சென்றார் என்று விசாரிக்கத் தொடங்கினேன். அவர் மீண்டும் ஒரு கான்ஃபரன்சுக்காக மும்பை சென்றார். ராஜீவ்காந்தி கொலைக்க்குப்பின் துறைமுகங்கள் சார்ந்த காவல்முறைகள் முழுமையாகவே மாற்றியமைக்கப்பட்ட காலம். நான் ரொசாரியோன் அப்பார்ட்மெண்டுக்குச் சென்றேன். ராகேலிடமும் அவள் கவர்னஸ் மிஸிஸ் மோனிக்கா ஃபெர்னாண்டொவிடமும் இயல்பாகப் பேசினேன்.
அப்போதுதான் ரொசாரியோ சிந்திப்பதற்குப் பயன்படுத்தும் அந்த மேஜையைப்பற்றியும் அதற்கு ராகேல் உதவுவதைப்பற்றியும் மிஸிஸ் மோனிக்கா ஃபெர்னாண்டொ சொல்லி அறிந்தேன். ஆச்சரியமாக இருந்தது. அதை ஒருவகை மூடநம்பிக்கையாகவே நான் எண்ணினேன். ரொசாரியோவுக்குள் இருந்து அவரே அறியாத ஒரு புரிதல் கனவுபோல வெளியே வருவதற்கு அவருடைய மகளின் அச்செயல் உதவுகிறது என்று புரிந்துகொண்டேன்
ரொசாரியோ கொலைநடந்த அன்று மதியம் அலுவலகத்திலிருந்து அப்பாட்மெண்டுக்கு வந்தார் என்று மோனிக்கா சொன்னார். அன்று அவர் ஏனோ அவர் நிலைகொள்ளாமலிருந்தார். ராகேல் கூடத்தில் சிறுநீர் கழித்திருந்தாள். அதற்காக அவர் மோனிக்கா ஃபெர்னாண்டொவிடம் கோபித்துக்கொண்டு கூச்சலிட்டார். அதன்பின் தன் பைக்கில் வெளியே சென்றார். சீருடை ஏதுமில்லாமல். அவர் எங்கே செல்கிறார் என்பதை அவளிடம் சொல்லும் வழக்கம் இல்லை
நள்ளிரவில் அவர் திரும்பி வந்தபோது பாண்ட் நனைந்திருந்தது. மழைக்கோட்டு போட்டுக்கொண்டு சென்றிருந்திருக்கிறார். வந்ததும் குளித்தார். பின்பு நிறைய குடித்தார். சாப்பிடக்கூட முடியாதபடி போதையில் இருந்தார். அப்படியே படுத்துக்கொண்டார். மறுநாள் அந்த உடைகளை துவைக்கும்படிச் சொன்னார். அன்று காலை ராகேலை அருகே அழைத்து நெடுநேரம் சின்னக்குழந்தையை கொஞ்சுவதுபோல கொஞ்சிக்கொண்டிருந்தார். அவர் அவளை அப்படி கொஞ்சுவது வழக்கம்தான் என்றாலும் அன்று நீண்டநேரம் கொஞ்சினார்.
நான் எல்லாவற்றையும் உறுதி செய்துகொண்டேன். ரொசாரியோ அடிக்கடிச் சொல்லும் ஒன்று உண்டு. ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை நாமே முழுமையாக கற்பனை செய்துகொள்ள வேண்டும். முழுத்தகவல்களுடன், காட்சி காட்சியாக. அது நமக்கு புதிய கேள்விகளை எழுப்பும், புதிய தகவல்களையும் தரும். கொலையை நாமே நேரில் கண்ணால் பார்ப்பதற்குச் சமம் அது. அந்த கதையைத்தான் நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
நான் கற்பனைசெய்துகொண்டதே உண்மையில் நடந்தது என்று பின்பு தெரிந்தது. ஜான் மங்களூருக்கு வந்திருப்பதை விபச்சாரத் தடுப்புத் துறை இன்ஸ்பெக்டர் ஒருவரின் அன்றாட அறிக்கை வழியாக ரொசாரியோ அறிந்துகொண்டார். மங்களூருக்கு வரும் கிரிமினல்கள் மேல் அவர் ஒரு கண் வைத்திருந்தார். அவர் அவனைச் சந்திக்க விரும்பவில்லை, அவன்மேல் ஆழ்ந்த கசப்பே அவருக்கு இருந்தது, அவர் அவனைச் சந்திக்க பதினான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட முயன்றதில்லை.
ஆனால் அன்று ஏனோ ஓர் எண்ணம் எழுந்து அவர் அவனைச் சந்திக்கச் சென்றார். பைக்கில் கடலோரம் சென்றவர் ஓர் உந்துதலில் அதை அங்கே ஒரு தோப்புக்குள் நிறுத்திவிட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த படகை எடுத்துக்கொண்டு அழிமுகக் கடல் வழியாக நேத்ராவதியின் விரிந்த பெருக்குக்குள் நுழைந்தார்.
அவர் அவனை ரகசியமாகச் சந்திக்க ஆசைப்பட்டார். அவன் அங்கே விடுதியில் பெண்ணுடன் இருப்பான் என்றும் வெளியே அழைத்துப் பேசலாம் என்றும் நினைத்தார். அவனை அவர் அழைத்தபோது அவன் வாட்ச்மேன் வந்திருக்கிறான் என்று நினைத்துத்தான் வெளியே வந்தான். அவரைப் பார்த்ததும் திகைத்தான். உள்ளே சென்று கதவை மூடப்பார்த்தான். அவர் பின்னால் சென்று அவனிடம் மன்றாடினார். “உன்னிடம் பேசத்தான் வந்தேன் ஜான்” என்றார்.
அவன் வெளியே வந்து “சரி, என்ன விஷயம் சொல்” என்றான். அவர் நடாலைன் பற்றிக் கேட்டார். அவருடைய குரலில் இருந்த தளர்ச்சியும் அழுகையும் அவனுக்கு உற்சாகத்தை அளித்தன. அவனுக்குள் இருந்த கீழ்மை விழித்துக்கொண்டது. அவரை கேலிசெய்ய தொடங்கினான். நல்ல போதையிலும் இருந்தான்.
அவர் தன் மனைவியை மீண்டும் சந்திக்கமுடியுமா என்று கேட்டார். அவன் அவள் அப்போது தொழில்முறை விபச்சாரி என்றும் அவளுடைய ரகசியத்தொலைபேசி எண் இருக்கிறது வேண்டுமென்றால் தருகிறேன் என்றும் சொன்னான். “இப்போது இன்னும் நல்ல கட்டை. எல்லா வித்தையும் தெரியும்… நீ அறிந்த பழைய பெண் இல்லை. ஒரு தடவை போனால் சொத்தையே எழுதிக்கொடுத்துவிடுவாய்” என்றான்
அவர் கொந்தளிப்பதைக் கண்டு அவனுக்கு மேலும் வெறி எழுந்தது. அன்றைய தனிமையில் அவனுக்கு உலகம்மீதே காழ்ப்பு நிறைந்திருந்தது. ஏனென்றால் அவனுக்கு அப்போது எய்ட்ஸ் இருப்பதாக தெரிய வந்திருந்தது. அந்த மனச்சோர்வால்தான் அவன் அங்கே வந்து களியாட்டம் போட்டுக்கொண்டிருந்தான்
“உன் மனைவியை மாடலாக ஆக்குவதாகச் சொல்லிக் கூட்டிக்கொண்டு சென்றேன். அவளை நான் அனுபவித்த பின்பு ஏழுலட்சம் ரூபாய்க்கு மும்பையின் பெண்வணிகனுக்கு விற்றேன்…” என்று அவன் சொன்னான். “அவன்தான் அவளை துபாய்க்கு கொண்டு சென்றான்… எல்லா பயிற்சியும் அவன் அளித்ததுதான். அவள் இன்று ஒரு சர்வதேசத் தரம் கொண்ட விபச்சாரி”
அவர் ஒருகணத்தில் பாய்ந்து அவனை அறைந்தார். அவன் கீழே விழுந்து உடனே எழுந்து தன்னிடமிருந்த துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான். அவர் மிக எளிதாக அவனை அறைந்து வீழ்த்தி துப்பாக்கியை பிடுங்கினார். துப்பாக்கி கையில் வருவது வரை அவருக்கு அவனைக் கொல்லும் எண்ணம் இருக்கவில்லை.
அவர் கையில் துப்பாக்கியைக் கண்டதுமே அவன் பயந்து நடுங்கி கைகூப்பி கண்ணீர்விட்டு அழுது மன்றாடினான். அவருக்கு வேண்டிய பணத்தை தருவதாகச் சொன்னான். அவனுடைய அந்தப் பரிதாபமான கெஞ்சல் அவருக்குக் குமட்டலை உருவாக்கியது. பொதுவாக நாம் புழுக்களை உடனே நசுக்கிவிடுகிறோம். இரக்கமே காட்டுவதில்லை
அவர் அவனை நெஞ்சில் சுட்டார். அவன் சாவதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பகுதியை நன்றாக சோதித்துவிட்டு துப்பாக்கியை காயலில் வீசிவிட்டு படகில் ஏறி விலகிச் சென்றார். அதை முன்பிருந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு பெய்யத்தொடங்கியிருந்த மழையில் பைக்கில் ஏறி தன் வீட்டுக்குச் சென்றார்.இடியோசை நிறைந்திருந்த மழைச்சூழலில் எவரும் ஓசையைக் கேட்கவில்லை. எவரும் அவரைப் பார்க்கவில்லை.
நான் அந்தக்கதையை முழுமையாக உருவாக்கிக் கொண்டேன். அதன்பின் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அவரிடமே விசாரிக்கவேண்டும் என்று தோன்றியது, ஆனால் நான் அவருடைய கீழே வேலைபார்ப்பவன். அவர்தான் அந்த வழக்கின் விசாரணை அதிகாரி. அதை அப்படியே அவரிடமே சொல்லிவிடலாம் என்று ஓர் எண்ணம் வந்தது. ஆனால் என் ஆணவம் தடுத்தது
அவரை கூண்டிலேற்ற வேண்டும், தண்டிக்கவேண்டும் என்று விரும்பினேனா? ஆமாம், விரும்பினேன். அதுதான் மாணவனின் ஆணவம். குருவை அழித்தால்கூட அவரை ஒருமுறை தான் முழுமையாக வென்றாகவேண்டும் என்று அவனுக்குத் தோன்றும். எடைமிக்க பொருளை தூக்க முழுமூச்சையும் பயன்படுத்துவோம் அல்லவா, அதைப்போல
அதற்குரிய வழியைக் கண்டுபிடித்தேன். எங்கள் டிஐஜியாக இருந்தவர் ஒரு பழைய தலைமுறை போலீஸ்காரரான பூர்ணசந்திர ராவ். படிப்படியாக மேலே வந்தவர். அரசியல்வாதிகளின் எடுபிடி. ஊழலில் ஊறியவர். அவருக்கு ஆரம்பம் முதலே ரொசாரியோவைப் பிடிக்காது. ரொசாரியோவின் நேர்மை, வளைந்துகொடுக்காத தன்மை, அறிவு அளிக்கும் மெல்லிய ஆணவம் எல்லாமே பூர்ணசந்திர ராவுக்கு உடம்பிலே தீயை மேலே கொட்டியதுபோல. அவர் ரொசாரியோவின் கண்ணைப்பார்த்தே பேசமாட்டார்.
ஆனால் அவரால் ரொசாரியோவை ஒன்றுமே செய்யமுடியாது. குற்றம் பழுத்துகிடந்த மங்களூரில் ரொசாரியோ ஒரு தேவதூதன்போல கருதப்பட்டார். பூர்ணசந்திர ராவ் வணங்கி நின்ற அரசியல்வாதிகளுக்கேகூட ரொசாரியோ மேல் பெரிய மதிப்பும் பயமும் இருந்தது. பூர்ணசந்திர ராவ் பல தவறுகள் செய்தவர், ரொசாரியோ தன்னை மாட்டிவிடக்கூடும் என்று பயந்துகொண்டும் இருந்தார்.
நான் பூர்ணசந்திர ராவை நேரில் கண்டு என் சந்தேகத்தையும் அடிப்படையான சான்றுகளையும் சொன்னேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக பூர்ணசந்திர ராவ் ஊக்கம் கொள்ளவில்லை. “அவன் பெரிய கிரிமினல் லாயர் போல. நீ சிறுவன். உன்னை நம்பி நான் காலெடுத்து வைத்தால் என்னை அழித்துவிடுவான்” என்றார். ”இந்த ஆதாரங்கள் போதாது… உன்னிடம் அவனை கைதுசெய்து உள்ளே தள்ளுமளவுக்கு நேரடியான ஆதாரங்கள் இருந்தால் சொல்” என்றார்.
“இல்லைசார், அவரை விசாரிக்கும் அளவுக்கே ஆதாரங்கள் உள்ளன” என்றேன்.
“காட்டு” என்றார்.
“முதலில் விசாரிக்க எனக்கு அனுமதிகொடுங்கள்” என்றேன்.
“முடியாது, நான் அவரை பொறாமையால் மாட்டிவிடுகிறேன் என்றுதான் நினைப்பார்கள்” என்றார் பூர்ணசந்திர ராவ்.
நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. “இன்றைக்கு ராஜீவ் கொலைக்குப்பின் அரசு கடலோர நிர்வாகத்தில் திறமையான அதிகாரிகளை மேலும் சார்ந்திருக்க ஆரம்பித்திருக்கிறது. எனக்கே தெரியும், நான் திறமையானவன் அல்ல” என்றார்
எனக்கு அப்போதுதான் ஓர் எண்ணம் வந்தது. நான் அவரிடம் ராகேல் பற்றிச் சொன்னேன். அவள் எபப்டி குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறாள் என்று. நான் அதற்குள் பலமுறை ராகேலிடம் பழகி அவளுடைய அந்தத் திறமை உண்மைதான் என்று கண்டுபிடித்து விட்டிருந்தேன். அவள் எப்படிக் கண்டுபிடிக்கிறாள் என்பதை நம்மால் சொல்லவே முடியாது. பற்பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் கொண்டுவிட்டாலும் சரியாகத் திரும்பிவிடும் பூனையின் உள்ளுணர்வுபோன்ற ஒன்றுதான் அது.
அவளை அலுவலகத்திற்கு கொண்டுவரலாம் என்று நான் பூர்ணசந்திர ராவிடம் சொன்னேன். அவருக்கு தயக்கம். நான் வற்புறுத்தியபோது ஒப்புக்கொண்டார். அலுவலகத்தில் ரொசாரியோ தன் வீட்டில் அமைத்திருந்ததுபோல ஒரு மேஜையை அமைத்தோம் ராகேலை நானே போய் கூட்டிவந்தேன். அவளை அந்த மேஜையின் முன் அமரச்செய்தோம்.
எதையும் ரொசாரியோவிடம் சொல்லவில்லை. அவரை இயல்பாக அந்த அறைக்குள் வரச்சொன்னோம். அவர் வந்து தன் மகளைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ”என்ன இது?” என்றார். ”என்ன செய்கிறீர்கள்?” என்று கூவினார்
நான் இயல்பான முகபாவனையுடன் “மன்னிக்கவேண்டும் சார், இது ஒரு சோதனை. மிஸிஸ் மோனிக்கா ஃபெர்னாண்டொவிடம் பேசியபோது ராகேலுக்கு இந்த திறமை இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் செய்துபார்ப்போமே என்று தோன்றியது” என்றேன்.
ரொசாரியோ கடும் கோபத்துடன் “என்னைக் கேட்காமல் எப்படி இதைச்செய்யலாம்? அவளுக்கும் போலீஸுக்கும் என்ன சம்பந்தம்? இது அத்துமீறல்” என்று கூச்சலிட்டார்
பூர்ணசந்திர ராவ் அந்தக் கோபத்தைக் கண்டதும் சற்றே நம்பிக்கையும் துணிவும் அடைந்தார். “பேசாமலிருங்கள் மிஸ்டர் ரொசாரியோ, இது ஒரு சோதனை. இல்லையென்றால் நாங்கள் கைதுசெய்து விசாரிக்கவேண்டியிருக்கும்” என்றார்.
ரொசாரியோ செய்வதறியாமல் நின்றார். நான் ஜானின் படத்தை சிவப்புக் கட்டத்தில் வைத்தேன். அதுவரை சந்தேகத்திற்கு உட்பட்டவர்களின் புகைப்படங்களை மேஜைமேல் பரப்பினேன்.
ராகேல் படங்களைப் பார்த்தாள். ஜானின் படத்தை தொட்டுத்தொட்டு முத்தமிட்டாள். மீண்டும் அப்படங்களைப் பார்த்தாள். நான் இறுதியாக ரொசாரியோவின் படத்தையும் மேஜைமேல் வைத்தேன்.அப்போது அவர் முகத்தைப் பார்த்தேன். அது இறுகியிருந்தது. முகம் சிவந்து மூக்கும் காதுகளும் ரத்தம்போலிருந்தன.
ராகேல் திகைத்தவள் போல படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் தலைகுனிந்து அமர்ந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டியது. அவள் எந்தப்படத்தையும் தொடவில்லை
ரொசாரியோ அவளருகே செல்லவில்லை. அப்படியே நின்றிருந்தார். ராகேல் திரும்பி அவளைப் பார்த்தாள். “டாடி!” என்று கைவிரித்தாள். ரொசாரியோ பாய்ந்து வந்து அவளை அணைத்து தூக்கிக் கொண்டார்
பூர்ணசந்திர ராவ் ஒன்றும் சொல்லாமல் எழுந்து போனார். ராகேல் ரொசாரியோவை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். அவர் அவளை கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். நான் அப்படியே அவர்கள் செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
“நைஸ்”என்றார் குமாரன் மாஸ்டர். “நீ சொன்னதுபோல கம்பாஷன்தான் அல்டிமேட்… இதுதான் உண்மையான கம்பாஷன்… “
“நான் வெளியே சென்றபோது ரொசாரியோ ராகேலை காரில் ஏற்றி அமரச்செய்திருந்தார். அவர் அருகே சென்று நின்றேன். அவர் என்னைப் பார்த்தபோது கண்கள் கடுமையாக இருந்தன வாய் இறுகியிருந்தது.
“ஸோ, யூ வன்” என்றார்
“சர்” என்று சல்யூட் அடித்தபின் என் கையிலிருந்த சிறிய பெட்டியை அவரிடம் நீட்டினேன்
“என்ன?” என்றார்
“சர், இதுதான் முதன்மை ஆதாரம், அந்த துப்பாக்கி. பெரெட்டா எம்எம் 9. நேத்ராவதியில் இருந்து எடுத்தேன்”
அவர் முகத்தில் மிகச்சிறிய புன்னகை வந்தது. “குட்” என்றார். ஆனால் கையை நீட்டி அதை வாங்கவில்லை. “நீ வேண்டுமென்றால் கேஸை மேலே கொண்டுசெல்லலாம். இது உன் வெற்றி” என்றார்
“சர், ஜட்ஜ்மெண்டே வந்துவிட்டது. இனிமேல் என்ன கேஸ்” என்றேன்
அவர் புன்னகைத்துவிட்டு பெட்டியை வாங்கிக்கொண்டு காரில் ஏறிக்கொண்டார். நான் அங்கேயே நின்றேன்.போலீஸ் வாழ்க்கையில் பல நல்ல தருணங்கள் உண்டு, அதுபோல ஒன்று பிறகு அமைந்ததில்லை.
“பிறகு?”என்றான் ஸ்ரீதரன்
“பிறகு நான் அவர் கீழேதான் வேலைபார்த்தேன். அவர் எல்லாவற்றையும் ஒரு நெகிழ்ந்த மதுவிருந்தின்போது என்னிடம் சொன்னார்”
“ஓ” என்று ஸ்ரீதரன் சொன்னான்
“அன்று அவர் ஜானைப் பார்க்க போனது ஏன் தெரியுமா?”
“ஏன்?”
“அன்று அவர் வீட்டுக்கு வந்தபோது ராகேல் வயதுக்கு வந்திருந்தாள். அறைமுழுக்க ரத்தம்… அவர் தன் மகளுக்காக எல்லாவற்றையும் மறந்து மன்னித்து தன் முன்னாள் மனைவியை ஏற்க தயாராக இருந்தார். அதைச் சொல்லத்தான் சென்றார்”
நாங்கள் அமைதியாக அமர்ந்திருந்தோம். ஸ்ரீதரன் விஸ்கியில் எஞ்சியிருந்ததைக் குடித்தான். ஔசேப்பச்சன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்
அப்பால் ஓசைகள் கேட்டன.பஷீர் எழுந்து “என்ன என்றார். “டேய் ராஜப்பா, என்ன அங்கே?”
ராஜப்பன் “சார்,“யாரோ கேட் கதவை திறந்துவிட்டு கொண்டிபோடாமல் விட்டுவிட்டார்கள்… யானை ஒன்று உள்ளே வந்துவிட்டது” என்றான்
”எங்கே அது?” என்றபடி பஷீர் ஓடினான். கூட காவலனும் ஓடினான்
குமாரன் மாஸ்டர் “யானையாடே?’ என்றார்
நான் எழுந்து பஷீரைத் தொடர்ந்து ஓடினேன். அங்கே டார்ச் விளக்குகள் கண்டபடி சுழன்றன. பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் கூச்சலிட்டு அழுதன.
பஷீர் “எல்லாரும் ரூமுக்குள் போங்கள்… வெளியே யாரும் நிற்கக்கூடாது… எல்லாரும் போங்கள்” என்று கூவினான். கைவீசி ஆணைகள் இட்டபடி முன்னால் சென்றான்.
ஆனாலும் குடில்களின் வாசல்களில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் யானையைப் பார்த்துவிட்டேன். அது அந்த இடத்தை நன்றாகத் தெரிந்ததுபோல் இருந்தது. கோபமும் கொண்டிருந்தது. அந்த முள்வேலி அதற்கு ஒவ்வாமையை அளித்திருக்கலாம். அல்லது உள்ளே கூடியிருந்த கூச்சலிடும் மக்கள் எரிச்சலூட்டியிருக்கலாம். அது துதிக்கையை வீசியபடி அங்குமிங்குமாக அலைபாய்ந்தது. ஒரு தூணை காலால் உதைத்து சரித்தது
அப்போதுதான் நான் பஷீர் சொன்ன அந்த மனவளர்ச்சிக்குறைவு கொண்ட பையனைப் பார்த்தேன். பெரிய உடம்பு. அதற்கு ஒவ்வாத சிறிய தலை. உந்திய கண்கள்
அவன் குடிலின் பின் முற்றத்தில் நின்றிருந்தான். அவனை மற்றவர்கள் கவனிக்கவில்லை. அவர்கள் முன்னால் நின்று கூச்சலிட்டார்கள்
யானை அவனை நோக்கிச் சென்றது. பஷீர் கையில் குச்சியுடன் கூச்சலிட்டபடி ஓடினார். காவலர்களும் கூச்சலிட்டார்கள்
அவன் கையை தூக்கி அசைத்தான். யானை அவனை அணுகி அவனை தன் துதிக்கையால் தொட்டது. அவனை அது நன்கு தெரிந்திருந்ததுபோல தோன்றியது
வானைநோக்கிச் சுடும்பொருட்டு காவலன் ரைபிளை தூக்க பஷீர் அவனை கையால் தடுத்தார். அனைவரும் அமைதியாக இருக்கவேண்டும் என்று சைகையால் ஆணையிட்டார்.அனைவரும் ஓசையடங்கி அதை திகைப்புடன் பார்த்தனர்
அவன் கையசைத்து யானையிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அது அவன் உடலை முழுக்க தடவிப்பார்த்தது. அதன் துதிக்கை நெளிந்தது. பின்னர் திரும்பிச் சென்றது. அவன் அதை நோக்கி கைவீசி பேசிக்கொண்டிருக்க அது கேட் வழியாக வெளியே சென்றது
”கேட்டை சாத்து” என்று பஷீர் கூச்சலிட்டார். இரு காவலர்கள் கேட்டை சாத்த ஓடினார்கள்.
***