[ 1 ]
நள்ளிரவில்தான் சம்பவம் தொடங்கியது, மங்கலம்வீட்டின் ஓடுகள் படபடவென்று சரியத்தொடங்கின. மூலயம்விட்டு தேவகி அம்மச்சி “கேசவா, ராமா, ஆருடே அது?” என்று கூச்சலிட்டாள்.
“கெளவிக்கு என்ன தீனம்? எளவு சாகவும் மாட்டேங்கே” என்றார் சாயங்காலம் கதளிப்பழம் இட்ட பட்டைச்சாராயம் அருந்திய கேசவன் நாயர்.
அவர் தம்பி ராமன் நாயர் டார்ச் விளக்குடன் சென்று கிழவியை பார்த்தான். கிழவி கையில் கழியுடன் எழுந்து நின்றிருந்தது.
“எந்தா அம்மே? எந்தா பிரஸ்னம்? கெடந்து ஒறங்கு” என்றார் ராமன் நாயர்
அம்மச்சி “ராமா, கள்ளன் கேறீட்டுண்டுடே… கூரப்பொறத்து கள்ளன் நிப்பொண்டுடே” என்றாள்.
ராமன் நாயர் “கள்ளனா?”என்றான். சத்தம் கேட்டது. அவன் பயந்துபோய் தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து போர்வையால் முகத்தை மூடிக்கொண்டான்.
அம்மச்சி “அய்யய்யோ கள்ளன் வந்நல்லோ… என்னே கள்ளன் கொல்லான் வந்நல்லோ” என்று பயங்கரமாக கூச்சலிட்டு செம்பை எடுத்து எறிந்தாள். அது கூடத்தில் கணகணவென உருண்டது
“சவத்தே இந்நு ஞான் கொல்லும்!” என்று கூவியபடி எழுந்து கிழவியின் அறைநோக்கி ஓடிய கேசவன்நாயரின் மேல் ஓடு உடைந்து விழுந்தது. “அய்யோ!” என்று கூவினார். “ஆருடா அது!” ”எடா!” என்றார்.
இன்னொரு ஓட்டுத்துண்டு மண்டைமேல் விழுந்தது. அவர் “அய்யோ! என்றே சபரிமலை சாஸ்தாவே!” என்று கூப்பாடுபோட்டுவிட்டு ஓடிப்போய் தன் அறைக்குள் சென்று தன் போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டார்.
சகோதரர்கள் இருவரும் இரு அறைகளில் போர்வைக்குள் நடுங்க கிழவி எழுந்து “ராஜம்மையே… எடீ நாணம்மையே” என்று கூவினாள்.
பின்கட்டிலிருந்து ராஜம்மையும் நாணம்மையும் எழுந்து வந்தார்கள். மின்சாரம் இல்லை. மண்ணெண்ணை விளக்கை ஏற்றிப்பார்த்தால் மையக்கூடம் முழுக்க கூரையிலிருந்து ஓடு உடைந்து விழுந்து கிடந்தது. மேலே துளைகளும் தெரிந்தன.
கூரைமேல் எவரோ நடமாடுவது தெரிந்தது. “ஆரெடா அது?”என்றபடி ராஜம்மை குட்டி உலக்கையை கையில் எடுத்தபடி வெளியே ஓடினாள். டார்ச் அடித்து பார்த்தபோது யாரோ மேலேறிச் செல்வது தெரிந்தது.
“டேய் இறங்கி வாடா, நாயே!” என்று ராஜம்மை கூச்சலிட்டாள்.
அந்த ஆள் மறுபக்கம் வழியாகத் தப்பிச்சென்றுவிட்டான். ராஜம்மை ஓடிவந்து கேசவன் நாயரை எழுப்பினாள். “எந்திரிங்க… இங்கே.. இங்கே… எந்திரிங்க”
அவர் முனகி முனகி சுருண்டு படுத்துக்கொண்டார். அவள் உலுக்க உலுக்க தேங்காய் மூட்டை போல ஆடினார்.
“எனக்குன்னு வந்து வாச்சுதே… தீயவச்சாலும் சூடாகாத்த மண்ணுத்தூண்” என்று அவள் திட்டி தலையில் அடித்துக்கொண்டாள்.
நாணம்மை ராமன் நாயரை எழுப்ப அவன் “எனக்கு காய்ச்சலு… உடம்பு கொதிக்குது” என்றான். அவன் உடல் நடுநடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் ஒருமாதிரியாக சுழன்றன
“அய்யோ அக்கா, இவருக்கு காய்ச்சல்… கண்ணு சுத்திட்டிருக்கே” என்றாள் நாணம்மை
“நீ கூட ஏறி படு… காய்ச்சல் சரியாகும்” என்றாள் ராஜம்மை.
நாணம்மை உடனே சமையற்கட்டுக்குச் சென்று சுக்குவெள்ளம் கொதிக்கவைத்தாள். ராமன் நாயர் அதை வாங்கி போர்வையால் பொத்திக்கொண்டு ஊதி ஊதிக் குடித்தபடி முனகினான்.
பெண்கள் மூவரும் கூடத்தில் மண்ணெண்ணை விளக்கைச் சூழ்ந்து அமர்ந்து துயில்நீத்தார்கள்.
காலையில் பொன்னம்மை நாடாத்தி வந்தபோது ராஜம்மை வெளியே சென்று “எடீ பொன்னூ… நேத்து ராத்திரி வீட்டிலே கள்ளன் கேறிட்டானெடீ”
“வீட்டிலே ஆம்புளைங்க இருந்தாகளே அம்மிணி!” என்றாள் பொன்னம்மை”
“அதாருடீ நானறியாம?” என்றாள் ராஜம்மை
பொன்னம்மை கண்மேல் கையை வைத்து கூர்ந்து பார்த்தாள். ஓடுகள் உடைந்து சரிந்து வந்து அபாயமாக நின்றன. மேலே கூரை மடிப்பில் ஒரு சிறுவன் சோகமாக அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள்
“அம்மிணி அது நம்ம யோசேப்புக்க மகன் எட்டானில்லா?”
“எட்டான் எதுக்கு கூரைமேலே?”என்று சொல்லி வந்து பார்த்த ராஜம்மை “எடீ உனக்கு கண்ணே இல்லியா? அது கொரங்குடீ… பெரிய கொரங்கு!” என்றாள்
“ஆமா கொரங்குல்லா!”
உள்ளிருந்து எழுந்து வந்த கேசவன் நாயர் “என்ன அங்கே? என்னண்ணு கேக்கேன்ல?”என்றார். துண்டை தலையில் கட்டியபடி ”ஆம்புளைங்க கேட்டா பதில் சொல்லுங்கடீ” என்றார்
”வீட்டுக்கூரைமேலே ஒரு கொரங்கு இருக்கு… நேத்து ஓடுகளை உடைச்சது அதாக்கும்”
“கொரங்கா! அதை நான்…” என்று தடியுடன் வெளியே வந்து முற்றத்தில் நின்றார் கேசவன் நாயர். “ஏய் எறங்கு…” என்றபடி கீழே கிடந்த ஓட்டுத்துணை எறிவதற்காக எடுத்தார்
குரங்கு அவரைப் பார்த்து “ரீ” என்றது.
“சிரிக்கல்லா செய்யுந்நு!”என்றான் கேசவன் நாயர்
ராமன் நாயர் வெளியே வந்து “அண்ணா நீங்க அந்த குரங்க சும்மாவா விட்டீங்க? அதை ரெண்டு தட்டு தட்டி எடுத்து அந்தால தூக்கிப் போடாம?” என்றபடி ஓடி முற்றத்தை நோக்கி பாய்ந்தான்
நாணம்மை “அய்யோ வேண்டாம்… வேண்டாம் …அத ஒண்ணும் பண்ணாதீங்க… பாவமாக்கும்” என்று கதறி அவனை தடுக்க முயன்றாள்
“சீ விடுடீ…ஆம்புளைங்க எடத்திலே எறங்கிப் பேசுறியா? போ உள்ள”என்ற ராமன் நாயர் கீழே கிடந்த ஓட்டுத்துண்டை எடுத்தான்
“வேண்டாம் கொல்லாதீங்க… வேண்டாம்”
“ஒரு வரிக்கைச் சக்கையை எறிஞ்சு போடுத சோலிதான்” என்றபடி அவன் குறிவைத்து வீச அது வேறெங்கோ விழுந்தது
“அய்யோ கள்ளன் கூரையை உடைக்குதானே” என்றாள் அம்மச்சி
குரங்கு ஓடிச்சென்று அந்த ஓட்டுத்துண்டை எடுத்து ஓங்கி திரும்ப வீசியது
“எனக்கம்மே! நாணம்மையே என்னைய குரங்கு கொன்னுட்டே!” என்று கதறியபடி ராமன் நாயர் கீழே விழுந்தான். உருண்டு எழுந்து ஓடி திண்ணையை அடைந்தான்
“அய்யோ! அய்யோ! நான் என்ன செய்வேன்! கொரங்கு கல்லெடுத்து எறிஞ்சுபோட்டே!” என்று நாணம்மை கதறி அழுது ராமன் நாயரை பிடித்து அணைத்துக்கொண்டாள். “இப்டி உண்டா ஒரு ஆம்பிளை… ஒண்ணையும் ஒரு பயமும் இல்லை… எடுத்துசாடி ஓரோண்ணு செய்யுகது… என் மண்டைக்காட்டம்மோ நான் என்ன செய்யுவேன்!”
அம்மச்சி எட்டிப்பார்த்து “கொஞ்சம் காப்பிப்பொடி கொண்டுவந்து முறிவிலே வைடீ… கெடந்து மோங்குதா!”என்றாள்
“கொஞ்சம் காப்பியும் போடு” என்றான் ராமன் நாயர்
அலறல் கேட்டு மறுபக்கம் கோயில்முற்றத்திலிருந்து கரடிநாயரின் மகன் அனந்தன் எட்டிப்பார்த்தான். ”ஓடு உடைஞ்சிருக்கே?”என்றான்
கேசவன் நாயர் “டேய் கூமுட்டை, போயி அப்பாவை வரச்சொல்லுடா”
“ஓடு வைக்கணுமானா அப்பு அண்ணனை வரச்சொல்லுதேன்”
“உனக்க அப்பன வரச்சொல்லுடா எரணங்கெட்ட நாயே”
“நாயி உனக்க அப்பன்”
“டேய் என்ன சொன்னே?”
“ஒண்ணும் சொல்லல்ல”
“என்னடா சொன்னே?
“ஒண்ணும் சொல்லல்லண்ணு சொன்னேனே என்னவே விளிச்சு கூவுதேரு?” என்றான் அனந்தன்
“எனக்க செல்ல மக்க இல்ல…டேய் வீட்டுக்குமேலே கொரங்கு வந்திருக்குடே… என்ன செய்யுகதுண்ணு தெரியல்லடே… அப்பாவ வரச்சொல்லுடே” என்றார் கேசவன் நாயர்
“கொரங்கா? இதுவா??
“இது பின்ன கொரங்குல்ல?”
“சிரிக்குது?”
“சிரிக்காதா பின்னே? அம்பது ஓடுல்லா உடைச்சிருக்கு?”
அனந்தன் திரும்பி தன் வீடு நோக்கி ஓடினான்
ராமன்நாயர் “அண்ணன் என்ன அங்க பாத்துட்டு நிக்குது? சவத்த ஒரு தட்டு தட்டி அந்தாலே எடுத்து போடணும்” என்றான்
“டேய் கொரங்கை ஒண்ணும் செய்யக்கூடாது… ஹனுமான் சாபம் கிட்டும்…” என்றார் கேசவன் நாயர் “எதுக்கும் கரடி வரட்டும்… அவரு ஒரு வளி சொல்லுவாரு”
“அவரு என்ன பெரிய இவரா? எனக்க தலையிலே கல்லு விளலேண்ணா அதை நான் இப்ப செரியாக்கி தந்திருப்பேன்… எளவு கல்லுல்லா எறியுது!” என்று ராமன் நாயர் சொன்னான்.
கரடிநாயரும் தங்கையா நாடாரும் தவளைக்கண்ணனும் வந்தனர். பின்னால் கருப்பனும் அனந்தனும் வந்தனர்
தவளைக்கண்ணன் “கருங்கொரங்காக்கும்!” என்றான் “துண்டு போட்டு உணக்கி வத்தலுபோட்டா நல்ல ருசியாட்டு இருக்கும்… ஒரு சின்ன கொச்ச நாத்தம் உண்டு… நல்ல மொளவரச்சு செய்யணும்” என்றான்
“எரப்பாளி… உறங்கிக்கிடந்தா இவன் நம்மள தின்னிருவானே” என்றார் கரடி
“நல்ல சைசு கொரங்காக்கும்… இதெப்டி இங்க வந்தது!” என்றார் தங்கையா நாடார்.
கருப்பன் பயங்கரமாக குரைத்து துள்ளியது. கரடி “டேய்!”என்றார்.
கருப்பன் நிறுத்திக்கொண்டு ம்ம்ம் ம்ம்ம் என முனகியது. அனந்தன் அதன் காதைப்பிடித்தான்
கேசவன் நாயர் “ராத்திரியே வந்தாச்சு… நான் ஒரு தட்டு தட்டினேன். அதுக்க கோவத்திலே ஓடுகளை உடைச்சுப்போட்டு” என்றார்
ராமன்நாயர் “மேலே ஏறி பிடிக்கலாம்னா பளைய ஓடாக்கும்…” என்றான்
“மேலே ஒண்ணும் கேறவேண்டாம்… எதுக்கெடுத்தாலும் ஒரு எடுத்துசாட்டம்… மனுசனானா ஒரு பயம் வேணும்” என்றாள் நாணம்மை.
தங்கையா பெருவட்டர் அவளிடம் புன்னகையுடன் “உள்ளதாக்கும்!” என்றார்
அவள் வெட்கி அவர் கண்களை தவிர்த்து “சொன்னா கேக்கிறதில்லை” என்றாள்
“என்னடே செய்யுதது குரங்க?” என்றார் கரடி
“இது எப்டி இங்க வந்தது?” என்றார் தங்கையா நாடார் “எங்கேருந்து வந்தது?”
“எப்டியோ வந்திருக்குவே”
“எல்லா சனியும் நம்ம வீட்டுக்குத்தான் வரும்… இப்பம் மொத்தமா சனிதசையாக்கும்” என்றார் கேசவன் நாயர்.
“என்ன எனம்? கருங்கொரங்கா?”என்றார் கரடி
“நாம இப்ப அதுக்கென்ன பொண்ணா பாக்கப்போறம்? வே அதை வெரட்டுத வளியப்பாரும்வே” என்றார் பெருவட்டர்
கரடி “ஏய் போ போ “ என்று கூவினார். “பேசாம போ..போயிரு!”
“அதுக்கு என்ன பாசை தெரியும்? காட்டுலேருந்துல்லா வந்திருக்கு” என்றார் பெருவட்டர்
“காடும் தமிள்நாடுதான்வே… சும்மா இரும்” என்றார் கரடி “ஏய் போ! போ!”
ஆனால் அது அவரை விசித்திரமாக கூர்ந்து பார்த்தது
கரடி திரும்பி தவளைக்கண்ணனிடம் “வெரட்டுலே அதை… பாத்துட்டு நிக்கான்” என்றார்
தவளைக்கண்ணன் ஒரு கல்லை எடுத்து ஓங்கி “போ! போ!” என்றான் .அது அவனை நோக்கியபின் சொறிந்துகொண்டது
“ஏமான், சொறியுது”
“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே”
கருப்பன் தொடர்ந்து குரைக்க “ஏ வாய மூடு!” என்றார் கரடி
கருப்பன் முனகிக்கொண்டு தன்னைத்தானே சுற்றியது. நிலைகொள்ளாமல் எம்பி எம்பிக் குதித்து மீண்டும் குரைத்தது.
“லே சும்மா இருலே” என்றார் பெருவட்டர்
“பின்ன நான் என்ன செய்ய?”என்று கருப்பன் அவரை பார்த்து பல்லைக்காட்டி சீறியது
“அது அப்டியெல்லாம் போகாது… கவணோ துப்பாக்கியோ வேணும்” என்றார் கேசவன் நாயர்.
“கேசவா. இது ஹனுமான் தோஷமாக்கும் கேட்டியா? கிருஷ்ணன்கோயில் ஹனுமானுக்கு ஒரு வடைசார்த்து நான் நேந்திருக்கேன்”
“வடை… போ உள்ள. ஆம்புளைங்க பேசுற எடத்தில் பொம்புளை வாறியா? உள்ள போ”
“வடைய குடுத்தா இவனே பிள்ளைமாதிரி காட்டுக்குள்ள போயிருவானே அம்மச்சியே” என்றான் தவளைக்கண்ணன்
குரங்கு அவர்களை மிக ஆவலாக கூர்ந்து பார்த்தது. கரடியை கண் சந்தித்தது, இளித்தது.
“டேய், கொரங்குன்னு பாக்கமாட்டேன்… நாயே” என்றார் கரடி
“கொரங்க நாயிண்ணு விளிக்கிலாமா வே”
“நீரு வாய மூடும்வே”
குரங்கு ஐயத்துடன் கூரைமேல் நடந்தது. விளிம்பில் தொங்கி கீழிறங்கி வந்து முற்றத்தில் அமர்ந்தது
“அப்டி வா வளிக்கு… அப்ப உனக்கு சொன்னா புரியும், இல்ல”என்றார் கரடி “அதை அப்டியே வெரட்டி விடுலே”
தவளைக்கண்ணன் கழியை ஓங்கியபடி அருகே செல்ல அது ஈர்ர்ர் என்ற படி பாய்ந்து அவனை நோக்கி வந்தது. அவன் “எக்க அப்பச்சியே!” என்று கதறியபடி ஓடி பின்னடைந்தான். “ஏமானே கடிக்கல்லா வருது”
“சிரிச்சுட்டு வருது” என்றான் அனந்தன்
“அப்ப நீ முன்னாலே போலே” என்றார் தங்கையா
“நாய விடுங்க” என்றான் தவளைக்கண்ணன்
“அதுக்கு நாய எங்க?”
கருப்பன் குரங்கு கீழிறங்கியதுமே விலகி ஓடி கோயில்முற்றத்தில் நின்றிருந்தது. வாலை அடிவயிற்றில் சேர்த்து கால்மாற்றி நின்றபடி பூனை போல ஓசையிட்டது
“எளவு பயந்து பூனையா மாறிட்டுபோல!”
கரடி நாயைப் பார்த்தபின் அவமான உணர்வுடன் “அதுக்கு தேகசொகமில்லை” என்றார்
குரங்கு அங்குமிங்கும் பார்த்தது. சட்டென்று வீட்டுக்குள் புகுந்தது
“அய்யோ!”என்று அலறியபடி ராமன்நாயர் பாய்ந்து முற்றத்தில் குதித்து விலகி ஓடினான்.
நாணம்மை “அய்யோ, நில்லுங்க… ஓடாதீங்க… அவரை பிடியுங்க. மேலுக்கு முடியாத மனுசனாக்குமே” என்று கதறினாள்
சமையலறையிலிருந்து பொன்னம்மை வெளியே ஓடிவந்து “ஏமானே, இங்கிண அடுக்களைக்குள்ள பூந்து வச்சிருந்த சோற்ற வாரி திங்குது” என்றாள்
அம்மச்சி “போட்டேடி… வடைசார்த்துக்க பைசா மிச்சமிண்ணு வை” என்றாள்
உள்ளிருந்து ராஜம்மை வெளியே வந்து “சோறு தீந்தபிறவு அரிசியையாக்கும் திங்குது” என்றாள்
“என்னவே செய்யுதது?” என்றார் பெருவட்டர்
“அது நாம சொல்லுகது ஒண்ணையும் வகைவைக்கேல்லியே” என்றார் கரடி
“காட்டுசாதியாக்கும்” என்று தவளைக் கண்ணன் சொன்னான். “நம்ம ஊருக்குள்ள உள்ள குரங்குண்ணாக்க ஒரு இது இருக்கும்”
குரங்கு உள்ளிருந்து மெல்ல வெளிவந்து கூரைக்குமேல் ஏறி அமர்ந்தது. உடலைக் குறுக்கியபடி தூங்கத் தொடங்கியது
கரடி”கேசவா, இப்பம் ஒண்ணும் செய்யவேண்டாம் கேட்டியா? அது அங்க இருக்கட்டு…நாம யோசிச்சு முடிவுசெய்வோம்” என்றார்
“வேற என்ன செய்ய?” என்றார் கேசவன் நாயர் “ஆனா நாம யோசிக்க நேரத்திலே அதுவும் அங்க இருந்து யோசிக்கும்லா?”
திரும்பிச் செல்கையில் தவளைக்கண்ணன் கேசவன் நாயரிடம் “ஏமானே, அதுக்கு வல்ல வெள்ளமோ மற்றோ வேணுமானா குடுங்க” என்றான்
“போலே கொன்னு போட்டிருவேன்” என்றார் கேசவன் நாயர்
[ 2 ]
கரடி தன் வீட்டு திண்ணையில் வாயில் வெற்றிலையுடன் அமர்ந்திருக்க பெருவட்டர் அருகே அமர்ந்து வெற்றிலையைக் கிள்ளிவிட்டு நீறு தேய்த்தார்.
“இனியிப்பம் இப்டியே விட்டா ஊரை அளிச்சுப்போடும்… என்னமோ லங்கையிலே நுளைஞ்ச அனுமானுட்டாக்கும் நினைச்சிட்டிருக்கு… அறுப்புகாலமாக்கும் வாறது…வைக்கோலிலே தீய வச்சுப்பிட்டா என்ன செய்ய?” என்றார் பெருவட்டர்.
“டீக்கனாரு கொறவன விளிச்சிட்டு வாறேண்ணு போயிருக்காரு… பேச்சிப்பாறைக் கொறவன்” என்றார் கரடி
தவளைக்கண்ணன் “கொறவன் என்னத்துக்கு? அதை பிடிக்கணுமானா கண்ணி வைச்சணும்” என்றான்
“கண்ணிண்ணா?”என்றார் பெருவட்டர்
“சீங்கண்ணியை பிடிக்க தண்ணியிலே வைப்போம்லா? அதுக்கு கோளியை வைப்போம்… இதுக்கு ஒரு வாளைக்கொலையை வைப்போம்” என்றான்
”கண்ணி நல்லதாக்கும்” என்றார் கரடி. “நீ கண்ணி போடுவியாலே?”
“நாம படிச்ச தொளிலாக்குமே அது”
“செரி போடு”
“அஞ்சுரூபாயெங்கிலும் ஆவும்”
“அஞ்சுரூவா வச்சுக்கோ… பிடிச்ச பிறவு அஞ்சுரூவா கூட்டித்தாறேன்”
தவளைக்கண்ணன் சிரிக்க அப்பு “பத்து ரூபாய்க்கு நாலஞ்சு கொரங்கு பிடிக்கலாம்”என்றார்
“அதுக்கு இங்க ஒரு கொரங்குல்லா இருக்கு… அந்தாலே போலே” என்றார்
தவ்ளைக்கண்ணன் நிபுணனின் கூரிய பார்வையுடன் சென்று சிவப்பியை கட்டும் தாம்புக்கயிற்றை எடுத்தான். அதை பலவகையில் வளைத்துப்பார்த்தான்.
“அது பசுவ கெட்டுத கயிறாக்கும்”என்றான் அப்பு
“கயிற கொரங்கு திங்காதுலே” என்றன் தவளைக்கண்ணன்
“நீ தின்னாலும் திம்பே… அஞ்சுரூவா… ஒரு கொரங்க பிடிக்கதுக்கு”
“நீ பிடிலே… நீ பிடிலே கொரங்க”
“ஆமா நான் பிடிக்கேன். லே, நான் சாதி நாயராக்கும்”
”சாதி நாயர்மாரு என்ன பிடிப்பானுவ?” என்றன் அனந்தன்
“எலிபிடிப்பானுவ” என்றான் தவளைக்கண்னன்
“லே வேண்டாம் கேட்டியா? நான் வேற ஆளாக்கும்…”
“அப்டியா? இப்பம் நாயருண்ணு சொன்னிய?”
அப்பு பல்லைக் கடித்து பின்னர் கண்ணீருடன் “உனக்க அஞ்சுரூவா கணக்க நான் செரியாக்கித் தாறேண்டே” என்றபின் அப்பால் சென்றான்
“அல்லாம பின்ன? நாயருண்ணா மூளை இருக்கணும். இல்லேண்ணா சுண்ணி இருக்கணும்.. இது ரெண்டும் இல்லேண்ணா என்ன செய்ய?” என்றான் தவளைக்கண்ணன்
“அவரு நல்லவரு” என்றான் அனந்தன்
“நல்லவராக்கும்… “ என்றான் தவளைக் கண்ணன் “நல்ல நாயருண்ணா அது ஒருமாதிரி பல்லுபோன நாயாக்கும் கேட்டுதா?”
தாம்புக்கயிற்றை வளைத்து அவன் கண்ணியை தயார் செய்தான். “பிள்ளே அம்மைக்க கிட்ட போயி நல்ல மணமுள்ள கதளிவாளைக்கொலை ஒண்ணு வேணுமிண்ணு கேக்கணும்” என்றான்
அனந்தன் வீட்டுக்குள் ஓடிப்போய் கூச்சலிட்டான். “கதளிக்கொலை! கொரங்குக்கு குடுக்க கதளிக்கொலை!”
தங்கம்மை எட்டிப்பார்த்து “ஏலே கதளிக்கொலைதான் வேணுமா உனக்கு?”
“மணமில்லேண்ணா கொரங்கு மயிராட்டா வரும்?”
“காட்டிலே அங்கிண கதளியாலே நிக்குது?”
“அது பிடிக்காமல்லா இங்கிண வந்திருக்கு?”
“தங்கம்மே கொடுத்து விடுடீ.. அதைப்பிடிக்கட்டு”என்றாள் விசாலாட்சியம்மா “டேய் லாசர், அதை பிடிச்சா ஒண்ணும் செய்யப்பிடாது. வண்டியில் கேற்றி பேச்சிப்பாறை காட்டில் கொண்டுபோயி விடணும் கேட்டியா?”
“செரி அம்மிணி” என்றான் தவளைக்கண்ணன்
“அங்க வண்டிபோவாதே” என்றான் அனந்தன்
“சைக்கிளிலே வச்சு கொண்டுபோலாம்” என்றான் தவளைக்கண்ணன்
‘அது சைக்கிளுக்க பின்னால இருந்துகிடுமா?”
தவளைக்கண்ணன் பதில்சொல்லவில்லை. தங்கம்மை கொண்டுவந்த கதளிவாழைக்குலையுடன் அவர்கள் செல்ல பின்னால் லாரன்ஸ் வந்து சைக்கிள் பெல்லை அடித்தான். ‘தவளைக்கண்ணன் அண்ணா, வாளைக்கொலை விக்கவா?”
“அந்தாலே போலே”
லாரன்ஸ் ஒரு பழத்தை பறித்து உரித்தான்
“லே, லே, கொரங்குக்கு குடுக்கப்பட்ட கொலையாக்கும்லே”
“ஒரு வாழைக்கொலைய கொரங்கு திங்குமா?”
தவளைக்கண்ணன் யோசித்து “திங்காது”என்றான். அவன் இரண்டு பழங்கள் பிடுங்கிக்கொண்டான்
அனந்தன் ‘எங்கவீட்டு கொலையாக்கும்”என்றான்
“அப்ப பிள்ளையும் ரெண்டு பிடுங்கணும்”
அனந்தனும் வாழைப்பழம் எடுத்துக்கொண்டான்
“தவளைக்கண்ணா எனக்கு ஒரு வாளைப்பளம்”
“அண்ணா, லாசரண்ணா எனக்கு”
“ஆளுக்கு ஒண்ணு எடுங்க… லே ஒரு பளம் எடுலே… லே ஒருபளம் மட்டும் எடு…சவத்தெளவுப் பயக்க… இவனுக வாளைப்பளமே கண்டதில்ல போல இருக்கே”
அவர்கள் மங்கலம் வீட்டை அடைந்தனர். அத்தனைபேரும் வாழைப்பழம் தின்றுகொண்டிருந்தனர்
கேசவன் நாயர் “தவளைக்கண்ணா என்னடே வாழைப்பழம்?”
“கண்ணிவைக்கதுக்காக்கும்”
“ஒரு சீப்பு இங்க குடுடே”
“ரெண்டு சீப்புதான் இருக்கு”
“கொரங்குக்கு எதுக்கு ரெண்டு சீப்பு? அது இருக்க இருப்புக்கு?” என்றபடி கேசவன் நாயர் ஒரு சீப்பு பழத்தை எடுத்துக்கொண்டார். “ஆறாலும்வீட்டிலே அரைச்சு வச்சிருந்த தோசைமாவு அம்புட்டையும் வளிச்சு தின்னிருக்கு!”
”கொரங்கு எங்கபோச்சு?”
“அது ஊருலே எங்கவேணுமானாலும் போவும்… காலம்பற ஆராம்புளியானுக்க வீட்டு பசுவுக்க மேலே சாடிப்போட்டு”.
“எளவு ஊரிலே ஒருத்தன் நடக்க முடியுதா? தலையிலே என்ன இருந்தாலும் சாடிப்பிடிக்குது… சீவிக்க முடியல்ல”
“ஊரிலே எல்லா நாயும் அதை பயந்துல்லா கெடக்கு?”
அனந்தன் “கருப்பன் இப்பம் ராத்திரி வெளியே போறதே இல்லை. வைக்கோப்ப்போருக்கு அடியிலே போயி உறங்குதான்” என்றான்
தவளைக்கண்ணன் பழக்குலையை மரத்தில் கட்டி தொங்கவிட்டான். அதைச்சுற்றி கண்ணிவளையத்தை அமைத்தான்
“இனி அது வந்து மாட்டினாப் போரும்” என்றார் கேசவன்
“அது வரும்.. இங்க சத்தம் போடப்பிடாது”
“அது நாம சத்தம்போடுத எடத்திலயாக்கும் வாறது”
”பிள்ளையள்லாம் மாறி நில்லுங்க… சைலேன்ஸ்”என்றார் கேசவன் நாயர்
அனந்தன் “எங்க வீட்டு பளமாக்கும்” என்றான்
“எங்க வீட்டுக்கும் கொரங்கு வந்துதே” என்றாள் கொச்சுகல்யாணி
“சத்தம்போடப்பிடாது… சத்தம் போடுத பிள்ளையளுக்க குஞ்சாணியை அத்து கொரங்குக்கு குடுப்பம்”
“இவளுக்கு குஞ்சாணியே இல்லை!” என்று அனந்த்ன் கொச்சுகல்யாணியை சுட்டிககட்டினான்
அவள் அவமானத்துடன் கண்ணீர் மல்கி “இருக்கு!” என்றாள்
தொலைவில் அலறல் ஓசைகள். கூச்சல்கள் கேட்டன.
கொரங்காக்கும் வாறது என்றான் தவளைக்கண்ணன்
வான்வழியாக குரங்கு வந்தது. தென்னை ஓலைகளைப் பற்றி தாவி துள்ளி கேசவன்நாயரின் வீட்டின்மேல் வந்து அமர்ந்தது
துரத்தி வந்தவர்கள் கூச்சலிட முன்னால் வந்த ஞானகுரிசு “மாதேவன்பிள்ளை கையிலே இருந்த எட்டுகட்டை டார்ச்சை பிடுங்கிப்போட்டுது” என்றார்
“அது எங்க இப்பம்?”
“கையிலே வச்சிருக்கு”
“கையிலே இல்லியே”
“அப்பம் கீள போட்டுது போல… ஏலே வாற வளியிலே பாருங்கலே”
“எளவு ,கொரங்காலே சீவிக்க வளியில்லியே…”
“ஒண்ணுக்கடிக்கும்பம் புடுக்க பிடுங்கீட்டுப்போற எனமாக்கும்”
“ஆருக்க புடுக்க?” என்றான் அனந்தன்
“வாய மூடுலே, வீட்டுக்குப்போ”
“ஆருக்க புடுக்கு?”என்று கொச்சு கல்யாணி அனந்தனிடம் ரகசியமாக கேட்டாள்
“மாதேவன் பாட்டாவுக்க புடுக்கு” என்று அனந்தன் மேலும் ரகசியமாகச் சொன்னான்
“அய்யோ” என்று அவள் வாய்பொத்தி சிரித்தாள்
“சிரிக்காத குட்டி… அவரு பாவம்லா?”
“ஆமா” என்று சொன்னபோது கொச்சுகல்யாணிக்கு துக்கம் வந்தது.
குரங்கு வாழைப்பழத்தை பார்த்துவிட்டது. “பாக்குது! பாக்குது!”
“ஏலே ஒரு சத்தம் வரப்பிடாது!”
அனந்தன் இருகைகளாலும் வாயை மூடிக்கொண்டான்.
கேசவன் நாயர் “இருந்தாலும் நம்ம வீட்டுலேதானேலே வந்து கேறிச்சு… அந்தக்காலத்திலே நம்ம மாமன் ஒருத்தரு அனுமான் பக்தராக்கும்”என்றார்
“ஏமானே வாய பொத்தணும் கேட்டுதா?”
குரங்கு தொழுவத்துக்கூரைமேல் பாய்ந்து வைக்கோபோர் வழியாக வாழைப்பழம் தொங்கிய மரத்தை அடைந்தது.
அதை கூர்ந்து நோக்கியது. வாயை குவித்து கையால் சொறிந்துகொண்டது
“கண்ணடிக்குது”
“சும்மாருலே”
கண்ணி வழியாக கையை விட்டு சீப்பை எடுத்தது. உடனே கண்ணி இறுக அது வாழைப்பழத்தை வெடுக்கென இழுத்தது. அதன் கை இறுகியது. அது தலைகீழாக துள்ளி திமிறி குதிக்க கை நன்றாகவே சிக்கிக்கொண்டது
“தவளைக்கண்ணா நீ ஆளு கெஜகில்லிடே”
”ஆரும் சத்தம்போடப்பிடாது…”
“கொரங்க பிடிடே”
“சாக்கு! சாக்கு எங்க!?”
கையில் பெரிய உரச்சாக்குடன் தவளைக்கண்ணன் மரத்துக்கு கீழே போனான். மடேரென்று அவன் மண்டையில் ஏதோ விழுந்தது. ”எனக்க அம்மோ!” என அவன் அலற குரங்கு காலை கவட்டி வைத்து அவன்மேல் மூத்திரம் சீறியது
“எட்டுகட்டை டார்ச்சு!”
“ஏலே டார்ச்சு கிட்டிப்போச்சு”
“எங்கிணலே வச்சிருந்தது?”
“எடதுகாலிலே என்னமோ வச்சிருந்தது… இதாக்குமா?”
தவளைக்கண்ணன் ”அய்யோ! எனக்க கண்ணு.. எனக்க கண்ணிலே மூத்திரம்!” என்றான்.
கேசவன் நாயர் ”ஏலே அவன போயி தூக்குங்கலே” என்றார்
லாரன்ஸ் ஓரடி வைக்க எட்வர்ட் முத்தன் “ஏலே வேண்டாம்.. உனக்க மேலேயும் அது மூத்திரம் பெய்யும் பாத்துக்க” என்றான்
லாரன்ஸ் தயங்கி “அண்ணா, லாசரண்னா, அப்டியே நெரங்கி முன்னாலே வாருங்க… மொள்ளமாட்டு வாருங்க” என்றான்
குரங்கு கையை இறுக்கிய கயிற்றை பல்லால் கடித்து அறுத்துவிட்டு வாழைச்சீப்புடன் கேசவன் தம்பியின் வீட்டுக்குமேல் சென்றது
“இனியிப்பம் நான் தினமும் இங்க வாளைப்பளம் வைக்கணுமாலே? இல்லேண்ணா எளவு நம்மளையில்லா கடிக்க வரும்?”
தவளைக்கண்ணன் தவழ்ந்து வர லாரன்ஸும் முத்தனும் அவனை சென்று பிடித்து தூக்கிக்கொண்டனர்.
“மூத்திரம் பேஞ்சுப்போட்டே” என்று தவளைக்கண்ணன் அழுதான்
“கேசவா, குரங்கு மூத்ரிச்சா என்னடே ஜோசிய பலன்?”
“நீ உள்ள போ கெளவீ.. உனக்கென்ன இங்க சோலி? ஆம்புளைங்க பேசுதோம்லா?”
“இனியிப்போ அது மரண பலமா இருந்த என்ன செய்ய?” என்றாள் கிழவி.
“அய்யோ எனக்க மாதாவே” என்றான் தவளைக் கண்ணன்
“நீரு சும்மா இரும் லாசரண்ணா, அது நாயர்மாருக்க பலனாக்கும். நாம சத்யகிறிஸ்தியானிகள்லா?”
“லே ,கொண்டுபோயி குளிப்பாட்டுங்கலே, நாறுதான்லா”
“தொடாதீய… தள்ளுலே”
கருப்பன் வெறிகொண்டு தவளைக்கண்ணனை குரைத்தது. தங்கநாடாரின் கீறனும் கீழவீட்டு வெளுத்தானும் சேர்ந்துகொண்டன
“பட்டி கடிச்சுப்போடும்போல இருக்கே”
“ஏலே கூட வாருங்கலே, பட்டி கடிக்க வருதுலே” என்றான் தவளைக்கண்ணன்
கூட்டமாக அனைவரும் ஆற்றுக்குச் சென்றனர். வீட்டுமுகப்பில் எழுந்து நின்ற கரடி “ஏலே என்னலே?” என்றார்
“கொரங்கு மூத்திரம் அடிச்சிருக்கு”
“மூத்திரமா? எதுக்கு?”
“அதுக்கு பீ வரல்லியாம்” என்றான் லாரன்ஸ்
‘டேய் உனக்கும் எனக்கும் பேச்சில்ல? வேதக்காரனுக எனக்க கிட்ட பேசவேண்டாம்” என்று கரடி கூச்சலிட்டார்
“அவன விடுங்க…அவன் குளிச்சட்டு”
தவளைக்கண்ணனைச் சூழ்ந்து ஏராளமான நாய்கள் வெறிகொண்டு வால்சுழற்றி எம்பி எம்பி குரைத்தன.
“நான் சாவுதேன்! ஏசுவே மாதாவே நான் சாவுதேன்!”
“சும்மா இருலே… ஆனை ஒண்ணுக்கடிச்சவன்லாம் அசராம நிக்கான்… கொரங்குக்கு அளுவுதே”
தவளைக்கண்ணன் ஆற்றில் உடையுடன் மூழ்கினான். அவன் வேட்டி உப்பி எழுந்தது.
“அவனுக்க ஆத்மாவாக்கும் அது” என்றார் ஆசாரி பிரமநாயகம்
“ஏலே வல்லவனும் கொலவை இடுங்கலே… ஒரு மங்கள கர்மம்லா நடக்குது!” என்றார் சுந்தரன் நாயர்
யாரோ “கூ!” என்று கூவ மொத்தக்கூட்டமும் கூச்சலிட்டது. நாய்கள் உடனே குரைப்பை ஊளையாக மாற்றிக்கொண்டன
தவளைக் கண்ணன் கண்ணீருடன் விசும்பியபடி கரைக்கு வந்து தலையை கையால் துவட்டினான்
“செரி வாடே போவம்… விடு. அப்டி உனக்கு விதியுண்டானா என்ன செய்ய?
“லாசரண்ணா நாம அந்தோணியாருக்கு ஒரு செபம் செய்துபோடுவோம்”
“மிருகங்களுக்குண்டான ஜெபம்னாக்க பிராஞ்சியாருக்காக்கும்” என்றான் ஞானகுரிசு
“நாம இவனுக்குல்லா செய்யுதோம்”
மேலே கூச்சல் ஓசைகள் கேட்டன.
“என்னடே?”என்றார் கேசவன் நாயர்
மேலிருந்து படிகளில் பாய்ந்து இறங்கிவந்த அனந்தன் “டீக்கனாரு வாறாரு… டீக்கனாரு கொறவனைக் கூட்டிட்டு வாறாரு! கொறவன் கொரங்கோட வாறான்!” என்றான்
“எதுக்குலே கொறவனும் கொரங்கும்!”
“ஏலே அது படிச்ச கொரங்காக்கும்… அத வச்சு காட்டுகொரங்க வெரட்டுவானுக… போலீஸ வச்சு கள்ளன வெரட்டுத மாதிரி”
கேசவன் நாயர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேலே சென்றார். பிறரும் கூடவே ஓட தவளைக்கண்ணன் “லே விட்டுட்டுப் போகாதீங்கலே, பட்டி கடிச்ச வருதுலே” என்றான்
கேசவன் நாயர் மேலே சென்றபோது டீக்கனார் மேலாடையை தோளில் சுற்றிக்கொண்டு அவர் வீட்டு முற்றத்தில் நின்றிருந்தார்
“டீக்கனாரே கொரங்கு எங்க?”
“அந்நா உனக்க வீட்டுக்குமேலேல்லா நிக்குவு?”
“நான் கேட்டது படிச்ச கொரங்க”
“அந்நா வருது… கொறவன், ஒரு ரூவா கூட கேக்குதான். இது கருங்கொரங்கு, பெரிசுங்குதான்… பெருவட்டரு பேசிட்டிருக்காரு”
பெருவட்டர் “கருங்கொரங்க நீ வெரட்டு…பிறவு ஒரு ரூவா கூட்டித்தாறேன்” என்றார்
“சாமி கொரங்கு மாருதி… ஹனுமான்…”
”அதுக்குத்தான்லே காசு… பின்ன உனக்கா பைசா குடுப்பான்”
கரடி “குடுக்கேன்டே. நீ அந்த எளவ வெரட்டி விடு” என்றார்
அவன் குரங்கின் கழுத்து கட்டை அவிழ்த்து அதை பிடித்துக்கொண்டுவந்து கருங்குரங்கை காட்டினான்
கருங்குரங்கு மேலே கூர்ந்து நோக்கியபடி குவிந்து அமர்ந்திருந்தது.
நாட்டுக்குரங்கு மூக்கை சுளித்தது. பர்ர் என இளித்தது. சொறிந்தது. அதன் உடலில் மயிர்கள் சிலிர்த்தன. அது வீங்கியது. “பர்ர்! பர்ர்!” என்றது
“என்னமோ கடலுசாடி சீதைய தூக்கீட்டுவாற சேலுதான்” என்றார் பெருவட்டர்
நாட்டுக்குரங்கு பக்கவாட்டில் பாய்ந்தது
“ஏலே பிடிலே… ஓடுதுலே” என்றார் கரடி
குரங்கை கண்டதும் அனைவரும் ஓடி விலக அது கையை ஊன்றி தாவித்தாவிச் சென்றது, நெல்சனும் லாரன்ஸும் குச்சிகளுடன் நாய்களிடமிருந்து பாதுகாத்து கூட்டிவந்த தவளைக்கண்ணனை கண்டதும் பயங்கரமாகச் சீறி அவன் மேல் எகிறிப்பாய்ந்தது
தவளைக்கண்ணன் அலறியபடி கீழே விழுந்தான். குரங்கும் அவனும் கட்டிப்புரண்டனர். “காதக்கடிக்கே ! காதை கடிச்சுப்போட்டே! எசுவே மாதாவே!”
நெல்சனும் லாரன்ஸும் குரங்கை அடிக்க புரண்டுவந்த தவளைக்கண்ணன் அடிகளை வாங்கிக்கொண்டான் “அடிக்காதீய! அடிக்காதிய லே அடிக்காதியலே!”
குரங்கை தன் மேல் இருந்து பிடுங்கி வீசிவிட்டு வெறியுடன் ஓடிப்போய் கரடியின் வீட்டுக்குள் புகுந்து அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்ட தவளைக்கண்ணன் உள்ளிருந்து “ஏசுவே! மாதாவே!” என்று கூச்சலிட்டான்.
குரங்கு உறுமியபடி கைகளை வீசி வீசி ஊன்றி துரத்திச்சென்று வீட்டுக்குள் புகுந்து அதே வேகத்தில் பிரீச் என்று கத்தியபடி வெளியே வந்தது. தங்கம்மை ஒரு குச்சியுடன் அதை அடித்தபடி வந்தாள்
குரங்கு மாமரத்தின்மேல் ஏறிக்கொண்டது. கரடி ஓடிவந்து “ஏலே பிடிலே… பிடிலே” என்றார்
”செரி, இப்பம் ஊரிலே ரெண்டு கொரங்காச்சு” என்றார் பெருவட்டர்
“நீரு வாய மூடும்வே” என்று கரடி கூச்சலிட்டார்
[ 3 ]
மகாதேவர் கோயிலின் முகப்பில் விளாமரத்தடியில் இருந்த கற்படிகலில் பிடாகைக்கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது. கரடி அவருடைய நாயுடன் வந்தார். நாய் முற்றத்தில் சற்று தள்ளி வாலை நீட்டி அமர்ந்து உள்ளே அமர்ந்திருப்பவர்களைக் கூர்ந்து பார்த்தது. பெருவட்டர் “அப்பம் தொடங்கீருவமா?”என்றார்
“போற்றி வரட்டு” என்றார் டீக்கனார்
கேசவன் நாயர் “நான் எனக்க காரியத்தைச் சொல்லியாச்சு.. எனக்க வீட்டை ஓடுவேயுத காசை ஊருபணத்திலேருந்து தரணும்” என்றார்
“அது என்னத்துக்குடே? உனக்க வீட்டை கொரங்கு உடைச்சா அது உனக்க விதி…”
”அந்தப்பேச்சை நீரு உம்ம வேதக்காரப் பள்ளியிலே சொன்னாப்போரும்… மாமா மாமன் சொல்லணும்… மாமன் எனக்க கிட்ட சொன்னதென்ன?”
“நீரு என்னவே சொன்னீரு?”என்றார் பெருவட்டர்
“நான் சொன்னது என்னண்ணாக்க, இப்ப அந்தக்கொரங்கு இவன் வீட்டுக்குமேலே கேறி இருக்கு. அது அங்கிண பதிவாக்கியாச்சு. அதை அங்கேருந்து தொரத்தினா இன்னொரு வீட்டுக்குமேலே ஏறி இருக்கும். அப்ப அந்த வீடும் உடையும்… எதுக்கு ஊரிலே எல்லா வீட்டையும் உடைக்கணும்?”
“அதனாலே கொரங்க வெரட்டாதேடா கேசவாண்ணு சொன்னாரு… நான் செரீண்ணேன். என் வீடு உடைஞ்சது ஊருல உள்ள மத்த வீடு உடையப்பிடாதுண்ணாக்கும்”
“அதிப்பம் சொல்லப்போனா எல்லாருக்கும் நட்டம் உண்டு… பத்து வாளைக்கொலையாக்கும் எனக்கு போனது… இந்தா இவன் வீட்டுக்க முன்னால வச்சிருந்த பயறு அம்பிடும் வாரித்தின்னாச்சு”
நாணுக்குட்டன் நாயர் “பிள்ளைகளுக்கு வெளியே எறங்கி நடக்க முடியல்ல… எனக்க சுஜாதைக்க ஜாக்கெட்டையும் உள்பாடியையும் எடுத்திட்டு போச்சு”
“அம்மிணி இப்பம் அது போடுகதில்லியா?” என்றான் லாரன்ஸ் “பாத்தா சொல்லமுடியாது”
“செருப்பாலே அடிப்பேன்…ஏலே என்னலே பேசுதே?எரப்பாளி!”
“சண்டை வேண்டாம்… நாம பேசுகதுக்காக்கும் வந்தது” என்றார் பிரமநாயகம் ஆசாரி
“வே ஆசாரி, தச்சு சாஸ்திரத்திலே வல்ல வளியும் உண்டாவே?”
“மரத்தாலே ஒரு பொறி செய்யலாம்… அது உள்ள நுழையுறப்ப மூடீரும்…எலிப்பொறி மாதிரி”
“அதுக்கு என்னத்துக்குவே பொறி? வீட்டுக்குள்ள நுழையறப்ப கதவமூடினா போராதா?”
“ஆளாளுக்கு பேசவேண்டாம்!”
‘பேசவேண்டியவுங்க பேசணும்… கண்டவனும் பேசினா அதுக்கபேரு பிடாகையிருப்பா?”
“நாயம்மாரு பேசட்டும்”
“அப்பம் நாடாக்கமாரு இருந்து நொட்டணுமா? லே ஆருலே அவன்?”
“அமைதி அமைதி”
கேசவன் நாயர் “அந்த கொரங்க வெரட்டுத வளியப்பாருங்க… அது எனக்க வீட்டுக்க மேலேயாக்கும் இருக்கது” என்றார்
”இருக்கது உம்ம வீட்டுக்குமேலே… வெளிக்கெறங்கி வைக்குதது எனக்க முற்றத்திலே… எனக்க வீடும் தோட்டமும் நாறிக்கெடக்கு” என்றான் நாராயணன்
“அது நீரும் உமக்க பிள்ளையளும் வெளிக்கெறங்குத எடம்தானே வே?”
“எனக்க மண்ணு அதில நான் வெளிக்கெறங்குவேன். எனக்க பிள்ளைய வெளிக்கெறங்கும். எதுக்குவே கண்ட கொரங்கு அங்க வந்து வெளிக்கெறங்கணும்?”
“நாராயணா வேய் நீரு அடங்கும்… இப்பம் என்ன பிரச்சினை?”
“என்ன பிரச்சினைன்னா கொரங்கு பிரச்சினை” என்றார் ஞானகுரிசு. “கொரங்கு இந்துவாக்கும். அது உண்டாக்குத நட்டத்துக்கு இந்துக்கள் கணக்கு சொல்லணும்”
”ஆருவே சொன்னது கொரங்கு இந்துண்ணு” என பெருவட்டர் எகிறினார்
“அது ராமாயணத்திலே உள்ளதுல்லா?”
“அது சத்யமாக்கும்” என்றார் கரடி
“நாம பேசவேண்டியதை பேசுவோம்… இப்பம் இந்த கொரங்க என்ன செய்ய?”
“ஒரு வார்த்தை சொல்லுங்க… நாங்க பாத்துக்கிடுதோம். கருங்கொரங்கு லேகியத்துக்கெல்லாம் நல்ல மதிப்பாக்கும் இப்பம்” லாரன்ஸ் சொன்னான்.
“அந்தப்பேச்சு வேண்டாம்? ஹனுமான் பாவம் நாட்டுக்கு நல்லதில்லை”
“இப்பம் என்ன செய்ய? வேய் கரடி அதை சொல்லும்வே”
“நாம சர்க்காருக்கு ஒரு மனு எளுதலாம்…”
“என்னண்ணு?”
’இந்தமாதிரி கருங்கொரங்கு வந்து ஊரை அளிக்குது. வெள்ளாமை அளியுது. பிள்ளைக பள்ளிக்கூடம் போகமுடியல்ல” என்றார் கரடி
“அதெல்லாம் எளுதினா சர்க்காரு மயிராட்டு பாக்கும்… கருங்கொரங்கு வந்து சர்க்காருக்க மொதலுகளை அளிக்குதுண்ணு எளுதணும்” என்றான் லாரன்ஸ்
“சர்க்காருக்க மொதலுண்ணா?”
“கருங்கொரங்கு பஞ்சாயத்து ஆப்பீஸை உடைக்குது… அங்கிண உள்ள பேப்பரையெல்லாம் கிளிக்குது”
”அது வேண்டாம்” என்றார் கரடி. “சர்க்கார்னா இன்னும் பெரிய கொரங்காக்கும். பேனும் பாக்கும் காதையும் கடிக்கும்”
”சும்மா எளுதுவோம்… நாம என்ன எறங்கிய ஒடைக்கப்போறம்?”என்றார் டீக்கனார்
“செரி அப்ப அதாக்கும்…நாம மனு எளுதுதோம். கரடி வே நீரு எளுதணும்”
“எல்லாரும் ஒப்பிடணும்” கரடி சொன்னார்.
“கைரேகைதானே? அது பத்துரேகை நான் போட்டுத்தாறேன்”
’நானும் போடுதேன் பத்து” என்றார் டீக்கனார். “பொறவென்ன? பேச்ச விடுங்க. செரி கெளம்புங்க. போரும். இவனுகள பேசவிட்டா வெளுக்க வச்சிருவானுக”
“அப்ப எனக்க வீட்டுக்க ஓடு?” என்றார் கேசவன் நாயர்
”அத பிறவு பாப்பம்… கொரங்க பிடிச்ச பிறவுல்லா அந்த சோலிய பாக்கணும்?”
“ஹணிமூனுக்கு அம்மை நேந்துகிட்ட காசும் கிட்டணும்… ஊருக்காகவாக்கும் அம்மை நேந்தது” என்றான் ராமன் நாயர்
“என்னது?” என்றார் கரடி திகைப்புடன்
“ஹணிமூண் … ஹனுமானுக்கு இங்கிலீஷ்லே”
“வெளங்கீரும்” என்று கரடி கக் கக் கக் என்று வெற்றிலைவாய் காட்டி சிரித்தார் “லே இங்கிலீஷ்னா என்னான்னு நினைச்சே? தேவபாசையாக்கும்? ஒரு தப்பு சொன்னா அதுக்குண்டான தண்டனை உண்டு… என்ன வெளையாட்டா? இல்ல கேக்கேன்”
“செரி போங்கலே… லே போங்கலே… பஞ்சாயத்து முடிஞ்சாச்சு… போங்கலே”
மாதேவன் பிள்ளை “எனக்க டார்ச்சுக்க பல்பு போச்சு” என்றார்
“பஞ்சாயத்து முடிஞ்சாச்சு… போங்க”
அனைவரும் பேசியபடியே கலைய டீக்கனாரிடம் கரடி “என்னவே?” என்றார்
“கதளிச்சாறு இருக்கு” என்றார் டீக்கனார், ரகசியமாக
“எங்க?” என்றார் கரடி பரம ரகசியமாக
”நம்ம மரச்சீனி வெளையிலே… புதைச்சுபோட்டுட்டு வாறேன்… நல்ல நயம் சரக்கு… உச்சைக்காக்கும் ஊளையன் கொண்டுவந்து தந்தான்”
“நீரு பஞ்சாயத்திலே இருந்த இருப்ப பாத்தப்பமே நினைச்சேன்” என்றார் கரடி “போவமா?”
“அம்மிணிகிட்ட சொல்லிட்டு வரணும்…தேடும்லா”
“வே பெருவட்டரே, நீரு சொல்லும்வே. நான் சொன்னா கடிச்சு திங்க வருவா” என்று கரடி பம்மினார்
“வெசாலமே, நானும் உனக்க நாயரும் அந்த கொரங்கப்பத்தி ஒரு காரியம் பாத்திட்டு இப்பம் வாறம் கேட்டியா?”என்றார் பெருவட்டர்
“ஆமா. அறியிலாம் எங்க போவுதுண்ணு” என்றபடி தங்கம்மை வெளியே வந்தாள் “ராத்திரியிலதான் போவணுமா? ஊருதவர்க்கம் உள்ள எடமாக்கும்”
“பட்டி கூட வருதுல்லா?”
“செரி போய்ட்டு வாங்க… பகலிலே போயி ஊரு கண்ணிலே பட்டு நாறுததுக்கு இது நல்லதாக்கும்”
“நீ எப்டிடீ குட்டீ கண்டுபிடிச்சே?’ என்றார் டீக்கனார்
“இந்நா, இவருக்க வாயயும் கண்ணையும் பாத்தா தெரியாதா? மீனு கண்ட பூனை மாதிரி”
“அவரு அப்டி ஆசைப்படுவாரு… ஒரு குப்பிமூடி குடிச்சதுமே பின்ன வியர்த்து கரைஞ்சு நாறி ஊறிருவாரு… பித்த உடம்பாக்கும்”
‘பாத்து கூட்டிட்டுப்போங்க” என்றாள் தங்கம்மை “பெருவட்டரே உம்மையாக்கும் நம்பி ஒப்படைக்கியது”
“பெத்த பிள்ளை மாதிரி கூட்டிட்டு வாறேண்டீ”
அவர்கள் கிளம்பியபோது டீக்கனார் “வே, இந்த தடவை சலம்பினீருண்ணா சவிட்டீருவேன்” என்றார்
‘இல்ல” என்றார் கரடி
“என்ன இல்ல?”
“சலம்ப மாட்டேன்”
“போனதடவை இங்கிலீசுல்லா பேசுனாரு?”என்றார் பெருவட்டர்
“அதைத்தான் சொன்னேன்”
அவர்கள் ஆற்றில் இறங்கி மணல் வழியாக நடந்து மரவள்ளி தோட்டத்தில் நுழைந்தனர். நிலா எழுந்துவிட்டிருந்தது. ஆற்றுநீர் நிலவொளியில் மின்னியது. கருப்பன் முன்னால் ஓடி வழியை முகர்ந்து பிரச்சினை இல்லை என அறிவித்து அவர்களை அழைத்துச் சென்றது
“தென்னை ஓலைல்லாம் நிலாவிலே எப்டி மின்னுது… எண்ணை தேச்சமாதிரி” என்றார் பெருவட்டர்
டீக்கனார் ”சத்யகிறிஸ்தியானிகள் குடிக்கப்பிடாது, பாவமாக்கும்” என்றார். “உங்களுக்காகவாக்கும் நான் வாறது”
“அப்பம் நீ வராண்டாம்வே… போவும்”
“உங்களுக்கு வளி தெரியாதே”
“வளி நாங்க பாத்துக்கிடுதோம்”
“ஆனா சத்யகிறிஸ்தியானிகள் பாவமன்னிப்பு எடுக்க வளியுண்டு”
‘நீரு சி.எஸ்.ஐல்லா?”
“கர்த்தாவு ஒண்ணுதானே?”
அவர்கள் தோட்டத்திற்குள் சென்று அமர்ந்தனர். டீக்கனார் மண்ணை அகழ்ந்து குப்பியை எடுத்தார். மரக் கார்க் போட்டு இறுக மூடியிருந்தது.
“கதளிப்பழ மணம்” என்றார் கரடி
“ஊறாதீரு” என்ற பெருவட்டர் அதை கடித்து திறந்தார்.
கரடி ‘சிப்ஸு கொண்டுவந்து வச்சிருக்கான்வே” என்றார் . ஒரு துண்டு வாயிலிட்டு “நல்ல காரமுள்ள சிப்ஸாக்கும்”
கருப்பன் வாலை சுழற்றி எம்பி எம்பிக் குரைத்தது
“ஏலே சும்மாருலே”
டீக்கனார் சென்று அங்கே தென்னை ஓலைகளுக்கு கீழே பறித்து போடப்பட்டிருந்த இளநீர் குலைகளை எடுத்துவந்தார். அரிவாளை எடுத்துவந்து அவற்றை செதுக்கி திறந்தார். கொஞ்சம் குடித்துவிட்டு அதில் சாராயத்தை ஊற்றினார்.
“ஒருவாய்…வே ஒருவாய்”
“நில்லும்வே நாயரே….இவன் என்ன சாவுத மாதிரில்லா நிக்கான்”
அவர் குடித்து பின் கரடிக்கு அளித்தார். அவர் ஒருவாய் குடித்ததும் பெருவட்டருக்கு. அவர்கள் மாறி மாறி குடித்தனர்.
டீக்கனார் இன்னொரு இளநீர் வெட்டிக்கொண்டார்
கருப்பன் வெறிகொண்டு குரைத்தது
‘அவனுக்கு என்னவே?’
“எலியோ மற்றோ பார்த்திருப்பான்”
ர்ர்ர் என்ற ஓசை கேட்டது.
“வயிறு உறுமுதுவே”
“இல்லவே இது வேற”
“பாம்பா?”
“பாம்பு உறுமுமா? ஆருலே இவன்?”
“லே, இங்க பாரு . அவனாக்கும்”
அவர்கள் அருகே கருங்குரங்கு அமர்ந்திருந்தது. அதன் கண்கள் மட்டும் மின்னித்தெரிந்தன
கருப்பன் பாய்ந்து பின்னால் சென்று வாலை கவட்டையில் செருகியபடி ஊளையிட்டது
“லே சும்மாரு… லே கருப்பா…போ”
“கடிச்சுப்போடுமோ?”
“எளநீருக்கு வந்திருக்கு”
“குடும்வே”
“சாராயம் விட்டிருக்கே?”
“அதிலே கதளிப்பழ மணம்லா? குடுத்துப்பாரும்”
டீக்கனார் இளநீரை நீட்டினார். கருங்குரங்கு அருகே வந்து இருகைகளாலும் வாங்கி முகர்ந்தது. குமட்டலுடன் உடல் உலுக்கி கீழே வைத்துவிட்டது
“அதுக்குப் பிடிக்க்கேல்ல வே”
ஆனால் மீண்டும் எடுத்து முகர்ந்தது. உடலை உலுக்கி குமட்டல்போல காட்டி தரையில் வைத்தது. அரைவாசி திரும்பி அமர்ந்து ஓரக்கண்ணால் அதை பார்த்தது. மிகமெல்ல கைநீட்டி அதை எடுத்தது. மீண்டும் முகர்ந்து ர்ர்ர் என்றது. கையில் வைத்துக்கொண்டு கழுத்தை இறுக்கியது. பின் ஒரே மூச்சில் வாயில் வைத்து குடித்தது. உடலை இறுக்கியது, பின் பாய்ந்தெழுந்து துள்ளி தன்னைத்தானே சுற்றியது
”இந்தா இந்தா”என்று டீக்கனார் மரவள்ளிக்கிழங்கு சிப்சை நீட்டினார். கருங்குரங்கு அதை வாங்கி வாயிலிட்டு மொறுமொறுவென்று தின்றது. வாயைத் திறந்து அண்ணாந்து தவித்தது
“பாவம்லே… விட்டிரு”
“ஒரு சாதா எளநீ குடுப்பம்… பாவம்லா?” என்றார் கரடி
“ஆமா, காரத்துக்கு நல்லதாக்கும்”
கரடி நீட்டிய சாதாரண இளநீரை குரங்கு வாங்கிக்கொண்டது. ஆனால் முகர்ந்துவிட்டு கீழே வைத்து முந்தைய இளநீரை சுட்டிக்காட்டியது
“வே, அது கேக்குதுவே”
“ஆமா, கேக்குது”
“அய்யடா… இவன் ஆளு ஜெகஜில்லியாக்குமே”
டீக்கனார் இளநீரில் கொஞ்சம் சாராயம் கலந்து குரங்குக்கு கொடுத்தார். அது இருகைகளாலும் எடுத்து ஒரே மூச்சில் குடித்து ”ஊ! ஊ! ஊ !”என்றது
அவர்கள் மீண்டும் இளநீரில் சாராயத்தை கலந்து குடித்தார்கள். கருப்பன் வந்து கருங்குரங்கை தொலைவில் நின்றே மூக்கை நீட்டி மணம்பிடித்தது
“எரியுதுடே”
“அசலாக்கும்… ஊளையன் ஆளு சயன்டிஸ்டுல்லா!”
குரங்கு தரையில் கையால் அறைந்து உறுமியது. டீக்கனார் இளநீரை எடுத்தபோது அது புட்டியைச் சுட்டிக்காட்டியது
“ஊத்திக் கலந்து குடிச்சுப்போடும்போல!”
அவர் கலந்து கொடுத்ததை குடித்துவிட்டு குரங்கு வந்து கரடியின் கையில் இருந்து சிப்ஸை பிடுங்கி தின்றது
“தோஸ் சிப்ஸ் ஆர் குட்! ஆக்சுவலி சிப்ஸ் ஆர் குட்! தேட் ஈஸ் சிப்ஸ் ஆர் குட் ஃபார் மென்!”
“தொடங்கிப்போட்டானே”
“சிப்ஸ்! வைட்மென் ஈட் சிப்ஸ். பிளாக் மென் ஈட் கிளங்கு… டாப்பியோக்கா கிளங்கு இஸ் ஃபார் பிளாக் மென்!”
“சவிட்டீருவேன்… ஏலே சவிட்டீருவேன்”
குரங்கு உர்ர் என்றது
“கேக்குது”
“இல்லலே அது குப்பி கமத்தியாச்சு”
கருப்பன் குரங்கின் அருகே வந்து நின்று வாலை ஆட்டியது
குரங்கு குப்புறப்படுத்தது. பின்னர் மல்லாந்து படுத்தது. வாயை திறந்து இளிப்பதுபோல வைத்துக்கொண்டது
“சிரிக்குவு!” என்றார் பெருவட்டர் “கொரங்கு சிரிக்குவு! அனுமாருக்க சிரிப்பாக்கும்”
டீக்கனார் “ஏசுவே! ஏளைகளை ரெட்சியும் ஆண்டவரே” என்றார்
“சிப்ஸ் ஆர் குட் ஃபர் மென். சிப்ஸ் ஆர் வெரி ஹாட். குட்மென் வேர் ஹேட்ஸ் ஆண்ட் வைட் மென் ஆட் குட்!”
’”லே, இவனைக் கொன்னுட்டு நானும் சாவேன்”
“நீ சும்மா இருடே… அவன் படிச்சவன்லா?”
’லே அவனும் நானும் சேந்துல்லா படிச்சோம்? அவனுக்கு சர்க்காரு சோலி. என்னைய எனக்க அப்பன் பிடிச்சு பெண்ணுகெட்டி வச்சுப்போட்டாரு…”
“ஆக்சுவலி சிப்ஸ் ஆர் குட். தேட் ஈஸ் சிப்ஸ் ஆர் வெரிகுட்”
“இவன் மூணாம்கிளாஸிலே இருந்து பாத்தெளுதி ஜெயிச்ச்சாம்லே… எனக்க அப்போ, நான் படிக்கேல்லியே! நான் பாளாப்போனேனே!”
குரங்கு மல்லாந்து படுத்தது.
“கரப்பாம்பூச்சி மாதிரில்லாவே உறங்கீட்டிருக்கு”
கருப்பன் அதை முகர்ந்து பார்த்தது. பின்னர் கரடியிடம் வந்து முகர்ந்தது
‘லே அவன் உனக்க சித்தப்பன்லே… பாத்துக்கலே மக்கா” என்றார் டீக்கனார் கருப்பனிடம்
“சிப்ஸ் ஆர் நாட் குட் ஃபார் பூவர் பீப்பிள்! எஸ்! தேட் ஈஸ் சிப்ஸ் ஆர் குட் ஃபார் ஈட்டிங் நாயர்ஸ் ஆண்ட் பிராமின்ஸ்!”
கருப்பன் குரங்கருகே சென்று அமர்ந்துகொண்டது. பெருவட்டர் மேலே பார்த்தார் “நிலாவு என்னமா வட்டமாட்டு இருக்கு” என்று வியந்தார்
டீக்கனார் ”என்னைய சாத்தானுக கிட்டேருந்து ரெட்சியும் பிதாவே! நான் பாவம் செய்துபோட்டேன் கர்த்தாவே” என்றார்
“சாத்தான் உனக்க அப்பன்… லே எனக்க கிட்ட வெளையாடாதே கேட்டியா?”
“எனக்க பொன்னு பிதாவே, என்னைய சாத்தானுக்க கிட்டேருந்து காப்பாத்தும்… என் ஆத்மாவை ரெட்சியும்”
குரங்கு திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தது. கருப்பன் அருகே சென்று அதன் முகத்தை நக்கியது. அது மீண்டும் படுத்துக்கொண்டது
[ 4 ]
காலையில் நன்றாக விடிந்தபிறகுதான் கரடி எழுந்தார். அவருடைய தலை எடையுடன் இருந்தது. சூடாக எதையோ தலையில் ஊற்றியதுபோல. அவர் எழுந்து நின்றதும் பக்கவாட்டில் சாய்ந்து விழப்போனார்
தங்கம்மை வந்து “நிக்கணும்…நிக்கணும்… இதை குடிச்சணும்” என்றாள்
“பாலுவிடல்லியா?”
‘பாலுவிட்டா குமட்டலு வரும்… கட்டன்காப்பி போரும்”
“கசக்குது”
“நேத்து குடிச்சது இனிச்சுதோ?”
‘நீ போடி”
கரடி கட்டன் காப்பியை குடித்து முடித்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.இருமுறை உலுக்கிக் கொண்டார்
“பித்த உடம்புன்னு தெரியும்தானே? பின்ன என்னத்துக்கு அந்த எளவ குடிக்கணும்? மாசம்பொறந்தா ஒரு தடவை இதே கதையா போச்சு” என்று உள்ளே விசாலாட்சி சொன்னாள்
“விடுங்க அம்மிணி… அதுவும் வேண்டியிருக்கோ என்னமோ” என்றள் தங்கம்மை
“நேத்து என்ன பேச்சு… எளவு அதுக்கு இங்கிலீஷ்னு பேரு… சின்னப்பிள்ளைய கேட்டா படிச்சதும் மறந்துபோவும்”
கரடி அவருடைய ஆற்றலனைத்தையும் இழந்து மூட்டைபோல அமர்ந்திருந்தார். உலகமே மங்கலாக இருந்தது
“கரடி வே! கரடி!”
“அந்நா வந்தாச்சு கூட்டாளி.. போங்க”
கரடி எழுந்து மெல்ல நடந்து திண்ணைக்கு வந்தார்
“குளிக்க வாறீராவே?”
‘எனக்கு உடம்பு முடியல்ல”
“வாரும்வே ஒரு குளியலப்போட்டா நல்லாயிரும்… வாரும்”
தங்கம்மை துண்டும் சோப்பும் கொண்டுவந்து கொடுத்தாள். “குளியுங்க. சூடு ஆறட்டு”
கரடி ஈர மண்ணில் யானை நடப்பதுபோல நடந்தார். உலகமே வெளிச் என்று இருந்தது
பெருவட்டர் “நான் நேத்து தொளுத்திலயாக்கும் உறக்கம் கேட்டியா? கொசு கொன்னுபோட்டுது… பொன்னம்மை கதவ திறக்க மாட்டேன்னு சொல்லிப்போட்டா”
கரடி ஒன்றும் சொல்லவில்லை. கருப்பன் அவர்களை வழிகாட்டி அழைத்துச் சென்றது
வழியில் இலஞ்சிமரத்தடியில் கருங்குரங்கு அமர்ந்திருந்தது. கருப்பன் வாலாட்டியபடி ஓடிச்சென்று அதை முகர்ந்தது. கருங்குரங்கு தலையை இரு கைகளாலும் பிடித்திருந்தது
“வே, அதுக்கும் கறக்கம் இருக்குவே” என்றார் கரடி
“பின்ன நயம் சரக்காக்குமே” என்றார் பெருவட்டர்
“வே வாறீரா? ஒரு குளியலப்போடும்” என்று கரடி கருங்குரங்கை அழைத்தார்
“ஆமா, வாரும் வே” என்றது கருப்பன், வாலை ஆட்டி
அவர்கள் செல்ல கருங்குரங்கு கையை ஊன்றி தள்ளாடியபடி நடந்து பின்னால் சென்றது. அவ்வப்போது நின்று தன்னை திரட்டிக்கொண்டது
ஆற்றுப்படியில் டீக்கனார் அமர்ந்திருந்தார்
“வேய் டீக்கானாரு… என்னவே?”
‘போவும்வே… நான் இண்ணைக்கு கோயிலுக்குப் போகணும்”
“போலாம்வே… வாரும் குளிப்போம்”
“குடி எங்களுக்குச் சாவான பாவமாக்கும் தெரியுமா?”
“பின்ன? இந்துக்களுக்கு புண்ணிய கர்மம்லா? பேசாம வாரும்வே”
“இது ஏம்வே இப்டி வருது?”
“நீருல்லாவே இதை குடிக்க வச்சீரு? நல்லோரு குரங்க குடிகாரனாக்கிப்பிட்டீரே வே?”
“ஏசுவே ராசாவே!” என்றார் டீக்கனார் “பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே என்னை மன்னியும்”
“மெல்ல விளிச்சுகூவும்வே… மேலே கேட்டா அந்தால வந்து கூட்டிட்டு போயிரப் போறாரு… நீரு புள்ளைக்குட்டிக்காரனாக்கும்”
அவர்கள் துண்டை கட்டிக்கொண்டு குளிர்ந்த நீரில் இறங்கி மூழ்கினர். கரடி எழுந்து வழுக்கை தலையை கையால் நீவினார். பெருவட்டர் தலைமுடியை விரல்விட்டு கோதினார். டீக்கனார் கழுத்தளவு நீரில் அமந்திருந்தார்
குரங்கு நீரில் இறங்கி தலையை நீரில் முக்கி அலம்பிக்கொண்டது. மூச்சொலியுடன் எழுந்து தலையை உதறியது. மீண்டும் மூழ்கியது
“குளிக்கத்தெரிஞ்சிருக்குவே” என்றார் டீக்கனார்
”ஒரு வாரம் கூட வச்சிருந்தேருண்ணா நாலு பைபிள் வசனமும் சொல்லிக்குடுக்கலாம். அருமையாட்டு ஜெவம் செய்யும்” என்றார் பெருவட்டர்
‘இவன் ஏன் இப்டி இருக்கான்?”என்று டீக்கனார் கேட்டார்
‘பித்த உடம்பு வே” என்றார் பெருவட்டர்
அவர்கள் குளித்து முடித்து ஈர உடையுடன் மேலே சென்றார்கள். படிகளில் குரங்கும் உடன்செல்ல நாய் வழிகாட்டி கூட்டிச்சென்றது. கரடியின் வீட்டுத் திண்ணையில் அவர்கள் அமர்ந்தனர். கரடி ஈஸிசேரில் கால்நீட்டி அமர்ந்தார். பெருவட்டர் அவருக்கு வழக்கமான திண்ணைமூலையில் அமர தூணில் முதுகைச்சாய்த்து காலை நீட்டி அலுப்புடன் குரங்கு அமர்ந்துகொண்டது
டீக்கனார் “தங்கம்மே, எனக்க செல்லமே, எனக்க தங்கச்சிக்குட்டீ ,அண்ணனுக்கு ஒரு நல்ல சாயை கொண்டு வாடீ!” என்றார்
கொட்டாவி விட்டபடி கருப்பன் முற்றத்தில் படுத்தது. கருங்குரங்கு சலிப்புடன் கருப்பனை பார்த்து வாயைத் திறந்தது.
கரடி கருங்குரங்கை கூர்ந்து நோக்கினார். அது சலிப்பாக அவர்களை பார்த்தது.
கரடி “ஏம்வே பெருவட்டரே, குரங்குவர்க்கத்திலே நாயர் எனம் உண்டா வே?” என்றார்
======================================================================================