தவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்

 

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

 

ஜெ

 

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பழக்கம் கொண்டவர்கள் சேர்ந்துபோவது எளிமையானதாக இருக்கலாம். வசதியானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதில் சேலஞ்ச் இல்லை. அதில் boredom உள்ளது. அந்த அலுப்பினால்தான் பலர் விவாகரத்து வரை போகிறார்கள். இருவருக்கும் ஒருவரோடொருவர் ஒன்றும் புதிதாக கண்டுபிடிப்பதற்கு இருப்பதிலை. ஒன்றும் ஆர்வமும் இல்லை. ஆகவே மிகமிக சம்பிரதாயமான வாழ்க்கை

 

ஆனால் ஆனால் முற்றிலும் வேறுபட்ட இரு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஒரு ரோலர்கோஸ்டர் யாத்திரை. அவர்கள் இருவருமே நுட்பமானவர்களாகவும் புதியவற்றை எதிர்கொள்வதில் ஆற்றல்கொண்டவர்களாகவும் இருந்தால்தான் அந்தப் பயணம் சிறக்கும். இல்லாவிட்டால் ஆரம்பகட்ட ஆர்வத்திற்குப்பின்னர் மனவிலக்கம்தான் வரும். அது பெரிய சவால். நிரந்தரமாக அந்தச் சவாலைச் சந்திப்பது எளிய விஷய்ம் அல்ல.

 

இந்தக்கதையில் இருவருமே இரண்டு உலகத்தைச் சேர்ந்தவர்கள். எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் அருகருகே சென்று கூர்மையாக தொட்டுக்கொள்கிறார்கள். ஒரு அருமையான காதல் தருணம். வாழ்க என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அழகான கதை

 

எம்.ஆர்.கே

 

அன்புள்ள ஜெ

 

தவளையும் ராஜகுமாரனும் கதையில் மீயின் சித்திரம் அற்புதமானது. ஒரு சின்னப்பறவை. அவள் அலைகளின் மேல் எழுந்து பறக்கும் இடத்தில் ஒரு அழகான தேவதையாகவே காட்டிவிடுகிறீர்கள். இவன் இறங்க பயப்படும் அலைகளில் ஏறி திளைக்கிறாள். அவளுடைய உலகமே வேறு. அவளுடைய சிரிப்பும் திறந்த உள்ளமும் மனசைக் கொள்ளைகொள்கின்றன. கதைக்குள் அவள் இயல்பாக வந்து அமைந்துவிடுகிறாள்.

 

ஒரு சின்னக்கதைக்குள் வரும் ஒரு கதாபாத்திரம் இந்த அளவுக்கு நெருக்கமாக ஆவது அபூர்வமாகத்தான் நடைபெறுகிறது. எனக்கு வண்ணதாசனின் ஜூடி அன்னம் [போய்க்கொண்டிருப்பவள்] இப்படி மனசிலே நின்றிருக்கும் ஒரு கதாபாத்திரம்

 

சங்கர்ராம்

 

பூனை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஒவ்வொரு கதையும் ஒரு திசை நோக்கித் திறக்கின்றன. ஆனால் எந்தக்கதையுமே ஒரு லௌகீக தளத்தில் பொதுப்புத்தியைக்கொண்டு சொல்லும் முடிவை நோக்கி வாசகனைச் செலுத்தவில்லை. கவித்துவமான ஒரு உச்சம் எல்லா கதையிலுமே இருக்கிறது. அது அக்கதைகளை அழகாக ஆக்குகிறது

 

பூனை கதை அதன் உச்சம். ஒரு ஃபேபிள் போல இருக்கிறது. குழந்தைக்குச் சொல்லலாம். சொல்லிப்பார்க்கலாமே என்று என் வீட்டில் குவாரண்டைன் அன்று சொல்லிப்பார்த்தேன். சிரிப்பு கொண்டாட்டமாக இருந்தது அந்தக் கதை

 

அப்போதைக்கு கோவிட் நோயைப் பற்றிய கதை என்று தோன்றியது. புலியை பூனையாக்கி மச்சிலே வைத்திருப்பதுதான் நாம் செய்யவேண்டியது. ஏறகன்வே அப்படி பல புலிகள் நம் மச்சின்மேல் உள்ளன. பூனைவடிவில் காசநோய் எய்ட்ஸ் தொழுநோய் காலரா மலேரியா. இதுவும் அங்கே உட்காரத்தான் போகிறது

 

நம்மிடம் வந்து அய்யோ புலி புலி என்பார்கள். நாம் பூனையைப்போய் புலி என்று சொல்கிறார்களே என்று நினைப்போம்.வேடிக்கையான கதை என்றாலும் இந்தியாவின் மனநிலையைக் காட்டிய கதை

 

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

 

பூனை ஒரு அபாரமான உருவகக் கதை. இந்தியாவின் மனநிலையை அந்தக்கதை காட்டுகிறது. நாம் ஒரு தேக்கநிலைச் சமூகம். நம்முடைய செல்வங்களெல்லாம் இருட்டில் புழுதியும் ஒட்டடையும் படிந்து இருக்கின்றன. கீழே நாம் வறுமையில் கஞ்சி குடித்து வாழ்கிறோம். நமக்கு எல்லா புலியும் பூனைதான். எதைப்பற்றியும் கவலை இல்லை.

 

சமகாலம் நம்மை தட்டி எஉப்ப முயல்கிறது. புலிபுலி என்று பயம்காட்டுகிறது. சிரித்தபடி நாம் அதை பூனை என்றே சாதிக்கிறோம். நம்முடைய பழகிப்போன சம்பிரதாயமான தொன்மையான வாழ்க்கையையும் மனநிலையையும்தான் இந்தக்கதையிலே கண்டேன்.

 

எனக்குச் சில கோயில்நகரங்களுக்குச் செல்லும்போது இப்படியெல்லாம் தோன்றியிருக்கிறது. அப்படியே நூறாண்டு பழைய வீட்டுகளாக இருக்கும். நூறாண்டு பழைய மக்கள். எல்லாமே பழையவை அங்கே எந்தப்பொருள் என்றாலும் அவை பழையவை ஆகிவிடுகின்றன. அவை அங்கே அர்த்தமில்லாமல் ஆகிவிடுகின்றன. சுருங்கி பூனையாக ஆகிவிடுகின்றன

 

ராஜேஷ் சுப்ரமணியம்

 

“ஆனையில்லா!” [சிறுகதை]

சென்ற ஆண்டு கோடை விடுமுறையை இரண்டு மகத்தான நாவல்களை வாசித்து பயனுள்ள நாட்களாக கழித்தேன். ஒன்று பிரென்சு மறுமலர்ச்சி காலகட்ட எழுத்தாளர் ரெபலாயின் Gargantua and Pentagural, இரண்டாவது விஷ்ணுபுரம். விஷ்ணுபுரம் வாசித்ததைப் பற்றி ஏற்கனவே உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எதேட்சையாக இந்த இரண்டு நாவல்களும் சென்ற ஆண்டு வாசிப்புக்கு அமைந்து விட்டன. எதேட்சையான வாசிப்பு என்றாலும் இரண்டும் பிரம்மாண்டமானவைகள். ரெபலாய்யை வாசித்து முடிக்கும் போது Bocassioவின் Decameron கண்களை உறுத்தியது. தொடர்ந்து பத்து நாட்களாவது ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் காலையில் ஒரு மணி நேரம். மூன்று மாதத்திற்குள் வாசித்து முடித்துவிடலாம். சென்ற ஆண்டு கல்லூரியில் வேலை சுமை அதிகம். அது கைகூடாமல் போயிற்று. ஐம்பது தமிழ் கவிதைகளை மாத்திரம் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தேன். வாசிப்புக்கு என சிறு சிறு புத்தகங்கள் மட்டுமே சாத்தியப்பட்டன. இந்த மே மாத்தத்தில் Boccaccioவை வாசிக்கலாம் என்ற தீர்மானம் செய்யப்பட்டது.

Decameron (பத்து நாட்கள்) கதைகள் கொள்ளை நோயை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டவைகள். ஏழு இளம் பெண்கள் மூன்று இளம் ஆண்கள் கொள்ளை நோய்க்கு தப்பி Florenceக்கு வெளியே நாட்டு புற மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். பத்து நாட்களை கழித்தாக வேண்டும். அதுவும் அந்த பத்து நாட்களை பயமின்றி அளுப்பின்றி அவர்கள் கழித்தாக வேண்டும். ஒரு முடிவுக்கு வருகிறார்கள். ஒவ்வொருவராக பத்து நாட்களுக்கு ஆளுக்கு பத்து கதைகள் சொல்ல வேண்டும். முடிவில் அவர்களிடம் நூறு கதைகள் இருக்கும்.

நான் சொல்ல வந்தது இதுதான். தனிமைப் படுத்தப்பட்ட இன்றைய சூழலில் Boccaccio போன்று நீங்களும் கதை சொல்ல அழைப்பு ஒன்றை விடுத்து இருக்கிறீர்கள். இந்த நாட்களின் பளுவை இறக்கி வைக்கும் சுமைதாங்கியாக இந்த கதைகளை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் எப்படி என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் உங்களுடைய தொடர்ந்து இரண்டு கதைகள்ஆனையில்லா”, ”வருக்கைசிறுகதைகள் Decameronயை நினைவூட்டியது. ஏனென்று கேட்க்கலாம். இந்த கதைகள் highly erotic. இங்கே நான் சொல்லும் erotic என்பது laughterவுடன் சம்பந்தப்பட்ட erotic. சோகத்தின் புறையொடிப் போன புண்ணை அறுவைசிகிச்சை செய்வது போன்று ஆழத்தில் இருந்து உயிர் திரவம் சிரிப்பாக வெளியே பீறிட்டு பாய்வதை இரண்டு கதைகளை வாசிக்கும் போது ஏற்படுகிறது.

கொள்ளை நோய் வந்து வாரிக்கொண்டு போகும் போது ஏதோ ஒரு இடத்தில் உயிர்ப்பு (சரியான வார்த்தை கிடைக்கவில்லை) நடைபெறுகிறது. அதனை சாத்தியப்படுத்தும் புள்ளி Laughter. இந்த laughterக்கு ஆதாரம் erotic force… அழிவு வெறும் முடிவல்ல அது புதிய துவக்கத்திற்கான ஆரம்பம். ஒரு இலக்கியவாதியாக இந்த மையப்புள்ளியை நீங்கள் சரியாக இனம் கண்டு விட்டீர்கள். ஒரு சிந்தனையாளனாக இந்தனை கண்டடையலாம். அதற்கும் மீறி இலக்கியவாதியாக இன்னும் ஒரு படி சென்று காலத்திற்கு ஏற்றாற்போன்று கதையின் வகைமையை உங்களால் கையாள முடிவது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. எழுத்தைக் கொண்டு ஒரு ஆள் எப்படி Science Fiction, Realism, Epic, தற்போது erotic என்று வடிவங்களின் பல தளங்களுக்குள் பயணிக்க முடிகிறது என்பது ஆச்சரியம். அது பொறாமையை ஏற்படுகிறது. கொள்ளை நோய் கொண்டு வரும் சாவு ஒருவகையில் உயிர்ப்பின் துவக்கமாக அமைகிறது என்ற இரகசியம் இலக்கியவாதிக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இந்த மே மாதம் நிச்சயம் Boccasioவை வாசித்து முடித்துவிடுவேன் என நினைக்கிறேன். ஏற்கனவே The Magic Mountain வேறு வரிசையில் நிற்கிறது. இப்படி ஜெர்மானியர்களும், இத்தாலியர்களும் வரிசையில் வந்து நின்றால் என்ன செய்வது சொல்லுங்கள்.

அருள் ஸ்காட்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

இன்றைய மனநிலையில் ஆனையில்லா போன்ற ஒரு கதையை வாசிப்பதைப்போல உற்சாகமான இன்னொன்று இல்லை. வீட்டிலேயே இருக்கிறேன். ஆகவே திரும்பத்திரும்ப வாசித்தேன். நான் நெல்லைக்காரன். ஆகவே அந்த அக்ஸெண்டும் தெரியும். வீட்டில் வாசித்துக் காட்டினேன். என் மனைவி ஒரெ சிரிப்பு

என் அப்பா ஒரு கருத்தை சொன்னார். அதை யாருமே சொல்லவில்லை. ஆகவே இதை எழுதுகிறேன். யானை காட்டுமிருகம். அது வீட்டில் மாட்டிக்கொள்கிறது. அதுதான் இந்தக்கதையின் மையம். அந்த யானை வீட்டில் மாட்டிக்கொண்டு பாதி வெளியிலும் பாதி உள்ளேயுமாக நிற்பதுதான் முக்கியமான காட்சி.

அதை பெரிசுன்னு நினைச்சா பெரிசு. சின்னதுன்னு நினைச்சா அப்டியே வெளியே போயிடலாம். அதைத்தான் கதை சொல்லுதுஎன்றார். உண்மையான வாசிப்பா என்று தெரியவில்லை. ஆனால் கேட்க நன்றாக இருந்தது

கதிர்வேல் சண்முகம்

***

ஆனையில்லா! – கடிதங்கள்-1

’ஆனையில்லா!’- கடிதங்கள் -2

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–11
அடுத்த கட்டுரைஅங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்