தவளையும் ராஜகுமாரனும் – கடிதங்கள்

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

தவளையும் இளவரசனும் முற்றிலும் புதிய ஒரு கதை. முந்தைய கதைகளுடன் சம்பந்தமே இல்லை. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசுக்கும் சம்பந்தமில்லை. ஒரு முன்னோடிக்கதை என்றால் கெய்ஷா கதையைத்தான் சொல்லவேண்டும்

 

இந்தக்கதை ஒரு கூர்மையான முடிச்சை நோக்கிச் செல்கிறது. ஒரே வரியில் சொல்வதென்றால் எல்லா பொருத்தமும் இருந்தால் விவாகரத்தாகிவிடுகிறது. ஆகவே எந்தப்பொருத்தமும் இல்லாமல் மணந்தால் என்ன என்று ஒருவன் நினைக்கிறான். அவ்வளவுதான் கதையின் மையக்கரு. ஆனால் கதையின் அழகு எந்தப் பொருத்தமும் இல்லாதவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் அழகாக நுட்பமாக அறிந்து அணுகிச் செல்வதுதான். அதுதான் இதை அழகான காதல்கதையாக ஆக்குகிறது

 

வேல்கண்ணன்

 

 

முற்றிலும் ஒருவரோடொருவர் வேறுபட்ட இருவருக்குள் உருவாகும் காதல் அழகான ஒரு சித்திரம். அவர்கள் முரண்பாடுகள் வழியாகத்தான் புரிந்துகொள்கிறார்கள். நம்பிக்கைகள் வேறு, வாழ்க்கைமுறைகள் வேறு. ஒழுக்கமுறைகள்கூட முற்றிலும் வேறு. அவர்கள் ஒருவரை ஒருவர் அப்படி அணுக்கமாக புரிந்துகொள்கிறார்கள்

 

முன்பு ஒருமுறை யாயும் யாயும் யாராகியரோ என்ற பாடலைப்பற்றிப் பேசும்போது சுஜாதா சொன்னதாக ஞாபகம். முற்றிலும் வேறுபட்டவர்கள் மேல் ஈர்ப்பு வருவதுதான் பயாலஜிக்கலாக இயல்பானது. ஏனென்றால் மானுட இனம் அப்படித்தான் பரவவும் விரியவும் விரும்புகிறது. அதற்குத்தேவை புத்தம்புதிய ஜீன்பூல்தான்

 

அந்த இரு பண்பாடுகளும் ஒன்றை ஒன்று விலக்கி அப்புறம் கொஞ்சம்கொஞ்சமாக அடையாளம் காண்பதிலுள்ள விசித்திரம் இந்தக்கதையிலுள்ள ஈர்ப்பு

 

அருண் பிரதீப்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10
அடுத்த கட்டுரைஆனையில்லா, பூனை- கடிதங்கள்