அன்புள்ள ஜெ
அன்புள்ள என்று உங்களை அழைப்பேன் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. இனம்புரியாத ஒரு கசப்பு உங்களைப்பற்றி இருந்துகொண்டே இருந்தது. உங்களை ஓர் இந்துத்துவவாதி என்று கேள்விப்பட்டிருந்தத்துதான் காரணம் என்று சொல்லலாம். அது என் மனசிலே இருந்துகொண்டே இருந்தது. நான் சிலகதைகளையும் கட்டுரைகளையும்தான் வாசித்திருக்கிறேன். வாசிக்கும்போதே கசப்பு வந்து பாதியிலேயே நிறுத்திவிடுவேன்.
நிறைய நண்பர்களிடம் உங்களைப்பற்றி நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். உங்களை தூக்கி வீசுவதற்கான வாதங்கள் ஒன்றும் என்னிடம் இல்லை. இருந்தாலும் உணர்ச்சிகரமாகப்பேசிச் சமாளித்துக்கொண்டு போவேன். அதேசமயம் என்னால் உங்களைத் தவிர்க்கவும் முடியவில்லை. அதற்குக் காரணம் ஊமைசெந்நாய், மத்தகம் என்ற இரண்டு கதைகள்தான். அந்த இரண்டுகதைகளைப்போல இன்றுவரை என்னை கஷ்டப்படுத்திய கதைகள் வேறு ஒன்றும் கிடையாது. நான் நிறையநாட்கள் அந்தக்கதைகளை மனசிலே நினைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன். யாராவதுகேட்டால் அந்தக்கதைகளை பலகுறைகளைச் சொல்லி குப்பை என்று சொல்லுவேன். ஊமைச்செந்நாய், மத்தகம் இரு கதைளிலும் நீங்கள் யானையாக இந்துத்துவாவைத்தான் உருவகம்செய்திருக்கிறீர்கள் என்று சொல்லுவேன். இப்போது நினைக்கும்போது கேவலமாக இருக்கிறது.
நான் இந்த அறம் வரிசை கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு கதையும் என்னை மிகவும் நெகிழச்சி அடைய வைத்தன. சோற்றுக்கணக்கு கதையை நூறுமுறையாவது படித்திருப்பேன். மனிதனுக்கு எதுக்கு தர்ஹா கட்டவேண்டும் என்ற கேள்விக்கு அந்தக்கதைதான் பதில் என்று எனக்குத் தோன்றியது. அந்தக்கதைதான் யானை டாக்டர். ஆனாலும் கதைகளை நான் எதிர்த்துக்கொண்டுதான் வந்தேன். ஆனால் எவரிடமும் எதிர்த்து பேசவில்லை.
இப்போதுதான் ஓலைச்சிலுவை கதையை வாசித்து முடித்தேன். இந்தக்கதைதான் உச்சகட்டகதை என்ற எண்ணம் வந்தது. பல இடங்களிலே கண்ணீர்விட்டேன். நிறைய சிந்தனைகள் வந்தன. கிறிஸ்தவமதத்திலே இருக்கும் இந்தமாதிரி தன்னலமற்ற சேவையாளர்கள் ஏன் இஸ்லாம் மதத்திலே இல்லாமல் போனார்கள் என்று நினைத்துக்கொண்டேன். மதத்தை தாண்டிய ஆன்மீகம் ஏன் சில சந்தர்ப்பங்களிலாவது அவர்களிடம் உண்டாகவில்லை என்று நினைத்தேன். மத அறிஞர்கள் இருக்கிறார்களே ஒழிய சேவையால் புனிதமானவர்கள் இல்லையே.
அப்போது ஒன்று தோன்றியது மத எல்லையை கடந்து உங்களால் அதை வணங்க முடிகிறது. என்னால் முடியவில்லை. எங்களாலும் முடியவில்லை. நாங்கள் அந்தச் சேவையாளர்களையும் அன்னியர்களாகத்தானே பார்ப்போம். அவர்களைப்பற்றி ஒன்றுமே எங்களுக்கு தெரியாதே. இந்த மதம்சார்ந்த மனம்தான் உங்களைப்பற்றி இப்படி ஒரு கசப்பை என் மனசிலும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. பிரச்சினை என்னிடம்தானே . ஆகவேதான் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன்.
நான் நிறைய கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாமே இஸ்லாமியப் பின்னணி கொண்ட கதைகள். எந்தக்கதையும் அச்சில் வரவில்லை. ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா?
அஜீஸ்
அன்புள்ள அஜீஸ்,
தன் மதம்,சாதி, இனம் சார்ந்த அடையாளத்தை தாண்டாமல் நல்ல வாசகனாகக்கூட ஆகமுடியாது, அதன்பின்னர்தானே எழுதுவது?
நீங்கள் ஒரு புனைபெயரில் பொதுவான இலக்கிய சிற்றிதழ்களில் எழுதவேண்டும் என்பது என் ஆலோசனை. ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் எழுதுவதற்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் பதில்சொல்லவேண்டும் என்றால் அது பெரிய சுமையாக ஆகி எழுத்தைத் தளர்த்தும்
இணையத்தில் எழுதுவதில் அர்த்தமில்லை. இணையத்தில் வம்புக்காக வாசிப்பவர்களே அதிகம். இஸ்லாமியச் சிற்றிதழ்களில் எழுதினால் தேங்கி விடுவீர்கள்
ஜெ
_____
மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒலைச்சிலுவை படித்தேன். சாமர்வெல் முதல் உலகப் போரில் பணியாற்றும்போது காயமுற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, உடல் சோர்வு காரணமாக அவர் ஒய்வெடுத்த நிலையில் நோயாளி ஒய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று சொல்லும் கட்டமே கதையின் எழுச்சி என நினைத்தேன். அந்த கட்டத்திலேயே மனம் நின்று விட்டது. இதுவரையே ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் மிகச் சிறந்த சிறுகதையாகவும் அது இருந்திருக்கும். இதையும் தாண்டி வேறென்ன சொல்லி சிறுகதையை நிறைவு செய்ய முடியும் என தோன்றியது.
ஆனால் கதை சாமர்வெல்லை பற்றியல்லவே. அது அறிந்தும் அடுத்தடுத்த வாசிப்பிலும் மனம் நடுக்கட்டத்திலேயே நிற்கிறது. டேனியலின் நம்பிக்கை பூக்கும் தருணம் சிறப்பான முடிவு என்றாலும், கதையின் எழுச்சி நடுவிலேயே வந்து விட்டதாக உணர்கிறேன்.
இரு கோடுகளில் பெரிய கோடு கடைசியில் போடும் கோடுதான் பெரியது என்ற நினைவே இருக்கிறது. சிறுகதையின் எழுச்சியும் கடைசியில்தான் வர வேண்டுமா?
மற்றபடி, வழக்கம் போல தொடரின் அற்புதமான கதைகளில் ஒன்று.
அன்புடன்
ஜோசப் மணி
அன்புள்ள ஜோசப் மணி
உங்களுக்கு அந்த இடத்தில் ஓர் மன எழுச்சி நிகழ்கிறது என்பதனால் அதை மையமாகக் கொள்கிறீர்கள். கதையின் பிரச்சினை அதாவது கிரைஸிஸ் என்பது டாக்டர் எந்த கிறிஸ்துவை தேர்ந்தெடுக்கிறார், அவர் மதவாதியா ஆன்மீகவாதியா என்பதுதான். சிலசமயம் கதைகள் அப்படி ஒரு இடத்தில் நம்மை நிற்க வைக்கும். ஒரு வரிகூட அதைச்செய்யும். பின்னர் ஒருவாசிப்பில் நம் மனம் முன்னால் செல்லக்கூடும்
ஜெ
அன்புள்ள ஜெ,
தாயார் பாதம் பற்றி இன்னொரு கடிதம் ‘கலையின் வெற்றி’ என்ற தலைப்பில் உங்களுக்கு எழுத மனதில் தொகுத்து வைத்திருத்தேன். கொஞ்சம் நீளம். டைப் செய்து உங்களுக்கு அனுப்ப வேண்டும். அதற்குள்…
ஓலைச்சிலுவை வாசித்தேன். சில உதிரி எண்ணங்களையும் ஒரு புனிதப் பயண அனுபவத்தையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது.
தொழில் நுட்ப பயிற்சிக்காக ஜீன் 2010 எங்கள் அலுவலகத்தில் இருந்து ’இஸ்ரேல்’ சென்ற குழுவில் நானும் இருந்தேன். நான் ஒரு விஞ்ஞானி.
ஹோட்டலில் இருந்து பயிற்சி நிறுவனத்திற்கு தினமும் எங்களை ஏற்றிச் செல்ல ஸ்வராஜ் மஸ்தா வகை வண்டி வரும். ஒரு மணி நேரப் பயணம். நஸரெத் (Nazareth) பயிற்சி நிறுவனம் இருக்கும் இடத்திற்கு மிக மிக அருகில். சாலையில் நஸ்ரெத் என்ற பலகையைப் பார்க்கும் போது கிறிஸ்துவைப் பற்றி இமயமலை ரிஷிகளைப் பற்றி நினைத்துக் கொண்டோ, நண்பர்களிடம் ஏதாவது சொல்லிக் கொண்டோ இருப்பேன்.
Here, in this place, a fellow lived. He could turn water into wine and multiply bread and fish. And his name is….Jesus Christ.
இது ஜேம்ஸ் ஜாய்சின் விளைவு. யுலிசஸில் ’பக் முல்லிகன்’ கிறிஸ்துவை கிண்டல் செய்யும் பாடல் மனதில் எங்கோ ஒட்டி கொண்டது. (இரண்டு, மூன்று அத்தியாயங்களுக்கு மேல் செல்லவில்லை. அதுவும் புரியவில்லை என்பது வேறு தளம்.)
ஒரு விடுமுறை நாளில் டெட்ஸி மற்றும் ஜெருசலேம் பயணம்.
ஜெருசலேமில் Church of the Holy Sepulcher சென்றோம். அங்கே ஏசுவை சிலுவையில் அறைந்த இடத்தையும், அவரை புதைப்பதற்கு முன் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கல் (The Stone of Unction) மற்றும் உயிர்த்தெழுந்த இடத்தையும் கண்டேன். அந்தக் கல்லை ஒரு முறை தொட்டுப் பார்த்தேன். அந்த செயல் ஒரு விதையாக விழுந்து பின் முளைக்கும் என்று முன்பே அறிந்திருந்தேன்.
ஜெருசலேம் விதைகள் ஓலைச்சிலுவை நீங்கள் சொல்வது போல ஆன்மீக கிறிஸ்துவை நோக்கி என்னை இழுத்துச் செல்லும்.
நன்றியுடன்.
ராஜா.
பி.கு..இதை வெளியிடுவதாக இருந்தால் என் பெயர், பணி விவரத்தை நீக்கிவிடுங்கள்.
அன்புள்ள ராஜா
பணிவிவரத்தை நீக்கிவிட்டேன், மறக்காமல்.[அப்பாடா]
நான் செல்லவிரும்பும் நாடுகளில் ஒன்று இஸ்ரேல். ஒருமுறை எனக்கு இஸ்ரேலுக்கு ஒரு கல்லூரிக்கருத்தரங்குக்கு அழைப்பு வந்தது. கடைசி நேரத்தில் இந்திய விசா மறுக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதை எதிர்த்து, புலிகளை ஆதரித்து, நான் எழுதியிருந்த கட்டுரை அரசு சிக்கலில் இருந்தது அப்போது.
உலக வரலாற்றைப் பார்ப்பவர்கள் மிஷனரிகள் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கையாட்களாக செயல்பட்ட சித்திரத்தை சட்டென்று அடைவார்கள். அமெரிக்கக் கண்டங்களிலும் ஆஸ்திரேலியாவிலும் அவர்கள் பல மக்களினங்களை ஒட்டுமொத்தமாக கொன்றே அழித்திருக்கிறார்கள். ஆனால் அதைக்கொண்டு கிறிஸ்துவை மதிப்பிட்டுவிடக்கூடாதென்பதே என் எண்ணம். எந்தமதமும் ஆதிக்கசக்திகளின் கையில் ஆயுதமாக மாறிய வரலாறுள்ளதே
ஜெ
அன்புள்ள ஜெ,
அவரது சேவையில் மத வேறுபாடு இல்லை என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.
//மத வேறுபாடில்லாமல் அவர் சேவை செய்திருக்கிறார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதை அவர் மத பிரச்சாரமாகவோ மதத்தொண்டாகவோ எப்படி செய்திருந்தாலும் அந்த பணிக்கு தலை வணங்க அவர் மிஷினரி என்பது ஒரு தடையாகாது//
படங்கள் விஷயத்தில் எனக்கு ஐயம் இருக்கிறது. பிரேம் கண்ணாடி போட்ட படங்கள் 1940களுக்கு பின்னரே திருவிதாங்கூரில் எல்லா தட்டு மக்களிடையேயும் பிரபலமாகின. என் பாட்டி வீட்டில் இருப்பவை எல்லாமே இப்போது என் தந்தையின் பூஜை அறையில் உள்ளன. பெரும்பாலும் 1950களைச் சார்ந்தவை. 1940களில் கூட சட்டம் போட்ட கண்ணாடி இறை உருவங்கள் மேல் குடி மக்களிடையேதான் புழங்கியிருக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக உள்ளது. என் எண்ணம் தவறாக இருக்கலாம்..
// உன் ரூமிலே கர்த்தர் படம் தூசி படிஞ்சு இருக்கு…//
இதுவும் ஒரு புரோட்டஸ்டண்ட் மிஷினரி சொல்லமுடியாத வார்த்தை. பொதுவாக புரோட்டஸ்டண்ட் மிஷினரிகள் எந்த படத்தையும் வைப்பதை ஊக்குவிப்பவர்களல்ல. இப்போதுதான் போனால் போகிறதென்று ஏசுவின் திருஇருதய படம் என்கிற ஒன்றை வைத்திருப்பதை இடைக்கால நிவாரணமாக அனுமதிக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்க மனமே இதை செய்யும். அல்லது ஸ்டாலின் படத்தில் தூசு படிந்திருப்பதைக் கண்டு சங்கடத்துக்குள்ளாகும் (பிதொநிகு வின்) தோழர் கெகெஎம்மின் மனம்.
டாக்டர் ஒரு மகத்தான மனிதர் என்பதில் ஐயமில்லை. அவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை உலகப்போர் முகாம்களிலிருந்து பெற்றார். அவர் ஒரு பெரும் ஆளுமையாகவும் திகழ்ந்திருக்கிறார். ’ஓலைச்சிலுவை’ அவரது உச்சத்தில் தெரிவது ஜெயமோகனின் புனைவான டால்ஸ்டாயின் ஏசுவின் சாமர்வெல்.
தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி
அநீ
அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,
கதைகளில் சில சாத்தியங்கள்தான் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் எழுதுபவனின் ஆசையும் ஓர் அளவுக்கு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
திரு இருதயப்படத்தை மிக ஆரம்பகாலத்திலேயே இங்குள்ள புரட்டஸ்டாண்டுகள் வைத்திருந்தார்கள் என்றுதான் நினைக்கிறேன். குலசேகரம் லண்டன்மிஷன் ஆஸ்பத்திரியில் மிகப்பழைய ஏசு படங்கள் எல்லா அறைகளிலும் இருந்தன. தினமும் துடைத்து மெழுகுவத்தி ஏற்றி வைப்பார்கள்
ஜெ