வருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

ஆனையில்லா, வருக்கை, பூனை மூன்று கதைகளுமே ஒரே வரிசையில் வருகின்றன. அந்த சிறிய கிராமத்தின் அழகான சித்திரம். அதில் நான் முதலில் பார்ப்பது மத ஒற்றுமை. இந்து கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்து கோயில் கமிட்டியிலேயெ சர்ச்சில் உள்ள டீக்கனார் உட்காந்திருக்கிறார். சாதிப்பிரச்சினை என்பது மாறி மாறிச் சீண்டிக்கொள்ளும் அளவிலேயே இருக்கிறது.

 

ஆனையில்லா கதையிலும் சரி பூனை கதையிலும் சரி உயர்சாதியான நாயர்களின் சரிவும் வீழ்ச்சியும் சொல்லப்படுகிறது. முன்பு வாளை உருவும் சாதியாக இருந்தவர்கள் பொது இடங்களில் நையாண்டி செய்யப்படுகிறார்கள். கரடி நாயரால் அடிக்கமுடிவது அவருடைய மகனை மட்டும்தான். “ஆனைக்கு மானம் மரியாதையா ஜீவிக்க முடியாதா?” என்ற மனக்குமுறல் அந்தக்கதையில். பூனை கதையில் எங்கள் வீட்டு மச்சுமேல் எவரும் கையை வைக்கவேண்டாம் என்ற பதற்றம்

 

ஆனால் எல்லாமே ஒரு வேடிக்கைக் கொண்டாட்டமாகவே போய்விடுகிறது. எங்குமே பெரிய மோதல்கள் இல்லை. ஒரு களியாட்ட மனநிலையிலேயே கிராமம் இருக்கிறது. யானை வீட்டில் புகுந்தாலும் சரி திருடன் வீட்டில் புகுந்தாலும் சரி சிறுத்தை புகுந்தாலும் சரி ஊரில் அது ஒரு கொண்டாட்டம்தான். பயங்கரமாக போர் அடித்து அமர்ந்திருப்பார்கள் போல. எது கிடைத்தாலும் அதை வேடிக்கையாக ஆக்கிக்கொள்கிறார்கள் என்று தோன்றியது

 

எஸ்.சாமிநாதன்

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

 

நினைத்து நினைத்து சிரிக்க எல்லோருக்கும் சில விஷயங்கள்  இருக்கும். ஆனால் படித்து மீண்டும் மீண்டும்  படித்து சிரிக்கும் கதைகள் என்றால் ” ஆனையில்லா” வும் “வருக்கையும்” தான். [இந்த கடிதமும் மிகுந்த மன மகிழ்ச்சியோடு அப்ப அப்ப சிரித்துக்கொண்டுதான் எழுதுகிறேன்]

 

 

வெண்முரசு படிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் வாழ்க்கையும் பிடிபட ஆரம்பித்தவுடன் இப்போது  மனசோர்வுலாம் இல்லை. ஆனால் கொரோனா பீதியை  கொஞ்சம்  என்மீது நண்பர்கள் தெளித்துவிட்டதினால்  அப்ப அப்போ நெஞ்சு படபடக்க ஆரம்பிக்கும்.அப்போது எல்லாம் வெண்முரசை தொட்டால் அங்க பாண்டவர்கள் நிலைமை நம்மைவிட  மோசமாக இருக்கிறது. இளைய யாதவர் வேற  காட்டுக்குள் இருந்து கடுப்பு ஏத்துகிறார். அர்ஜுனன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புவதை கண்டால்  மனசோர்வே வந்துவிடும்போல் இருக்கிறது. இந்த நேரத்தில் தான் நீங்கள் “மாயயதார்த்தம்- மிகுபுனைவு கதைகள் ”  கொண்டாட்டம் என்று கூறினீர்கள். ஆனால் அது இன்னொரு பீதியை கிளப்பியது….. உலக அழிவுக்கு பின், டைம்  டிராவல் ,ஆலிஸ் இன் வோண்டர்லன்ட் அல்லது மார்வல் காமிக்ஸ் உலகம் மாதிரி ஆரம்பித்தால் எப்படி தாங்குவது என? …உண்மையில் அதுதான் மிகுபுனைவு என நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.நீங்கள் தான் “ஆனையில்லா” வில் யானை வீட்டுக்குள் ஆப்பு அடித்தது போல் சொருகி நிற்பதுவும் , கோமதியின் சிவக்கும் நாணமும் மிகுபுனைவுதான் என உணர்த்தி இருக்குறீர்கள். எல்லாம் ஹாலிவுட் படங்களின் வேலை.

 

 

ஜெயமோகன் சார், நீங்கள் “கடவுள் அற்ற நிலம்” கட்டுரையில் மனித மனம் சாகசத்திற்கு ஏங்குவது என கூறியிருக்கிறீர்கள்.   “ஆனையில்லா ”  வில் கோபாலகிருஷ்ணன் சங்கிலியை அறுத்துகொண்டுவந்து வயது மறந்து செய்த சாகசமும் , “வருக்கை”யில்   தங்கனின்  சாகசத்தால் உந்தபட்டு கோமதி அவளால் செய்ய முடிந்த ஒரே சாகசமாகிய  உடம்பைகொண்டு எல்லை மீறுதல் என்னும் சாகசமும் ஒன்றுதான் என்று தோன்றியது. ஆனால் கடைசியில்  லாரன்ஸ்  தேங்காய் கொப்பரையை  காட்டியவுடன் கோபாலகிருஷ்ணன் தெறித்து ஓடுகிறான், கோமதியோ  “வரிக்கை சக்கை சுளைக்க மணம் ” என்று கூறியவுடன் முகம் மலர்கிறாள். [வெற்றி” சிறுகதையும் ரங்கப்பரின் சாகசம் தான்.]

 

 

இப்போது நம்பிக்கை வந்துவிட்டது சிரித்து சிரித்தே கொரோனாவை விரட்டிவிடலாம் என .

 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்

 

 

வருக்கை [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

அழகான கதை என்று எனக்கு இப்போதும் தோன்றிக் கொண்டிருப்பது தங்கனின் கதைதான்.  அது ஒரு எளிமையான காதல்கதை. அல்லது மீறலின் கதை. ஆனால் அதில் அந்தக்கிராமத்தின் இன்னொரு பக்கம் உள்ளது. அங்கே கடையில் அமர்ந்திருக்கும் யாருக்கும் அதெல்லாம் பெரிய தப்பாகத் தோன்றவில்லை. ஆசான் நல்ல குட்டிகளுக்க ரீதியாக்கும் அது என்றுதான் சொல்கிறார்

 

எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக்கொண்டு மேலே செல்கிறார்கள். பூனைபோன்ற கதைகளில் வருவதுதான். புலி கூட பூனைதான். அந்த இயல்பான உரையாடலும் ஈஸியான மனநிலையும் அந்தக்கதையில் அழகாக வெளிப்பட்டிருந்தது. அதைத்தான் மிகவும் ரசித்தேன்

 

சரவணக்குமார்

 

அன்புள்ள ஜெ

வருக்கை கதையை இப்போதுதான் வாசித்தேன். விளையாட்டுத்தனமான கதையாக இருந்தாலும் ஒரு முழுவாழ்க்கைச் சித்திரமும் உள்ளது. கோமதி எப்படி காளையின் மனைவியாக இருக்கமுடியும்? அவன் மாட்டுவியாபாரி. கோபாலனின் காதலியாகவே இருக்கமுடியும் இல்லையா? அவன் தங்கன். நல்ல அசல் வரிக்கை அவன். அவனுடைய மணம் அப்படி.

 

வரிக்கை என்ற வார்த்தையே கதை. பலாப்பழ வாசனை விட்டுப்போகாது. எத்தனை கழுவினாலும் மிஞ்சியிருக்கும். தொட்டகையில் இருக்கும் வீட்டில் இருக்கும், காற்றிலும் இருக்கும். அவனுடைய ஈர்ப்பும் அப்படித்தான். வருக்கைமணம் கொண்ட கதை

 

எஸ்.கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவேட்டு, விலங்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோட்டை [சிறுகதை]