சக்தி ரூபேண! [சிறுகதை]
வணக்கம் ஜெ
யா தேவி மற்றும் சர்வ ஃபுதேஷு இரண்டும் வேறு ஒரு தளத்தில் இருந்தது என்றால் சக்தி ரூபேண வேறு ஒரு தளம். விஷ்ணுபுரத்தின் விரிவையும் ப்ரம்மாண்டத்தையும் சொல்லிய அதே சமயம் அதன் வெறிச்சோடிய காட்டு செடிகள் அடர்ந்த இறுதி முகத்தையும் சொல்லியது போல் மாத்தன் எல்லாவின் அற்புதமான உறவையும் பியட்டா கணத்தையும் உருவாக்கிய முதல் இரண்டு கதைகள் ஒரு தளத்திலும் போலீஸ் கஞ்சா போதை கற்பழிப்பு கொலை ஆட்டோகாரனுடன் சண்டை என சக்தி ரூபேண வேறு ஒரு தளம்.
கதாபாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் இவ்வாறு வேறு வேறு தளங்களில் பயணிக்கும்போது கதை நம்மை உள்வாங்கிக்கொள்கிறது. கதை மாந்தர்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி அவர்களை நிஜ மனிதர்கள் என அணுகி செல்ல வைக்கிறது. அவர்களின் செயல்களும் முடிவுகளும் நம்மையும் பாதிக்கின்றன. அப்போது வெளிப்படும் கதையின் தரிசனம் பன்மடங்கு நம்முள் விரிகிறது.
ஆரம்பத்தில் இருந்து எல்லாவின் பொம்மை மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்த ஸ்ரீதரின் முன் அந்த பொம்மை நிஜமாக வந்துவிடுகிறது. அதை பூட்டி வைக்க வேண்டும் என சொல்கிறான். அதன் மேல் நரம்பு முடிச்சுகளை வரைந்து அவற்றை தொட்டால் அது துல்லியமான உணர்ச்சிகள் கொடுத்தபோதும் அது பொம்மையே சரியான எலக்ட்ரிகல் வேலையால் உருவாக்கிய பொம்மை என்றே சொல்கிறான்.
இறுதியில் அதை பொம்மை என்று அவன் அழைக்கவில்லை எல்லா என்றே உணர்கிறான். எல்லா கட்டிலில் படுத்திருந்தாள். என் காலடியோசை கேட்டு திரும்பி நோக்கி புன்னகைத்து “ஹாய் டியர்!” என்றாள்.
யா தேவி சர்வ ஃபுதேஷு சக்தி ரூபேண! என்ற தரிசனம் இப்போது என்னை அறைந்தது போல் என்னுள் நுழைந்து விரிகிறது.
வெண்முரசின் பல அத்தியாயங்களை படிக்கும் போது அவை தனியான சிறுகதைகளாக நிற்க முடியுமென எண்ணிக்கொள்வேன். அதே போல் இந்த மூன்று கதைகளும் தொடராக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனி கதைகளாக நிற்க கூடியவை.
வெண்முரசு எண்ண எண்ண குறைவது போன்ற கதைகள் எழுதும் அதே நேரத்தில் இவற்றையும் எழுதுவது உங்கள் பன்முகதன்மையின் உச்சம். மகத்தான செயலாற்றல். நன்றி.
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெ,
சக்தி ரூபேண கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு சின்ன விஷயம் தோன்றியது. எல்லாவின் உடலை ஸ்ரீதரன் பார்த்ததே இல்லை. ஆனால் தொடையில் இருக்கும் மச்சம் வடுவைச் சுட்டிக்காட்டி அவளை அடையாளம் காட்டுகிறான். எப்படி? அவள் உடலை பார்க்கவில்லை, ஆனால் அவள் பொம்மையின் உடலைப் பார்த்துவிட்டான். அது அவளேதான் . அந்தப்பொம்மை இனி அவளாகிவிடும். அவள் உடல் இல்லாமலாகிவிட்டது
அந்த இடம் ஒரு சிக்கலான இடம். தத்துவார்த்தமாக யோசித்தால் ஒரு பெரிய விஷயம் தட்டுப்படுகிறது. சரியா இல்லை என் கற்பனையா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். அந்த அசல் பெண்ணை இந்த பொம்மை உடலை வைத்துக்கொண்டுதான் தேடுகிறார்கள். அந்த அசல் உடலை இந்த பொம்மையை வைத்துக்கொண்டுதான் அடையாளம் காட்டுகிறாகள். இப்போது அசலை பொம்மை சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டது. மாயையைக்கொண்டு தேவியை அறிகிறோம் என்று சொல்லலாமா?
மகாதேவன்
சக்தி ரூபேண- கடிதங்கள்-1
வருக்கை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வருக்கை கதையில் அந்த விளையாட்டை மிகவும் ரசித்தேன்.இந்தவகையான ‘திருட்டுப்பயல்களை’ நாம் கிராமத்தில் பார்ப்போம். திருவாளத்தான் என்பார்கள். நான் அந்தக்காலத்தில் பிராக்டீஸ் செய்துகொண்டிருந்தபோது திருடர்களுக்கு ஏன் இத்தனை காதலிகள் என நினைப்பேன். ஒவ்வொரு வழக்குக்கும் ஒவ்வொருத்தி வருவாள்.
முன்பு சார்லஸ் சோபராஜ் என்னும் திருடன் இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட காதலிகள். அவனை சிறையிலடைத்தபோது அவனுக்கு கடிதம் எழுதி கல்யாணம்செய்துகொள்ள ஒரு பேராசிரியப் பெண் முயன்றது அன்றைக்கு செய்தியாகியது. சார்லஸ் சோபராஜின் சாயல் தங்கனிடம் இருக்கிறது
இவர்களுக்கெல்லாம் எப்படி இப்படி பெண்கிடைக்கிறது? அதுவும் அருமையான பெண்கள். அதேகேள்வியை யவனிகா என்ற படத்தில் மம்மூட்டியிடம் அவர் மனைவி கேட்கிறாள். சாகசம் மீதான ஆர்வம் வேறென்ன என்று அவர் சொல்வார். மற்றவர்கள் கோடுபோட்டு அதற்குள் வாழ்கிறார்கள். திருடன் அதை தாண்டிச்செல்கிறான். அதுதான் திருடன்மேல் அத்தனை கவர்ச்சியை உண்டுபண்ணுகிறது என்று நினைக்கிறேன்
ஆர்.எம்.ரங்கநாத்
அன்புள்ள ஜெ
பாசுரங்களில் கண்ணனை உள்ளங்கவர் கள்வன் என்று சொல்லியிருக்கிறது. ”முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியைக் காதல் செய்து என் உள்ளங் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
அது ஏன் என்று ஒருமுறை முக்கூரார் சொன்னார். கள்ளன் உள்ளே புகுந்துவிடுவது நமக்கு தெரியாது. நாமறியாமலேயே உள்ளே வந்துவிடுவான். அவன் திருடிச்சென்றபிறகுதான் நமக்குத்தெரியும். இறைவனும் அப்படித்தான். நாமறியாமலேயே நம் மனதைக் கவர்ந்துவிடுகிறான்.
இங்கே கோமதியின் உள்ளத்துக்குள் தங்கன் நுழைவதும் அப்படித்தான். கையில் இனிப்பு. எந்த வேலியையும் கடந்துவிடும் ரகசியம். காற்றுபோல வந்து கவர்ந்துவிடுகிறான். அந்த இனிப்பில் இருந்து அவளால் எப்படி தப்ப முடியும்?
சாரதி