எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
எனக்கு எண்ண எண்ணக் குறைவது கதையை வாசித்தபோது ஒன்று தோன்றியது, அந்தத் தலைப்பிலேயே அது உள்ளது. எம்கே மற்றும் அவர்களின் மாணவர்கள் அனைவரிடமும் ஒரு ‘எண்ணி எண்ணி குறைக்கும்’ ரிடக்ஷனிச்சம் உள்ளது. எல்லாவற்றையும் ஒரு எல்லையில் கொண்டுசென்று குறைத்துவிடுகிறார்கள். அத்வைதம் மார்க்ஸியம் எல்லாவற்றையும் அப்படி குறைக்கிறார்கள். எம்கேயின் சிந்தனையையே அப்படி சுருக்கிக் குறைக்கிறார்கள்.
அப்படி எண்ணி எண்ணி குறைத்தால் எஞ்சுவது தற்கொலைதான். அதுதான் மிச்சம். நவீனத்துவர்கள் என்று நீங்கள் சொல்லும் மாடர்னிஸ்டுகள் எல்லாருமே சென்று சேர்ந்த இடம் அதுதானே? நீங்கள் சொல்லும் காஃப்கா காம்யூ சார்த்ர் மட்டுமல்ல.சாமர்செட் மாம், தாக்கரே எல்லாருமே அந்த இடத்தில்தானே இருந்தார்கள். என்ண எண்ண கூடுவது ஒன்று இருக்கலாம். அது அந்த முடிவை நோக்கி கொண்டுசெல்லாது
இரண்டு கோடுகள் நடுவே உள்ள இடைவெளி குறைந்துகொண்டே இருந்தால் அவை சந்தித்துக்கொண்டே தீரும். முனை வந்தே தீரும். இல்லையா?
கணேஷ்குமார்
அன்புள்ள ஜெ,
எண்ண எண்ணக் குறைவது என்ற தலைப்பிலிருந்து அந்தக்கதையைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதையில் பேசப்படும் முக்கியமான பேசுபொருள் முதுமைதான். முதுமையில் மிஞ்சியிருப்பது எண்ணி எண்ணிப் பார்ப்பதுதான். அதைத்தான் எம்கே சொல்கிறார். [எம்.கோவிந்தன் தானே?] அவர் சொல்வதுபோல முதுமையில் தன்னிடம் மிஞ்சியிருப்பதை எண்ணிக்கொண்டிருக்கலாம். சாதனைகளை எண்ணிக்கொண்டிருக்கலாம். வரலாற்றை எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் எண்ணி எண்ணி அது குறைந்துகொண்டேதான் இருக்கும். இளமையில் நாம் எண்ணி எண்ணி பெருக்குகிறோம். அதற்கு நேர்மாறாக இங்கே குறைகிறது.
அந்த குறையும் காலத்தை அல்லது சாராம்சத்தை உணர்ந்ததனால் தான் எம்கே முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார். அவர் சொல்வதெல்லாம் அப்படி குறைவதற்கு எதிரான பதற்றங்களையும் அதிலிருந்து எப்படி தப்புவது என்பதையும்தான். முற்றாக குறைந்து ஒன்றுமே இல்லாமல் அமர்ந்திருக்கும் ஜோஷியைச் சுட்டிககாட்டுகிறார்
எம்.ராஜேந்திரன்