ஆனையில்லா! – கடிதங்கள்-1

 

“ஆனையில்லா!” [சிறுகதை]

 

அன்புள்ள ஜெ,

 

கோடைக்கொண்டாட்டம் என்பார்கள். சிறுகதைகள் கொரோனா கொண்டாட்டமாகவும் இருக்கின்றன. உண்மையாகவே இன்றிருக்கும் இந்த சோர்வுநிலைக்கு மிக உற்சாகமான கதைகள். எனக்கு எண்ண எண்ணக் குறைவதுகூட உற்சாகமான வாசிப்பை அளித்த கதைதான். ஆனையில்லா ஒரு கிளாஸிக். உங்கள் கதைகளிலேயே நல்ல கதைகளில் ஒன்று.

 

ஒரு சிறுகதையின் கிளாஸிக் வடிவம் அசலாக பிசிறே இல்லாமல் அமைந்திருக்கிறது. நேராகச் செல்லும் கதை. முதல் வரியிலேயே தொடங்கி கடைசி வரி வரை பாய்ந்து செல்கிறது.ஆனால் எத்தனை பக்கவாட்டு வழிகள். எவ்வளவு கதாபாத்திரங்கள். ஒரு கிராமமே அங்கே வந்து கூடியிருக்கிறது. அத்தனைபேருக்கும் தெளிவான குணச்சித்திரம் இருக்கிறது. ஓரிரு வரிகள் வழியாகவே அந்த குணச்சித்திரம் தெளிவாகிவிடுகிறது

 

மணமேடையிலேயே கணவனை நாயே என்று அழைத்த சந்திரி, கொஞ்சம் மந்தமான அவள் கணவன் ஐயப்பன், அவர்களின் வீட்டுக்குள் புகுந்த யானை. ‘வீட்டிலே ஆனை கேறிப்போச்சு’ எவ்வளவு பரிதாபமான ஒரு பிரச்சினை. அந்த யானைக்கே நுட்பமான குணச்சித்திரம். அது மானசீகமாக ஒரு குழந்தை. அது பயந்து போயிருக்க அதை குழந்தையாக ஆக்கி அதை விடுவிக்கிறான் மந்திரவாதி.

 

ராமன்நாயர் ஒரு அற்புத கதாபாத்திரம். அவர் உலகில் precedent இல்லாத ஒன்றைச் செய்ய சட்டம் இல்லை. யானையின் பின்பக்கம் அதற்குமுன் கிரீஸ் போட்டதே இல்லை. ஆகவே செய்யமுடியாது. அந்த கிரீஸை விற்றவன் அதை மெய்யாகவே யானையின் குண்டியில்தான் போட்டிருப்பார்கள் என அறியும்போது என்ன நினைப்பான்?

 

நினைத்து நினைத்துச் சிரிக்கவைத்த கதை.

 

மாதவன்

 

அன்புள்ள ஜெ

 

ஆனையில்லா ஒரு அருமையான சட்டையர். அது ஒரு நிகழ்ச்சி, அவ்வளவுதான். குறியீடெல்லாம் இல்லை. ஆனால் இன்றைய சூழலுக்கு குறியீடாக ஆகிறது. இன்றைக்கு வந்திருக்கும் கொரோனா என்ற ஆனையை பூனையாக ஆக்கும் மந்திரம் அதனிடம் போய் நீ பூனை என்று சொல்வதுதான். இப்படி பல ஆனைகளை பூனையாக்கிய அனுபவம் உடையவன் மந்திரவாதி. அந்த ஒட்டுமொத்தச் சூழலுமே வேடிக்கை. சிரிப்பு நிறைந்த கதை

 

வேல்முருகன் ராமசாமி

 

அன்புள்ள ஜெ

 

ஆனையில்லா ஒரு அற்புதமான கதை. உங்கள் கதைகளை வாசிப்பவர்கள் நீங்கள் இதில் எதை  ‘சிறிதாக்கி’ இருக்கிறீர்கள் என்று புரிந்துகொள்வார்கள். கொச்சாக்குதல் என்று ஒரு மலையாள சொலவடையே உண்டு. காணி சொல்கிறான், சென்ற தலைமுறை என்றால் இந்த நாயர்கள் வாளை தூக்கியிருப்பார்கள் என்று. இன்று வேண்டுமென்றால் சுண்டுவிரல் சைஸுக்கு ஆக்கித்தருகிறேன் என்று சொல்கிறான். பாவம் படைநாயர், காலம் மாறிபோனதை உண்மையிலேயே உணர்ந்து பயந்துதான் போயிருக்கிறார்.

 

அய்யய்யோ ஆனை சிறிதாகுத காலம் வந்துபோச்சே என்று ஒரு அனாமதேய குரல். கரிச்சட்டியிலே வைக்கவில்லை என்றால் நாய் தூக்கிக்கொண்டுபோய்விடும் நிலைமையில் யானைகள் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டிருக்கும் சூழல். பரிதாபம்தான். கரடிநாயரின் பதற்றமும் பரிதவிப்பும் ‘லெச்சுமி போயிடுவா’ என்னும் எச்சரிக்கையும் சென்ற காலத்தின் குரல். Hilarious.. அவ்வளவுதான்

 

ராஜ்

முந்தைய கட்டுரைசக்திரூபேண- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைபூனை [சிறுகதை]