சக்திரூபேண- கடிதங்கள்-2

 

 

சக்தி ரூபேண! [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

சக்தி ரூபேண கதையை எதிர்பார்க்கவில்லை. மூன்று கதைகளையும் சேர்த்து ஒரே கதையாக வாசித்தால் பிடரியில் ஓங்கி அறையும் ஒரு குறுநாவல்போல இருக்கிறது. ஒரு போர்ன் நடிகை இந்தியா வருகிறாள். மேலைக்கலாச்சாரத்தின் சீரழிவின் ஓர் அடையாளம். அவள் இங்குள்ள கலாச்சாரத்தின் ஒரு உயர்ந்த அம்சத்தைக் காண்கிறாள். கொஞ்சம் மேம்படுகிறாள். ஆனால் அது உண்மை அல்ல. அது ஒரு தோற்றம்தான். உள்ளே அதைவிட பெரிய சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் விழுந்துவிடுகிறாள். கதையை நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்

 

அங்கே ஒருபக்கம் மேரி. வியாகூல மாதா. இன்னொரு பக்கம் போர்ன் படங்கள். இங்கே ஒருபக்கம் சக்தி, மாதா, பகவதி. இன்னொரு பக்கம் இந்த பாலியல் வரட்சிகொண்ட வெறிகொண்ட கும்பல். அதை ஒரு முகமில்லா கிரிமினல்கும்பலாக காட்டியிருப்பது முக்கியமானது. யாராவது ஒருவர் அந்த கிரைமைச் செய்திருந்தால்கூட அந்த ஆளின் பிரச்சினையாக அது ஆகியிருக்கும். இது எல்லாருடைய பிரச்சினை. எல்லாருக்கும் பொதுவான சாக்கடை.

 

நம்முடைய பாவனைகள் ஒருபக்கம் அப்படி இன்னொரு பக்கம் இப்படி. இந்தக்கதையை ஆரம்பத்தில் வாசித்தபோது இலட்சியவாத நோக்கத்தோடு ஒருபக்கம் மட்டும் முன்வைக்கப்படுவதாகத் தோன்றியது உண்மை. இந்த கதை உண்மையின் இன்னொரு பக்கத்தை காட்டி திகைக்க வைக்கிறது

 

எம்.பாஸ்கர்

 

அன்புள்ள ஜெ

 

சக்திரூபேண ஒரு அழகான கதை. குரூரமான அழகு. எல்லாவை வர்ணித்துக்கொண்டே வந்து அவளை அப்படியே அழித்துச் சிதைத்துவிடுவதுபோலத் தோன்றியது. மூர்க்கமாக அழிக்கப்பட்டாள். ஒருபக்கம் சக்தி இன்னொரு பக்கம் மாதா. ஆனால் பசிகொண்டவர்களுக்கு வெறும் தசைதான். வேறு ஒன்றுமே இல்லை. அதுதான் உண்மை

 

இந்தக் கதையின் அழகு என்பது இந்தக்கதை சகஜமாக விரிவதிலே உள்ளது. தொட்டுத்தொட்டு எத்தனை கதாபாத்திரங்கள். ஒரே வீச்சில் அந்த ஆயுர்வேத ஆசிரமம், அந்த கடைவீதி, போலீஸ் ஸ்டேசன் எல்லாமே வந்துவிடுகிறது. முதல் கதையில் அந்த கதை நடக்கும் இடமோ சூழலோ சமூகமோ இல்லை. இரண்டே இரண்டு மனிதர்கள் மட்டும்தான். இரண்டாவது கதையில் மாத்தன், அவனுடைய பின்னணி என்று ஒரு சின்ன விரிவும்.இப்போது மொத்தச் சமூகமும் உள்ளே வந்துவிடுகிறது. கிராஃப்ட் கலையாக ஆகும் இடம் இது

 

அந்த போலீஸ், கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்கள் எல்லாருமே இயல்பாக இருக்கிறார்கள். போலீஸ் அந்த கிரைமை முதலிலேயே ஊகித்துவிடுகிறது. ஏனென்றால் அதுவும் இந்த டெக்ஸ்ச்சரின் ஒரு பகுதிதான். அவள் அழிக்கப்பட்டு கிடக்கிறாள். அந்த முடிவை நோக்கித்தான் அவள் வந்துகொண்டிருந்தாள் என்றால் அந்த ப்யூரிஃபையிங் பிராஸஸ் எதற்காக? நிறைய கேள்விகள். பல குழப்பங்களைத்தான் இந்தக்கதை அளிக்கிறது

 

மகாதேவன்

முந்தைய கட்டுரைஎண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைஆனையில்லா! – கடிதங்கள்-1