சக்தி ரூபேண! [சிறுகதை]
அன்புள்ள ஜெ
சக்தி ரூபேண வாசித்ததும் உள்ளம் சோர்ந்துவிட்டது. முதல் இரு கதைகள் அளித்த மன எழுச்சிக்கும் நம்பிக்கைக்கும் நேர் எதிரான கதை. ஆனால் இதுதான் உங்கள் அசல் கதைக்கரு என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
இணையத்தில் தேடியபோது இந்தச் சம்பவம் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகே கோவளம் என்ற ஊரில் நடந்திருப்பதை கண்டேன். [நீங்கள் கதை எழுதியிருக்கும் அதே லேன்ட்ஸ்கேப். நானும் அங்கே போயிருக்கிறேன்] அங்கே நடந்த அந்தச் சம்பவத்தில் இருந்துதான் கதைக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் கதையை அவ்வளவு தள்ளி அவ்வளவு கவித்துவமான ஒரு இடத்திலிருந்து எப்படி தொடங்கமுடிந்தது என்பதுதான் முக்கியமான கேள்வி என நினைக்கிறேன்
சக்திரூபேண கதை முந்தைய இருகதைகளுக்கு ஒரு எதிர்முடிவாக இருக்கிறது. எல்லா ஆன்ஸெல் நோய் குணமாகி ஊருக்கே திரும்பிச் சென்றிருந்தால் இந்தக்கதை என்ன ஆகியிருக்கும். இப்போது எழும் கேள்விகளுக்கு இடமிருந்திருக்காது. இந்தக்கேள்விகள் மேலும் முக்கியமானவை. இந்த கேள்விகளுக்காகவே இந்தக்கதைகள் எழுதப்பட்டிருக்கினன என நினைக்கிறேன்
அருண்ராஜ்
அன்புள்ள ஜெ
எல்லா கேட்கும் இரண்டு கேள்விகள். அவை அருகருகே அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, ஏன் பெண்களுக்கு இந்த அளவுக்கு காவல் இங்கே? ஏன் பொம்மையைக்கூட பூட்டிவைக்கவேண்டிய நிலை. பொம்மைக்குக் கூட ஏன் இங்கே கற்புக்கு பாதுகாப்பில்லை? ஏன் பகவதிகோயிலில் உண்மையான பெண்ணின் உடல்வடிவம் இல்லை?
இந்தியா பற்றி வெள்ளையர் கேட்கும் கேள்விகள் இவை. அதாவது நல்லெண்ணம் கொண்ட வெள்ளைக்காரர்கள் கேட்பது. சக்தி வடிவமாக பெண்களைக் கும்பிடும் நாடு ஏன் பெண்களை இப்படி நடத்துகிறது? எதற்காக இத்தனை கொடூரமான வன்முறை? இவ்வளவு பாலியல்சுதந்திரம் உள்ள நாடுகளில்கூட பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதெ, இங்கே ஏன் இல்லை?
இந்தக்கேள்விதான் முக்கியமானது. ஸ்ரீதரன் முதல் கதையில் சொல்லும் சக்திவழிபாட்டில் இருந்து நாம் வந்துசேரும் இந்த இடம்தான் இந்த மூன்றுகதைகளுக்கும் அடிப்படையானது. முதல் இரண்டு கதைகளை வாசித்துவிட்டு இந்தியாவைத் தூக்கிப்பிடிக்கும் கதை என்று ஒரு பேராசிரியர் எழுதினார். டெம்ப்ளேட் வாசிப்புகளை கடந்து இந்தக்கதைகள் செல்வது இந்த இடம் வழியாகவே
ராஜ்குமார்