எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
ஜெ
கதையை வாசித்தபோது அது கதையா இல்லை உண்மையான நிகழ்ச்சியின் நேர்ப்பதிவா என்ற சந்தேகம் வந்தது. அதிலுள்ள முக்கியமான கதாபாத்திரமான சிந்தனையாளரைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். ஆகவே அவரைப்பற்றிச் சொல்லி கதையை காஸிப் ஆக ஆக்க விரும்பவில்லை. கதையின் மையம் ஒன்றுதான், பாஸிட்டீவான தற்கொலை ஒன்று இருக்க முடியுமா?
உண்டு என்றுதான் இந்துமரபு சொல்லும். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதை முதல் நாம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தவாழ்க்கை ஒரு நோக்கம் கொண்டது. அது முடிந்தது என்று உள்ளத்திற்கு தோன்றியதும் ஜலசமாதி, அக்னிசமாதி, உண்ணாவிரதம் மேற்கொள்வது நமக்கு மரபு. கதையிலேயே அது உள்ளது
ஆனால் தற்கொலை தப்பு, தற்கொலைக்கு மீட்பே இல்லை என்று நமக்கு இன்றைய வாழ்க்கை கற்பிக்கிறது. ஆகவே அதை நாம் ஒரு பெரிய சூத்திரமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறோம்
இங்கே உள்ள கேள்வி அதைவிட ஆழமானது. ஹமீது கேட்கிறார். ஒருவன் தற்கொலை செய்துகொண்டான் என்றால் அவனுடைய சிந்தனைகளுக்கு என்னதான் மதிப்பு என்று. அவன் அதைத்தான் உபதேசிக்கிறான் என்று பொருள் இல்லை. அது அவன் வாழ்க்கைக்கு முடிவு அவனுடைய சிந்தனைகளின் முடிவு அது அல்ல
பலகோணங்களில் ஆழமாகச் சிந்திக்கவைத்த கதை
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ சார்,
கல்பொருசிறுநுரையின் துவக்கத்தில் எண்ண எண்ணப் பெருகுவது அறம் என்று வருகிறது. அப்படியானால் எண்ண எண்ணக் குறைவது என்ன? ஆசைகளையும் பந்தங்களையும் வள்ளுவர் என்னவென்று நோக்கினால் நீங்குவது என்கிறார். இந்த கதையை மீண்டும் வாசித்து தொகுத்து கொள்ள முயலுகிறேன், ஆனால் தகவல் ரீதியாக ஒரு ஐயம். திரு. எம். கோவிந்தன் அவர்களை ஏன் எம்.கே என்று அழைக்கிறார்கள்? அல்லது கதையின் நாயகர் வேறோர் ஆளுமையா?
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்