வைரஸ் அரசியல்- கடிதங்கள்2

 

வைரஸ் அரசியல்

மதிப்புக்குரிய ஆசிரியர்க்கு,

சீனா அரசு  ‘ஜனவரி/23’ மக்களை தனிமை படுத்துதல் தொடங்கியவுடன், வைரஸ் பரவுதல் குறைந்துள்ளது.

இப்போது உலக நாடுகள் வசம் இருக்கும் உடனடி பயன் தரும் முறை இதுவே என்று தோன்றுகிறது.

நன்றி
-ஓம்பிரகாஷ்

 

ஜெ

 

உங்களின் இந்தக் கட்டுரை ஆச்சரியமளிக்கிறது. உங்கள் இதழாள நண்பர் சொன்னதை வைத்துக் கொண்டு இத்தனை திட்டவட்டமாக, தீர்மானமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். இந்த வைரஸின் தன்மை, அது பரவும் தன்மை, பாதிப்பு என்று எதையும் ஆராயாமல் மிகவும் மேலோட்டமான தீர்வுகள் வேறு சொல்லியிருக்கிறீர்கள். இந்த வைரஸின் நோயரும்பும் கால கட்டம் (incubation period) மிகவும் முக்கியமானது. நோயின் அறிகுறிகள் தென்படவே சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை ஆகலாம். அந்தக் கால கட்டத்தில் ஒரு நபரிடமிருந்து பல நபர்களுக்கு அது தொற்றிவிடும்.

 

 

அதன் காரணமாகத்தான் ஒரே நாளில் நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் பலவீனமாக இருப்பவர்கள் இறப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இத்தனையும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்தே கணிக்கப்படுகின்றன. வைத்தியசாலைகள் இருந்தாலும், மருத்துவர்கள் இருந்தாலும் பரிசோதனைக்கான வழிகள் மிகக் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் அறிகுறிகள் இருப்பவர்களை மட்டுமே தற்சமயம் சோதனை செய்கிறார்கள். அவ்வளவாகப் பாதிப்பிற்கு உள்ளாகாதவர்கள் அல்லது அறிகுறி தென்படாதவர்கள் யாரும் சோதனைக்காகச் செல்லப் போவதில்லை, ஆனால் அவர்களின் மூலம் வைரஸ் மிக வேகமாகப் பரவுகிறது. எப்படியோ ஒன்று கூடுதலைத் தவிர்க்க முடியாது என்றால் பேரிழப்புகளையும் தவிர்க்க முடியாது.

 

 

இப்பொழுது கொரோனா வைரஸ் முக்கியமான பிரச்சனையாக இருப்பதனாலேயே, வைத்தியசாலைகள் கவனிக்க வேண்டிய மற்றைய நோயாளிகள், அவசர சிகிச்சைகள், அவசர அறுவை சிகிச்சைகள், அவற்றுக்கான இடத் தேவைகள் ஆகியவற்றை மறந்து விடக் கூடாது. அதையும், இதையும் ஒரே இடத்தில் வைத்துச் சிகிச்சை அளிப்பதும் சாத்தியமில்லை. மேலும் மூச்சுத் திணறல் நிலமையைக் கையாள்வதற்குப் போதுமான செயற்கைச் சுவாசக் கருவிகள் அவசியம்.

மேலே சொன்னது போல நோயரும்பும் காலத்தில், அறிகுறிகள் தென்படாதவர்களை வடிகட்டித் தனிமைப் படுத்துவதும் சாத்தியமல்ல. சீனா மற்றும் தென்கொரியாவில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொண்டதாலேயே, வைரஸை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தாலியில் இதற்கான விழிப்புணர்வு இல்லாதிருந்ததாலேயே, இப்பொழுது ஐரோப்பா இந்த நோயின் மையப்புள்ளியாக இருக்கிறது.

 

 

நீங்கள் கவலை கொள்வது போல் வணிகம், பொருளாதாரம் மிக மிக மோசமாகப் பாதிக்கப்படும். ஆனால் அது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்தியாவில் மதிய உணவருந்தும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்படுவது போல், இன்னும் பல பிரச்சனைகள் எழும். இது உலக அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான காலகட்டம். வயதானவர்கள் ஒரு பக்கம் இருக்க, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் சத்தான உணவு உட்கொண்டு மிகவும் ஆரோக்கியமாக, நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருப்பார்களா? அவர்களுக்கு ஏதாவதென்றால் குழந்தைகள் எங்கு செல்வார்கள்? குழந்தைகள் இந்த வைரஸால் அத்தனை தூரம் பாதிப்புள்ளாக மாட்டார்களென்று சொன்னாலும், அவர்களால் அது பரவாது என்று சொல்வதற்கில்லை. எத்தனை பரிமாணங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது?

 

 

பற்பல விடயங்களில் ஊடகங்கள் ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்குவது பற்றி எந்தக் கருத்து வேறுபாடுமில்லை. ஆனால், என் பார்வையில், இந்த விடயத்தில் பயம் அவசியம் என்றே தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் நின்றாலும் தவறு, நடந்தாலும் தவறு என்று அவரவர் அரசியல் சார்புக்கு ஏற்றவாறு நின்று கொண்டும், நடந்து கொண்டும் அவரவர் நியாயங்களைப் பேசுவது பற்றியும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் அவர்களைச் சுட்டிக் காட்டுவதற்குத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த விடயம் சரியாகப் படவில்லை. உங்களின் நண்பரின் கருத்தை மதிக்கும் அதே நேரத்தில், நோயின், நோய்க் கிருமியின் தன்மை ஆராய்ந்து விட்டு அதைக் கட்டுப்படுத்துவதற்கு நீங்கள் சொன்னது போதுமானதா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு விடயத்தின் முழுப் பரிமாணமும் தெரிந்து கொள்ள முயலாது, இத்தனை தீர்மானமான கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

 

ப்ரியா

 

வணக்கம்

 

உங்கள் இணையதளத்தில் வைரஸ் அரசியல் என்ற கட்டுரை படித்தேன்.

 

அதில் உங்கள் கேரள நண்பர் பினராயி விஜயன் கேரளத்தை மூடி வைப்பது தவறு என்கிறார். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் உங்களின் அந்த கேரள நண்பர் கஷ்ட நஷ்டம் தெரியாதவர். அந்த கேரள நண்பரின் கருத்துதான் உங்களின் கருத்தும் என்றால் நீங்களும் கஷ்ட நஷ்டம் தெரியாதவர் தான்.

 

 

சுத்தம் விஷயத்தில் , இந்தியா சுத்தம் விஷயத்தில் சுத்தமில்லாமல் இருப்பது இந்தியாவின் கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். பின்பு நீங்கள் கொண்டிருந்த அந்தக்கருத்தை மாற்றிக்கொண்டீர்கள். அது போலத்தான் இன்னும் ஒரு மாதம் கழித்து இந்த கொரோனா விஷத்தில் பினராயி எடுத்த முடிவு சரியானது என்பதை ஒப்புக்கொள்ள போகிறீர்கள்.

 

நன்றி

 

பெருமாள்

கரூர்

 

அன்புள்ள நண்பர்களுக்கு

 

நான் இன்றுகாலை நடைசென்றபோது வயல்களில் கூட்டம் கூட்டமாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள். கட்டிடவேலைகள் நடந்துகொண்டிருந்தன. எங்கும் திரள். அவர்களிடம் வீட்டில் இருங்கள் என்று எவர் சொல்லமுடியும்? சொன்னால் யார் சோறுபோடுவார்கள்? வீட்டில் இரு, கூட்டத்திற்குள் செல்லாதே என்று சொல்வதற்கு உகந்தவர்கள் நடுத்தர, மேல்தர மக்கள் மட்டுமே. அவர்களே பதற்றமும் படுகிறார்கள்.

 

நான் சொல்வது மூடுவதுபோன்ற பாவனைகள் மட்டுமே செய்யமுடியும், மூடிவிட முடியாது என்று மட்டுமே. ஆகவே அந்தப் பாவனைகளுக்குப் பதிலாக உருப்படியாக எதையாவது செய்யலாம். பள்ளிகளை ஆறுமாதம் மூடினால்கூட பிரச்சினை இல்லை. தொழில்தளங்களை மூடமுடியாது. போக்குவரத்தை மூடமுடியாது.

 

ஜெ

முந்தைய கட்டுரைவைரஸ்- கடிதம்-1
அடுத்த கட்டுரைவைரஸ் அரசியல்-3