‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 10

அரசே, நான் என்ன நிகழுமென்று எண்ணினேனோ அதுவே ஒவ்வொன்றாக நிகழ்கிறது என்று தெளிந்தேன். அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன் என்பதை அது நிகழ்ந்த பின்னர்தான் உணர முடிந்தது. அன்னையர் மைந்தரின் ஆளுகையில் இருக்கிறார்கள். மைந்தர் ஓர் அகவைக்கு மேல் அன்னைக்குமேல் கொள்ளும் செல்வாக்கு விந்தையானது. ஒவ்வொரு குடியிலும் ஆண்மகன்கள் அதை நுட்பமாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். மைந்தரின் ஆணியல்பு அதன் இளமை வீச்சுடன் வெளிப்படுகையில் அன்னையரின் பெண்ணியல்பு அவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறது போலும். அது கனிவென்றும் பணிவென்றும் வெளிப்படுகிறது. அதனூடாக ஆட்சிசெய்து அடிபணியவும் செய்கிறது.

அன்றி அன்னையரில் அணையாதிருக்கும் காமம் குற்றஉணர்வென மாறி மைந்தருக்கு தங்களை அடிபணிய வைக்கிறதா? பேரன்னையர் பெருங்காமம் கொண்டவர் என்று சொல்லப்படுவதுண்டு. அழகென்றும் அன்பென்றும் மங்கலங்கள் என்றும் வெளிப்படுவதே காமம் என்றும் திகழ்வு கொள்கிறது என்பார்கள். அன்றி, அனைவரும் இயல்பாகக் கூறுவதுபோல் மைந்தர் வளர்ந்து ஆண்களாகிவிட்டார்கள் என்று உணராமல் கைக்குழவியாகவே அவர்களை எண்ணிக்கொண்டிருக்கும் பேதைமையாலா? மானுட இயல்பை நோக்குகையில் பேதைமையால் உலகியல் நிகழ்கிறதென்று தோன்றுவதில்லை. ஏனென்றால் விழைவால், வஞ்சத்தால்தான் ஒவ்வொன்றும் முடிவெடுக்கப்படுகின்றன. பேதைமை இருப்பது விழைவையும் வஞ்சத்தையும் மெய்மையென எண்ணிக்கொள்ளும் இடத்தில் மட்டுமே.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைவதென்பதே உறவுகளின் இயல்பு. மைந்தரின் விழைவுக்கு அஞ்சி சத்யபாமை நீர் விளிம்பருகே தவம் இருக்கின்றார். மைந்தர் வணங்கும் விழைவின் வடிவென அமைந்திருந்தார் ருக்மிணி. மைந்தரின் விழைவுகளை தானும் ஏற்று தானும் பெருக்கி அமர்ந்திருந்தார் ஜாம்பவதி. மைந்தர்கள் கைக்கருவியென அமர்ந்திருந்தார்கள் பத்ரையும் நக்னஜித்தியும். மைந்தரின் அடிமைகள் என மித்ரவிந்தையும் லக்ஷ்மணையும். இது இவ்வாறுதான் அமையும் என்று யார் கூற முடியும்? எஞ்சியிருப்பவர் காளிந்தி மட்டுமே. அவரோ தங்கள் துணைவியரில் கனிந்தவர். துவாரகையின் ராதை என்று அவரை கூறுகிறார்கள் புலவர்கள். அவரும் அவ்வண்ணம் தன்னை மைந்தர்களுக்கு அளித்துவிட்டிருந்தார் என்றால் நான் இதுகாறும் நம்பியிருந்த ஒன்றின் முழுமையான தோல்வியைக் காண்பது இப்போதுதான். அதன்பின் எனக்கு பெண்ணென்றும் துணைவியென்றும் எண்ண எக்கருத்தும் எஞ்சாது.

ஆகவே தவிப்பும் ஒவ்வாமையும் கொண்டிருந்தேன். ஒவ்வொரு காலடியும் பின்னெடுத்து வைப்பதுபோல் தயங்கி முன்னெடுத்து வைத்தேன். பின்னர் அமைச்சர் ஸ்ரீகரரின் சிற்றறைக்குள் நுழைந்து அங்கு அமர்ந்துகொண்டேன். அங்கே நெடுங்காலமாக அலுவல்கள் எதுவும் நிகழாததுபோல் தோன்றியது. பீடங்களின்மேல் பொடி படிந்திருந்தது. பீடங்களை நான் நோக்குவதைக் கண்ட ஏவலன் அவற்றை துடைத்து “இங்கே ஒவ்வொன்றும் பெரியவை” என்றான். “ஏன் இங்குள்ள மானுடர் சிறியராகிவிட்டனரா?” என்றேன். “ஒருவகையில் ஆம்” என்றான் ஏவலன். நான் அவனை நிமிர்ந்து நோக்கினேன். முதியவன், அக்கண்களில் நான் நன்கறிந்த ஒன்று இருந்தது. நான் நோக்கை விலக்கிக்கொண்டேன்.

ஏவலனை அழைத்து “காளிந்தி அன்னையை நான் சந்திக்க விழைவதாக கூறுக! இளைய யாதவரின்பொருட்டு ஒரு தூது செல்லவிருக்கிறேன் என்றும் சேர்த்துக்கொள்க!” என்று சொல்லி அனுப்பினேன். மறுமொழி வராதொழிந்தால் நன்று. என் உள்ளத்தில் இருக்கும் கற்பனையை அவ்வண்ணமே நிலைநிறுத்திக்கொள்வேன் என்று எண்ணினேன். கைகளை மார்பில் வைத்து சாய்ந்து சற்றே விழி மூடிவிட்டேன். அத்துயிலில் தங்களை கண்டேன். என்னிடம் எதையோ கேட்டீர்கள். அதற்கு நான் மறுமொழியும் உரைத்தேன். ஆனால் விழித்துக்கொண்டபோது அப்புன்னகை மட்டும் நினைவிருந்தது. நீங்கள் கேட்டதென்ன, நான் கூறியதென்ன என்பதை மறந்துவிட்டிருந்தேன்.

என்னை எழுப்பியவன் அனிருத்தனின் ஏவலன். அனிருத்தன் என்னை பார்க்க விழைவதாக சொன்னான். “அனிருத்தனா?” என்று மீண்டும் கேட்டேன். பிரத்யும்னனின் மைந்தர் அவர் என்ற எண்ணத்திலிருந்து என்னால் விலக இயலவில்லை. பிரத்யும்னனை சற்று முன் சந்தித்தபோது உடன் அனிருத்தன் இல்லையென்பதை நினைத்துக்கொண்டேன். “ஆம், அனிருத்தனேதான். இங்குதான் இருக்கிறார். உஷையுடன் இந்த நகருக்குக் கிழக்கே பாலையொன்றின் விளிம்பில் சிறுசோலை ஒன்றை அமைத்து அங்கு தங்கியிருக்கிறார்” என்றான் ஏவலன். என் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. ஏன் என்று அறிந்திருந்தேன், எண்ணியிராத ஒன்று நிகழவிருக்கிறது. “செல்வோம்” என்று சொல்லி அவனுடன் தேரில் ஏறிக்கொண்டேன்.

செல்லும் வழியில் அவன் என்னிடம் ஒன்றும் கூறவில்லை. நான் பன்னிரண்டு காவல்மாடங்களைக் கடந்து கோட்டையின் முகப்பை அடைந்தபோது களைத்து மீண்டும் அரைத்துயிலில் ஆழ்ந்தேன். கனவில் எழுந்து நீங்கள் எதையோ சொன்னீர்கள். இம்முறை எதையோ ஆணையிடுவதுபோல். நான் விழித்தெழுந்து “என்ன?” என்றேன். அருகிருந்த ஏவலன் “அரசே?” என்றான். “ஒன்றுமில்லை, கனவு” என்று விழிமூடிக்கொண்டேன். என் கண்களுக்குள் துவாரகை நிகழ்ந்துகொண்டிருந்தது. முன்பிருந்த பொலிவுகொண்ட நகர் அல்ல. இன்றிருக்கும் இருள்படிந்த நகரும் அல்ல. அது பிறிதொன்று. ஒருகணம் அங்கும் மறுகணம் இங்குமென அலைபாய்ந்தது அது. சாலைகள் பொன்னொளி கொண்டிருந்தன. ஆனால் இடுக்குகளுக்குள் எலிகள் விழிமின்ன ஓடின.

கோட்டையை விட்டு வெளியே நெடும்பாதையில் வளைந்து பாலைவெளி நோக்கி செல்லத்தொடங்கியது தேர். அரசே, துவாரகையைச் சூழ்ந்திருந்த பெரும்புல்வெளி இன்று கருகி மண்நிறம் கொண்டு பாலை என்றாகிவிட்டிருக்கிறது. அங்கிருந்த நாட்களில் நீங்கள் விண்மழையை மண்ணுக்கு இறக்கினீர்கள் என்று தோன்றுகிறது. பசும்புல் முற்றாக மறைந்துவிட்டது. அதை நம்பி அங்கு வாழ்ந்திருந்த ஆநிரை மேய்ப்போர் மெல்ல மெல்ல தொழு சுருக்கி நகருள் வந்து சிறு வணிகங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டிருந்தனர். பலர் நகர்விட்டு செல்லவும் செய்தனர். யாதவர்களில் பெரும்பகுதியினர் குருக்ஷேத்ரப் போரில் மறைந்துவிட்டிருந்தமையால் எஞ்சிய அனைவரும் சிறு வணிகத்தொழில்களிலேயே அமைய இயல்கிறது.

அரசே, துவாரகை இன்று எஞ்சும் சிறிய கடல் வணிகத்தால் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாகவே பெருங்கலங்கள் அங்கு வருவதில்லை. ஏனெனில் கரைவணிகர்களின் வண்டி நிரைகளும் துவாரகைக்குள் நுழைவதில்லை. நெடுந்தொலைவு பயணம் செய்துவந்து அங்கு கடல் வணிகம் செய்வது ஈட்டு பொருள் அளிப்பதல்ல என்று வணிகர்கள் கருதுகிறார்கள். அதைவிட சிந்துவினூடாகச் சென்று தேவபால துறைநகரில் வணிகம் செய்வது எளிது என எண்ணுகிறார்கள். சிந்துநாடு இன்று அஸ்தினபுரியின் துணையரசு. ஆகவே அங்கே வலுவான காவல் உள்ளது. சுங்கமென்று ஏதும் கொள்ளப்படுவதுமில்லை.

மாளவத்தின் துறைமுகங்களும் வணிகர்களுக்கு மேலும் அணுக்கமானவை. மாளவ மன்னர் இந்திரசேனனின் நான்காவது அரசியின் மைந்தர் சமுத்ரவர்மனின் அமைச்சரான புஷ்யகீர்த்தி திறன்மிக்கவர் என்கிறார்கள். அரசுகள் வலுவிழந்து படைவல்லமை குறைந்துவிட்டமையால் காவல் நலிந்து நாடெங்கும் உள்வழி வணிகம் சோர்வுற்றிருக்கிறது என்று புரிந்துகொண்டு கடல்வணிகத்தை பெருக்க ஆவன செய்கிறார். அங்கே இன்று நிகுதி இல்லை. பெறுபொருளை முழுக்க செலவிட்டு யவனக்காவலர்களை அமர்த்தி கடலிலும் கரையிலும் காவலை வலுப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள். காவல் வலுக்கையில் வணிகம் பெருகும். இன்னும் சில ஆண்டுகளில் மாளவம் ஆற்றல்கொண்ட வணிகநாடென்று ஆகும்.

மாறாக இங்கு நிகுதி மிகுந்துகொண்டே இருக்கிறது. நிகுதி வருவாய் குறையுந்தோறும் நிகுதி அளவைக் கூட்டுவது துவாரகையை ஆள்வோரின் இயல்பு. மாறி மாறி நிகுதி அமைப்பதில் போட்டியிடுகிறார்கள். இன்று அங்கே எந்த இளவரசரும் தங்களுக்கென எந்தத் தனி முடிவையும் எடுக்க முடிவதில்லை. ஒருவர் எடுத்த முடிவை பிறர் எடுத்தாகவேண்டும். ஒருவர் நிகுதி கூட்டினால் பிறர் நிகுதி கூட்டாமல் இருக்க இயலாது. எனவே எவரும் பிறரை எண்ணாமல் எம்முடிவையும் எடுப்பதில்லை. பிறர் கூட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தாலேயே தாங்களும் கூட்டுகிறார்கள். பிறரை சூழ்ந்துநோக்கி தாங்கள் அடையும் ஐயத்தாலும் அச்சத்தாலும் முடிவுகளை எடுக்கிறார்கள்.

ஓர் அரசு மூன்றெனப் பிரிந்து தனக்குள் போரிட்டுக்கொண்டால் அதற்கு மூன்று கருவூலங்கள் தேவையாகின்றன. மூன்று படைகள், மூன்று ஆட்சிமுறைகள், மூன்று நெறிகள். மூன்று அரசுகளை அங்கிருக்கும் சிறு வணிகம் பேணவேண்டியிருக்கிறது. ஆகவே நகர் நலிந்துவிட்டிருக்கிறது. மாளிகைகள் பசி கொண்ட யானைகள்போல் மெலிந்துவிட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் இரு விளிம்பும் தொட்டு மக்கள் பெருகி ஓடிக்கொண்டிருந்த துவாரகையின் தெருக்கள் ஒழிந்து மிக அகன்று பெரிய களிக்களங்கள்போல் தென்படுகின்றன. துவாரகையின் வணிகத்தெருவில் தரையில் அமர்ந்து காகங்களும் மைனாக்களும் மேய்வதை பார்க்கிறேன். பகலில் சாலைகளில் பெருச்சாளிகள் ஓடுகின்றன.

எண்ணியதைவிட பலமடங்கு விரைவில் பாலை விளிம்பில் அமைந்திருந்த அனிருத்தனின் சோலையைச்சென்றடைந்தோம். கற்களை அடுக்கி எழுப்பப்பட்டிருந்த தாழ்வான கோட்டைக்கு காவல் நின்றிருந்தவர்கள் அசுரகுலத்து வீரர்கள். எங்களை நன்கு ஆய்ந்த பின்னரே உள்ளே செல்லவொப்பினர். என்னை அழைக்க வந்தவன் யாதவ வீரன் என்பதனால் அந்த ஐயம் என்பதை உணர்ந்தேன். அந்தச் சிறு கோட்டைக்குள் ஓர் அழகிய சோலை உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு அந்தர்காமினி என்னும் ஆழத்து ஆற்றில் இருந்து எழும் அக்ஷபிந்து என்னும் குன்றா ஊற்று இருக்கிறது, அந்த ஊற்று நீரை மிகக் குறைவாக கொண்டுவந்து செடிகளின் வேருக்கு மட்டுமே அளித்து அச்சோலை பேணப்படுகிறது என்றார்கள்.

நீரை குறைவாகக் கோரும் மரங்களையும் செடிகளையும் மட்டும் அங்கு வளர்த்திருந்தார்கள். அம்மரங்கள் அனைத்துமே ஒருவர் நின்றால் தலைமறையும் அளவுக்கு மட்டுமே உயரம் இருந்தன. குற்றிலைகள் தழைத்து மண்ணோக்கி இறங்கிய கிளைகள் கொண்டவை. பாலை நடுவே அப்படி ஒரு சோலை எழுகையில் பல்லாயிரம் பறவைகள் அங்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. அங்கு சிறு பறவைகளினால் ஆன ஒரு போர்ப்படை தங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அத்தனை புதர்களும் சலங்கைகள்போல் குலுங்கிக்கொண்டிருந்தன. அத்தனை மரக்கிளைகளும் பறவைகளின் எடையால் தழைந்திருந்தன. சோலைக்கு மேல் நீராவி எழுந்து அலையடிப்பதுபோல் பறவைக்குலங்கள் எழுந்து அமைந்து சுழன்றன.

சோலை நடுவே முன்பு தங்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்த கல்லால் ஆன சிறு மாளிகை இருந்தது. தாழ்வான கூரை கொண்டது. எடைமிக்க கற்களை தூண்களென நாட்டி மேலே கற்பாளங்களை வைத்து கட்டப்பட்டது. ஆகவே அங்கு வீசிய காற்றின் விசையை தாங்குவது. அதன் மையத்தில் இருந்த சிறுகூடத்தில் நான் அன்று அனிருத்தனை சந்தித்தேன். நான் செல்வதற்குள்ளாகவே என்னைக் காத்து அங்கு அவருடைய அணுக்கர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். கோட்டைவாயிலில் என்னை சந்தித்து அழைத்துச் சென்ற சிற்றமைச்சனும் அசுரகுலத்தானே. பாணாசுரரின் நாட்டில் இருந்து வந்தவன் என்பதை அவனுடைய மொழியிலிருந்தே புரிந்துகொண்டேன். துவாரகையின் மொழிக்கு அவன் நா பழகியிருக்கவில்லை.

“நீர் பாணாசுரரின் நாட்டவரா?” என்றேன். “ஆம்” என்றான். “நான் அசுரவேதம் பயின்ற அமைச்சன்.” நான் புன்னகையுடன் “ஐந்தாம் வேதம் அசுரவேதத்தில் இருந்து எழுந்தது என்கிறார்களே?” என்றேன். “பெருமரங்கள் தங்கள் வேர்களால் சூழ இருக்கும் அனைத்தையும் கவ்வி உறிஞ்சி உண்கின்றன. அவற்றில் சாறென ஓடி மலர்களென விரிந்து தேன் என ஊறுவது எந்த நீர் என எவர் சொல்ல முடியும்?” என்றான். அவன் நூல் தேர்ந்தவன் என்று தெரிந்துகொண்டேன். “ஆயினும் நிலம் மரத்தின் சுவையில் உள்ளது அல்லவா?” என்றேன். “நிலம் நன்றென்றால் மரத்தின் தன்னியல்பை வளர்க்கிறது, மாற்றுவதில்லை” என்று அவன் சொன்னான். “இனிக்கும் நிலத்தில் முளைத்த எட்டி இனிக்குமா என்ன?”

 

அரண்மனையின் உள்ளே சென்றதும் நான் அறைவாயிலில் அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டேன். உள்ளே எனக்காக அவை ஒருங்குகிறது என்று தெரிந்தது. சற்று நேரம் கழித்து சிற்றமைச்சர் ஒருவர் வந்து “வருக!” என்று என்னை அழைத்தார். உள்ளே சென்று அத்தனை பெரிய அவையை பார்த்ததும் திகைத்தேன். அனிருத்தன் எழுந்து அரசருக்குரிய மதிப்பை எனக்களித்து தலைவணங்கி முறைமை கூறினார். நான் அந்த முறைமையை ஏற்று அவரை வாழ்த்தினேன். அரசருக்குரிய பீடம் எனக்கு அளிக்கப்பட்டது. முறைமைகள் நடக்கும்போது நான் அவையை நோக்கிக்கொண்டிருந்தேன். அங்கே உஷை வந்துவிடக்கூடும் என எதிர்பார்த்தேன், ஆனால் அவர் எந்த அரசநிகழ்வுகளிலும் வந்தமர்வதில்லை என்றும் அறிந்திருந்தேன்.

அனிருத்தன் நேரடியாகவே என்னிடம் “அரசே, தாங்கள் துவாரகையிலிருந்து அனைத்து மைந்தரின் செய்தியுடன் தாதையை பார்க்கச் செல்வதாக நான் அறிந்தேன்” என்றார். நான் “அனைத்து மைந்தரின் செய்தியல்ல. அன்னையரின் செய்தி மட்டுமே” என்று சொன்னேன். “ஆம், இங்கு அன்னையர் மைந்தரின் செய்திகளைதானே உரைக்கிறார்கள்?” என்றபின் புன்னகைத்து “என் மூதன்னையின் செய்தியை அன்றி என் மைந்தரின் செய்தியையும் என் செய்தியையும் சேர்த்தே சென்று உரைக்கும்படி உங்களை கோரும்பொருட்டே உங்களை அழைத்தேன்” என்றார். நான் உணர்வுகளைக் காட்டாமல் “கூறுக!” என்றேன்.

“யாதவ அரசே, இங்கு இப்போது துவாரகையின் அரசகுடி மூன்றெனப் பிரிந்து வாளோங்கி நின்றிருக்கிறது. பிறப்பால் நான் ஷத்ரிய மைந்தனாகிய பிரத்யும்னனின் குருதிகொண்டவன். பிரத்யும்னன் விதர்ப்பத்தின் ருக்மியின் படையை நம்பி இந்நகரை கைப்பற்றி முடிசூடும் விழைவுடன் இருக்கிறார். அவர் முடிசூடினால் அவருடைய முதல் மைந்தனென நான் வழி அமைந்து அரியணை கொள்ளமுடியும். ஆகவே இயல்பாகவே தந்தையுடன் நான் நின்றிருக்க வேண்டும். தந்தை அவ்வாறே எதிர்பார்க்கிறார். ஆனால் இன்றுவரை நான் அந்த முடிவை அறுதியாக எடுக்கவில்லை” என்று அனிருத்தன் பேசத்தொடங்கினார்.

ஏனென்றால் நான் தந்தையின் மைந்தனென அமைந்தேன் என்றால் என்னுடன் படைத்துணையாக இன்று இருக்கும் பாணாசுரரின் அசுரகுடியினர் அனைவரையும் தவிர்க்க வேண்டியிருக்கும். நான் முடிசூட்டிக்கொண்டால் என்னருகே பட்டத்தரசியாக உஷை அமரமுடியுமா என்பதே முதற்கேள்வி. அதை என் தந்தையிடம் கேட்டேன். ஒரு நிலையிலும் அமர இயலாது என்று அவர் கூறினார். ஏற்கெனவே குருதியில் ஒரு குறைவிருக்கிறது, அதை நிகர்செய்யும் பொருட்டு நான் தொன்மையான ஷத்ரிய குடிகளிலிருந்தே மணம்புரியவேண்டும் என்றார். அந்த ஷத்ரிய அரசியில் பெற்றெடுக்கும் மைந்தனே எனக்குப் பின் துவாரகையை ஆளவேண்டும் என்றார். என் மைந்தன் வஜ்ரநாபனுக்கு மணிமுடி சூடும் உரிமை இல்லை. ஏனென்றால் அவன் அசுரகுடியினன்.

நானும் எந்தையும் சினத்துடன் முட்டிக்கொண்டோம். “குருதியில் குறையென நீங்கள் எண்ணுவது தந்தையின் குருதியையா?” என்று நான் கேட்டேன். “ஆம், அதிலென்ன ஐயம்?” என்றார். “லவண குலத்து மரீஷையின் குருதி அது. யாதவ குலத்திற்கும் ஒரு படி இழிவானது. யாதவ குடியிலிருந்து முளைத்தவன் என்னும் பழியை நான் சூடுவதனாலேயே இன்னும் எனக்கு அரியணை அமையவில்லை. ஷத்ரியர் என்னை முழுதேற்றிருந்தால் இந்த எளிய யாதவக்குடியினர் என்னை மறுத்து ஒரு கணமும் நின்றிருக்கமாட்டார்கள். அந்த யாதவக்குருதியே குறையுடையது என்பது எனக்கு இன்னமும் பெரிய தடை. ஆகவே என் அன்னையின் குருதிவழியையே நான் கொள்ளவிருக்கிறேன். ருக்மியின் குடிவழியன் நான். தாய்மாமனை கொடிவழியென ஏற்க நூல்கள் ஒப்புகின்றன” என்றார்.

“நீங்கள் உங்கள் தந்தையின் மைந்தன் அல்ல ருக்மியின் மருகர் மட்டுமே என்கிறீர்களா?” என்றேன். “ஆம், அவ்வாறே. இனி எந்த அவையிலும் அவ்வாறே கூறவிருக்கிறேன். என் உடலில் இருக்கும் மரீஷையின் குருதியை தவிர்ப்பதே என் இலக்கு” என்றார் எந்தை. நான் சீற்றத்துடன் “எனில் என்னில் இருக்கும் ஷத்ரியக்குருதியை தவிர்ப்பதே எனது இலக்கு. நான் மரீஷையின் கொடிவழி வந்தவன். அவ்வாறே என்னை வைத்துக்கொள்வேன்” என்றேன். அவர் உறுமியபடி எழுந்து “இது உனக்கு அந்த அசுரமகள் கற்றுத் தந்த பாடமா? அவள் பொருட்டே அவள் குரலை இங்கு ஒலிக்கிறாயா?” என்று கேட்டார். “ஆம், நீங்கள் ஒலித்துக்கொண்டிருப்பது உங்கள் அன்னையின் பெருவிழைவை. அவர் நாவில் எழுந்த தாய்மாமனின் வஞ்சத்தை. அதுபோல் அல்ல இது. இது நெடுநின்ற தொல்குலம் ஒன்றின் குரல்” என்று நான் சொன்னேன்.

குலம் பற்றிய அந்தப் பேச்சு எந்தையை சீற்றம் கொள்ள வைத்தது. தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி அரியணையிலிருந்து இறங்கி வந்தார். அடிக்கப்போவதுபோல் கைவீசி “எவரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அறிவாயா? அறிவிலி! நீ என் மைந்தன் அல்ல. நீ எனக்குப் பிறந்தவன் அல்ல. உன்னுடலில் ஓடுவதும் அசுரக்குருதிதான்” என்றார். “ஆம், என்னில் சம்பராசுரர் அளித்த அன்னம் குருதியென கலந்திருக்கலாம்” என்றேன். என் சொற்களின் உட்பொருள் அவரைத் தாக்க தளர்ந்து மீண்டும் சென்று அரியணையில் அமர்ந்து “மெய்! எந்தை எனக்கிழைத்த பெரும் பழி என்பது இவ்வண்ணம் அசுரகுலத்தில் என்னை வளரவிட்டது. அசுரகுலத்து மங்கையை எனக்கு மணமுடித்தது” என்றார். தொய்ந்து அரியணையுடன் ஒட்டினார்.

ஒரு துடிப்பு அவரில் உடனே எழுந்தது. வெறிகொண்டவராக எழுந்து “அப்பழி என்னில் முடியட்டும். நீ என் கொடிவழியினன் அல்ல என்று இதோ இன்றே அவையில் அறிவிக்கிறேன். என் குருதி தூய ஷத்ரிய அரசியொன்றில் முளைத்தது. அதுவே என் தகுதி. என்னிடமிருந்து ஷத்ரியக்குருதியில் முளைத்த ஒருவனை என் மணிமுடிக்குரியவன் என்று அறிவிக்கிறேன். இனி எனக்கு நீ மைந்தன் அல்ல, விலகு” என்றார். “அதை உங்கள் நாவிலிருந்து கேட்டுச் செல்லவே நான் வந்தேன். நன்று” என்றபடி எழுந்துகொண்டேன். நாங்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தபோது அவையில் என் தந்தையின் உடன்பிறந்தார் இருந்தனர். அவர்கள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவர்கள் எவ்வகையிலோ அந்தப் பிரிவை விரும்பினார்கள் என்று தோன்றியது.

தந்தை “ஒன்று உணர்க!” என்று கூவினார். “ஒன்று உறுதிபட உணர்க! என்றேனும் களத்தில் வாளுடன் நாம் எதிரெதிர் சந்திப்போமெனில் இமையின் அசைவும் இன்றி உன் கழுத்தை அறுத்து தலையை நிலம்தொட வைப்பேன்” என்றார். “நானும் அவ்வாறே. அவ்வண்ணம் களத்தில் சந்திக்க நேர்ந்தால். உங்களை தந்தையென்றல்ல, என் குருதியை என் மூதாதையை பழித்த கீழ்மகன் என்றே எண்ணுவேன்” என்றபின் திரும்பி வந்தேன். அவர் சொல்லின்றி கூச்சலிட்டபடி எனக்குப் பின்னால் ஓடிவந்தார். அவர் உடன்பிறந்தவர்கள் அவரை பிடித்துக்கொண்டார்கள். “இந்த அவையிலிருந்து அவன் வெளியே செல்லக்கூடாது. அவன் தலை என் அவையில் உருண்டிருக்கவேண்டும்” என்று அவர் கூவுவதை பின்னால் கேட்டேன்.

அனிருத்தன் சொல்லிமுடித்தார். நான் அமைதியாக கேட்டு அமர்ந்திருந்தேன். அனிருத்தன் “நான் என் தந்தையை அஞ்சினேன். அவர் என்னை சிறையிடவும் கூடும். எனவே இங்கே தனியிடம் தேடினேன். அசுரகுடியின் வீரர்களை மட்டும் இங்கே காவலுக்கு வைத்திருக்கிறேன்” என்றார். நான் “எனில் நீங்கள் இப்போது எத்தரப்பு? நான்காவது தரப்பா?” என்றேன். “இல்லை இன்று அசுரகுடியின் போரிடும் ஆற்றல் குன்றியிருக்கிறது. நிஷாதருடனும் கிராதருடனும் ஒன்றிணைந்து நின்றால் ஒழிய துவாரகையை ஆளும் ஆற்றல் எங்களுக்கு இல்லை. நாங்கள் யாதவர்களையும் ஷத்ரியர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் இருவரும் இணைந்தால் அவர்கள் எங்களை வெல்லக்கூடும். ஆகவே சாம்பனுடன் நின்றிருப்பதாக நாங்கள் உறுதிகொண்டிருக்கிறோம்.”

நான் “இம்முடிவை உங்கள் தந்தைக்கு தெரிவித்துவிட்டீர்களா?” என்றேன். “இல்லை. இன்று அசுரகுடியின் அனைத்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சேர்ந்து எடுத்த முடிவு இது. உண்மையில் சற்று முன்னர்தான் அறுதிமுடிவு எடுக்கப்பட்டது” என்றார் அனிருத்தன். “எங்கள் அரசர் சாம்பனே. அதை உங்களிடம் சொல்ல விழைந்தேன்.” நான் “எனில் உங்கள் நிலம் எது?” என்று கேட்டேன். “துவாரகை எனக்கு வேண்டியதில்லை. துவாரகையின் முடி சாம்பனின் கொடிவழிகளுக்கு செல்லட்டும். நாங்கள் எங்கள் அசுர நிலத்தையே ஆள்கிறோம். அங்கு பேரரசுகளை உருவாக்குகிறோம். எங்கள் அரசுக்கு நிஷாதர்களின் மணிமுடி அமைந்திருக்கும். இந்த துவாரகை உதவி செய்தால் போதுமானது” என்றார் அனிருத்தன்.

நான் புன்னகைத்தேன். “உங்கள் புன்னகை புரிகிறது. ஒரு பேரரசு இன்னொன்று வளர ஒப்பாது என்பீர்கள். எங்களுக்கு மூன்று தெரிவுகளே உள்ளன. ஷத்ரியர்களும் யாதவர்களும் நிஷாதரும். இம்மூவருள் ஓர் அசுரப் பேரரசு உருவாவதை சற்றேனும் ஒப்புக்கொள்பவர்கள் எவர்? நீங்களே கூறுக!” என்றார் அனிருத்தன். “ஆம், அவ்வண்ணமெனில் தெரிவு நிஷாதர்களே” என்றேன். “அந்த முடிவையே நான் எடுத்தேன். இது நன்கு எண்ணிச்சூழ்ந்து எடுத்த முடிவு. பிறிதொரு வழியில்லை. எங்கள் படைத்துணை சாம்பனே” என்று அனிருத்தன் கூறினார். நான் பெருமூச்சுவிட்டேன். “சரி, இதில் நான் செய்வதற்கென்ன?” என்றேன்.

“காளிந்தி அன்னையின் ஓலையை பெற்றால் நீங்கள் கிளம்பிச் செல்வீர்கள். அங்கே துவாரகையின் அரசரை சந்தித்தால் இதை சொல்லுங்கள். நான் சாம்பனுடன் நிலைகொள்ளவிருக்கிறேன்.” நான் “இதை ஏன் இப்போது அவரிடம் சொல்லவேண்டும்?” என்றேன். “அவர் அனைத்தையும் உணரவேண்டும்” என்றார். “அவர் வராதொழிவார் என்றே நான் நினைக்கிறேன். இங்குள்ள விசைகள் இயல்பாக மோதிக்கொண்டு தங்கள் நிலைபேற்றை சென்றடையட்டும் என்றே எண்ணுவார். அவ்வண்ணம் அவர் கருதினார் என்றால் இச்செய்தி அவருக்கு உகந்ததே.” நான் “அவ்வண்ணமே அவரிடம் சொல்கிறேன்” என்றேன். அனிருத்தன் எழுந்து எனக்கு வாழ்த்துரைத்து விடை அளித்தார்.

முந்தைய கட்டுரைஆடகம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைவேட்டு, துளி -கடிதங்கள்