பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 8
என்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய சிறிய அரண்மனையில் குடியிருந்தார். அங்கே அவந்தி நாட்டிலிருந்தே காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறர் மேல் ஐயம் கொண்டிருந்த துவாரகையில் பெண்கள் தங்கள் பிறந்த நாட்டுக்கு உள்ளத்தால் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர். மணத்தன்னேற்பில் உங்களை ஏற்று உடன்வந்த மித்ரவிந்தை ஒவ்வொரு அடியாக பின்வைத்து மீண்டும் அவந்திக்கே சென்றுவிட்டிருந்தார் என்று தோன்றியது.
என்னை அழைப்பதற்குப் பிந்தியமை ஏன் என்று புரிந்துகொண்டிருந்தேன். எண்ணியதுபோலவே விருகனும் கர்ஹனும் அனிலனும் கிருதரனும் வர்தனனும் அங்கிருந்தனர். மைந்தர்கள் வந்து அன்னையிடம் ஓரிரு சொற்கள் பேசி முடிவுகள் எடுத்த பின்னரே என்னை அழைத்திருந்தனர். நான் அறைக்குள் சென்றபோது மித்ரவிந்தையின் அருகே விருகன் அமர்ந்திருந்தார். கர்ஹன் அப்பால் நின்றிருந்தார். பிறர் சற்று தள்ளி சாளரத்தோரம் நின்றிருந்தனர். நான் தலைவணங்கி அமர்ந்தேன். விருகன் என்னிடம் நேரடியாக “நிகழ்வன அனைத்தையும் அறிந்தோம். எங்கள் அன்னையின் ஓலை அளிக்கப்படுவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் அது ருக்மிணி அன்னையின் ஓலையுடன் சேர்த்து அளிக்கப்படாது. எங்கள் ஓலை தனியாகவே அளிக்கப்படும்” என்றார்.
நான் “நான் உங்கள் ஓலைகளை கோரவில்லை, நான் கோருவது அரசியின் ஓலையை மட்டுமே” என்றேன். “ஆம், அந்த ஓலையை என் அன்னை தனியாகவே தருவார்” என்றார் விருகன். “அதிலென்ன?” என்று நான் இயல்பாக சொன்னேன். “இன்று அவந்தி விதர்ப்பத்துடன் இணைந்திருக்கிறது. பிரத்யும்னனின் அவையிலேயே நாங்கள் இடம்பெறுகிறோம். ஷத்ரியக்கூட்டிலிருந்து நாங்கள் வெளியே செல்லவும் முடியாது. ஆனால் நாங்கள் அவர்களின் அடிமைகள் அல்ல, கூட்டர் மட்டுமே. அதை அவர்கள் உணரவேண்டும். அவர்கள் அனுப்பும் ஓலையில் ஒரு துணைமுத்திரையென எங்கள் அன்னை அமையலாகாது” என்றார் விருகன். “அவ்வாறு நீங்கள் முடிவெடுத்தால் நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்றேன். “ஓலையை கொடுங்கள், அதற்குமேல் பேச ஏதுமில்லை.”
“அந்த ஓலையை உடனே உங்களிடம் அளிக்கச் சொல்கிறேன்” என்று விருகன் தொடர்ந்தார். “அவ்வண்ணம் ஓலை தனியாகவே அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும். இங்கு நாங்கள் அதைப்பற்றி எண்ணினோம். இது ஒரு நல்ல தருணம், அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் ஆனால் அவர்களுக்கு அடங்கி அல்ல என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.” நான் சலிப்புடன் “இது ஒரு மிகச் சிறிய செயல். இதனூடாக ஆவதொன்றுமில்லை” என்றேன். “இல்லை, அந்த அவையில் நாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்தால் இதை சொல்லியிருக்கமாட்டீர்கள். எங்களை அவர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசின் இளவரசர்கள் என்றே நடத்துகிறார்கள்” என்றார் விருகன்.
நான் புன்னகைத்தேன். “என்ன புன்னகை?” என்று விருகன் ஐயத்துடன் கேட்டார். “நன்று, யாதவர்கள் மட்டுமல்ல ஷத்ரியர்களும் ஒற்றுமையுடன் இல்லை என்பதை காண்கையில் நிறைவளிக்கிறது” என்றேன். “ஏன்?” என்றார். “அனைத்துத் தரப்பும் நிகர்நிலையில் இருப்பது நன்றல்லவா?” என்றேன். அவர் “எங்கள் இடமென்ன என்று எங்களுக்குத் தெரியும்” என்றார். நான் அவருக்கு அறிவூக்கி எவர் என அறிய விழைந்தேன். “ஆனால் அவந்தி என்றுமே விதர்ப்பத்திற்குக் கீழேதானே இருந்துள்ளது?” என்றேன். அவர் சீற்றத்துடன் “எவர் சொன்னது? அவந்தி தன் தன்னுரிமைக்காக போராடிக்கொண்டே இருந்திருக்கிறது. அதன் வீரவரலாறு அனைவருக்கும் தெரியும்” என்றார்.
எண்ணியதுபோலவே வர்தனன் தணிந்த உறுதியான குரலில் “சிறிய நாடுகளை விழுங்கிவிடலாம் என பெரிய நாடுகள் எண்ணுவது என்றுமுள்ளதே” என்றார். “ஆனால் அவ்வண்ணம் விழுங்கப்படாமல் ஒரு நாடு பல தலைமுறைக்காலம் நீடிக்கிறதென்றாலே அது தன்னுரிமையை முதன்மை கொள்கிறது, அதன்பொருட்டு போரிடச் சித்தமாக உள்ளது என்றே பொருள். அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் மாளவத்திற்கும் விதர்ப்பத்திற்கும் அச்சமூட்டுபவர்களாகவே திகழ்ந்தனர். குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அவர்களின் களவீரத்தை இன்றும் சூதர்கள் பாடிப்புகழ்கின்றனர்” என்றார்.
அவர்தான் சுழிமுனை என்று கணித்த என் கூர்மையை நானே வியந்துகொண்டேன். அந்த அவைக்குள் நான் நுழைந்த கணம் அங்கிருந்தவர் அனைவரும் அவரை ஒருகணம் நோக்கி விழிவிலக்கியதை நான் கண்டிருந்தேன். இளையவர் ஆயினும் அவரே அங்கே சூழ்திறன் கொண்டவர். அதனாலேயே அவைமுதன்மை கொண்டவர். ஒவ்வொரு குழுவிலும் அவ்வண்ணம் ஒருவர் எழுவதன் விந்தையை எண்ணிக்கொண்டேன். அவரை மேலும் சீண்ட விழைந்தேன். அவருக்கு தன் நாவின்மேல் எவ்வளவு ஆட்சி என்று அறிய. ஏனென்றால் இந்தக் களமாடலில் தன்னை தான்வென்ற திறனாளரே முதன்மைவிசை என திகழவிருக்கிறார்.
நான் அவரிடம் “மாளவமும் விதர்ப்பமும் போரிட்டுக்கொண்டே இருந்தமையால் இரு தரப்பிலும் மாறி மாறி ஒட்டிக்கொண்டு ஒரு தரப்பை இன்னொரு தரப்புடன் மோதவிட்டு அவந்தி தங்கிவாழ்ந்தது என்பார்கள்” என்றேன். “ஆம், அதை அரசுசூழ் திறன் என்பார்கள்” என்று வர்தனன் சொன்னார். “அதன் பொருட்டு நாங்கள் பெருமிதமே கொள்கிறோம். வில்திறனுடன் சொல்திறனையும் இணைத்துக் கொண்டுள்ளோம்.” நான் “இங்கும் உங்கள் வழி அதுதானா?” என்றேன். விருகன் இடைமறித்து “ஆம், அங்கே மோதல்கள் இருக்கின்றன. ருக்மிணியின் மைந்தர்களிலேயே சாருதேஷ்ணனின் குரல் விலகி ஒலிக்கிறது. நக்னஜித்தியின் மைந்தர்களுக்குள்ளும் சில அமைதியின்மைகள் உள்ளன. அனிருத்தனின் தரப்பு என்ன என்பது எவருக்கும் தெரியாததாகவே உள்ளது” என்றார்.
அவரை நோக்கிய வர்தனனிடம் எரிச்சல் தெரிந்தது. மிகைச்சொல் எழுந்துவிட்டது என்பதை உணர்ந்த விருகன் “நாங்கள் எவரிடமும் பிரிவுச்சூழ்ச்சி செய்து விளையாட விழையவில்லை. ஆனால் எங்கள் நலன்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார். வர்தனன் “நான் தெளிவாக எங்கள் ஐயத்தை சொல்லிவிடுகிறேன், யாதவரே. இங்கு தந்தை வரவேண்டும் என்றே நாங்கள் விழைகிறோம். அவர் சொல்லில் இருந்து ஆணைகொண்டு பிரத்யும்னன் முடிசூடுவது எங்களுக்கு நன்று. ருக்மி இந்நகர்மேல் படைகொண்டுவந்து அதன் விளைவாக பிரத்யும்னன் முடிசூடுவார் என்றால் இங்கே விதர்ப்பத்தின் குரல் ஓங்கிவிடும்… அது அவந்திக்கு நன்று அல்ல” என்றார்.
“ஆனால் இரண்டாமவரான சாருதேஷ்ணனும் விதர்ப்பத்தின் இளவரசியை மணந்தவர் அல்லவா?” என்றேன். வர்தனன் தடுப்பதற்குள் விருகன் சொல்லெடுத்துவிட்டார். “ஆம், ஆகவேதான் நாங்கள் சாரகுப்தனை ஆதரிக்கிறோம்.” நான் வியந்து சொல்லவிந்துவிட்டேன். அவ்வண்ணம் ஒன்றை எதிர்பார்க்கவே இல்லை. “சாரகுப்தனா? அவர் முரண்கொண்டிருக்கிறாரா? அவைகளில் அப்படி ஒருவர் இருப்பதே வெளிப்பட்டதில்லை” என்றேன். வர்தனன் “அவரிடம் பேசிவிட்டோம். அவர் எங்கள் ஆதரவுடன் முடியை கைப்பற்றலாம் என்னும் எண்ணம் கொண்டிருக்கிறார்” என்றார். வர்தனனை திரும்பிப்பார்த்தபின் விருகன் திகைத்து என்ன சொல்ல என்று தெரியாமல் தவித்தார். சாரகுப்தனின் பெயரை சொல்லியிருக்கக் கூடாது என்பது அவருக்கும் அங்கிருந்த பிற மைந்தருக்கும் அப்போதுதான் தெரிந்தது.
நான் புன்னகையுடன் “சாரகுப்தன் மிகச் சிறியவர். அவருக்கென இங்கே படையோ ஆதரவோ இல்லை. எந்தப் படைக்களத்திலும் அவர் நின்றதில்லை. அத்தகைய ஒருவருக்கும் இவ்வண்ணம் ஒரு விழைவு இருப்பது விந்தையே” என்றேன். வர்தனன் “அவர் விழைவதில் என்ன பிழை? அவர் மணந்துகொண்டிருப்பது மாளவத்தின் இளவரசியை… அவருடன் பரதசாருவும் விசாருவும் சாருவும் இணைந்திருக்கிறார்கள். பரதசாரு கேகயத்து இளவரசியையும் விசாரு கலிங்க இளவரசியையும் சாரு கூர்ஜரநாட்டு இளவரசியையும் மணந்திருக்கிறார்கள்” என்றார்.
வேறுவழியில்லாமல் பேசத்தொடங்கி விழையாதவற்றை பேசிக்கொண்டிருக்கிறார் என உணர்ந்தேன். நான் அவரை நோக்கி புன்னகைத்து “ஆம். ஆனால் அவர்கள் அனைவருமே கவர்ந்து கொண்டுவரப்பட்டு மணக்கப்பட்டவர்கள்” என்றேன். “கூர்ஜரமும் கலிங்கமும் துவாரகையின் முதன்மை எதிரிகள்.” வர்தனன் “மெய், ஆனால் அதெல்லாம் போருக்கு முன்னர். குருக்ஷேத்ரப் போருக்குப் பின் நிலைமை அதுவல்ல. இன்று ஷத்ரியர் நிலைநிற்புக்காகவே போராடும் நிலையில் இருக்கிறார்கள். பழைய சினங்களும் பகைமைகளும் இன்றில்லை. பழைய அரசர்களே கூட இன்றில்லை. கூர்ஜரத்தில் முந்தைய கூர்ஜர மன்னர் சக்ரதனுஸின் எட்டாவது அரசியின் மைந்தர் சந்திரதனுஸ் இன்று அரசேற்றிருக்கிறார். அவருக்கு பழைய வரலாறுகளுடன் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. அவருடைய நேர்தங்கையைத்தான் சாரு மணந்திருக்கிறார்” என்றார்.
“இன்று எந்தெந்த வகையில் எல்லாம் படைக்கூட்டுக்களை அமைக்க முடியும், எப்படியெல்லாம் சிறிய அளவிலேனும் படைகளை தொகுத்துக்கொள்ள முடியும் என்றே ஒவ்வொரு ஷத்ரியநாடும் எண்ணுகிறது. ஆதரிக்கும் எவரையும் வரவேற்கும் நிலையில் உள்ளது. கூர்ஜரமும் கலிங்கமும் மாளவமும் கேகயமும் நம்முடன் இணையக்கூடும். இங்கே வலுவான ஒரு ஷத்ரியப் படைக்கூட்டு அமைக்கமுடியும்.” நான் “அதை பிரத்யும்னன் எண்ணியிருக்க மாட்டாரா?” என்றேன். “எண்ணவில்லை. அவர்கள் மிகையான தன்னம்பிக்கையில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆற்றலால் அச்சுறுத்தி எஞ்சிய நாடுகளை உடன் சேர்த்துக்கொள்ளலாம் என கணக்கிடுகிறார்கள். ஆனால் ஆற்றல் மீதான அச்சமே அவர்களை விலக்கும் என நாங்கள் எண்ணுகிறோம்” என்றார் விருகன்.
வர்தனன் “மேலும் ஒன்றுண்டு, விதர்ப்பம் போருக்கு வராதொழிந்தமையால் இன்று பெரும் படைவல்லமையுடன் உள்ளது. அதை அத்தனை நாடுகளும் அஞ்சிக்கொண்டிருக்கின்றன. அதற்கு எதிராக அனைத்து ஷத்ரியர்களும் அணிசேர்வார்கள்” என்றார். “ருக்மி வரலாற்றை நன்கு கணித்திருக்கிறார். இன்று அவர் விழைந்தால் பாரதவர்ஷத்தில் எவருடனும் போரிடும் நிலையில் இருக்கிறார்” என்று கர்ஹன் சொன்னார். “இல்லை, அவருக்கு ஒரு நல்லூழ் அமைந்தது, அவ்வளவுதான்” என்று வர்தனன் திரும்பி அவரிடம் சொன்னார். “எண்ணாது சொல்லெடுக்கலாகாது அவையில்.” அவருடைய அச்சினம் எனக்கு வியப்பூட்டியது.
கர்ஹன் அவரைவிட மூத்தவர். ஆனால் அவர் தணிந்து “நான் எனக்குத் தோன்றியதை சொன்னேன்” என்றார். “தோன்றியதைச் சொல்லும் இடம் அல்ல அவை” என்றபின் என்னிடம் திரும்பிய வர்தனன் “போரில் அத்தனை ஷத்ரியர்களும் கலந்துகொண்டது ஏன்? ஒருவர் கலந்துகொள்ளாமல் இருந்தால் அவர் தனித்து நிற்க நேரிடும். போருக்குப் பின் ஆற்றல்கொண்டு எழும் தரப்பு அவரை தாக்கி அழிக்கும். போரில் எவர் வென்றாலும் அவரை விலகிநின்றவர் எதிர்கொண்டாகவேண்டும். எந்த அரசுசூழ் நுட்பமும் அறியாமல் வெற்று வெறியாலேயே ருக்மி விலகி நின்றார். போருக்குப் பின் இரு தரப்பும் இவ்வாறு ஆற்றல் அழிந்து சுருங்கி மறையும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நிகழ்ந்தது” என்றார்.
“அத்துடன் அஸ்தினபுரி இன்று பழைய பகைகளை கடக்க நினைக்கிறது. அதுவும் ருக்மிக்கு நலம்பயப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றுகூட அஸ்தினபுரி என்ணினால் விதர்ப்பத்தை அழித்துவிட முடியும். அவர்கள் அதை எண்ணவில்லை” என்று வர்தனன் தொடர்ந்தார். நான் “அவந்திநாட்டு அரசர்கள் விந்தனும் அனுவிந்தனும் களத்தில் மடிந்தபின் இன்று அங்கே அவர்களின் அகவைநிறையாத இளமைந்தர் உக்ரசேனன் ஆட்சியிலிருக்கிறார். படைத்தலைவர் சூரனும் அமைச்சர் சத்வரும் சேர்ந்து அரசாள்கிறார்கள் என அறிந்தேன்” என்றேன். “ஆம், இன்று அவந்தி ஒன்றும் செய்ய இயலாத நிலையிலேயே உள்ளது. ஆனால் அவந்தி ஒருபோதும் அடங்கியிருக்கும் நிலம் அல்ல.”
நான் சூழ்ந்திருக்கும் முகங்களை நோக்கினேன். அவற்றில் எல்லாம் வர்தனன் மீதான அச்சமோ ஒவ்வாமையோ ஒன்றை கண்டேன். ஆனால் விருகன் “ஆம், நல்லூழ்தான். அது நீடிக்காது” என்றார். நான் “நன்று, உங்கள் தரப்பை அறிந்துகொண்டேன். ஓலையை எதிர்பார்க்கிறேன்” என்றேன். பின்னர் மெல்லிய ஏளனத்துடன் “இப்பூசல்கள் அனைத்தையும் அந்த ஓலை பேசவேண்டும் என்ற தேவை இல்லை” என்றேன். வர்தனன் சிரித்து “அந்த ஓலை அனைத்தையும் சுட்டும். அறிந்தோருக்குப் புரியும்” என்றார். நான் புன்னகைத்தேன்.
நான் விருகனின் அவையிலிருந்து வெளியே வந்தபோது என்னுடன் இளவரசர் அனிலனும் வந்தார். நான் அவரிடம் “நான் அரசி லக்ஷ்மணையை சந்திக்க விழைகிறேன்” என்றேன். “அவரை இன்னும் சந்திக்கவில்லையா என்ன? இங்கே அருகேதான் அவர்களின் அரண்மனை. நீங்கள் பிரத்யும்னனை சந்தித்த பின் தொடர்ந்து அவரையும் சந்தித்திருப்பீர்கள் என எண்ணினேன்” என்றார். “இல்லை, அவர்கள் இன்னமும் முழுமையாக நிலைபாடு எடுக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்போது எங்குமில்லை” என்றேன். “அவர்களுக்கு வேறுவழியில்லை. பிரத்யும்னனுடனேயே வந்துசேரவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பது சில உறுதிகளை மட்டுமே” என்றார் அனிலன்.
“நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? இங்கே உங்கள் மூத்தவர் செய்யும் அரசாடலைப் பற்றி?” என்றேன். “நான் என்ன சொல்வது? இவை அரசுசூழ்தலை அறிந்தவர்களால் ஆற்றப்படுபவை. நான் எளியவன், இளையவன்” என்றார். “ஆனால் நீங்கள் ஷத்ரியர். உங்களுக்கென ஒரு நிலைபாடு இருக்கத்தான் வேண்டும்.” அவர் தயங்கியபின் “மெய் சொல்வதென்றால் வெறுமனே பித்துகொண்டு செயல்படுவது இது என எனக்குப்படுகிறது. இங்கே அறிந்தோ அறியாமலோ அனைத்தும் பிறப்படையாளத்தில் குழுவமைந்துவிட்டன. எனில் அதைச் சார்ந்தே நாமும் செயல்பட முடியும். அவந்தி ஷத்ரிய நாடு. பிரத்யும்னன் ஷத்ரியர். நாம் உடன் செல்வதொன்றே செய்யக்கூடுவது” என்றார்.
“அதை சொல்லியிருக்கிறீர்களா?” என்றேன். “சொல்லியிருக்கிறேன். பலமுறை. என் வாயை மூடிவிடுவார்கள். உண்மையில் அவர்களுக்கே தெரியும், நாம் சென்றுசேரவிருப்பது பிரத்யும்னனின் தரப்புடன்தான் என்று. ஆனால் ஐயம்கொள்கிறார்கள், அரசியலாடுகிறார்கள். நோக்கம், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவது. அரசியலாட இது ஒரு களம். ஆகவே ஆடிப்பார்க்கிறார்கள். பல்லும் உகிரும் முளைத்த புலிக்குட்டி தன் நிழலை வேட்டையாடிக் களிப்பதுபோல…” என்றார் அனிலன். நான் “லக்ஷ்மணை அன்னையை நான் சந்திக்கவேண்டும்” என்றேன். “வருக, நானே அழைத்துச் செல்கிறேன்! அவர் மைந்தர்கள் அனைவருமே எனக்கு அணுக்கமானவர்கள்தான்” என்றார்.
அவர் என்னை அழைத்துச்செல்கையில் “உண்மையில் லக்ஷ்மணை அன்னையின் மைந்தரின் உளச்சிக்கலும் இதுதான். எங்களை வந்து கெஞ்சி மன்றாடி அழைத்துச்செல்லுங்கள், நாங்களே வரமாட்டோம் என்னும் இயல்பு. அது பெண்களுக்குரிய தன்மை என்பார்கள். அவர்களுக்குப் பிடித்த ஆடையை அவர்கள் அணியவேண்டும் என்றாலும்கூட நாம் அவர்களிடம் கெஞ்சி மன்றாடவேண்டும்” என்றார். நான் சிரித்தேன். அவரும் சிரித்து “இதை நான் பலமுறை அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களால் அதற்கும் சிரிக்கவே முடிகிறது. அங்கு முடிவெடுப்பவர் ஓஜஸ்” என்றார். “அவரா?” என்றேன். அவர் முகம் எனக்கு நினைவுக்கு வரவில்லை.
“நினைவுக்கு வரும் முகம் அல்ல” என்றார் அனிலன். “மிக மெலிந்தவர். ஒடுங்கிய நீண்ட முகம். நடுவே ஒடிந்து கூன்விழுந்த முதுகும் சற்றே வளைந்த கைகளும் கொண்டவர். எந்த அவையிலும் முன்னால் வந்து நின்றிருக்க மாட்டார், எவரிடமும் அவரே பேசமாட்டார். நேருக்குநேர் அவரிடம் நாம் பேசினால் கூச்சம்கொண்டு பதறுவார். சிற்றகவையில் புரவியிலிருந்து விழுந்து முதுகெலும்பு ஒடிந்தமையால் நெடுநாள் படுக்கையில் இருந்தவர். அப்போதுதான் நூல்களைப் பயின்று சூழ்கைவல்லவர் ஆகியிருக்கிறார்.” நான் “ஓஜஸ்” என்று சொல்லிக்கொண்டேன். “ஆம், ஓஜஸ். அவர் பெயரே இங்கு சொல்லப்பட்டதில்லை” என்றார் அனிலன். “ஓஜஸ் நெடுங்காலம் மத்ரநாட்டில்தான் இருந்தார். அவர் புரவியிலிருந்து விழுந்தார், மத்ரநாட்டவருடன் குட்டைப்புரவியில் மலையிலிருந்து பாய்திறங்கியபோது.”
நான் அவர் முகத்தை நினைவில் மீட்டிக்கொள்ள முயன்றேன். “ஒன்று நீங்கள் நோக்கியிருக்கலாம். இந்த அவைகளில் அரசுசூழ்தலை நிகழ்த்துபவர்கள் அனைவருமே உடற்குறை கொண்டவர்கள். அதனால் அவர்கள் இளமையில் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பொழுதை நூல்பயிலச் செலவிட்டு அதனூடாக அவைமுதன்மையை அடைந்துவிட்டார்கள். அவர்களை இளமையில் பிறர் ஏளனம் செய்திருக்கலாம். இங்கே நாங்கள் எண்பதின்மர். பலர் இணையான அகவைகொண்டவர்கள். ஆகவே ஒருவருக்கொருவர் இரக்கமற்ற இளிவரல் என்றுமிருந்தது. அந்த இளிவரலால் அவர்கள் நெஞ்சு புண்பட்டிருக்கலாம். இன்று சூதுகளம் தேர்ந்தவர்களாகி எங்களை எல்லாம் கடந்து அவையில் இரண்டாமிடத்தவராக அமர்ந்திருக்கிறார்கள்.”
நான் எண்ணியதை உடனே அனிலன் சொன்னார். “வர்தனன் இளமையில் ஒரு காய்ச்சலுக்குப் பின் இடது கால் மெலிவுநோய்க்கு ஆளானான். அவன் நடக்கையில் இடக்கையை இடக்கால் முட்டின்மேல் ஊன்றி எம்பி விழுந்து ஊசலாடித்தான் செல்கிறான். அவனால் புரவியில் கால்களை நாடாவால் கட்டிக்கொண்டு ஒருக்களித்துத்தான் அமரமுடியும். அவன் படைபயின்றதே இல்லை. இளமையிலேயே நாகரூபரின் களத்திற்குச் சென்று நூல்நவின்றான். இளமைக்குப் பின் அவனை நாங்கள் பார்த்ததே குறைவுதான். கல்வி முடித்து திரும்பிவந்தபோது அவன் பிறிதொருவனாக இருந்தான். செல்லும்போது எவரிடமும் பேசாதவனாகவும் எதிலும் கலந்துகொள்ளாதவனாகவும் இருந்தான்.”
“மீண்டுவந்தபோது அவன் விழிகளில் விந்தையானதோர் ஏளனம் இருந்தது. நாங்கள் எதை கேட்டாலும் மெல்லிய குரலில் இளிவரலாகவே மறுமொழி சொன்னான். அந்த நுண்ணிய இளிவரலை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே எப்போதும் தடுமாறினோம். எங்கள் குழப்பத்தைக் கண்டு மெல்லிய புன்னகையுடன் அவன் அப்பால் சென்றான். எங்கள் மேல் இரக்கம் கொண்டவன்போல் இருந்தது அவன் சிரிப்பும் நடிப்பும். அது எங்களை சீற்றம் கொள்ளச் செய்தது. ஆனால் அவனுடைய சொல்திறன் அச்சுறுத்தியது. அவனை முற்றாகத் தவிர்க்கலானோம்.”
“அவன் மூத்தவருக்கு எளிதில் அணுக்கமானவன் ஆனான். அவைகளில் அவருக்கு இரண்டாமிடமாக அமரத் தொடங்கினான். பின்னர் மூத்தவரிடம் ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் அவனிடம் சொல்லலாம் என்றாயிற்று. அவனால் மூத்தவரிடம் எங்களைப்பற்றி எதை வேண்டுமென்றாலும் சொல்லமுடியும் என்று நிலை வந்தது. நாங்கள் அவனை அஞ்சவும் பணியவும் தொடங்கினோம். இன்று மூத்தவரைவிட அவனையே அஞ்சுகிறோம்.” நான் அனிலனை பார்த்தேன். அவருக்கு ஆறுதல் அளிக்கும்படி எதையாவது சொல்லலாம் என நினைத்தேன். அதற்குள் அவரே தொடர்ந்தார்.
“ஆனால் ஒன்று உறுதி. வர்தனனைப் போன்றவர்கள் என்றும் இரண்டாமிடத்திலேயே இருப்பவர்கள். அவர்களால் முதலிடத்திற்கு செல்லமுடியாது. அனைத்தையும் நிகழ்த்துவோன் என்னும் ஆணவம் தோன்றும்தோறும் அவர்கள் அறியாமலேயே முதலிடத்தை விழைவார்கள். அதை எத்தனை ஆழத்திற்குள் புதைத்தாலும் எப்படியெல்லாம் சொல்லடுக்கி அகற்றினாலும் அவர்களால் கடந்துசெல்ல முடியாது. முதலிடத்தை அவர்கள் அகத்தால் நடிப்பார்கள். அதன் ஒரு கட்டத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் மேல் கசப்பு கொள்வார்கள். அவர்களை ஆட்டுவிப்பார்கள். அவர்களின் ஆட்கொள்ளலுக்கு முதலிடத்தில் இருப்பவர்கள் கட்டுப்பட்டாகவேண்டும். ஏனென்றால் அந்நிலை அதற்குள் உருவாகியிருக்கும்.”
“அவ்வண்ணம் கட்டுப்படுவதனால் முதலிடத்தில் இருப்போர் இவர்கள்மேல் உள்ளூர எரிச்சலும் சினமும் கொண்டிருப்பார்கள். தங்கள் சொற்படி ஆடுபவர் என்பதனால் இவர்கள் அவர்கள்மேல் பொருட்டின்மை கொண்டிருப்பார்கள். அவைகளில் எப்படியோ அது வெளிப்படும். இருவரும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயல்வார்கள். முதலிடத்தில் இருப்போர் அல்ல, தாங்களே மெய்யான கோன்மைகொண்டவர்கள் என்று காட்ட சூழ்வலர் முயல்வார்கள். அவர்களல்ல, தானே இறுதிச்சொல் உரைப்பவர் என்று காட்ட முதலிடத்தோர் முயல்வார்கள். அந்தப் போட்டியே அவர்களை அழிக்கும். சூழ்வலர் ஒருநாள் முதலிடத்தாரால் அழிக்கப்படுவார்கள். அதைத் தவிர்க்க ஒரே வழிதான், முதலிடத்தாரை அவர்கள் அழிக்கவேண்டும். ஆனால் அதன்பின் அவர்கள் நிலைகொள்ள முடியாது.”
நான் வியப்புடன் அவரை நோக்கியபின் சிரித்தேன். அவரும் நகைத்து “பதின்மரில் ஒருவர் என்பது ஒருவகை சிறுமைநிலை. எங்களை எவரும் நோக்குவதில்லை, எங்கள் குரலை எவரும் கேட்பதுமில்லை. எனவே நாங்களே இவ்வண்ணம் எங்களுக்குள் பேசிப்பேசி தேர்ச்சி கொள்கிறோம்” என்றார். நான் சுமித்ரனின் உடலை நினைவுகொள்ள முயன்றேன். அவர் அமர்ந்திருந்த முறையில் ஒரு கோணல் இருந்தது. ஆனால் இருவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். தன் உடலை திறமையாக மறைத்துக்கொண்டிருந்தார். அக்கணமே சுதேஷ்ணனின் தோற்றமும் நினைவுக்கு வந்தது. அவரும் ஏதோ பிழை கொண்டிருந்தார். விழிகளில், உதடுகளில் ஒரு கோணல். ஆனால் அது ஏன் என எனக்குப் புரியவில்லை.
“லக்ஷ்மணை அன்னையிடம் நீங்கள் நேரில் பேசமுடிந்தால் நன்று. அன்னை எளிமையானவர். அவரால் சூழ்ச்சிகள் செய்ய முடியாது. எதையும் விரித்து எண்ணவும் இயலாது. அவர் அறிந்ததெல்லாம் தன்னை ஆட்கொண்ட தலைவரை மட்டுமே. அவரிடமிருந்து ஓர் ஓலையை வாங்கிக்கொண்டால் அனைத்தும் முடிந்தது.” நான் அவரிடம் “உளமுவந்து கூறுக இளவரசே, இங்கே உங்கள் தந்தை வருவதை விழைகிறீர்களா?” என்றேன். “ஆம், அவர் வந்தாகவேண்டும். இங்கு நிகழ்வன கண்டு சலித்துவிட்டேன். அவர் வந்தாலொழிய இங்கே ஒன்றும் சீர்படப் போவதில்லை” என்றார்.