‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 7

சாத்யகி சொன்னான். அரசே, மீண்டும் நான் என் நம்பிக்கையின்மையுடன் தனித்துவிடப்பட்டேன். சாம்பனை அரசவைக்குச் சென்று சந்திக்கவேண்டும், அவருடன் அவருடைய இளையோர் இருப்பார்கள். அவர்களை நிறைவுபடுத்தி அரசியின் ஓலையை வாங்கவேண்டும். அம்முயற்சியை அவ்வாறே விட்டுவிடலாமா என்று மீண்டும் தோன்றியது. இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் திரும்பிவிடலாம் என்ற எண்ணமே என் மேல் எடையென அழுத்தியது. கடமையுணர்வு பின்சென்றுவிட்டிருந்தது. ஆனால் பின்னர் தோன்றியது, இதை முற்றறிவதே நன்று என்று. எது எவ்வண்ணம் எங்கு முடியும் என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்த உந்துதல் என்னை சாம்பனின் அவை நோக்கி செல்லச் செய்தது.

நான் அனுப்பிய ஏவலன் சென்று திரும்பிவந்து அரசர் என்னை பார்க்க ஒப்புக்கொண்டதாக சொன்னான். செல்லும் வழியிலேயே அரசர் என்னும் சொல்லைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். உள்ளே நுழைகையில் நான் எந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டும், எம்முறைமையை கையாள வேண்டும் என்று குழம்பினேன். முதல் வணக்கத்திலேயே அவருடன் முரண்பாடு தோன்றிவிடலாகாது. ஆகவே என்னை கட்டுப்படுத்திக்கொண்டு என் செய்கைகளை வகுத்துக்கொண்டேன். சாம்பனிடம் மிக இயல்பான குறைவான நடைமுறைகளை மேற்கொள்வது, அவருடைய சொல்லையும் செயலையும் கண்டு என்னை அமைத்துக்கொள்வது. அதன்பின் என்னை அங்கே முன்கண்டு நடித்து அதன்படி தொகுத்துக்கொண்டு சீராக நடந்தேன்.

சாம்பன் தன் அவையில் உடன்பிறந்தாருடன் இருந்தார். அவர் பீடத்தில் அமர்ந்திருக்க அருகே இளையவர்களான சுமித்ரனும் புருஜித்தும் அமர்ந்திருந்தனர். சதாஜித்தும் சகஸ்ரஜித்தும் விஜயனும் சித்ரகேதுவும் வசுமானும் திராவிடனும் கிராதுவும் பின்னால் நின்றிருந்தனர். சாம்பன் முந்தைய நாள் இரவெல்லாம் மதுவருந்தியிருந்தார் என்பதை விழிகளின் சோர்வு காட்டியது. அரசருக்குரிய உடைகளை அவர் அணியவில்லை, தோளில் ஒரு பொன்னூல் பின்னலிட்ட மேலாடை மட்டுமே அவரை அரசகுடியினர் எனக் காட்டியது. அருகே நாற்களப் பலகை விரிக்கப்பட்டிருந்தது. அவருடன் ஆடிக்கொண்டிருந்த சூதன் எழுந்து விலகி நின்றிருந்தான். அது ஓர் முறைமையிலா சந்திப்போ என நான் எண்னியபோதே ஏவலன் “ரிஷபவனத்தின் அரசர், சத்யகரின் மைந்தர், யுயுதானன் வருகை” என அறிவித்தான்.

அச்சொல்லை செவிகொண்டபோது மீண்டும் துணுக்குற்றேன். அது என்னை உந்தி வெளியே தள்ளுவதுபோல. ஆனால் அப்போது அது நன்றென்றும் தோன்றியது. நான் வகுக்கப்பட்டுவிட்டேன், இனி இருநிலைகள் இல்லை. ஆகவே அரசன் என்ற நிலையில் எனது வணக்கத்தை தெரிவித்தேன். “துவாரகையின் பொறுப்பை கைக்கொண்டுள்ள இளைய யாதவரின் மைந்தர் சாம்பனுக்கு ரிஷபவனத்தின் குடிகளும் முடியும் அளிக்கும் நல்வணக்கம்” என்றேன். அவர் விழிகள் மாறுவதை உண்ர்ந்தேன். “அமர்க!” என்றார். நான் அமர்ந்தேன். அவர்களின் விழிகள் என்மேல் ஊன்றியிருந்தன. அவர்கள் என்னைப்பற்றி நான் வருவதற்கு முன் பேசியிருந்தார்கள். அச்சொற்கள் அனைத்தும் திரண்டு அங்கே ஒளிகொண்டிருந்தன.

நம்மை வருடும் கூர்நோக்குகள் விந்தையான உணர்வுகளை உருவாக்குகின்றன. முதலில் நம்மை அவை எச்சரிக்கை கொள்ளச் செய்கின்றன. ஆனால் விரைவிலேயே அந்த எச்சரிக்கை சலித்து மிகமிக தன்னுணர்வற்றவர்களாக ஆக்கிவிடவும் செய்கின்றன. மேடையில் நடிகர்கள் முதலில் நோக்குகளால் நிலையழிகிறார்கள். பின்னர் நோக்குகளே அவர்களை தனிமைகொள்ளச் செய்கின்றன. நூறு விரல்களால் தூக்கப்படுவதுபோல ஒருவகை மிதத்தல் அது. நாம் அங்கே அப்போதும் சூடும் உருவை நம்பி ஏற்று நடித்து முடிப்போம். முழுமையுடன் அங்கே துலங்குவோம். எவ்வண்ணமாயினும் எதன்பொருட்டாயினும் நம்மை எவரேனும் நோக்குவது நமக்கு மகிழ்வளிக்கிறது. பலர் நோக்குகையில் நாம் உருப்பெருகுகிறோம். நோக்க நோக்க வளர்வதே நாமெனும் உணர்வு. நாம் அந்த மேடையில் ஒருபோதும் நாமென வெளிப்படுவதில்லை, ஆணவமே நம் வடிவைச் சூடி எழுந்து அங்கே நிற்கிறது.

நான் பேசுவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். இன்நீர் வந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை அருந்தினார்கள். நான் கோப்பையை கையிலேயே வைத்திருந்தேன். அவர்கள் பேசட்டும் என்று எதிர்பார்த்தேன். சற்று பொறுமை இழந்தபின் சாம்பன் என்னிடம் “கூறுக!” என்றார். “இளவரசே, நான் வந்திருப்பது தங்கள் அன்னையிடமிருந்து ஒரு ஓலையை பெற்றுக்கொண்டு இளைய யாதவரிடம் செல்வதற்காக. பிற செய்திகளை அறிந்திருப்பீர்கள்” என்றேன். “ஆம், ஆயினும் நீங்கள் முழுமையாகச் சொல்லலாம், அதுவே முறை” என்றார். “எட்டு அரசியரின் செய்திகளுடன் நான் இளைய யாதவரை பார்க்கலாமென்றிருக்கிறேன். தங்கள் அன்னையும் பிற நான்கு அரசியரும் அளிக்கும் செய்தியை ஒற்றை ஓலையாக அளிப்பதாக சொன்னார்கள். அதை தங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி ஆணையிட்டார்கள்” என்றேன்.

“ஐவரில் அன்னை லக்ஷ்மணையின் ஒப்புதலை நான் பெற முடியாது. அவர் இப்போது எங்களுடன் இல்லை” என்று சாம்பன் சொன்னார். “அன்னை நக்னஜித்தியும் பத்ரையும் தங்கள் ஒப்புதலை அளிப்பார்கள். மித்ரவிந்தையிடம் ஏதோ சிறு தயக்கம் உள்ளது. அவர் மைந்தர்களின் எண்ணம் என்ன என்று இன்னமும் தெளிவில்லை.” நான் “வேண்டுமென்றால் நான் அவர்கள் இருவரையும் தனியாக சந்திக்கிறேன்” என்றேன். “அது தங்கள் விருப்பம். நீங்கள் எண்ணுவதுபோல் இது எளிதான ஒன்றல்ல” என்று சாம்பன் சொன்னார். “நான் முயன்றுபார்க்கலாம் என எண்ணுகிறேன். முயலாமலிருந்தால் என்னால் இங்கு அமைய முடியாது” என்றேன்.

“எந்தை எங்கிருக்கிறார் என அறிவீர்களா?” என்றார் சாம்பன். “அறியேன். ஆனால் கதிரவன் எங்கிருக்கிறான் என்பதை அவனால் மறைத்துவிட முடியாது. எங்கிருந்தாலும் சூதர்கள் அவரை அறிந்திருப்பார்கள். சொல் வழியாக அவரை தேடிச்செல்ல இயலும்” என்றேன். சாம்பன் ஏளனத்துடன் உதடு கோண புன்னகைத்து “பாரதவர்ஷத்தின் ஏதேனும் ஷத்ரிய அரசனின் சிறையில் இருக்கக்கூட வாய்ப்புள்ளது” என்றார். என் உடலெங்கும் பரவிய சினத்தை விரல்களை முறுக்கித் தடுத்து “அவரைச் சிறையிடும் ஆற்றல் கொண்ட அரசர் எவரும் பாரதவர்ஷத்தில் இல்லை. அவ்வண்ணம் ஒன்று நிகழுமென்றால் ஆழிவண்ணன் மானுடனாக மீண்டும் எழுந்திருக்கிறார் என்றே பொருள்” என்றேன்.

அரசே, சாம்பனின் முகத்தை இன்னமும் நான் நினைவுகூர்கிறேன். அந்த அவையில் அவர் தன்னை அரசர் எனக் காட்ட விழைந்தார். அரசகோலத்தில் அமர்ந்திருந்தால் அது அத்தோற்றத்தைச் சூடுவதாக தோன்றும் என எண்ணியிருக்கலாம். ஆகவே இயல்பாக, மஞ்சத்தறையிலிருந்து அப்படியே எழுந்து வந்த பேரரசராக தோற்றம் காட்ட முயன்றார். எந்நிலையிலும் அரசர் என்றே திகழ்பவராக நடித்தார். பெரும்போக்கும் பொருட்டின்மையும் தோன்றும்படி பேசினார். ஆனால் அனைத்துக்கும் அடியில் அவர் யார் என்பதை மறைக்கமுடியவில்லை. சொல் பெருகுந்தோறும் திரைவிலக்கி வெளியே வந்தார். நீங்கள் சிறையில் இருக்கக்கூடும் என்று சொன்னபோது அவ்விழிகளில் எழுந்தது கீழ்மையின் நகைப்பு. நூறு கதவுகளுக்கு அப்பால் உள்ளே பூட்டப்பட்டிருந்த ஒன்று மீறி எழுந்து சாளரம் வழியே எட்டிப்பார்த்தது. கீழ்மக்களால் இயலாத ஒன்றே உள்ளது, அவர்களால் அக்கீழ்மையை மறைத்துக்கொள்ள முடியாது.

சாம்பன் நகைத்து “அறிக யாதவரே, இன்று ஷத்ரிய நாடுகள் வல்லமை பெற்று வருகின்றன! அவர்கள் புதிய சூழ்ச்சி ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அசுரர்களையும் நிஷாதர்களையும் உடன் இணைத்துக்கொண்டு வல்லமைகொள்கிறார்கள். உங்கள் தலைவர் வகுத்த வழியை அவரைவிட சிறப்பாக அவர்கள் கையாளக்கூடும்” என்றார். “எனக்குக் கிடைத்த ஒற்றர் செய்திகள் அவர் எங்கோ சிறையில் இருப்பதாகவே சொல்கின்றன. கூடிய விரைவிலேயே அவர் தங்களிடம் பணயமென இருக்கிறார் என்பதை ஏதேனும் ஷத்ரிய நாடு அறிவிக்கும்.” நான் சீற்றத்துடன் “அவ்வண்ணம் ஓர் எண்ணம் எவருக்கேனும் வருமென்றால் அவர்கள் மீது அஸ்தினபுரியின் தேர்ச்சகடங்கள் ஏறிச்செல்லும்” என்றேன்.

சாம்பன் “நீங்கள் அறிந்தது அவ்வளவுதான். அஸ்தினபுரி இன்று நிஷாதகுடிப் பெண்ணால் ஆளப்படுகிறது. துரியோதனனின் இளைய உடன்பிறந்தவனின் கோல் அங்கு நின்றிருக்கிறது, அதை அவள் சூடியிருக்கிறாள். அங்குள்ளோர் புதிய குடிகள். இளைய யாதவரை நேரில் அறிந்த எவரும் அங்கில்லை” என்றார். “அவரை அறிந்தவர் இல்லாமல் இருக்கலாம். அவரால் அறியப்படாத எவருமில்லை” என்றேன். சாம்பன் ஒருகணத்தில் கடுஞ்சினம் கொண்டார். உரத்த குரலில் “இப்படி கூறிக்கூறி எளிய முதியவரை இறைநிலைக்கு ஏற்றிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் சொற்களின் சுமையை தாளமுடியாமல் அவர் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றார். “அவர் இறைநிலையை அடைந்தவர் அல்ல, இறைவனேதான். எனக்கு அதில் ஐயமில்லை” என்றேன்.

சாம்பன் சினமும் ஏளனமும் கலக்க பற்களை இளித்துக்கொண்டு “இறைவனால் தன் மைந்தரை இருக்கும் இடத்தில் இருந்து ஆள இயலாதா என்ன? இறைவனின் மைந்தர்கள் எதற்கு முடிசூடி அமரும்பொருட்டு பூசலிடவேண்டும்? ஏன் தந்தை சொல்லை எதிர்க்கத் துணியவேண்டும்?” என்றார். அவருடைய இளையோர் நகைத்தனர். அவர் அந்நகைப்பில் கலந்துகொண்டபோது சற்று எளிதானார். “என்னை பண்பறியாதவன், பெருவிழைவு கொண்டவன், அறம்மீறிச் செல்லும் அசுரன் என்கிறார்கள். எனில் என்னைப் போன்ற ஒருவனை மைந்தனாகப் பெற்ற அவர் எப்படி இறைவனாக இருக்க இயலும்?” என்றார். “இறைவன் தன் மைந்தரை எண்ணி எண்ணி ஏன் துயருறவேண்டும்? இறைவனிடம் சென்று அவர் மைந்தர்களைப் பற்றி உங்களைப்போன்றோர் ஏன் முறையிடவேண்டும்?”

நான் என் பொறுமையை மீட்டுக்கொண்டேன். உள்ளே ஒரு புன்னகை எழுந்தது. “இறைவடிவங்கள் அனைவருக்கும் எதிர்நிலை கொண்ட மைந்தர்கள் பிறப்பார்கள் என்பது இங்கு ஒவ்வொரு முறையும் எழுதப்பட்ட சொல், கண்கூடான நெறி” என்றேன். “நீங்கள் இவ்வாறு இருப்பதே அவரது இறைநிலைக்கு சான்றென்று கற்றோர் கூறுவர்.” சாம்பன் மேலும் சினம்கொள்வது தெரிந்தது. என் புன்னகை பெரிதாகியது. “ஹிரண்யகசிபுவுக்கு பிரஹலாதன் மைந்தர் எனப் பிறப்பார் என்றால் துவாரகையின் அரசருக்கு நீங்கள் பிறப்பதுதானே காவிய நெறி?” என்றேன். அவர் சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுத்து என் கண்களின் நகைப்பைக் கண்டு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். பீடத்தின் கைப்பிடிமேல் கைகள் தளர்ந்து அமைந்தன. பெருமூச்சுடன் சாய்ந்துகொண்டார். சலிப்புடன் தலையசைத்து “எதற்கு வீண்பேச்சு?” என்று அவர் சொன்னார்.

“தந்தை வருவதனால் தாங்கள் இவை அனைத்தையும் இழந்துவிடுவீர்கள் என்று அஞ்சுகிறீர்கள் என்றால் அதை நேரடியாகவே கூறலாம். ஓலை தேவையில்லை. தாங்கள் ஓலை தரமறுத்துவிட்டதை பிறரிடம் கூறிவிடுகிறேன்” என்றேன். நான் நினைத்தது போலவே சாம்பன் சீற்றம் கொண்டார். “எவர் வந்தாலும் இந்த மணிமுடியை நான் துறக்கப்போவதில்லை, ஏனெனில் இதை நான் சூடிவிட்டேன். இதற்கு எதிராக வரும் எக்குரலும் என் வாளுக்கும் வில்லுக்கும் எதிர்நிற்க வேண்டும். அது தந்தையே ஆயினும், தெய்வமே ஆயினும்” என்று கூவினார். நான் என் குரலில் ஏற்றமில்லாமல் “நன்று, எனில் அவர் வருவதில் உங்களுக்கு மாற்றுச்சொல் இல்லை அல்லவா?” என்றேன்.

“இல்லை. எவர் வந்தாலும் மாற்றுச்சொல் இல்லை. தருகிறேன். அன்னையரின் சொற்களை அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். அவற்றுக்குக் கீழே என் சான்றொப்பம் இட்டு தருகிறேன். ஓலைகளுடன் இன்றே நீங்கள் கிளம்பலாம்” என்று சாம்பன் சொன்னார். நான் “மித்ரவிந்தையும் காளிந்திதேவியும் ஓலையை தரவில்லை. அவற்றை பெற்றபின் கிளம்புகிறேன்” என்றேன். “அவர்களின் மைந்தர்களில் பெரும்பாலும் அனைவரும் இங்குதான் இருக்கிறார்கள்” என்று சாம்பன் சொன்னார். “ஆனால், மைந்தர்களின் சொல்லை நான் நாடவில்லை” என்றேன். “மித்ரவிந்தையை நீங்கள் சந்திக்கலாம். காளிந்தி அன்னை எவரிடமும் பேசுவதில்லை என்று அறிந்திருப்பீர்கள். எவரும் அவரை பார்ப்பதுமில்லை. அவர் இருக்கும் ஊழ்கத்தை கடந்து சென்று அவரைக் காண நாங்கள் எவரையும் ஒப்புவதில்லை” என்றார் சாம்பன்.

“நான் செல்வது ராகவராமனின் சொல்லுடன் இலங்கை சென்ற அனுமனைப்போல. எங்கும் நுழைவொப்புதல் எனக்குண்டு” என்றேன். சில கணங்களுக்கு பின் அவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் அதுவும் நன்றே” என்றார். அவருடைய உள்ளம் அனைத்திலிருந்தும் விலகிவிட்டது என்று தெரிந்தது. அது நிஷாதரும் அசுரரும் கொண்டிருக்கும் இயல்புகளில் ஒன்று. எதிலும் நெடும்பொழுது நீடிக்க அவர்களால் இயல்வதில்லை. பொங்கி எழுந்து கொப்பளித்து அலையடித்து உச்சத்திலிருந்து அப்படியே சரிந்து சுருங்கி அகன்று சென்றுவிடுவார்கள். அவர் அவையிலிருந்தே அகம் நீங்கிவிட்டார் என்று உணர்ந்தேன். அவர் அப்போது விழைந்தது கலம்நிறைய மதுவும் ஊனுணவும்தான். அதுவும் நன்றே என எண்ணிக்கொண்டேன். என் சொற்களே அங்கு அறுதியாக ஒலிக்கும்.

“நான் சென்று அன்னையை பார்க்கிறேன். அவர் சொல் என்னவென்று கேட்கிறேன்” என்றேன். “அவர் சொல் என்னவாக இருக்குமென்று என்னால் உய்த்துணர முடிகிறது. ஏனென்றால் எங்கள் அனைவருக்குள்ளும் ஒரு துளியேனும் அவர் கொண்டுள்ள அந்தத் தவம் எஞ்சியிருக்கிறது. அவர் உங்கள் குடியினர் என நீங்கள் எண்ணலாம். ஆனால் மரத்தின் அடித்தூரும் மலரிதழும் ஒன்றல்ல. மென்மையும் வண்ணமும் தேனும் மணமும் அடித்தூரும் வேரும் அறிவதே இல்லை. அவர் உங்கள் குடியில் தோன்றியதனால் ஷத்ரியர்களும் யாதவர்களும் அடையாத ஒன்றை அடைந்தார். மறு எண்ணமே இல்லாத தற்கொடை. அசுரருக்கே அருந்தவம் கைகூடுகிறது. பண்டு அசுரப்பெருவீரர்கள் தெய்வங்களை எளிதில் சென்றடைந்தனர். காளிந்தி அன்னையும் அவ்வாறே. எங்கள் எவரைவிடவும் அவர் என் இறையை மிக அணுகிச் சென்றார். அவரே என்று ஆனார். எனக்கு அவர் என் தலைவரின் தோற்றமேதான்.”

அவர் விழிகளை நோக்கியபடி தணிந்த உறுதியான குரலில் “மெய், அவர் மைந்தர் உங்களுடன் இருக்கிறார்கள். அவர்களின் சொல்லும் செயலும் உங்களுக்கு உகந்தவையாக இருக்கலாம். எண்ணுக, அவர்கள் காளிந்தியின் மைந்தர்கள்! யமுனையின் தண்மை அவர்களுக்குள் துளியேனும் எஞ்சியிருக்கும்” என்று நான் சொன்னேன். என் சொற்களால் அவர் மிகவும் குழம்பியிருப்பதை உணர்ந்தேன். மேலும் அவரை குழப்பும்பொருட்டு “நீங்களும் அவ்வாறே. இளவரசே, உங்களுக்குள் திரண்டிருக்கும் இந்த எதிர்ப்பின் விசையே ஆழத்தில் இருக்கும் பணிவையும் கனிவையும் காட்டுகிறது. ஒருநாள் நீங்களும் உங்கள் அன்னையரின் தவத்தின் துளிகளை உள்ளே உணர்வீர்கள்” என்றேன்.

சாம்பன் சுமித்ரனை பார்த்தார். அவர் கொண்ட உணர்வுகள் மீண்டும் முற்றடங்கிவிட்டிருந்தன. எண்ணங்கள் திசைகுழம்பி ஓடி பின் சுருண்டுவிட்டிருப்பதை உணர்ந்தேன். தயங்கிய குரலில் “அவ்வாறெனில் அதுவும் நன்று. சென்று அவர் சொல்லை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். “பெற்றே ஆகவேண்டும். அவர் சொல்லை நான் பெறாவிட்டால் அச்சொல் எழக்கூடாது என்று நீங்கள் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றே நான் புரிந்துகொள்வேன்” என்றேன். சாம்பன் அக்கணமே பற்றிக்கொண்டு சினவெறியுடன் எழுந்து இரு கைகளாலும் பீடத்தின் கைகளை அறைந்து உரக்க “சென்று சொல்பெறுங்கள். எனக்கு எந்த இழப்புமில்லை. நான் எவரையும் தடை செய்யப்போவதில்லை. ஆனால் இந்த ஓலைகள் ஒரு சொல்லுடனே இருக்கும், எனது மணிமுடியை உறுதி செய்யும் பொருட்டு அரசர் இங்கு வரவேண்டும் என்று” என்றார்.

நான் “அரசருக்கு ஆணை இடுகிறீர்கள்” என்றேன். “ஆம், ஆணைதான். சில தருணங்களில் ஆணையிட்டே ஆகவேண்டும். தெய்வங்களுக்கே ஆனாலும். அவர் இங்கு வருவதென்றால் எனது மணிமுடியை உறுதி செய்வதன் பொருட்டே அது நிகழவேண்டும். பிறிது ஒரு சொல்லையும் ஏற்க மாட்டேன். என் அவ்வுறுதி ஓலையில் இருக்கும்” என்றார் சாம்பன். “பிற ஓலைகளில் அவ்வாறு இல்லை” என்றேன். “அது அவர்களின் எண்ணம். அவர்களுக்கு ஒன்று தெரியும், தந்தை வந்தாலும் அவர்களை ஏற்கப் போவதில்லை என்று. ஏனென்றால் இந்நகர் ஷத்ரிய வல்லமையால் உருவாக்கப்படவில்லை. இது யாதவர்களின் ஆற்றலால் அமைந்ததும் அல்ல. இது நிஷாதகுடியின் ஆற்றலால், அசுரக்குருதியின் விசையால் அமைக்கப்பட்டது.”

“ஷத்ரியர்களை எதிர்த்து இது இவ்வண்ணம் எழுந்து நிலைகொண்டதே ஷத்ரியர்கள் என்றும் அஞ்சிவந்த அசுரவல்லமையால் இது படைக்கப்பட்டது என்பதனால்” என்று சாம்பன் தொடர்ந்தார். “இந்நகர் இவ்வண்ணம் பொலிந்தெழுந்த விரைவை எண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஷத்ரிய நகர் இப்படி எழுந்துள்ளது? எந்த யாதவபுரி இப்படி பெருகியிருக்கிறது? இந்தப் பொங்குவிசை அசுரர்களுக்குரியது. விருத்திரனின் புற்றுகளைப் போன்றது இது. இந்நகருக்கு நிகர் சூரபதுமரின் வீரமாகேந்திரம், நரகாசுரரின் பிரக்ஜ்யோதிஷமும் ராவணமகாப்பிரபுவின் இலங்கையும் மட்டுமே. அதை இங்கு வந்து இன்றுவரை சொல்லெடுத்த அத்தனை சூதரும் புலவரும் பாடியிருக்கிறார்கள்.”

“யாதவரே, உங்களாலோ கிருதவர்மனாலோ ஏன் இத்தனை பெரிய நகரை உருவாக்க இயலவில்லை? ஏனென்றால் இந்நகர் அசுரவல்லமையின் ஆக்கம். என் தந்தையில் ஓடிய மரீஷையின் குருதியில் இருந்து எழுந்த மாநகர் இது. இது லவணர்களின் கொடிவழியின் படைப்பு. ஆகவேதான் அத்தனை புல்வெளிகளையும் கடந்து உப்பு விளையும் இக்கடல்முனைக்கு வந்தார் எந்தை. பிற எவரைவிடவும் அதை அவர் அறிவார். இதை யாதவர்களால் ஆளமுடியாது, அவர்களுக்கு அப்பாற்பட்டது இதன் பேருருவம். இதை ஷத்ரியர் பெற்றால் பிற ஷத்ரிய நகர்களில் ஒன்றென்றே ஆகும். இதை இவ்வண்ணம் நிலைநிறுத்தும் ஆற்றல் நிஷாத அசுர குருதிக்கே உண்டு. ஆகவேதான் என்னை இதன் அரசன் என்று ஆக்கினார் எந்தை. இது என் நகர், என் மூதன்னை மரீஷையின் நகர். இதை எவரும் என்னிடமிருந்து கொள்ள இயலாது.”

நான் “இந்த உச்சவிசை என்னை கசப்புகொள்ளச் செய்கிறது” என்றேன். சாம்பன் ஏளனமாக “அது உங்கள் உணர்வு. எனக்கு அது ஒரு பொருட்டல்ல. தந்தை வரட்டும், என்னை அரியணை அமர்த்தி முடிசூட்டட்டும்” என்றார்.  அதுவரை சொல்கொள்ளாமலிருந்த சுமித்ரன் கை நீட்டி “அவர் எழுதிய வேதம் உண்மையென்று அவருக்குத் தோன்றுகிறது என்றால், அது இங்கு நிலைநிற்க வேண்டும் என்றால், அவர் எங்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்நகருக்கு உரிமைகொண்ட எங்களைத் தவிர்த்து தான் பிறந்த யாதவக் குடியினரை இங்கு மணிமுடி சூட வைத்தால் அதற்கு ஒன்றே பொருள், அவர் குடிவழி முடியுரிமையை மட்டுமே ஏற்கிறார். ஷத்ரியர் என்பதனால் ருக்மிணியின் மைந்தர்கள் முடிசூடவேண்டுமென்றால் அவர் வேதச்சொல்லின்படி மணிமுடி கைமாறப்படவேண்டுமென்று எண்ணுகிறார்” என்றார்.

“தகுதிப்படி மணிமுடி சூடப்படவேண்டும் என்று அவர் எண்ணுவது உண்மை என்றால், மணிமுடியை வெல்லும் திறன்கொண்டவரே சூடும் தகுதிகொண்டவர் என்று அவர் சிசுபாலரின் அவையில் எழுந்து கூறியது அவர் முன்வைக்கும் மெய்மை என்றால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு அமையும் என்று தன் இறைப்பாடலில் அவர் கூறிய வரி மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் நாங்களே இங்கு முடிசூடவேண்டும். எங்கள் மணிமுடியை உறுதி செய்வதனூடாகவே தான் உரைத்த வேதத்தின் சொல்லை தன் வாழ்க்கையால் அவர் நிறுவுகிறார். அவரிடம் கூறுக, நோக்கிக்கொண்டிருக்கிறது பாரதவர்ஷம்! அவர் எடுக்கப்போகும் முடிவென்ன என்று அது காத்திருக்கிறது” என்று சுமித்ரன் கூவினார்.

அவருடைய நடுக்கை, வெறியை நோக்கிக்கொண்டிருந்தேன். “ஒன்று அவரே அம்முடிவை எடுத்து தன் மைந்தருக்கு ஆணையிடவேண்டும். அம்மைந்தர் எதிர்ப்பார்கள் என்றால் எங்கள் பொருட்டு அவர் படையாழி சூடி போர்முகம் நிற்கவேண்டும். இல்லை எனில் தான் இயற்றியதை ஊழுக்கு விட்டுவிட்டு அவர் அகன்றே நிற்கட்டும். இங்கிருக்கும் இயல்பான வல்லமைகளால் அனைத்தும் முடிவாகட்டும் என்று அவர் ஒதுங்கட்டும். இந்த ஷத்ரியர்களையும் யாதவர்களையும் வென்றும் கொன்றும் துவாரகையின் முடியை நாங்கள் சூடுகிறோம். மாறாக எந்த முடிவை அவர் எடுத்தாலும் தன் சொல்லுக்கு அவரே மாறு நிற்கிறார் என்பதே பொருள். அவ்வாறெனில் அதையும் அவர் கூறட்டும். அது உலகுமுன் தெளிவாகட்டும்” என்றார் சுமித்ரன்.

அப்போது ஒன்றை உணர்ந்தேன், அந்த உடன்பிறந்தார் குழுவில் சொல்தேர்பவர் சுமித்ரனே. சாம்பன் கூறுவது அவருடைய சொற்களையே. அவ்வண்ணம் சொல்கூட்டி அளிப்பவர்களில் நா மீது முற்றிலும் கட்டுப்பாடு கொண்டவர்களால் மட்டுமே அவைகளில் தங்கள் சொற்களை பிறர் சொல்லவிட்டு அடங்கியிருக்க முடியும். அவர்கள் விலகி நின்று நோக்குவார்கள், ஆனால் தங்கள் சொற்கள் அவையிலெழும்போது அதனுடன் உளம்செலுத்திக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒருகணத்தில் அவர்களே பேசத்தொடங்கிவிடுவார்கள். சுமித்ரன் பேசத்தொடங்கியதும் சாம்பன் மீண்டும் உளம் ஒடுங்கி ஆர்வமிழந்தார். “ஓலையை பெற்றுக்கொள்க, யாதவரே!” என்றபின் மேலாடையை எடுத்து மேலே சுற்றிக்கொண்டு கால்களை ஆட்டலானார்.

நான் பெருமூச்சுடன் “உங்கள் சொற்களை நான் அவரிடம் கூறுகிறேன். ஓலை பெறும் வழிகளை ஏவலருக்கு ஆணையிடுங்கள்” என்றேன். “அவ்வாறே ஆகுக!” என்று சாம்பன் கூறினார். “அந்த ஓலை சற்று நேரத்தில் தங்களை வந்தடையும்” என்றார் சுமித்ரன். நான் “விடைகொள்கிறேன்” என்றபடி எழுந்துகொண்டேன். “யாதவரே, உங்கள் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாது. விருஷ்ணி குலத்தின் பொருட்டு அவர்களுடன் படைநின்றீர்கள் என்றால் ஒருநாள் உங்களை களத்தில் சந்திப்பேன். உங்களை கழுத்தறுத்து மண்ணில் வீழ்த்தும் அறைகூவலை விடுப்பேன்” என்றார் சாம்பன்.

ஆனால் அவரிடம் வஞ்சமோ பகையோ வெளிப்படவில்லை. ஒருவகை உவகைதான் கண்களில் தெரிந்தது. சுமித்ரனின் சொல்லெழுந்ததுமே அரசன் என அவையில் இருந்து அகன்று சென்ற சாம்பன் கிராதர் என திரும்பி வந்திருந்தார். நான் புன்னகைத்து “அந்த அறைகூவலை இப்போதே விடுத்ததாக எடுத்துக்கொள்கிறேன்” என்றேன். “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே” என்று அவர் சொன்னார். நான் புன்னகைத்து தலைவணங்கி அவை நீங்கினேன். அங்கிருந்து வெளியே வந்தபோது சாம்பனின் அந்த இறுதி அறைகூவலின் பொருளென்ன என்று எண்ணிக்கொண்டேன். அவர் உங்களை என்னுருவில் கண்டாரா என்று ஐயுற்றேன்.

முந்தைய கட்டுரைதுளி [சிறுகதை]
அடுத்த கட்டுரைபூனை, ஆனையில்லா- கடிதங்கள்