பாலியல் முகம் -கடிதம்

படைப்பு முகமும் பாலியல் முகமும்

அன்புள்ள ஜெ,

இக்கடிதத்தை எழுதுவதற்காக ஈமெயிலை திறந்தபோதுதான் உணர்ந்தேன் கடந்த ஆண்டு மார்ச் 2ல் தான் தங்களுக்கு முதல் கடிதம் எழுதியிருக்கிறேன்.  இந்த ஓராண்டில் என் வாழ்வில் பல மாற்றங்கள். எல்லாமே நினைத்துப் பார்த்திராதவை. திரும்பிப் பார்க்கையில், என்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை என்று இப்போது படுகிறது. இப்போது அந்த குழப்பம் இல்லை. சில நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்தும் விட்டேன். நான் பயந்ததுபோல் யாரும் என்னை வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. இன்று யோசித்தால், ‘ச்சே இதுக்கா இப்பிடி’ என்றுதான் இருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாய் நகர்புரத்தில்தான் வசித்துவருகிறேன் (கல்வியால் விளைந்த நலன்). நான் பிறந்த ஊருக்கு இப்போ அந்நியனாகிவிட்டேன். இப்போதெல்லாம் வீட்டுக்குக்கூட விருந்தாளி விஜயம்தான்.  இன்னும் படித்துக்கொண்டிருப்பதால் வீட்டில் திருமணம் பற்றிய பேச்சில்லை. மேற்படிப்புக்கு திட்டமிருப்பதால் இன்னும் ஆறேழு ஆண்டுகளுக்கு தப்பிக்கலாம். இத்தனைநாள் என் கிராமத்து வாழ்க்கைதான் என்னை பயமுறுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். நகர்புரத்தில் குறிப்பாக உயர்கல்வி நிலையங்களில் பாராட்டத்தக்க அளவில் இல்லாவிடினும் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது. பால்புதுமை சார்ந்த விசயங்களைக் கொஞ்சமேனும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். கிராமங்கள் இன்னும் நிலவுடைமைக்கால விழுமியங்களைக் கைவிடவில்லை என்று நினைக்கிறேன்.  “What is village but a sink of local-ism, a den of ignorance, narrow mindedness, and communal-ism” என்ற அம்பேத்கரின் வரிதான் நினைவுக்கு வருகிறது.

சில சமயம் நினைத்துப் பார்ப்பதுண்டு – என் அப்பாவின் காலத்திலோ அதற்கு முந்தைய தலைமுறையிலோ பிறந்திருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்குமென்று. இன்று பேசித் தெளிந்து கொள்ள முடியாவிட்டாலும் எல்லாவற்றிற்கும் இணையம் இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக என்னதான் இந்த மேற்கத்தியக் கல்வியில் குறையிருப்பினும் இது ஒருவருக்கு விடுதலையளிக்கிறது. இன்னும் ஏதோவொரு கிராமத்து ஏழைக்குடும்பத்து ஜீவன் தன் பாலியல் அடையாளத்தை உணரமுடியாமல் புழுங்கிக்கொண்டுதானிருக்கும்.

என் கடிதம் தங்கள் தளத்தில் பிரசுரமானதும் தங்கள் வாசக நண்பர் சிலர் கடிதம் எழுதியிருந்தனர். அவற்றுள் ஒன்று கடலூர் சீனு எழுதியது. சீனு ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரைத்திருந்தார். சமீபத்தில்தான் ஏதோ ஞாபகம் வந்தவனாய் அப்புத்தகத்தை வாங்கி வாசித்தேன். இப்புத்தகத்தை வாசித்துக்கொண்டுருந்த சமயத்தில்தான் ஒரு கல்லூரியில் சமூகவியல் முனைவர் பட்டபடிப்புக்கு விண்ணப்பம் நிரப்பிக்கொண்டிருந்தேன். விண்ணப்பத்தில் ‘சமூகத்தின் கூட்டு நினைவு’ பற்றி ஆய்வு செய்யவிருப்பதாக எழுதப்போனவன் இப்புத்தகம் தந்த உந்துதலில் இந்தியாவின் LGBTQIA+ குறித்து முனைவர்பட்ட ஆய்வுசெய்ய விரும்புவதாக எழுதினேன். வேறுசில காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இவ்வாண்டு அயல்நாட்டில் மானுடவியலிலோ சமூகவியலிலோ முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிக்க எண்ணிக் கொண்டிருக்கிறேன். தங்கள் ஆசி உடனிருக்கட்டும்.

என் சமூகவியல் (மானுடவியல்) ஆசைக்கு தாங்களும் ஒரு காரணம். இப்புத்தகம் பாலியல் சிறுபான்மையினர் குறித்து எழுதப்பட்ட சிறந்த புத்தகம் என்று சொல்லமாட்டேன். ஆனால் மிக முக்கியமான புத்தகம். வாசித்தவுடன் கோபி ஷங்கருக்குக் கடிதம் எழுதினேன். கடிதத்தைப் பார்த்ததும் அவரே மொபைல்வழியே தொடர்புகொண்டார். அவரைப்பற்றியும் அவர் நடத்திவரும் ‘சிருஷ்டி’ என்ற தன்னார்வ அமைப்பு பற்றியும் அவர் ஆற்றிவரும் களப்பணி பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் பேசினோம். அவரின் களப்பணிகளைப்பற்றி கேட்டதும் மலைத்துதான் போனேன். அத்தனை நிதானத்துடன் அவ்வளவு நம்பிக்கையுடன் பேசினார். செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவருக்கு தமிழ் தாய்மொழியன்று. இப்புத்தகத்தை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்றார். ஆங்கிலத்தில் இதைவிட சிறப்பாக இன்னுமொரு புத்தகம் எழுத திட்டமிருப்பதாகச் சொன்னார். மதுரைக்கு வந்தால் அவரை நிச்சயம் சந்திப்பதாகச் சொன்னேன்.

இப்புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரைத்த கடலூர் சீனுவுக்கு நன்றிகள் பல.

நாளும் தங்கள் நலம்விரும்பும்

எஸ்

***

அன்புள்ள எஸ்

வாழ்த்துக்கள். கல்வி ஒரு பெரிய ஆற்றல். ஒரு மின்படை நம் கையில் இருப்பதுபோல. நம்மை அது முற்றிலும் பிறிதொருவராக ஆக்குகிறது. தன்னம்பிக்கை கொள்ளச் செய்கிறது. அதைவிட நம் வாழ்க்கைக்கு பொருளை உருவாக்கி அளிக்கிறது.

வெல்க

ஜெ

***

மறைக்கப்பட்ட பக்கங்கள்

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

ஒருபாலுறவின் உலகம்

ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017

ஒருபாலுறவு, தீர்ப்பு

ஒருபாலுறவு, தீர்ப்பு- கடிதங்கள்

படைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்

ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்

முந்தைய கட்டுரைராமர்கோயில்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-9