ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்

 

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அன்புள்ள ஜெ

வினவு தளம் பற்றி எழுதியிருந்தீர்கள். என் பெயர் வேண்டாம். இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளுங்கள். நான் மீண்டும் இதைப்படிக்கும் மனநிலையில் இல்லை.

இந்த இடதுசாரிக் குழுக்களின் உண்மையான அரசியல் என்ன? நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களிடமிருந்து விடுதலைபெற்று வெளியே வந்தவன். அதன் அன்றுமுதல் இதைத்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். என்னைப்போலவே வெளியே வந்தவர்கள் பலர் உண்டு. அவர்களெல்லாம் இவர்கள் அயோக்கியர்கள் என்பார்கள். எனக்கு அப்படிச் சொல்லவும் தோன்றவில்லை. இவர்களை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என்று தோன்றுகிறது. ஆனால் புரிந்துகொள்ள ஒரு வழி உண்டு. இவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்துக்கொள்வது. நான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் இவர்கள்.

எப்படியென்றால் இவர்களிலே முதல் வகையானவர்களை இப்படியாக அடையாளப்படுத்தலாம். குறைவான கல்வி கொண்டவர்கள். கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். அல்லது நடுத்தரக்குடும்பம். கொஞ்சம் படிக்கும் வழக்கமும் கொஞ்சம் நீதியுணர்ச்சியும் கொஞ்சம் அரசியல் ஆர்வமும் இருக்கும். கொஞ்சம் அப்பாவிகளாகவும் இருப்பார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் உதறவேண்டும், எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும், எல்லாவற்றையும் கடந்துசெல்லவேண்டும் என்றெல்லாம் கனவுகாண்பார்கள்.

இந்த இளைஞர்கள்தான் இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவர்கள். இவர்களெல்லாம் ஒருவகை வெகுளிகள். இவர்களுக்கு ஒரு பத்து பக்கத்துக்குள் தான் வாசிப்பறிவோ கேட்ட அறிவோ இருக்கும். ஆனால் பயங்கரமான தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புவார்கள். எல்லாவற்றையும் ஏளனமாக விமர்சனம் செய்வார்கள். எதற்குமே மசியமாட்டார்கள். தர்க்கம் செய்தபடியே இருப்பார்கள்.

உண்மையில் மிகக்கொஞ்சமாக வாசித்தால் தர்க்கம்செய்வது எளிது. நமக்கு குழப்பமே இருக்காது. நம்முடைய கருத்துடன் முரண்படுபவர்களை எல்லாம் நம் எதிரிகள் என்று சொல்லவேண்டும். எதிரிகளை எதிர்க்க நமக்குச் சில கொள்கைகள் இருக்கும். சில சதிக்கோட்பாடுகள் இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் நாம் நமக்குத்தெரிந்த பதில்களை ஆணித்தரமாகச் சொல்லி ஓட ஓடவிரட்டலாம். இதெல்லாமே நானும் செய்தவன்தான். ஆரம்பநிலை மார்க்ஸிஸ்டுகளிடம் இருக்கும் தன்னம்பிக்கைக்குச் சமானமான தன்னம்பிக்கையை வேறெங்குமே பார்க்கமுடியாது.

இந்த தன்முனைப்புக்காகவே இதில் இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இதற்காகவே வாழ்க்கையை தொலைக்கிறார்கள். இவர்களை இந்த ஆணவத்தை வைத்துத்தான் வீழ்த்துவார்கள். தோழர் நீங்களெல்லாம் சாதாரணமாக வேலை வெட்டி குடும்பம் குட்டி என்று போனால் நாடு என்னாகிறது? சேவை படியுங்க என்று ஆரம்பித்தால் நானும் ஒரு சே, சாதாரண ஆள் இல்லை என இவன் கற்பனைசெய்ய ஆரம்பிப்பான். அங்கேதான் தூண்டிலில் கடிப்பான். [இந்த உத்தி இப்படியே அச்சு அசலாக பின் தொடரும் நிழலின் குரலில் உள்ளது. வாசித்து அதிர்ச்சி ஆகிவிட்டேன்]

இன்னொரு வகையினர் உண்டு. ரொம்ப கிராமப்புறத்தான்கள். படிப்பு இருக்காது. இன்னும் அப்பாவிகள். ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்மையானவர்கள், நல்ல நோக்கம் கொண்டவர்கள். ஊருக்கு நல்லது செய்பவர்கள். இவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள். அப்போது சென்று தூண்டில்போட்டு பிடித்துவிடுவார்கள். இவர்களுக்கு இவர்களை தலைவர்கள் சமானமாக நடத்தினாலே போதும் கண்கலங்கி அடிமைமாதிரி ஆகிவிடுவார்கள்

இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் அறிவுஜீவிகள். நிறையப்படிப்பார்கள். படிப்பு என்பது இவர்களுக்கு மேற்கோள்களை ஞாபகம் வைத்திருப்பதுதான். படிப்பு அதிலிருந்து வரும் அகங்காரம். அவ்வளவுதான் .இவர்களைப்பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள். அகங்காரம்தான் முக்கியம். கொள்கை முக்கியமே கிடையாது. கொள்கையை ஐந்தாண்டுக்கு ஒருமுறை நேர்தலைகீழாக மாற்றிக்கொள்வார்கள். ஒரே கொள்கை கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய ஆணவத்தைச் சீண்டிவிட்டால் கொதித்துக் கிளம்பிவிடுவார்கள். வசைதான். அவதூறுதான். கொலை செய்ய தைரியம் இருக்காது

நான்காவது கூட்டம் தலைவர்கள். இவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாது. இவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிகாரப்பதவிகளில் இருந்தவர். பா.செயப்பிரகாசம் போன்ற சாதிவெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்றபேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம்கூட தெரியாததா நம்மூர் உளவுத்துறை? இந்த தலைமையை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.

இதுதான் இங்கே இடதுசாரி அரசியல். இதிலிருந்து வெளிவருவது கஷ்டம். முதலில் நாம் ஒன்றும் பெரிய புரட்சியாளர்கள் இல்லை என்று நாமே நினைக்கவேண்டும். முதல்கஷ்டமே அதுதான். அப்படி நினைத்து வெளியே வந்துவிட்டால் தப்பினோம். அதன்பிறகு நினைத்து நினைத்து சிரிக்கவேண்டியதுதான். ஸ்கூல் டிராமாவில் நடித்ததுபோல இருக்கும். ஆனால் நாலைந்து வருஷங்கள் ஓடிச்சென்றிருக்கும். நானெல்லாம் தப்பியவன். நல்லவேளை படிப்பை முடித்தேன். ஆகவே பட்டினி இல்லாமல் வாழ்கிறேன்.

டி.

முந்தைய கட்டுரைஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–77