அகுதாகவா- கடிதங்கள்

துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…

அன்புள்ள ஜெ

நான் நான்காண்டுக்காலம் ஜப்பானில் இருந்திருக்கிறேன். ஜப்பானிய இலக்கியம், சினிமா, படக்கதை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். ஜப்பானிய பண்பாட்டை படிக்கும்போதெல்லாம் எனக்கு வெவ்வேறு வகையான மனக்குழப்பங்கள்தான் உருவாகியிருக்கின்றன. என்னால் எதையும் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது என்ற உங்கள் கட்டுரை எனக்கு அவ்வகையில் மிகப்பெரிய ஒரு தொடக்கமாக அமைந்தது. ஜப்பானியப் பண்பாட்டை தொகுத்துக்கொள்ள ஒரு ஃப்ரேம் நீங்கள் அக்கட்டுரையில் உருவாக்கி அளிக்கிறீர்கள். இரண்டு எல்லைகள். இரண்டு முரண்பாடுகள். இப்படி ஒரு ஃப்ரேம் உருவானதுமே ஜப்பானிய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக அதன் அடிப்படையிலே தொகுத்துக்கொள்ள முடிகிறது. சட் சட் என்று எல்லாம் தெளிவாக ஆரம்பிக்கிறது.

ஒருபக்கம் சமுராய் இன்னொரு பக்கம் ஜென். அது ஒரு மிகச்சிறந்த உருவகம். ஒரு சிறந்த வாசகர் நெடுநாட்களாக வாசித்தால்மட்டுமே இப்படி ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இது சரியா என்பது அல்ல பிரச்சினை. இதைவைத்துக்கொண்டு நம்மால் ஜப்பானிய இலக்கியத்தை தொகுத்துக்கொள்ள முடிகிறது என்பதுதான். இனி இதன் போதாமைகளையும் மீறல்களையும் ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம். அது ஒரு நல்ல பயிற்சியாக அமையும்.

எஸ்.ஆர். ரங்கநாத்

***

அன்புள்ள ஜெ

அகுதாகவாவின் கதைகளை நான் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். ரொம்பவும் துன்புற்ற ஆத்மா என்றவகையில் அவர்மேல் ஒரு தனி ஈடுபாடு உண்டு. உங்கள் குறிப்பை வாசித்ததும்தான் சட்டென்று நட் ஹாம்சன், பஷீர் ஆகியோருடன் அவருக்கு இருக்கும் உறவும் புரிந்தது. அட இது நமக்கு எப்படித் தோன்றாமல் போயிற்று என்று ஆச்சரியமாக இருந்தது. தேடித்தேடிப் பார்த்தேன். எவருமே இதை எழுதியிருக்கவில்லை.

நீங்கள் சொல்வதுபோல சூபி ஞானத்தின் சிரிப்பு பஷீரை மீட்டது. அகுதாகவாவை துரத்தி வந்த பேய்கள் பிடித்துக்கொண்டன

குமார் செல்வநாயகம்

***

முந்தைய கட்டுரைநீர்க்கோலம் – A Journey of Un-becoming
அடுத்த கட்டுரைதன்மீட்சி எனும் இயக்கம்