கடத்தற்கரியதன் பேரழகு
தானென்றாதல்
அன்புள்ள ஜெ
இரு கட்டுரைகள் அழகாக ஒன்றையொன்று நிறைத்து ஆழமான அனுபவத்தை அளித்தன. செம்மீன் பற்றிய கட்டுரை அந்த நாவல், சினிமா, அதில் செயல்பட்ட மனிதர்கள் என்று விரிந்து நிலையில்லாத மனம் என்ற கடலைப்பற்றிச் சொல்லி முடிவுற்றது. அழகான கட்டுரை. மானச மைனே வரூ மதுரம் நுள்ளி தரூ என் மனசுக்கு மிகமிகப்பிடித்தமான பாட்டு. நான் பல ஆண்டுகள் அலுவலக நிகழ்ச்சிகளில் அந்தப்பாடலைப் பாடியிருக்கிறேன். ஆழமான வேதனை தொனிக்கும் பாடல் அது. அந்த வேதனை மிக மேம்போக்கானது அல்ல. காதலின் வேதனை அல்ல. நுட்பமான விஷயங்களுக்கு இடமே இல்லாத இந்தச் சூழலைப்பற்றிய துக்கம் அது. மது ஒரு தோற்றுப்போன வியாபாரி மட்டும் அல்ல . தோற்றுப்போன மனிதன். அவன் ஒரு பறவை. தரையிலே நடக்கமுடியாதவன்
அந்த சினிமாவில் கடலோரமாக மது நடந்துசெல்லும் பல லாங்ஷாட் காட்சிகள் உண்டு ஒவ்வொன்றும் அபூர்வமானவை. பெயிண்டிங் மாதிரி தோன்றுபவை.முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தபடம். ஆனால் இன்றைக்கும் நினைவில் அப்படியே அவை தெளிந்து வருகின்றன. அற்புதமான காட்சிகள் கொண்ட ஒரு காவியம் செம்மீன். ஆனால் இப்போதுதான் செம்மீன்பாபு என்ற பாபு இஸ்மாயீல் சேட் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டேன். அதுவும் ஒரு மென்மையான காவியம். அவரை நீங்கள் ஷாஜகானுடன் ஒப்பிட்டது மிக மிக அழகானது. அத்தனை பெரிய அரசின் சக்கரவர்த்தி கலைகளிலும் இசையிலும் அப்படி தோய்ந்துகிடந்தார் என்பது ஓர் அதிசயம்தான். ஷாஜகானின் படத்தைப் பார்க்கையில் எல்லாம் எப்படி ஒரு கனவுநிறைந்த கண்கள் என்று நினைத்துக்கொள்வேன்.
நல்ல கட்டுரைகள் ஜெ. நன்றி
சத்யமூர்த்தி
***
அன்புள்ள ஜெ
செம்மீன் பாபு சேட் அவர்களையும் சொக்கலால் ராம்சேட் அவர்களையும் ஒப்புநோக்கி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்லும் வரை அந்த வேறுபாடு எனக்கும் தெரியவே இல்லை. சினிமாக்கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் மீது பைத்தியம்பிடித்து அலையும் பணக்காரர்கள் நிறையபேர் உண்டு. ஆனால் உருப்படியாக எதையாவது செய்த ஒரு பணக்காரர் கூட தமிழ்நாட்டில் கிடையாது. அவர்கள் இரண்டு வகை. ஒன்று படிப்போ பண்பாடோ இல்லாமல் சுயமுயற்சியால் முட்டிமோதி மேலே வந்தபின் அடையாளத்துக்கு அலைபவர்கள். இன்னொரு சாரார் பணக்காரரான தந்தையின் தறுதலை மகன்கள். பணமிருந்தால் முக்கியமானவர்களாக ஆகிவிடலாம் என நினைப்பவர்கள். மற்றபடி இங்கே கலையார்வமும் இலக்கிய ஆர்வமும் கொண்ட பணக்காரர்களே இல்லை. சாமியார்களுக்கும் சோதிடர்களுக்கும் இவர்கள் அள்ளிக்கொடுத்த பணம் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் உலகசினிமாவை உருவாக்கியிருக்கலாம்
வெற்றிவேல் செல்வன்
***